Published:Updated:

பிஎம் கேர்ஸ்... பிரைவேட் சொத்தா? - 2

மோடி
பிரீமியம் ஸ்டோரி
News
மோடி

வசூல் வேட்டையில் புதுப்புது யுக்தி!

மார்ச் 28 அன்று பிஎம் கேர்ஸ் தொடர்பாக மோடி அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சகம் ஒரு நினைவுப் பத்திரத்தை (Memorandum) வெளியிட்டது.

அதில், ‘கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள இந்திய அரசால் `பிஎம் கேர்ஸ்’ என்ற நிதியம் தொடங்கப்பட்டுள்ளது. கம்பெனி சட்டம் 2013-க்குகீழ் வரும் சி.எஸ்.ஆர் நடவடிக்கைகள் பிஎம் கேர்ஸுக்கும் பொருந்தும்’ என்று குறிப்பிட்டிருந்தது. தொடர்ந்து கடந்த மே மாதம் கம்பெனி சட்டம் 2013-னுடன் பிஎம் கேர்ஸ் இணைக்கப்பட்டது. அப்போது, ‘பிரதமர் மோடி பிஎம் கேர்ஸ் தொடர்பாக ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்ட மார்ச் 28-ம் தேதி முதலே இது அமலுக்கு வருகிறது’ என்றது மத்திய அரசு.

தொடர்ந்து, ‘பா.ஜ.க மக்களவை உறுப்பினர்கள், தங்களது தொகுதி நிதியிலிருந்து பிஎம் கேர்ஸுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும்’ என்று அந்தக் கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தினார். நட்டாவின் இந்த அறிவிப்பு வெளியானதும் மார்ச் 28-ம் தேதிதான். அடுத்த மூன்று நாள்களில் மார்ச் 31-ம் தேதியுடன் 2019-20 நிதியாண்டு முடிவடைகிறது. ஏப்ரல் 1-ம் தேதி 2020-21 நிதியாண்டு தொடங்குகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதற்கிடையே அவசர அவசரமாக அதே மார்ச் 28-ம் தேதி மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமைச்சகம் ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, ‘மக்களவை உறுப்பினர்களின் உள்ளூர் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ஐந்து கோடி ரூபாய் நிதியிலிருந்து ஒரு முறை பணம் ரிலீஸ் செய்யப்படும்’ என்றது. அவரவர் தொகுதிகளில் நடக்கும் பணிகளின் அடிப்படையில் தேவையான நிதியை எம்.பி-க்கள் எடுத்துக்கொண்டார்கள்.

ஜே.பி.நட்டா
ஜே.பி.நட்டா

ஆனால், பா.ஜ.க எம்.பி-க்கள் மட்டும் இதில் எடுத்த பணத்தை மார்ச் 28-ம் தேதியிலிருந்து 31-ம் தேதிக்குள் கொரோனா நிவாரணமாக வழங்கிவிட்டனர். ஏப்ரல் 1-ம் தேதி புதிய நிதியாண்டு பிறந்துவிட்டது. ஏப்ரல் 8-ம் தேதி மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமைச்சகம் வெளியிட்ட மற்றோர் அறிவிப்பில், ‘2020-21, 2021-22 ஆகிய இரண்டு நிதியாண்டுகளுக்கு எம்.பி-க்களின் தொகுதி நிதி நிறுத்தி வைக்கப்படுகிறது’ என்று கூறியது. அதாவது பா.ஜ.க எம்.பி-க்கள் நிவாரணத் தொகை அனுப்பிய ஒரு வாரத்தில், தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தி வைக்கப்பட்டது. தந்திரம் புரிகிறதா?

எம்.பி-க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி மட்டுமா... கார்ப்பரேட்களிடமும் வசூல் மழை பொழிந்தது. மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ரயில்வேதுறை, மின்சாரத்துறை, சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை என மத்திய அமைச்சகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்தும் நிதி வேட்டை தொடர்ந்தது.

மோடி
மோடி

கடந்த ஏப்ரல் 4-ம் தேதி மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், அந்தத்துறை அலுவலர்களுக்கு அலுவலக நினைவுப்பத்திரம் (Office Memorandum) ஒன்றை வெளியிட்டது. அதில், ‘ஊழியர்கள் அனைவரும் தங்களது மாத ஊதியத்திலிருந்து ஒரு நாள் சம்பளத்தை ஓராண்டுக்கு பிஎம் கேர்ஸுக்கு நிவாரணமாக வழங்க வேண்டும். விருப்பமில்லாதவர்கள் அதற்கான காரணத்தை ரிப்போர்ட்டாக வழங்க வேண்டும்’ என்று கூறியது. இதே அறிவிப்பை அனைத்து மத்திய அமைச்சகங்களும் வெளியிட்டன. அதாவது, அரசு ஊழியர்கள் பிஎம் கேர்ஸுக்கு நிதி அளிப்பதை அனைத்து அமைச்சகங்களும் கட்டாயமாக்கியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து மூத்த வழக்கறிஞர் லோகநாதன் கூறுகையில், ‘‘பிஎம் கேர்ஸ் செயல்படுத்தப்பட்ட விதமே முரண்களுடன் உள்ளது. கடந்த 2014 முதல் பி.எம்.என்.ஆர்.எஃப்-க்கு ரூ.2,119 கோடி நிதி கிடைத்துள்ளது. மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்ட பிஎம் கேர்ஸ்க்கு கிடைத்த நிதி ரூ.10,000 கோடியைத் தாண்டிவிட்டது. அதேசமயம் இரண்டு அமைப்புகளு க்குமே பெரிய வித்தியாசம் இல்லை. இரண்டிலுமே பிரதமருக்குத்தான் உச்ச அதிகாரம். பிஎம் கேர்ஸில் தற்போது நான்கு பேர் உள்ளனர். மேலும் மூன்று பேரை நியமிக்கும் அதிகாரமும் பிரதமருக்குத்தான் இருக்கிறது. அந்த மூன்று பேரை இன்னும் நியமிக்கவில்லை. அப்படி நியமித்தாலும் இவர்களின் கைதான் ஓங்கும். ஏனென்றால், பாதுகாப்புத்துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோர் பிரதமர் சொல்வதை மறுக்கவே முடியாது.

பிஎம் கேர்ஸ் நிதி கொடுத்தவர்கள்
பிஎம் கேர்ஸ் நிதி கொடுத்தவர்கள்

பிஎம் கேர்ஸ் பொது அமைப்பு இல்லை யென்றாலும், பிரதமரின் அலுவலக முகவரிதான் அதிலும் கொடுக்கப்பட்டுள்ளது. அண்டர் செக்ரட்டரிதான் (நிதி) பிஎம் கேர்ஸுக்கும் பொறுப்பு அதிகாரி. பி.எம்.என்.ஆர்.எஃப்-ல் இணைச் செயலாளர் அந்தஸ்தில் ஒருவரைப் பொறுப்பு அதிகாரியாக நியமித்திருந்தனர். முக்கியமாக, பிஎம் கேர்ஸில் அரசு முத்திரை பயன்படுத்தப்படுகிறது. இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நினைவுகூர விரும்புகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜியோ நிறுவனம் தனது விளம்பரத்துக்கு, அனுமதியின்றி பிரதமரின் படத்தைப் பயன்படுத்தியது. இது பெரிய அளவில் சர்ச்சையைக் கிளப்பி, அந்த நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அப்படிப் பார்த்தால், பிஎம் கேர்ஸ் என்பதும் ஒரு பொது அமைப்பு இல்லை. இதைப் பிரதமரின் அலுவலகமே சொல்கிறது. ஆனால், இவர்கள் மட்டும் அரசு முத்திரையைப் பயன்படுத்துவது எந்தவிதத்தில் நியாயம்?

எல்லாவற்றுக்கும் மேலாக பிஎம் கேர்ஸுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 33 பேர் தலா 50,000 ரூபாய் வழங்கியுள்ளனர். அரசு முத்திரை, அரசு அதிகாரிகள் நியமனம், அரசு அதிகாரிகளைக் கட்டாயப்படுத்தி பணம் வசூலிப்பது போன்றவை எல்லாம் அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம்.

ஏற்கெனவே, கார்ப்பரேட் நிறுவனங்களிட மிருந்து நிதி பெறுவதை, `தேர்தல் பத்திரம்’ என்பதன் மூலம் மத்திய பா.ஜ.க அரசு திட்டமாகவே கொண்டு வந்தது. இந்தத் தேர்தல் பத்திரம் அமெரிக்க கலாசாரம். ஏற்கெனவே ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தபோது, `ஒபாமா கேர்ஸ்’ தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் பிஎம் கேர்ஸ் வந்துள்ளது. அமெரிக்க அரசியல் யுக்தியை பா.ஜ.க தொடர்ந்து பின்பற்றிவருவதையே இது காட்டுகிறது” என்றவர், பிஎம் கேர்ஸின் சில வெளிப்படைத் தன்மையின்மை குறித்தும் பேசினார்.

“மக்கள் கொடுத்த நிதி விவரங்களை வெளிப்படையாகச் சொல்ல வேண்டிய கடமை பிஎம் கேர்ஸுக்கு இருக்கிறது. அப்படிச் சொல்லவில்லையென்றால், அது முறைகேடுகளுக்கான முன்னெடுப்பு என்கிற தோற்றம் பெறுவதைத் தவிர்க்க முடியாது. நம் நாட்டில் முதல்வர் நிவாரண நிதி, மாநில பேரிடர் நிவாரண நிதி ஆகியவையெல்லாம் வெளிப்படைத் தன்மையுடனேயே இருக்கின்றன. ஆனால், பிஎம் கேர்ஸில் மட்டும் தகவல்களை மறைக்கும் மர்மம் ஏன் என்பது தெரியவில்லை.

லோகநாதன்
லோகநாதன்

அரசுத் திட்டங்களில், `10 லட்சம் ரூபாய்க்கு மேலே சென்றாலே டெண்டர் விட வேண்டும்’ என்பது விதி. பிஎம் கேர்ஸில் இதுவரை ரூ.3,000 கோடிக்கு மேல் செலவு செய்திருக்கிறார்கள். அந்தத் தொகை முறைப்படி டெண்டர் விடப்பட்டுச் செலவழிக்கப்பட்டதா அல்லது எந்த அடிப்படையில் செலவு செய்யப்பட்டது என்பதெல்லாம் மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிய வேண்டாமா?” என்று கேட்கிறார் அழுத்தமாக.

சரி, இது தொடர்பாக பா.ஜ.க தலைவர்கள் உட்பட பிற அரசியல் கட்சித் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

(பார்ப்போம்)