அலசல்
சமூகம்
Published:Updated:

“நட்டாத்துல விட்டுட்டீங்களே!” - பன்னீர் கதறல்

ஓ.பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஓ.பன்னீர்செல்வம்

பல விமர்சனங்கள் இருந்தாலும், தன் பிடிவாதத்தாலும், உறுதியான முடிவுகளாலும், எதற்கும் துணிந்த நடவடிக்கைகளாலும் தன்னை ராஜதந்திரியாக முன்னிறுத்தியிருக்கிறார் எடப்பாடி.

‘மருதமலை’ திரைப்படத்தில் ஒரு காமெடிக் காட்சி உண்டு. போலீஸ் ஏட்டான வடிவேலுவிடம் ரெளடி ஒருவன் டீல் பேசுவான். டீலின் அடிப்படையில், வடிவேலுவின் முகத்தில் ரௌடி குத்தப்போகும்போது, அவரைக் காப்பாற்றுகிறேன் என்கிற பெயரில் ஸ்டேஷனிலுள்ள டேபிள் சேரையெல்லாம் நொறுக்கி, காவல் நிலையத்தையே தலைகீழாக உருட்டிப்போடுவார் நடிகர் அர்ஜுன். கடைசியில் வடிவேலுவை அவரே தாக்கி மூக்கில் ரத்தம் வரவைப்பார். வலியோடு ரத்தம் வழிய அர்ஜுனைப் பார்த்து வடிவேலு இப்படிக் கேட்பார்... “அவன் அடிச்சிருந்தான்னா மூஞ்சி, முகர, காலு கையோட போயிருக்கும்ல... நீ ஏன் தேவையில்லாம யூ டர்ன் பண்ணி... டேபிளை நொறுக்கி... என் மூக்க ஒடைச்சு... இப்பிடி ரத்தக்களறி ஆக்கியிருக்கியே... உனக்கு ஏன் இந்தக் கொலைவெறி?” - இதே கேள்வியைத்தான் பா.ஜ.க-விடம் கேட்டு நிற்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

‘எங்கள் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம்’ என்று பதினைந்து நாள்களுக்கும் மேலாகக் கம்புசுற்றிய பா.ஜ.க., ‘எடப்பாடியின் வேட்பாளரை ஓ.பி.எஸ் ஆதரிக்க வேண்டும்’ என ஒரே போடாகப் போட்டு, பன்னீரை டீலில் விட்டிருக்கிறது.

“பன்னீரிடம், ‘இரட்டை இலைக்கு உங்களுக்கும் உரிமை இருக்கிறது’ என உரிமைக்குரல் எழுப்பச் சொன்ன கமலாலயம்தான், இப்போது இரட்டை இலையில் யார் நின்றாலும் ஆதரவு கொடுக்கச் சொல்கிறது. வேறு வழியில்லாமல், அவர்களின் அழுத்தத்துக்கு பன்னீரும் இணங்கிவிட்டார். வழக்கமாக, அவரை நம்பி வந்தவர்கள்தான் நட்டாற்றில் விழுவார்கள். இப்போது, பா.ஜ.க-வை நம்பிய அவர் நட்டாற்றில் நின்றுகொண்டிருக்கிறார்” என்கிறார்கள் அ.தி.மு.க-வினர். `பரபர’ காட்சிகளுடன் நகரும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், அ.தி.மு.க பஞ்சாயத்துதான் ‘ஆக்‌ஷன்’ பிளாக் காட்சிகளாகச் சூடுகிளப்புகின்றன.

“நட்டாத்துல விட்டுட்டீங்களே!” - பன்னீர் கதறல்

“ஐ ஹோப் சார்... ப்ளீஸ் ஜாயின் ஹேண்ட்ஸ் சார்” விரட்டிவிட்ட எடப்பாடி!

பிரதமர் மோடியை அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை டெல்லியில் சந்தித்ததிலிருந்தே தொடங்கிவிட்டன திருப்பங்கள். பட்ஜெட்டுக்கு வாழ்த்துக் கூறத்தான் பிரதமரை அவர் சந்தித்ததாக மீடியாக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பிரதமருடனான பத்து நிமிடச் சந்திப்பில் அ.தி.மு.க - பா.ஜ.க உறவுநிலை குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார் தம்பிதுரை. அதன் பிறகே காட்சிகள் மாறியதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள்.

இது குறித்து நம்மிடம் விரிவாகப் பேசியவர்கள், “எடப்பாடியின் மனவோட்டத்தை பிரதமரிடம் தம்பிதுரை தெளிவுபடுத்திய பிறகுதான் விவகாரத்தின் சீரியஸ் நிலையை டெல்லி உணர்ந்தது. எடப்பாடி - பன்னீர் இடையே ஒற்றுமையை நிலைநிறுத்துமாறு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு உத்தரவிட்டது டெல்லி மேலிடம். பிப்ரவரி 3-ம் தேதி அதிகாலை 2 மணிக்கு அவசரமாக சென்னைக்கு வந்த அண்ணாமலை, எடப்பாடியை முதலில் சந்திக்க ‘அப்பாயின்ட்மென்ட்’ கேட்டார். காலை 7 மணிக்கெல்லாம் கிரீன்வேஸ் சாலையிலுள்ள எடப்பாடியின் வீட்டுக்கு மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, அண்ணாமலை, கரு.நாகராஜன் உள்ளிட்டோர் வந்தனர்.

எடப்பாடியிடம், ‘நீங்களும் பன்னீர் அண்ணாவும் பிரிந்திருப்பதால்தான் இவ்வளவு பிரச்னை. நீங்கள் ஒன்றுபட வேண்டும்’ என்றார் அண்ணாமலை. அதற்குச் சற்றும் யோசிக்காமல், ‘ஒரு பிரச்னையுமே இல்லையே... நாங்க வேட்பாளரைப் போட்டுட்டோம். பிரசாரத்தை ஆரம்பிச்சுட்டோம். கூட்டணியிலிருந்து ஆதரவளிக்க விருப்பப்பட்டவங்க ஆதரவளிச்சுட்டாங்க. இதுல என்ன பிரச்னை?’ என்று தடாலடியாகப் பேசினார் எடப்பாடி. இதை பா.ஜ.க தரப்பினர் எதிர்பார்க்கவில்லை. விடாமல், ‘இல்லைங்ணா. நீங்க ஒற்றுமையாக இருந்தால் சின்னம் நமக்குத்தான் கிடைக்கும்’ என்றார் அண்ணாமலை.

“நட்டாத்துல விட்டுட்டீங்களே!” - பன்னீர் கதறல்

அதற்கும் தன் பிடியைத் தளர்த்தாமல், ‘சின்னம் யாருக்கு என்பதை நீதிமன்றம் முடிவுசெய்யட்டும். எங்களுக்குச் சின்னம் கிடைச்சாலும், கிடைக்காட்டியும் பரவாயில்ல. தேர்தலைச் சந்திக்கிறோம். தொண்டர்கள் எங்ககிட்டதான் இருக்காங்க... சின்னத்துக்காகவோ, வேறு எதற்காகவோ நாங்கள் பின்வாங்க மாட்டோம்’ என ஒரே போடாகப் போட்டார் எடப்பாடி. அதுவரை அமைதியாக இருந்த சி.டி.ரவி, ‘ஐ ஹோப் சார். நீங்களும் பன்னீர் அண்ணாவும் ஒண்ணு சேர்ந்தாதான் நம்ம கூட்டணிக்கு பலமா இருக்கும். ப்ளீஸ் ஜாயின் ஹேண்ட்ஸ் சார்’ என்றார்.

அமைதியாக அவரைப் பார்த்த எடப்பாடி, ‘நீங்க ஹோப் பண்ணுங்க சார். அதுல எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்ல. அவரோட எங்களால ஒண்ணு சேர முடியாது. நாங்க எங்க நிலைப்பாட்டைச் சொல்லிட்டோம்...’ எனப் பேச்சுவார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். எடப்பாடியைச் சமாதானப்படுத்தி, பன்னீருடன் அவரைக் கரம்கோக்கவைக்கும் கனவுடன் வந்திருந்தது பா.ஜ.க தரப்பு. ஆனால், அதற்கு எடப்பாடி மசியாததால், வந்தவர்களுக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. வேறு வழியில்லாமல் வெறும் கையுடனே ‘செண்பகம்’ வீட்டிலிருந்து வெளியேறினார்கள். நாங்கள் நடுநிலையாளர்கள் எனக் காட்டப்பார்க்கிறார் அண்ணாமலை. ஒரு பேட்டியில்கூட ‘பீகாரில் ராம்விலாஸ் பஸ்வான் கட்சியில் குழப்பம் ஏற்பட்டபோது, பா.ஜ.க நடுநிலையோடு செயல்பட்டது’ எனக் கூறினார். ஆனால், உண்மையில் சிரக் பஸ்வான் அணி, பசுபதி குமார் பரஸ் அணி என அந்தக் கட்சி உடைந்தபோது, சிரக் பஸ்வான் அணியைத் தங்களோடு இணைத்துக்கொண்டு சின்னத்தை முடக்கியது பா.ஜ.க. இந்தக் கதையெல்லாம் தெரியாதவர்களா நாங்கள்?” என்றனர் விரிவாக.

“நட்டாத்துல விட்டுட்டீங்களே!” - பன்னீர் கதறல்

“ஒய் ஆர் யு ஃபைட்டிங்..?” சமாதானம் பேசிய ரவி

எடப்பாடியிடம் சமாதானத் தூது எடுபடவில்லை என்றதால், அடுத்தகட்ட நகர்வு குறித்து டெல்லி பா.ஜ.க மேலிடத்திடம் ஆலோசனை கேட்பது என தூதுக்குழுவினர் முடிவெடுத்திருக்கிறார்கள். அதற்குள், ‘காலை 7 மணிக்கெல்லாம் கிளம்பி வந்துட்டோம் ஜி. சுகர் மாத்திரை வேற போடணும். சாப்பிட்டுக்கிட்டே பேசிக்கலாமே...’ என ரவியுடன் வந்தவர்கள் பசியில் கதற, பன்னீர் வீட்டைத் தாண்டி வண்டியை கிரவுன் பிளாஸா ஹோட்டலுக்கு விட்டிருக்கிறார்கள் பா.ஜ.க தூதுக்குழுவினர். டிபனைச் சிறப்பாக முடித்துவிட்டு, டெல்லியிடம் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விவாதித்திருக்கிறது தூதுக்குழு. ‘சரி, பன்னீரை விட்டுக்கொடுக்கச் சொல்லுங்கள்’ என டெல்லியிலிருந்து உத்தரவு வந்ததும், பன்னீரின் இல்லத்தில் சமாதானச் சந்திப்பு நடந்திருக்கிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய பன்னீர் அணி மாநில நிர்வாகிகள் சிலர், “வந்ததும் வராததுமாக, ‘ஒய் ஆர் யு ஃபைட்டிங்... நீங்க சமாதானமாகப் போகணும். இரட்டை இலை முடங்கக் கூடாது என்பதுதான் எல்லோருடைய எண்ணமும். நீங்க இறங்கிவந்தால்தான், எடப்பாடிகிட்ட நாங்க பேச முடியும். இடைத்தேர்தலிலிருந்து வாபஸ் பெறுங்கள்’ என்றார் சி.டி.ரவி. அதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கமலாலயத்துக்கு ஆதரவு கேட்டு ஓ.பி.எஸ் சென்றபோதே, அவரிடம் இதைத் தெரிவித்திருக்கலாம். செந்தில் முருகனை வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்பாகக்கூட பா.ஜ.க தரப்பிடம் கருத்து கேட்டார் ஓ.பி.எஸ். அப்போதாவது சொல்லியிருக்கலாம். ஆனால், ஓ.பி.எஸ்-ஸைத் தொடக்கத்தில் நன்றாகத் தூண்டி விட்டுவிட்டு, இப்போது `வேட்பாளரை வாபஸ் வாங்குங்கள்’ என ரவி சொன்னதை எங்களால் ஜீரணிக்கவே முடியவில்லை.

“அசிங்கப்படப் போகிறீர்களா..?” குழப்பிவிட்ட மயிலாப்பூர் பிரமுகர்!

அப்போதும்கூட தூது வந்தவர்களிடம், ‘எனக்குச் சமாதானமாகப் போறதுல எந்தப் பிரச்னையும் இல்ல. பிரதமர் என்ன சொல்றாரோ, அதை நான் கேட்டுக்குவேன்’ என்றார் ஓ.பி.எஸ். அவரின் முடிவில் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட சீனியர்களுக்கு விருப்பமில்லை. களத்தில் எடப்பாடி அணியைச் சந்திப்பதென அவர்கள் தீர்மானமாக இருந்தனர்.

இந்த நேரத்தில்தான் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவும் வந்தது. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் பொதுக்குழுவைக் கூட்டி, வேட்பாளரைத் தேர்வுசெய்யச் சொன்னது நீதிமன்றம். பொதுக்குழுத் தீர்மானத்தைப் பரிசீலித்து, இரட்டை இலைச் சின்னத்தை தமிழ்மகன் உசேனிடம் வழங்கவும் உத்தரவிட்டது. அங்கேயே, எங்களுக்கான வாய்ப்புகளெல்லாம் நொறுங்கிப்போயின.

ஓ.பி.எஸ்-ஸிடம் பேசிய மயிலாப்பூர் பிரமுகர், ‘பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பாலான உறுப்பினர்கள் எடப்பாடி பக்கம்தான் இருக்கிறார்கள். உங்கள் அணியின் வேட்பாளர் செந்தில் முருகனுக்கு ஆதரவு கிடைக்காது. எடப்பாடியின் வேட்பாளர் தென்னரசுதான் மிகுதியான வாக்குகளில் வேட்பாளராகத் தேர்வுசெய்யப்படுவார். ஆக, பொதுக்குழு நடந்தால் உங்களுக்கு ஆதரவு இல்லை என்பது வெட்டவெளிச்சமாகிவிடும். நீதிமன்றத் தீர்ப்புப்படி பார்த்தால், சின்னம் எடப்பாடிக்குத்தான் செல்ல வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை செந்தில் முருகன் போட்டியிட்டாலும், `இரட்டை இலைச் சின்னத்துக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தினார் ஓ.பி.எஸ்’ என்கிற அவப்பெயர் ஏற்படும். அசிங்கப்படப் போகிறீர்களா... பேசாமல் வேட்பாளரை வாபஸ் வாங்கிவிடுங்கள்’ என்று குழப்பிவிட்டார். ஓ.பி.எஸ்-ஸின் மனதிலும் சஞ்சலம் பிறந்துவிட்டது” என்றனர் விரிவாக.

“நட்டாத்துல விட்டுட்டீங்களே!” - பன்னீர் கதறல்

“இரட்டை இலைக்கு ஆதரவு... பணிந்த பன்னீர் அணி!

சமாதானத் தூதர்களின் கருத்துகளை பன்னீர் அணியினர் தீவிரமாகக் கலந்தாலோசித்துக் கொண்டிருந்தபோது, அதாவது, பிப்ரவரி 4-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “எடப்பாடியின் வேட்பாளரை ஆதரிக்குமாறு ஓ.பி.எஸ்-ஸிடம் கோரிக்கை விடுத்தோம். சின்னம் முடங்கிவிடக் கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம்” என்று பொதுவில் போட்டுடைத்தார். இதை பன்னீர் அணியினர் துளியும் எதிர்பார்க்கவில்லை. “அறைக்குள் பேசிக்கிட்டதையெல்லாம் ஏன் பொதுவெளியில சொல்றாரு அண்ணாமலை... இது மாதிரி நாமளும் பேசினால் ஏத்துப்பாங்களா?” எனப் பன்னீரிடம் கொதித்திருக்கிறார்கள் சீனியர்கள். ஆனால், முடிவை எடுக்கச்சொல்லி கமலாலயத்திலிருந்து தொடர் அழுத்தம் வந்ததால், பன்னீர் அணியின் சீனியர் தலைவரான வைத்திலிங்கம், “இரட்டை இலைச் சின்னத்தில் யார் நின்றாலும் அவருக்கு எங்கள் ஆதரவு உண்டு” என்று அறிவித்தார். அதாவது, தேர்தலிலிருந்து வாபஸ் பெறப்போவதை மறைமுகமாகச் சொன்னார் வைத்தி. இந்த விவகாரத்தில் பெரும் வாக்குவாதமே பன்னீரின் இல்லத்தில் நடந்திருக்கிறது.

பன்னீரால் நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் சிலரிடம் பேசினோம். “அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனிடம் பொதுக்குழு நடத்தும் பொறுப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது. இந்த அவைத்தலைவர் நியமனத்தை எதிர்த்துத்தான் தொடக்கத்தில் நீதிமன்றத்துக்குச் சென்றார் ஓ.பி.எஸ். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் பொதுக்குழு வழக்கும் இது தொடர்புடையதுதான். தவிர, அ.தி.மு.க-விலிருந்து ஓ.பி.எஸ் உள்ளிட்டவர்கள் நீக்கப்பட்ட பிறகு, பலருக்கும் பொதுக்குழு உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டது. அது தொடர்பாகவும் சர்ச்சைகள் நீடிக்கின்றன. இதையெல்லாம் நாங்கள் விவாதித்துக்கொண்டிருந்தபோது, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம் எங்களுக்கு வந்தது. அதில், தென்னரசுவை வேட்பாளராக நிறுத்தலாமா, வேண்டாமா என்கிற கேள்வியை மட்டும் எழுப்பியிருந்தனர். ‘ஆம், இல்லை’ என்கிற பதிலை மட்டும்தான் பொதுக்குழு உறுப்பினர்கள் சொல்ல முடியும். உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கே இது முரணானது.

“நட்டாத்துல விட்டுட்டீங்களே..!” பன்னீர் கதறல்

அவைத்தலைவர், பொதுக்குழு வழக்கில் வரவிருக்கும் தீர்ப்பு இதையெல்லாம் மையப்படுத்தித் தேர்தல் ஆணையத்திடம் முறையிடலாம் என ஓ.பி.எஸ்-ஸிடம் கட்சி சீனியர்கள் கலந்தாலோசித்தனர். மனோஜ் பாண்டியனும் சில சட்ட நுணுக்கங்களை எடுத்துச் சொன்னார். ஆனால், பா.ஜ.க தரப்பிலிருந்து பேசியவர்கள், ‘இந்தப் பிரச்னையை வளர்த்துக்கிட்டே போகாதீங்க. வேட்பாளரை வாபஸ் வாங்குங்க. தேவையில்லாம சின்னம் முடங்கி, அதன் மூலமாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வெற்றிபெறுவதற்கு இடமளித்துவிட வேண்டாம். இப்ப விட்டுக்கொடுங்க... நாங்க சொல்றதைக் கேளுங்க...’ என்றனர். இதைக் கேட்டதும் ஓ.பி.எஸ்-ஸுக்கு கண்ணீர் வராத குறைதான்.

‘நீங்க சொல்றதைத்தானே ஆரம்பத்துலருந்தே கேட்குறேன். வேட்பாளரைப் போடச் சொன்னீங்க... போட்டேன். உங்களுக்கு ஆதரவுன்னு சொல்லச் சொன்னீங்க... அதையும் சொன்னேன். சின்னத்துக்குக் கையெழுத்து போடுறேன்னு சொல்லச் சொன்னீங்க... அதையும் சொன்னேன். இப்ப வேட்பாளரை வாபஸ் பெறச் சொல்றீங்க... உங்களை நம்பினதுக்கு என்னை நட்டாத்துல விட்டுட்டீங்களே... அவைத்தலைவர் விவகாரத்தைவெச்சு தேர்தல் ஆணையம் போறதுக்கு எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சுருக்கு. அதைப் பயன்படுத்தக் கூடாதுனு சொல்றீங்க. எடப்பாடிக்கு ஆதரவாக இருக்கீங்க. நீங்க செய்யுற குழப்பத்தால எனக்குத்தான் கெட்ட பெயராகுது... என் இமேஜே போச்சுங்க...’ எனப் புலம்பித் தீர்த்துவிட்டார் ஓ.பி.எஸ்.

ஆனால், டெல்லியை மீறி அவரால் எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுக்க முடியாது என்பதால், ‘வேட்பாளர் வாபஸ்’ என அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்கு வைத்திலிங்கம் உடன்படவில்லை. ‘பா.ஜ.க சொல்றதைக் கேட்கலாம். தவறில்லை. அதற்காக, அவங்க சொல்றதை மட்டுமேதான் நாம கேட்கணுமா... நமக்கு சுய அறிவில்லையா... இதையெல்லாம் நான் அறிவிக்க முடியாது. எனக்கு வெட்கமா இருக்குங்க’ எனப் பொங்கிவிட்டார். இதற்கு என்ன ரியாக்ட் செய்வதென்றே ஓ.பி.எஸ்-ஸுக்குத் தெரியவில்லை. வேறு வழியில்லாமல், அந்த அறிவிப்பை கு.ப.கிருஷ்ணன் வெளியிட்டார்” என்றனர் விரிவாக.

பல விமர்சனங்கள் இருந்தாலும், தன் பிடிவாதத்தாலும், உறுதியான முடிவுகளாலும், எதற்கும் துணிந்த நடவடிக்கைகளாலும் தன்னை ராஜதந்திரியாக முன்னிறுத்தியிருக்கிறார் எடப்பாடி. ஒருவழியாக, இந்திய தேர்தல் ஆணையத்தில், பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதங்களைச் சமர்ப்பித்து இரட்டை இலைச் சின்னத்தைப் பெற்றிருக்கிறது சி.வி.சண்முகம், இன்பதுரை உள்ளிட்ட எடப்பாடி அணி. தொடக்கம் முதலே யார் முடிவுக்காகவும் காத்திராமல், வேட்பாளரை அறிவித்ததில் தொடங்கி பிரசாரத்தைக் கட்டமைத்தது வரை தன் கட்சிப் பணிகளில் கவனம் செலுத்தி, அ.தி.மு.க-வின் அடையாளத்தை மீட்டிருக்கிறார் எடப்பாடி.

‘அதேசமயம், இடைத்தேர்தலில் எடப்பாடி எப்படியும் தோற்றுவிடுவார், பொதுக்குழு வழக்கு தனக்குச் சாதகமாக வரும், நாடாளுமன்றத் தேர்தல் இருக்கிறது’ என்று வழக்கம்போலக் காத்திருக்கத் தொடங்கியிருக்கிறார் பன்னீர். பா.ஜ.க இவரை வைத்து இன்னும் என்னென்ன விளையாட்டு காட்டப்போகிறதோ?!