சினிமா
Published:Updated:

மேக்கேதாட்டூ - அலட்சியம் காட்டுகிறதா தமிழக அரசு?

மேக்கேதாட்டூ
பிரீமியம் ஸ்டோரி
News
மேக்கேதாட்டூ

கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹேரங்கி எனக் காவிரி நெடுக அணைகளைக் கட்டி வைத்திருக்கிறது கர்நாடகம்.

“ஒரு இடத்தில் ஒரு கப்பறைக் குழிவு. அதன் நடுவில் துண்டாக வழவழவென்று ஒரு பெரிய பாறைப்பந்து. அதை அங்கு யாரும் கொண்டுவந்து வைக்கவில்லை. நீரின் சீற்றம் சுற்றிச்சுற்றி பாறையை அரித்து வெண்ணெய் திரட்டுவதைப்போல நடுப்பாகத்தைத் துண்டாக்கிக் கழற்றிப்போட்டுவிட்டது. மேலே பார்த்தால் மஞ்சளாகத் தோன்றும் நீர் கையில் எடுக்கும்போது தெள்ளிய படிகமாக இருந்தது. குடிக்கவும் இனிமையான இனிமை...”

‘நடந்தாய் வாழி காவேரி’யில் தி.ஜானகிராமன் இப்படிச் சித்திரிக்கிற மேக்கேதாட்டூ இன்று இருமாநிலங்களுக்கிடையில் அனல் கிளப்பும் பாறைப்படுகையாக மாறியிருக்கிறது.

மேக்கேதாட்டூவில் அணை கட்டுவதில் கர்நாடகா மேலும் மேலும் முனைப்பு காட்டுகிறது. ஆண்ட காங்கிரசும் ஆளும் பா.ஜ.கவும் இந்த விஷயத்தில் கைகோத்து நிற்கின்றன. மத்திய அரசின் செயல்பாடுகளும் கர்நாடகத்துக்குத் துணைபோவதாகவே இருக்கிறது. தமிழக அரசு போதிய அளவுக்கு இந்த விவகாரத்தில் முனைப்புக் காட்டாமல் இருக்கிறது என்று குற்றம்சாட்டுகிறார்கள் செயற்பாட்டாளர்கள்.

கர்நாடக முதல்வராக இருந்த குண்டுராவ், 1982, ஜனவரி 1-ம் தேதி, ‘கர்நாடக மக்களுக்குப் புத்தாண்டுப் பரிசு’ என்று மேக்கேதாட்டூ அணைத் திட்டத்தை அறிவித்தார். அடிக்கல் நாட்ட குடியரசுத் தலைவராக இருந்த நீலம் சஞ்சீவி ரெட்டிக்கு அழைப்பும் விடுத்தார். அப்போது தமிழகத்தில் முதல்வராக இருந்தவர் எம்.ஜி.ஆர். சட்டமன்ற உறுப்பினர் பழ.நெடுமாறன், ‘மேக்கேதாட்டூ திட்டம் தமிழகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அந்த விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்கக்கூடாது’ என்று கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார். அதோடு அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

அதன்பிறகு கர்நாடக முதல்வர்கள், தங்கள் அரசியல் செல்வாக்கு சரியும் காலங்களில் மேக்கேதாட்டூ அணைத்திட்டத்தைக் கையில் எடுப்பதும் தமிழகம் எதிர்ப்பு தெரிவிப்பதும் வழக்கமாகிவிட்டது. தேவகவுடா பிரதமராக இருந்த காலகட்டத்தில் இந்த அணையைக் கட்ட பெரு முயற்சி நடந்தது. 1982, 2014, 2015, 2018 ஆகிய நான்கு காலகட்டங்களில் இந்தத் திட்டத்தைக் கண்டித்துத் தமிழக சட்டசபையில் தீர்மானம் போடப்பட்டுள்ளது.

மேக்கேதாட்டூ - அலட்சியம் காட்டுகிறதா தமிழக அரசு?

பிலிகுண்டுலுவில் இருந்து 45 கி.மீ மேலே, காவிரியுடன் ஹர்காவதி நதி கலக்கிறது. அங்கிருந்து 4 கி.மீ கீழே, மேக்கேதாட்டூ பாறைப் படுகை வருகிறது. 50 அடி மட்டுமே அகலம் கொண்ட, பாறைகளால் நிறைந்த அந்தப்பகுதியில் காவிரியின் ஆழம் 200 அடிக்கு மேல் இருக்கும். நிலப்பரப்பிலிருந்து 600 அடிக்குக் கீழே தனித்தீவு போல இருக்கிறது மேக்கேதாட்டூ.

கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹேரங்கி எனக் காவிரி நெடுக அணைகளைக் கட்டி வைத்திருக்கிறது கர்நாடகம். இப்போது ரூ.10,000 கோடி செலவில் 70 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட மேக்கேதாட்டூ அணையைக் கட்ட முடிவு செய்து கட்டுமானப் பொருள்களை இறக்கி வைத்திருக்கிறது. இப்போதுவரை மழைபெய்து அணைகள் நிரம்பியபிறகு உபரி நீரைத்தான் தமிழகத்துக்குத் தருகிறது கர்நாடகா. கபினியும் கிருஷ்ணராஜ சாகரும் திறக்கப்பட்டால் நேராகத் தண்ணீர் மேட்டூர் வந்துவிடும். மேக்கேதாட்டூ அணை கட்டினால் அதுவும் தமிழகத்துக்கு வராது என்பதுதான் இதில் இருக்கிற விபரீதம்.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப் பட்டு அணைகள், நீர் நிர்வாகம் அனைத்தும் அதன்கீழ் கொண்டுவரப்பட்ட பிறகு, அதன் அனுமதியைப் பெறாமலே மத்திய நீர்வள அமைச்சகம் மேக்கேதாட்டூ அணைக்கான வரைவு அறிக்கை தயார் செய்ய கர்நாடகத்துக்கு அனுமதியளித்தது.

இதை எதிர்த்துத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டது. நீதிமன்றம், ‘உச்ச நீதிமன்றமும் காவிரி மேலாண்மை ஆணையமும் அனுமதிக்காமல் எதுவும் நடக்காது’ என்றுகூறி ஒத்திவைத்துவிட்டது.

பசவராஜ் பொம்மை கர்நாடக முதல்வரான பிறகு மேக்கேதாட்டூ அணைக்கான வரைவு அறிக்கையை மத்திய நீர்வள அமைச்சகத்திடம் சமர்ப்பித்திருக்கிறார். அமைச்சகம், அதை காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அனுப்பிவிட்டது. இந்த அறிக்கையை விவாதத்துக்கு எடுக்கவேண்டும் என்று கர்நாடகம் வலியுறுத்திவருகிறது. ஆனால் பெரும்பான்மை உறுப்பினர்களின் அனுமதி இல்லாமல் எந்தப் பொருளையும் ஆணையத்தில் விவாதிக்க முடியாது. ஆணையத்தில் தமிழகமும் பாண்டிச்சேரியும் ஒத்த கருத்தோடு இருக்கின்றன. கேரளாவும் தமிழகத்தின் நிலைக்கு ஆதரவுதர, பெரும்பான்மை அடிப்படையில் இரண்டு கூட்டங்களில் கர்நாடகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ‘சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை கேட்கவேண்டும். அவகாசம் வேண்டும்’ என்று கர்நாடகம் கோரியதையடுத்து கூட்டம் பிப்ரவரி 4-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பி.ஆர்.பாண்டியன்
பி.ஆர்.பாண்டியன்

பா.ஜ.க சற்று ஓய்ந்திருந்த நிலையில் காங்கிரஸ் இப்போது மேக்கேதாட்டூவைக் கையில் எடுத்திருக்கிறது. அணையை விரைந்துகட்ட வலியுறுத்தி 11 நாள் பாதயாத்திரை அறிவித்தது. கொரோனா விதிமுறைகளை மீறியதாக நீதிமன்றம் கண்டித்ததையடுத்து பாதயாத்திரையை ஒத்தி வைத்துள்ளது காங்கிரஸ் கட்சி.

“மேக்கேதாட்டூவில் தண்ணீரைத் தேக்குவதால் கர்நாடகத்துக்கு எந்தப் பயனும் இல்லை. அது மிகப்பெரிய பள்ளப்பகுதி. 180 கி.மீ தொலைவில் 1,000 அடி உயரத்தில் இருக்கிற பெங்களூருக்கு இங்கிருந்து தண்ணீரைக் கொண்டுசெல்வதாகச் சொல்கிறார்கள். அதற்கு சாத்தியமேயில்லை” என்கிறார்கள் நிபுணர்கள்.

“தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்துகொண்டிருந்த தருணத்தில் அணை கட்டும் பணிகளைக் கர்நாடகம் தொடங்கி விட்டது. வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை, காவிரி நதிநீர் ஆணையம், உச்ச நீதிமன்றம் என எவரின் அனுமதியையும் பெறாமல் கட்டுமானப் பொருள்களைக் குவித்தது. நாங்கள் நேரடியாக மேகேதாட்டூ சென்று அவற்றையெல்லாம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தோம்.

தமிழக அரசு இந்த விவகாரத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை. காவிரி ஆணையத்தில் நம் நிலைப்பாட்டுக்கு ஆதரவு அளிக்குமாறு கேரள முதல்வரிடம் கோரவேண்டும் என்று நான் தமிழக முதல்வருக்குக் கோரிக்கை விடுத்தேன். ஆனால், முதல்வர் ஸ்டாலின் மௌனம் சாதித்தார். நானே கேரள முதல்வரைச் சந்தித்து எங்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்று கோரினேன். அதை ஏற்றுக்கொண்ட கேரள முதல்வர், எழுத்துபூர்வமாக ஆணையத்துக்குத் தமிழக ஆதரவு நிலைப்பாட்டைத் தெரிவித்து விட்டார். அதனால்தான் கர்நாடகத்தின் கோரிக்கை 2 கூட்டங்களில் நிராகரிக்கப்பட்டது.

மேக்கேதாட்டூ அணை கட்டும் விவகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கைகளில் இருக்கிறது. இந்தச்சூழலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் 2-ம் கட்டப் பணிகளைத் தொடங்கி வைத்திருக் கிறார். சட்டப்படி குடிநீர்ப் பயன்பாட்டுக்குக் காவிரியில் தமிழகம் தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம்தான். ஆனால் புதிய திட்டம் என்பதால் ஆணையத்தின் ஒப்புதல் அவசியம். இதைக் கர்நாடகம் பிடித்துக் கொண்டி ருக்கிறது. ‘நீங்கள் ஒகேனக்கல் திட்டத்தைத் தொடங்கியதைப்போல நாங்கள் மேக்கேதாட்டூ அணையைக் கட்டுவோம்’ என்கிறார்கள்.

தமிழகம் காவிரி மேலாண்மை ஆணையத்தை நம்பியிருக்கும் சூழலில் முதல்வர் இப்படியான ஒரு அறிவிப்பை இப்போது வெளியிட்டிருக்கக்கூடாது. அது கர்நாடகத்துக்கு சாதகமாக அமைந்துவிடக்கூடும். ஆணையத்தின் அதிகாரத்தை நாம்தான் இப்போது வலுப்படுத்தவேண்டும்...” என்கிறார் தமிழக அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன்.

மேக்கேதாட்டூவில் கட்டுமானப் பொருள்கள் குவிக்கப்படுவதாக வந்த செய்திகளின் அடிப்படையில் தென்மண்டலப் பசுமைத் தீர்ப்பாய அமர்வு சுயமாக ஒரு வழக்கைப் பதிவு செய்தது. இதுபற்றி ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க ஒரு நிபுணர் குழுவையும் நியமித்தது. கர்நாடக அரசு டெல்லியிலிருக்கும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இதற்குத் தடை பெற்றது. இதையடுத்து தென்னிந்திய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த குழுவும் கலைக்கப்பட்டுவிட்டது.

“இந்த விவகாரத்தையும் தமிழக அரசு முறையாகக் கையாளவில்லை. தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை டெல்லியிலிருக்கும் பசுமைத் தீர்ப்பாயம் மாற்றமுடியாது. ஏற்கெனவே இதுபோன்றதொரு விவகாரத்தில், ‘ஒரு மண்டலத்தில் பசுமைத் தீர்ப்பாயம் விசாரிக்கும் வழக்குகளை மத்திய அரசின் அறிவிப்பாணை இல்லாமல், டெல்லி பசுமைத் தீர்ப்பாயத்துக்கு மாற்றக்கூடாது’ என்று மீனவர் நலச் சங்கம் உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தது. உயர் நீதிமன்றம் டெல்லி பசுமைத் தீர்ப்பாயத்தின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இதைச் சுட்டிக்காட்டி, ‘தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பைக் கட்டுப்படுத்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு அதிகாரமில்லை’ என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கலாம். நேரடியாக உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றுவிட்டது. ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் காவிரி விவகாரம் தொடர்பாகத் தொடர்ந்த பல வழக்குகள் அப்படியே இருக்கின்றன.

தண்ணீர் தராததால் ஏற்பட்ட சாகுபடி இழப்பீடாக ரூ.1,045 கோடியும், குடிநீர் உட்பட இதர பாதிப்புகளுக்காக ரூ.1,434 கோடியும் கர்நாடக அரசு தரவேண்டும் என்று கேட்டுப் போட்ட வழக்கும் அப்படியே இருக்கிறது. காவிரியில் கழிவுநீர் கலப்பது குறித்த வழக்கும் முடிவுக்கு வரவில்லை.

ஜீவக்குமார்
ஜீவக்குமார்

இறுதித் தீர்ப்பில் 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்கவேண்டும் என்று கூறியிருந்தார்கள். ஆனால் உபரி நீரை வைத்தே அந்தக் கணக்கை நேர்செய்கிறது கர்நாடகா. 22.12.21 அன்று கர்நாடக சட்டமன்றத்தில், ‘மேக்கேதாட்டூவில் அணைகட்ட மத்திய நீர்வளத்துறை அனுமதி தந்துவிட்டது’ என்று முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியிருக்கிறார். இதற்குமேலும் தமிழக அரசு அமைதி காப்பது நல்லதல்ல.

கர்நாடகத்தில் எல்லாக் கட்சிகளும் ஓரணியில் நிற்கின்றன. இங்கும் அப்படியான சூழலை உருவாக்க வேண்டும். வாய்ப்புகளைத் தவறவிடாமல் நீதிமன்றத்தை நாம் முறையாக அணுகவேண்டும்” என்கிறார் வேளாண் செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான ஜீவக்குமார்.

காவிரிப் பிரச்னை என்பது தஞ்சை மண்டலத்தின் பிரச்னை மட்டுமல்ல; தமிழகத்தின் 32 மாவட்டங்கள், 11 மாநகராட்சிகள் அடங்கிய 5 கோடி மக்களுக்கான குடிநீர் ஆதாரம். மேக்கேதாட்டூ அணை கட்டப்பட்டால் 25 லட்சம் ஏக்கர் சாகுபடிப் பரப்பு பாதிப்புக்குள்ளாகும். விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் என ஒரு கோடி மக்கள் வாழ்வாதாரம் இழப்பார்கள். தமிழக அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!