Published:Updated:

பொம்மை மேயர்கள்! - ஆட்டம் போடும் உறவுகள்... உடன்பிறப்புகள்!

பொம்மை மேயர்கள்
பிரீமியம் ஸ்டோரி
பொம்மை மேயர்கள்

பெண்களும் அதிகார அமைப்பில் பங்கேற்கும் விதமாக, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு என்கிற சட்டத்தை ஜெயலலிதா 2016-ல் கொண்டுவந்தார்.

பொம்மை மேயர்கள்! - ஆட்டம் போடும் உறவுகள்... உடன்பிறப்புகள்!

பெண்களும் அதிகார அமைப்பில் பங்கேற்கும் விதமாக, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு என்கிற சட்டத்தை ஜெயலலிதா 2016-ல் கொண்டுவந்தார்.

Published:Updated:
பொம்மை மேயர்கள்
பிரீமியம் ஸ்டோரி
பொம்மை மேயர்கள்
பொம்மை மேயர்கள்! - ஆட்டம் போடும் உறவுகள்... உடன்பிறப்புகள்!

நீண்ட சட்டப் போராட்டம், உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்புகளுக்கெல்லாம் பிறகே தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று, பிரதிநிதிகள் தேர்வாகினர். ஜனநாயகத்தின் அடிப்படைத் தூணாகவும், நாட்டின் வளர்ச்சியில் முதுகெலும்பாகவும் பார்க்கப்படும் உள்ளாட்சி அமைப்புகளில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைச் சுதந்திரமாகச் செயலாற்றவிடாமல், அவர்களின் உறவினர்களும், கழக உடன்பிறப்புகளும் மூக்கை நுழைப்பதாகத் தொடர்ச்சியான புகார்கள் எழுப்பப்படுகின்றன. இது குறித்த விசாரணையில் இறங்கியது ஜூ.வி டீம். கிடைத்த தகவலெல்லாம் ‘தெறி’ ரகம்!

கீ கொடுக்கும் கணவர்கள்... பொம்மை மேயர்கள்!

தமிழ்நாட்டில் புதிதாக அறிவிக்கப்பட்ட மாநகராட்சிகளில் சிவகாசியும் ஒன்று. மாநகராட்சியின் முதல் பெண் மேயராக தி.மு.க-வைச் சேர்ந்த சங்கீதா இன்பம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். “அரசியலில் முன் அனுபவம் இல்லாதவரான சங்கீதாவை முழுக்க முழுக்கப் பின்னிருந்து இயக்குவது அவருடைய கணவர் இன்பம்தான்” என அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள் தி.மு.க நிர்வாகிகள். நம்மிடம் பேசிய விருதுநகர் மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் சிலர், “மேயராக சங்கீதா பொறுப்பேற்றதிலிருந்து, அவருடைய கணவரும், சிவகாசி மாநகர் வர்த்தக அணிச் செயலாளருமான இன்பத்தின் தலையீடு மாநகராட்சிக்குள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையிலான வீடியோக்களும் சமீபத்தில் வைரலாகின. மேயர் சங்கீதாவைச் சந்திக்க அவருடைய அலுவலகத்துக்குச் சிலர் வந்துள்ளனர். அந்தச் சமயத்தில், கோப்புகளில் கையெழுத்திடும் பணியை மேற்கொள்ளும் மேயர் சங்கீதாவை, பின்னாலிருந்து அவர் கணவர் இன்பம் வழிநடத்தும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. ஒரு பொம்மையாகத் தன் மனைவியை அமர்த்திவிட்டு, ‘கீ’ கொடுக்கும் பணியை இன்பம் செய்கிறார். இவையெல்லாம் கட்சித் தலைமைக்குப் புகாராக அனுப்பப்பட்டும், எந்தவித நடவடிக்கையும் இல்லை” என்றனர் ஆதங்கத்தோடு.

சங்கீதா - இன்பம்
சங்கீதா - இன்பம்

சிவகாசியில் மட்டுமல்ல, மதுரை மாநகராட்சியிலும் ‘உறவுகள் தொடர்கதையாக’ மேயரின் கணவர் ஆடும் ஆட்டம்தான் தி.மு.க-வினரையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. நம்மிடம் பேசிய மாநகராட்சி அதிகாரிகள் சிலர், “மேயர் அறையில் இருந்துகொண்டு ஃபைல்கள் பார்ப்பது, பிரமுகர்களைச் சந்திப்பது, அதிகாரிகளுக்கு உத்தரவிடுவது என மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்தின் எல்லைமீறல் அதிகரித்தது. கடந்த பட்ஜெட் கூட்டத்தின்போது மேயர் அறையில் ஆதரவாளர்களுடன் இருந்த பொன் வசந்தை ஊடகத்தினர் படமெடுக்க முயன்றனர். இதை அவரின் ஆதரவாளர்கள் தடுத்து வாக்குவாதம் செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு கட்சித் தலைமையின் எச்சரிக்கையால், மாநகராட்சி அலுவலகத்துக்கு பொன் வசந்த் வருவதில்லை. ஆனால், வெளியிலிருந்தபடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுக்கொண்டுதான் இருக்கிறார். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் மாமன்ற உறுப்பினர்கள் பொன் வசந்தைத்தான் அணுக வேண்டும்.

அதேவேளையில், அர்ச்சனா என்பவரை மேயர் அலுவலகத்தில் பணியாற்ற நியமிக்கப்பட்டதிலும் சர்ச்சை ஏற்பட்டது. ‘மேயரைக் கண்காணிக்க அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்தான் அர்ச்சனாவை அனுப்பியிருக்கிறார்’ என்று தி.மு.க-வுக்குள்ளேயே பேச்சு அனலடித்தது. இவர் ஏற்கெனவே அமைச்சர் அலுவலகத்தில் வேலை பார்த்தவர். இந்தச் சர்ச்சை பூதாகரமாக மாறிய நிலையில்தான், கடந்த மே 18-ம் தேதி நடந்த மாமன்றக் கூட்டத்தில், அர்ச்சனாவை ஐந்து வருடங்களுக்கு ஊதியமில்லாத மேயரின் ஆலோசகராக நியமித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதை எதிர்க்கட்சியினர் மட்டுமல்ல, தி.மு.க-வினரும் எதிர்த்துள்ளனர். மேயருக்கு ஆலோசனை சொல்லத்தான் கமிஷனர், சட்ட ஆலோசகர்கள், மண்டலத் தலைவர்கள் இருக்கிறார்கள். அதை மீறி தனிநபரை ஆலோசகராக வைத்துக்கொள்வது சட்ட விதிகளில் இல்லை. மொத்தத்தில் மதுரை மேயருக்கு ‘கீ’ கொடுக்கும் பொறுப்பில் பொன் வசந்தும், அர்ச்சனா என்பவருமே செயல்படுகிறர்கள்” என்று கொட்டித் தீர்த்தனர்.

இந்திராணி - பொன் வசந்த்
இந்திராணி - பொன் வசந்த்

பேப்பரில் இட ஒதுக்கீடு... அதிகாரத்தில் உறவுகள்!

பெண்களும் அதிகார அமைப்பில் பங்கேற்கும் விதமாக, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு என்கிற சட்டத்தை ஜெயலலிதா 2016-ல் கொண்டுவந்தார். இது வெறும் பேப்பரில் மட்டுமே இருக்கிறதே தவிர, நடைமுறையில் இல்லை என்பது பெண்கள் மேயராக இருக்கும் பெரும்பாலான மாநகராட்சிகளில் கண்கூடாகத் தெரிகிறது.

ஈரோடு மாநகராட்சி மேயராக நாகரத்தினம் பவனிவந்தாலும், ஈரோடு தி.மு.க மாநகரச் செயலாளராக இருக்கும் அவருடைய கணவர் சுப்பிரமணியம்தான் ஆக்டிங் மேயராக வலம்வருகிறாராம். நம்மிடம் பேசிய ஈரோடு மாநகர் தி.மு.க நிர்வாகிகள் சிலர், “அமைச்சர் முத்துசாமியின் ஆதரவில்தான் மேயர் பதவியைத் தன் மனைவிக்குப் பெற்றார் சுப்பிரமணியம். அதனால், அமைச்சர் முத்துசாமி, கணவர் சுப்பிரமணியம் சொல்வதைத் தாண்டி நாகரத்தினத்தால் சுயமாக இயங்க முடியவில்லை. கவுன்சிலர்களின் கேள்விகளுக்குப் பதறுவதும், மாநகராட்சித் தீர்மானங்களை விளக்கிச் சொல்வதில் திணறுவதுமாக இருக்கிறார் மேயர். இதுவரை நடந்துள்ள மூன்று கவுன்சிலர்கள் கூட்டமும் சலசலப்புடனேயே முடிந்திருக்கிறது. எந்நேரமும் மேயர் அறையிலேயே இருக்கும் சுப்பிரமணியத்தைப் பார்த்து சலாம் அடித்தால்தான் கவுன்சிலர்களுக்கு எந்தவொரு காரியமும் நடக்கிறது. இதற்கிடையே மண்டலத் தலைவர் பதவிக்கு 28 லட்ச ரூபாய் கேட்டதாக மேயரின் கணவர்மீது கவுன்சிலர் ஒருவர் புகார் எழுப்பி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார்” எனக் குமுறுகின்றனர்.

’’சமீபத்தில் சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களிலும் மண்டலக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், அந்த மண்டலத்துக்கு உட்பட்ட கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். ஆனால், பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களும் பெருவாரியாகக் கலந்துகொண்டனர். உதாரணமாக, தண்டையார்பேட்டை மண்டலத்தில் அதிகாரிகளின் இருக்கைகளில் கவுன்சிலர்களின் குடும்ப உறுப்பினர்கள் அமர்ந்துகொண்டதால், கூட்டம் முடியும் வரை மாநகராட்சி அதிகாரிகள் கால்கடுக்க நின்றுகொண்டிருந்தார்கள். இது குறித்து மாநகராட்சியின் சார்பில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பெண் கவுன்சிலர்கள் மட்டுமல்ல, மேயர் பிரியா ராஜனே டம்மியாகத்தான் இருக்கிறார்’’ என்கிறது தி.மு.க வட்டாரம்.

 சேகர்பாபு - பிரியா ராஜன்
சேகர்பாபு - பிரியா ராஜன்

நம்மிடம் பேசிய தி.மு.க பெண் கவுன்சிலர் ஒருவர், “அரசியல் அனுபவம் இல்லாத பிரியாவுக்கு அமைச்சர் சேகர் பாபுவின் ஆதரவால் மேயர் பதவி கிடைத்தது. அதிகாரிகள், கவுன்சிலர்களுடன் பேசுவதற்கே அவர் தடுமாறியதால், அவருக்குத் தனியாகப் பயிற்சி வழங்கப்பட்டது. தொடக்கத்தில், மேயரின் குடும்ப உறுப்பினர்களின் நடமாட்டம் ரிப்பன் மாளிகையில் அதிகமாகத் தென்பட்டது. கட்சித் தலைமை கண்டித்ததால், அவர்கள் பெரிதாக தற்போது தலைகாட்டுவதில்லை. ஆனால், துணை மேயர் மகேஷ்குமாரின் கையே மாநகராட்சியில் ஓங்கியிருக்கிறது. மேயருக்குச் செல்லும் கோப்புகள் அனைத்தின் விவரங்களையும் முன்கூட்டியே கேட்கிறது மகேஷ் தரப்பு. இதை பிரியா ராஜன் ரசிக்கவில்லையென்றாலும், மகேஷை அவரால் எதிர்க்க முடியவில்லை” என்றார்.

புதிதாகத் தரம் உயர்த்தப்பட்ட கடலூர் மாநகராட்சியின் முதல் மேயர் பதவி, தி.மு.க மாவட்டப் பொருளாளரான வி.எஸ்.எல்.குணசேகரனின் மனைவி கீதாவுக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் ஆதரவு இருப்பதால், நகரச் செயலாளர் பழக்கடை ராஜாவின் மனைவி சுந்தரிக்கு மேயர் பதவி கிடைத்தது. தற்போது, ராஜாதான் ஆக்டிங் மேயராக வலம்வருகிறாராம். “மேயரின் அறையில் அவரது இருக்கைக்குப் பக்கத்தில் ஒரு சேரைப் போட்டு எப்போதும் அமர்ந்திருக்கும் ராஜா, ஒப்பந்த விவகாரங்கள் அனைத்தையும் கேட்டறிகிறார். அலுவலகத்தில் மேயர் 10 மணி நேரம் இருந்தால், இவர் 18 மணி நேரம் அங்கு கூடாரமிட்டிருக்கிறார். ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளை மேயரின் அறைக்கு அழைத்து கேள்வி கேட்டு விளாசும் ராஜா, தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் கலந்துகொள்ளும் மாநகராட்சிக் கூட்டத்திலும் தவறாமல் இடம்பெறுகிறார். கள ஆய்வோ அல்லது அரசு நிகழ்ச்சியோ அனைத்து இடங்களுக்கும் மேயரின் நிழலாகப் பின்தொடரும் அவரின் கணவரின் குரல்தான் ஓங்கியிருக்கிறது. ஆய்வுகளின்போது மேயர் இருந்தாலும், அதிகாரிகள் பதிலளிப்பது என்னவோ மேயரின் கணவருக்குத்தான். பொம்மைகளாக மேயர்களை உருவாக்கியிருப்பதற்கு பதிலாக, பேசாமல் இட ஒதுக்கீடு சட்டத் திருத்தத்தையே ரத்து செய்திருக்கலாம்” என்று பொருமுகிறார்கள் கடலூர் மாநகராட்சியின் கவுன்சிலர்கள் சிலர்.

நாகரத்தினம்
நாகரத்தினம்
சுப்பிரமணியம்
சுப்பிரமணியம்

“நான் ஆட்டோவே ஓட்டப் போய்விடவா?” - ஆட்டம் காட்டும் உடன்பிறப்புகள்!

மேயரின் அதிகார வரம்புக்குள் உறவுகள் மட்டுமல்ல, கழக உடன்பிறப்புகளும் தலையிடுவதால் நிர்வாகத்தில் குழப்பங்களுக்கு அளவில்லை. தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனை, தஞ்சாவூர் தொகுதி எம்.எல்.ஏ-வும், மாநகரச் செயலாளருமான டி.கே.ஜி.நீலமேகம் செயல்படவிடாமல் குடைச்சல் கொடுப்பதாகச் சொல்லப்படுகிறது.

நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் சிலர், “மேயர் சண்.ராமநாதன் தினமும் ஒரு வார்டுக்குச் சென்று குறைகளைக் கேட்டறியும் திட்டத்தைச் செயல்படுத்திவருகிறார். அவர் வார்டுக்குச் செல்லும்போதெல்லாம், அவருடன் வட்டச் செயலாளர்கள், பிரதிநிதிகளைச் செல்ல வேண்டாம் என மறைமுக உத்தரவு போட்டிருக்கிறது நீலமேகம் தரப்பு. இதுவரை 15-க்கும் மேற்பட்ட வார்டுகளுக்கு சண்.ராமநாதன் சென்றிருக்கிறார். ஒரு வார்டில்கூட கட்சிப் பொறுப்பாளர்கள் கலந்துகொள்ளவில்லை. துணை மேயரான டாக்டர் அஞ்சுகம் பூபதி, நீலமேகத்தின் ஆதரவாளராக மாறிவிட்டதால், அவரைவைத்தே சண்.ராமநாதன் செயல்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறது நீலமேகம் தரப்பு. அஞ்சுகம் பூபதியின் வார்டான 51-ல் ஒரு நிகழ்ச்சிக்காக சண்.ராமநாதன் சமீபத்தில் சென்றார். அப்போது, ‘என்னை கேக்காம என் வார்டுக்குள்ள எப்படி வந்தீங்க?’ என்று அஞ்சுகம் கேட்க, பிரச்னை வெடித்தது. நீலமேகத்துக்கும் சண்.ராமநாதனுக்கும் இடையேயான பகை நாளுக்கு நாள் வளர்ந்துவருகிறது. இதனால், மாநகராட்சி நிர்வாகத்தில் குழப்பங்கள் அதிகரிக்கின்றன” என்றனர்.

ராஜா - சுந்தரி
ராஜா - சுந்தரி
சண்.ராமநாதன்
சண்.ராமநாதன்

கும்பகோணம் மாநகராட்சி மேயராக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, முன்பு ஆட்டோ ஓட்டுநராக இருந்த சரவணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது வரை சரவணனை ஆட்டோ டிரைவராக மட்டுமே தி.மு.க-வும் காங்கிரஸ் கட்சியும் நடத்துவதுதான் வேதனைக்குரிய விஷயம் என்கிறது கதர்த் தரப்பு. காங்கிரஸ் மாவட்டப் பிரமுகர் ஒருவர் நம்மிடம் பேசுகையில், “அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்துவது, மாநகராட்சி சார்பான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களையும், தி.மு.க-வைச் சேர்ந்த துணை மேயர் தமிழழகன் எடுத்துக்கொண்டதால், மேயர் சரவணனுக்கு வேலையே இல்லாமல் போய்விட்டது. சரவணனைக் கலந்து ஆலோசிக்காமலேயே முக்கிய முடிவுகள், திட்டங்களை துணை மேயரே அறிவித்துவிடுகிறார். ஒருகட்டத்தில் டென்ஷனான சரவணன், ‘எல்லாத்தையும் நீங்களே செய்யுறீங்க. நான் வேணா திரும்ப ஆட்டோ ஓட்டவே போயிடவா?’ என்று நேரடியாகவே தன் ஆதங்கத்தைக் கொட்டிவிட்டார். அதற்குப் பிறகும் நிலைமை மாறவில்லை. இதற்கிடையே, காங்கிரஸ் வடக்கு மாவட்டத் தலைவரான லோகநாதன், ‘உனக்கு எதுவும் தெரியாது. நான் சொல்றதை மட்டும் செய்யணும். தினமும் கலந்துகொள்கிற நிகழ்ச்சிகள் முதற்கொண்டு அனைத்தையும் என்னிடம் சொல்லி ஒப்புதல் பெற வேண்டும்’ என மேயருக்கு ஏகத்துக்கும் கட்டுப்பாடுகளை விதிப்பதால், சரவணன் திக்கித் திணறுகிறார். சாதாரண ஆட்டோ டிரைவராக இருந்த சரவணன், மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை உண்மையான ஜனநாயகம் என்று ஊரே கொண்டாடியது. ஆனால் தற்போது சுதந்திரமாகச் செயல்பட முடியாததால், மன உளைச்சலில் இருக்கிறார் சரவணன்” என்றார்.

கும்பகோணம் மேயர் சரவணன்
கும்பகோணம் மேயர் சரவணன்
செந்தில் பாலாஜி - கல்பனா
செந்தில் பாலாஜி - கல்பனா

கோவை மாநகராட்சி மேயரான கல்பனா, ஒரு பக்கம் செந்தில் பாலாஜி, இன்னொரு பக்கம் கே.என்.நேரு என்று இரு துருவங்களின் அதிகாரத்துக்கு இடையே சிக்கியிருக்கிறார் என்கிறார்கள் கழக நிர்வாகிகள். ஆனாலுமே, செந்தில் பாலாஜி கிழிக்கும் கோட்டை கல்பனா தாண்டு வதில்லையாம். அதிகாரிகளும் இந்த இடியாப்பச் சிக்கலில் தவிப்பதால், மாநகராட்சியின் பணிகளும் திணற ஆரம்பித்திருக்கின்றன. கோவை தி.மு.க நிர்வாகிகள் சிலர், “முடிந்தவரை தான் பேசும் இடங்களிலெல்லாம், இரண்டு அமைச்சர்களின் பெயர்களையும் பதிவுசெய்துவிட வேண்டும் என்ற அடிப்படையில்தான் கல்பனா ஓடிக்கொண்டிருக்கிறார். மாநகராட்சி பட்ஜெட் புத்தகத்தில் நேரு புகைப்படத்துடன், செந்தில் பாலாஜி புகைப்படத்தையும் போராடி வரவைத்ததைத் தவிர கல்பனா ஒன்றும் செய்துவிடவில்லை. மறுபக்கம், கல்பனாவின் கணவர் ஆனந்தகுமாரும் நிழல் மேயராக வலம்வர, மேயரின் செயல்பாடுகள் தடுமாற்றமாகவே இருக்கின்றன” என்றனர்.

மேயர்களின் அதிகார எல்லைக்குள் அத்துமீறுவது, கரூர், சேலம், தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளிலும் அரங்கேறுகிறது. கரூரில், கமிஷனர் முதல் மாநகராட்சி பியூன் வரை, ‘எந்த விஷயமாக இருந்தாலும் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ஒரு வார்த்தை கேட்கணும்’ என்று மேயர் கவிதா கணேசனிடம் சொல்வதால், கவிதாவால் தன்னிசையாகச் செயல்பட முடியவில்லை என்கிறார்கள். செந்தில் பாலாஜி விருப்பத்தை மீறி பதவிக்கு வந்தாலும், அவரை எதிர்த்து போராட முடியாமல் விழிக்கிறாராம் கவிதா.

இந்திய அரசியலமைப்பின் 73 மற்றும் 74-வது சட்டத் திருத்தங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்கள், அவற்றின் தேவைகளை வரை யறுத்துக் கூறுகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு, உள்ளாட்சி அமைப்புகளை உறவுகளும் உடன்பிறப்புகளும் தங்கள் இஷ்டத்துக்குக் கையாள ஆரம்பித்திருக்கிறார்கள். உள்ளாட்சி அமைப்புகளும், அதன் தலைமைகளும் ஜனநாயகமான முறையில் செயல்படுவதை இந்த அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism