Published:Updated:

குடியரசுத் தலைவர் தேர்தல்... வாக்கு சதவிகிதம் குறைந்த பா.ஜ.க... பலம்பெற்ற எதிர்க்கட்சிகள்...

அமித் ஷா, மோடி
பிரீமியம் ஸ்டோரி
அமித் ஷா, மோடி

வெல்லப்போவது யார்?

குடியரசுத் தலைவர் தேர்தல்... வாக்கு சதவிகிதம் குறைந்த பா.ஜ.க... பலம்பெற்ற எதிர்க்கட்சிகள்...

வெல்லப்போவது யார்?

Published:Updated:
அமித் ஷா, மோடி
பிரீமியம் ஸ்டோரி
அமித் ஷா, மோடி

வரும் ஜூலை 25-ம் தேதியோடு இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இந்த நிலையில், ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பா.ஜ.க-வின் வாக்கு சதவிகிதம் குறைந்திருப்பதாலும், எதிர்க்கட்சிகளின் வாக்கு சதவிகிதம் அதிகரித்திருப்பதாலும் இந்த விவகாரத்தில் இப்போதே அரசியல் காய்நகர்த்தல்கள் தொடங்கிவிட்டன. இதில் வெல்லப்போவது எதிர்க்கட்சிகளா, பா.ஜ.க-வா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக எழுந்திருக்கிறது!

நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தலில், பஞ்சாப் தவிர மற்ற நான்கு மாநிலங்களிலும் ஆட்சி அமைத்திருக்கிறது பா.ஜ.க. ஆனாலும், அந்த மாநிலங்களில் கடந்த முறைபோல அமோக வெற்றிபெறவில்லை என்பதால், குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க-வுக்குப் பின்னடைவு ஏற்படும் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். அதனாலேயே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ``ஆட்டம் இன்னும் முடியவில்லை. நான்கு மாநிலங்களில் பா.ஜ.க வெற்றிபெற்றிருந்தாலும், குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெறுவது பா.ஜ.க-வுக்கு எளிதாக இருக்காது’’ என்று அனலைக் கிளப்பியிருக்கிறார்.

குடியரசுத் தலைவர் தேர்தல்... வாக்கு சதவிகிதம் குறைந்த பா.ஜ.க... பலம்பெற்ற எதிர்க்கட்சிகள்...

அதிகரித்த எதிர்க்கட்சிகளின் பலம்!

இந்திய நாடாளுமன்றத்தின் 543 மக்களவை எம்.பி-க்கள், 233 மாநிலங்களவை எம்.பி-க்கள், அனைத்து மாநில சட்டமன்றங்களிலுள்ள 4,120 எம்.எல்.ஏ-க்களின் வாக்குகள் மூலமே இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஒவ்வொரு எம்.பி., எம்.எல்.ஏ-க்களின் வாக்குகளுக்கும், அந்தந்த மாநில மக்கள்தொகை அடிப்படையில் குறிப்பிட்ட மதிப்பெண் உண்டு. அந்த மதிப்பெண்தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்கு மதிப்பாகக் கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் ஐந்து மாநிலங்களின் தேர்தல்களுக்கு முன்பாக, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 49.9 சதவிகித வாக்கு மதிப்பு இருந்தது. ஆனால், ஐந்து மாநிலத் தேர்தல்களுக்குப் பிறகு, பா.ஜ.க-வின் வாக்கு மதிப்பு மேலும் ஒரு சதவிகிதம் குறைந்திருக்கிறது. குடியரசுத் தலைவராக ஒருவர் வெற்றிபெற, 50.1 சதவிகித வாக்குகள் தேவை. ஆனால், 51 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகள் எதிர்க்கட்சிகளின் வசமிருப்பதால், பா.ஜ.க விரும்பும் ஒருவர் குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்படுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த 2017 குடியரசுத் தலைவர் தேர்தலின்போது பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 65.5 சதவிகித வாக்குகள் இருந்தன. அப்போது பா.ஜ.க-வுடன் கூட்டணியிலிருந்த சிரோமணி அகாலி தளம், சிவசேனா உள்ளிட்ட சில கட்சிகள் தற்போது பா.ஜ.க-வுக்கு எதிராக நிற்கின்றன. 2017-ல் பா.ஜ.க-வின் குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு ஆதரவளித்த தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியும், தற்போது பா.ஜ.க-வோடு மோதிக்கொண்டிருக்கிறது.

குடியரசுத் தலைவர் தேர்தல்... வாக்கு சதவிகிதம் குறைந்த பா.ஜ.க... பலம்பெற்ற எதிர்க்கட்சிகள்...

குடியரசுத் தலைவருக்கான தேர்தலில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ-க்களின் பங்கு மட்டுமே 12.7 சதவிகிதம். ஆனால், கடந்த முறை உ.பி-யில் 312 எம்.எல்.ஏ-க்களை வைத்திருந்த பா.ஜ.க-வுக்கு, 2022 சட்டமன்றத் தேர்தலில் 255 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே கிடைத்திருக்கிறார்கள். அங்கு கூட்டணிக் கட்சிகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டாலும், 273 எம்.எல்.ஏ-க்கள்தான் இருக்கிறார்கள். தவிர, எதிர்க்கட்சியான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கு 125 எம்.எல்.ஏ-க்கள் கிடைத்திருப்பதும், பா.ஜ.க-வுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும். அதேபோல கோவாவில், பா.ஜ.க-வின் பலம் 28 எம்.எல்.ஏ-க்களிலிருந்து 20 எம்.எல்.ஏ-க்களாகக் குறைந்திருக்கிறது. மணிப்பூரில் 36-லிருந்து 32 எம்.எல்.ஏ-க்களாகவும், உத்தரகாண்ட்டில் 56-லிருந்து 47 எம்.எல்.ஏ-க்களாகக் குறைந்திருப்பதும் பா.ஜ.க-வுக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் சறுக்கலை ஏற்படுத்தும்.

ரேஸில் இருப்பவர்கள் யார்?

முன்னாள் மகாராஷ்டிர முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவாரை வேட்பாளராக முன்னிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்காகவே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், அரசியல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் ஆகியோர் சரத் பவாரைச் சந்தித்தார்கள் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.

பா.ஜ.க சார்பில் துணை குடியரசுத் தலைவராக இருக்கும் வெங்கைய நாயுடு முன்னிறுத்தப்படலாம் அல்லது தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு மீண்டுமொரு முறை வாய்ப்பு வழங்கப்படலாம். அதேசமயம், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் மட்டுமே இரண்டு முறை குடியரசுத் தலைவராக இருந்திருக்கிறார் என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்.

குடியரசுத் தலைவர் தேர்தல்... வாக்கு சதவிகிதம் குறைந்த பா.ஜ.க... பலம்பெற்ற எதிர்க்கட்சிகள்...

பா.ஜ.க-வுக்கு என்ன சிக்கல்?

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தங்களுக்குச் சாதகமானவரை, குடியரசுத் தலைவராக்கிவிட வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக இருக்கின்றன. அது நடந்துவிட்டால், 2024 தேர்தலில் பா.ஜ.க-வுக்குத் தலைவலி ஏற்படும். ஒருவேளை 2024 தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்றாலும், ஆட்சியமைப்பதில் குடியரசுத் தலைவர் மூலம் எதிர்க்கட்சிகளால் சிக்கல் ஏற்படுத்த முடியும். இதையெல்லாம் பா.ஜ.க-வும் நன்கு அறிந்திருக்கிறது. அதே நேரம், ஒரு பொது வேட்பாளரை எதிர்க்கட்சிகள் நிறுத்தும் பட்சத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் அந்த வேட்பாளரை ஆதிரிக்குமா என்பதும் சந்தேகமே. இதற்கிடையே, இந்த விஷயத்தில் ஆந்திராவில் ஆட்சி செய்யும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், ஒடிசாவில் ஆட்சி செய்யும் பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட மாநிலக் கட்சிகளின் ஆதரவைப் பெறும் முனைப்பில் இருக்கிறது பா.ஜ.க.

அடுத்தடுத்த மாதங்களில் அரசியல் சதுரங்கத்தில் நகர்த்தப்படும் காய்கள், என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!