சினிமா
தொடர்கள்
Published:Updated:

ஆரம்பிக்கலாங்களா? - குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க - எதிர்க்கட்சிகள் போட்டி

குடியரசுத் தலைவர் தேர்தல்
பிரீமியம் ஸ்டோரி
News
குடியரசுத் தலைவர் தேர்தல்

தேசிய ஜனநாயகக் கூட்டணி நிறுத்தும் வேட்பாளரே தேர்வு பெறுவார் என்றாலும், அது எளிதாகக் கிடைத்துவிடக்கூடிய வெற்றியாக இல்லை

அது வெறும் அலங்காரப் பதவிதான். மத்திய அரசின் முடிவுகளுக்கு எப்போதும் ஒப்புதல் தரும் ‘ரப்பர் ஸ்டாம்ப்' என்று கருதப்படும் நாற்காலிதான். என்றாலும், ‘குடியரசுத் தலைவர்' என்ற பதவி பெரும் கௌரவத்தைப் பெற்றிருக்கிறது. இந்தியாவின் முதல் குடிமகன் அவர்தான். இந்திய அரசின் எல்லா முடிவுகளும் அவர் பெயரால்தான் எடுக்கப்படுகின்றன.

இந்தியாவின் முதல் குடிமகனைத் தேர்வுசெய்வதற்கான பணிகள் பரபரப்பாக நடைபெற்றுவருகின்றன. இது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு தேர்தல் என்பதைத் தாண்டி, ஆளுங்கட்சியின் செல்வாக்கு, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை ஆகியவற்றை உரசிப் பார்ப்பதற்கான, உறுதிசெய்வதற்கான களமாகவும் அமையப்போகிறது.

ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைவதால், புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்குச் சில மாதங்களுக்கு முன்பிருந்தே, வேட்பாளரைத் தேடும் பணியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் இறங்கினர். இன்னொருபுறம், பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசத் தொடங்கினர்.

ஆரம்பிக்கலாங்களா? - குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க - எதிர்க்கட்சிகள் போட்டி
ஆரம்பிக்கலாங்களா? - குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க - எதிர்க்கட்சிகள் போட்டி

தங்கள் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுவதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோருடன் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருப்பதால், எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸின் மாநிலங்களவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே களமிறக்கப்பட்டார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி நிறுத்தும் வேட்பாளரே தேர்வு பெறுவார் என்றாலும், அது எளிதாகக் கிடைத்துவிடக்கூடிய வெற்றியாக இல்லை. காரணம், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்குகள் சற்றுக் குறைவாக இருக்கின்றன. சமீபத்தில் நடைபெற்ற உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. எனவே, அதன் வாக்கு பலம் சற்று சரிந்திருக்கிறது.

மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டமன்றங்களில் இருக்கும் நியமன உறுப்பினர்களுக்கு இந்தத் தேர்தலில் வாக்குரிமை இல்லை. எனவே, 233 மாநிலங்களவை உறுப்பினர்கள், 543 மக்களவை உறுப்பினர்கள் என 776 நாடாளுமன்ற உறுப்பினர்களும், இந்தியா முழுக்க 4,033 சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்கவிருக்கிறார்கள். ஒவ்வோர் உறுப்பினரின் வாக்குக்கும் மதிப்புகள் உண்டு. உதாரணமாக, ஒரு எம்.பி-யின் வாக்கு 700 மதிப்பு கொண்டது. எம்.எல்.ஏ-வின் வாக்கு மதிப்புகளைப் பொறுத்த அளவில், ஒரு மாநிலத்தின் மக்கள்தொகை, அந்த மாநில சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். 1971-ம் ஆண்டின் மக்கள் தொகை அடிப்படையிலேயே இதைத் தீர்மானிக்கிறார்கள்.

நரேந்திர மோடி, ஜெ.பி.நட்டா, அமித்ஷா
நரேந்திர மோடி, ஜெ.பி.நட்டா, அமித்ஷா

நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் எம்.எல்.ஏ-க்களுக்கு வாக்கு மதிப்பு அதிகம். ஒரு எம்.எல்.ஏ-வுக்கு வாக்கு மதிப்பு 208. அடுத்தபடியாக தமிழகம் மற்றும் ஜார்க்கண்ட் எம்.எல்.ஏ-க்களின் வாக்கு மதிப்பு 176 ஆக இருக்கிறது. சிக்கிம் மாநில எம்.எல்.ஏ ஒருவரின் வாக்கு மதிப்பு வெறும் 7 மட்டுமே! மிசோரம், அருணாசலப் பிரதேச எம்.எல்.ஏ-க்களின் வாக்கு மதிப்பு 8.

தற்போதைய நிலைப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 5,26,420 வாக்கு மதிப்பையும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2,59,892 வாக்கு மதிப்பையும், ஆம் ஆத்மி கட்சி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், இடதுசாரிகள், சமாஜ்வாதி கட்சி போன்ற எந்த அணியையும் சாராத கட்சிகள் 2,92,894 வாக்கு மதிப்பையும் கொண்டிருக்கின்றன. குடியரசுத் தலைவர் தேர்தலின் மொத்த வாக்கு மதிப்பு 10,79,206.

பா.ஜ.க கூட்டணியின் மொத்த வாக்கு மதிப்பு 5,26,420 என்றால், பா.ஜ.க கூட்டணியில் இல்லாத மற்ற எல்லாக் கட்சிகளின் ஒட்டுமொத்த வாக்கு மதிப்பு 5,52,786. இந்த எல்லாக் கட்சிகளும் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்தினால், அவர் வெல்ல முடியும். ஆனால், அப்படி நடக்காது என்பதுதான் அரசியல் சூழல்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் வெற்றிபெற வேண்டுமென்றால், கூடுதலான வாக்குகள் தேவை. எனவே, தனது வேட்பாளரின் வெற்றியை உறுதிசெய்வதற்காக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவை பா.ஜ.க நம்பியிருக்கிறது. பிஜு ஜனதா தளம் 31,686 வாக்கு மதிப்புகளையும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 43,450 வாக்கு மதிப்புகளையும் கொண்டிருக்கின்றன. இந்த இரண்டு கட்சிகளும் காங்கிரஸிலிருந்தும், பிற எதிர்க்கட்சிகளிடமிருந்தும் வெகுதூரம் விலகி இருப்பவை.

சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, சீதாராம் யெச்சூரி, சரத் பவார்
சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, சீதாராம் யெச்சூரி, சரத் பவார்


பிற கட்சிகளின் வாக்குகளைத் திரட்டும் அதே நேரத்தில், வேட்பாளர் தேடுதலிலும் கட்சிகள் மும்முரம் காட்டிவருகின்றன. 2017-ல் நடைபெற்ற குடியரசுத்தலைவர் தேர்தலில் பட்டியலினத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் பட்டியலினத்தைச் சேர்ந்த மீரா குமாரை வேட்பாளராக நிறுத்தியது. 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான உத்தியாக உ.பி-யைச் சேர்ந்த தலித் ஒருவரை வேட்பாளராகத் தேர்வுசெய்த பா.ஜ.க., 2024 நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து, தற்போது எப்படியான வேட்பாளரைத் தேர்வுசெய்யும் என்ற கேள்வியுடன் அரசியல் அரங்கில் விவாதங்கள் நடைபெறுகின்றன. இந்த முறையும் பட்டியலின, பழங்குடியின, அல்லது இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை தனது வேட்பாளராக தேசிய ஜனநாயகக் கூட்டணி நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒடிசாவிலிருந்து பழங்குடியினத் தலைவர் ஒருவரை வேட்பாளர் ஆக்கினால், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைப் பெற முடியும் என்று பா.ஜ.க தலைவர்கள் கணக்குப் போடுகிறார்கள். இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள குஜராத்திலும் பழங்குடியினர் அதிகம். அந்தத் தேர்தலிலும் இந்த முடிவு கைகொடுக்கும் என நம்புகிறார்கள்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகித்தாலும், தற்போதைய நிலையில் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இல்லை. எனவே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்பு இல்லை. ‘மதச்சார்பற்ற, முற்போக்கு எண்ணம் கொண்ட ஒரு பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டும்' என்று இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சொல்லிவருகின்றன. எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவார் நிறுத்தப்படுவார் என்று செய்திகள் வெளியாகின. ஒரு காலத்தில் பிரதமர் நாற்காலிக்கே கனவு கண்ட சரத் பவார், வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இல்லாத காரணத்தால் தயங்குகிறார். ஆனால், அவரைத் தாண்டியும் எதிர்க்கட்சிகள் மத்தியில் இணக்கமான வரவேற்பைப் பெறக்கூடிய வேறு தலைவர் யாரும் இல்லை என்பதுதான் உண்மை. ஒரு பக்கம் காங்கிரஸ், இன்னொரு பக்கம் மம்தா பானர்ஜி என்று இருவருமே ஆதரிக்கக்கூடியவராக பவார் இருக்கிறார்.

குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருடன் சோனியா காந்தி தொலைபேசியில் பேசினார். ஆனாலும், மம்தா பானர்ஜி தனியாக ரூட் போட்டுவருகிறார். குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முதல்வர்களுக்கும் தலைவர்களுக்கும் அவர் கடிதம் எழுதினார். காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா போன்ற கட்சிகள் காங்கிரஸ்மீது அதிருப்தியில்தான் இருக்கின்றன. இப்படிப்பட்ட கட்சிகளைத் தன் பக்கம் வளைக்கப் பார்க்கிறார் மம்தா பானர்ஜி. அதே நேரத்தில் காங்கிரஸுடன் இணக்கமாக இருக்கும் தி.மு.க போன்ற கட்சிகளையும் சலனப்படுத்த முயல்கிறார். ‘‘இந்த முயற்சி எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பாதிக்கும். பா.ஜ.க-வுக்கு சாதகமாக அமையும்'' என்று சீதாராம் யெச்சூரி எச்சரித்தார். என்றாலும், மம்தா தன் முயற்சியை நிறுத்துவதாக இல்லை.

நவீன் பட்நாயக், ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரசேகர ராவ், அரவிந்த் கெஜ்ரிவால்
நவீன் பட்நாயக், ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரசேகர ராவ், அரவிந்த் கெஜ்ரிவால்

காங்கிரஸுக்கு மாற்றாக வலுவான தேசியக் கட்சியாகத் தங்களை நிலைநிறுத்த முயற்சி செய்யும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தனி ஆவர்த்தனம் செய்வதில்தான் விருப்பமாக இருக்கிறார்.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இந்தக் குடியரசுத் தலைவர் தேர்தல் என்பது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை நிரூபிப்பதற்கான ஒரு சோதனைக்களமாக இருக்கப்போகிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றுபடுவது அவ்வளவு எளிதான ஒன்றாகத் தெரியவில்லை. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, பா.ஜ.க-வை கடுமையாக எதிர்க்கிறது. அதே அளவுக்கு காங்கிரஸையும் அந்தக் கட்சி எதிர்க்கிறது. ஆம் ஆத்மி கட்சியும் இதேபோன்ற மனநிலையில் இருக்கிறது. இந்தச் சூழலில், பொது வேட்பாளரை எதிர்க்கட்சிகள் நிறுத்துவது சவாலான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

****

தமிழகத்தின் பங்கு என்ன?

காங்கிரஸ் கூட்டணியைப் பொறுத்தவரை மக்களவை, மாநிலங்களவைக்கு அடுத்தபடியாக அதிக வாக்கு மதிப்பு இருப்பது தமிழகத்தில்தான்! தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களுடைய வாக்கு மதிப்பு 27,984. இதைத் தாண்டி இரண்டு அவைகளிலும் தி.மு.க-வின் 34 எம்.பி-க்களின் வாக்கு மதிப்பு 23,800.

இதேபோல பா.ஜ.க கூட்டணிக்கும் தமிழகம் முக்கியமானது. கடந்த முறை கூட்டணியில் இருந்த சிவசேனா, சிரோமணி அகாலி தளம் போன்ற பெரிய கட்சிகள் கூட்டணியிலிருந்து விலகிவிட்ட நிலையில், பீகாரை ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தை அடுத்து பெரிய கூட்டணிக் கட்சி அ.தி.மு.க மட்டுமே! அந்த வகையில் தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணிக்கு 13,200 வாக்கு மதிப்பு கிடைக்கும். இரண்டு அவைகளிலும் சேர்த்து அ.தி.மு.க-வுக்கு ஐந்து எம்.பி-க்கள் உள்ளனர். இவர்களைத் தவிர ஜி.கே.வாசனும் இருக்கிறார்.

ஐந்து எம்.எல்.ஏ-க்களையும் ஒரு எம்.பி-யையும் வைத்திருக்கும் பா.ம.க என்ன செய்யப்போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.