Published:Updated:

பட்டாசு வெடிப்பாரா... படப்பிடிப்புக்குக் கிளம்பிவிடுவாரா? - ரஜினி அரசியல்

ரஜினியின் பிரசார வியூகமே வேறு. ஊழல் புரையோடியிருக்கும் இந்த அமைப்பையே மாற்ற வேண்டும் என்று நேரடிப் பிரசாரத்தை ரஜினி முன்னெடுக்கப் போகிறார்.

பிரீமியம் ஸ்டோரி
“வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மாற்று அரசியலை முன்னிறுத்துவோம். ஊழல் மலிந்த இரண்டு திராவிடக் கட்சிகளிடமிருந்து தமிழகத்தை விடுவிக்கும் சரித்திரச் சாதனையை ரஜினியால் மட்டுமே நிகழ்த்திக்காட்ட முடியும். காந்தி பிறந்தநாளில், காமராஜர் மறைந்தநாளில் இந்த இருவர் தம் கனவுகளை நனவாக்க அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கும் ரஜினிகாந்த் முயற்சிக்கு உறுதுணையாக நிற்போம்...” - அக்டோபர் 2-ம் தேதி, காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவரும் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் ஆலோசகருமான தமிழருவி மணியன் வெளியிட்ட அறிக்கையின் சில வரிகள் இவை. `இந்த அறிக்கைக்குள் ஒளிந்திருக்கிறது ரஜினியின் வெறுப்பரசியல் அல்லாத அரசியல் வியூகம்’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

கடந்த பிப்ரவரி மாதம் ஒரு நாளிதழுக்குப் பேட்டியளித்த தமிழருவி மணியன், “ரஜினியுடன் பா.ம.க இணையப்போகிறது, தினகரனுக்குக் கூட்டணியில் இடமில்லை. ஏப்ரலில் கட்சி... ஆகஸ்ட்டில் மாநாடு’ என்றெல்லாம் போட்டு உடைத்திருந்தார். தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்திய அந்தப் பேட்டியால் உஷ்ணமான ரஜினி, தன்னைப் பற்றி எதுவும் பேசக் கூடாது என்று தமிழருவி மணியனுக்குத் தடை போட்டதாகக் கூறப்படுகிறது. மனம் நொந்துபோன தமிழருவி மணியன், “ரஜினிகாந்த் என்ன செய்வார் என்று சொல்லும் உரிமை எனக்கில்லை. எனக்கான வரையறை எது, வரம்பு எது என்பது எனக்குத் தெரியும்” என்று விளக்கமளித்தார்.

அன்றிலிருந்து ரஜினி குறித்து எதுவும் பேசாதவர், திடீரென கடந்த அக்டோபர் 2-ம் தேதியன்று ‘ரஜினியால்தான் அரசியல் மாற்றத்தை நிகழ்த்த முடியும்’ என்று அதிரடியாகப் பேசியிருப்பது, ரஜினியின் ஆசியுடன் வந்த வார்த்தைகளாகத்தான் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அந்த அறிக்கையைப் படித்துவிட்டு ரஜினியே ‘ஓகே’ சொன்னதாகக் கூறுகிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். என்ன வியூகத்தை வகுக்கிறார் ரஜினி? விவரமறிய அவருக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம்.

“வெறுப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டவர் காந்தி. சமய நல்லிணக்கம், மதச் சார்பற்ற அரசியலுக்கு வித்திட்டவர். அதேவேளையில் தொழில்புரட்சி, விவசாயப்புரட்சி, கல்விப் புரட்சிக்கு வித்திட்டவர் காமராஜர். இவர்களைக் கோடிட்டுக் காட்டி, அவர்கள் வழியில் அரசியல் பாதையை ரஜினி அமைக்கப்போவதாகக் கூறுகிறது தமிழருவி மணியனின் அறிக்கை. உண்மையில், ரஜினியின் வியூகமும் இதுதான்.

திராவிடக் கட்சிகள் தாங்கள் செய்த சாதனைகளைச் சொல்லியும் எதிர்க்கட்சிகளின் ஊழலை அம்பலப்படுத்தியும்தான் தேர்தல் வியூகத்தை வகுக்கின்றன. ரஜினியின் பிரசார வியூகமே வேறு. ஊழல் புரையோடியிருக்கும் இந்த அமைப்பையே மாற்ற வேண்டும் என்று நேரடிப் பிரசாரத்தை ரஜினி முன்னெடுக்கப் போகிறார். இந்த அரசுக் கட்டமைப்பு மூலமாக, அரசியல் கட்சிகள் எப்படியெல்லாம் லாபமடைகின்றன, மக்களைச் சுரண்டுகின்றன என்பதை அம்பலப்படுத்துவார். இதற்காகத்தான் சுதந்திரம் பெற்ற பிறகு காங்கிரஸ் கட்சியைக் கலைக்கச் சொன்ன காந்தியையும், ‘கே’ பிளான் மூலமாக ஆட்சி அதிகாரத்திலிருந்து சீனியர்களைக் கட்சிக்கு விரட்டிய காமராஜரையும் தன் துணைக்கு அழைக்கிறார்.

ரஜினி கோத்தாரி என்கிற அரசியல் ஆய்வாளர் 1970-ல் எழுதிய ‘இந்தியாவில் அரசியல்’ புத்தகம் மிகப்பிரபலமானது. அந்தப் புத்தகத்தில், ‘காமராஜர் வகுத்துக் கொடுத்த ‘கே’ பிளான், ஆட்சியில் ஆதிக்கம் செலுத்திவந்த காங்கிரஸ் தனவான்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, அதிகாரிகளிடையே மறுசீரமைப்பு செய்வதற்கு பிரதமர் நேருவுக்கு வாய்ப்பளித்தது’ என்று எழுதியிருக்கிறார். இதே பாணியிலான மாற்றத்தைத்தான், தன்னுடைய சக்கர வியூகத்தில் ரஜினி முன்னெடுக்கப்போகிறார். ஏற்கெனவே `கட்சி வேறு, ஆட்சி வேறு’ என்று ரஜினி முன்னிறுத்திய கருத்து, அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இனி, தன் ஆட்சியில் அரசியல் தலையீடு இருக்காது என்பதாக அவர் முன்னெடுக்கும் அரசியல்தான் சக்கர வியூகம். இந்த வியூகத்துக்குள் இரண்டு திராவிடக் கட்சிகளும் சிக்கி நொறுங்கப் போகின்றன” என்றார்கள் உற்சாகமாக!

ரஜினி
ரஜினி

சமீபத்தில், ரஜினியின் குடும்பத்தினர் சார்பில் நாமக்கல்லைச் சேர்ந்த ஒரு ஜோதிடரிடம் ரஜினியின் ஜாதகத்தைக் கொடுத்து ஜோதிடம் பார்த்திருக்கிறார்கள். கட்டங்களை ஆராய்ந்த அந்த ஜோதிடர், “இவரே நினைத்திருந்தாலும் டிசம்பர் 26-ம் தேதிக்கு முன்னதாக அரசியலுக்குள் நுழைந்திருக்க முடியாது. கிரக நிலைகள் சாதகமாக இல்லை. ஏதோவொரு காரணத்துக்காக அரசியல் கட்சி ஆரம்பிப்பது தள்ளிப்போய்க் கொண்டேதான் இருந்திருக்கும். கொரோனா தொற்று பரவியது ஒருவகையில் உங்களுக்கு நல்லது என்று நினைத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால், ‘ஏன் கட்சி ஆரம்பிக்கவில்லை?’ என்று உங்கள்மீது விமர்சனங்கள் எழுந்திருக்கும்.

டிசம்பர் 26-ம் தேதியிலிருந்து இவருக்கு குருவின் பார்வை உச்சம் பெறுகிறது. அந்தத் தேதிக்குப் பிறகு ரஜினியே நினைத்தாலும், அரசியலுக்கு வருவதை அவரால் தடுக்க முடியாது. வெற்றி பெறுவாரா, மாட்டாரா என்பதை அவர் கட்சி ஆரம்பிக்கும் தேதி, தேர்தல் அறிவிக்கப்படும் தேதியை கணக்கிட்டுத்தான் சொல்ல முடியும். ஆனால், தமிழக அரசியலில் ரஜினி நிச்சயம் அதிர்வை ஏற்படுத்துவார்” என்று கூறியிருக்கிறார் ஜோதிடர். அதைக் கேட்டு மகிழ்ச்சியுடன் கிளம்பிய ரஜினி தரப்பினர், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ரஜினியின் இயற்பெயரான `சிவாஜிராவ் கெயிக்வாட்’ பெயரில் சிறப்பு அர்ச்சனையைச் செய்துவிட்டு, திரும்பியிருக்கிறார்கள்.

ஜோதிடர் நம்பிக்கையாகக் கூறினாலும், கொரோனா தொற்றால் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைந்தது ரஜினியின் மனதை மிகவும் பாதித்துவிட்டதாம்.

எனவே, கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும்வரை நேரடி அரசியல் களத்துக்கு வந்து ஆபத்தைத் தேடிக்கொள்ள அவர் விரும்பவில்லை என்கிறார்கள்.

தற்போது உலகம் முழுவதும் 150 கொரோனா தடுப்பு மருந்துகள் ஆய்வில் இருக்கின்றன. ஜனவரிக்குள் அவை சோதனை ஓட்டம் முடிந்து புழக்கத்துக்கு வந்துவிடும் என்று ரஜினி நம்புகிறாராம்.

சமீபத்தில், பீகார் தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக டெல்லி பிரமுகர் ஒருவரைத் தனது கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் சந்தித்த ரஜினி, “ரொம்பல்லாம் வேணாம்... இருபது நாள் போதும். பிரசாரத்தை முடிச்சுடலாம். மக்கள்கிட்ட ஒரு மாஸ் ஸ்விங் ரெடியாகிட்டு இருக்கு. மாற்றத்துக்காக தயாராகிட்டு இருக்காங்க. தீபாவளிக்குப் பிறகு என் ஆட்டத்தைப் பாருங்க” என்று தம்ஸ்அப் காட்டினாராம். இதையெல்லாம் முன்வைத்து, கொடுத்த வாக்கைக் காப்பாற்றியே தீர வேண்டும் என்பதில் ரஜினி தீர்க்கமாக இருப்பதாகக் கூறுகிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

“கொரோனா தொற்றால் ரஜினியின் அரசியல் என்ட்ரி தாமதமானது நல்லது என்பது நாமக்கல் ஜோதிடரின் அருள்வாக்காக இருக்கலாம். ஆனால், அதே கொரோனா தொற்றால், ரஜினியின் அரசியல் என்ட்ரியும் காலம் கடந்துவிட்டால், அதன் பிறகு அவர் அரசியலுக்கு வந்தும் பலனில்லை” என்பது ரஜினிக்கு நெருக்கமானவர்களின் கவலை. இதற்காக டெல்லியையும் சிலர் அணுகியிருக்கிறார்கள்.

ஜனவரிக்கு மேல் இங்கிருக்கும் ஆளும்கட்சித் தலைவர்கள் மீது அடுத்தடுத்து ரெய்டு அஸ்திரங்களை ஏவி, ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தும் யோசனையை ரஜினிக்காகச் சிலர் முன்வைத்திருக்கிறார்கள். ‘தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டுமென்றால், ரஜினிக்காகக் காத்திருங்கள். இல்லையென்றால் காலத்துக்கும் காங்கிரஸ் பாணியில் நீங்கள் குதிரை சவாரி செய்ய வேண்டியதுதான்’ என்று அவர்கள் டெல்லி பா.ஜ.க தேசியத் தலைவர் ஒருவரிடம் பேசியிருக்கிறார்கள். இதையெல்லாம் அமைதியாகக் கேட்டுக்கொண்ட டெல்லி தரப்பு இப்போதைக்கு மெளனம் காக்கிறது. ரஜினியும் மெளனம் காக்கிறார்.

இப்போதே சமூக வலைதளங்களில் ‘பிப்ரவரியில் ரஜினி கட்சி ஆரம்பிப்பார்’ என்ற வாசகத்தை வெளியிட்டு, அதற்கு வயதான ரஜினி ரசிகர்கள் சிலர்... ‘ரொம்ப குளிருமே தலீவரே!’ என்று பதில் கொடுப்பதுபோல எல்லாம் மீம்ஸ்கள் களைகட்டுகின்றன. வேறுவழியில்லை... அட்லீஸ்ட், தீபாவளி வரை பொறுத்திருப்பதுதான், ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு இருக்கும் ஒரே சாய்ஸ். ரஜினி ‘பட்டாசு’ வெடிப்பாரா... இல்லை, படப்பிடிப்புக்குக் கிளம்பிவிடுவாரா என்பது ஒருவேளை அப்போது தெரியவரலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு