Published:Updated:

பற்றவைத்த சசிகலா... அ.தி.மு.க தீபாவளி! - புகையும் பன்னீர்... ‘புஸ்ஸ்...’ எடப்பாடி

சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
சசிகலா

குருபூஜையின் போது அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்கள் யார் வந்தாலும், அவர்களுக்குக் கறுப்புக்கொடி காட்ட சசிகலா ஆதரவாளர்கள் தீவிரமாக இருந்தனர்.

பற்றவைத்த சசிகலா... அ.தி.மு.க தீபாவளி! - புகையும் பன்னீர்... ‘புஸ்ஸ்...’ எடப்பாடி

குருபூஜையின் போது அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்கள் யார் வந்தாலும், அவர்களுக்குக் கறுப்புக்கொடி காட்ட சசிகலா ஆதரவாளர்கள் தீவிரமாக இருந்தனர்.

Published:Updated:
சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
சசிகலா

அரசியல் தீபாவளியைக் கொண்டாட்டமாக ஆரம்பித்திருக்கிறார் சசிகலா. தனது பசும்பொன் விசிட் மூலம் அ.தி.மு.க-வுக்குள் சரவெடியைப் பற்றவைத்திருக்கிறார் அவர். அவருக்கு பதிலடி கொடுத்திருக்கவேண்டிய அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்கள் இருவரும், தேவர் ஜெயந்தி விழாவில் நேரில் பங்கேற்கவில்லை. இதனால், சசிகலாவின் கை ஓங்க ஆரம்பித்திருக்கிறது. அ.தி.மு.க-வுக்குள் நடக்கும் இந்த யுத்தத்தில், டெல்லியும் தி.மு.க-வும் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதால், அ.தி.மு.க-வுக்குள் தீபாவளி களைகட்டுகிறது. தான் ஓரங்கட்டப்படுவதால் புகைச்சலில் இருக்கும் பன்னீர், தனக்கென தனி அணியைக் கட்டமைக்க ஆரம்பித்திருக்கிறார். குடலிறக்க அறுவை சிகிச்சை எடுத்துக்கொண்டாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பதிலடிக்குத் தயாராகிறார் எடப்பாடி. ஆனால், அவர் வீசும் வெடிகள் எதுவும் வெடிக்கவில்லை. அ.தி.மு.க-வுக்குள் யார் கை ஓங்கப் போகிறது..?

‘திடீர் திருப்ப’ பன்னீர்!

வங்கி லாக்கரிலிருந்து முத்துராமலிங்கத் தேவர் சிலைக்குத் தங்கக்கவசம் எடுத்துக் கொடுப்பதற்காக அக்டோபர் 25-ம் தேதி மதுரைக்கு வந்திருந்தார் பன்னீர். அப்போது அவரிடம், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் தங்கள் மனக்குமுறலைக் கொட்டியிருக்கிறார்கள். ‘சசிகலாவைப் பற்றி எடப்பாடி தரப்பு, தப்புத் தப்பாகப் பேசிக்கிட்டே இருக்கு. நீங்களும் அமைதியாகவே இருக்கீங்களேண்ணே. என்ன இருந்தாலும் ஒரு பெண்ணைத் தரக்குறைவான வார்த்தைகளால் பேசலாமா?’ என்று அவர்கள் ஆவேசப்பட, அருகிலிருந்த முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த கழக நிர்வாகிகளும் அதை ஆமோதித்திருக்கிறார்கள். கடுகடு முகத்துடன் வங்கியைவிட்டு வெளியே வந்த பன்னீர், ‘யாராக இருந்தாலும் கண்ணியத்துடன் பேச வேண்டும். சசிகலாவை அ.தி.மு.க-வுக்குள் இணைப்பது குறித்து, கழக நிர்வாகிகள் முடிவெடுப்பார்கள்’ என்று குண்டை வீசினார். இதை எடப்பாடி தரப்பு எதிர்பார்க்கவில்லை.

சில மாதங்களுக்கு முன்பு, தொண்டர்களிடம் சசிகலா பேசிய ஆடியோ உரையாடல்கள் அனலடித்த சமயத்தில், ஜூலை 26-ம் தேதி பிரதமர் மோடியை, பன்னீரும் எடப்பாடியும் சேர்ந்து சந்தித்தார்கள். இந்தச் சந்திப்பு முடிந்த இரண்டு தினங்களில், தேனியில் செய்தியாளர்களை பன்னீர் சந்தித்தபோது, ‘அ.தி.மு.க-வுக்கு நான்தான் தலைமை ஏற்பேன் என்று சசிகலா கூறிவருகிறாரே?’ என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, “ஒரு தனிப்பட்ட குடும்பமோ, தனிநபரோ ஆதிக்கம் செலுத்த முடியாத ஜனநாயக முறையை நான்கரை ஆண்டுகளுக்கு முன்னால் நாங்கள் ஏற்படுத்தியிருக்கிறோம். தொண்டர்கள் எல்லோரும் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். இந்த நிலை தொடரும். யார் எந்த முயற்சி எடுத்தாலும், அ.தி.மு.க-வை யாராலும் கைப்பற்ற முடியாது” என்றார் பன்னீர். அந்த நிலைப்பாட்டுக்கு மாறாக, இப்போது பன்னீர் எடுத்திருக்கும் நிலைதான் அ.தி.மு.க-வுக்குள் அனலைக் கிளப்பியிருக்கிறது. பன்னீரின் கருத்துக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கழகத் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் பதிலடி கொடுத்தாலும், அது பெரிதாக எடுபடவில்லை. ‘பசும்பொன்னுக்கு யார் நேரில் செல்வது?’ என்பதிலேயே அ.தி.மு.க தலைமைக்குள் உள்குத்து தாண்டவமாடியிருக்கிறது.

பற்றவைத்த சசிகலா... அ.தி.மு.க தீபாவளி! - புகையும் பன்னீர்... ‘புஸ்ஸ்...’ எடப்பாடி

பசும்பொன்னில் பற்றவைத்த சசிகலா!

இது குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் ஒருவர், “குருபூஜையின் போது அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்கள் யார் வந்தாலும், அவர்களுக்குக் கறுப்புக்கொடி காட்ட சசிகலா ஆதரவாளர்கள் தீவிரமாக இருந்தனர். இந்தத் தகவல், தேவரின் தங்கக்கவசத்தை எடுத்துக் கொடுக்க பன்னீர் வங்கிக்கு வந்தபோதே அவரிடம் சொல்லப்பட்டது. இந்தச் சூழலில்தான், பசும்பொன்னில் தேவருக்கு மரியாதை செலுத்த பன்னீரைக் கட்சி நிர்வாகிகள் அழைத்தனர். அப்போது, ‘என் மனைவி இறந்து 60 நாள்கள் முடியலை. வீட்டில் துக்கத்தை வைத்துக்கொண்டு, தேவரின் கோயிலுக்கு வருவது நல்லாயிருக்காது. நவம்பர் 1-ம் தேதி வர்றேன். நீங்க எடப்பாடியைக் கூப்பிட்டுப் பாருங்க’ என்றிருக்கிறார் பன்னீர். தேவர் கோயிலுக்கு வந்தால் தீட்டாகிவிடும் என்று கருதுபவர், தேவரின் தங்கக்கவசத்தை மட்டும் நேரில் வந்து பெற்றுத்தந்தது முரண்பாடான விஷயம். பசும்பொன்னுக்குச் சென்றால் பிரச்னையாகும் என்று கருதித்தான், விசிட்டைத் தள்ளிப்போட்டார் அவர்.

‘பசும்பொன் சென்றால் பிரச்னை வரும். எதிர்கொள்ளத் தயாராகுங்கள்’ என அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர் ஏற்கெனவே எடப்பாடியை உஷார்ப்படுத்தியிருந்தனர். உளவுத்துறையைச் சேர்ந்த சில அதிகாரிகளும் அவரை எச்சரிக்க, பசும்பொன் பந்தை பன்னீர் தன் பக்கம் தள்ளிவிட்டதை எடப்பாடி ரசிக்கவில்லை. காரணம் தேடிக்கொண்டிருந்தவருக்கு, திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. ஏற்கெனவே குடலிறக்க அறுவை சிகிச்சை எடுத்துக்கொண்டதால், உடனடியாகச் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் எடப்பாடி. ‘பசும்பொன்னுக்கு இரு தலைவர்களும் நேரில் வராதது அச்சத்தால்தான்’ என்கிற கருத்து பரவ, சசிகலாவின் கை ஓங்கியது. அக்டோபர் 29-ம் தேதி, பசும்பொன்னுக்கு சசி நேரில் சென்றபோது ஐந்தாயிரத்துக்கும் அதிகமானோர் திரண்டனர். எடப்பாடியைக் கண்டித்து கோஷங்களும் ஒலித்தன. சசிகலாவைக் குறிப்பிடத்தக்க அ.தி.மு.க நிர்வாகிகள் யாரும் அப்போது சந்திக்கவில்லை என்றாலும், அரசியல்ரீதியாகச் சரவெடியைப் பற்றவைத்துவிட்டார் அவர். தேவர் குருபூஜையில் பன்னீர் அல்லது எடப்பாடி நேரில் கலந்துகொண்டிருக்க வேண்டும். கலந்துகொள்ளாததால், சசியைப் பார்த்து அ.தி.மு.க தலைவர்கள் இருவரும் பயந்ததுபோல ஆகிவிட்டது” என்றார்.

நவம்பர் 1-ம் தேதி, தஞ்சையில் நடந்த ‘ஆதரவாளர்கள் சந்திப்பில்’ தன்னைச் சந்தித்தவர்களிடம் தீபாவளி வாழ்த்து சொன்ன சசிகலா, `நான்தான் அ.தி.மு.க பொதுச்செயலாளர். கட்சி சீக்கிரமே நம்ம கைக்கு வரப்போகுது. அந்த நாள்தான் நமக்கு நிஜமான தீபாவளி. அதைக் கொண்டாடத் தயாரா இருங்க’ என்று உற்சாகப்படுத்தியிருக்கிறார். மேலும், `கிராமம் கிராமமாகச் சுற்றுப்பயணம் வரவிருக்கிறேன். அப்போது நிறைய விஷயம் பேசுவேன். குறிப்பாக, துரோகம் செய்தவர்களின் சுயரூபத்தைத் தெரியவைப்பேன்’ எனப் பேசியிருக்கிறார்.

பற்றவைத்த சசிகலா... அ.தி.மு.க தீபாவளி! - புகையும் பன்னீர்... ‘புஸ்ஸ்...’ எடப்பாடி

புகையும் பன்னீர்... ‘புஸ்ஸ்...’ எடப்பாடி!

தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த, நவம்பர் 1-ம் தேதி பசும்பொன்னுக்கு பன்னீர் வந்தபோது பிரச்னை வேறு ரூபம் அடைந்திருக்கிறது. பன்னீரிடம், ‘நீங்க சரியாத்தாண்ணே பேசியிருக்கீங்க. கொங்கு குரூப்பை கன்ட்ரோல் செய்யறதுக்கு உங்க பின்னாடி நாங்க இருக்கோம். ஆட்சி, அதிகாரமில்லாம கட்சியை எப்படி நடத்துறது? இவங்களைப் புரிஞ்சுக்க, அம்மாவோட கொடநாடு பங்களா விவகாரம் ஒண்ணு போதாதா...’ என்று தங்கள் பங்குக்குத் திரி ஏற்றிவிட்டிருக்கிறார்கள் இரண்டு மாவட்டச் செயலாளர்கள். ‘இப்பவே கூட்டம் போட்டு பேசிடணும்ணே’ என்று மேலும் சிலர் ஆவேசம் காட்டவும், உடனடியாக மதுரையிலுள்ள அன்னபூர்ணா ஹோட்டலில் திடீர் கூட்டத்துக்கு ஏற்பாடானது. முல்லைப்பெரியாறு தொடர்பான கூட்டம் என்று கூறப்பட்டாலும், சசிகலாவை அ.தி.மு.க-வுக்குள் கொண்டுவரும் வழி குறித்துத்தான் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. இந்த திடீர் கூட்டம் குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவர், “கூட்டத்தில் செல்லூர் ராஜூவின் பேச்சுதான் அதிரடித்தது. ‘எடப்பாடி பேசுற பேச்சுக்கெல்லாம் நாம இங்க ‘எத்து’ வாங்கிட்டு இருக்கோம். சின்னம்மாவை இனியும் புறக்கணிச்சுட்டு நாம இங்கே அரசியல் பண்ண முடியாது. நமக்குள்ள சண்டை போட்டுக்கிட்டே இருந்தா, அது தி.மு.க-வுக்குத்தான் லாபம். சீக்கிரமே ஒரு முடிவெடுத்தாகணும்’ என்றார். இதை திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகளும் ஆமோதித்தனர். ஆனால், ஆர்.பி.உதயகுமார் மட்டும் எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் மெளனமாக இருந்தார். அனைத்தையும் அமைதியாகக் கேட்டுவிட்டு, ‘சீக்கிரமே ஒரு முடிவெடுப்போம்’ என்றதோடு கிளம்பிவிட்டார் பன்னீர். வரும் நவம்பர் 7-ம் தேதி முல்லைப்பெரியாறு விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தவும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

கட்சிக்குள், தான் ஒரு ரப்பர் ஸ்டாம்ப்பாக மட்டுமே பயன்படுத்தப்படுவது பன்னீர் மனதுக்குள் புகைச்சலை உருவாக்கியிருக்கிறது. ‘சாட்சிக்காரன் கால்ல விழுறதைவிட, சண்டைக்காரன் கால்ல விழுறதே பரவாயில்லை’ என்கிற முடிவுக்கு அவர் வந்துவிட்டார். இதை முறியடிப்பதற்காக கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் மூலமாக பன்னீருக்கு ‘கவுன்ட்டர் அட்டாக்’ கொடுத்தார் எடப்பாடி. அது எடுபடவில்லை.

சசிகலா தரப்புடன் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் ரகசியப் பேச்சுவார்த்தையில் இருப்பதாகத் தகவல் பரவியது. வைத்திலிங்கத்தின் சம்பந்தி தவமணி மூலமாக அ.தி.மு.க நிர்வாகிகளை சசிகலா பக்கம் திருப்புவதற்கான வேலைகளும் சூடுபிடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதனாலேயே, நந்தனத்தில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தபோது, வைத்திலிங்கத்தையும் தன்னுடன் அருகில் நிற்கவைத்துக்கொண்டார் எடப்பாடி. அப்படியிருந்தும், சசிகலா பற்றிய பேச்சைக் கட்சிக்குள் அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் அமைச்சர் உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன் முதற்கொண்டு பலரும் சசிகலா தரப்புடன் பேசிவருவதாகக் கூறப்படுகிறது. இன்னொரு பக்கம், வடமாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ-க்கள் உட்பட 25 எம்.எல்.ஏ-க்களுடன் சசி தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல்கள் பரபரக்கின்றன. இந்த அரசியல் தீபாவளியில் எடப்பாடி கொளுத்திய பட்டாசு எல்லாம் ‘புஸ்ஸ்...’ என வெடிக்காமல் நமுத்துப் போனதுதான் மிச்சம்!” என்றார்.

பற்றவைத்த சசிகலா... அ.தி.மு.க தீபாவளி! - புகையும் பன்னீர்... ‘புஸ்ஸ்...’ எடப்பாடி

யார் கை ஓங்கும்?

இந்த விவகாரத்தில் இரண்டு விஷயங்களை சசிகலா தரப்பு எதிர்பார்க்கிறது. முதலாவது, கொடநாடு வழக்கில் எடப்பாடி தரப்புக்கு எதிராக ஒரு கைது நடவடிக்கையை தி.மு.க அரசு எடுத்துவிட்டால், அதைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ளக் காத்திருக்கிறது. ஆனால், ‘எடப்பாடிமீது நடவடிக்கை எடுத்து, அதன் மூலமாக சசிகலா அதிகாரம் அடைந்துவிட்டால், அரசியல்ரீதியாகத் தங்களுக்கு என்ன லாபம்?’ என்று தி.மு.க மேலிடம் யோசிக்கிறது.

இரண்டாவது, பா.ஜ.க-வின் அணுகுமுறையில் மாற்றங்கள் நிகழ்ந்தால், அதையும் சாதகமாக்கிக்கொள்ள முடிவெடுத்திருக்கிறது சசி தரப்பு. ஒவ்வொரு முறை சசிகலா அரசியல் என்ட்ரி கொடுக்கும்போதும், வருமான வரித்துறை நோட்டீஸ் வழங்குவது, சொத்துகளை முடக்குவது என அதிரடிகாட்டியது மத்திய அரசு. ‘ஒருவர்மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், அரசியலில் ஈடுபட அனைவருக்கும் உரிமை இருக்கிறது. அதை ஏற்பதும் தவிர்ப்பதும் மக்களின் முடிவு. ஆனால், சசிகலா விவகாரத்தில் பா.ஜ.க பழிவாங்கும் போக்கிலேயே நடந்துகொள்கிறது’ என்று விமர்சனங்கள் எழுந்தன. இப்படி உருட்டி மிரட்டி வந்த மத்திய அரசு, தென்மாவட்டங்களில் சசிகலா ஒரு ரவுண்ட் டூர் அடித்துவிட்ட நிலையிலும், இதுவரை அவருக்கு எதிரான நிலைப்பாடு எதையும் எடுக்கவில்லை. இதைத் தங்களுக்கான ‘பாசிட்டிவ்’ சிக்னலாகப் பார்க்கிறது சசி தரப்பு. பா.ஜ.க தரப்பில், “அ.தி.மு.க சிதறியதாலேயே சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவினோம். இதேநிலை, 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போதும் நீடிக்கக் கூடாது. அதனால், அ.தி.மு.க பஞ்சாயத்தில் இப்போதைக்கு நாம் தலையிட வேண்டாம்” என்று தீர்மானித்திருக்கிறார்களாம்.

பற்றவைத்த சசிகலா... அ.தி.மு.க தீபாவளி! - புகையும் பன்னீர்... ‘புஸ்ஸ்...’ எடப்பாடி

“இரட்டை இலைக்குக் கையெழுத்திடும் உரிமையை பன்னீர்-எடப்பாடி இருவருமே விட்டுத்தரப் போவதில்லை. இவர்களின் தலைமையை ஏற்றுக்கொண்டு சசியும் அ.தி.மு.க-வுக்குள் வரப்போவதில்லை. தன் ஆதரவில்லாமல் தென்மாவட்டங்களில் அரசியல் செய்வது தற்கொலைக்குச் சமமானது என்கிற பிம்பத்தைக் கச்சிதமாகத் தன் செயல்பாடுகளால் உணர்த்த முயல்கிறார் சசிகலா. இதை முறியடித்து, தென்மாவட்ட நிர்வாகிகளுக்குப் புத்துயிர் ஊட்ட வேண்டிய இடத்தில் எடப்பாடி இன்று இல்லை. அவர் மீதான நம்பகத்தன்மை கட்சிக்குள் குறைந்து வருகிறது. பன்னீர் வேறு ஒரு பக்கம் புகைந்து கொண்டிருக்கிறார். இந்த விவகாரம் முடிவுக்கு வருவது, அ.தி.மு.க தலைவர்களின் கைகளில் மட்டுமில்லை... அது தி.மு.க., பா.ஜ.க-வின் கைகளிலும் இருக்கிறது. அ.தி.மு.க பலமாகிவிடக் கூடாது என்பதில் திண்ணமாக இருக்கும் அவர்கள் இருவரும், பிரச்னையை மேலும் பெரிதாக்கத்தான் முயல்கிறார்கள். தலைமை சார்ந்து ஒரு முடிவு வரும்வரை, எந்தப் பக்கமும் சாய முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் நிர்வாகிகள் தரப்பு, ஆளுக்கொரு கருத்தைச் சொல்லி பிரச்னையை மேலும் சிக்கலாக்குகிறது. எங்காவது ஓர் இடத்தில், இந்தச் சிக்கல் உடையும். அப்போது, அ.தி.மு.க-வுக்குள் உண்மையான தீபாவளிப் பட்டாசு ஒலிப்பதை யாராலும் தவிர்க்க முடியாது” என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள். பட்டாசு வெடிக்குமா, நமுத்துப் போகுமா..? பொறுத்திருந்து பார்ப்போம்!

தள்ளிப்போகும் பொதுக்குழு?

அ.தி.மு.க-வின் பொதுக்குழுவை இப்போது கூட்டினால் சர்ச்சைகள் வெடிக்கலாம் என்பதால், சசிகலா விவகாரத்தில் ஒரு முடிவு ஏற்படும் வரை கொரோனாவைக் காரணம் காட்டி பொதுக்குழுவைத் தள்ளிவைப்பதற்கு தீர்மானித்திருக்கிறதாம் பன்னீர் தரப்பு.