Published:Updated:

அதிருப்தி... புறக்கணிப்பு... ஆட்சிக் கவிழ்ப்பு அச்சம்... போராட்டத்தைப் பாதியில் முடித்த நாராயணசாமி

புதுச்சேரி
பிரீமியம் ஸ்டோரி
புதுச்சேரி

தேங்கிய கோப்புகள்... தூங்கிய திட்டங்கள்!

அதிருப்தி... புறக்கணிப்பு... ஆட்சிக் கவிழ்ப்பு அச்சம்... போராட்டத்தைப் பாதியில் முடித்த நாராயணசாமி

தேங்கிய கோப்புகள்... தூங்கிய திட்டங்கள்!

Published:Updated:
புதுச்சேரி
பிரீமியம் ஸ்டோரி
புதுச்சேரி

மத்தியப் பாதுகாப்புப் படை கொடுத்த நெருக்கடி, கூட்டணிக் கட்சியான தி.மு.க-வின் புறக்கணிப்பு, பொதுமக்கள் மற்றும் சொந்தக்கட்சி நிர்வாகிகளின் அதிருப்தி போன்ற காரணங்களால், கவர்னர் கிரண் பேடிக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டத்தைப் பாதியிலேயே முடித்திருக்கிறார் முதல்வர் நாராயணசாமி!

தேங்கிய கோப்புகள்... தூங்கிய திட்டங்கள்!

கொஞ்சம் பின்னோக்கிப் போகலாம்... மத்தியில் காங்கிரஸ் ஆட்சி முடிவடைந்ததும், புதுச்சேரி திரும்பிய நாராயணசாமி, 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் கட்சியின் முதல்வரானார். அந்தச் சமயத்தில், “கவர்னராக நியமிக்கப்பட்டிருக்கும் கிரண் பேடி எனக்கு நண்பர்தான். புதுச்சேரி வளர்ச்சிக்காக இருவரும் இணைந்து செயல்படுவோம்” என்றார். ஆனால், அதன் பிறகு காட்சிகள் தலைகீழாக மாறிப்போயின. தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த இலவச அரிசி, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளைக்கூட நிறைவேற்ற முடியாத அளவுக்கு நாராயணசாமிக்கு நெருக்கடி கொடுத்த கிரண் பேடி, அமைச்சரவையின் கோப்புகள் அனைத்தையும் கேள்விகளுடன் திருப்பி அனுப்பத் தொடங்கினார்.

அனைத்துக் கோப்புகளும் கவர்னர் மாளிகையில் தேங்கத் தொடங்கியதால், கூட்டணிக் கட்சியான தி.மு.க-வே காங்கிரஸ் அரசின் செயல்படாத தன்மையைக் கடுமையாக விமர்சித்தது. பொதுமக்கள் மட்டுமன்றி, கட்சிக்காரர்களும் ஆட்சிமீது வெறுப்படைந்தார்கள். அவர்களைச் சமாதானப்படுத்துவதற்காக, அமைச்சரவை சகாக்களுடன் 2019-ம் ஆண்டு கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் அமர்ந்தார் நாராயணசாமி. ஆறு நாள்கள் நீடித்த அந்தப் போராட்டம் எந்தத் தீர்வையும் எட்டாமலேயே அப்போது முடிவுக்கு வந்தது. மீண்டும் கோப்புகள் தேங்கத் தொடங்கின. மக்களிடம் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியாததற்கு கிரண் பேடியைக் கைகாட்டினார் நாராயணசாமி. ஆட்சி இப்படியென்றால், கட்சிக்குள்ளும் சூழல் சுமுகமாக இல்லை. தொகுதிக்குள் தலைகாட்ட முடியாத அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களும் நாராயணசாமி மீது மிகுந்த அதிருப்திக்கு உள்ளானார்கள். “கட்சிக்காரர்களுக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்” என்று நாராயணசாமி வெளிப்படையாகவே சொன்னது, கட்சியின் யதார்த்தநிலையை வெளிச்சம்போட்டுக் காட்டியது.

அதிருப்தி... புறக்கணிப்பு... ஆட்சிக் கவிழ்ப்பு அச்சம்... போராட்டத்தைப் பாதியில் முடித்த நாராயணசாமி

வெகுண்டார்... பின் மிரண்டார்!

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில், ‘நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியாததற்குக் காரணம் கிரண் பேடிதான்’ என்ற முழக்கத்தோடு வெகுண்டெழுந்து மக்களை நோக்கிச் செல்லலாம் என நினைத்த நாராயணசாமி தரப்பு, ‘கிடப்பில் கிடக்கும் 31 கோப்புகளுக்கு அனுமதி தரும்வரை, கவர்னர் மாளிகை உள்ளிட்ட நகர்ப் பகுதி முழுவதையும் முற்றுகையிட்டு, டெல்லி விவசாயப் போராட்டம்போல முன்னெடுக்கலாம்’ என்று எடுத்த முடிவை முன்கூட்டியே அறிந்துகொண்டார் கிரண் பேடி. அந்தப் பகுதியில் 144 தடையுத்தரவைப் பிறப்பித்து, மத்தியப் பாதுகாப்புப் படையைக் குவித்து அந்த பிளானைத் தகர்த்தார்.

கவர்னர் மாளிகையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில், அண்ணா சிலை அருகில் போராட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. நான்கு நாள்கள் தொடர் தர்ணா என்று அறிவிக்கப்பட்டு, ஜனவரி 8-ம் தேதி தொடங்கிய போராட்டத்தை, கூட்டணிக் கட்சியான தி.மு.க முழுமையாகப் புறக்கணித்தது. முதல் நாள் மட்டும் தலைகாட்டிய பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அதன் பிறகு எட்டிக்கூடப் பார்க்கவில்லை. போராட்டத்துக்குக் கட்சிக்காரர்களே எதிர்பார்த்த ஆதரவைத் தராத நிலையில், அவசரப்பட்டுவிட்டோமோ என மிரண்டுபோனார் நாராயணசாமி.

அதிருப்தி... புறக்கணிப்பு... ஆட்சிக் கவிழ்ப்பு அச்சம்... போராட்டத்தைப் பாதியில் முடித்த நாராயணசாமி

கட்சிக்குள்ளே சதி... காங்கிரஸின் விதி?

“இந்தப் போராட்டத்தின் மூலம் கிரண் பேடியை விரட்டிவிட்டாலும், சொச்சமுள்ள ஆட்சிக்காலத்தில் அறிவித்த அனைத்துத் திட்டங்களையும் காங்கிரஸால் நிறைவேற்றிவிட முடியுமா?” என்று தி.மு.க-வின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் எம்.எல்.ஏ சிவா வெளியிட்ட அறிக்கையால், ஏற்கெனவே வலுவிழந்த போராட்டம் கலகலத்துப்போனது. ‘சொந்தக் கட்சியிலும் ஆதரவு இல்லை; வந்த கட்சியிலும் ஆதரவு இல்லை’ என்கிற நிலையில், போராட்டத்தில் கலந்துகொண்டே தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து ஆட்சியைக் கவிழ்க்க முடிவெடுத்து, பி.ஜே.பி-யுடன் பேச்சுவார்த்தை நடத்திவரும் ஓர் அமைச்சர் மற்றும் நான்கு எம்.எல்.ஏ-க்கள் குறித்த தகவல் நாராயணசாமியின் காதுகளுக்குப் போக, மொத்தமாக நொந்துபோனார் மனிதர். இனியும் போராட்டத்தைத் தொடர்ந்தால், போராட்டப் பந்தலிலிருந்து கிளம்பும்போது, கையில் ஆட்சி இருக்காது என்று பயந்த நாராயணசாமி, “பண்டிகைக் காலம் என்பதால் போராட்டத்தைத் தற்காலிகமாக தள்ளிவைக்கிறோம்” என்று மூன்றாவது நாளே முடித்துக்கொண்டார். “இந்த ஆட்சிக்காலம், ஓர் அரசியல் ஆளுமையாக நாராயணசாமிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வி!” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

நசநசத்துப்போனது நாராயணசாமியின் போராட்டம் மட்டுமல்ல, புதுச்சேரி காங்கிரஸின் எதிர்காலமும்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism