Published:Updated:

பல்லக்கு... பிரியாணி... பசுமடம்... சரண்டர் ஸ்டாலின்!

ஸ்டாலின்!
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்!

இத்தனை காலம் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகக் குதித்துவிட்டு, தற்போது நல்லதை எடுப்போம் என்கிறது தி.மு.க. ‘எது நல்லது’ என்று அவர்களுக்கே தெரியாது

பல்லக்கு... பிரியாணி... பசுமடம்... சரண்டர் ஸ்டாலின்!

இத்தனை காலம் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகக் குதித்துவிட்டு, தற்போது நல்லதை எடுப்போம் என்கிறது தி.மு.க. ‘எது நல்லது’ என்று அவர்களுக்கே தெரியாது

Published:Updated:
ஸ்டாலின்!
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்’ ஆட்சி நடப்பதாக தி.மு.க-வினர் பட்டிதொட்டியெங்கும் பெருமை பொங்கப் பிரசாரம் செய்துவருகிறார்கள். ஆனால், சமீபத்திய சில சம்பவங்களில் தி.மு.க அரசு பின்வாங்கிய நிகழ்வுகளை முன்வைத்து, ‘திராவிட மாடல்’ எனும் அரசியல் பதத்தின்மீது கடுமையான விமர்சனங்களை வைக்கின்றன எதிர்க்கட்சிகள். “பல்லக்கு விவகாரத்தில் பல்டி அடித்ததில் தொடங்கி, பிரியாணி திருவிழாவில் பின்வாங்கியது வரை பா.ஜ.க-வின் எதிர்ப்பு குரலுக்கு தி.மு.க பணிந்துபோகிறது” என அக்கட்சியுடன் கூட்டணியில் இருப்பவர்களே முணுமுணுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ‘முதல்வர் ஸ்டாலின் பா.ஜ.க-விடம் சரண்டராகிவிட்டாரோ?’ என்கிற கேள்வியைச் சமீபத்திய சம்பவங்கள் எழுப்பியிருக்கின்றன என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்!

பல்லக்கு... பிரியாணி... பசுமடம்... சரண்டர் ஸ்டாலின்!

புதிய கல்விக் கொள்கை முதல்... சம்ஸ்கிருதப் பஞ்சாயத்து வரை!

அ.தி.மு.க ஆட்சியிலிருந்தபோது, செப்டம்பர் 7, 2020-ல் புதிய தேசிய கல்விக் கொள்கை தொடர்பாகக் கருத்தறிய மாநில ஆளுநர்களின் மாநாட்டைக் கூட்டியது மத்திய அரசு. வெகுண்டு எழுந்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “ஆளுநர்களிடம் கருத்து கேட்பது ஜனநாயகத்தின் முனை முறிக்கும் செயல். நாடாளுமன்றத்தில் நேர்மையான விவாதத்துக்கு வழியமைத்துக் கொடுக்க வேண்டும்” எனச் சூடாக அறிக்கை விட்டார். அதேபோல மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதம் சூடானபோதும், ஸ்டாலினிடமிருந்து அனல் தெறிக்கும் வார்த்தைகள் வந்தன. “தமிழ்நாட்டிலுள்ள இரு மொழிக் கொள்கை என்ற தேன்கூட்டில் கல் வீசி, மும்மொழித் திட்டத்தை மீண்டும் கொண்டுவந்துவிடலாம் என்று மத்தியிலுள்ள பா.ஜ.க அரசு தன் கனவின் ஓரத்தில்கூட நினைத்துப் பார்க்கக் கூடாது” என்று வார்த்தைகளால் வறுத்தெடுத்தார். இப்படி, தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராகப் பல சமயங்களில் தி.மு.க எதிர்ப்பு குரல் கொடுத்துவந்திருக்கிறது. “அந்தக் குரலின் கூர்மை மழுங்கிவிட்டதோ?” என்கிற கேள்வியை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய சில பேட்டிகள் உணர்த்த ஆரம்பித்திருக்கின்றன என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

சென்னைப் பல்கலையின் கல்வித்தரத்தை உயர்த்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் பங்கேற்றுவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, “மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றிருக்கும் நல்ல அம்சங்களை அரசு புறக்கணிக்கவில்லை. அதில் பல குறைபாடுகள் உள்ளன. அதை மட்டும் வேண்டாம் என்கிறோம்” என்றார். பொன்முடியின் இந்த பல்டி அதோடு நின்றுவிடவில்லை. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில்கூட, “மூன்றாவது மொழி படிக்க விருப்பப்பட்டால், அதற்குத் தேவையான ஏற்பாட்டைச் செய்துதர அரசு தயாராகிவருகிறது” என்றிருக்கிறார். இந்த மும்மொழிக் கொள்கையைத்தான் ஓராண்டுக்கு முன்புவரை தி.மு.க எதிர்த்தது.

நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ், “இத்தனை காலம் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகக் குதித்துவிட்டு, தற்போது நல்லதை எடுப்போம் என்கிறது தி.மு.க. ‘எது நல்லது’ என்று அவர்களுக்கே தெரியாது. இந்த விஷயத்தில் பா.ஜ.க-வின் உண்மையான விசுவாசிகள் தாங்கள்தான் என்பதை நிரூபித்துவிட்டனர். மதுரை மருத்துவக் கல்லூரியில் நடந்த சம்ஸ்கிருத உறுதிமொழி ஏற்பு விவகாரத்தில், முதலில் மருத்துவக் கல்லூரி டீனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றினர். சம்ஸ்கிருத உறுதிமொழி தொடர்பாக மத்திய அரசிடமிருந்து அறிவிப்பாணை வெளிவந்தபோதே, அதற்கு மாற்றாக, தமிழ்நாடு அரசு ஓர் அறிவிப்பாணை வெளியிட்டிருக்கலாம். அரசாணையைத் தாங்கள் முன்கூட்டியே போடவில்லை என்பது தெரிந்தவுடன், மறுநாளே கல்லூரி டீனை பணிக்குச் சேர்த்துக்கொண்டனர். ஏன் இந்த நாடகம்... தமிழ்நாட்டில் மட்டும்தான் இதுவரை இந்தி இல்லாமல் இருந்தது. தற்போது, வகுப்பில் பாடமொழியாக இந்தியைக் கொண்டுவருவதற்கும் அடிபோட்டுவிட்டது தி.மு.க” என்றார்.

பல்லக்கு... பிரியாணி... பசுமடம்... சரண்டர் ஸ்டாலின்!

ஆதீனப் பல்லக்கு முதல்... ஆம்பூர் பிரியாணி வரை!

தருமபுரம் ஆதீனத்தில் 500 ஆண்டுகளாகப் பாரம்பர்யமாக நடைபெறும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில், ஆதீனகர்த்தரைப் பல்லக்கில் சுமந்து செல்லத் தடைவிதித்தது தமிழ்நாடு அரசு. உடனடியாக, “ஆதீனத்தைப் பல்லக்கில் சுமக்க நானே நேரில் வருவேன். இந்த நிகழ்ச்சியை, தமிழ்நாடு பா.ஜ.க தலைமையேற்று நடத்தும்” என அறிக்கைவிட்டார் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. பிறகு, பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. “இதெல்லாம் தேவையில்லாத வேலை...” என தி.மு.க-வுக்குள்ளேயே கொந்தளிப்புகள் எழ ஆரம்பித்திருக்கின்றன.

பெயர் குறிப்பிட வேண்டாமென்கிற கோரிக்கையுடன் நம்மிடம் பேசிய தி.மு.க அமைச்சர் ஒருவர், “பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு விதித்த தடையில் உறுதியாக நின்றிருக்க வேண்டும். ‘மனிதனை மனிதன் சுமப்பதா?’ எனச் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பிய தி.மு.க., திடீரென பின்வாங்கியதை யாருமே எதிர்பார்க்கவில்லை. இந்த இடத்தில் கருணாநிதி இருந்திருந்தால், ‘பல்லக்கைச் சுமக்க நான் தயார்... என்னைக் கோயில் கருவறைக்குள் அழைத்துச் செல்வாரா அண்ணாமலை?’ என பதிலடி கொடுத்திருப்பார். அதோடு, பட்டினப்பிரவேச வரலாறு பற்றியும், மனிதனை மனிதன் சுமக்கும் இழிநிலையைக் கண்டித்தும் முரசொலியில் ஒரு பக்கத்துக்குக் கடிதம் வந்திருக்கும். இதையெல்லாம் முதல்வர் ஸ்டாலின் செய்யவேயில்லை. பா.ஜ.க கடுமையான குரல் எழுப்பியதால், ஒரு வார காலத்தில் மடாதிபதிகளை அழைத்துப் பேசுவதுபோலப் பேசி அனுமதி கொடுத்தனர். அரசியல்ரீதியாக பா.ஜ.க-விடம் தி.மு.க பணிந்துவிட்டதைத்தான் இது காட்டுகிறது” என்றார் ஆற்றாமையுடன்.

கோவை செல்வராஜ்
கோவை செல்வராஜ்

ஆதீன விவகாரத்தில் மட்டுமல்ல, ஆம்பூர் பிரியாணி விவகாரத்திலும் தி.மு.க அரசு சறுக்கிவிட்டதாகத்தான் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ், “ஆம்பூர் பிரியாணி என்பது உலகப் பிரசித்திபெற்றது என்பதால், அதைக் கூடுதலாகப் பிரபலப்படுத்தும் வகையில், மாவட்ட ஆட்சியர் பிரியாணி திருவிழாவை ஏற்பாடு செய்தார். பிரியாணி என்றால் எல்லா வகையான பிரியாணிகளும் இடம்பெறுவது வழக்கம். ஆனால், இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் மாட்டுக்கறி பிரியாணிக்கு மட்டும் தடைவிதிக்கப்பட்டது. இதை வி.சி.க., எஸ்.டி.பி.ஐ., ம.ம.க உள்ளிட்ட கட்சிகள் கண்டித்ததோடு, ‘திருவிழாப் பந்தலுக்கு வெளியே இலவசமாக மாட்டுக்கறி பிரியாணி வழங்குவோம்’ என அறிவித்தனர். இந்தப் பிரச்னையைப் பேசித் தீர்ப்பதற்கு பதிலாக, பிரியாணி திருவிழாவையே ஒத்திவைத்துவிட்டது மாநில அரசு. ஒருகாலத்தில், ‘என் உணவு, என் உரிமை’ எனச் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்தவர்கள், தற்போது தலைகீழாகத் தடம் மாறியிருக்கிறார்கள்.

அதிகாரத்தில் இல்லாதபோதுதான் மாநில உரிமை, தன்மானம், இனமானம் என்றெல்லாம் தி.மு.க-வினர் பேசுவார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் அதையெல்லாம் மறந்துவிடுவார்கள். சமீபத்தில், ‘சி.ஏ.ஏ சட்டத்தை மீண்டும் கொண்டுவருவோம்’ என அமித் ஷா பேசியிருக்கிறார். பழைய தி.மு.க-வாக இருந்திருந்தால், இந்நேரத்துக்கெல்லாம் அறிக்கை பறந்திருக்கும். ஆனால், இப்போது பம்மியிருக்கிறார்களே... ‘பா.ஜ.க உள்ள வந்துரும்’ என்று வாக்கு வேட்டை நடத்தியவர்கள், டெல்லி தி.மு.க அலுவலகத் திறப்புவிழாவுக்கு பா.ஜ.க தலைவர்களை ஏன் அழைத்தார்கள்... அப்போது மட்டும் பா.ஜ.க உள்ளே வந்தால் பரவாயில்லையா... தன்னுடைய மூர்க்கம், வேகத்தை தி.மு.க முற்றிலும் இழந்து வெகுநாள்களாகிவிட்டன. பிரசாந்த் கிஷோர் என்கிற டியூஷன் வாத்தியார் மூலமாகப் பிடித்த ஆட்சி சுகத்தை விட்டுக்கொடுக்க ஸ்டாலின் தயாராக இல்லை. தாங்கள் கண்காணிக்கப்படுவது தெரிந்தவுடன், சரண்டராகியிருக்கிறார். திராவிட மாடல் என்பது தாமரை மாடலாகியிருக்கிறது” என்றார்.

மருது அழகுராஜ்
மருது அழகுராஜ்

மனிதர்களைவிடவா மாடுகள் முக்கியம்?

தி.மு.க-வின் சித்தாந்தச் சறுக்கல்களில் சமீபத்தில் பெரிய சறுக்கலாகப் பார்க்கப்படுவது ‘பசுமடம்’ குறித்தான அறிவிப்புதான். ஆவடியில் 25 ஏக்கரில் பசுமடம் அமைப்பதற்கான இடத்தை அமைச்சர்கள் சேகர் பாபுவும் ஆவடி நாசரும் கள ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்கள். வட மாநிலங்களில் ‘கோ சாலை’ அமைக்கப்படும்போதும், ‘கோமியம்’ தொடர்பான விவாதங்கள் எழும்போதும் கடந்தகாலங்களில் கிண்டலடித்த தி.மு.க., இன்று ‘பசுமடம்’ அமைக்க இடம் தேடுகிறது என்பது தி.மு.க கூட்டணிக் கட்சிகளிடம் மட்டுமல்ல, தி.மு.க-வுக்குள்ளேயே புகைச்சலை உருவாக்கியிருக்கிறது.

நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், “தி.மு.க-வின் சித்தாந்தத்தில் சறுக்கல் ஏற்பட்டதைத் தேர்தலுக்கு முன்னரே நான் உணர்ந்தேன். பக்தி வேறு, அரசியல் வேறு என்பது ஸ்டாலினுக்குப் புரியவில்லை. ஒருவேளை தி.மு.க ஆட்சியில் பா.ஜ.க-வினர் வேல் யாத்திரை நடத்தியிருந்தால், தமிழகம் முழுவதும் அதற்கு அனுமதிகூட வழங்கியிருப்பார்கள்.

`20 கோடி ரூபாயில் 25 ஏக்கரில் பசுமடம் கட்டப்படும்’ என்கிறார் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு. ஆக்கிரமிப்பைக் காரணம் காட்டி, ஆர்.ஏ.புரத்திலுள்ள கோவிந்தசாமி நகர் மக்களின் வீடுகள் சமீபத்தில் இடிக்கப்பட்டன. அந்த மக்கள் வீதியில் நிற்கிறார்கள். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ‘உங்கள் முதல்வரை வேறு இடம் தரச் சொல்லுங்கள். ஆக்கிரமிப்பு அகற்றப்படும்’ என உத்தரவிட்டது நீதிமன்றம். வீடில்லாமல் நடுத்தெருவில் நிற்கும் அந்த மக்களுக்கு, அந்தப் பசுமடம் கட்டப்படும் இடத்தில் வீடு கொடுக்கலாமே... மனிதனைவிடவா மாடுகள் முக்கியமாகிவிட்டன. மறைந்த முதல்வர் ஜெயலலிதா தீவிர கடவுள் பக்தி உடையவர். பல கோயில்களுக்கு யானை, பசுக்களை தானமாகக் கொடுத்திருக்கிறார். அவர்கூட, தமிழ்நாட்டில் ‘பசுமடம்’ கட்டியதில்லை. ஆனால், தி.மு.க அரசு அதைச் செய்திருக்கிறது. இந்துத்துவா அமைப்புகளோடு சமரசம் செய்துகொள்வதற்கான முயற்சியாகத்தான் இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. தி.மு.க-வுக்கு பா.ஜ.க மீதான அச்சம் மேலோங்கிவிட்டது. முதல்வரும், அவர் மனைவியும் துபாய் செல்வதற்கு ‘டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட்’-ஐ உடனடியாக க்ளியர் செய்துதருகிறது மத்திய வெளியுறவுத்துறை. முதல்வரின் மருமகன் சபரீசன் துபாயில் எங்கெல்லாம் சென்றார்... எங்கே வாட்ச் வாங்கினார் என்பது முதற்கொண்டு, பல்வேறு முதலீட்டு விவரங்களை இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’ தோண்டி எடுத்துவிட்டது. இதெல்லாம்தான் தி.மு.க தலைமையின் அச்சத்துக்குக் காரணம். ‘நீங்கள் சொல்வதையும், சொல்லாததையும்கூட நாங்கள் கேட்கிறோம். எங்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்’ என்ற சரண்டர் வழியை ஸ்டாலின் கையாள்கிறார்” என்றார் விரிவாக.

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர்

எதிர்க்கட்சியாக இருந்தபோது, பா.ஜ.க எதிர்ப்பில் உறுதியாக இருந்த தி.மு.க ஏன் தடுமாறுகிறது என்பதுதான் அரசியல் அரங்கின் பிரதான விவாதமாகியிருக்கிறது. “குடும்ப உறுப்பினர்களின் முதலீடுகள், உறவுகளின் ரியல் எஸ்டேட் தொழில்கள் மீது பா.ஜ.க வைத்திருக்கும் அழுத்தமான பார்வைதான் அச்சத்துக்குக் காரணம். அதேசமயம், பா.ஜ.க அடுத்தடுத்து மதம், கலாசாரம், மொழி, உணவு என வைக்கும் செக்கைக் கையாள முடியாமல் திணறுகிறது

தி.மு.க. சமூகநீதிக்கான அடிப்படை முன்னெடுப்பாக ‘கடவுள் மறுப்பில்’ தொடங்கி, ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என மாறி, இப்போது பா.ஜ.க-வை எதிர்கொள்ள முடியாமல், தானே அதன் பாதையில் போகிறது தி.மு.க” என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு தி.மு.க-வின் பதில் என்ன?

கனகராஜ்
கனகராஜ்

“அரசின் முடிவு தவறானது!”

“கோசாலை விவகாரத்தின் உள்ளே செல்ல விரும்பவில்லை. எனினும், அரசின் அந்த முடிவு தவறான நடவடிக்கை. பல்லக்கு பிரச்னையைப் பொறுத்தவரை, தேவையில்லாத இஷ்யூவாக உருவாக்கப்பட்டுவிட்டது. இப்போது கொடுக்கப்பட்டிருக்கும் அனுமதியும் எல்லாக் காலத்துக்குமானது என்று சொல்ல முடியாது. புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில், அதிலிருக்கும் நல்லவற்றை மட்டும் எடுத்துக்கொள்வதாகச் சொல்லியிருப்பது ஒன்றும் தவறானது அல்ல. பீஃப் பிரியாணி விஷயத்திலும், சம்ஸ்கிருத உறுதிமொழி விவகாரத்திலும் அரசைக் குறை சொல்வதைவிட, அதிகாரிகளைத்தான் குறை சொல்ல வேண்டும். எனினும், நீட், ஜி.எஸ்.டி., எழுவர் விடுதலை உள்ளிட்டவற்றில் ஸ்ட்ராங்காக இருக்கிறது தி.மு.க அரசு. எல்லாவற்றிலும் பர்ஃபெக்டாக இருக்கவும் முடியாது. தவறே செய்யாதவர்கள் இருக்க முடியாது. விமர்சனத்துக்குக் காது கொடுக்கிறார்களா என்பதுதான் முக்கியம். அதனால், பா.ஜ.க-வுக்கு அடிபணிந்துவிட்டது தி.மு.க என்று சொல்வது சரியல்ல!”

- கனகராஜ், சி.பி.எம்.

*****

கலி.பூங்குன்றன்
கலி.பூங்குன்றன்

“ஒரு நிகழ்வை மட்டும் வைத்து பம்மியதாகச் சொல்ல முடியாது!”

“திராவிட மாடல் என்பதற்கே, ‘அடிபணியாது’ என்பதுதான் அர்த்தம். ஒரு நிகழ்வை மட்டும் வைத்து பம்மியதாகச் சொல்ல முடியாது. பட்டினப்பிரவேசத்துக்கு அனுமதி கொடுக்கச் சொல்லி பா.ஜ.க ஆர்ப்பாட்டம் செய்தது என்றால், நாங்கள் எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தோம். ஒரு விஷயத்தில் மாறுபடலாம், உடன்படலாம். உடன்பட்டால் அடிபணிந்ததாக அர்த்தமா... அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் இயற்றப்பட்டபோது பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தும் சட்டமானது. இப்படி இருக்கும்போது பா.ஜ.க., தி.மு.க-வுக்கு அடிபணிந்தது என்று சொல்ல முடியுமா?”

- கலி.பூங்குன்றன், திராவிடர் கழகத் துணைத் தலைவர்.

****

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

“தி.மு.க அரசு பின்வாங்கியது என்று சொல்லலாம்!”

“நல்ல எதிர்க்கட்சியாகத் தவறுகளை நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம். அதை தி.மு.க அரசு சரிசெய்துகொள்கிறது. நாங்கள் அதை வரவேற்கிறோம். ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைப்பு என்பது மாவட்ட நிர்வாகத்தின் முடிவு, பா.ஜ.க-வுக்கு அதில் தொடர்பில்லை. தவற்றுக்கு தி.மு.க அரசுதான் முழுப் பொறுப்பேற்க வேண்டும். இந்தியாவில் கடந்த எட்டு ஆண்டு பா.ஜ.க ஆட்சியில்தான் மாட்டிறைச்சி ஏற்றுமதி அதிகரித்திருக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. யார் என்ன உண்ண வேண்டும் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். இன்று மட்டுமின்றி, என்றுமே பா.ஜ.க மாட்டிறைச்சி உண்பவர்களுக்கு எதிராக இருந்ததில்லை... இனியும் இருக்கப்போவதில்லை. பட்டினப்பிரவேசம் வரலாற்று நிகழ்வை திடீரென நிறுத்தியது சரியல்ல. அதைச் சுட்டிக்காட்டினோம், அரசு சரிசெய்துகொண்டது. புதிய கல்விக் கொள்கையைப் பொறுத்தவரை தாய்மொழிக்கே முக்கியத்துவம் என்பதை நாங்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறோம். காலதாமதத்துக்குப் பிறகு, தமிழகம் அதை ஏற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி. சம்ஸ்கிருத உறுதிமொழி ஏற்பில், மத்திய அரசு எந்தவித நிர்பந்தமும் கொடுக்கவில்லை என்பதை தி.மு.க அரசு உணர்ந்ததால், தலைமை மருத்துவரை நீக்கியது தவறு என்று திருத்திக்கொண்டார்கள். பா.ஜ.க-வின் எதிர்ப்பைக் கண்டு, தி.மு.க அரசு பின்வாங்கியது என்று வேண்டுமானால் சொல்லலாம்!”

- நாராயணன் திருப்பதி, பா.ஜ.க துணைத் தலைவர்.

****

சேகர் பாபு
சேகர் பாபு

“பசுமடம் நல்ல ஸ்கீம்!” - சர்டிஃபிகேட் தரும் சேகர் பாபு

பசுமடம் விவகாரம் தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபுவிடம் பேசினோம். “பசுமடம் என்பது ஏற்கெனவே இந்து சமய அறநிலையத்துறையில் இருக்கிறது. 121 கோயில்களில் பசுமடம் உள்ளது. 4,000-க்கும் மேற்பட்ட பசுக்கள் பசுமடங்களில் உள்ளன. மற்ற விலங்குகளுக்கெல்லாம் கால்நடைப் பராமரிப்புத்துறை என்கிற துறையே இருக்கிறது. அன்றாடம் கோயில்களில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் பசுக்களைத்தான் நாங்கள் பாதுகாக்கிறோம். இது ஒரு நல்ல ஸ்கீம்தான். இதில் என்ன முரண்பாடு இருக்கிறது... திராவிட சித்தாந்தம் என்பது வேறு, இது மனிதாபிமானம். அதுவும் ஓர் உயிரினம்தானே... அதற்குத் தீவனம் வைப்பதில்லை, துன்புறுத்துகிறார்கள். இதனால், பசுக்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாவதால்தான் பசுமடம் என்கிற ஸ்கீமே செயல்படுகிறது. நாங்கள் எதையும் விலைகொடுத்து வாங்கி வந்துவிடவில்லை, எல்லாமே நேர்த்திக்கடன் பசுக்கள்” என்றவரிடம் பிரியாணி திருவிழா, பட்டினப்பிரவேசத் தடை குறித்த கேள்விகளை முன்வைத்தபோது, “எனது துறை தொடர்பாக மட்டும் கேளுங்கள், பதில் சொல்கிறேன். மற்றவற்றுக்குள் நான் செல்ல விரும்பவில்லை” என்பதோடு முடித்துக்கொண்டார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism