Published:Updated:

பத்தல... பத்தல... நிதியும் பத்தல..! - திண்டாடும் ‘மக்கள் நீதி மய்யம்’

கமல்ஹாசன்
பிரீமியம் ஸ்டோரி
கமல்ஹாசன்

விக்ரம் படத்தின் வருமானத்தைத் தலைவரைப்போல நாங்களும் நம்பினோம். ஆனால், அதில் பெரும் பகுதி சினிமா ஃபைனான்ஸியர் ஒருவருக்குச் சென்றுவிட்டது.

பத்தல... பத்தல... நிதியும் பத்தல..! - திண்டாடும் ‘மக்கள் நீதி மய்யம்’

விக்ரம் படத்தின் வருமானத்தைத் தலைவரைப்போல நாங்களும் நம்பினோம். ஆனால், அதில் பெரும் பகுதி சினிமா ஃபைனான்ஸியர் ஒருவருக்குச் சென்றுவிட்டது.

Published:Updated:
கமல்ஹாசன்
பிரீமியம் ஸ்டோரி
கமல்ஹாசன்

‘திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக இருக்கும்’ என்ற அறிவிப்புடன் மதுரையில் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியைக் கோலாகலமாகத் தொடங்கி, அரசியல் பயணத்தை ஆரம்பித்தார் கமல்ஹாசன். கட்சி தொடங்கிய நான்கு ஆண்டுகளில் மக்களவை, சட்டமன்றம், உள்ளாட்சி, நகர்ப்புற உள்ளாட்சி என ஜனநாயகத்தின் அனைத்துத் தேர்தல் வடிவங்களையும் ம.நீ.ம சந்தித்துவிட்டது. இதனால், கஜானா மொத்தமும் காலியாகி, பொதுமக்களிடம் நிதி திரட்டும் நிலைமைக்குக் கட்சி வந்துவிட்டது. ‘விக்ரம்’ பட வெளியீட்டைவிட, கட்சியின் கடுமையான நிதி நெருக்கடிதான், இப்போது ம.நீ.ம வட்டாரத்தில் ‘ஹாட் டாபிக்’காக ஓடுகிறது.

இது குறித்து கட்சி நிர்வாகிகள் சிலரிடம் விசாரித்தோம்...

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

எகிறிய விளம்பரச் செலவு!

“கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே விளம்பரத்துக்காகப் பல கோடிகளை ம.நீ.ம செலவு செய்தது. போகுமிடமெல்லாம் புகைப்படம், வீடியோ, எடிட்டிங், வாகன அணிவகுப்பு என்று விளம்பரக்குழுவை அழைத்துச் சென்று அதற்காகப் பெரும் தொகையைத் தலைவர் செலவுசெய்தார். கட்சியின் வளர்ச்சி நிதிக்காகத் தொழிலதிபர்களிடமிருந்து ‘கறுப்பாக’க் கமல் பணம் எதுவும் வாங்குவதில்லை. எங்களையும் வாங்க அனுமதிப்பதில்லை. அவருக்கு வரும் நியாயமான வருமானத்தைவைத்தே இதைச் செய்தார். பிற நடிகர்கள்போல இல்லாமல் வருமானத்துக்கு முறையாக வரியும் செலுத்திவிடுகிறார். கட்சி தொடங்கிய நான்கு ஆண்டுகளில் நான்கு தேர்தல்களைச் சந்தித்துவிட்டோம். ஓட்டுக்காகக் காசு கொடுக்கவில்லை என்றாலும், தேர்தல் விளம்பரத்துக்காகப் பெருந்தொகை செலவாகிவிட்டது. 2019-ம் ஆண்டு நடைபெற்ற லோக் சபா தேர்தலுக்கு நிர்வாகிகளிடமிருந்தும், வேட்பாளர்களிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும் நிதி திரட்டப்பட்டது. இருந்தபோதிலும், அடுத்தடுத்த மாதங்களில் கட்சி அலுவலகப் பணியாளர்களுக்குக்கூடச் சம்பளம் கொடுக்க முடியவில்லை. இதன் காரணமாக தனியார் சேனல், விளம்பரங்கள் எனத் தலைவர் நடிப்பின் பக்கம் கவனம் செலுத்தி, அந்த வருமானத்தை கட்சிக்குக் கொடுத்தார். கல்லூரி விழாக்களில் அவர் பங்கேற்றதன் மூலமும் சிறிய தொகை கிடைத்தது.

இந்நிலையில் 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் யாரிடமிருந்தும் நிதி திரட்ட முடியவில்லை. இதனால், பிரபல டி.வி சேனலின் தொகுப்பாளர் பணிக்கான முழுச் சம்பளத்தையும் முன்பணமாகப் பெற்று, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிக்குக் கொடுத்தார். தற்போது நிதி நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் 50 சதவிகிதப் பணியாளர்களை நிறுத்திவிட்டோம். அதேபோல, மாவட்ட அலுவலகங்களுக்கு ‘கரன்ட் பில்’கூட கட்ட முடியாமல், பலவற்றை மூடிவிட்டோம். தலைமை அலுவலகம் அவரது சொந்த வீடு என்பதால், பிரச்னையில்லை. ஒருவேளை அது வாடகை கட்டடமாக இருந்தால், சிரமம்தான். அவரின் கார் ஒன்றையும் விற்கும் முயற்சி நடக்கிறது’’ என்றார் மாநில நிர்வாகி ஒருவர்.

பொதுமக்களிடம் நிதி வசூல்...

‘‘விக்ரம் படத்தின் வருமானத்தைத் தலைவரைப்போல நாங்களும் நம்பினோம். ஆனால், அதில் பெரும் பகுதி சினிமா ஃபைனான்ஸியர் ஒருவருக்குச் சென்றுவிட்டது. இதற்கிடையே கொரோனா காலகட்டத்தில் கட்சியின் நிதிநிலை படுமோசமானது. கட்சி சார்பாக நலத்திட்ட உதவிகளைக்கூட திருப்தியாகச் செய்ய முடியவில்லை. காங்கிரஸ், பா.ஜ.க., தி.மு.க., அ.தி.மு.க போன்ற பிற கட்சிகளைப்போலத் தொழில் நிறுவனங்களிடம் கட்சி வளர்ச்சி நிதி பெறலாம் என்று நிர்வாகிகள் முடிவு செய்து, அவரிடம் கூறினோம். ஆனால், ‘இது எப்படி மாற்று அரசியலாகும்...’ என்று எங்களைக் கண்டித்தார். அதன் பிறகே பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டுவது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். ஆனால், எதிர்பார்த்த தொகை கிடைக்கவில்லை.

தலைவரின் கட்சிக்கு ரொக்கமாக நிதி வழங்க முன்வந்தாலும் வங்கிக் கணக்கு மூலமாகத் தந்தால் வாங்கிக்கொள்கிறேன் என்று தலைவர் கறாராகச் சொல்லி விடுகிறார். கட்சிக்காக எந்த நிதியும் தற்போது கைவசமில்லை. இன்னும் இரண்டு ஆண்டுகளில் மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இப்போதே அதற்கான பணியைத் தொடங்கினால்தான் கடந்த தேர்தலைவிட அதிக வாக்குகளைப் பெற்று, தேர்தல் ஆணையத்திடம் அங்கீகாரம் பெற முடியும். கட்சியை வளர்க்க சில கொள்கைத் தளர்வுகள் அவசியம். அதற்கு ‘நம்மவர்’ மனசுவைக்க வேண்டும்” என்ற கோரிக்கையோடு முடித்தார் மற்றொரு நிர்வாகி.

முரளி அப்பாஸ்
முரளி அப்பாஸ்

விலகிய நிர்வாகிகள்...

கட்சியின் நிதிநிலை இவ்வாறிருக்க, நிர்வாகிகள் நியமனமும் தடுமாற்றத்தில் உள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர், மாநிலத் துணைத் தலைவர் மகேந்திரன், பொதுச் செயலாளர்கள் முருகானந்தம், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ்பாபு, பத்மப்ரியா உள்ளிட்ட ஏராளமான ம.நீ.ம முகங்கள் ஓட்டம் பிடித்தனர். அதேபோல, சுமார் 20 மாவட்டச் செயலாளர்கள் விலகியதால், அந்தப் பதவிகளும் காலியாக உள்ளன.

“தேர்தல் ஆணையத்திடம் ம.நீ.ம இன்னும் அங்கீகாரம் வாங்காததால், நியமன அடிப்படையில் நிர்வாகிகளை நியமித்திருக்கலாம். ஆனால், அதற்காகப் பெறப்பட்ட நூற்றுக்கும் அதிகமான விண்ணப்பங்கள் இன்னும் பரிசீலனை செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இது வளரும் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு” என்று மூத்த நிர்வாகிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

விரைவில் முக்கிய முடிவுகள்!

இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் ஊடகப் பிரிவு மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸிடம் கேட்டபோது, “கட்சிக்கான ஒவ்வொரு ரூபாயையும் தலைவர் மிகக் கவனமாக கையாளுவார். 10 ரூபாயாக இருந்தாலும் சரி, லட்ச ரூபாயாக இருந்தாலும் சரி, நிர்வாகிகள் முறையாகக் கணக்கு கொடுக்க வேண்டும். வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்காக ஜூன் மாதத்துக்குப் பிறகு, சில முக்கிய முடிவுகளை எங்கள் தலைவர் எடுக்கவிருக்கிறார். அதில் கட்சியின் நிதிநிலை மட்டுமல்லாமல், நிர்வாகிகள் நியமனமும் சரிசெய்யப்படும். கிராமங்களை ஒருங்கிணைத்து, மிகப்பெரிய அளவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இன்னொரு பக்கம் கிராமசபை போன்ற மக்கள் இயக்கங்களையும் முன்னேடுக்கவுள்ளோம். இது கட்சிக்கு மிகப்பெரிய எழுச்சியைக் கொடுக்கும்” என்றார்.

“கஜானாலே காசில்லே... கல்லாலையும் காசில்லே... பத்தல... பத்தல...” என்று கமல் இதைத்தான் சொன்னாரா?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism