சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

எப்படி இருக்கு ஸ்டாலின் கேபினட்!

ஸ்டாலின் கேபினட்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டாலின் கேபினட்

- இரா.சரவணன்

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நேரம். முன்னணி நிலவரங்கள் மாறி மாறி வருகின்றன. அ.தி.மு.க ஐவர் அணியின் முக்கியஸ்தரான ஒரத்தநாடு வத்திலிங்கத்தை வீழ்த்தி தி.மு.க-வின் புல்லட் ராமச்சந்திரன் வெற்றி என்கிற செய்தி முதல் அறிவிப்பாக வந்தது. ‘நிச்சயம் தி.மு.க ஆட்சிதான்’ என முடிவு செய்கிறார் ஸ்டாலின். “நீங்கதான் அக்ரி மினிஸ்டர்…” என புல்லட் ராமச்சந்திரனுக்கு போன் பண்ணிப் பேசுகிறார். ஆனால், வெற்றி நிலவரங்கள் மாற, தி.மு.க அந்தத் தேர்தலில் தோற்றுப்போனது. 2021 தேர்தலிலும் வைத்திலிங்கத்தை எதிர்த்து அதே புல்லட் ராமச்சந்திரனை நிறுத்துகிறார் ஸ்டாலின். “என் சொல்லில் மாற்றமில்லை. இந்தமுறை கட்சி நிச்சயம் ஜெயிக்கும். நீங்கதான் அக்ரி மினிஸ்டர்” எனச் சொல்லி அனுப்புகிறார் ஸ்டாலின். சொன்னபடியே தி.மு.க ஆட்சி அமைக்கிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக புல்லட் ராமச்சந்திரன் தோற்கிறார்.

“நாம் நினைப்பதையெல்லாம் செய்துவிட முடியாது. நான் இப்போது முதலமைச்சர். ஆனால், நான் நினைத்த ஒருவரை அமைச்சராக்க முடியவில்லை. இதுதான் அரசியல்!” என நெருக்கமானவர்களிடம் இந்தச் சம்பவத்தைச் சொல்லித்தான் அமைச்சரவைப் பட்டியலை வெளியிட்டிருக்கிறார் ஸ்டாலின். அதில், எதிர்பார்த்தவர்களின் பெயர்களும் இருந்தன; எதிர்பாராதவர்களின் பெயர்களும் இருந்தன.

கருணாநிதி காலத்தில் யாரெல்லாம் அமைச்சர்கள், அவர்களுக்கு என்ன துறை என்பதைக் கட்சிக்காரர்களே சுலபமாகக் கணித்துவிடுவார்கள். ஜெயலலிதா ஆட்சியில் யாரெல்லாம் அமைச்சர்கள் என்பதை அந்தப் பட்டியலில் இருப்பவர்கள்கூடக் கணிக்க முடியாது. ஆனாலும், இருவருடைய அமைச்சரவையிலும் சாதி ஒதுக்கீடு, மாவட்டப் பிரதிநிதித்துவ அடிப்படையில் அமைச்சர்கள் இடம்பிடிப்பார்கள். இந்த வழக்கத்தைத் தவிடுபொடியாக்கியிருக்கிறார் ஸ்டாலின். தகுதி, நிர்வாகத் திறமை, நெளிவுசுளிவு ஆகியவற்றை மட்டுமே பார்த்து அமைச்சரவைப் பட்டியலை அறிவித்திருக்கிறார் ஸ்டாலின். அதனால்தான் 15 மாவட்டங்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லை. 10 மாவட்டங்களுக்கு இரட்டை அமைச்சர்கள் அங்கீகாரம். “வெற்றியை வாரிக்கொடுத்த தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை என ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டங்களைப் புறக்கணித்தது நியாயமா?” என்கிற கேள்விகள் பெரிதாகக் கிளம்ப, “காவிரிக்கரையாம் தஞ்சை மண்ணின் திருவாரூரைச் சேர்ந்த எனக்கு தாய்த் தமிழ்நாட்டுக்கு சேவை செய்திட வாய்ப்பு வழங்கிய மக்களுக்கு நன்றி” எனச் சொன்னார் ஸ்டாலின். அப்படியே கருணாநிதி பாணி. டெல்டா சர்ச்சைகள் சைலன்டாகின.

``திருநெல்வேலியையும் புறக்கணிச்சிட்டீங்களே…” எனச் சிலர் குமுற, “ஆட்சிக்கே சூத்ரதாரியாக இருக்கிற ஸ்டாலினின் மருமகன் சபரீசனே உங்க மாவட்டம்தானே?” என நிர்வாகிகளே தமாஷ் பண்ணியிருக்கிறார்கள்.

சேலத்தில் வீரபாண்டியார், தஞ்சையில் கோ.சி.மணி எனக் குறுநில மன்னர்கள் கணக்கில் அமைச்சரவை ஆட்கள் அமைந்துவிடக் கூடாது என்பதில் ஸ்டாலின் கவனமாக இருந்திருக்கிறார். அதனால்தான் பொதுப்பணித் துறையை எதிர்பார்த்த துரைமுருகனுக்கு அதிலிருந்து பொரி உருண்டையைப் பிரித்தது மாதிரி நீர்ப்பாசனத் துறையையும், மின்சாரத்தை எதிர்பார்த்த ஐ.பெரியசாமிக்குக் கூட்டுறவுத் துறையையும், வேலுமணி நிர்வகித்த அத்தனை துறைகளையும் மொத்தமாக எதிர்பார்த்த கே.என்.நேருவுக்கு நகர்ப்புற வளர்ச்சித் துறையையும் அவரால் தைரியமாக ஒதுக்கிக்கொடுக்க முடிந்தது. “என்னண்ணே, என்னைய குப்பை அள்ள விட்டுட்டாரு…” என நேரு சங்கடப்பட, “எனக்கே தண்ணி காட்டிட்டாரேய்யா…” எனப் பதில் சொல்லியிருக்கிறார் நீர்ப்பாசனத் துறையின் துரைமுருகன். ஐ.பெரியசாமி அமைச்சராகப் பொறுப்பேற்ற அடுத்த நாளே ஆத்தூருக்குக் கிளம்பிப்போய்விட்டார். “1,35,500 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்தவருக்கு சாதாரணத் துறையா?” என அவருடைய ஆதரவாளர்கள் புலம்ப, “ஒருமுறை சபரீசனுடன் நேருக்கு நேராகவே மோதியவர் பெரியசாமி. அவர் பழிவாங்கிவிட்டார்” என்கிறார்கள், பின்னணி அறிந்தவர்கள்.

எப்படி இருக்கு ஸ்டாலின் கேபினட்!

‘உயர் கல்வித்துறை வேண்டாம்’ எனச் சொன்ன பொன்முடிக்கு அதே துறையை ஒதுக்கியதோடு, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த செஞ்சி மஸ்தானையும் அமைச்சராக்கி வியூக விளையாட்டு நடத்தியிருக்கிறார் ஸ்டாலின். துரைமுருகனுக்கு இணையாக ஆர்.காந்தியையும், ஐ.பெரியசாமிக்கு இணையாக அர.சக்கரபாணியையும், கே.என்.நேருவுக்கு இணையாக அன்பில் மகேஷையும், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு இணையாக திட்டக்குடி கணேசனையும் அமைச்சராக்கி, சீனியர்களுக்கு செக் வைத்திருக்கிறார் ஸ்டாலின். “ஆரம்பத்தில் சீனியர் மினிஸ்டர்கள் சங்கடப்படத்தான் செய்வார்கள். ஆனால், இவையெல்லாம் சீக்கிரமே சரியாகிவிடும். பணிகளும் வளரும்; கட்சியும் வளரும்” என விளக்கம் சொல்கிறார்கள் உடன்பிறப்புகள்.

சர்வே சாதகமாக வெளியானபோதே ‘நிதித்துறைக்கு பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்’ எனச் சொல்லிவிட்டாராம் ஸ்டாலின். “வரிச்சுமையை அதிகரிக்காமல் வருமானத்தைப் பெருக்க திட்டங்கள் போடலாம். வாங்கிய கடனைத் திருப்பிக் கட்டுகிற அளவுக்கு ஒரே வருடத்தில் நிதி நிலையைச் சீராக்க முடியும்” எனச் சொல்லியிருக்கிறார் பழனிவேல் தியாகராஜன். அமைச்சராக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே துறை ரீதியான ஆலோசனைகள் நடத்துகிற அளவுக்கு பி.டி.ஆரை நம்பியிருக்கிறார் ஸ்டாலின்.

கடந்த தி.மு.க ஆட்சியிலேயே கம்பீரமாக நெடுஞ்சாலைத் துறையைக் கவனித்த வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு இந்த முறை செய்தித்துறை ஒதுக்கப்பட, ஒரேயடியாகச் சோர்ந்துபோய்விட்டார். ஆதி திராவிடர் நலத்துறையை தாராபுரம் கயல்விழிக்கு ஒதுக்க, ஆனந்த அதிர்ச்சியில் அவருக்கு ஹார்ட் அட்டாக் வராத குறையாம். அந்தத் துறை நிச்சயம் முன்னாள் அமைச்சர் தமிழரசிக்குத்தான் எனப் பேசப்பட்டிருந்த நிலையில், ‘அழகிரி ஆதரவு குற்றச்சாட்டு’ அவர் கனவைப் புஸ்வானமாக்கியது.

சுகாதாரத்துறைக்கு ஆயிரம் விளக்கு டாக்டர் எழிலன் பெயர்தான் பெரிதாக அடிபட்டிருக்கிறது. எழிலனின் தந்தை நாகநாதன் கருணாநிதி அமைச்சரவையில் இடம்பெற்றிருக்க வேண்டியவர். ஆனால், தேர்தலில் அவர் தோற்றுப்போனார். இதையெல்லாம் மனதில் வைத்து குடும்பத்தினரும் எழிலன் பெயரையே முன்மொழிந்தார்கள். ஸ்டாலினுக்கும் இப்போது எழிலன்தான் மருத்துவர். ஆனாலும், மா.சுப்ரமணியன் பெயரை டிக் செய்தார் ஸ்டாலின். “கொரோனாவை எதிர்கொண்டு வெல்வதுதான் இப்போதைய ஒரே இலக்கு. கொரோனாவால் தன் மகனையே இழந்த சுப்ரமணியன் சுகாதாரத் துறையைக் கவனித்தால்தான் கொரோனாவுக்கு எதிராக நிச்சயம் போராடுவார்” என ஸ்டாலின் சொன்ன விளக்கம், எல்லோரையும் ஆமோதிக்க வைத்தது.

குடும்பக் கோட்டாவில் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்குப் பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கப்பட்டது. பெரும்பாலும் கல்வித்துறையைக் கவனிப்பவர்கள்தான் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறையைக் கவனிப்பார்கள். ஆனால், அத்துறைகளைப் பிரித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சரான மெய்யநாதனிடம் ஒப்படைத்தார் ஸ்டாலின். “அன்பில் மகேஷ் இப்போது கல்வித்துறையை மட்டும் கவனிக்கட்டும். அவர் செயல்பாடு சிறப்பாக இருந்தால் அடுத்த சில மாதங்களிலேயே விளையாட்டு, இளைஞர் நலன் துறைகள் அவர் வசமாகிவிடும்” என ஸ்டாலின் சொல்ல, உற்சாகமாகிவிட்டார் அன்பில். அதேநேரம், “உங்கள் துறைகளைப் பத்திரமா வச்சிக்கிறது உங்க கையில்தான் இருக்கு” என மெய்யநாதனிடமும் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். இரண்டு குதிரைகளையும் தட்டி வேலை வாங்கும் லாகவம் இது.

“பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவிக்கப்பட்டபோது அவருக்கே ஆச்சர்யம் தாங்கவில்லை. காரணம், இந்தத் தேர்தலில் அவரைக் குன்னம் தொகுதிக்கு மாற்றி, வெற்றிக்கே வேட்டு வைக்க நினைத்தார்கள். ஸ்டாலினுக்கு மிக நெருக்கமாக இருக்கும் மூத்த தலைவர் ஒருவர் செய்த உள்ளடி வேலைதான் இது. தேர்தல் முடிந்து ரிசல்ட்டுக்காகக் காத்திருந்த ஒரு மாத இடைவெளியில்தான் இந்த உண்மை ஸ்டாலினுக்குத் தெரிந்தது. ஆனாலும், யாரையும் அழைத்து அவர் விசாரிக்கவில்லை. இழுபறி நிலையைத் தாண்டி சிவசங்கர் ஜெயிக்க, உள்ளடி வேலைகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அவரை அமைச்சராக்கினார் ஸ்டாலின். உள்ளடி வேலை செய்தவருக்கும், பசுமையான துறையைக் கவனிப்பவருக்கும் சேர்த்து வைக்கப்பட்ட செக் இது” என்கிறார்கள் சில விவரப்புள்ளிகள்.

பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையை எ.வ.வேலுவுக்கும், வீட்டு வசதித்துறையை சு.முத்துச்சாமிக்கும், போக்குவரத்துத் துறையை ராஜ கண்ணப்பனுக்கும், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையை செந்தில் பாலாஜிக்கும் கொடுத்து நம்பிக்கையான நான்கு தூண்களாக நிறுவியிருக்கிறார் ஸ்டாலின். ‘கவனிப்பு வேலைகளை மிகச் சரியாகச் செய்யக்கூடியவர்கள் என்கிற ஒரே தகுதியில்தான் இந்த அங்கீகாரம்’ என முணுமுணுக்கிறார்கள் சிலர். பணரீதியான இறைப்புகளுக்கும் குடும்ப மேலாண்மைக்கும் கொஞ்சமும் குறையில்லாமல் பார்த்துக் கொள்பவர் எ.வ.வேலு. கட்சியில் பொருளாளர் பதவியை எதிர்பார்த்தார். “பொறுமையா இருங்க” என ஸ்டாலின் சொன்ன வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டுக் காத்திருந்தார். அதற்குத்தான் வளமான இரு துறைகள் பரிசளிக்கப்பட்டிருக்கின்றன.

எம்.ஜி.ஆர் கால அமைச்சரவையையே அலங்கரித்தவர் சு.முத்துச்சாமி. குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்ட மனிதர். ஆனாலும், ‘அப்படியே கொடுத்திடுவார்’ என்கிற கணக்கில்தான் இவர் பெயரை டிக் அடித்ததாகச் சொல்கிறார்கள். ராஜ கண்ணப்பன் ஜெ. காலத்திலேயே மூன்று துறைகளைக் ‘கவனித்து’ எதிர்காலத்தை வளமாக்கிக்கொண்டவர். வாரிக்கொடுக்கும் தகுதியே இவரை மாண்புமிகுவாக்கியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

எங்கே போனாலும் கிச்சன் கேபினட்டை கெட்டியாகப் பிடித்துக்கொள்பவர் செந்தில் பாலாஜி. “எந்தத் துறை கிடைத்தாலும் ஓகே. அதோடு ‘மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை’ துறையையும் அவசியம் சேர்த்துக் கொடுங்கள்” என கிச்சன் கேபினட்டிடம் கோரிக்கை வைத்திருந்தாராம். அந்தத் துறையில் அனுசரணைகளைச் செய்வதாகச் சிலருக்கு வாக்குறுதி கொடுத்துதான் கரூர் மாவட்ட தேர்தல் செலவுகளைச் செய்தாராம் செந்தில் பாலாஜி. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையுடன் மின்சாரமும் கிடைத்ததில் இவருக்கு ஆனந்த அதிர்ச்சி. நிலக்கரி இறக்குமதி தொடங்கி அதானி தொடர்புகள் வரை கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ‘காந்தி’ தெரிகிற துறை இது. ‘செந்தில் பாலாஜி காட்டில் இனி செம மழைதான்’ எனக் காதில் புகை வராத குறையாக சிலர் சொல்கிறார்கள்.

இவர்களோடு எஸ்.ரகுபதி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு என அ.தி.மு.க முகாமிலிருந்து வந்த பலருக்கும் பதவி கிடைத்ததில் நிறைய புகைச்சல். “இடைப்பட்ட காலத்துல நாமளும் ரெண்டு வருஷம் அ.தி.மு.க பக்கம் போய் வந்திருக்கலாம்யா…” என கமென்ட் அடித்திருக்கிறார் மீசைக்கார மினிஸ்டர் ஒருவர்.

ரகுபதி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை இன்னமும் நடந்துகொண்டிருக்கும் நிலையில், சட்டத்துறையை அவருக்கு வழங்கியதும் சர்ச்சையாகியிருக்கிறது.

டி20 கிரிக்கெட்டில் முதல் பந்திலிருந்தே சிக்ஸர் அடிப்பதுபோல, முதல் நாளிலிருந்தே பல அமைச்சர்கள் களத்தில் இறங்கி நிர்வாகம் செய்கிறார்கள். ஸ்டாலின் கேபினட்டில் சில குறைகள் இருக்கலாம். ஆனால், கடந்த பத்து வருடங்களில் பார்த்தது போன்ற கோமாளிக்கூத்துகள் நிச்சயம் இருக்காது. அந்தவிதத்தில் நாம் ஆசுவாசமடையலாம்!

*****

எப்படி இருக்கு ஸ்டாலின் கேபினட்!

பத்து வருடப் பரிதாபம்!

காவல் துறையில் நடந்திருக்கும் மாற்றங்களும் கவனிக்கத்தக்கவை. உளவுத்துறை ஏ.டி.ஜி.பி.யாக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமிக்கப்பட்டிருக்கிறார். உளவுத்துறையில் ஏற்கெனவே இருந்த டேவிட்சன் ‘மிஸ்டர் க்ளீன்’ அதிகாரி. சென்னை மாநகரக் காவல் ஆணையர் பதவியைப் பிடிக்க பலத்த போட்டி நடந்த நிலையில், முக்கிய அதிகாரிகளின் பெயரைச் சொல்லி சிலர் அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். ‘கடந்த பத்து வருஷமா காட்டுக்கும் ஆயுதப்படைக்குமா இந்த மனுஷன் அல்லாடிக்கிட்டு இருக்கார். இவர்தான் சரியான சாய்ஸ்’ எனச் சொல்லி சங்கர் ஜிவாலை நியமித்திருக்கிறார் ஸ்டாலின். டி.ஜி.பி திரிபாதி விரைவில் ஓய்வு பெற இருப்பதால், அந்தப் பதவியைப் பிடிக்க காக்கிகளுக்கு இடையே கடும் போட்டி நடக்கிறது.

எப்படி இருக்கு ஸ்டாலின் கேபினட்!
எப்படி இருக்கு ஸ்டாலின் கேபினட்!

ஜெ.பாணி… ஸ்டாலின் பாணி..!

கடந்த 2011-ம் ஆண்டு முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா, தனிச் செயலாளர் பதவியில் ராம மோகன ராவை நியமித்தார். இதில் பலருக்கும் அதிர்ச்சி. காரணம், ராம மோகன ராவ் தி.மு.க ஆட்சியில் செல்வாக்கான பதவியில் இருந்தவர். தி.மு.க அனுதாபி என்று பெயரெடுத்திருந்தவர். இதுகுறித்துப் பலரும் போயஸ் கார்டனுக்குப் புகார் அனுப்ப, எந்த நேரத்திலும் தன் பதவி பறிக்கப்படலாம் என நினைத்தார் ராவ். இதற்கிடையில் தி.மு.க. சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவிக்க, ராவை அழைத்தார் ஜெயலலிதா. “சிறை நிரப்பும் போராட்டம் பெயரளவில்தான் நடக்க வேண்டும். பெரிதாகக் கூட்டம் கூடினால் சிக்கலாகிவிடும் என்பதைக் கருணாநிதியிடம் சொல்லிவிடுங்கள்” என்றார் ஜெயலலிதா. தி.மு.க அனுதாபி எனத் தெரிந்துதான் ராம் மோகன் ராவை அந்தப் பதவியில் ஜெ. வைத்திருந்தார் என்பது அப்போதுதான் பலருக்கும் தெரிந்தது. பிற்காலத்தில் ஜெ.யின் முழு நம்பிக்கையையும் பெற்று, தலைமைச் செயலாளராக ராவ் உயர்ந்தது தனிக்கதை.

ஆனால், அ.தி.மு.க அனுதாபிகள் யாரும் பவரான பதவிகளில் இருக்கவே கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறாராம் ஸ்டாலின். ‘கடந்த ஆட்சியில் டம்மி பதவிகளில் இருந்தவர்களுக்கே இந்த ஆட்சியில் முக்கியத்துவம்’ எனச் சொல்லிவிட்டாராம். தலைமைச் செயலாளராக இறையன்பு, முதல்வரின் தனிச் செயலாளர்களாக உதயச்சந்திரன், உமாநாத், சண்முகம், அனு ஜார்ஜ் என, செயல் வேகம் கொண்டவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். கொரோனாவை எதிர்கொள்ள சென்னை மாநகரம் தடுமாறிவரும் நிலையில், ‘களப்பணியில் கிங்’ எனப் பெயரெடுத்த ககன்தீப் சிங் பேடியை மாநகராட்சி ஆணையராக நியமித்திருக்கிறார்.