Published:Updated:

‘குழு’ அரசாங்கம்! - ஓராண்டு ஆட்சியும் 37 குழுக்களும்

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

தி.மு.க ஆட்சி அமைந்தவுடன், முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு வெகு விமரிசையாக அமைக்கப்பட்டது.

‘குழு’ அரசாங்கம்! - ஓராண்டு ஆட்சியும் 37 குழுக்களும்

தி.மு.க ஆட்சி அமைந்தவுடன், முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு வெகு விமரிசையாக அமைக்கப்பட்டது.

Published:Updated:
ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தான் செல்லுமிடமெல்லாம் தி.மு.க அரசை விமர்சித்து அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை, “இது ஒரு குழு அரசாங்கம்” என்பதுதான். “அ.தி.மு.க ஆட்சியில் நாங்கள் அடிக்கல் நாட்டிய திட்டங்களைத்தான், தி.மு.க அரசு தொடங்கிவைத்துக்கொண்டிருக்கிறது. இதுவரை, இவர்களாக ஒரு திட்டத்தையாவது தொடங்கிவைத்திருக்கிறார்களா... எந்தப் பிரச்னை எழுந்தாலும், அதற்கு ஒரு குழு போட்டுவிடுகிறார்கள். மொத்தத்தில் இதுவொரு குழு அரசாங்கமாகத்தான் செயல்படுகிறது” என்று வறுத்தெடுக்கிறார் அவர். முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு, சமூகநீதி கண்காணிப்புக்குழு என அரசு அமைத்த சில குழுக்கள் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், “பிரச்னைகளை மூடிமறைப்பதற்காகவும், நடவடிக்கையை காலதாமதப்படுத்துவதற்காகவும் மட்டுமே தி.மு.க அரசாங்கம் குழுக்களுக்கு மேல் குழுக்கள் அமைக்கிறது” என்று கடுகடுக்கின்றன எதிர்க்கட்சிகள்!

தி.மு.க ஆட்சி அமைந்ததிலிருந்து, அரசுக்கு ஆலோசனை வழங்கவும், பிரச்னைகளுக்குத் தீர்வுகாணவும் இதுவரை 37 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உயர் நீதிமன்ற உத்தரவால் அமைக்கப்பட்ட குழுக்களின் எண்ணிக்கை தனி. ‘இத்தனை குழுக்களை அமைத்து, குழு உறுப்பினர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்து, அப்படி என்னதான் ஆக்கபூர்வமாக தி.மு.க அரசு செய்திருக்கிறது?’ என்கிற கேள்வியோடு களத்தில் இறங்கினோம்...

‘குழு’ அரசாங்கம்! - ஓராண்டு ஆட்சியும் 37 குழுக்களும்

கொரோனா கண்காணிப்பு முதல் பொருளாதார வளர்ச்சி வரை!

தி.மு.க ஆட்சி அமைந்ததும், ஆக்கபூர்வமான ஆளுங்கட்சி என்பதைக் காட்டுவதற்கு தடபுடல் நடவடிக்கைகள் தூள் பறந்தன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள 13 கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களைக்கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில், தி.மு.க-வால் தொடர்ச்சியாக விமர்சனத்துக்குள்ளான முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, கொரோனா பாதிப்பு நிலவரங்களைக் கண்காணிக்க, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பூர்ணலிங்கம் தலைமையில் 13 பேர்கொண்ட குழு அமைக்கப்பட்டது. ‘இந்தக் குழுக்களை அரசு முறையாகப் பயன்படுத்தியதா?’ என்பதுதான் கேள்வியாகியிருக்கிறது.

நம்மிடம் பேசிய சுகாதாரத்துறை உயரதிகாரி ஒருவர், “பூர்ணலிங்கம் தலைமையில், ‘கொரோனா டாஸ்க் ஃபோர்ஸ்’ என்கிற பெயரில் இந்தக் குழு தொடங்கப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கையாள்வது குறித்து அரசுக்கு ஆலோசனை அளிப்பதுதான் குழுவின் பணி. ஆனால், கொரோனா பரவல் அதிகரித்திருக்கும் இன்றைய நிலையில், கடந்த ஜூன் 11-ம் தேதி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் முதல்வர் ஸ்டாலின். இந்தக் கூட்டத்துக்கு பூர்ணலிங்கம் அழைக்கப்படவில்லை. குழுவின் ஆலோசனையைப் பெற்றதாக அரசிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. பிறகு எதற்காகக் குழு அமைத்தார்கள் என்பதே புரியவில்லை” என்றார்.

தி.மு.க ஆட்சி அமைந்தவுடன், முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு வெகு விமரிசையாக அமைக்கப்பட்டது. முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், நோபல் பரிசுபெற்ற பேராசிரியர் எஸ்தர் டஃப்லோ, மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், பொருளாதார நிபுணர் ஜான் ட்ரெஸ், முன்னாள் மத்திய நிதிச் செயலாளர் எஸ்.நாராயண் ஆகியோர் குழுவில் இடம்பெற்றனர். இதுவரை இரண்டு முறை கூடியிருக்கும் இந்தக் குழு, தமிழ்நாட்டைப் பொருளாதாரச் சிக்கலிலிருந்து மீட்டெடுக்க ஒரு திட்டத்தையும் கொடுத்ததாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டின் நிதிநிலை தடுமாற்றத்தால், குடும்பத் தலைவிகளுக்கு 1,000 ரூபாய் நிதியுதவி வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் இன்றுவரை திக்கித் திணறுகிறது தமிழ்நாடு அரசு.

கோவை செல்வராஜ்
கோவை செல்வராஜ்

நீட் தேர்வும்... உக்ரைன் கள மீட்பும்!

தமிழ்நாட்டில் நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வுசெய்வதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்தனர். இதைத் தொடர்ந்து, நீட் விலக்கு மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதை நீண்ட காலம் காத்திருப்பில் வைத்திருந்த ஆளுநர், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பியனுப்பினார். சட்டப்பேரவைச் சிறப்புக்கூட்டம் கூட்டப்பட்டு, நீட் விலக்கு மசோதா மீண்டும் ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதன் பின்னணியில் ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை வலுவான பின்புலமாக இருந்தது. நீட் விவகாரத்தில் குழுவை மிகச் சரியாகப் பயன்படுத்திய அரசு, போரினால் உக்ரைனில் பரிதவித்த 2,243 தமிழர்களை மீட்கும் விஷயத்தில் சறுக்கிவிட்டது.

உக்ரைனில் சிக்கிய தமிழர்களை மீட்பதற்காக, அந்நாட்டின் அண்டை நாடுகளுக்குச் சென்று, அங்குள்ள இந்தியத் தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு குழு அமைத்தது. இந்தக் குழுவில், தி.மு.க-வைச் சேர்ந்த எம்.பி-க்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா, எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இவர்களுடன் நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் இணைக்கப்பட்டனர். தடபுடலாக ஆரம்பிக்கப்பட்ட இந்தக் குழு, டெல்லி விமான நிலையத்தைத் தாண்டவில்லை. இந்தக் குழு உக்ரைன் செல்ல அனுமதி கேட்டும் மத்திய அரசு அனுமதியளிக்கவில்லை. மத்திய அரசின் செலவிலேயே, இந்தியர்கள் அனைவரும் தாயகம் திரும்பினர். கடைசியில், “உக்ரைன் மீட்புக்குழு தன் பணியை முடிப்பதற்கு 3.25 கோடி ரூபாய் செலவானது” என அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியபோதுதான், அனைவரும் விக்கித்துவிட்டனர். இவ்வளவு பணம் எப்படிச் செலவானது... இந்தக் குழு அப்படி என்னதான் செய்தது... என்கிற கேள்விகளுக்கு இதுவரை விடையில்லை.

வி.பி.துரைசாமி
வி.பி.துரைசாமி

‘குழு’ அரசாங்கம்!

தி.மு.க அரசு நியமித்த குழுக்களில், பெரும் வரவேற்பைப் பெற்றவை, சமூகநீதி கண்காணிப்புக் குழு மற்றும் மாநில வளர்ச்சிக் கொள்கைக்குழு. “குழுவின் நோக்கம் சரியானதாக இருந்தாலும், அதில் நியமிக்கப்பட்டிருக்கும் நபர்கள், ஒன்று தி.மு.க-வின் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள் அல்லது அரசை விமர்சனம் செய்தவர்களாக இருக்கிறார்கள்” என்கின்றன எதிர்க்கட்சிகள். திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் ‘சமூகநீதி கண்காணிப்புக்குழு’வின் தலைவராக அமர்த்தப்பட்டிருக்கிறார். அதேபோல, அ.தி.மு.க., பா.ஜ.க அரசுகளின் பொருளாதாரக் கொள்கைகளைக் கடுமையாக விமர்சனம் செய்த பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன், மாநில வளர்ச்சிக் கொள்கைக்குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். “ஒன்று ஆதரவாளர் அல்லது விமர்சகர் என்கிறரீதியில், தி.மு.க ஆட்சியின் மீது விமர்சனங்கள் வைக்கப்படக் கூடாது என்பதற்காகவே பல ஆளுமைகளுக்குக் குழுக்களில் பதவி தந்து அறிவாலயம் அவர்களின் வாயைக் கட்டிவைத்திருக்கிறது” என்று பொரிந்து தள்ளுகிறார்கள்.

நம்மிடம் பேசிய பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, “எல்லாப் பிரச்னைகளுக்கும் ‘சர்வலோக நிவாரணி’யாகக் குழுக்களை அமைப்பதை வழக்கமாக்கியிருக்கிறது தி.மு.க அரசாங்கம். தங்களுக்கு வேண்டப்பட்டவர்களைக் குழுவில் நியமித்து, அவர்களுக்குச் சலுகைகள் அளிக்கிறார்கள். இதனாலேயே, தி.மு.க அரசுமீது விமர்சனங்களை வைக்க அவர்கள் தயங்குகிறார்கள். இந்தக் குழுக்களால் மக்களின் வரிப்பணம்தான் வீணாகிறது. தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, இதுவரை 37 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தக் குழுக்கள் அளித்த அறிக்கைகளைச் சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்க தி.மு.க அரசு தயாரா... வெறும் ‘குழு’ அரசாங்கமாகத்தான் தி.மு.க அரசு செயல்படுகிறது” என்றார் காட்டமாக.

இராஜீவ் காந்தி
இராஜீவ் காந்தி

இத்தனை குழுக்கள் அவசியம்தானா?

இந்தக் குழுக்களின் மீதான சில கேள்விகளை முன்வைத்து ஆதங்கப்பட்டார் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவர். “இத்தனை குழுக்களை நியமித்ததைச் சாதனைபோலச் சொல்லிக்கொள்கிறது தி.மு.க. ஆனால், அவற்றால் நடந்த உருப்படியான விஷயம் என்ன... அத்தனை குழுக்களையும் பட்டியலிட்டு கேள்விகளை முன்வைத்தால் பதில் சொல்வாரா ஸ்டாலின்... ஹைட்ரோகார்பன் திட்டங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறிய நிபுணர்குழு, தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர் நலன் காக்க குழு, சென்னையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை ஆய்வு செய்ய குழு, தாது மணல் கொள்ளை குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு, வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ப பொறியியல் பாடத்திட்டத்தை மாற்ற குழு என கன்னா பின்னாவென குழுக்களை அறிவித்தார்களே ஒழிய, அதனால் என்ன பயன்... இலங்கைக்கு அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பும் பணியைக் கண்காணிக்க, குழு அமைத்தனர். ஆனால், சரக்கு ஏற்றிச் சென்றதில் சரியான திட்டமிடல் இல்லாததால், சரக்கை இறக்க முடியாமல் சில நாள்கள் துறைமுகத்தில் நின்றது கப்பல். மயிலாப்பூர் கோயிலில் காணாமல்போன மயில் சிலையைக் கண்டுபிடிக்கவெல்லாம் குழு போட்டிருக்கிறார்கள். இன்னும் என்னென்ன விஷயங்களுக்குக் குழு போடப்போகிறார்களோ அவர்களுக்கே வெளிச்சம்” என்று கடுகடுத்தார்.

கடந்த 13 மாதங்களில், 37 குழுக்கள் தி.மு.க அரசால் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற குழு, திருச்சி ராமஜெயம் கொலை வழக்கைப் புலனாய்வு செய்ய குழு என அமைக்கப்பட்ட குழுக்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், இந்தக் குழுக்களின் எண்ணிக்கை தாறுமாறாக ஏறும்.

பெயர் குறிப்பிட வேண்டாமென்கிற கோரிக்கையுடன் நம்மிடம் பேசிய மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், “இந்தக் குழுக்களால், அரசு உயரதிகாரிகளின் பணிச்சுமைதான் அதிகரிக்கிறது. குழுக்களின் ஆய்வுக் கூட்டங்களில் கலந்துகொள்வதோடு, தங்களுடைய துறைரீதியிலான பணிகளையும் காலத்துக்குள் முடிக்க வேண்டுமென்பதால், கூடுதல் மன அழுத்தத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியாற்றுகிறார்கள். இதுபோக, குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அலுவலகம், கார், பயணப்படிகளால் அரசுக்குச் செலவுதான் அதிகரிக்கிறது. ஒவ்வொரு துறையிலும், அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் இருக்கின்றனர். அவர்களைச் சரியாக வேலை வாங்கினாலே போதும். எடுத்ததற்கெல்லாம் குழு போடத் தேவையில்லை” என்றார்.

“வரிப்பணத்தை இப்படி வீணடிப்பது ஏன்?”

இதே கருத்தை நம்மிடம் வலியுறுத்திப் பேசிய அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ், “தி.மு.க அரசு முறைப்படி அறிவித்ததுதான் 37 குழுக்கள். வெளியே தெரியாமல் சுமார் 70 குழுக்கள் வரை துறைவாரியாக அமைத்திருக்கிறார்கள். ஒரு குழு அமைத்தால், சராசரியாக அதற்கென 50 லட்சம் ரூபாய் வரிப்பணம் செலவிடப்படுகிறது. தமிழ்நாட்டின் நிதிநிலை மோசமாக இருப்பதைக் காரணம் காட்டி, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் செய்பவர்கள், வரிப்பணத்தை இப்படி வீணடிப்பது ஏன்?” என்று சாடினார்.

இப்படித் தொடர்ச்சியாகக் குழுக்கள் அமைக்கப்படுவது குறித்து, தி.மு.க-வின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தியிடம் பேசினோம். “ஒரு பிரச்னைக்கு குழுக்கள் மூலம் தீர்வு காண்பது ஜனநாயகபூர்வமானது. நீதிமன்றத்துக்கும் அரசுக்கும் பிணக்கு ஏற்படும்போது, நீதிமன்றத்தைத் திருப்திப்படுத்த போதுமான தரவுகள் தேவை. ஆன்லைன் சூதாட்டத் தடை விவகாரத்தில்கூட, ஏற்கெனவே அ.தி.மு.க ஆட்சியிலிருந்தபோது இயற்றப்பட்ட அவசரச் சட்டம் ரத்தானது. அதுபோல, இந்த முறை ஆகிவிடக் கூடாது என்பதற்காகத்தான் குழு அமைக்கப்பட்டது. பொதுமக்களின் கருத்துகள், போதிய தரவுகளுடன் நீதிமன்றத்தை அணுகும்போது, நீதிமன்றங்களின் கேள்விகளுக்குத் தெளிவான பதில்களை அளிக்க முடியும். எந்தவொரு பிரச்னையிலும், இடைக்காலத் தீர்வைவிட நிரந்தரத் தீர்வு வேண்டுமென்பதே தி.மு.க-வின் நோக்கம்” என்றார்.

அரசுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க குழுக்கள் அமைப்பதில் தவறில்லை. ஆனால், குழுக்களால் விளைந்த நன்மைகளை, கிடைத்த தீர்வுகளை, அதன் பயனுள்ள செயல்பாடுகளை, புள்ளிவிவரங்களை மக்கள் மன்றத்தில் வைத்து தி.மு.க அரசு விவாதித்திருக்க வேண்டும். இல்லாததன் விளைவு, பொதுவெளியில், ‘வெறும் கண்துடைப்புக்காகவே குழுக்கள் அமைக்கப்படுகின்றன’ என்று விமர்சனங்கள் எழ ஆரம்பித்துவிட்டன. விழித்துக்கொள்ளுமா அரசு?

‘குழு’ அரசாங்கம்! - ஓராண்டு ஆட்சியும் 37 குழுக்களும்

37 குழுக்கள் எவை?

1. மாநிலப் பசுமைக் குழு.

2. முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு.

3. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த

எம்.எல்.ஏ-க்கள் குழு.

4. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பூர்ணலிங்கம் தலைமையில் குழு.

5. நீட் தேர்வு குறித்து ஆராய்வதற்குக் குழு.

6. சென்னையில் வெள்ளத் தடுப்பு குறித்து ஆராய குழு.

7. ஆன்லைன் வகுப்புகளுக்கென புதிய விதிமுறைகளை உருவாக்க குழு.

8. சமூகநீதி கண்காணிப்புக்குழு.

9. சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க குழு.

10. கட்டுமானத் தொழிலாளர்கள் வாரியத்தில் நடந்துள்ள முறைகேடுகளை விசாரிக்க குழு.

11. நிலப் பரிமாற்ற நடைமுறைகளை எளிமைப்படுத்த குழு.

12. ஹைட்ரோகார்பன் திட்டங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறிய நிபுணர்குழு.

13. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரிக்க விசாரணைக்குழு

14. தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர் நலன் காக்க குழு.

15. சென்னையில் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளை ஆய்வுசெய்வதற்குக் குழு.

16. பத்திரிகையாளர் நல வாரியத் திட்டங்களைச் செயல்படுத்த குழு.

17. தமிழ்நாட்டிலுள்ள கோயில்களில் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்குக் குழு.

18. தாது மணல் கொள்ளை குறித்து விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக்குழு.

19. மயிலாப்பூர் கோயிலில் காணாமல்போன மயில் சிலையைக் கண்டுபிடிக்க குழு.

20. தொன்மையான கோயில்களைப் பழைமை மாறாமல் புதுப்பிக்க குழு.

21. புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க குழு.

22. உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்துவதற்கு முதல்வர் தலைமையில் குழு.

23. தஞ்சை தேர் விபத்து குறித்து விசாரிக்க குழு.

24. இலங்கைக்கு அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பும் பணியைக் கண்காணிக்க குழு.

25. கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதுக்குத் தேர்வுக்குழு.

26. வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ப பொறியியல் பாடத்திட்டத்தை மாற்ற குழு.

27. அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதிசெய்ய குழு.

28. பழங்குடியின மாணவர்கள் கல்லூரிப் படிப்பைத் தேர்வுசெய்ய வழிகாட்டும் குழு.

29. நகைக்கடன் தள்ளுபடி விவகாரத்தில் தகுதியானவர்களைக் கண்டறிய குழு.

30. தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் பணி நியமனப் பிரச்னையைக் களைய குழு.

31. அ.தி.மு.க ஆட்சியில் பத்திரப்பதிவில் நடந்த முறைகேடுகளைக் கண்டறிய புலனாய்வுக்குழு.

32. உக்ரைனில் சிக்கிய தமிழக மாணவர்களை மீட்கக் குழு.

33. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகளை விசாரிக்கக் குழு.

34. சிதம்பரம் நடராஜர் கோயில் வரவு, செலவுகளை விசாரிக்க குழு.

35. மத்திய அரசின் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிக்க முதல்வர் தலைமையில் குழு.

36. ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்டறிய குழு.

37. இனப்பெருக்கத் தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த குழு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism