Published:Updated:

கைகோத்த மோடி! - கைவிடப்பட்டாரா சசி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஓ.பன்னீர்செல்வம் - மோடி - எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர்செல்வம் - மோடி - எடப்பாடி பழனிசாமி

பதறவைத்த எடப்பாடி!

பிரீமியம் ஸ்டோரி

அ.தி.மு.க கொடியுடன் சசிகலாவின் தமிழக வருகை, சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி-யிடம் அமைச்சர்கள் புகார், தமிழகமெங்கும் அவரை வரவேற்று ஒட்டப்பட்ட போஸ்டர்கள் என்று கடந்த சில நாள்கள் பரபரப்பாகவே கழிந்தன.

அ.தி.மு.க பிளவுபடுமா அல்லது அ.ம.மு.க-வுடன் இணையுமா என்ற கேள்விகள் தொண்டர்களின் மனதைக் குடைந்துகொண்டிருந்த நிலையில்தான், எடப்பாடி- பன்னீருடன் கைகோத்து, அ.தி.மு.க தரப்புக்கு உற்சாக டானிக் கொடுத்திருக்கிறார் பிரதமர் மோடி. அரசியல் கலப்பு ஏதுமில்லாமல் நடைபெற்றதாகச் சொல்லப்படும் பிப்ரவரி 14-ம் தேதி விழாவே, முழுக்க முழுக்க அரசியலுக்காக நடத்தப்பட்டது என்பதுதான் இதிலிருக்கும் ட்விஸ்ட்!

“சர்ப்ரைஸ் டு மீ!”

பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைப்பதற்காக, பிப்ரவரி 14-ம் தேதி சென்னை வந்திருந்த பிரதமர் மோடிக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று பிப்ரவரி 6-ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டத்திலேயே முடிவு எடுக்கப்பட்டிருந்தது. ‘கட்சி என் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது’ என்பதை மோடியிடம் காட்ட வேண்டும் என்பதற்காகவே, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் வரவேற்புக்கு இணையான ஏற்பாடுகளை முதல்வர் பழனிசாமி செய்திருந்தார். இதற்காக திருவள்ளூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலிருந்து அ.தி.மு.க நிர்வாகிகள் குவிந்திருந்தார்கள். பிப்ரவரி 14-ம் தேதி காலை 11:32 மணிக்கு ஐ.என்.எஸ் அடையாறு கடற்படைத்தளத்தில் வந்திறங்கிய மோடி, செண்டை மேள தாளங்கள் முழங்க தனக்கு அளிக்கப்பட்ட பிரமாண்டமான வரவேற்பைப் பார்த்து உச்சிகுளிர்ந்தார் என்கிறார்கள். இதையடுத்தே, நேரு உள்விளையாட்டு அரங்குக்குள் நுழைந்தவுடன் பழனிசாமியின் தோளில் தட்டிக் கொடுத்தவர், ‘திஸ் இஸ் சர்ப்ரைஸ் டு மீ’ என்று பாராட்டினாராம்.

மேடையில் முதல்வர் பழனிசாமி தனது பேச்சில் இரண்டுமுறை, தனக்காகவே பிரதமர் மோடி தமிழகம் வந்திருப்பதாக அழுத்தமாகக் கூறி, ‘மோடி எனக்காகத்தான் வந்திருக்கிறார். டெல்லி சப்போர்ட் எனக்குத்தான்’ என்பதை அமைச்சர்களுக்கும், சசிகலா முகாமுக்கும் உணர்த்தினார்.

கைகோத்த மோடி! - கைவிடப்பட்டாரா சசி?

கூட்டத்தில் மோடியும் ஸ்கோர் செய்யத் தவறவில்லை... தனது பேச்சில், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரின் கோரிக்கையை மையப்படுத்திப் பேசியவர், ‘‘அவர்களில் ஒருவனாக... அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டவனாக இருக்கிறேன். ‘ஏழு உட்பிரிவுகளை ஒன்றாகச் சேர்த்து தேவேந்திர குல வேளாளர் என்றழைக்கப்பட வேண்டும்’ என்கிற அவர்களின் கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது’’ என்றார். தொடர்ந்து, “யாழ்ப்பாணத்துக்குச் சென்ற முதல் பிரதமர் என்ற பெருமை எனக்குண்டு. இலங்கைத் தமிழர்கள் சமத்துவம், கண்ணியத்துடன் வாழ்வதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கும். இலங்கையின் பிடியில் எந்த மீனவரும் இன்று இல்லை. இந்திய மீனவர்களின் உரிமைகள் காக்கப்படும்” என்றார். இவையெல்லாம் தென் மாவட்டங்களை மையப்படுத்தி பா.ஜ.க எடுத்திருக்கும் தேர்தல் வியூகமாகத்தான் பார்க்கப்படுகிறது.

தனது பேச்சை முடித்தவுடன், பன்னீரையும் பழனிசாமியையும் அருகே அழைத்த மோடி, இருவரின் கரங்களையும் பிடித்து உயர்த்தி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். கூட்டத்தில் இதுவே ஹைலைட்டாக மாறிப்போனது.

இது குறித்து நம்மிடம் பேசிய மூத்த அமைச்சர் ஒருவர், ‘‘இருவரின் கரங்களையும் கோத்து உயர்த்தி அ.தி.மு.க பக்கம் தான் இருப்பதாக மோடி காட்டியிருக்கிறார். இதனால், ‘சசிகலா முகாமுக்கு மாறலாம்’ என்று நினைத்திருந்த கட்சி நிர்வாகிகள் சிலர் பதற ஆரம்பித்துவிட்டார்கள். ஒருவழியாக சசிகலாவுடனான தனது ஏழு நாள் சவாலில் வெற்றிபெற்றுவிட்டார் எடப்பாடி. அதேசமயம், இந்தச் சந்தர்ப்பத்தைத் தனக்குச் சாதகமாக்கிக்கொள்ள பன்னீரும் தவறவில்லை. ஒரு கையில் மோடியின் கரத்தை இறுகப் பிடித்தபடி, மற்றொரு கையில் இரட்டை இலைச் சின்னத்தையும் காட்டிவிட்டார் பன்னீர். அதாவது, ‘மோடியும் இரட்டை இலையும் என்னிடம்தான் இருக்கிறார்கள். இங்கே நான்தான் கிங்’ என்பதைக் குறிப்பால் உணர்த்திவிட்டார் அவர்” என்றார்.

கைகோத்த மோடி! - கைவிடப்பட்டாரா சசி?

பதறவைத்த எடப்பாடி!

கடந்த ஐந்தாண்டுகளாகவே மாநிலங்களின் அரசியல் தொடர்பான நடவடிக்கைகளில் மோடி நேரடியாக ஈடுபாடு காட்டியதில்லை என்கிறார்கள் பா.ஜ.க நிர்வாகிகள். கூட்டணிப் பேச்சுவார்த்தை, சீட் பங்கீடு என்று அரசியல்ரீதியாக எதுவாக இருந்தாலும் கட்சித் தலைமையிடம் அனுப்பிவிடுவது மோடியின் வழக்கமாம். ஆனால், “இப்போது மோடியையே தன் அரசியல் சதுரங்கத்துக்குள் கொண்டுவந்து, எதிராளிகளுக்கு மெசேஜ் சொல்லியிருக்கிறார் எடப்பாடி” என்று புல்லரிக்கிறார்கள் எடப்பாடியின் ஆதரவாளர்கள்.

பிரதமருடன் அ.தி.மு.க தலைவர்கள் பன்னீர், பழனிசாமி இருவரும் ஒன்றாகச் சந்திப்பதற்குத்தான் முதலில் ஏற்பாடாகியிருந்தது. ஆனால், ‘மோடியிடம் தனிப்பட்டரீதியில் சில விஷயங்கள் பேச வேண்டும்’ என்று எடப்பாடி அழுத்தமாகக் கேட்டுக்கொண்டதால் அவரை மட்டும் சந்திப்பதற்கு பத்து நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. பிரதமர் அலுவலக அதிகாரிகள், ‘ஐ.என்.எஸ் அடையாறு கடற்படைத் தளத்தில் சந்திப்பை வைத்துக்கொள்ளலாம்’ என்றதற்கு, ‘அங்கேயெல்லாம் வேண்டாம். பலரும் இருப்பார்கள். நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்குள்ளேயே ஓர் அறையில் சந்திப்பை வைத்துக்கொள்ளலாம்’ என்று முதல்வர் தரப்பிடமிருந்து ஆலோசனை சென்றிருக்கிறது. இதன் பிறகே, பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் அரங்கத்திலுள்ள அறைகளைச் சோதனையிட்டு க்ளியரன்ஸ் அளித்திருக்கிறார்கள். விழா முடிந்தவுடன் அரங்கத்துக்குள்ளேயே மோடியும் பழனிசாமியும் தனியாகச் சந்தித்து பத்து நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர்.

இந்தச் சந்திப்பு குறித்துப் பலதரப்பட்ட தகவல்கள் உலாவருகின்றன. ‘சசிகலா தொடர்பாகத் தான் இருவரும் பேசினார்கள். விரைவிலேயே சசிகலா தொடர்புடைய இடங்களில் ரெய்டுகள் அரங்கேறலாம். பினாமி சொத்துகள் எனச் சில இடங்கள் குறிவைக்கப்படலாம்’ என்றெல்லாம் யூகங்கள் றெக்கை கட்டின. “சசிகலா முகாமை இப்படிப் பதறவைப்பதற்காகத்தான் பத்து நிமிட சந்திப்பை கேட்டு வாங்கினார் பழனிசாமி. மோடியைத் தனக்கு நெருக்கமானவராகக் காட்டிக்கொண்டு அமைச்சர்களையும், கட்சி நிர்வாகிகளையும் தனது கட்டுக்குள்வைத்திருக்கும் பிம்பத்தை இந்தத் தனிச் சந்திப்பின் மூலம் எடப்பாடி காட்டிவிட்டார்’’ என்கிறார் விவரமறிந்த அ.தி.மு.க நிர்வாகிகள்.

கைகோத்த மோடி! - கைவிடப்பட்டாரா சசி?

பன்னீருடன் தனிச் சந்திப்பு ஏன் இல்லை?

கடந்த காலங்களில் நினைத்தபோதெல்லாம் டெல்லிக்குச் சென்று பிரதமர் மோடியைச் சந்தித்துவிட்டு வந்தார் பன்னீர். பன்னீரின் தர்மயுத்தத்தின்போது, அவருக்குத் துணை முதல்வர் பதவியில்லாத காலத்திலேயே அவரைச் சந்திக்க நேரம் ஒதுக்கியது டெல்லி. ஆனால், தற்போது சென்னைக்கு பிரதமர் வந்தும்... ஒரே மேடையில் பன்னீரும் மோடியும் சந்தித்திருக்கும் சூழலில் பன்னீருடன் தனிச் சந்திப்பைத் தவிர்த்துவிட்டார் மோடி. இத்தனைக்கும் பன்னீர் தரப்பிலிருந்து மோடியைச் சந்திக்க நேரம் கேட்கப்பட்டிருந்தது என்றும் கூறப்படுகிறது. இது குறித்துப் பேசிய கட்சி நிர்வாகிகள், “பன்னீரை டெல்லி நம்பியது என்னவோ உண்மைதான். ஆனால், சசிகலா விடுதலைக்குப் பிறகான பன்னீரின் சில மூவ்கள் டெல்லி தரப்பிடம் சில சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கலாம். அதனாலேயே பன்னீருடன் தனிச் சந்திப்புக்கு நேரம் தரவில்லை பிரதமர்” என்கிறார்கள்.

பிரதமர் தன்னைச் சந்திக்காமல் எடப்பாடியை மட்டும் சந்தித்துவிட்டு சென்றது பன்னீர் தரப்பினரை இறங்கிவரவைத்திருக்கிறது. கடந்த சில வாரங்களாக எடப்பாடிக்கு செக் வைக்கும் விதமாகக் காட்டிக்கொண்டு தனி விளம்பரங்களை வெளியிட்டுவந்தார் பன்னீர். இந்தநிலையில், பிரதமர் வந்து சென்ற மறுநாளே எடப்பாடியிடம் பன்னீர் சரண்டர் ஆகிவிட்டார் என்கிறார்கள். அதனால்தான், பிப்ரவரி 15-ம் தேதி கோவையில் நடந்த இலவசத் திருமணவிழாவில், “ஜெயலலிதா தந்த ஆட்சியை அடிபிறழாமல், அதே பாதையில் திட்டங்களை நிறைவேற்றும் முதல்வராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்” என்று அந்தர் பல்டி அடித்திருக்கிறார்.

கைகோத்த மோடி! - கைவிடப்பட்டாரா சசி?

கைவிடப்படுகிறாரா சசி?

ஆனால், இதையெல்லாம் நம்ப சசிகலா தரப்பு தயாராக இல்லை என்கிறார்கள். சில வாரங்களுக்கு முன்புவரை, தினகரன் டெல்லிக்குச் சென்றதாகவும், பா.ஜ.க தலைவர்கள் சிலருடன் அ.தி.மு.க - அ.ம.மு.க இணைப்பு குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் தகவல்கள் பரவின. ஜனவரி 19-ம் தேதி மோடியை டெல்லியில் பார்த்துவிட்டு வெளியே வந்த பழனிசாமி, ‘‘சசிகலா கட்சியில் இணைய நூறு சதவிகிதம் வாய்ப்பில்லை” என்று அதிரடி பேட்டி தட்டினார். அப்போதே சசிகலா தரப்பில் உற்சாகம் குறைந்துவிட்டது. இப்போது, அ.தி.மு.க தலைவர்களின் கரம் பிடித்து மோடி கையை உயர்த்திய பிறகு, ‘டெல்லி தரப்பு சசிகலாவைக் கைவிட்டுவிட்டதா?’ என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய டெல்லி பிரமுகர்கள், “ஜனவரி மாதம் துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, சசி கலாவை ‘சாக்கடை’ என்கிறரீதியில் குறிப்பிட்டார். ஆனாலும், ‘தி.மு.க-வை வீழ்த்த சசிகலாவின் உதவியையும் பெறலாம்’ என்றார். அதனால்தான், அ.ம.மு.க- அ.தி.மு.க இணைப்பில் பா.ஜ.க ஆர்வம் காட்டுவதாகப் பேச்சு கிளம்பியது. பெங்களூரிலிருந்து சென்னைக்குத் திரும்பியபோது தொண்டர்கள் இடையே பேசிய சசிகலா, ‘அடக்குமுறைக்கு ஒருபோதும் நான் அடிபணிய மாட்டேன். தொண்டர்களுக்காகத் தீவிர அரசியலில் ஈடுபடுவேன்’ என்று சொன்னார். இது பா.ஜ.க தரப்புக்கான எச்சரிக்கைபோலவே கருதப்பட்டது. தவிர, வரும் நாள்களில் அவர் மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம் செய்து

அ.தி.மு.க தொண்டர்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருக்கிறார். இதையெல்லாம் டெல்லி மேலிடம் ரசிக்கவில்லை. அதேசமயம், சசிகலாவால் ஏற்படும் பின்னடைவைச் சமாளிக்க சமூக ரீதியிலான சில கணக்குகளுக்கும் தயாராகிவிட்டது பா.ஜ.க. தெற்கில் கணிசமாக இருக்கும் தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களை உயர்த்திப் பிடித்திருப்பதுடன், வன்னியர் சமூகத்தவரான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரையும் சென்னையில் சந்தித்துப் பேசியிருக்கிறார் மோடி. முத்தரையர் சங்கத் தலைவர் கே.கே.செல்வக்குமார், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் ஆகியோரையும் விமான நிலையத்தில் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

டெல்லியின் பல்ஸ் அறிந்த மத்திய உளவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர், ‘‘சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற முத்தரையர்களின் மாநாடு பற்றிய ரிப்போர்ட்டும், பட்டியலின வெளியேற்றம் தொடர்பாக புதிய தமிழகம் கிருஷ்ணசாமி நடத்திய ஆர்ப்பாட்டமும் டெல்லியின் பார்வைக்குச் சென்றிருக்கிறது. இதையடுத்து, முக்குலத்தோர் அல்லாத சமூகங்களின் வாக்குகளை அணிதிரட்டும் வியூகத்தைச் செயல்படுத்த ஆரம்பித்துவிட்டது டெல்லி. கொங்கு மண்ட லத்திலும், தென் மாவட்டங்களிலும் கணிசமான தொகுதிகளை பா.ஜ.க எதிர்பார்க்கிறது. அதற் காகவே இந்தச் சமூகரீதியிலான கணக்குகளைக் கையில் எடுத்திருக்கிறார்கள்” என்றார்.

பிரதமர் மூலம், கட்சி தனது கட்டுப்பாட்டுக்குள் இருப்பதைக் காட்டிவிட்டார் பழனிசாமி. சசிகலா தரப்பிலிருந்துதான் சலனமில்லை. இன்றைய சூழலில் டெல்லியால் அவர் கைவிடப்பட்டிருக் கிறார். வரும் வாரங்களில் சசிகலா தன் செல்வாக்கை நிரூபிக்க முயற்சிகள் எடுக்கக்கூடும். அதற்குக் கிடைக்கும் ஆதரவைப் பொறுத்தே, அவருக்கு டெல்லியின் ஆசி கிடைக்குமா என்பது உறுதியாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு