Published:Updated:

ஓராண்டு ஆட்சி... சாதனைகள் - சறுக்கல்கள்

ஓராண்டு ஆட்சி... சாதனைகள் - சறுக்கல்கள்
பிரீமியம் ஸ்டோரி
ஓராண்டு ஆட்சி... சாதனைகள் - சறுக்கல்கள்

ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என தி.மு.க வாக்குறுதி அளித்திருந்த நிலையில், பெட்ரோல் விலை மட்டும் மூன்று ரூபாய் குறைக்கப்பட்டது.

ஓராண்டு ஆட்சி... சாதனைகள் - சறுக்கல்கள்

ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என தி.மு.க வாக்குறுதி அளித்திருந்த நிலையில், பெட்ரோல் விலை மட்டும் மூன்று ரூபாய் குறைக்கப்பட்டது.

Published:Updated:
ஓராண்டு ஆட்சி... சாதனைகள் - சறுக்கல்கள்
பிரீமியம் ஸ்டோரி
ஓராண்டு ஆட்சி... சாதனைகள் - சறுக்கல்கள்

மே 7-ம் தேதியுடன் ஓராண்டு ஆட்சியை நிறைவுசெய்திருக்கிறது தி.மு.க அரசு. கட்சியின் தலைவராக அரை நூற்றாண்டுக்காலம் இயங்கிய கருணாநிதி மறைந்துவிட்ட சமயத்தில், கட்சியை வழிநடத்தி தமிழ்நாட்டின் அரியணையையும் பிடித்தார் மு.க.ஸ்டாலின். ஏராளமான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சியைப் பிடித்தவருக்கு கொரோனா, மழைவெள்ளம், நிதிச்சுமை எனத் தொடக்கத்திலேயே குறுக்கே நின்றன பிரச்னைகள். ஆனாலும், களத்தில் இறங்கி பம்பரமாகச் சுழன்றார் ஸ்டாலின். திட்டங்கள், அறிக்கைகள், தீர்மானங்கள், கருத்துகள் எனப் பரபரப்புக் காட்சிகளுக்குப் பஞ்சமில்லாத வகையில் ஓராண்டு ஆட்சி நிறைவடைந்திருக்கிறது. பொதுமக்கள், அரசியல் ஆர்வலர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் பாராட்டுகள், விமர்சனங்கள், விவாதங்கள் என அலையடிக்கின்றன ஆட்சி பற்றிய பலவிதமான கருத்துகள். கடந்த ஓராண்டில் ஸ்டாலினின் ஆட்சி, சாதித்த - சறுக்கிய விஷங்கள் என்னென்ன?

‘பால் முதல் பஸ் பயணம் வரை...’ - முதல் பந்திலேயே சிக்ஸர்!

ஆட்சிக்கு வந்தவுடன் ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து, முதல் பந்தில் சிக்ஸர் அடித்தது தி.மு.க அரசு. நம்மிடம் பேசிய விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தலைவிகள், “ஆவின் பால் விலை உச்சத்தைத் தொட்ட சமயத்தில் முதல்வரின் இந்த அறிவிப்பு, பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சாதாரண நகர அரசுப் பேருந்துகளில் பெண்களுக்குக் கட்டணமில்லா பயண சேவையை அறிவித்தனர். இந்தச் சேவை, திருநங்கைகளுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. பணிக்குச் செல்லும் மகளிருக்கு இது பெரிய அளவில் உதவிகரமாக இருக்கிறது. இதன் மூலமாக, சராசரியாக மாதம்தோறும் 3,000 ரூபாய் பெண்களுக்கு மிச்சமாகிறது. அதேபோல, மூன்று வயதுக்குள்ளான குழந்தைகளுக்கு மட்டும் இலவசப் பயணம் என்றிருந்ததை, ஐந்து வயது வரை என உயர்த்தியுள்ளனர். உழைக்கும் பெண்களின் தினசரி வாழ்வில் மிக முக்கியமான மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கின்றன இந்தத் திட்டங்கள்.

ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனாகால நிவாரணமாக, அரிசி ரேஷன் அட்டைக்கு 4,000 ரூபாய் வீதம் நிதியுதவி அளித்தனர். கூட்டுறவு சங்கங்களில் சுமார் 55,000 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பெற்றிருந்த 2,756 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அரசின் நிதி நெருக்கடியையும் சமாளித்து, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறார் ஸ்டாலின்” என்றனர்.

ஓராண்டு ஆட்சி... சாதனைகள் - சறுக்கல்கள்

வேளாண்மைத்துறையின் மீதும் சிறப்பு கவனம் செலுத்தியிருக்கிறது தமிழக அரசு. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், வேளாண்மைக்கென்று தனியாக ஒரு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 33.3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘இயற்கை வேளாண்மை வளர்ச்சி திட்டம்’ அமல்படுத்தப்பட்டு, இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு இடுபொருள் மானியத்தை வழங்கிவருகிறது அரசு. அதேபோல, ஆட்சிப் பொறுப்பேற்ற எட்டு மாதங்களில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ - இரண்டு லட்சம் மனுக்களுக்குத் தீர்வு!

சமூகச் செயற்பாட்டாளர்கள் சிலரிடம் பேசினோம். “2021 சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின்போது, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்கிற நிகழ்ச்சியின் மூலமாகப் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார் ஸ்டாலின். ‘தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் அந்த மனுக்கள் மீது 100 நாள்களுக்குள் தீர்வு காணப்படும்’ என்றும் வாக்குறுதி அளித்தார். அதன்படி, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் வலைதளத்தில் பதிவேற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டன. கடந்த ஓராண்டில் மட்டும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மனுக்களுக்குத் தீர்வுகண்டிருக்கிறது தமிழக அரசு.

‘நமக்கு நாமே’ திட்டத்துக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதன் மூலமாக அரசுப் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களுக்குப் புதிய கட்டடங்கள் கட்டப்படுகின்றன. கிராமப்புறப் பகுதிகளின் வளர்ச்சிக்காக, 1,200 கோடி ரூபாயில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம், கிராமங்கள், குக்கிராமங்களின் அடிப்படை வசதிகள் பூர்த்திசெய்யப்படுகின்றன.

தேர்தல் சமயத்தில், ‘கூட்டுறவு சங்கங்களிலுள்ள நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்’ என அறிவித்தது தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், நகைக்கடன் குறித்த விவரங்கள் ஆய்வுசெய்யப்பட்டு, ஐந்து சவரனுக்கு உட்பட்ட 5,250 கோடி ரூபாய் கூட்டுறவு நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதில், ‘கொடுத்த வாக்குறுதியை முழுவதுமாக நிறைவேற்றவில்லை’ என்கிற சர்ச்சைகள் எழுந்தாலும், சொன்னபடி வாக்குறுதியை நிறைவேற்றிக் காட்டியது தி.மு.க அரசு” என்றனர்.

‘கல்வி, மருத்துவம், மொழி...’ - கவனம் ஈர்த்த அறிவிப்புகள்!

கல்வி சார்ந்த விஷயங்களில் தி.மு.க அரசு துடிப்போடுதான் பணியாற்றியிருக்கிறது. நீட் விவகாரம் தொடங்கி, ‘மாணவர்களுக்கு மன அழுத்தத்தைக் குறைக்க கவுன்சலிங் அளிக்கப்படும்’ என்று சமீபத்தில் அறிவித்தது வரை ஆக்கபூர்வமான செயல்பாடுகளைப் பார்க்க முடிகிறது. நம்மிடம் பேசிய அரசியல் ஆர்வலர்கள் சிலர், “நீட் தேர்வு விலக்கில் உறுதியுடன் இந்த அரசு செயலாற்றிவருவதைப் பார்க்க முடிகிறது. இரண்டு முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. ‘உயர்கல்வி படிக்கும் அரசுப்பள்ளி மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் நிதியுதவி, அரசுப்பள்ளி மாணவர்கள் எளிதாக ஆங்கிலம் கற்றுக்கொள்ள கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம், டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் தமிழ் மொழித் தேர்வு கட்டாயம்’ உள்ளிட்ட அறிவிப்புகள் மாணவர்களின் வாழ்வில் ஏற்றத்தை உருவாக்கக்கூடியவை. ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தின் மூலமாக 80,138 கல்வி மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், 1.73 லட்சம் மாணவர்கள் கல்வி இடைநிற்றலிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

ஓராண்டு ஆட்சி... சாதனைகள் - சறுக்கல்கள்

சுகாதாரத்துறையில், ‘மக்களைத் தேடி மருத்துவம், விபத்தில் சிக்குபவர்களுக்கு முதல் 48 மணி நேரத்துக்கான செலவை அரசே ஏற்கும் என்கிற அறிவிப்பு, கொரோனா பணியில் உயிரிழந்த மருத்துவர்கள், காவல்துறையினர் குடும்பங்களுக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக் கட்டணம் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்குவதற்கான அரசாணை’ என ஆக்கபூர்வமான அறிவிப்புகளைச் செய்திருக்கிறது தி.மு.க அரசு. தமிழ் இலக்கியத்துக்கு வலுசேர்க்கும் எழுத்தாளர்களுக்கு ‘இலக்கிய மாமணி விருது’, ‘கனவு இல்லம்’ வழங்குவதற்கான அறிவிப்பு, தமிழ்ப் பற்றாளர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அதேபோல, தமிழினத்துக்கும் தமிழக வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர்களுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்து அறநிலையத்துறையில், இதுவரை 133 திருக்கோயில்களுக்குச் சொந்தமான 720.83 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கோயில்களில் ‘அன்னைத் தமிழில் அர்ச்சனைத் திட்டம்’ தொடங்கப்பட்டு வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அந்த வகையில் வளர்ச்சி நோக்கிய பன்முகப் பார்வையோடு நடைபோடுகிறது இந்த ஆட்சி. மக்கள் நலனில் இன்னும் கூடுதல் அக்கறை கொண்டு அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர வேண்டும்” என்றார்கள் விரிவாக.

“கொடுத்த வாக்குறுதிகளில், பாதிக்கும் மேலான வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம்” எனச் சட்டமன்றத்திலேயே மார்தட்டியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். சாதனைகள் என தி.மு.க பட்டியலிடும் விஷயங்கள் மீது விமர்சனம் வைப்பதோடு, செய்யத் தவறி சறுக்கிய விஷயங்களாகப் பலதரப்பும் முன்வைக்கும் பட்டியலும் பெரிதாக இருக்கிறது.

1,000 ரூபாய் உரிமைத்தொகை முதல் டீசல் விலைக்குறைப்பு வரை... வாக்குறுதிகள் என்னவாகின?

“ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என தி.மு.க வாக்குறுதி அளித்திருந்த நிலையில், பெட்ரோல் விலை மட்டும் மூன்று ரூபாய் குறைக்கப்பட்டது. ‘டீசல் விலையை 4 ரூபாய் குறைப்போம்’ என்கிற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் உரிமைத்தொகை அளிக்கப்படும் என்கிற அறிவிப்பை, அரியணை ஏறிய தி.மு.க நிதிநிலையைக் காரணம் காட்டி, கிடப்பில் போட்டுவிட்டது” என்று நம்மிடம் ஆதங்கத்தோடு பேசினர், திருப்பூரைச் சேர்ந்த தொழிலாளர்கள்.

மேலும் அவர்கள், “ `30 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும்’ என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. `எல்.பி.ஜி காஸ் சிலிண்டருக்குத் தலா 100 ரூபாய் மானியம் அளிக்கப்படும்’ என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. ‘கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீண்டும் மேம்படும் வரை சொத்து வரி அதிகரிக்கப்பட மாட்டாது’ என்றிருந்தனர். ஆனால், தற்போது 150 சதவிகிதம் சொத்து வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. `பகுதிநேர ஆசிரியர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள்’ என்று வாக்குறுதி எண் 181-ல் அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. பக்கம் 57, வரிசை எண் 221-ல், `மின்கட்டணம் வசூலிக்கும் முறை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என்பதிலிருந்து மாதம் ஒரு முறையாக மாற்றப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாதது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. கோவை மாநகராட்சியில், ‘தி.மு.க ஆட்சியமைந்தவுடன் சூயஸ் திட்டம் ரத்து செய்யப்படும்’ எனத் தேர்தல் சமயத்தில் கூறியிருந்தனர். ஆனால், இதுவரை ரத்துசெய்யவில்லை” என்றனர்.

ஓராண்டு ஆட்சி... சாதனைகள் - சறுக்கல்கள்

பொங்கல் பரிசு... தாலிக்குத் தங்கம்... வாக்குறுதி பிறழ்ந்த தி.மு.க!

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவிகளிடம் பேசினோம். “வருஷா வருஷம் பொங்கலுக்குப் பணம் கொடுப்பது அரசின் வழக்கம். இந்த முறை, பணத்துக்கு மாற்றாக புளி, உப்பு, மிளகாய்ப்பொடி, மஞ்சள்தூள் எனப் பல்வேறு பொருள்களைக் கொடுத்தனர். அதிலும் தரமில்லை. பணமாகக் கொடுத்திருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் வேலை நாள்கள் 100-லிருந்து 150 நாள்களாக உயர்த்தப்படும் என்றனர், ஆனால் நிறைவேற்றப்படவில்லை. ‘பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்குத் திருமண உதவித்தொகை 50 ஆயிரத்திலிருந்து 60 ஆயிரமாக உயர்த்தி, தாலிக்கு எட்டு கிராம் தங்கமும் வழங்கப்படும்’ என்று தேர்தல் அறிக்கையில் தி.மு.க கூறியிருந்தது. இப்போது தாலிக்கு தங்கம் திட்டத்தையே அரசு மாற்றிவிட்டது. உயர்கல்வி பயிலும் அரசுப்பள்ளி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிப்பது மாதச் செலவுகளில் கழிந்துவிடுகிறது. அந்தப் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு எந்தப் பாதுகாப்பையும் அது தரவில்லை” என்றனர்.

நம்மிடம் பேசிய தொழிற்சங்கவாதிகள் சிலர், “தேர்தல் சமயத்தில், ‘புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வரும்’ என்று வாக்குறுதி அளித்தது தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அதைக் கிடப்பில் போட்டுவிட்டது. திருப்பூரில் ஆண், பெண் தொழிலாளர்களுக்குத் தனித்தனியாகத் தங்கும் விடுதிகள், காங்கேயம் காளை ஆராய்ச்சி மையம், திருப்பூர் அரசு சட்டக் கல்லூரி, திருப்பூர், காங்கேயம், பல்லடம் பகுதிகளில் இ.எஸ்.ஐ மருத்துவமனை கட்டப்படும் என வாக்குறுதிகளைக் குவித்தனர். ஆனால், அது குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் தக்காளி பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்படும், ஆயக்குடியில் பழச்சாறு தயாரிக்கும் தொழிற்சாலை, பழனியிருந்து கொடைக்கானலுக்கு ரோப் கார் வசதி, நிலக்கோட்டையில் நறுமணத் தொழிற்சாலை அமைக்கப்படும் என அள்ளிவீசப்பட்ட வாக்குறுதிகள் என்ன ஆனதென்றே தெரியவில்லை. தென்காசியில் அரசு சட்டக் கல்லூரி, குண்டாறு அணையின் உயரத்தை அதிகப்படுத்துவது, தென்காசி சிற்றாற்றில் தடுப்பணைத் திட்டம், தேங்காய் அடிப்படையிலான தொழிற்சாலை அமைப்பது, கடனாநதி-ராமநதி இணைப்பு என ஏராளமான திட்டங்கள் வெறும் வாக்குறுதிகளாக மட்டுமே இருக்கின்றன.

திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் சொல்லும்படியாக எந்தவொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. `தோல் தொழிற்சாலைகளை அடிப்படையாகக்கொண்டு சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாக்கப்படும்’ என்றார்கள். ஆனால், பாலாற்றில் தோல் கழிவுகள் வெளியேற்றுவதைக்கூட தடுத்தபாடில்லை. ராணிப்பேட்டை மாவட்டத்தில், சுற்றுச்சூழலை பாதிக்கச் செய்யும் 2.15 லட்சம் மெட்ரிக் டன் குரோமியக் கழிவுகளை அகற்றுவதற்கும் நிதி ஒதுக்கப்படவில்லை. ஆறுதல் அளிக்கும்விதமாக சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில் ரோப் கார் திட்டத்தை மட்டும் நிறைவேற்றியிருக்கிறார்கள்” என்றனர்.

பொதுமக்கள், அரசியல் ஆர்வலர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் என அனைத்துத் தரப்பிடமும் பேசியதில், தி.மு.க-வின் ஓராண்டு ஆட்சி என்பது சாதனைகளும் சறுக்கல்களும் நிறைந்த கலவையான கருத்தையே பெற்றிருக்கிறது. இன்னும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் மாவட்டம்தோறும் ஏராளமாக இருக்கின்றன. முதல்வர் ஸ்டாலினின் கைகளிலும் இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கின்றன. அடுத்தடுத்த ஆண்டுகளில் சறுக்கல்களைக் குறைத்து, சாதனைகளை அதிகரிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு!

*****

ஓராண்டு ஆட்சி... சாதனைகள் - சறுக்கல்கள்

ஓராண்டு ஆட்சியில் ஓராயிரம் குற்றங்கள்! - டி.ஜெயக்குமார், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்

“நாடு நன்றாக இருக்க வேண்டுமென்றால் சட்டம்-ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும். ஆனால், தி.மு.க ஆட்சியில் ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, லாக்கப் மரணங்கள், காவலருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் எனச் சட்டம்-ஒழுங்கு மோசமடைந்திருக்கிறது. ஆளுநர் முதல் காவலர் வரை பாதுகாப்பு இல்லாத அளவில்தான் ஆட்சி நடந்துவருகிறது. ஸ்டாலினின் தொகுதியே மழை வெள்ளத்தில் மூழ்கியது. தனது தொகுதியையே பார்க்க முடியாதவர்தான் தமிழ்நாட்டைப் பார்க்கப்போகிறாரா?

`நீட் தேர்வு விலக்கு பெறுவதற்கு எங்களிடம் சிறப்பு வித்தை இருக்கிறது’ என்றார்கள். இதுவரை அந்த வித்தையைக் காட்டவில்லை. `பொருளாதார மாற்றத்தைக் கொண்டுவருவோம்’ எனச் சொல்லி 10 பேர் அடங்கிய பொருளாதாரக்குழு அமைத்தார்கள். அதனால் என்ன பலன் என இதுவரை தெரியவில்லை. புரட்சித்தலைவரும், அம்மாவும் நிபுணர்களை வைத்தா ஆட்சி செய்தார்கள்... எங்கும் எதிலும் ஊழல் என்றாகிவிட்டது. எதையும் கட்டுப்படுத்த முடியாமல் திணறிவருகிறார் ஸ்டாலின். அம்மாவின் ஆட்சியில் ‘நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை’ என்று முழக்கமிட்டோம். தி.மு.க-வினர் ‘ஓராண்டு ஆட்சியில் ஓராயிரம் குற்றங்கள்’ என முழக்கமிடுவார்கள்போல!”

ஓராண்டு ஆட்சி... சாதனைகள் - சறுக்கல்கள்

“தமிழகத்தின் உரிமையை தி.மு.க விட்டுக்கொடுக்காது!” - மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை அமைச்சர்

“15 ஆண்டுகளில் செய்யவேண்டியதை, வெறும் ஓராண்டிலேயே செய்து முடித்திருக்கிறது தி.மு.க அரசு. ஆறரை லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையையும் பொருட்படுத்தாமல், கொரோனா காலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 4,000 ரூபாய் கொடுத்தோம். பால், பெட்ரோல் விலையைக் குறைத்தோம். இலவச பேருந்துப் பயண அறிவிப்பால், 41 சதவிகிதமாக இருந்த மகளிரின் பேருந்துப் பயன்பாடு 60 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. சட்டம்-ஒழுங்கைப் பொறுத்தவரை, அ.தி.மு.க அரசுடன் கம்பேர் செய்தால், தி.மு.க அரசு சிறப்பாகவே கையாண்டிருக்கிறது. எடப்பாடி ஆட்சியில், தூத்துக்குடியில் குறிபார்த்து நெற்றிப்பொட்டில் சுட்டது போன்றெல்லாம் தி.மு.க ஆட்சியில் நடக்கவில்லை. லாக்கப் மரணங்களைப் பொறுத்தவரைகூட எதையுமே நாங்கள் மறைக்க விரும்பவில்லை. கூடுமானவரை அவற்றைத் தடுக்க முதல்வர் முயல்கிறார். அதனால், சட்டம்-ஒழுங்கு குறித்துப் பேசுவதற்கு அ.தி.மு.க-வுக்கு யோக்கியதை இல்லை.

குழுக்கள் அமைப்பதெல்லாம் அரசின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கே. என்னதான் ஒன்றிய அரசுடன் மோதினாலும், வளர்ச்சித் திட்டங்களை ஒன்றிய அரசிடம் கேட்டு வாங்கிச் செய்கிறோம். எனினும், சுயமரியாதையை ஒருபோதும் இழக்க மாட்டோம். அ.தி.மு.க ஆட்சியில் `நீட்’டுக்கு எதிரான தீர்மானத்தை உள்துறை திருப்பி அனுப்பியதையே சொல்லவில்லை. ஆனால், முதல்வரோ மீண்டும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, அதைத் தற்போது ஆளுநரும் உள்துறைக்கு அனுப்பிவிட்டார். ஒருபோதும் தமிழகத்தின் உரிமையை தி.மு.க அரசு விட்டுக்கொடுக்காது!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism