Published:Updated:

ஸ்டாலின் ஓராண்டு ஆட்சி!... ப்ளஸ்-மைனஸ் ரிப்போர்ட்

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

ஆரம்ப நாள்களில் மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது போன்ற தோற்றத்தையே காட்டினார் ஸ்டாலின்.

ஸ்டாலின் ஓராண்டு ஆட்சி!... ப்ளஸ்-மைனஸ் ரிப்போர்ட்

ஆரம்ப நாள்களில் மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது போன்ற தோற்றத்தையே காட்டினார் ஸ்டாலின்.

Published:Updated:
ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

“தேர்தல் வாக்குறுதிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிவரும் வேளையில், பத்து மாதக் குழந்தையிடம் பத்தாம் வகுப்பு மதிப்பெண் என்ன என்று கேட்பதுபோல் இருக்கிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, இந்தக் குழந்தை பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெறுவது மட்டுமல்ல, பட்டப்படிப்பிலும் பதக்கம் வெல்லும்.”

மார்ச் 23 அன்று தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் சொன்ன வரிகள் இவை. தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் 505. இவற்றில் 208 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாகச் சொன்னார் ஸ்டாலின்.

2021-ம் ஆண்டு மே 7 அன்று `முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்' என்று பலத்த ஆரவாரத்துக்கு இடையே பதவியேற்றார் முதல்வர் ஸ்டாலின். பதவியேற்ற கையோடு கோட்டைக்குச் சென்று முதல்வராக முதல் கோப்பில் கையெழுத்திட்டார். அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ. 4,000 கொரோனா நிவாரண நிதி, ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, மகளிருக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம், மக்களின் மனுக்கள் மீது தீர்வு காண 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' துறை என்று தேர்தல் அறிக்கையில் சொன்ன நான்கு திட்டங்களோடு, வாக்குறுதியில் சொல்லாத `முதல்வரின் காப்பீட்டுத் திட்டம் தனியார் மருத்துவமனையில் கொரானா சிகிச்சை பெறுபவர்களுக்கும் பொருந்தும்' என்ற அறிவிப்புக்கும் ஒப்புதல் அளித்தார்.

ஸ்டாலின் ஓராண்டு ஆட்சி!... ப்ளஸ்-மைனஸ் ரிப்போர்ட்

தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது கொரோனா உச்சத்தில் இருந்தது. கொரோனாவின் தாக்கம் ஒருபுறம், தமிழக அரசின் நிதி நெருக்கடி மறுபுறம் என்று ஆரம்பமே தி.மு.க ஆட்சிக்கு சவாலாக இருந்தது.

ஸ்டாலின் ஆட்சியின் முதல் நூறு நாள்களைத் திரும்பிப் பார்த்தால் குறைகள் குறைவாகவும் நிறைகள் நிறைவாகவும் இருந்த ஆட்சி என்றே பலரும் பாராட்டினார்கள். தமிழகத்தில் முதல்முறையாக வேளாண்மைக்கு என்று தனியாக நிதிநிலை அறிக்கை போடப்பட்டது. மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கூட்டுறவுக் கடன் ரூ. 2,756 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. கொரோனாப் பணியில் உயிரிழந்த மருத்துவர்கள், காவல்துறையினர் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் தமிழ் மொழித் தேர்ச்சி கட்டாயம் என்று சட்டம் வந்தது. “இனி மருத்துவமனைகளைத் தேடி மக்கள் செல்ல வேண்டியதில்லை” என்று `மக்களைத் தேடி மருத்துவம்' என்று தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத திட்டத்தை அறிவித்து, அதை உடனடியாகச் செயலுக்கும் கொண்டுவந்தது அரசு. சமூகநீதியை நிலைநாட்டும் போக்கில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் நடைமுறை, தலித் மக்களுக்கான இட ஒதுக்கீட்டைக் கண்காணிக்கும் குழு என்று பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆரம்ப நாள்களில் மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது போன்ற தோற்றத்தையே காட்டினார் ஸ்டாலின். ஆனால், தமிழக அரசியல் களத்தில் தி.மு.க-வும் பா.ஜ.க-வும் தொடர்ந்து மோத ஆரம்பித்தன. மத்திய அரசை `ஒன்றிய அரசு' என்று முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் வரை அழைக்க ஆரம்பித்தனர். “அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே என் அரசின் மாடல், அதுவே திராவிட மாடல்” என்ற புதிய சொல்லாடலை ஸ்டாலின் கையாண்டார். அதன்பிறகு `திராவிட மாடல்', `திராவிடன் ஸ்டாக்' போன்ற சொல்லாடல்கள் பொதுவெளிக்கு வந்தன. நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானங்கள், மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரித் தீர்மானம், குடியுரிமைச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தித் தீர்மானம் என்று தமிழக சட்டமன்றமே மத்திய அரசுக்கு எதிரான களமாக மாறிப்போனது.

இன்னொரு பக்கம் வரிசையாகக் குழுக்கள் வந்தன. நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு, தமிழகத்தைப் பொருளாதாரத்தில் முன்னணி மாநிலமாக மாற்ற உலகப் புகழ்பெற்ற ஐந்து பொருளாதார நிபுணர்களைக் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழு என்று ஆரம்பித்து, இப்போது தமிழகத்துக்கான கல்விக்கொள்கையை வடிவமைக்க வல்லுநர் குழு வரை ஏராளமான குழுக்கள் இந்த ஓராண்டில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் ஏ.கே.ராஜன் குழு மட்டும் உடனடியாக அறிக்கை தந்தது. மற்ற குழுக்கள் நீண்டகால நோக்கில் செயல்படுபவை. இவை என்ன செய்தன, இதனால் ஏற்பட்ட மாற்றங்கள் என்னென்ன என்பது இதுவரை தெரியவில்லை.

நிறைவேற்றிய வாக்குறுதிகளைத் தாண்டி, இன்னமும் செய்யாதனவற்றையே எதிர்க்கட்சிகள் எப்போதும் சுட்டிக்காட்டியபடி இருக்கின்றன. குறிப்பாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 உரிமைத்தொகை தருவதாகச் சொன்ன வாக்குறுதி. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் ஒரு செய்தியாளர் சந்திப்பில் இதுபற்றிக் கேட்டபோது, ``எப்போது தருவோம் என்று சொன்னோமா?" என்று கேட்டார். அது பெரும் சர்ச்சையானது. இப்போதைக்கு அது கிடைக்காது என்பதும் உறுதியானது. சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் தரப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 5 ரூபாயும் டீசல் விலையில் லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என்பது வாக்குறுதி. பெட்ரோல் விலையை மட்டும் 3 ரூபாய் குறைத்து, டீசலைக் கண்டுகொள்ளாமல் விட்டார்கள்.

`கூட்டுறவு வங்கிகளில் ஐந்து சவரன் வரை பெற்ற விவசாய நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்' என்று உதயநிதி ஊர் ஊராகப் பிரசாரம் செய்தார். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன், புதுப்புது விதிகளைப் போட்டு சிலருக்கு மட்டுமே தள்ளுபடிப் பலன் கிடைத்தது. கடந்த 2021-ம் ஆண்டு பொங்கல் பரிசாக எடப்பாடி அரசு ரூ. 2,500 கொடுத்த நிலையில், ஸ்டாலின் அரசு என்ன செய்யப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பை மட்டுமே வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அந்தப் பொங்கல் பரிசுத் தொகுப்பு மீதும் பல இடங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. தொடர் புகாருக்குப் பிறகு பொங்கல் தொகுப்பு விவகாரத்தில் சில அதிகாரிகள்மீது அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஆனால் அந்தத் தொகுப்பை சப்ளை செய்த நிறுவனங்கள் இப்போதும் அரசுக்கு வேறு பொருள்களை சப்ளை செய்துகொண்டுள்ளன. பொங்கல் தொகுப்பு ஸ்டாலினின் ஓர் ஆண்டு ஆட்சியில் ஒரு கரும்புள்ளியாகவே அமைந்துவிட்டது.

ஸ்டாலினின் துபாய்ப் பயணத்தில் குடும்பத்தினரும் இடம்பெற்றது, வாட்டி வதைக்கும் மின்வெட்டு ஆகியவை தி.மு.க ஆட்சியின் மீதான விமர்சனங்களாக மாறியுள்ளன. பல இடங்களில் கவுன்சிலர்கள் மீது குற்றச்சாட்டுகள் குவிய ஆரம்பித்துள்ளன.

தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், அரசு அச்சிட்டுக் கொடுத்த ஆளுநர் உரையை அப்படியே வாசித்துவிட்டுச் சென்றார். இப்போது ஆர்.என்.ரவி, அரசு அனுப்பி வைக்கும் மசோதாக்களை டேபிளில் அப்படியே போட்டு வைக்கிறார். ஆடு புலி ஆட்டம் ஆடும் ஆளுநர், சட்டமன்றத்துக்குள் பெரும்பலத்துடன் எதிர்க்கும் அ.தி.மு.க., சட்டமன்றத்துக்கு வெளியே தினம் தினம் பிரச்னைகளைக் கிளப்பும் பா.ஜ.க என்று அடுத்த நான்கு ஆண்டுகள் ஸ்டாலின் அரசுக்குக் கடும் சோதனையாகவே இருக்கும்.

“நமது அரசு சொன்னதை மட்டுமல்ல, சொன்னதற்கு மேலும் செய்துகாட்டும் அரசு என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்’’ என்று ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசினார். சொன்ன வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்றிவிட்டாலே, அரசின் மீதான விமர்சனங்களுக்கு விடை கொடுத்துவிடலாம்.

என்ன சொல்றாங்க? ஆர்.எஸ்.பாரதி (மாநிலங்களவை எம்.பி., தி.மு.க):

தி.மு.க கொடுத்த வாக்குறுதிகள் ஐந்தாண்டுகளில் நிறைவேற்ற வேண்டியவை. முதல் வருடத்திலேயே 70 சதவிகித வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றியிருக்கிறார். எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் நிறைவேற்றுவதற்கு நிதி ஆதாரம் வேண்டும். இப்போது நிதி ஆதாரங்களைப் பெருக்கும் வேலைகளும் நடந்துவருகின்றன. அடுத்த நான்கு ஆண்டுகளில் ஏற்படும் வளர்ச்சிக்கான விதை இந்த ஓர் ஆண்டில் விதைக்கப்பட்டுள்ளது.

நாங்கள் ஆட்சிக்கு வந்த நேரத்தில் கொரோனா நாள்கள், விடுமுறை நாள்களைக் கழித்துவிட்டுப் பார்த்தால் இந்த அரசின் முழுமையான செயல்பாடுகளே நூறு நாள்களைத்தான் சொல்லமுடியும். அதிலேயே இவ்வளவு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளோம். அ.தி.மு.க செயல்படுத்திய திட்டங்களை ஸ்டாலின் திறந்துவைக்கிறார் என்று எடப்பாடி குற்றம் சாட்டுகிறார். நாங்கள் எத்தனையோ திட்டங்களை எங்கள் ஆட்சியில் செயல்படுத்தி, அ.தி.மு.க ஆட்சியில் திறப்புவிழாவை மட்டும் நடத்திக் கல்வெட்டு வைத்துக்கொள்ளவில்லையா? யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்கள்தான் திறப்பு விழாவை நடத்த முடியும். கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு அதற்கு ஓர் உதாரணம்.

என்ன சொல்றாங்க? வைகைச்செல்வன் (முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க):

தி.மு.க அளித்த 505 வாக்குறுதிகளில் 208 வாக்குறுதிகளை நிறைவேற்றியிருப்பதாகச் சொன்னாலும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற முக்கிய வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை. அதற்கு எந்த முன்னேற்பாடுகளையும் இந்த அரசு செய்யவில்லை. பொங்கல் பரிசு வழங்கவில்லை. பொங்கல் பொருள்கள் வழங்கியதில் குளறுபடி. அதில் ஊழல் நிறைந்தும் காணப்பட்டது. ஐந்து சவரன் நகைக்கடன் தள்ளுபடி என்று சொல்லிவிட்டு, கடைசியில் தகுதியானவர்களுக்கு மட்டுமே தள்ளுபடி என்று அறிவித்தது குளறுபடி. விவசாயக் கடன் தள்ளுபடியிலும் இதேபோன்ற நிலையே இருந்தது.

தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே, மின்தடையும் சேர்ந்து வருகிறது. மீண்டும் ஜெனரேட்டர் பயன்படுத்த வேண்டியுள்ளது என்று மக்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள். சிறுதொழில்கள், நடுத்தரத் தொழில்கள் எல்லாம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. `குப்பை எரிகிறது, தேர் எரிகிறது, லைட் மட்டும் எரியமாட்டேங்கிறது' என்று மக்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டனர். நிர்வாகச் சீர்கேடும், வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாகவும் இந்த அரசின் ஓர் ஆண்டு கடந்துள்ளது.

வைகைச்செல்வன், ஆர்.எஸ்.பாரதி, மருதையன், ஜெயராம் வெங்கடேசன்
வைகைச்செல்வன், ஆர்.எஸ்.பாரதி, மருதையன், ஜெயராம் வெங்கடேசன்

என்ன சொல்றாங்க? மருதையன் (அரசியல் விமர்சகர்):

இது மிகவும் சோதனையான முதல் ஆண்டு. பதவியேற்றவுடன் மூச்சுவிட அவகாசமில்லாமல் கொரோனாத் தொற்றுப் பரவல், ஆக்சிஜன் பற்றாக்குறை, அதன் பின்னர் வரலாறு காணாத மழை வெள்ளம். ஒன்றிய அரசிடமிருந்து ஜிஎஸ்டி நிலுவைத்தொகையோ, உரிய பேரிடர் நிவாரணத் தொகையோ கிடைக்காத நிலையிலும் மக்கள் பாராட்டும் வகையில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்க சாதனை.

வாக்குறுதிகளைப் பொறுத்தவரை, மகளிர்க்கு இலவசப் பேருந்து, பால் விலை குறைப்பு, அரசு வேலையில் தமிழர்க்கு முன்னுரிமை போன்ற பலவும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை காரணமாக நிதிச்செலவு சார்ந்த வாக்குறுதிகள் சிலவற்றை நிறைவேற்ற இயலவில்லை. மாநிலங்களிடமிருந்து வரிவசூலைக் கையகப்படுத்திக்கொண்டு, எல்லாத் திட்டங்களையும் `பிரதான் மந்த்ரி யோஜ்னா'க்களாக மாற்றிவருகிறது மோடி அரசு. மாநிலத்தின் வரி இறையாண்மையை மீட்காமல், இனி எந்த மாநில அரசும் வாக்குறுதிகளையே அளிக்கவியலாத நிலை தோன்றியிருக்கிறது.

என்ன சொல்றாங்க? ஜெயராம் வெங்கடேசன் (அறப்போர் இயக்கம்):

அ.தி.மு.க ஊழல்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும், அதற்காகத் தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் சொன்னார்கள். ஆனால். இதுவரை ஆறு அமைச்சர்கள் மீது மட்டுமே வழக்கு போட்டுள்ளார்கள். ஊழல் செய்த பல அதிகாரிகள் இப்போதும் பணியில் இருக்கிறார்கள். கடந்த ஆட்சியில் டெண்டர் ஊழலில் சிக்கிய கிறிஸ்டி நிறுவனத்தின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகளையும், ஒப்பந்ததாரர்களையும் காப்பாற்றும் நோக்கிலேயே இந்த அரசு செயல்படுகிறது. வெளிப்படையான நிர்வாகத்திற்கு இ - டெண்டர் கொண்டுவரப்படும் என்கிற அறிவிப்பும் இதுவரை கிடப்பில் இருக்கிறது. சென்னை மாநகராட்சியில் இ - டெண்டர் கொண்டுவரப்பட்டது மட்டுமே வரவேற்க வேண்டியது. லோக் ஆயுக்தா சட்டத்தில் மாற்றம் செய்து செயலுக்குக் கொண்டுவருவது, சேவை உரிமைச் சட்டம் என அவர்கள் சொன்ன பலவற்றை இதுவரை செய்யவில்லை. வெளிப்படைத்தன்மை என்பது சொல்லில் உள்ளது, செயலில் இல்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism