
. ‘மார்கழி பிறக்குறதுக்குள்ள தம்பிக்கு பட்டாபிஷேகம் பண்ணிடுங்க’ என ஆலோசனை அளித்த அந்த ஜோதிடர், டிசம்பர் 14-ம் தேதியைப் பதவியேற்பு விழாவுக்காகக் குறித்தும் கொடுத்திருக்கிறார்.
‘உதயநிதி இம்மாத இறுதியில் அமைச்சராகவிருக்கிறார்... அடுத்த வாரம் பதவியேற்பு’ என்ற புகைச்சலுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது டிசம்பர் 14. தடபுடல் வரவேற்பு, போஸ்டர், பேனர்களுக்கு தி.மு.க தலைமை ‘தடை’ போட்டுவிட்டதால், பெரிய ஆர்ப்பாட்டமில்லாமல் அரங்கேறியிருக்கிறது பதவியேற்பு விழா. ஆனால், உதயநிதி அமைச்சராகப் பதவியேற்கும் விழாவுக்கு முன்பும் பின்பும் நிகழ்ந்த சுவாரஸ்யங்கள் ‘டிக் டிக் டிக்’ ரகம்தான்.
அதிகாரிகள் ஆலோசனையும் தஞ்சாவூர் சிறப்பு பூஜையும் உதயநிதியின் பதவியேற்புக்கு முதல்நாள், டிசம்பர் 13-ம் தேதி, முதல்வர் ஸ்டாலினின் இல்லத்தில், சீனியர் ஐ.ஏ.எஸ்அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அமைச்சரானவுடன் உதயநிதி கையெழுத்திட வேண்டிய கோப்புகள், துறைரீதியாக அவர் கவனிக்க வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகள் உதயநிதிக்கு வகுப்பெடுத்திருக்கிறார்கள். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, குடும்பத்துக் குள்ளும் ஓர் ஆலோசனைக் கூட்டம் நடந்திருக்கிறது. துர்கா ஸ்டாலினின் உறவினர்கள், கிருத்திகா உதயநிதியின் உறவினர்கள் பலரும் வெளியூர்களிலிருந்து வருவதால், அவர்களைத் தங்கவைப்பது, ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் செல்வது குறித்து ஆலோசித்திருக்கிறார்கள். உதயநிதியின் பதவியேற்பு நிகழ்ச்சிகளைக் குடும்பத்தின் சார்பில் கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு மத்திய சென்னை எம்.பி தயாநிதி மாறனிடம் அளிக்கப்பட்டது.

முன்னதாக, சேலத்தைச் சேர்ந்த ஜோதிடர் ஒருவர்தான் உதயநிதியின் ஜாதகத்தை கணித்திருக்கிறார். ‘மார்கழி பிறக்குறதுக்குள்ள தம்பிக்கு பட்டாபிஷேகம் பண்ணிடுங்க’ என ஆலோசனை அளித்த அந்த ஜோதிடர், டிசம்பர் 14-ம் தேதியைப் பதவியேற்பு விழாவுக்காகக் குறித்தும் கொடுத்திருக்கிறார். அவர் ஆலோசனைப்படி, தென்காசி அருகே கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாட்டையும் நடத்தியிருந்தார் துர்கா. டிசம்பர் 13-ம் தேதி தஞ்சையிலிருந்து திருச்சி வழியாக விமானத்தில் வரவழைக்கப்பட்ட புரோகிதர்கள், முதல்வரின் இல்லத்தில் சிறப்பு பூஜைகளைச் செய்திருக்கிறார்கள்.
நம்மிடம் பேசிய தி.மு.க சீனியர் அமைச்சர்கள் சிலர், ‘‘பதவியேற்பதற்கு முதல்நாள் முதல்வரின் இல்லத்தில், கலவையான உணர்வுகள் நிலவின. மகன் அடுத்த இடத்துக்கு முன்னேறுவதில் முதல்வருக்கு சந்தோஷம்தான் என்றாலும், பொறுப்புமிக்க இடமென்பதால் கவலையும் அவர் மனதைத் தொற்றிக்கொண்டது. உதயநிதியை அழைத்தவர், ‘இப்போது நீ தும்மினால்கூட செய்தியாகிவிடும். யாரிடம், எதைப் பேசினாலும் கவனமாகப் பேச வேண்டும். அரசு விழாவுக்குச் சரியான நேரத்தில் செல்ல வேண்டும். சீனியர் அமைச்சர்களிடம் நிறைய அட்வைஸ் கேள்’’ என ஆலோசனை அளித்திருக்கிறார்.

“எனக்கும் துணையா இருங்க!”
டிசம்பர் 14-ம் தேதி, காலை 6 மணிக்கு முதல்வரின் இல்லத்திலிருந்து அமைச்சர் சேகர் பாபுவுக்கு அழைப்பு வந்திருக்கிறது. காலை 6:30 மணிக்கெல்லாம் முதல்வர் வீட்டுக்குச் சென்ற சேகர் பாபுவிடம், ‘‘உங்களுக்கு சி.எம்.டி.ஏ துறையும் சேர்த்து கொடுத்திருக்கேன். பொறுப்பா செயல்படுங்க’’ என்றிருக்கிறார் ஸ்டாலின். அப்போதுதான், அமைச்சரவை மாற்றத்தில் தன் பெயரும் இடம்பெற்றிருப்பது சேகர் பாபுவுக்குத் தெரிந்தது. அவருக்கு மட்டுமல்ல, துறை மாற்றிக் கொடுக்கப்பட்ட பலருக்கும் கடைசி நேரத்தில்தான் தகவல் போயிருக்கிறது.
காலை 7:30 மணிக்கு எழுந்து வந்த உதயநிதி, சேகர் பாபுவுக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு, ‘‘அப்பாவுக்குத் துணையா இருந்த மாதிரி எனக்கும் இருங்க’’ என்றிருக்கிறார். காலை 9 மணிக்கெல்லாம், முதல்வர் இல்லத்திலிருந்து ராஜ் பவன் புறப்பட கான்வாய் ரெடியாகிவிட்டது. பதவியேற்பு விழாவுக்கு ஜீன்ஸ் பேன்ட், வெள்ளைச் சட்டையுடன் உதயநிதி கிளம்பி நின்றதைப் பார்த்துவிட்டு, குடும்பத்திலிருந்த பெரியவர்கள், ‘ஏம்பா, இன்னைக்காவது வேட்டி கட்டலாம்ல’ என்றிருக்கிறார்கள். ‘ஜீன்ஸ் பேன்ட் போதும். நான் எப்போதும் போலவே இருந்துக்குறேன்’ என்று மறுத்துவிட்டார் உதயநிதி. பதவியேற்பு விழாவில் பங்கேற்க 140 பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது. உதயநிதியின், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியிலிருந்து பகுதிச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள் அனைவரும் விழாவுக்கு வந்திருந்தனர்” என்றனர்.

அமைச்சரவையில் 10-வது இடம்... முணுமுணுப்பில் சீனியர்கள்!
விழா அரங்கில் வலது பக்கத்தில் குடும்பத்தாரும், இடது பக்கத்தில் அமைச்சர்களும் அதிகாரிகளும் அமர்ந்திருந்தனர். கட்சிக்காரர்களுக்குக் கடைசி வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. நல்ல நேரம் முடிவதற்கு முன்பாக, காலை 9:30 மணிக்கு அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார் உதயநிதி. அந்தச் சமயத்தில், தலைமைச் செயலகத்தில் அவரது அறையின் முன்பாக, ‘இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்’ பெயல்ப் பலகையும் மாட்டப்பட்டது. விழா முடிந்தவுடன், உதயநிதியை ஆரத்தழுவி உறவுகள் வாழ்த்தினர். சீனியர்கள், அங்கேயே பொக்கே கொடுத்துவிட்டுப் புறப்பட்டனர். குரூப் போட்டோ எடுக்கப்பட்டபோது, உதயநிதிக்கு இருக்கை அளிக்கப்பட்டது. இதை, சீனியர்கள் சிலர் எதிர்பார்க்கவில்லை.
பத்திரிகையாளர்களும் ஆச்சர்யத்துடன் விசாரித்தபோது, ‘‘முதல்வர் கையிலிருந்த சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை உதயநிதி வசம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அந்தத் துறையின் முக்கியத்துவத்தால், புரோட்டோகால் அடிப்படையில் அவருக்கு அமைச்சரவையில் 10-வது இடம் அளிக்கப்பட்டிருக்கிறது” என சட்டமன்ற அலுவலக அதிகாரிகள் விளக்கம் கொடுத்தார்கள். ‘‘அ.தி.மு.க ஆட்சியில் நிதித்துறை அமைச்சராக இருந்தஓ.பன்னீர்செல்வம், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அருகில் அமரவைக்கப்பட்டார். இப்போது, அந்தத் துறையைக் கையில் வைத்திருக்கும் பி.டி.ஆர் நிற்கவைக்கப் பட்டிருக்கிறார். இதுதான் புரோட்டோகாலா?” என முணுமுணுத்தபடி நகர்ந்தார்கள் சீனியர்கள்.
அரசு சார்பாக வழங்கப்பட்ட 6666 எண் கொண்ட காரில் கோட்டைக்கு வந்தார் உதயநிதி. அவரை, சீனியர் அமைச்சர்கள் துரைமுருகன். கே.என்.நேரு, பொன்முடி உள்ளிட்டோர் கரம்பிடித்து அமைச்சர் இருக்கையில் அமரவைத்தனர். கையெழுத்துக்காக உதயநிதி டேபிளில் கோப்புகள் வந்தபோது, அவரிடம் பேனா இல்லை. சீனியர் பி.ஏ மணிராஜ் தன்னுடைய பேனாவை அளித்தபோது, அமைச்சர் நேருவும் தன்னுடைய பேனாவைத் திறந்து உதயநிதியிடம் அளித்தார். நேருவின் பேனாவை வாங்கி, கோப்புகளில் கையெழுத்திட்டார் உதயநிதி. இந்த வைபவங்களெல்லாம் முடிந்த பிறகு, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் இல்லத்துக்குச் சென்றவர், அன்பில் மகேஸின் அம்மாவிடம் வாழ்த்துப் பெற்றார்.
சுருக்கமாக முடிந்த உதயநிதி பதவியேற்புவிழா, சுவாரஸ்யங்களுக்குப் பஞ்சமில்லாமல் நடந்திருக்கிறது. அவரது அமைச்சர் பணியும், சர்ச்சைகள் இல்லாமல் சுவாரஸ்யத்துடன் இருப்பதையே கட்சித் தொண்டர்களும் விரும்புகிறார்கள்.