Published:Updated:

சர்வே... சஸ்பென்ஸ்... வெயிட்டிங்... மிரட்டும் மௌனம்!

சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட 23 மணி நேர வரவேற்பு, எங்கள் டெல்லி தலைமையின் அரசியல் கணக்குகளை சற்று அசைத்துப் பார்த்திருப்பது நிஜம்

பிரீமியம் ஸ்டோரி

‘ஓடு மீன் ஓட உறுமீன் வரும்வரை சாலக் காத்திருக்குமாம் கொக்கு!’ - அப்படித்தான் தேர்தல் ஆதாயங்களுக்காக, தமிழக அரசியல் களம் எனும் பெருங்குளத்தில் சலனமற்ற கொக்குகளாகக் கவனத்துடன் காத்திருக்கின்றன அரசியல் கட்சிகள். இதைக் ‘கருவுறும் காலம்’ என்றும் அழைப்பார்கள் அரசியல் பார்வையாளர்கள். பேசும் வார்த்தைகளைவிட பேசாத மெளனங்களுக்கு இங்கு லாபம் அதிகம். ஒருபக்கம் விருப்பமனு வாங்கும் படலம், விறுவிறு தேர்தல் பிரசாரம் எனத் தேர்தல் திருவிழா களைகட்டினாலும் சர்வே முடிவுகளை முன்வைத்து பா.ஜ.க காக்கும் அமைதி, சஸ்பென்ஸ் மேலிடவைக்கும் சசிகலாவின் மெளனம், எதிரணியை பல்ஸ் பார்க்கும் ஸ்டாலினின் காத்திருப்பு என்று தமிழகத்தின் அரசியல் சூழலை கனத்த மெளனம் ஒன்று மிரட்டுகிறது!

பிப்ரவரி 18-ம் தேதி பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை கமலாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன், “அ.ம.மு.க தனித்துப் போட்டியிடப்போவதாக எங்கும் சொல்லவில்லை. அவர்களுடன் கூட்டணி அமைப்பது குறித்து எங்கள் கட்சித் தலைமைதான் முடிவு செய்யும். அ.தி.மு.க - அ.ம.மு.க இடையிலான பிரச்னையை அவர்களுக்குள் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும்” என்று ஒரு புது வெடியை எறிந்திருக்கிறார். ‘அ.ம.மு.க-வை மீண்டும் சேர்ப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்று முதல்வர் பழனிசாமி ஆரம்பித்து அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் வரை பலரும் தெளிவுபடுத்திவிட்டாலும், அந்த விவகாரம் இன்னும் தொடர்வதாகவே கோடிட்டுக்காட்டுகின்றன எல்.முருகனின் வார்த்தைகள். ‘அ.ம.மு.க தனித்துப் போட்டியிடுவதாக எங்கும் சொல்லவில்லை’ என்றதன் மூலம் வான்டடாக மன்னார்குடி வண்டிக்காகக் காத்திருக்கிறார் முருகன்.

சர்வே... சஸ்பென்ஸ்... வெயிட்டிங்... மிரட்டும் மௌனம்!

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்துகொண்டே இப்படி அவர் சொல்லியிருக்க வேண்டியதில்லை” என்பது அ.தி.மு.க சீனியர்கள் சிலரின் வருத்தம். பா.ஜ.க முகாமில் என்னதான் நடக்கிறது? பா.ஜ.க சீனியர்கள் சிலரிடம் பேசினோம்.

உளவுத்துறை சர்வே உறவுக்கு வழிவகுக்குமா?

“சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட 23 மணி நேர வரவேற்பு, எங்கள் டெல்லி தலைமையின் அரசியல் கணக்குகளை சற்று அசைத்துப் பார்த்திருப்பது நிஜம். இப்படிச் சோர்வில்லாமல் பயணித்ததன் மூலமாக, தன்னால் தொடர்ச்சியாகப் பயணம் செய்து பிரசாரத்திலும் ஈடுபட முடியும் என்பதை சசிகலா காட்டிவிட்டார். சசிகலா ரிலீஸுக்குப் பிறகு, மத்திய உளவுத்துறை மூலம் தமிழகத்தில் அரசியல் நிலவரம் குறித்து பல்ஸ் பார்த்து வருகிறோம். அதில், ‘சசிகலா வருகைக்குப் பிறகு தென்மாவட்டங்களிலும் டெல்டாவிலும் கணிசமான அளவுக்கு அ.தி.மு.க வாக்குகள் தடம்புரள வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக, தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பிறகு சசிகலாவை முன்வைத்து அ.தி.மு.க-வுக்குள் சில மாற்றங்கள் ஏற்படலாம். இன்னொரு பக்கம் பெண் வாக்காளர்களிடம் சசிகலா மீது ஒருவித அனுதாபம் ஏற்பட்டுள்ளது’ என்று தெரியவந்திருக்கிறது.

சர்வே... சஸ்பென்ஸ்... வெயிட்டிங்... மிரட்டும் மௌனம்!

எனவே, சசிகலாவால் எங்கள் கூட்டணி எந்த வகையிலும் பலவீனம் அடைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். தமிழகத்தில் எப்படியாவது இரட்டை இலக்க தொகுதிகளில் வெற்றிபெற்று சட்டசபைக்குள் சென்றுவிட வேண்டும். நல்ல வாய்ப்பு அமையும்பட்சத்தில் அ.தி.மு.க என்கிற ‘பொம்மைக் குதிரை’யில் ஏறியாவது ஆட்சியை ருசித்துவிட வேண்டும் என்பது கணக்கு. இந்த விஷயத்தில் நாங்கள் சற்றும் காம்ப்ரமைஸ் செய்துகொள்ள விரும்பவில்லை.

இதை உறுதி செய்வதற்காக, ‘சசிகலாவால் அ.தி.மு.க வாக்குகள் சிதறுமா? தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டாவில் எத்தனை தொகுதிகளில் பாதிப்பு ஏற்படும்?’ என்று விலாவாரியாக ஒரு சர்வே நடத்த மத்திய உளவுத்துறைக்கு டெல்லி மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. இதன் ரிசல்ட்டைப் பொறுத்து டெல்லியின் கணக்கு மாறுபடும். ‘சசிகலா உடன் இருந்தால்தான், கூட்டணி வெற்றிபெறும்’ என்று தெரியும்பட்சத்தில் எப்படியாவது அவரை அ.தி.மு.க-வுடன் இணைக்கவைத்து தேர்தலைச் சந்திப்போம். ரிசல்ட் நெகட்டிவ்வாக வரவில்லையென்றால், இப்போதிருக்கும் நிலையிலேயே தேர்தல் களம் காண்போம்.

தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பதை எங்கள் டெல்லி மேலிடம் முடிவு செய்யும். வெற்றிக்காக யாரை வேண்டுமானாலும் கூட்டணியில் சேர்ப்போம். எடப்பாடியை வைத்தே சசிகலாவை வரவேற்க வைப்போம். தேவைக்கு ஏற்றபடி ஆட்டத்தை எப்படி மாற்றி ஆட வேண்டுமென்பது டெல்லிக்குத் தெரியும். மூன்று நியமன பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களை வைத்துக்கொண்டு, புதுச்சேரியில் நாராயணசாமி அரசுக்கு நாங்கள் காட்டும் வித்தைகளையெல்லாம் நீங்கள் பார்க்கிறீர்கள்தானே?” என்றார்கள் விளக்கமாக!

சர்வே... சஸ்பென்ஸ்... வெயிட்டிங்... மிரட்டும் மௌனம்!

சஸ்பென்ஸ் சசிகலா!

“ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளில் வரும் சஸ்பென்ஸ்களைக்கூட கண்டுபிடித்துவிடலாம், ஆனால், சசிகலாவின் மனதில் ஒளிந்திருக்கும் சஸ்பென்ஸ் திட்டங்களைத்தான் கண்டுபிடிக்க முடியவில்லை” என்கிறார்கள் அ.ம.மு.க நிர்வாகிகள் சிலர். பிப்ரவரி 9-ம் தேதி சென்னை தி.நகரிலுள்ள கிருஷ்ணப்ரியாவின் வீட்டுக்கு வந்து சேர்ந்த சசிகலா, இதுநாள்வரை வெளியே வரவில்லை. முன்பு ஜெயலலிதா அவரை போயஸ் கார்டனிலிருந்து வெளியேற்றியபோது, திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் சமாதியில் தினமும் அமர்ந்து தியானம் செய்தார். இந்த விவரம் தெரிந்த பிறகுதான் சசிகலாவை ஜெயலலிதா மீண்டும் தன்னுடன் சேர்த்துக் கொண்டார். அங்குகூட இந்தமுறை அவர் செல்லவில்லை. வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கும் சசிகலாவின் திட்டம்தான் என்ன? சசிகலாவுக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம்.

“ஜெயலலிதாவுடனேயே இருந்து அரசியல் சாதுர்யங்களைக் கற்றவர் சசிகலா. தன்னைச் சுற்றி நடக்கும் எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்துவருகிறார். எல்லா விஷயங்கள் குறித்தும் கருத்து சொல்லும் பா.ஜ.க பிரமுகர்கள் பலரும், சசிகலா பற்றி ஆதரவாகவோ, எதிராகவோ இதுவரை எதுவும் சொல்லவில்லை. தனக்கான கதவு திறந்திருப்பதாகவே சசிகலா நம்புகிறார்.

‘அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக்குத் தன் தயவு தேவைப்படும், அப்போது அவர்களாக வருவார்கள்’ என்று அவர் நினைக்கிறார். ஒருவேளை அது நடக்காமல் போனாலும், அவருக்குக் கவலையில்லை. அந்தச் சூழ்நிலையில் அ.ம.மு.க தனித்துப் போட்டியிடலாம்.

பிப்ரவரி 24-ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாள். அன்றைய தினம் அவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வேண்டுமென்பது சசிகலாவின் ஆசை. அவர் வரக் கூடாது என்பதற்காகத்தான் பொதுப்பணித்துறை மூலம் ‘கட்டடப் பணிகள் நடைபெறுகின்றன’ என்ற அறிவிப்புப் பலகை வைத்தார்கள். ஜெயலலிதாவின் பிறந்தநாளிலும், அந்தப் பலகையைக் கழற்றாமல் ஆட்சியாளர்கள் மட்டும் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு வந்துவிடுவார்கள். சசிகலாவால் சலசலப்பு ஏதும் வந்துவிடக் கூடாது என்று பயந்தே, அன்றைய தினம் விருப்ப மனு வாங்கும் நிகழ்ச்சியையும் வைத்திருக்கிறார்கள்.

விரைவில் தமிழகம் முழுக்க நீதி கேட்டு நெடும்பயணம் செல்லும் திட்டத்தில் இருக்கிறார் சசிகலா. அவர் யாருக்கும் வாக்களிக்கச் சொல்லப் போவதில்லை. குறிப்பாக, அ.ம.மு.க-வுக்கு வாக்களிக்கும்படி கேட்க மாட்டார். அ.தி.மு.க-விலும் யாரையும் வசைபாடப் போவதில்லை. பொத்தாம் பொதுவாக தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக நீதி கேட்கப்போகிறார். மேலும், ‘தீயசக்தியான தி.மு.க ஆட்சிக்கு வரக் கூடாது என்பது அக்காவின் ஆசை. அந்த ஆசையை நிறைவேற்றுங்கள்’ என்று பிரசாரம் செய்வார். தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில், ‘என்னை அக்காவின் சமாதிக்குக்கூட செல்லவிடாமல் தடுத்துவிட்டார்கள். என்னைக் கைதுசெய்யவும் திட்டமிட்டார்கள். நான் என்ன தவறு செய்தேன்?’ என்று பேசவிருக்கிறார். கொங்கு மண்டலத்தில் பயணம் செய்யும்போது, ‘உங்கள் சமூகத்தை நம்பித்தானே இந்த ஆட்சியை ஒப்படைத்துவிட்டுச் சென்றேன். இந்த துரோகம் நியாயமா?’ என்று உருக்கமாகப் பேசவிருக்கிறார். இவையெல்லாம் இந்த நிமிட திட்டங்கள்தான். அரசியல் சூழலைப் பொறுத்து வரும் நாள்களில் அவர் எப்படி வேண்டுமென்றாலும் முடிவெடுக்கலாம்.

அ.தி.மு.க-வின் உயிர்நாடியே தி.மு.க எதிர்ப்பு அரசியல்தான். கட்சி, ஆட்சி, அதிகாரமெல்லாம் அதற்கு அடுத்ததுதான். தி.மு.க எதிர்ப்புநிலையைக் கையிலெடுத்து, சசிகலா உடைக்கப்போகும் சஸ்பென்ஸ் என்னவென்பது அப்போது தெரியும்” என்றனர் விலாவாரியாக.

சர்வே... சஸ்பென்ஸ்... வெயிட்டிங்... மிரட்டும் மௌனம்!

ஸ்டாலின் வெயிட்டிங்!

சரி, பா.ஜ.க-வுக்கு அவர்கள் கூட்டணி வெற்றிபெற வேண்டுமே என்கிற கவலை... சசிகலாவுக்கு அ.தி.மு.க-வைக் கைப்பற்ற வேண்டுமென்ற வேட்கை... இடையில் ஸ்டாலினுக்கு என்ன வந்தது? ஏற்கெனவே, வலுவான கூட்டணியைக் கட்டமைத்திருக்கும் அவர், தாமதமாக விருப்ப மனு விநியோகிப்பது தொடங்கி கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை அதிகாரபூர்வமாக இன்னும் தொடங்காதது வரை காத்திருப்பு மனநிலையிலேயே இருக்கிறார்.

எதற்காகக் காத்திருக்கிறார் ஸ்டாலின்? தி.மு.க-வின் இரண்டாம்கட்ட தலைவர்கள் சிலரிடம் பேசினோம். “200 தொகுதிகளில் தி.மு.க வெற்றிபெறும் என்று கூறிவந்த ஸ்டாலின், சசிகலாவின் வருகைக்குப் பிறகு 234 தொகுதிகளிலும் தி.மு.க வெற்றி பெறும் என்று தெம்பாகிவிட்டார். சசிகலாவால் அ.தி.மு.க வாக்குகள் பிளவுபடும் என்று அவர் நம்புவதே இதற்குக் காரணம். தி.மு.க அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதை பா.ஜ.க விரும்பவில்லை. அதற்காக, சசிகலாவை அ.தி.மு.க-வுடன் கைகோக்கவைக்க சில முயற்சிகளையும் மறைமுகமாக மேற்கொண்டுள்ளனர். அந்த முயற்சி பலித்தால், தென்மாவட்டங்களிலும் டெல்டாவிலும் தி.மு.க-வுக்குச் சற்று சறுக்கல் ஏற்படும். அதற்கேற்ப வேட்பாளர்கள் தேர்வு, சீட் பங்கீடு, கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கும் தொகுதிகள், புதிய கட்சிகளை கூட்டணிக்குள் இழுத்துக்கொள்வது என்று கூட்டணிக் கணக்கையே மாற்ற வேண்டியிருக்கும். அ.ம.மு.க தனித்துப் போட்டியிட்டால், கூட்டணிக் கட்சிகளிடம் பெரியண்ணன் மனப்பான்மையில் தி.மு.க பேசி, அதிக இடங்களில் போட்டியிடப் பார்க்கும். அ.தி.மு.க - சசிகலா விவகாரத்துக்கு முடிவு தெரியும்வரை ஸ்டாலின் வெயிட்டிங் மனநிலையில்தான் இருப்பார்” என்றனர்.

ஆழ்கடல் அமைதிபோல, தமிழக அரசியலிலும் தற்காலிகமாக அமைதி குடிகொண்டிருக்கிறது. சுனாமியாக சசிகலா புறப்படுவாரா, பா.ஜ.க-வின் வியூக அரசியல் பிரளயத்தை ஏற்படுத்துமா, ஸ்டாலினின் தேர்தல் கணக்கு மாறுமா என்பதெல்லாம் ஓரிரு வாரங்களில் தெரிந்துவிடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு