Published:Updated:

“முதல்வர்கிட்ட பேசிக்கிறோம்!” - அதிகாரிகள் Vs அமைச்சர்கள் ஈகோ யுத்தம்!

அதிகாரிகள் Vs அமைச்சர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
அதிகாரிகள் Vs அமைச்சர்கள்

மக்கள் நலம் பேணும் துறைக்குள் நடக்கும் விவகாரங்களைக் கட்டுப்படுத்துவது, முதல்வர் அலுவகத்தின் நம்பர் 2-தான்.

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றபோது, அமைச்சர்கள் பட்டியலைவிட அதிகம் எதிர்பார்க்கப்பட்டது ‘துறைச் செயலாளர்கள் யார்?’ என்கிற பட்டியல்தான். யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அந்தப் பட்டியலை உருவாக்கி, அமைச்சர்களுக்கெல்லாம் அதிர்ச்சி கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின். துறைச் செயலாளர்களை மட்டுமல்ல, அமைச்சர்களுக்கான உதவியாளர்கள் நியமனத்தையே முதல்வர் அலுவலகம்தான் முடிவுசெய்தது. இதில் சீனியர் அமைச்சர்கள் பலருமே அப்செட். இப்படி ஆட்சியின் தொடக்கத்திலேயே அதிகாரிகளுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், ஆறு மாதங்களாகியும் தொடர்வதாக உச்சகட்ட கடுப்பிலிருக்கிறார்கள் பல அமைச்சர்கள். தி.மு.க-வின் நம்பர் 2-வாக வலம்வரும் ஒருவரே, அதிகாரிகளின் கெடுபிடியால் சொந்த ஊருக்குக் கிளம்பியது வரை பல சம்பவங்களைப் பட்டியல் போடுகிறார்கள் கோட்டை வட்டாரத்தில்!

‘தொடர்பை வெட்டிவிடுங்கள்’ - ஷெட்டி கொடுத்த ‘ஐடியா’

நம்மிடம் பேசிய தென்மாவட்ட அமைச்சர்கள் சிலர், “முதல்வராகப் பொறுப்பேற்பதற்கு முன்பே, தன் கட்சிக்காரர்களைவிட அதிகாரிகள் மீதுதான் ஸ்டாலின் அதீத நம்பிக்கை வைத்தார். ஒருசில அதிகாரிகளின் ஆலோசனையே இன்றளவும் முதல்வரிடம் எடுபடுகிறது. ஆட்சியைப் பிடித்தவுடன் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி அசோக் வர்தன் ஷெட்டியிடம், ‘அரசு அலுவல்களை எப்படிக் கொண்டு செல்லாம்?’ என்று முதல்வர் தரப்பு ஆலோசனை கேட்டது. அதற்கு ஷெட்டி, ‘அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கைகோக்காமல் இருந்தாலே அரசு இயந்திரம் ஒழுங்காகச் செயல்படும். இருவருக்கும் இடையேயான தொடர்பை வெட்டிவிடுங்க’ என்றிருக்கிறார். அவர் கொடுத்த ஐடியாவின்படியே, அமைச்சருக்கும் துறையின் செயலாளர்களுக்கும் இணக்கம் ஏற்படாதவாறு, எதிரும் புதிருமான நபர்களை நியமிக்கும் யுக்தியை முதல்வர் அலுவலகம் மேற்கொண்டது. இது ஒருவகையில் முறைகேடு நடக்காமல் வழிவகை செய்யும் என்றாலும், துறையின் அமைச்சரும் அதிகாரிகளும் முரண்பட்டு நிற்பது மாநில வளர்ச்சிக்கே குந்தகமாகிவிடும். உதாரணத்துக்குச் சில சம்பவங்களைச் சொல்லலாம்.

“முதல்வர்கிட்ட பேசிக்கிறோம்!” - அதிகாரிகள் Vs அமைச்சர்கள் ஈகோ யுத்தம்!

‘அகிம்சை’ அமைச்சர் ஒருவரின் துறைக்கு வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை உயரதிகாரியாக நியமித்திருக் கிறார்கள். அமைச்சருக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால், அந்த அதிகாரி ஆங்கிலத்தில்தான் அதிகம் உரையாடுவார். இது குறித்துத் தனக்கு நெருக்கமானவர்களிடம், ‘ஏற்கெனவே எனக்கு ஒன்றுமில்லாத துறையைத்தான் ஒதுக்கியிருக்கிறார்கள். எனக்கு வேண்டப்பட்ட அதிகாரியையாவது துறைச் செயலாளராக நியமியுங்கள் என்றேன். அதை முதல்வர் கண்டுகொள்ளவேயில்லை. நான் சொல்வதை அந்த உயரதிகாரி கேட்பதே இல்லை. அவர் சொல்வது எனக்குப் புரிவதும் இல்லை’ என்று புலம்பியிருக்கிறார் அந்த ‘அகிம்சை’ அமைச்சர்.

‘முதல்வர்கிட்ட பேசிக்கிறேன்!’ - சீனியரை ஓரங்கட்டும் உயரதிகாரி

சென்னை மாநகராட்சியின் உயர் பொறுப்பிலிருப்பவர், நல்ல நிர்வாகி என்று பெயரெடுத்தவர். ஆனால், சமீபத்திய பெருமழையின்போது அவரது செயல்பாடு விமர்சனத்தைக் கிளப்பிவிட்டது. பெருமழைக்கு முன்பாக, ‘எல்லாம் சரியாக இருக்கிறது. எவ்வளவு மழை பெய்தாலும் அதை எதிர்கொள்வோம்’ என்று அரசுக்கு உத்தரவாதம் அளித்திருக்கிறார் அந்த அதிகாரி. துறையின் அமைச்சரும் இதை நம்பினார். ஆனால், மழை தாண்டவமாடியவுடன் அமைச்சர் தரப்பு டென்ஷனாகிவிட்டது. அன்றிலிருந்து அமைச்சருக்கும் அந்த உயரதிகாரிக்கும் ஏழாம் பொருத்தம்தான். அமைச்சர் அலுவலகத்திலிருந்து வரும் பெரும்பாலான உத்தரவுகளுக்கு, ‘நான் முதல்வர்கிட்ட பேசிக்கிறேன்’ என்று பதிலளித்துவிடுகிறார் அந்த உயரதிகாரி. இதில், அந்த ‘மீசை’க்கார சீனியர் அமைச்சர் கடும் அப்செட்!

மக்கள் நலம் பேணும் துறைக்குள் நடக்கும் விவகாரங்களைக் கட்டுப்படுத்துவது, முதல்வர் அலுவகத்தின் நம்பர் 2-தான். போட்டோவுக்கு போஸ் கொடுப்பது, டிரான்ஸ்ஃபர்களை முடித்துக்கொள்வதோடு அமைச்சரின் பணி முடிந்துவிடுகிறது. இந்தத் துறைக்குள் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கோலோச்சிய மூன்று அதிகாரிகள்தான் தற்போதும் ‘பவர் சென்டர்’களாக பவனிவருகிறார்கள். இவர்களைத் தாண்டி துறையில் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாததால், அந்த அமைச்சரும் வருத்தத்தில்தான் இருக்கிறார்.

வாரிசுக்கு நெருக்கமான அமைச்சர் துறைக்குள்ளேயே சிக்கல். பாடநூல் கழகத்தில் விடப்படும் டெண்டர் பணிகளில் தமிழகத்தைச் சேர்ந்த ‘பிரின்டிங் பிரஸ்’களுக்கு முன்னுரிமை கொடுப்பதுதான் வழக்கம். ஆனால், தற்போது ஆந்திர நிறுவனங்களுக்கும் சம பங்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. இதைத் தமிழகத் தொழிலதிபர்கள் சிலர் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்றவுடன், சம்பந்தப்பட்ட அதிகாரியை அழைத்து, ‘மேக் இன் தமிழ்நாடு திட்டத்தை முதல்வர் தொடங்கியிருக்கிறார். பாடநூல் அச்சடிக்கும் பணியை நம்மவர்களுக்கே கொடுத்தால் என்ன? வெளிமாநிலங்களுக்கு டெண்டர் கொடுத்தால், போக்குவரத்து செலவீனங்களுக்கே 5 கோடி ரூபாய் கூடுதலாகச் செலவாகும். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு 90 சதவிகித டெண்டரைக் அளிப்பதற்கான ஏற்பாட்டைச் செய்யுங்கள்’ என்று வாய்மொழியாக உத்தரவிட்டிருக்கிறார் அமைச்சர். ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரி கண்டுகொள்ளவே இல்லை. இதில் அமைச்சர் ஏக கடுப்பாகிவிட்டார்.

அசோக் வர்தன் ஷெட்டி
அசோக் வர்தன் ஷெட்டி

இதற்கெல்லாம் மேலாக, முதல்வருக்கும், நம்பர் 2-வான கட்சியின் மூத்த அமைச்சருக்கும் இடையேயான உறவில் தற்போது விரிசல் விழுந்திருக்கிறது. தன் துறை சார்ந்த பணிமாறுதல் தொடர்பாக முதல்வரின் ஒப்புதலோடு, ஃபைலை துறையின் உயரதிகாரிக்கு அனுப்பியிருக்கிறார் மூத்தவர். ஆனால், பணிமாறுதல் கோப்பு நகராமலேயே இருந்திருக்கிறது. இழுத்தடிப்புக்குக் காரணத்தை அமைச்சர் தரப்பு கேட்டபோது,

‘சி.எம் ஆபீஸ்ல பேசிக்கிறேன்’ என்று கூலாக பதில் சொல்லியிருக்கிறார் அந்த உயரதிகாரி. அந்தச் சமயத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கும் மூத்தவர் அழைக்கப்படவில்லை. இந்தச் சம்பவங்களால், ‘ஆட்சியிலும் கட்சியிலும் என்னைப் புறக்கணிக்கிறார்கள்’ என்று கொதித்த மூத்தவர், கடுப்பில் சொந்த ஊருக்குக் கிளம்பிச் சென்றிருக்கிறார். இது தெரிந்தும் முதல்வர் இதுவரை சமாதானம் செய்யவில்லை” என்று நம்மிடம் விவரங்களைக் கொட்டிய அந்த அமைச்சர்கள், அதிகாரிகளுக்கும் சில அமைச்சர்களுக்கும் இடையேயான ‘ஈகோ’ மோதலையும் பகிர்ந்துகொண்டனர்.

“முதல்வர்கிட்ட பேசிக்கிறோம்!” - அதிகாரிகள் Vs அமைச்சர்கள் ஈகோ யுத்தம்!

உச்சத்தில் ‘ஈகோ’ மோதல்!

“ஒரு பெண் உயரதிகாரியிடம் இரண்டு முக்கியமான துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. துறையின் அமைச்சர்களுக்கு ‘செக்’ வைக்கவே இந்த ஏற்பாட்டை முதல்வர் அலுவலகம் எடுத்திருந்தது. ஆனால், இதுவே ‘ஈகோ’ யுத்தமாக மாறிவிட்டது. குறிப்பாக, முன்னாள் முதல்வர் பெயர்கொண்ட அந்த அமைச்சரிடமிருந்து எந்தக் கோப்பு வந்தாலும், பெண் அதிகாரி கையெழுத்திடுவதில்லை. இதனால், 500-க்கும் அதிகமான கோப்புகள் அவர் டேபிளில் தேங்கிக் கிடக்கின்றன. அமைச்சர் அழுத்தம் கொடுத்தால், ‘நான் சி.எம் ஆபீஸ் ஒப்பீனியன் இல்லாமல் க்ளியர் பண்ண முடியாது’ என்று சொல்லிவிடுகிறார். சமீபத்தில், ஒரு கோப்பு தொடர்பாக அமைச்சரிடமிருந்து தொடர்ந்து அழுத்தம் வரவே, ‘நான் விரைவில் பிரதமர் அலுவலகத்துக்குப் பணிமாறுதலில் செல்லவிருக்கிறேன். நீங்க இப்படி பிரஷர் கொடுக்குறது நல்லாயில்லை’ என்று பெண் அதிகாரி சொல்லவும், அமைச்சர் ‘கப்சிப்’ ஆகிவிட்டார். இந்தப் பெண் அதிகாரி நேர்மையாக, கோப்புகளை ஆராய்ந்து கையெழுத்திடுவதில் தவறே இல்லை. ஆனால், ‘இந்த அமைச்சரிடமிருந்து கோப்பு வந்தால் எல்லாவற்றையும் தோண்டுவேன்’ என்று முன்முடிவோடு இருப்பதுதான் ‘ஈகோ’ மோதலுக்கு வழிவகுத்துவிடுகிறது.

இந்த ‘ஈகோ’ பெண் அதிகாரியிடம் மட்டுமல்ல, சில சீனியர் ஐ.ஏ.எஸ்-களிடமும் உள்ளது. ‘மீசை’க்கார அமைச்சரின் துறையில், சமீபத்தில் கொங்கு மண்டலத்துக்குப் புதிய அதிகாரி ஒருவரை நியமித்தனர். இவர் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர். இந்த நியமனம் தொடர்பாக அமைச்சரிடம் எந்த ஆலோசனையும் கேட்கப்படவில்லை. நியமனம் குறித்து கொங்கு ஏரியா கட்சியினரிடமிருந்து புகார்கள் வந்தவுடன், துறை உயரதிகாரியிடம் அமைச்சர் அலுவலகம் விசாரித்தது. அப்போது, ‘நான்தான் அடுத்த தலைமைச் செயலாளர். அதை மைண்ட்ல வெச்சுக்கோங்க’ என்று கடுப்படித்திருக்கிறார் அந்த அதிகாரி.

சமீபத்தில், வைணவக் கடவுள் பெயர்கொண்ட மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி, மன்னர் அமைச்சரின் துறைக்கு மாற்றப்பட்டார். புதிய பொறுப்பை ஏற்றதும் அமைச்சரைச் சந்தித்த அந்த அதிகாரி, ‘இனி நீங்கள் என்ன செய்வதாக இருந்தாலும், அதை என்னிடம் சொல்லிவிட்டுச் செய்யுங்கள்’ என்று அமைச்சருக்கே ஆர்டர் போட்டிருக்கிறார். அதிலிருந்து அமைச்சர் பரிந்துரையோடு யார் கடிதம் கொண்டுவந்தாலும், அவர்களிடம் கடுகடுக்கிறாராம் அதிகாரி. இதே மோதல், ‘ஸ்வீட்’ அமைச்சருக்கும், அவரின் துறைச் செயலாளருக்கும் இடையேயும் நீடிக்கிறது. துறையின் டெண்டர் விவகாரங்களில் செயலாளர் மூக்கை நுழைப்பதால், அமைச்சர் ஏக அப்செட். போதாக்குறைக்கு அவ்வப்போது கோப்புகளில் ‘நோட்’ போட்டு தலைமைச் செயலாளருக்கு அனுப்பிவிடுகிறார். ‘மேலிடத்தையும் கவனிக்க வேண்டும், இவரையும் சமாளிக்க வேண்டுமென்றால் என்ன செய்வது? அவரை வேறு துறைக்கு மாற்றுங்கள்’ என்று முதல்வருக்கு நெருக்கமானவர்களை நெருக்கிவருகிறார் ‘ஸ்வீட்’ அமைச்சர்.

“முதல்வர்கிட்ட பேசிக்கிறோம்!” - அதிகாரிகள் Vs அமைச்சர்கள் ஈகோ யுத்தம்!

வாரியத்தில் வாரிச்சுருட்டும் நால்வரணி!

தென்மாவட்ட இனிஷியல் அமைச்சரிடம், ‘அமைச்சர் லிமிட்டில் உள்ள விவகாரங்களை மட்டும் நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள். என் விஷயத்தில் நீங்கள் தலையிட வேண்டாம்’ என்று ஓப்பனாகவே சொல்லிவிட்டார் துறையின் செயலாளர். தனக்கு நெருக்கமானவர்களிடம், ‘ஒரு வி.ஏ.ஓ டிரான்ஸ்பர்கூட நான் போட முடியலை’ என்று புலம்பியிருக்கிறார் அந்த அமைச்சர். முத்தான அமைச்சரை, அவரின் துறைச் செயலாளரும், சி.எம்.டி.ஏ உயரதிகாரியும் கண்டுகொள்வதே இல்லை. ‘அமைச்சர் நோட்’ என்று எந்த ஃபைல் வந்தாலும் தூக்கி ஓரமாக வைத்துவிடுகிறார்கள். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் பணப் பரிமாற்றம் தொடர்பாக எந்த முடிவையும் எடுப்பது முதல்வர் அலுவலகத்திலுள்ள ஓர் அதிகாரிதான். வாரியத்தின் முக்கிய அதிகாரிகள் இருவர், கோவையைச் சேர்ந்த சீனியர் இன்ஜினீயர் என இந்த நால்வர் அணிதான் அதிகார லகானைத் துறைக்குள் சுழற்றுகிறது.

இரண்டு கட்டங்களாக ஏற்கெனவே செய்த ஒப்பந்தப் பணிகளுக்குத் தரவேண்டிய நிலுவைப் பணம் சமீபத்தில் அரசிடமிருந்து வந்தது. நிலுவைப் பணம் பெறவேண்டிய ஒப்பந்ததாரர்களிடம் பேசிய அந்த சீனியர் இன்ஜினீயர், ‘2 சதவீதம் கவனிப்பவர்களுக்கு பில் க்ளீயர் செய்வதில் முன்னுரிமை தரப்படும். அமைச்சரைப் பார்த்தாலும் வேலை நடக்காது’ என்றிருக்கிறார். இப்படி மட்டுமே பல கோடி ரூபாய் கவனிப்பு நடந்திருக்கிறது. கடந்த ஆட்சியின்போது, கொங்கு மண்டத்தில் வாரியம் சார்பாக வீடு கட்ட நான்காயிரம் கோடி ரூபாய்க்கு டெண்டர் அறிவிப்பு வெளியானது. ஆனால், யானை வழித்தடம் குறுக்கிடுவதாகப் பிரச்னை கிளம்பவும், அந்த டெண்டர் கேன்சல் செய்யப்பட்டது. தற்போது சரிக்கட்ட வேண்டியவர்களைச் சரிக்கட்டி, அதே டெண்டரை மீண்டும் செயல்படுத்த, சில அதிகாரிகள் தீவிரமாகிறார்கள். இதற்கான பொறுப்பை சீனியர் இன்ஜினீயரிடம் ஒப்படைத்திருக்கிறார்களாம்” என்று விவரங்களைப் புட்டுப் புட்டு வைத்தனர்.

அக்கப்போருக்கு மூடுவிழா எப்போது?

அமைச்சர்களின் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “அமைச்சர்களிடம் அதிகாரிகள் கறார் காட்டுவதால், சில நல்ல விஷயங்களும் நடக்கின்றன. பத்திரப் பதிவுத்துறை, சுகாதாரத் துறை நர்ஸிங் பதவிகளில் ஆன்லைன் மூலமே வெளிப்படையாக பணியிடமாற்றங்கள் நடந்தன. இப்போது ஆசிரியர்களுக்கான பணிமாறுதலும் ஆன்லைன் மூலமே நடக்கவிருக்கிறது. ‘அதிகாரிகளுக்கான அதிகாரத்தில் யாரும் குறுக்கிடக் கூடாது’ என்று முதல்வர் உத்தரவாதம் அளித்ததாலேயே இது சாத்தியமானது. இந்த உத்தரவாதத்தைத் தாங்கள் வாரிச் சுருட்டுவதற்கான வாய்ப்பாக ஒருசில அதிகாரிகள் மாற்றிக்கொண்டதும் உண்மைதான். அமைச்சர்கள் சிலரோ, ’தாங்கள் சுருட்டுவதற்கு அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை’ என்று புலம்புகிறார்கள். இந்தப் புலம்பலை, ‘அதிகாரிகள் சம்பாதிக்கிறார்கள். நாங்கள் சம்பாதித்தால் தவறா... கட்சிக்காகச் செலவழித்த பணத்தைப் பிறகு எப்படி ஈடுகட்டுவது?’ என்று நியாயப்படுத்தப் பார்க்கிறார்கள்” என்றார்.

‘அதிகாரிகள் மதிப்பதில்லை’ என்று அமைச்சர்கள் சொல்லும் குற்றச்சாட்டின் பின்புலம் எல்லாமே, ‘டெண்டருக்கு ஒத்துழைக்கவில்லை. பணிமாறுதல் கோப்பில் கையெழுத்திடவில்லை’ என்பதாகவே இருக்கிறது. ‘மக்கள் நலன் சார்ந்த பணிகளில் அதிகாரிகளும் அமைச்சர்களும் மோதிக்கொண்டார்களா’ என்றால் அறவே இல்லை. ஆனால், இரு தரப்புக்கும் இடையில் உருவாகும் ஈகோவால் பல முக்கியமான மக்கள் நலன் சார்ந்த கோப்புகளும் தேக்கமடைகின்றன. இந்த அக்கப்போருக்கு விரைவில் முதல்வர் மூடுவிழா நடத்தவில்லையென்றால், பல பணிகள் முடங்கிப்போக வாய்ப்பிருக்கிறது. சாட்டையை எடுப்பாரா முதல்வர்?