அரசியல்
அலசல்
Published:Updated:

கரைவேட்டி மாற்றும் புள்ளிகள்... ஸ்கெட்ச் போடும் கட்சிகள்!

கரைவேட்டி மாற்றும் புள்ளிகள்... ஸ்கெட்ச் போடும் கட்சிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கரைவேட்டி மாற்றும் புள்ளிகள்... ஸ்கெட்ச் போடும் கட்சிகள்!

தி.மு.க-வுக்கு, கொங்கு மண்டலத்தைப் பலப்படுத்த வேண்டும்; எதிர்க்கட்சியை பலவீனப்படுத்த வேண்டும். அ.தி.மு.க-வுக்கு எதிர்க்கட்சி அரசியலைத் தீவிரப்படுத்த வேண்டும்; பா.ஜ.க - தி.மு.க-விடமிருந்து தற்காத்துக்கொள்ள வேண்டும்.

உங்களில் பலரும் சர்க்கஸ் பார்த்திருப்பீர்கள். உயரமான ஓர் இடத்திலிருந்து, மற்றோர் இடத்துக்கு அந்தரத்தில் ‘டைவ்’ அடித்துத் தாவும் சாகசத்தை வித்தைக்காரர்கள் அரங்கேற்றுவார்கள். பார்க்கவே பதற்றமாக இருக்கும். மயிர்க்கூச்செரியும் அந்த சாகசத்துக்குச் சற்றும் சளைக்காத தாவல் காட்சிகள் தமிழ்நாடு அரசியலிலும் அரங்கேற ஆரம்பித்திருக்கின்றன. தி.மு.க., அ.தி.மு.க கட்சிகள் தொடங்கி மக்கள் நீதி மய்யம் வரை பல அரசியல் கட்சிகளும் மாற்றுக்கட்சி நிர்வாகிகளை வலைவிரித்து இழுக்க ஆரம்பித்திருக்கின்றன. அ.தி.மு.க-வை பலவீனமடையச் செய்ய, அந்தக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களிடம் பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருக்கிறது தி.மு.க. கொங்கு மண்டலத்தை பலமாக்கும் அறிவாலயத்தின் வியூகமும் அதற்குள் ஒளிந்திருக்கிறது. “எல்லாச் சாலைகளும் ரோமாபுரியை நோக்கிச் செல்கின்றன’ என்பார்கள். அதுபோல, இந்தக் கரைவேட்டி மாற்றும் களேபரங்கள் அனைத்தும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை நோக்கியே” என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ‘ஸ்கெட்ச்’ போடும் கட்சிகளின் வியூகம் என்ன... யார் யாரெல்லாம் வியூக வளையத்துக்குள் `வார்ம்அப்’ செய்கிறார்கள் என விசாரித்தோம். கிடைத்த தகவலெல்லாம் ‘மாண்டஸ்’ புயல் ரகம்!

கரைவேட்டி மாற்றும் புள்ளிகள்... ஸ்கெட்ச் போடும் கட்சிகள்!

‘டார்கெட் கொங்கு’ ஆபரேஷனைத் தீவிரமாக்கிய அறிவாலயம்!

கடந்த ஒரு மாதத்தில் மட்டும், கரைவேட்டியை மாற்றிக் கட்டிக்கொண்ட அரசியல் புள்ளிகளின் எண்ணிக்கை தாறுமாறாக உயர ஆரம்பித்திருக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி தேவதாஸ், தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை நேரில் சந்தித்து பா.ம.க-வில் இணைந்திருக்கிறார். இணைந்த வேகத்திலேயே, அவருக்கு பா.ம.க துணைத் தலைவர் பதவியை அளித்திருக்கிறது தைலாபுரம். மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்டபோது, கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தவர் அருணாச்சலம். கமல்ஹாசனின் வலதுகையாகச் செயல்பட்டவர். கட்சியில் சக நிர்வாகிகளிடையே ஏற்பட்ட மனக்கசப்புகளால், ம.நீ.ம-விலிருந்து விலகி பா.ஜ.க பக்கம் சென்றார். சமீபத்தில் மீண்டும் ம.நீ.ம-வில் தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறார். திருப்பூர் மாவட்டம், குண்டடத்தில் நடைபெற்ற விழாவில், எடப்பாடியின் தலைமையை ஏற்று, மாற்றுக்கட்சி உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கானோர் அ.தி.மு.க-வில் இணைந்திருக்கிறார்கள். அ.தி.மு.க-வைச் சேர்ந்த நிலக்கோட்டை முன்னாள் எம்.எல்.ஏ அன்பழகனைத் தங்கள் பக்கம் இணைத்து, இலைக் கட்சிக்கு ‘ஷாக்’ அளித்திருக்கிறது பா.ஜ.க. “மேலோட்டமாகப் பார்த்தால், இவை சாதாரணமாக, கரைவேட்டி மாற்றிக்கொள்ளும் சம்பவங்களாகத்தான் தோன்றும். ஆனால், அரசியல் கட்சிகளின் கணக்கே வேறு” என்கிறார்கள் சில சீனியர் அரசியல் தலைவர்கள்.

தி.மு.க-வைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் சிலரிடம் பேசினோம். “கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க-வை பலவீனப்படுத்துவதற்காகவே, மண்டலத்தின் பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டார். 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, கொங்குப் பகுதியில் தி.மு.க-வை பலப்படுத்தும் ‘டார்கெட்’ செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், முன்னாள் அமைச்சர் வேலுமணியை மீறி எதிர்பார்த்த முன்னேற்றத்தைக் கொண்டுவர அவரால் முடியவில்லை. கோவை மாவட்டத்தில் மட்டும் ஒன்பது எம்.எல்.ஏ-க்களை அ.தி.மு.க தன் கைவசம் வைத்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம், முதல்வர் ஸ்டாலின் கோவைக்குச் சென்றிருந்தபோது, வால்பாறை அ.தி.மு.க எம்.எல்.ஏ அமுல் கந்தசாமியை தி.மு.க பக்கம் இழுத்துவர முயற்சிகள் நடந்தன. ஆனால், அமுல் கந்தசாமி அசைந்து கொடுக்கவில்லை. ‘டார்கெட்’ நேரம் நெருங்குவதால், தற்போது வேலுமணிக்கு நெருக்கமான கட்சி நிர்வாகிகளைக் குறிவைத்திருக்கிறார் செந்தில் பாலாஜி. அதன்படி, வேலுமணியின் வலதுகரமாக அறியப்பட்ட கோவை வடக்கு அ.தி.மு.க எம்.ஜி.ஆர் இளைஞரணிச் செயலாளர் செந்தில் கார்த்திகேயனை, சமீபத்தில் தி.மு.க பக்கம் இழுத்திருக்கிறார்.

தி.மு.க-வில் இணைந்திருக்கும் கோவை செல்வராஜ் மூலமாக, ஓ.பி.எஸ்., எடப்பாடிக்கு ஆதரவான மாவட்ட நிர்வாகிகள் பலரிடமும் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியிருக்கிறது. அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் பலருக்கு, கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதில் அதிருப்தியடைந்திருப்பவர்களுக்கு வலைவிரித்திருக்கிறார் கோவை செல்வராஜ். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க மகளிரணி நிர்வாகிகளை அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் சரியாக மதிப்பதில்லை. அதனால் வருத்தத்தில் இருக்கும் மகளிரணி நிர்வாகிகளிடமும் பேசிவருகிறார் செல்வராஜ். இனி, அ.தி.மு.க-வைச் சேர்ந்த பல நிர்வாகிகள் அறிவாலயத்துக்கு அதிரடியாகத் தாவவிருக்கிறார்கள். இதில், முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கும் வலை விரிக்கப்பட்டிருக்கிறது.

செந்தில் பாலாஜி, ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, மணிகண்டன், ராஜேந்திர பாலாஜி
செந்தில் பாலாஜி, ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, மணிகண்டன், ராஜேந்திர பாலாஜி

சூழும் வழக்குகள்... வலையில் மாஜிக்கள்!

அ.தி.மு.க ஆட்சியில் கால்நடைத்துறை அமைச்சர், அரசு கேபிள் டி.வி சேர்மன் பொறுப்புகளை வகித்தவர் உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன். சமீபத்தில், அரசு கேபிள் டி.வி-யில், ‘செட்டாப் பாக்ஸ்’ தொடர்பாக ஒரு சர்ச்சை ஏற்பட்டது. அது தொடர்பாக அரசு விசாரித்தபோது, ராதாகிருஷ்ணனுக்குத் தொடர்புடைய ஒரு கேபிள் டி.வி நிறுவனத்துக்குப் பல சலுகைகள் அ.தி.மு.க ஆட்சியில் வழங்கப்பட்டது தெரியவந்தது. அதற்கான ஆதாரங்களைத் திரட்டியிருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. இதில் தனக்கு ஏதும் சிக்கல் வந்துவிடக் கூடாது என்ற பதற்றத்தில் இருக்கிறார் ராதாகிருஷ்ணன். கடுமையான நிதி நெருக்கடியிலும் திணறிக்கொண்டிருக்கிறார். இந்தச் சூழலில்தான், அவரை செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து தொடர்புகொண்ட சிலர், தி.மு.க பக்கம் நேசக்கரம் நீட்டும்படி கூறியிருக்கிறார்கள்.

சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சரான சி.விஜயபாஸ்கருக்கு, மத்தியில் சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை தொடங்கி, மாநிலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வரை நாலா பக்கமும் நெருக்கடிதான். மத்திய பா.ஜ.க-வோடு சுமுகமாகச் சென்றால் மட்டுமே, விஜயபாஸ்கரால் ஓரளவுக்கு இந்த நெருக்கடியை எதிர்கொள்ள முடியும். ஆனால், நாளுக்கு நாள் மோசமாகிவரும் அ.தி.மு.க - பா.ஜ.க உறவுநிலை, அவருக்கு அவ்வளவு நம்பிக்கை தருவதாக இல்லை. எடப்பாடியும் முன்புபோல விஜயபாஸ்கருடன் நல்லுறவில் இல்லை. இந்தச் சூழலில்தான், தேவகோட்டையைச் சேர்ந்த தன்னுடைய முன்னாள் உதவியாளர் ஒருவர் மூலமாக, அறிவாலய பூஜைக்காக பூக்களை அனுப்ப ஆயத்தமாகியிருக்கிறார் விஜயபாஸ்கர். அதற்கு, தி.மு.க மேலிடம் இன்னும் ‘ஓ.கே’ சொல்லவில்லை. பேச்சுவார்த்தை மட்டும் நடக்கிறது.

உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன், சி.விஜயபாஸ்கர் இருவருமே தற்போது எம்.எல்.ஏ-க்களாக இருக்கிறார்கள். அவர்கள் தி.மு.க-வில் இணைந்தால், கட்சித் தாவல் தடைச் சட்டப்படி, எம்.எல்.ஏ பதவியை இழக்க நேரிடும். அதற்காக, 2016-ல் தே.மு.தி.க-வில் ஏற்படுத்திய பிளவைப்போல அ.தி.மு.க-வை உடைத்து, போட்டி அ.தி.மு.க-வைச் சட்டமன்றத்தில் நடத்துவது குறித்தும் பேசப்பட்டிருக்கிறது. இதன் மூலம், எடப்பாடியை பலவீனமாக்க முடியுமென்பதால், அறிவாலயமும் தீவிரமாக யோசித்துவருகிறது. இன்னும் சில மாதங்களில் அரசியல் அதிரடிகள் அரங்கேறும்” என்றனர் விலாவாரியாக.

கரைவேட்டி மாற்றும் புள்ளிகள்... ஸ்கெட்ச் போடும் கட்சிகள்!

மணிகண்டனுக்குத் தூது... அறிவாலயத்தின் ‘பவர் பாலிடிக்ஸ்’!

முன்னாள் அமைச்சர் ராமநாதபுரம் மணிகண்டனிடமும் பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருக்கிறதாம் அறிவாலயம். அ.தி.மு.க ஆட்சியின்போது, பெண் விவகாரத்தில் சிக்கிப் பதவியை இழந்தவர் மணிகண்டன். சமீபத்தில்தான், அவர்மீதான புகார் வாபஸ் பெறப்பட்டு, வழக்கு முடித்துவைக்கப்பட்டது. இதற்குப் பின்னணியிலிருந்து உதவியதெல்லாம் ஒரு தி.மு.க வழக்கறிஞர்தானாம். அந்த வழக்கறிஞர் மூலமாக மணிகண்டனைத் தொடர்புகொண்ட தி.மு.க தலைவர்கள் சிலர், “அ.தி.மு.க ஆட்சியிலேயே உங்களைக் கைகழுவிட்டாங்க. அப்பவே உங்களை வழக்கிலிருந்து விடுவிச்சிருக்கலாம். அதைச் செய்யலை. அ.தி.மு.க-வுல முனியசாமி குடும்பத்தை மீறி, ராமநாதபுரத்துல நீங்க லோக்கல் அரசியல் பண்ணவே முடியாது. பேசாம தி.மு.க பக்கம் வந்துடுங்க” என்று தூபம் போட்டிருக்கிறார்கள். மணிகண்டனை தி.மு.க குறிவைப்பதற்குக் காரணங்கள் இருக்கின்றன.

நம்மிடம் பேசிய சீனியர் அமைச்சர் ஒருவர், “ராமநாதபுரத்தில், காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் - அமைச்சர் ராஜகண்ணப்பன் இடையேயான மோதல் உச்சகட்டத்தை நெருங்கிவிட்டது. இருவருமே கட்சித் தலைமையின் குட்புக்கில் இல்லை. மூன்றாவதாக மாவட்ட அரசியலுக்குள் ஒருவர் வந்தால்தான், இவர்களின் கொட்டத்தை அடக்க முடியும் எனத் தலைமை கருதுகிறது. இந்த ‘பவர் பாலிடிக்ஸ்’-க்காக, மணிகண்டனை தி.மு.க-வுக்குக் கொண்டுவர விரும்புகிறது அறிவாலயம். கரைவேட்டியை மாற்றிக் கட்ட, மணிகண்டனும் யோசிக்க ஆரம்பித்துவிட்டார். அதேபோல, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவும் தி.மு.க பக்கம் வருவதற்குத் தயாராகிறார். குட்கா வழக்கில் அவர் பெயர் சி.பி.ஐ குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டிருக்கிறது. தனக்கு அ.தி.மு.க தலைமை ஆதரவுக்கரம் நீட்டும் என ரமணா எதிர்பார்த்த நிலையில், எடப்பாடியின் விரல்கூட அசையவில்லை. வெறுத்துப்போன ரமணா, அமைச்சர் ஆவடி நாசர் மூலமாக அறிவாலயத்துக்குத் தூது அனுப்பியிருக்கிறார். விரைவிலேயே, இணைப்பு விழாக்களால் அண்ணாசாலை பரபரப்பாகப்போகிறது” என்றார்.

மாற்றுக்கட்சியிலிருந்து ஆள் பிடிக்கும் வேலையை தி.மு.க மட்டும் செய்யவில்லை. பா.ஜ.க-வும் ஆரம்பித்திருக்கிறது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம், கமலாலய சீனியர்கள் சிலர் பேசியிருக்கிறார்கள். “இந்துத்துவ உணர்வோட இருக்குற ஒரே அ.தி.மு.க தலைவர் நீங்க மட்டும்தான். பேசாம நம்ம பக்கம் வந்துடுங்க. மோடி ஜி உங்களுக்கான மரியாதையை நிச்சயம் கொடுப்பார்” என்று உத்தரவாதம் அளித்திருக்கிறார்கள். ஆனால், ராஜேந்திர பாலாஜி வைத்த கண்டிஷனில் பேச்சுவார்த்தைக்கு வந்தவர்கள் தலைதெறிக்க ஓடிவிட்டார்களாம்.

கரைவேட்டி மாற்றும் புள்ளிகள்... ஸ்கெட்ச் போடும் கட்சிகள்!

“நம்ம பக்கம் வந்துடுங்க... ரெண்டு தொகுதியைப் பார்த்துக்கங்க..!” - டீல் பேசும் கமலாலயம்

பா.ஜ.க சீனியர் தலைவர்கள் சிலரிடம் பேசினோம். “எல்.முருகன் தலைவர் பொறுப்பிலிருந்தபோதுகூட, வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், திருப்பரங்குன்றம் சரவணன், கு.க.செல்வம் போன்றவர்கள் கமலாலயத்தோடு இணைந்தனர். கட்சியின் மாநிலத் தலைவராக அண்ணாமலை பதவியேற்ற பிறகு, மாற்றுக்கட்சியிலிருந்து சொல்லிக்கொள்ளும் வகையில் சீனியர்கள் யாரும் பா.ஜ.க-வில் இணையவில்லை. இந்தக் குறையைக் களைவதற்குத்தான், ராஜேந்திர பாலாஜிக்கு வலை விரிக்கப்பட்டது. ஆனால் அவரோ, ‘நான் ரெடி. மாநிலத் தலைவர் பதவியை எனக்குத் தந்துடணும். நான் சொல்ற ஆட்களுக்குத்தான் பதவி போடணும். சரின்னா சொல்லுங்க வந்துடுறேன்’ என்று தடாலடியாக கண்டிஷன் போட்டார். இதை, வலை விரிக்கச் சென்ற தூதர்கள் எதிர்பார்க்கவில்லை. அவர் காமெடியாகப் பேசினாரா, சீரியஸாகப் பேசினாரா என்பதே இன்னும் புரியவில்லை.

இரண்டு தனியார் பல்கலைக்கழக வேந்தர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பா.ஜ.க தரப்பிலிருந்து சென்றவர்கள், ‘நம்ம பக்கம் வந்துடுங்க. ஆளுக்கு ஒரு சீட் தந்துடுறோம். கட்சியிலேயும் கெளரவமான பதவி கிடைக்க நாங்க கியாரன்டி. அதற்கு பதிலா, ரெண்டு நாடாளுமன்றத் தொகுதிக்கான செலவுகளைப் பார்த்துக்கங்க’ என்று டீல் பேசியிருக்கிறார்கள். இருவருமே இன்னும் முடிவைத் தெரிவிக்கவில்லை. இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பாரிவேந்தரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர் விவரமாக, ‘கட்சியில் இணைய விரும்பவில்லை. கூட்டணியாக வேணும்னா இருப்போம்’ என்று நழுவிவிட்டார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, முக்கிய வி.ஐ.பி-க்களைக் கட்சியில் இணைத்து, டெல்லியில் நல்ல பெயர் எடுக்கத் தீவிரமாகிறது அண்ணாமலைத் தரப்பு. ஆனால், வலையில் சின்னச் சின்ன மீன்களைத் தவிர பெரிதாக ஒரு தலையும் இதுவரை சிக்கவில்லை” என்றனர் ஆற்றாமையுடன்.

‘ஸ்கெட்ச்’ பின்னணி என்ன?

அரசியல் கட்சிகளின் இந்த ஆள்பிடிப்பு வேலையில், பல சீரியஸ் நகர்வுகள் தென்படுகின்றன. பா.ம.க-வின் வட மாவட்ட நிர்வாகக் கட்டமைப்புகளை பா.ஜ.க உடைப்பதாகக் கருதுகிறது தைலாபுரம். கடந்த ஆறு மாதங்களில் மட்டும், ஜெயங்கொண்டம் முன்னாள் பா.ம.க ஒன்றியச் செயலாளர் புல்லட் பாஸ்கரன், திருப்பத்தூர் மாவட்டம் சொரக்கல் நத்தம் கிராமத்தில் ஆஞ்சிகுமார் தலைமையில் 30 பேர், விழுப்புரம் மாவட்டம் மூகையூர் வடக்கு ஒன்றியத்தில் வடிவேல் சிவக்குமார் தலைமையில் 25 பேர் எனப் பல ஊர்களில் பா.ம.க-வினர், பா.ஜ.க பக்கம் தாவியிருக்கிறார்கள். அரியலூர், திருப்பத்தூர், விழுப்புரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை மாவட்டங்களில், பா.ம.க நிர்வாகிகள், தொண்டர்களை அந்தக் கட்சியிலிருந்து பா.ஜ.க பக்கம் இழுத்துவர, தீவிரமாக ஆட்களை இறக்கியிருக்கிறது கமலாலயம். விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்துதான், கடந்த ஜூன் மாதம் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், “நம் கட்சி இளைஞர்கள் பா.ஜ.க பக்கம் செல்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும்” எனக் காட்டமாகப் பேசினார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ். கமலாலயத்துக்கு ‘ஷாக்’ கொடுக்கும்விதமாக, பா.ஜ.க-விலிருந்த முன்னாள் எம்.எல்.ஏ ரவிராஜை, பா.ம.க பக்கமும் சமீபத்தில் இழுத்திருக்கிறார். இரண்டு கட்சிகளும், ‘ஸ்கெட்ச்’ போட்டு மற்றொரு கட்சியிலிருந்து ஆட்களை இழுப்பது வட மாவட்டங்களில் அனலைக் கிளப்பியிருக்கிறது.

ஆட்களைத் தட்டித் தூக்கும் வேலையில், அ.தி.மு.க-வும் சளைக்கவில்லை. பன்னீர் அணியிலிருக்கும் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனிடம் பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருக்கிறது எடப்பாடி தரப்பு. “நேத்து வந்த கன்னியாகுமரி கோலப்பனுக்கு அமைப்புச் செயலாளர் பதவி கொடுக்குறாங்க. சீனியரான உங்களுக்கும் அதே பதவியைத்தான் கொடுக்குறாங்க. மரியாதையைக் கெடுத்துக்கிட்டு, நீங்க அங்க இருக்கணுமா?” என தூபம் போட்டிருக்கிறார்கள் தூது சென்றவர்கள். மகுடிக்கு மயங்க ஆரம்பித்துவிட்டாராம் வெல்லமண்டி.

தி.மு.க-வுக்கு, கொங்கு மண்டலத்தைப் பலப்படுத்த வேண்டும்; எதிர்க்கட்சியை பலவீனப்படுத்த வேண்டும். அ.தி.மு.க-வுக்கு எதிர்க்கட்சி அரசியலைத் தீவிரப்படுத்த வேண்டும்; பா.ஜ.க - தி.மு.க-விடமிருந்து தற்காத்துக்கொள்ள வேண்டும். பா.ஜ.க-வில் அண்ணாமலை, தன் தலைமையை நிரூபிக்க வேண்டும். பா.ம.க-வுக்கு வட மாவட்டங்களில் இருப்பையாவது தக்கவைத்துக்கொள்ள வேண்டும்... இப்படி, ஒவ்வோர் அரசியல் கட்சிக்கும் ஒவ்வோர் அரசியல் கணக்கு இருக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குள் இந்த அரசியல் கணக்குகளைச் சரிக்கட்டி, தேர்தல் வேலையைத் தொடங்க தீவிரமாகின்றன கட்சிகள். ஆள்பிடிப்பு சீஸன் ஆரம்பமாகிவிட்டது. என்ன கொடுத்தும், யாரைத் தூக்கவும் அதிரடி ஸ்கெட்ச்சுகளைப் போடுகின்றன கட்சிகள். ஆட்களைத் தக்கவைத்துக்கொள்வது அவரவர் பாடு!