அரசியல்
அலசல்
Published:Updated:

குண்டு வெடிப்பு... கவர்னர்... ஆணையங்கள்... சட்டமன்றம்... என்ன செய்கிறது எதிர்க்கட்சி?

ஓ.பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஓ.பன்னீர்செல்வம்

“தமிழை அ.தி.மு.க மட்டுமே பாதுகாத்துவருகிறது. தமிழுக்கு ஒரு பிரச்னை என்றால் அ.தி.மு.க முதலில் நிற்கும்” என்று வீராவேசம் காட்டியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

தராசு முள் சாய்வின்றி நேராக நிற்பதற்கு, அதன் இரண்டு பக்கத் தட்டுகள்மீதும் எடை சரிசமமாக இருப்பது அவசியம். சமீபகாலமாக, தமிழ்நாடு அரசியலின் தராசு முள் அப்படி இல்லை. ஆளும் தி.மு.க அரசுமீது அவ்வப்போது சில குற்றச்சாட்டுகளை மட்டும் வீசிவரும் அ.தி.மு.க., பேசவேண்டிய விஷயங்களைப் பேசாமல் அமைதி காக்கிறது. கோவை கார் குண்டு வெடிப்பு, ஆறுமுகசாமி - அருணா ஜெகதீசன் ஆணையங்களின் அறிக்கைகள், இந்தித் திணிப்பு விவகாரம், ஆளுநரின் அநாவசிய மூக்கு நுழைப்புகள் குறித்து அந்தக் கட்சி மெளனம் சாதிப்பது விமர்சனங்களை உருவாக்கியிருக்கின்றன. மக்கள் பிரச்னைகளை எடுத்துப் பேசத்தான் சட்டமன்றத்துக்கு அ.தி.மு.க-வினரை வாக்காளர்கள் அனுப்பியிருக்கிறார்கள். ஆனால், சொந்தக் கட்சிப் பிரச்னையில் அதையும் புறந்தள்ளியிருக்கிறது அ.தி.மு.க. “பிரதான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க-விடம் ஆக்கபூர்வமான செயல்பாடுகள் ஏதுமில்லை” என அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்களே விசனப்படும் அளவுக்குச் சென்றிருக்கிறது நிலைமை. “எதிர்க்கட்சியாக அ.தி.மு.க என்ன செய்துகொண்டிருக்கிறது?” என்கிற பலமான கேள்வியையும் அது உருவாக்கியிருக்கிறது!

குண்டு வெடிப்பு... கவர்னர்... ஆணையங்கள்... சட்டமன்றம்... என்ன செய்கிறது எதிர்க்கட்சி?

குண்டு வெடிப்பு முதல் சட்டமன்றம் வரை - வேகமில்லாத அ.தி.மு.க!

சமீபத்தில், தமிழகத்தையே உலுக்கியது கோவை கார் குண்டு வெடிப்புச் சம்பவம். நூலிழையில் தீபாவளிப் பண்டிகை தப்பிய நிலையில், சம்பிரதாய அறிக்கையைக் கொடுத்துவிட்டு அமைதியாகிவிட்டது அ.தி.மு.க. அந்தக் கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “இது தற்செயல் விபத்தா அல்லது சதி வேலையா... உள்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வர் என்ன செய்யப்போகிறார்?” என்கிற கேள்வியை எழுப்பியதோடு விவகாரத்தைக் கடந்துவிட்டார். ஓர் எதிர்க்கட்சியாக, மாநிலத்தின் பாதுகாப்பு குறித்து பலமாகப் பேசவேண்டிய அ.தி.மு.க., அது குறித்து வாய் திறக்கவே இல்லை. ஒரு கண்டன ஆர்ப்பாட்டம்கூட இல்லை. இந்தித் திணிப்பு விவகாரத்திலும் அதே மெளனம்தான்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழி ஆய்வுக்குழு, ‘ஆங்கிலத்துக்கு பதில் இந்தியைப் பயிற்றுமொழியாக இடம்பெறச் செய்ய வேண்டும்’ எனக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு அறிக்கை அளித்திருக்கிறது. அதை எதிர்த்து, தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டத்தில் குதித்திருக்கின்றன. ஆனால், அ.தி.மு.க-விடமிருந்து சத்தமே இல்லை. செய்தியாளர்களிடம், “தமிழை அ.தி.மு.க மட்டுமே பாதுகாத்துவருகிறது. தமிழுக்கு ஒரு பிரச்னை என்றால் அ.தி.மு.க முதலில் நிற்கும்” என்று வீராவேசம் காட்டியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் எம்.எல்.ஏ-க்கள் சிலர், “பேசவேண்டிய விஷயங்களில், அ.தி.மு.க அமைதி காப்பதை எங்களால்கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 1967-ல் கொண்டுவரப்பட்ட ஆட்சிமொழிகள் திருத்தச் சட்டம், ‘இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை, ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கும்’ என்கிற வாக்குறுதியை அளித்திருக்கிறது. அதற்கு மாறாக, இந்தியை அனைத்துத் தளங்களிலும் திணிப்பதற்கு முயல்கிறது மத்திய அரசு. இதற்கு மேல், தமிழுக்கு என்ன பிரச்னை வர வேண்டுமென உதயகுமார் எதிர்பார்க்கிறார்... அவருக்குச் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி அளிக்கப்படாததால், சட்டமன்றத்தையே புறக்கணித்தோம். கட்சிரீதியிலான பிரச்னையைச் சட்டமன்றம் வரை கொண்டுசென்றதே தவறு. இதற்காகவா, 2021 சட்டமன்றத் தேர்தலில் 66 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை வாக்காளர்கள் ஜெயிக்கவைத்தார்கள்?

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

2011 சட்டமன்றத் தேர்தலில், 29 இடங்களில் வெற்றிபெற்ற தே.மு.தி.க., பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பிடித்தது. ஆனால், ஆக்கபூர்வமான செயல்பாடுகள் இல்லாததால், அந்த அந்தஸ்தை அவர்களால் தக்கவைத்துக்கொள்ளக்கூட முடியவில்லை. அது போன்ற ஒரு நிலை, அ.தி.மு.க-வுக்கு ஏற்பட யாரும் விரும்பவில்லை. கட்சியின் பொன்விழா ஆண்டு நிறைவுபெற்றிருக்கும் நிலையில், அதை மகிழ்ச்சியாக மக்களிடம் எடுத்துச் செல்லக்கூட தலைவர்கள் யாரிடமும் ஆர்வம் இல்லை. எதிர்க்கட்சியாக மட்டுமல்ல, ஒரு கட்சியாகக்கூட அ.தி.மு.க-விடம் வேகமில்லை” என்றனர் ஆற்றாமையுடன்.

ஆணையங்களிடம் அமைதி... ஆளுநரிடம் மெளனம்!

கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி, அருணா ஜெகதீசன் ஆணையங்களின் இரு அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. ஆறுமுகசாமி ஆணையம், சசிகலா உள்ளிட்ட நால்வர்மீது நேரடியாகவே குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருக்கிறது. அரசியல்ரீதியாக இது எடப்பாடி பழனிசாமிக்கு பாசிட்டிவ்தான் என்றாலும், குற்றச்சாட்டுகளில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் சிக்கியிருப்பதால், அ.தி.மு.க-விடமிருந்து எந்தப் பேச்சும் இல்லை. தனக்கு ஆதரவாக யாரும் பேசாததால் விஜயபாஸ்கரும் மனவருத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அருணா ஜெகதீசன் ஆணையம், முந்தைய எடப்பாடி அரசின்மீது அழுத்தமான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறது. அந்தச் சமயத்தில் சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பேற்றிருந்த எடப்பாடி பழனிசாமி, ஆணையத்தின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்திருக்க வேண்டும். ஆனால், வாயையே திறக்கவில்லை அவர்.

குண்டு வெடிப்பு... கவர்னர்... ஆணையங்கள்... சட்டமன்றம்... என்ன செய்கிறது எதிர்க்கட்சி?

இந்த மெளனம், ஆளுநர் ஆர்.என்.ரவியின் அநாவசியப் பேச்சுகள், நடவடிக்கைகள் விஷயத்திலும் தொடர்வதுதான் வேதனைக்குரிய விஷயம். நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் வடமாவட்டச் செயலாளர் ஒருவர், “சனாதனத்தைத் தூக்கிப்பிடிக்கும் கருத்துகள் தொடங்கி, தமிழ்நாடு காவல்துறைக்குள் பிரிவினை விதைகளைத் தூவுவது வரை ஆளுநரின் பேச்சுகள், செயல்பாடுகள் ஒவ்வொன்றும் கண்டிக்க வேண்டியவை. அரசியலமைப்புச் சட்டத்தையே கேள்விக்குள்ளாக்கும்விதமாக, மதச் சார்பின்மையையே சிதைக்கப் பார்க்கிறார் ஆளுநர். அதைக் கண்டித்து ஓர் அறிக்கைகூட எடப்பாடி பழனிசாமியிடமிருந்து வெளிவரவில்லை. பன்வாரிலால் புரோஹித் ஆளுநராக இருந்தபோது, மாவட்டம்தோறும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். அதற்கு, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க கடும் எதிர்ப்பைக் கிளப்பியது. ‘ஆளுநரைச் செயல்படவிடாமல் தடுத்தால், ஐ.பி.சி 124-ன் கீழ், ஏழு வருடச் சிறைத் தண்டனை விதிக்கப்படும்’ என ராஜ்பவனிலிருந்தே அறிக்கை வந்தது. அந்த அளவுக்கு அ.தி.மு.க எதிர்ப்பைக் காட்ட முடியவில்லை என்றாலும், குறைந்தபட்சம் பேசவாவது செய்திருக்க வேண்டும்” என்றார்.

நவம்பர் 1-ம் தேதியை எல்லைப் போராட்ட வீரர் நாளாக தி.மு.க அரசு கொண்டாடியது. ஆனால், தான் முதல்வராக இருந்தபோது, ‘ஆண்டு தோறும் நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும்’ என்று அறிவித்த எடப்பாடி, அது குறித்து ஒரு நிகழ்ச்சியைக்கூட ஏற்பாடு செய்யவில்லை. மின்கட்டண உயர்வைத் திரும்பப் பெற, ‘புதிய தமிழகம்’ கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமிகூட ஆர்ப்பாட்டம் செய்து சமீபத்தில் கைதாகியிருக்கிறார். ஒரு எதிர்க்கட்சியாக இந்த 18 மாதங்களில் 10-க்கும் குறைவான போராட்டங்களைத்தான் அ.தி.மு.க நடத்தியிருக்கிறது. அ.தி.மு.க-வின் எதிர்க்கட்சிச் செயல்பாடுகளில் மட்டுமல்ல பிரச்னை... உட்கட்சிக்குள் உருளுகின்றன ஏகப்பட்ட பிரச்னைகள்.

குண்டு வெடிப்பு... கவர்னர்... ஆணையங்கள்... சட்டமன்றம்... என்ன செய்கிறது எதிர்க்கட்சி?

உச்சத்தில் உட்கட்சிப் பிரச்னை!

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் எழுந்தபோது, ஒன்றாக இருந்த பலரும் தற்போது சமூகரீதியில் பிரிந்துகிடக்கிறார்கள். “கட்சிக்குள், ‘நான் கவுண்டர் சமூகத்துக்கு மட்டுமான தலைவர் அல்ல’ என்பதை நிறுவுவதற்காக, தற்போது முக்குலத்தோருக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார் எடப்பாடி” என்கிற முணுமுணுப்பு அதிகமாகக் கேட்கிறது. முக்குலத்தோர் நிர்வாகிகளுக்குள்ளேயே தற்போது பிளவு ஏற்பட்டிருப்பதும் அனலைக் கூட்டியிருக்கிறது.

இது குறித்து அ.தி.மு.க-வின் தென் மாவட்டச் செயலாளர்கள் சிலர் நம்மிடம் பேசுகையில், “எம்.ஜி.ஆர்., அம்மா காலகட்டத்திலேயே அ.தி.மு.க என்றாலே அது முக்குலத்தோர் கட்சி என்ற தோற்றம்தான் இருந்தது. இதை எடப்பாடி மாற்றியதால்தான், தென்மாவட்ட நிர்வாகிகள் சிலர் தினகரன் பக்கம் தாவினர். இதனால்தான் ஒற்றைத் தலைமைக்குப் பிறகு, முக்குலத்தோர் சமூகத்தைச் சார்ந்த நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமாருக்கு முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டன. ஆனால், சட்டமன்றப் புறக்கணிப்பு, தேவர் குருபூஜை உள்ளிட்ட விவகாரங்களில் ஆர்.பி.உதயகுமாருக்கு மட்டும் அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதை, முக்குலத்தோர் நிர்வாகிகளுக்குள்ளேயே, ‘அவருக்கு மட்டும் ஏன் அவ்வளவு முக்கியத்துவம்?’ என்கிற புகைச்சலை உருவாக்கிவிட்டது. இதர சமூக நிர்வாகிகளும்கூட விரும்பவில்லை. இதை அப்போதே பேசி, தலைமை சரிசெய்திருக்க வேண்டும்.

நத்தம் விசுவநாதன்
நத்தம் விசுவநாதன்

அதைச் செய்யாததன் விளைவாக, தேவர் குருபூஜையில் சீனிவாசன், விசுவநாதன், ராஜன் செல்லப்பா போன்ற மூத்த நிர்வாகிகள் கூட்டத்தோடு கூட்டமாகப் பங்கேற்றுவிட்டு, முதல் ஆளாகக் கிளம்பிவிட்டனர். அதேநேரம், ‘தேவருக்கு அம்மா தங்கக் கவசம் கொடுத்தார், நான் வெள்ளிக் கவசம் கொடுக்கிறேன்’ என்று ஓ.பன்னீர்செல்வம் ஸ்கோர் செய்துவிட்டார். சி.வி.சண்முகத்துக்கும் கே.பி.முனுசாமிக்கும் இடையே நீறுபூத்த நெருப்பாகக் கனலும் பிரச்னை, இன்னும் அணைந்தபாடில்லை. முனுசாமியை ‘அட வாங்கண்ணே...’ என அழைத்து எடப்பாடி பூங்கொத்து அளித்து சமாதானப்படுத்தினாலும், மனமாச்சர்யங்கள் ஓயவில்லை. இந்தக் கோஷ்டிப்பூசலைச் சரிசெய்வதில்தான், எடப்பாடிக்கு மிகப்பெரிய சவாலே இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவராக மட்டுமல்ல, ஒரு கட்சியின் தலைவராகவும் அவர் தன்னைச் சரிசெய்துகொள்ள வேண்டும்” என்றனர் விரிவாக.

திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் சீனிவாசன்

மெளனம் ஏன்... எடப்பாடியின் நியாயம்!

சமீபத்தில் ‘ஆளுநர் - தி.மு.க மோதல்’ தொடர்பாக, எடப்பாடி பழனிசாமியிடம் முன்னாள் அமைச்சர் ஒருவர் பேசியிருக்கிறார். “விஷயம் ரொம்பத் தீவிரமாப் போய்க்கிட்டிருக்கு. கூட்டணிக் கட்சியா நாம ஏதாவது பேசியே ஆகணும்” என்றிருக்கிறார் அந்த அமைச்சர். அதற்கு எடப்பாடி, “நம்ம கட்சிப் பிரச்னைக்கு உதவி கேட்டு ரெண்டு முறை டெல்லி போனோம். உதவுற இடத்துல அவங்க இருந்தும், நமக்குக் கைகொடுக்கலை. நாம ஏன் பா.ஜ.க-வுக்கு ஆதரவா கம்பு சுத்தணும்... 2011 சட்டமன்றத் தேர்தலுக்கு 2010-ம் வருட இறுதியிலதான், ஒரு எதிர்க்கட்சியா அ.தி.மு.க போராட்டங்களைத் தீவிரப்படுத்தினார் அம்மா. தினமும் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடக்கும். அது மாதிரி நாமும் 2025 கடைசியில ஆட்டத்தை ஆரம்பிப்போம். பா.ஜ.க-வுக்குள்ளேயே உட்கட்சிப் பிரச்னை கணக்கு வழக்கு இல்லாம இருக்கு. கோயம்புத்தூர் பந்த் அறிவிப்பு - கேன்சல் தொடர்பா, அவங்க கட்சிக்குள்ளேயே பெரிய பிளவு ஏற்பட்டிருக்கு. இந்தச் சமயத்துல, நாம அமைதியா இருக்குறதுதான் புத்திசாலித்தனம். பா.ஜ.க செய்யும் தி.மு.க எதிர்ப்பு அரசியலையெல்லாம், வாக்குகளாக அறுவடை செய்யப்போறது நாமதான்” என்று தன் மெளனத்துக்கு நியாயம் சொல்லியிருக்கிறார் எடப்பாடி.

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்

ஆனால், அவர் சொல்லும் காரணத்தைக் கட்சி சீனியர்களே ஏற்கத் தயாராக இல்லை என்பதுதான் உண்மை. நம்மிடம் பேசிய சீனியர் முன்னாள் அமைச்சர் ஒருவர், “தாமாகவே முன்வந்து, ‘அ.தி.மு.க ஆட்சியில் சென்னையை மட்டுமல்ல தமிழ்நாட்டையே சீரழிச்சுட்டுப் போயிருக்காங்க...’ என்றிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடியும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ஆனாலும் அது போதாது. இந்நேரம் களத்தில் இறங்கியிருக்க வேண்டும். தி.மு.க அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தில், நீட் தேர்வு விலக்கு தொடர்பாக அவையில் கருத்து மோதல் ஏற்பட்டது. இரண்டாவது கூட்டத்தொடரில், தாலிக்குத் தங்கம் திட்டம், காவிரி குண்டாறு உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விவாதம் நடந்தது. அவையைத் தாண்டி, பொதுக்களத்தில் தி.மு.க - அ.தி.மு.க இடையே காரசார விவாதம் நடந்து பல மாதங்கள் ஆகிறது. அந்தக் கள அரசியல் மோதலைத்தான், தற்போது அ.தி.மு.க இழந்திருக்கிறது” என்றார்.

அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில், வரும் நவம்பர் 26-ல் தீர்ப்பு வரவிருக்கிறது. அதில் வெற்றிபெற்று, பொதுச்செயலாளராக வேண்டுமென்பதுதான் எடப்பாடியின் இலக்காக இருக்கிறது. தன் பதவிக்கான வேட்கையில், எதிர்க்கட்சி செயல்பாட்டில் அ.தி.மு.க பலவீனமாக இருப்பதைப் பற்றி அவர் வேண்டுமானால் கவலைப்படாமல் இருக்கலாம். ஆனால், அ.தி.மு.க-வின் கடைக்கோடித் தொண்டர்கள் அதை விரும்பவில்லை. கட்சிக்குள் ‘அனைவருக்குமான தலைவர்’ என்பதை அவர் நிறுவ முயலும் நிலையில், ஓர் எதிர்க்கட்சித் தலைவராகத் தன்னை அவர் முதலில் நிரூபிக்க வேண்டும். சந்தர்ப்பங்களும் காலமும் கடந்துகொண்டிருக்கின்றன, என்ன செய்யப்போகிறார் எடப்பாடி?

குண்டு வெடிப்பு... கவர்னர்... ஆணையங்கள்... சட்டமன்றம்... என்ன செய்கிறது எதிர்க்கட்சி?

“அண்ணன், தம்பி கதையெல்லாம் 1972-லேயே முடிந்துவிட்டது!”

‘எதிர்க்கட்சியாகச் செயல்படுவதில் அ.தி.மு.க ஏன் சுணங்குகிறது?’ கேள்வியுடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் பேசினோம். “எம்.எல்.ஏ-க்கள் அடிப்படையிலும், ஆக்கபூர்வமான நடவடிக்கையின் அடிப்படையிலும் தமிழகத்தில் எதிர்க்கட்சி அ.தி.மு.க-தான். இதை யாரும் மாற்ற முடியாது. ஆனால், எதிர்க்கட்சியாக அ.தி.மு.க செயல்படவில்லை என்றும், நாங்கள் பலவீனமாக இருப்பதாகவும் ஒரு பிம்பத்தைச் சிலர் உருவாக்குகிறார்கள். அதற்கு தி.மு.க-வும் உடந்தை. தேர்தல் வந்தால் இவையெல்லாம் அடிபட்டுப்போகும். அ.தி.மு.க-வின் வாக்குவங்கி எப்போதும் மாறாது. சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கும் தி.மு.க-வுக்கும் வாக்கு வித்தியாசம் மிகக் குறைவுதான். இப்போது தேர்தல் வந்தால், அ.தி.மு.க-தான் ஆட்சியைப் பிடிக்கும். எங்களின் வலிமை தி.மு.க-வுக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான், எங்களை பலவீனப்படுத்த ஏதாவது பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். அ.தி.மு.க-வுக்கு தி.மு.க எப்போதுமே எதிரிதான். ‘எங்களுக்குள்ள பங்காளிச் சண்டைதான் நடக்குது’ என்று தி.மு.க-வினர் சொல்கிறார்கள். இந்த அண்ணன், தம்பி கதையெல்லாம் 1972-லேயே முடிந்துவிட்டது” என்றார் காட்டமாக.