
தி.மு.க ஆட்சி அமைத்ததிலிருந்தே உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தது குடும்பத் தரப்பு. ஆனால் முதல்வரும், கட்சி சீனியர்களும் அதை விரும்பவில்லை.
திடீர் கல்யாணம்போல நடந்து முடிந்திருக்கிறது உதயநிதி ஸ்டாலினின் ‘பட்டாபிஷேகம்.’ ‘ஏன் இந்த அவசரம்?’ என தி.மு.க சீனியர்களே முணுமுணுக்கும் அளவில் அமைச்சரவை விரிவாக்கம் நடந்தேறியிருக்கிறது. இலாகா மாற்றித் தரப்பட்டதில் சில அமைச்சர்களிடம் சந்தோஷமும், பல அமைச்சர்களிடம் அதிருப்தியும் ஏற்பட்டிருக்கிறது. டிசம்பர் 14-ம் தேதி உதயநிதி அமைச்சராகப் பதவியேற்ற விழா முடிந்தவுடன், அமைச்சரவைக்குள் சீனியர்கள், ஜூனியர்கள் என இரண்டு அதிகார மையங்கள் உருவாகியிருப்பதைக் கண்கூடாகக் காண முடிந்தது. எம்.எல்.ஏ-வாக மட்டுமே இருந்தவர், இப்போது அமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பதால், இனி அரசின் நிர்வாக நடவடிக்கைகளுக்கு உதயநிதியும் பொறுப்பாக வேண்டியிருக்கும். ‘கட்சி, ஆட்சியில் நிலவும் சவால்களை உதயநிதி எப்படி எதிர்கொள்ளப்போகிறார்?’ என்பதுதான் தி.மு.க-வில் எழுந்திருக்கும் மில்லியன் டாலர் கேள்வி!

தெலங்கானா, மஹாராஷ்டிரா அவசரத்துக்கான பின்னணி!
‘உதயநிதியை அமைச்சராக்க வேண்டும்’ என்கிற பேச்சு, உதயநிதியின் 45-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களை ஒட்டி குடும்பத்துக்குள் தீவிரமாக எழுந்தபோதே, அதற்கு முதல் ஆளாகக் கட்டையைப் போட்டிருக்கிறார் உதயநிதி. ஆனால், அவர் விருப்பத்தையும் மீறித்தான் அமைச்சர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். நம்மிடம் பேசிய முதல்வர் குடும்பத்துக்கு நெருக்கமான பிரமுகர்கள் சிலர், “தி.மு.க ஆட்சி அமைத்ததிலிருந்தே உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தது குடும்பத் தரப்பு. ஆனால் முதல்வரும், கட்சி சீனியர்களும் அதை விரும்பவில்லை. அவ்வளவு வேகம் தேவையில்லை என நினைத்தனர். ‘2024 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-தான் வெற்றிபெறப்போகிறது. அதற்குப் பிறகு அமைச்சர் பொறுப்பு வழங்கலாம்’ என்று சமாதானம் கூறினார்கள். ஆனால், அதைக் குடும்பத் தரப்பு ஏற்கவில்லை.
டிசம்பர் 14, 2021-ல் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், தன் குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது தன் மகனும், தெலங்கானா மாநிலத் தொழில்துறை அமைச்சருமான ராமாராவை, ஸ்டாலின் குடும்பத்துக்குப் பெருமிதத்தோடு அறிமுகம் செய்துவைத்தார் சந்திரசேகர் ராவ். உதயநிதிக்கும் ராமாராவுக்கும் ஏறக்குறைய ஒரே வயதுதான். ராமாராவ் அரசியல் அதிகாரத்துடன் இருப்பதைப் பார்த்த குடும்பத் தரப்புக்கு ‘உதயநிதியை அமைச்சராக்க வேண்டும்’ என்கிற ஆசை அப்போது தீவிரமானது. 2019-ல், மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே ஆட்சியிலிருந்தபோது, அவர் மகன் ஆதித்ய உத்தவ் தாக்கரேவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அப்போது ஆதித்யாவுக்கு வயது 29-தான். இந்த உதாரணத்தையும் எடுத்துச் சொன்ன உறவுகள், ‘எப்போது அமைச்சராக்கினாலும் எழுகிற விமர்சனம் எழத்தான் செய்யும். வாரிசு என்கிற பிம்பத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்க வேண்டும். தம்பியை தி.மு.க-வின் அடுத்த தலைமைக்கான முகமாக மாற்றவும், போதிய நிர்வாக அனுபவங்களைப் பெறுவதற்கும் அவரை இப்போதே அமைச்சராக்குவதுதான் சரியாக இருக்கும். மத்திய அரசியலும், தமிழக அரசியலும் அடுத்த தலைமுறையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. அடுத்த சட்டமன்றத் தேர்தல் களம் இளைஞர்களை முன்வைத்ததாக இருக்கும். மத்தியில் பலமாக இருக்கும் பா.ஜ.க-வின் முதன்மையான குறி தமிழகமும் தி.மு.க-வும்தான். அவர்கள் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் எந்த எல்லைக்கும் செல்வார்கள். அந்த வகையிலும் இப்போதே தம்பியைக் களமிறக்கிச் சுதாரிக்க வேண்டும்’ என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. முதலில் யோசித்த முதல்வர், நீண்ட யோசனைக்குப் பிறகே சம்மதம் தெரிவித்தார்.

உதயநிதியிடம் இது குறித்து விவாதிக்கப் பட்டபோது, ‘எனக்கு அடுத்தடுத்து பட வேலைகள் இருக்கு. இப்ப அமைச்சர் பொறுப்பை ஏற்க முடியாது’ எனச் சொல்லிப் பார்த்தார். ஆனால், குடும்பத் தரப்பின் உறுதி கொஞ்சமும் குறையவில்லை. போராடிப் பார்த்து வேறு வழியில்லாமல்தான் அமைச்சராகச் சம்மதித்தார். ‘உதயநிதி அமைச்சராகிவிட்டார், தங்கள் கடமை முடிந்தது’ என நினைக்கிறது குடும்பத் தரப்பு. ஆனால், இனிமேல்தான் கதையே தொடங்குகிறது” என்றனர் விரிவாக.
“Congrats மச்சான்...” படபடத்த பட்டாபிஷேகம்!
உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்க முடிவெடுத்த சமயத்தில், சில அமைச்சர்களுக்கும் இலாகாவை மாற்றிக்கொடுக்கத் தீர்மானித்தது தி.மு.க தலைமை. புதிய இலாகா மாற்றித்தரப்பட்ட அமைச்சர்கள் சிலருக்கு, பதவியேற்புக்கு முதல்நாள் இரவுதான் அழைப்பே வந்திருக்கிறது. பதவியேற்பு நிகழ்ச்சிக்கு 400 பேரை அழைக்க முடிவெடுத்து, இறுதியில் 120 பேருக்கு மட்டுமே அழைப்பு கொடுத்திருக்கிறார்கள். எந்த ஆடம்பரமும் விளம்பரமும் இருக்கக் கூடாது என ஏற்கெனவே தலைமை உத்தரவிட்டிருந்ததால், போஸ்டர்கள், விளம்பரங்கள் பெரிதாக இல்லை. உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையை மட்டும் ஒதுக்க தொடக்கத்தில் முடிவெடுத்திருந்திருக்கிறார்கள். முதல்வரின் மருமகன் சபரீசன்தான், ‘சிறப்புத்திட்ட செயலாக்கத்துறையையும் சேர்த்துக் கொடுக்கலாம்’ எனச் சொல்லியிருக்கிறார். முதல்வரிடம் இருந்த துறை என்பதால், முக்கியத்துவத்தின் அடிப்படையில் உதயநிதியின் பெயர் அமைச்சர்கள் பட்டியலில் 10-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.
பதவியேற்புவிழாவின் முதல் ஐந்து வரிசைகளில், முதல்வரின் மொத்தக் குடும்பமும் ஒன்றுகூடியிருந்தது. அடுத்த வரிசையில், உதயநிதியின் தோழர்கள் வரிசைகட்டி அமர்ந்திருந்தார்கள். மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியும் வந்திருந்தார். பதவியேற்றவுடன் மேடையைவிட்டு இறங்கிவந்த உதயநிதியைக் கட்டியணைத்து, “Congrats மச்சான்...” என சபரீசன் வாழ்த்த, உதயநிதியின் முகத்தில் சிரிப்பு மத்தாப்புகள் பூத்தன. இருவரும் அணைத்துக்கொண்டனர்.

தலைமைச் செயலகத்தில், மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டு அமைச்சர் பணியை அன்றே தொடங்கினார் உதயநிதி. கோப்புகளைப் படித்துப் பார்க்காமல் உதயநிதி கையெழுத்திடவும், அருகில் நின்றிருந்த அமைச்சர் துரைமுருகன், “ஏம்ப்பா ஆபீஸர்ஸ்... விவகாரமா எதையும் கொடுத்துடாதீங்க” என கமென்ட் அடித்தார். சீனியர்களுக்குச் சிரிப்பு வந்தாலும், இளைஞரணியைச் சேர்ந்த சிலர் ‘ஃபைல் படிக்கத் தெரியாதுனு சின்னவரை நக்கல் பண்றார்’ எனக் கடுப்பானார்கள்.
“என்னைப் பலிகடா ஆக்குவதா?” - அதிருப்தியில் சீனியர்கள்!
எந்தவொரு நல்ல நிகழ்ச்சியிலும் சிரிப்பவர்களும் உண்டு, அழுபவர்களும் உண்டு. அதுபோலத்தான், இந்தப் பட்டாபிஷேக நாளிலும் நடந்திருக்கிறது. தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதும், சீனியரான ஐ.பெரியசாமிக்குக் கூட்டுறவுத்துறை வழங்கப்பட்டது. அதிருப்தியிலிருந்த அவர், தனக்கு ஒதுக்கப்பட்ட அமைச்சர் பங்களாவில்கூட குடியேறாமல் இருந்தார். அவரை திருப்திப்படுத்தவே, அமைச்சர் பெரியகருப்பனிடம் இருந்த ஊரக வளர்ச்சித்துறையை பெரியசாமிக்கு அளித்திருக்கிறது ஆட்சி மேலிடம். ‘அதற்குக் காரணம் இருக்கிறது’ என்கிறார்கள் சீனியர் தி.மு.க புள்ளிகள்.
நம்மிடம் பேசிய அறிவாலய சீனியர் பிரமுகர் ஒருவர், “ஊரக வளர்ச்சித்துறை என்பது மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவேண்டிய துறை. ஆனால், அமைச்சரானதிலிருந்து பெரியகருப்பன் எங்கும் சுற்றுப்பயணம் செல்லவில்லை. அவர் சம்பந்தி மீதும் புகார்கள் கொட்டின. இதையொட்டியே அவரை டம்மியாக்கியிருக்கிறது கட்சித் தலைமை. அவரைப்போலவே, வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரன் மீதும் ஏகப்பட்ட புகார்கள் குவிந்தன. துறைக்குள் கடந்த 18 மாதங்களில் சொல்லிக்கொள்ளும்படி அவர் கொஞ்சமும் செயல்படவில்லை. இந்த நிலையில், வனத்துறையில் ‘பசுமைத் தமிழகம்’ என்ற திட்டம் விரைவில் அறிவிக்கப்படவிருக்கிறது. பட்டியலினப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்குப் பெரிய துறை ஒதுக்கப்படுவதில்லை என்ற விமர்சனத்தையும் போக்கவேண்டியிருக்கிறது. எனவே, ஒரே தீர்வாக வனத்துறையை மதிவேந்தனுக்கு அளித்திருக்கிறார்கள். ஊட்டி பகுதியைச் சேர்ந்தவர் என்பதால், பதிலுக்கு ராமச்சந்திரனுக்குச் சுற்றுலாத்துறை சென்றிருக்கிறது. அமைச்சரவையிலேயே ஜூனியரான மதிவேந்தனுக்கு வனத்துறை கொடுக்கப்பட்டதை சீனியர்கள் பலராலும் ஜீரணிக்க முடியவில்லை. தங்களுக்குள்ள முக்கியத்துவம் குறைக்கப்பட்டதாக, அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், முத்துசாமி, காந்தி ஆகியோர் அதிருப்தியில் இருக்கிறார்கள்” என்றார்.

அமைச்சராகப் பதவியேற்ற பிறகு, முதன்முறையாக தலைமைச் செயலகத்துக்கு உதயநிதி வந்தபோது, தமிழ்நாடு அரசின் தலைமைக் கொறடா கோ.வி.செழியன், பழனி எம்.எல்.ஏ செந்தில்குமார், சென்னை மேற்கு தி.மு.க மாவட்டச் செயலாளர் சிற்றரசு ஆகியோர் உதயநிதியின் காலில் விழுந்து வணங்கினர். இதை அங்கிருந்த கட்சி சீனியர்கள் யாருமே ரசிக்கவில்லை. இது ஒருபுறமிருக்க, தன்னிடமிருந்த இலாகா பறிக்கப்பட்ட அதிருப்தியில், சக அமைச்சரைச் சந்தித்த தென்மாவட்ட அமைச்சர் ஒருவர், “ஒரு சீனியரை திருப்திப்படுத்த, சீனியராக இருக்கும் என்னைப் பலிகடா ஆக்குவதா... நம்ம சமூகத்தைத் தொடர்ந்து ஓரங்கட்டுறாங்க” எனக் குமுறியிருக்கிறார்.
உதயநிதியைச் சுற்றி ஒரு டஜன் பேர்... உருவாகும் புதிய பவர் சென்டர்!
உதயநிதியை அமைச்சராக்கியதைத் தொடர்ந்து, அமைச்சரவைக்குள் புதிதாக ஓர் அணி உருவாகிவருவதைப் பார்க்க முடிகிறது. அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எஸ்.எஸ்.சிவசங்கர், செந்தில் பாலாஜி, சி.வீ.மெய்யநாதன், மதிவேந்தன், மூர்த்தி, சி.வி.கணேசன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் உதயநிதியைச் சுற்றிலும் தீவிரமாக வட்டமடிக்கிறார்கள். மத்திய சென்னையிலுள்ள பிரபல மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர், உதயநிதிக்கு மிக நெருக்கம். உதயநிதியின் அமைச்சர் அறையில், ஒரே நாளில் அவர் ஒரு புதிய பவர் சென்டராக உருவாக ஆரம்பித்திருக்கிறார். இதுபோக, திருச்சி நண்பர்கள், ஆர்.ஏ.புரம் நட்சத்திரக் குடியிருப்பு நண்பர்கள் என ஒரு டஜன் பேர் கோட்டையின் இரண்டாவது தளத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறார்கள்.
நம்மிடம் பேசிய சீனியர் அமைச்சர் ஒருவர், “உதயநிதியைச் சுத்தி புதுசு புதுசா ஆளுங்க வர்றாங்க. அமைச்சருங்க, எம்.எல்.ஏ-க்கள் வரிசைகட்டி வாழ்த்துச் சொல்ல நிக்குறாங்க. தெரியாத, அறியாத முகங்களோட இனி நாமளும் வரிசையில போய்தான் நிக்கணும்னு நினைக்கும்போது பதற்றமா இருக்கு. சீனியர் அமைச்சர் நேருவோட மகன் அருண், தன்னோட பிறந்தநாளுக்கு வாழ்த்து வாங்க உதயநிதியிடம் போயிருக்கார். தன் நண்பர் அன்பில் மகேஸுக்கும் நேருவுக்கும் இடையே இருக்கும் பகையை மனசுல வெச்சுக்கிட்டு, ரெண்டு மணி நேரம் அருணைக் காக்க வெச்சுருக்கார் உதயநிதி. இதையெல்லாம் பார்க்கும்போது, கட்சி சீனியர்கள் பலரும் மறைமுகமாக ஓரங்கட்டப்படுறது தெளிவா தெரியுது. அடுத்த பவர் சென்டராக உருவாகும் உதயநிதியின் கேங்கையும் அவர்களின் செயல்பாடுகளையும் நினைச்சு இப்பவே கலக்கமா இருக்கு” என்றார்.
காத்திருக்கும் சவால்கள்... விளையாடுவாரா உதயநிதி?
இதேபோல சீனியர்கள் பலரும் வருத்தத்தில் இருக்கிறார்கள். தன் மகன் ஆசிமை மேயராக்க முடியாதபடிக்கு, ஆவடி மாநகராட்சியைத் தனிப் பிரிவினருக்காக மாற்றியதில் அமைச்சர் நாசருக்கு வருத்தம். மகன் தமிழ் மாறனுக்கு கவுன்சிலர் சீட்கூட வழங்காததில் அமைச்சர் தா.மோ.அன்பரசனும், தங்கள் வாரிசுகளை அரசியலுக்கு வரவிடாமல் கட்சித் தலைமை தடுப்பதால் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், பெரியகருப்பன் ஆகியோரும் கடும் அப்செட். உதயநிதி அமைச்சராகியிருப்பதால், தங்கள் வாரிசுகளுக்கும் உரிய முக்கியத்துவம் வழங்க வேண்டும் என அந்த அமைச்சர்கள் தலைமையிடம் கேட்கவிருக்கிறார்கள். இந்த நெருக்கடியை தி.மு.க தலைமையும், உதயநிதியும் எப்படிச் சமாளிக்கப்போகிறார்கள் என்பதுதான் பெரிய கேள்வி.
கட்சிரீதியாக மட்டுமல்ல, நிர்வாகரீதியாகவும் உதயநிதிக்குச் சவால்கள் அணிவகுத்து நிற்கின்றன. பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை, சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறைதான் கண்காணித்துவருகிறது. அதேபோல, ‘நீர்வளத்தை மேம்படுத்துதல், வேளாண் உற்பத்தி விளைச்சல் மற்றும் சந்தைப்படுத்துதல் இணைப்புகளை ஊக்கப்படுத்துதல், அனைவருக்கும் வீடு திட்டம்’ ஆகியவற்றையும் இந்தத் துறைதான் கண்காணிக்கிறது. இந்தத் திட்டங்களில் சின்னத் தவறோ, விமர்சனமோ எழுந்தால், அதற்குத் துறையின் அமைச்சரான உதயநிதிதான் விளக்கம் கொடுக்க நேரிடும்.
நம்மிடம் பேசிய சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், “தமிழகத்திலுள்ள 37,000-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில், 13,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களே இல்லை. மைதானம் இருக்கும் பள்ளிகளிலும் விளையாட்டு உபகரணங்கள் இல்லை. அதற்காக வழங்கப்படும் நிதியைப் பள்ளிக்கல்வித்துறை வேறு திட்டத்துக்குச் செலவு செய்துவருகிறது. இங்கு நிறைய மாறுதல்களை உதயநிதி கொண்டுவர வேண்டும்” என்றார்.
டிசம்பர் 14-ம் தேதி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், “உதயநிதி இப்பதான் அமைச்சராகி இருக்காரு. வா, ராஜா வா... இனிமேதான் ஆட்டமே இருக்கு” என்று பேசியிருந்தார். அவர் சொன்னதுபோல, ஆட்டம் இனிமேல்தான் இருக்கிறது. நேரு ஸ்டேடியத்தில் மழையில் சிறிதளவு தண்ணீர் தேங்கினாலும் சரி, 29 விளையாட்டு ஹாஸ்டல்களில் சிறு விரிசல் விழுந்தாலும் சரி, இனி உதயநிதியை நோக்கித்தான் எல்லோரும் விரல் நீட்டுவார்கள். அவரது வெளிச்சமே அவருக்குச் சிக்கலாக மாற வாய்ப்பிருக்கிறது. முதன்முறையாக, ஒரு பொறுப்பு வளையத்துக்குள் வந்திருக்கிறார் அவர். அவரின் செயல்பாட்டைப் பொறுத்துத்தான், அவர் எதிர்காலம் மட்டுமல்ல, தி.மு.க-வின் எதிர்காலமும் இருக்கிறது. உதயநிதிக்கு வழங்கப்பட்டிருக்கும் அமைச்சர் பதவி, அதிகாரம் மட்டுமல்ல... பொறுப்பு... சவால்... சோதனை ஆட்டம்!
ஆடுவாரா உதயநிதி?