Published:Updated:

சோனியாவின் சைலன்ஸ்... மம்தாவின் வேகம்... மோடியின் சர்ப்ரைஸ் - க்ளைமாக்ஸை நெருங்கும் ஜனாதிபதி தேர்தல்

க்ளைமாக்ஸை நெருங்கும் ஜனாதிபதி தேர்தல்
பிரீமியம் ஸ்டோரி
க்ளைமாக்ஸை நெருங்கும் ஜனாதிபதி தேர்தல்

மம்தா பானர்ஜி கூட்டிய கூட்டத்தில் சில ஆச்சர்யங்கள் உண்டு. பா.ஜ.க-வுக்கு அடுத்ததாக ஜனாதிபதி தேர்தலில் அதிக வாக்குகள்கொண்ட கட்சியாக காங்கிரஸ் திகழ்கிறது.

சோனியாவின் சைலன்ஸ்... மம்தாவின் வேகம்... மோடியின் சர்ப்ரைஸ் - க்ளைமாக்ஸை நெருங்கும் ஜனாதிபதி தேர்தல்

மம்தா பானர்ஜி கூட்டிய கூட்டத்தில் சில ஆச்சர்யங்கள் உண்டு. பா.ஜ.க-வுக்கு அடுத்ததாக ஜனாதிபதி தேர்தலில் அதிக வாக்குகள்கொண்ட கட்சியாக காங்கிரஸ் திகழ்கிறது.

Published:Updated:
க்ளைமாக்ஸை நெருங்கும் ஜனாதிபதி தேர்தல்
பிரீமியம் ஸ்டோரி
க்ளைமாக்ஸை நெருங்கும் ஜனாதிபதி தேர்தல்

ஒரு பொதுத்தேர்தல் குழப்பமான முடிவைத் தந்தால், யாரை ஆட்சிப் பொறுப்பேற்க அழைப்பது என்று முடிவெடுக்கும் உரிமை ஜனாதிபதிக்குத்தான் இருக்கிறது. தூக்குக்கயிற்றின் நிழலில் ஜீவமரணப் போராட்டம் நடத்தும் ஒரு கைதியின் கருணை மனுவைப் பரிசீலித்து அவருக்குப் பொதுமன்னிப்பு வழங்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இருக்கிறது. ‘ரப்பர் ஸ்டாம்ப்’ என்று சொன்னாலும், இந்தியாவின் கௌரவத்தைத் தாங்கி நிற்பது ஜனாதிபதி பதவி. அதனால்தான் ஜனாதிபதி தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது!

இம்முறை அதற்குக் கூடுதல் முக்கியத்துவங்கள் உண்டு. பா.ஜ.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் இயங்குவது குறித்து பேசப்பட்டுவரும் நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலை யார் யார் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதைத் தீர்மானிப்பதாக ஜனாதிபதி தேர்தல் இருக்கும். ஏற்கெனவே மிக மோசமாக பலவீனமடைந்து கிடக்கும் காங்கிரஸ் கட்சிக்கு என்ன மதிப்பு இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் தேர்தலாகவும் இது இருக்கிறது.

சோனியாவின் சைலன்ஸ்... மம்தாவின் வேகம்... மோடியின் சர்ப்ரைஸ் - க்ளைமாக்ஸை நெருங்கும் ஜனாதிபதி தேர்தல்

தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது. எனவே, புதிய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போனில் ஆலோசனை நடத்தினார்.

ஆனால், காங்கிரஸ் கட்சியுடன் கூட இருக்கும் ஒரு சாதாரணக் கட்சித் தலைவராக இருக்க விரும்பவில்லை மம்தா. சோனியாவைத் தாண்டி அவர் வேகம் காட்டினார். ‘இந்தியாவின் எதிர்கால அரசியல் போக்கைத் தீர்மானிப்பதற்கு இதுவே பொருத்தமான தருணம். முற்போக்கு எண்ணம் கொண்ட எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும்’ என்று 22 கட்சிகளின் தலைவர்களுக்குக் கடிதம் எழுதி, எல்லோரையும் டெல்லியில் ஒரு கூட்டத்துக்கு வரச் சொன்னார். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை, தான் கெடுத்ததாக ஆகிவிடக் கூடாது என்று சோனியா ஒதுங்கிக்கொண்டு மம்தாவுக்கு வழிவிட்டார். மம்தா கூட்டிய கூட்டத்துக்கு காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அனுப்பிவைத்தார். சோனியாவுக்கு கொரோனா வந்தது, நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் ராகுல் காந்தி சிக்கியது என்று தொடர் பின்னடைவுகளால் காங்கிரஸ் கட்சியால் இந்த விஷயத்தில் முழு கவனம் செலுத்த முடியவில்லை என்பதும் உண்மை.

மம்தா பானர்ஜி கூட்டிய கூட்டத்தில் சில ஆச்சர்யங்கள் உண்டு. பா.ஜ.க-வுக்கு அடுத்ததாக ஜனாதிபதி தேர்தலில் அதிக வாக்குகள்கொண்ட கட்சியாக காங்கிரஸ் திகழ்கிறது. என்றாலும், மம்தா கூட்டத்தில் அது பங்கேற்றது. தன் கூட்டணிக் கட்சிகளையும் பங்கேற்கவைத்தது. சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தி.மு.க சார்பில் டி.ஆர்.பாலு ஆகியோரும் பங்கேற்றனர்.

சோனியாவின் சைலன்ஸ்... மம்தாவின் வேகம்... மோடியின் சர்ப்ரைஸ் - க்ளைமாக்ஸை நெருங்கும் ஜனாதிபதி தேர்தல்

எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாததையும் இந்தக் கூட்டம் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை மம்தா அழைக்கவே இல்லை. அவரால் அழைக்கப்பட்ட தெலங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவரான தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் செல்லவில்லை. ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செல்லவில்லை. பிஜு ஜனதா தளத் தலைவரும், ஒடிசா முதல்வருமான நவீன் பட்நாயக் இப்படிப்பட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணியையே விரும்புவதில்லை. காங்கிரஸ் இருப்பதால், இந்தக் கூட்டத்தை சிரோமணி அகாலி தளம் புறக்கணித்தது. மம்தா கூட்டிய கூட்டம் என்பதால், இடதுசாரிகள் செல்லவில்லை. இதையெல்லாம் தாண்டி, 17 கட்சிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தின் முடிவில் தீர்மானத்தை எப்படி வடிவமைப்பது என்பதிலேயே கட்சித் தலைவர்கள் மத்தியில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

யார் வேட்பாளர் என்பதிலும் இவர்களிடையே குழப்பம். சரத் பவாரை வேட்பாளராக நிறுத்த விரும்பினார் மம்தா. ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவரான சஞ்சய் சிங் சமீபத்தில் பவாரை சந்தித்துப் பேசினார். கிட்டத்தட்ட அவரை ஆதரிக்கும் மனநிலைக்கு ஆம் ஆத்மி வந்திருந்தது. ஆனால், பவார் தேர்தலில் நிற்க மறுத்துவிட்டார். இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, மகாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி ஆகியோரின் பெயரைப் பரிசீலிக்கின்றன எதிர்க்கட்சிகள்.

மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டமன்றங்களில் இருக்கும் நியமன உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி தேர்தலில் வாக்குரிமை இல்லை. எனவே, 233 மாநிலங்களவை உறுப்பினர்கள், 543 மக்களவை உறுப்பினர்கள் என 776 நாடாளுமன்ற உறுப்பினர்களும், இந்தியா முழுக்க 4,033 சட்டமன்ற உறுப்பினர்களும் இந்தத் தேர்தலில் வாக்களிக்கப்போகிறார்கள். உறுப்பினர்களின் வாக்குகள் அவர்களின் நிலையைப் பொறுத்து மாறும். ஒரு எம்.பி-யின் வாக்கு 700 மதிப்பு கொண்டது. எம்.எல்.ஏ-வின் வாக்கு மதிப்பு ஒவ்வொரு மாநிலத்துக்கும் மாறுபடும். மக்கள்தொகை அதிகம்கொண்ட பெரிய மாநிலமான உத்தரப்பிரதேச எம்.எல்.ஏ ஒருவரின் வாக்கு மதிப்பு 208. தமிழக எம்.எல்.ஏ ஒருவரின் வாக்கு மதிப்பு 176. சிறிய மாநிலமான சிக்கிம் எம்.எல்.ஏ ஒருவரின் வாக்கு மதிப்பு வெறும் 7 மட்டுமே!

குடியரசுத் தலைவர் தேர்தலின் மொத்த வாக்கு மதிப்பு 10,79,206. தேசிய ஜனநாயகக் கூட்டணி 5,26,420 வாக்கு மதிப்பையும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2,59,892 வாக்கு மதிப்பையும், ஆம் ஆத்மி கட்சி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், இடதுசாரிகள், சமாஜ்வாடி கட்சி போன்ற எந்த அணியையும் சாராத கட்சிகள் 2,92,894 வாக்கு மதிப்பையும் கொண்டிருக்கின்றன. பா.ஜ.க கூட்டணியின் மொத்த வாக்கு மதிப்பு 5,26,420 என்றால், மற்ற எல்லாக் கட்சிகளின் ஒட்டுமொத்த வாக்கு மதிப்பு 5,52,786. இந்த எல்லாக் கட்சிகளும் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்தினால், அவர் வெல்ல முடியும். ஆனால், அப்படி நடப்பது சாத்தியம் இல்லை என்பதால், பா.ஜ.க உற்சாகமாக இருக்கிறது. 31,686 வாக்கு மதிப்புகளைக்கொண்ட பிஜு ஜனதா தளம், 43,450 வாக்கு மதிப்புகளைக் கொண்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எப்படியும் எதிர்க்கட்சிக் கூட்டணியில் இணையாது என்பது பா.ஜ.க-வின் நம்பிக்கை. எனவே, பா.ஜ.க வேட்பாளரின் வெற்றி பிரகாசமாக இருக்கிறது என்பதே இப்போதைய நிலை.

வெங்கைய நாயுடு , திரௌபதி முர்மு, ஜுவல் ஓரம், ஆரிஃப் முகமது கான், தாவர்சந்த் கெலாட்
வெங்கைய நாயுடு , திரௌபதி முர்மு, ஜுவல் ஓரம், ஆரிஃப் முகமது கான், தாவர்சந்த் கெலாட்

பா.ஜ.க யாரை வேட்பாளராக நிறுத்தப்போகிறது என்று பல யூகங்கள் வெளியாகின்றன. எல்லாத் தருணங்களிலும் சர்ப்ரைஸ் சாய்ஸ்களை அறிவிக்கும் பிரதமர் நரேந்திர மோடி, இம்முறையும் ஒரு சர்ப்ரைஸ் வேட்பாளரை அறிவிக்கக்கூடும். தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு இன்னொரு வாய்ப்பு தரப்படுமா, உடல்நலப் பிரச்னைகளைத் தாண்டி துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு நிறுத்தப்படுவாரா என்றெல்லாம் பேச்சுகள் அடிபடுகின்றன. ஒடிசாவைச் சேர்ந்த பா.ஜ.க மூத்த தலைவர்கள் திரௌபதி முர்மு, ஜுவல் ஓரம் ஆகியோரும் சாய்ஸில் இருக்கிறார்கள். இருவருமே பழங்குடி இனத்தவர். பழங்குடி இனத்திலிருந்து ஒருவரை முதன்முறையாக ஜனாதிபதி ஆக்குவதற்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தரும். ஒடிசாவிலிருந்து என்றால், பிஜு ஜனதா தளம் ஆதரவும் கிடைக்கும் என்று கணக்கு போடுகிறார்கள் பா.ஜ.க மூத்த தலைவர்கள். இவர்களைத் தாண்டி கேரள கவர்னர் ஆரிஃப் முகமது கான், கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் ஆகியோரும் பரிசீலிக்கப்படுகிறார்கள்.

ஜனாதிபதி தேர்தல் குறித்து பா.ஜ.க தரப்பிலிருந்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் பேசினார். எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யார் என்று பிரதமர் அறிய விரும்புவதாக ராஜ்நாத் சிங் கேட்க, ‘`உங்கள் வேட்பாளர் யார் என்று எங்களிடம் சொல்ல முடியுமா?’’ என்று கார்கே பதிலுக்குக் கேட்டிருக்கிறார். “ஒருமித்த கருத்துடன், எந்தச் சர்ச்சையும் இல்லாத ஒரு வேட்பாளரை நாங்கள் நிறுத்தினால், அவரை பா.ஜ.க ஆதரிக்குமா?’’ என்றும் கார்கே விசாரித்திருக்கிறார்.

உண்மையில் பா.ஜ.க எதிர்க்கட்சிகளுக்கும் இணக்கமான ஒரு வேட்பாளரை நிறுத்த விரும்புகிறதா அல்லது வெறுமனே சம்பிரதாயத்துக்காக காங்கிரஸிடம் விசாரித்தார்களா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism