அலசல்
சமூகம்
Published:Updated:

கவர்னர் ரிப்போர்ட்... அ.தி.மு.க பூங்கொத்து... ஸ்டாலின் தடாலடி... பறந்துவந்த பிரதமர்

மோடி, ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
மோடி, ஸ்டாலின்

- பரபர ஆறு மணி நேரம்!

பிரதமர் மோடியின் சமீபத்திய தமிழ்நாடு பயணத்தை ஒட்டி, பரபர அரசியல் காட்சிகள் அரங்கேறியிருக்கின்றன. மதுரையிலிருந்து திண்டுக்கல்லுக்கு காரில் செல்ல முடிவெடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, திடீரென பிரதமருடன் ஹெலிகாப்டரில் பயணித்ததில் ஆயிரம் அர்த்தங்கள் இருப்பதாகச் சொல்கிறது ராஜ் பவன் வட்டாரம். அதேநேரத்தில், தன் கரிசனப் பார்வைக்காகப் பூங்கொத்துடன் காத்திருந்த அ.தி.மு.க கரைவேட்டிகளிடம், ‘நமஸ்தே’ என்றொரு வார்த்தையை மட்டும் உதிர்த்துவிட்டு டெல்லிக்குப் பறந்திருக்கிறார் மோடி.

தமிழ்நாடு அரசு இயற்றிய, ‘துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கலாம்’ என்ற சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துகிறார் ஆளுநர் ரவி. ஆளுநரை விழா மேடையில் வைத்துக்கொண்டே, ‘கல்வியை மாநிலப் பட்டியலில் சேருங்கள்’ எனப் பிரதமரிடமே ஸ்டாலின் தடாலடியாகப் பேசியது அரசியல் அரங்கில் அனலைக் கூட்டியிருக்கிறது. கடந்த நவம்பர் 11-ம் தேதி, திண்டுக்கல் காந்தி கிராமப் பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் வந்து சென்ற அந்த ஆறு மணி நேரமும், ஆக்‌ஷன் சினிமாவை மிஞ்சிய காட்சிகள் அரங்கேறியிருக்கின்றன.

அழைத்த கே.எம்.அண்ணாமலை...பறந்துவந்த மோடி!

காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்புவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்றதற்கு, பல்கலைக்கழகத்தின் வேந்தர் கே.எம்.அண்ணாமலையின் அழைப்புதான் காரணம் என்கிறது பா.ஜ.க வட்டாரம்.

நம்மிடம் பேசிய பா.ஜ.க தலைவர்கள் சிலர், “முடநீக்கியல் துறையில் நிபுணரான கே.எம்.அண்ணாமலை, 2001-ல் குஜராத் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியமர்வில் முக்கியப் பங்காற்றியவர். அந்தச் சமயத்திலிருந்தே மோடிக்கும் அவருக்குமிடையே நட்பு தொடர்கிறது. மோடிக்கும் பல நேரங்களில் பிசியோதெரபிஸ்ட்டாக அவர் இருந்திருக்கிறார். அதனால்தான், பட்டமளிப்புவிழாவுக்கு வருமாறு அவர் அழைத்தவுடன் பறந்துவந்துவிட்டார் மோடி” என்றனர் சுருக்கமாக.

கவர்னர் ரிப்போர்ட்... அ.தி.மு.க பூங்கொத்து... ஸ்டாலின் தடாலடி... பறந்துவந்த பிரதமர்

பிரதமர் கலந்துகொண்ட இந்த விழாவில் ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோரும் கலந்துகொண்டதால், பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சமாளிப்பதற்குள் தமிழ்நாடு காவல்துறைக்கு விழிபிதுங்கிவிட்டது. மழை காரணமாக, சாலை மார்க்கமாகவும் பிரதமர் பயணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திட்டமிட்டபடி, நவம்பர் 11-ம் தேதி மதியம் 1:35 மணியளவில், மதுரைக்கு வந்து சேர்ந்தார் பிரதமர். அவரை வரவேற்க 42 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அவர்களில், அ.தி.மு.க தரப்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ராஜன் செல்லப்பா, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் வந்திருந்தனர். ஓ.பன்னீர்செல்வத்துடன் தேனி எம்.பி ரவீந்திரநாத், தர்மர், மனோஜ் பாண்டியன், ஐயப்பன், கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் வந்தார்கள்.

அ.தி.மு.க பூங்கொத்து... காத்திருந்த கரைவேட்டிகள்!

முன்னாள் முதல்வர்கள் என்கிற புரோட்டோகால் அடிப்படையில், எடப்பாடியும் பன்னீரும் அருகருகே நிற்கவைக்கப்பட்டனர். இதை எடப்பாடி துளியும் ரசிக்கவில்லை என்கிறது அ.தி.மு.க வட்டாரம்.

நம்மிடம் பேசிய முன்னாள் அமைச்சர்கள் சிலர், “பன்னீருடன், ஒன்றாக நிற்கவைக்கப் பட்டவுடன், அங்கேயே எடப்பாடியின் முகம் கறுத்துவிட்டது. விமானத்திலிருந்து இறங்கிய பிரதமர் மோடிக்கு, அ.தி.மு.க-வில் முதல் ஆளாக, ஒற்றை ரோஜாப்பூவை வழங்கிய எடப்பாடி, ‘வெல்கம் சார்’ என்றார். ‘நமஸ்தே’ என்றபடி நகர்ந்தார் பிரதமர். அடுத்த ஆளாக ரோஜாப்பூவை நீட்டிய பன்னீர், கலங்கிய கண்களுடன் ‘சார், வெல்கம் சார்’ என்றார். அவருக்கும் அதே அக்மார்க் ‘நமஸ்தே’தான் பதிலாகக் கிடைத்தது. ‘தங்கள் கரங்களைப் பற்றி அரவணைப்பார் மோடி’ என்ற எதிர்பார்ப்பில்தான் அ.தி.மு.க தலைவர்கள் வந்திருந்தனர். ஆனால், அதில் மொத்தமாக மண்ணை அள்ளிப் போட்டுவிட்டு நகர்ந்தார் பிரதமர். யாருடனும் அளவளாவி, குழைந்து பேசவில்லை அவர்.

திண்டுக்கல்லுக்கு பிரதமர் ஹெலிகாப்டரில் செல்ல ஏற்பாடானது. அவர் திரும்பிவந்த பிறகாவது, அவருடன் தனித்து ஐந்து நிமிடங்கள் பேசிவிட வேண்டுமென்பதில் அ.தி.மு.க தலைவர்கள் இருவருமே ஆர்வமாக இருந்தனர். அதற்காக விமான நிலையத்தின் வெளியிலேயே பிரதமர் திரும்பி வரும் வரை இரு தரப்பினரும் காத்திருந்தனர்” என்றனர்.

அங்கிருந்த காவல்துறை அதிகாரிகளிடம், ‘பன்னீர் எப்போது சென்னை திரும்புகிறார்?’ என விசாரித்திருக்கிறது எடப்பாடி தரப்பு. மதுரையிலிருந்து சென்னை திரும்ப எடப்பாடி டிக்கெட் புக் செய்திருந்த விமானத்தில்தான் பன்னீரும் டிக்கெட் எடுத்திருந்தது தெரியவந்திருக்கிறது. டென்ஷனான எடப்பாடி, ‘அந்த டிக்கெட்டை கேன்சல் செய்யுங்க. திருச்சியிலிருந்து டிக்கெட் போடுங்க. நான் அவரோட ஒண்ணா போக முடியாது’ என்றிருக்கிறார். அதன் பிறகுதான், எடப்பாடிக்கு திருச்சியிலிருந்து சென்னைக்குச் செல்ல விமான டிக்கெட் புக் செய்யப்பட்டிருக்கிறது.

கவர்னர் ரிப்போர்ட்... அ.தி.மு.க பூங்கொத்து... ஸ்டாலின் தடாலடி... பறந்துவந்த பிரதமர்

ஹெலிகாப்டருக்கு மாறிய ரூட்... கவர்னர் ரிப்போர்ட்!

இதேபோல, ஆளுநரின் பயணத் திட்டமும் கடைசி நேரத்தில் மாறுதலானது. மதுரையிலிருந்து திண்டுக்கல் வரை காரில் பயணம் செய்து, ஹெலிபேடில் பிரதமரை ஆளுநர் வரவேற்ப தாகத்தான் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ‘உங்ககூட பிரதமர் பேச விரும்புறார். நீங்க அவரோட ஹெலிகாப்டர்ல பயணம் செய்யுங்க’ எனப் பயணத் திட்டத்தை மாற்றியிருக்கிறார்கள் பிரதமர் அலுவலக அதிகாரிகள். ஹெலிகாப்டரில் பிரதமருடன் தான் பயணித்த அந்த 25 நிமிடங்களில், தமிழ்நாட்டின் அரசியல் தட்பவெப்பம் பற்றிப் புட்டுப் புட்டு வைத்துவிட்டாராம் ஆளுநர் ரவி.

இது குறித்து ராஜ் பவன் உயரதிகாரிகள் சிலரிடம் பேசினோம். “பிரதமருடனான பயணத்தை ஆளுநரே தொடக்கத்தில் எதிர்பார்க்கவில்லை. பயணத்தின்போது, கோவை காஸ் சிலிண்டர் குண்டு வெடிப்பு தொடர்பாகவும், தமிழ்நாடு அரசு அதை அணுகியவிதம் குறித்தும் விரிவாகவே பிரதமரிடம் பேசியிருக்கிறார் ஆளுநர். என்.ஐ.ஏ-வின் விசாரணை வளையத்தைத் தமிழ்நாட்டில் விரிவுபடுத்தவேண்டிய தேவை குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு குறித்து பிரதமரிடம் விரிவான ரிப்போர்ட்டை அளித்திருக்கிறார் ஆளுநர்” என்றனர்.

கையில் பொன்னியின் செல்வன்... மேடையில் வார்த்தை வீச்சு... ஸ்டாலின் தடாலடி!

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி கிராமத்தில் பிரதமரின் ஹெலிகாப்டர் தரை இறங்கியவுடன், ‘பொன்னியின் செல்வன்’ ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களை வழங்கி அவரை வரவேற்றார் முதல்வர் ஸ்டாலின். பட்டமளிப்புவிழாவில், இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

விழாவின் தொடக்கத்திலேயே, பல்கலைக்கழக நிர்வாகிகளை அழைத்த முதல்வர், ‘மழை தீவிரமாகுற மாதிரி இருக்குது. திரும்பிச் செல்லும்போது, பிரதமர் சாலை மார்க்கமாகப் போனாலும் போகவேண்டியிருக்கும். சீக்கிரமாக விழாவை முடிங்க. அவரை ரொம்ப நேரம் காக்க வெக்காதீங்க...’ என்றிருக்கிறார். இளையராஜாவின் இன்னிசை மழைபோல நெகிழ்ச்சி, அமைதி, உபசரிப்புடன் நடந்துகொண்டிருந்த பட்டமளிப்புவிழாவை, அடைமழையாக அடித்துக் கிழித்தது முதல்வரின் உரைவீச்சு. மாநிலத்தின் கல்வி உரிமை, தமிழ் மொழியின் தொன்மை குறித்தெல்லாம் விளாசித் தள்ளினார் முதல்வர்.

கவர்னர் ரிப்போர்ட்... அ.தி.மு.க பூங்கொத்து... ஸ்டாலின் தடாலடி... பறந்துவந்த பிரதமர்

விழாவில் பேசிய முதல்வர், “தேசத்தந்தை காந்தியடிகளுக்கும் தமிழ்நாட்டுக்குமான தொடர்பு மிக மிக அதிகம். தனது வாழ்நாளில் 26 முறை தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார் காந்தியடிகள். திருக்குறளைப் படிப்பதற்காகவே தமிழைக் கற்க வேண்டும் என்றவர் அவர். ‘வட இந்தியர் அனைவரும் ஒரு தென்னிந்திய மொழியைக் கற்க வேண்டும், அது தமிழாக இருக்க வேண்டும்’ என்று சொன்னவர் காந்தியடிகள். இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் 22 பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன” எனத் தமிழில் பேசியவர், தடாலடியாக ஆங்கிலத்தில் உரையை மாற்றினார்.

“கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, மாநிலப் பட்டியலுக்குள்தான் கல்வி இருந்தது. எமெர்ஜென்சி காலகட்டத்தின்போதுதான் கல்வி, பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்” என்றார் முதல்வர் ஸ்டாலின்.

திடீரென முதல்வர் ஆங்கிலத்தில் உரையாற்றி, கல்வி தொடர்பான பஞ்சாயத்துக்குள் தன்னை இழுத்துவிடுவார் எனப் பிரதமரும் எதிர்பார்க்கவில்லை. இதனால், ‘தமிழ்நாடு தேசிய உணர்வின் உறைவிடமாக இருக்கிறது. காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான உறவைக் கொண்டாடும்விதமாக விரைவில் ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது’ என்ற பிரதமர், முதல்வரின் கோரிக்கைகள் குறித்து எதுவும் பேசவில்லை.

நம்மிடம் பேசிய தி.மு.க சீனியர் அமைச்சர்கள் சிலர், “தான் செல்லுமிடமெல்லாம், தமிழ்மீது தனக்கு அளவற்ற பாசம் இருப்பதுபோலப் பேசிவருகிறார் ஆளுநர். மோடியும் அவ்வப்போது தமிழில் ட்வீட் செய்கிறார். ஆனால், உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்குழு, ‘ஆங்கிலத்தை எடுத்துவிட்டு, இந்தியை அலுவல் மொழியாக்கலாம்’ என ஜனாதிபதிக்குப் பரிந்துரைத்திருக்கிறது. அவர்களை இடித்துரைக்கும்விதமாகத்தான், ‘வட இந்தியர் தமிழைக் கற்க வேண்டுமென காந்தி சொன்னார்’ என்றிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். கல்வியை மாநிலப் பட்டியலுக்குள் கொண்டுவந்துவிட்டால், நமது கல்விக் கொள்கைக்குள் ஒன்றிய அரசால் தலையிட முடியாது. அதற்காக பிரதமரை மேடையில் வைத்துக்கொண்டே முதல் குரல் எழுப்பியிருக்கிறார் முதல்வர். இந்தக் குரல் இந்தி பேசாத பல மாநிலங்களிலும் விரைவில் ஒலிக்கப்போகிறது” என்றனர்.

“தி.மு.க-வை அட்டாக் செய்யுங்க...” காரில் நடந்த டிஸ்கஷன்!

விழா முடிந்து பிரதமர் காரில் ஏறுவதற்கும், தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அவர் அருகில் வந்து நிற்பதற்கும் நேரம் சரியாக இருந்தது. மழை காரணமாக பிரதமர் சாலை மார்க்கமாகவே மதுரைக்குச் செல்ல ‘ரூட் க்ளியர்’ செய்யப்பட்டது. தன்னுடன் காரில் பா.ஜ.க மாநிலத் தலைவரை ஏற்றிக்கொண்டார் பிரதமர். பிரதமருக்கும் முன்னதாக, முதல்வர் ஸ்டாலினின் கான்வாய் மதுரை நோக்கிப் பறந்தது.

நம்மிடம் பேசிய பா.ஜ.க சீனியர் ஒருவர், “பொதுவாக பிரதமர் ஏதாவது கேட்டால்தான் நம்மால் பேச முடியும். அவரிடம் யாரும் தொணதொணவெனப் பேச முடியாது. அவரே, நவம்பர் 15-ம் தேதி போராட்டம் குறித்துக் கேட்க, ‘பால் விலை உயர்வைக் கண்டித்து’ தமிழ்நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் குறித்துப் பேசியிருக்கிறார் பா.ஜ.க தலைவர். பால்வளத்துறை அமைச்சர் நாசர் தொடர்பாக, தான் திரட்டியிருக்கும் சில தகவல்கள் குறித்தும் விளக்கியிருக்கிறார். அமைதியாகக் கேட்டுக்கொண்ட பிரதமர், ‘தி.மு.க-வை அட்டாக் செய்யும் வேகத்தைக் குறைத்துவிட வேண்டாம்’ என்றிருக்கிறார். தமிழக பா.ஜ.க ஐடி விங், தன்னுடைய வருகையை வரவேற்று, 13 லட்சம் ட்வீட்டுகள் பதிவிட்டதைச் சொல்லி மகிழ்ந்தும் இருக்கிறார் பிரதமர்” என்றார்.

திண்டுக்கல்லிலிருந்து மதுரை விமான நிலையத்துக்கு பிரதமர் வந்தபோது, மதியம் செய்ததுபோலவே எடப்பாடியையும் பன்னீரையும் அருகருகே நிற்கவைத்துவிட்டனர் அதிகாரிகள். எடப்பாடி தரப்பு முரண்டுபிடித்துப் பார்த்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. தான் கிளம்பும்போதும்கூட அ.தி.மு.க தலைவர்களிடம் பிரதமர் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. டெல்லிக்கு எடப்பாடி வந்தபோதாவது, ‘அமித் ஷாவைப் பாருங்கள்’ என்று கூறினார். ஆனால், இந்த முறை ஒன்றுமே கூறாததால், எடப்பாடி கடும் அப்செட் என்கிறார்கள் அ.தி.மு.க-வினர். இந்தக் கடுப்பில்தான், 12-ம் தேதி சென்னையில் அமித் ஷா இருந்தும், அவரை எடப்பாடி சந்திக்கவே இல்லை என்கிறார்கள்.

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஒன்றாக இருந்தும்கூட, ஆளுநரும் முதல்வரும் முகம் கொடுத்துக்கூடப் பேசிக்கொள்ளவில்லை. பூங்கொத்துடன் காத்திருந்தும், பிரதமருடன் அளவளாவ ஒரு நிமிடம்கூட கிடைக்காததால், வாடிய முகத்துடன் ஊர் திரும்பியிருக்கிறார்கள் அ.தி.மு.க தலைவர்கள். பிரதமரை மேடையில் வைத்துக்கொண்டே, ஆளுநருக்கு மறைமுகமாக பதில்கொடுத்திருக்கிறார் முதல்வர். இப்படியாக, பிரதமரின் இந்தப் பயணம் ஆறு மணி நேரமே நடந்திருந்தாலும், அரசியல் பரபர காட்சிகளுடன் விறுவிறுத்திருக்கிறது. இந்த அரசியல் வேகம், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் அதிகரிக்கக்கூடும்!

கவர்னர் ரிப்போர்ட்... அ.தி.மு.க பூங்கொத்து... ஸ்டாலின் தடாலடி... பறந்துவந்த பிரதமர்

“பூத் கமிட்டிகளை பலப்படுத்துங்க!” அமித் ஷா சென்னை விசிட்

பிரதமரின் விமானம் ‘டேக் ஆஃப்’ ஆன அடுத்த சில மணி நேரத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் விமானம் சென்னையில் ‘லேண்ட்’ ஆனது. நவம்பர் 12-ம் தேதி நடைபெற்ற இந்தியா சிமென்ட் நிறுவனத்தின் 75-ம் ஆண்டு நிகழ்வுக்காக சென்னைக்கு வந்திருந்தார் அமித் ஷா.

பத்து ஆண்டுகள் கழித்து அமித் ஷா கமலாலயம் வருவதால், பூரண கும்ப மரியாதையுடன் அவரை வரவேற்றனர் தமிழக பா.ஜ.க-வினர். கமலாலயத்திலேயே சமைக்கப்பட்டு, தனக்குப் பரிமாறப்பட்ட சைவ உணவை விரும்பி ருசித்திருக்கிறார் அமித் ஷா. அண்ணாமலை, சி.பி.ராதாகிருஷ்ணன், பொன்.ராதாகிருஷ்ணன், எல்.முருகன், நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா ஆகியோரும் அவருடன் சேர்ந்து உணவருந்தியிருக்கிறார்கள்.

பிற்பாடு, மாநில நிர்வாகிகள் 68 பேருடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அமித் ஷா, “கஷ்டப்பட்டால் வளரலாம். ஜெயலலிதா, கருணாநிதிக்குப் பிறகு தமிழ்நாட்டில் வெற்றிடம் இருக்கிறது. அதை முறையாகப் பயன்படுத்திக் கொண்டால், நம்மால் ஆட்சியைப் பிடிக்க முடியும். பி.எல்.ஏ-2 பூத் ஏஜென்ட்டுகள், பூத் கமிட்டிகள் நியமிக்கும் பணிகளில் வேகம் காட்டுங்கள்” என்று 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான விதைகளைப் போட்டுச் சென்றிருக்கிறார் அமித் ஷா.

அமித் ஷாவைத் தனியாகச் சந்திக்க நேரம் கேட்டிருந்திருக்கிறார் பன்னீர். அவர் தங்கியிருந்த ராஜ் பவனில் சந்திக்க வாய்ப்பில்லை என்றிருக்கிறார்கள். விடாமல், விழா நடைபெறும் கலைவாணர் அரங்கத்துக்கே வந்த பன்னீர், அமித் ஷாவுடன் சில நிமிடங்களாவது பேசிவிட முயன்றிருக்கிறார். ஆனால், அங்கும் அவருக்கு ‘நமஸ்தே’தான் கிடைத்திருக்கிறது. தன்னை அமித் ஷா கண்டுகொள்ளாததால், பன்னீர் டோட்டல் அப்செட்!