Published:Updated:

“இருவருமே துரோகிகள்தான்!”

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

2017-ல், சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தியபோது, அப்போதைய எடப்பாடி தலைமையிலான ஆட்சியை, ‘ஊழல் அரசு’ எனத் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்தார் பன்னீர்.

“இருவருமே துரோகிகள்தான்!”

2017-ல், சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தியபோது, அப்போதைய எடப்பாடி தலைமையிலான ஆட்சியை, ‘ஊழல் அரசு’ எனத் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்தார் பன்னீர்.

Published:Updated:
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க தொண்டர்கள் பெரும்பாலும் உணர்ச்சிகரமானவர்கள். துக்கமோ, கோபமோ, சந்தோஷமோ அனைத்தை யும் மனதிலிருந்து ‘ரியாக்ட்’ செய்கிறவர்கள். இரட்டை இலை என்பது அவர்களுக்குச் சின்னமல்ல, ஒரு மத அடையாளம்போல. எம்.ஜி.ஆரின் சின்னம் என்கிற சென்ட்டிமென்ட் ரொம்பவே ஆழமானது. இரட்டை இலையைத் தவிர வேறொரு சின்னத்துக்கு மாற்றி வாக்களிப்பதை, கற்பை இழப்பதுபோலக் கருதும் தொண்டர்கள் நிரம்பிய இயக்கம் அது. கட்சி சின்னத்தைப் பச்சை குத்திக்கொள்ளும் பழக்கத்தை இந்தியாவுக்கே அறிமுகப்படுத்திய இயக்கமும் அதுதான். தி.மு.க- விலிருந்து எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டபோது, ஜெயலலிதா மீதான தீர்ப்பு வெளியானபோது, இருவரின் மரணச் செய்திகளின்போது, தேர்தல் தோல்விகளின்போது எனப் பல சமயங்களில், செய்தி கேட்ட ரேடியோக்களைச் சுக்குநூறாக உடைத்தவர்கள், அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தவர்கள், தீக்குளித்து மாண்ட தொண்டர்கள் ஏராளம். கட்சியின் அனைத்து அசைவுகளிலும் உணர்ச்சிப் பிழம்பாக ஈடுபாடுகொள்ளும் அ.தி.மு.க தொண்டர்கள், தற்போது விரக்தியும் ஆத்திரமுமாகக் கனன்று கொண்டிருக்கிறார்கள். பன்னீர் - எடப் பாடி தரப்பின் அரசியல் விளையாட்டில் எந்த ஆர்வமும் இல்லாமலிருக்கிறார்கள்.

“இருவருமே துரோகிகள்தான்!”

கழகத்தின் பொன்விழா விமரிசையாகக் கொண்டாடப் படவேண்டிய நேரத்தில், நீதிமன்ற விசாரணைகளிலும், போட்டி பேட்டிகளிலும் மட்டுமே கட்சி கரைந்துகொண்டிருக்கிறது. ‘ஒற்றைத் தலைமைக்காகக் கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது’ என ஓ.பன்னீர் செல்வத்துக்குச் சாதகமான தீர்ப்பு வரும்போதும், ‘பொதுக்குழு முடிவுகள் செல்லும்’ என எடப்பாடி பழனிசாமிக்குச் சாதகமான தீர்ப்பு வரும்போதும், அவரவர் ஆதரவு நிர்வாகிகள்தான் இனிப்பு வழங்குகிறார்கள். ஆதாய எதிர்பார்ப்பில் கூட இருப்பவர்கள்தான் பட்டாசைக் கொளுத்துகிறார்கள். மற்றபடி, தமிழகத்தின் எந்த ஊரிலும் சிறு சலசலப்புக்கூட இல்லை. கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் யாரும் இதில் கலந்து கொள்ளவில்லை. “பன்னீரும் எடப்பாடியும் மாறி மாறி ‘நீதான் துரோகி’ எனக் குற்றம் சாட்டிக்கொள்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரை இருவருமே துரோகிகள்தான்” என்று கொதிக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். தொண்டர்கள் மத்தியில் எழுந்திருக்கும் இந்தக் குமுறலை, அ.தி.மு.க தலைமை எளிதில் கடந்து சென்றுவிட முடியாது. இந்த துரோகக் குற்றச்சாட்டு பன்னீர் - எடப்பாடி இருவர் மீதும் சரிசமமாகவே முன்வைக்கப்படுகிறது.

“இருவருமே துரோகிகள்தான்!”

“கட்சியை அடகுவைத்ததைத் தவிர, இருவரும் எதையும் செய்யவில்லை!”

அ.தி.மு.க-வில் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து தொண்டர்களாக, நிர்வாகிகளாக இருப்பவர்கள் சிலர் நம்மிடம் பேசியபோது, “உண்மையைச் சொல்லப்போனால், நாங்கள் குழம்பிப் போயிருக்கிறோம். பன்னீர் - எடப்பாடி இருவருமே கட்சி நலனுக்காகவோ, தொண்டர்கள் நலனுக்காகவோ சண்டை போடவில்லை. தங்களின் பதவியை, அதிகாரத்தைத் தக்க வைப்பதற்காகவே நீதிமன்றப் படியேறியிருக் கிறார்கள். ஒவ்வொரு முறை தீர்ப்பு மாறி மாறி வரும்போதும், கட்சி என்னவாகுமோ என்கிற பயமும் குழப்பமும்தான் மிஞ்சுகின்றன. எம். ஜி.ஆரைப்போலத் தன் சொத்தைச் செலவழித்தோ, ஜெயலலிதாவைப்போலத் தன்னையே உருக்கியோ இந்தக் கட்சியை இவர்கள் வளர்க்கவில்லை. இருப்பதையும் சிதைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

1977-ல் முதல்வராக எம்.ஜி.ஆர் பதவியேற்ற பிறகு, முழுநேர ரேஷன் கடைகள் திறக்கப்பட்டன. ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் 20 கிலோ அரிசி வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆருக்கு நெருக்கடி தரும்விதமாக, மத்திய தொகுப்பிலிருந்து தமிழ்நாட்டுக்குக் கொடுக்கவேண்டிய 2 லட்சம் டன் அரிசியை இந்திரா காந்தி அரசு தர மறுத்தது. எம்.ஜி.ஆர் டெல்லிக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. நேராக சென்னைக்குத் திரும்பிய எம்.ஜி.ஆர்., அண்ணா சமாதியில் உண்ணாவிரதத்தில் உட்கார்ந்து விட்டார். லட்சம் தொண்டர்கள் சென்னையில் திரண்டுவிட்டனர். மிரண்டுபோன மத்திய அரசு, உடனடியாக அரிசியை விடுவித்தது. மத்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த முதல் தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர்-தான். எந்த இடத்திலும், தமிழ்நாட்டின் கொள்கைக்காக அவர் சமரசம் செய்ததில்லை.

ஜெயலலிதா நினைத்திருந்தால், சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தப்பிப்பதற்கு பா.ஜ.க-வுடன் சமரசம் செய்திருக்கலாம். சிறைக்குப் போகாமலேயே இருந்திருக்க லாம். ஆனால், அவர் அப்படிச் செய்ய வில்லை. தன் இறுதி மூச்சுவரை கட்சியின் கௌரவத்துக்காகக் களத்தில் தைரியமாக நின்றார்.

ஆனால், கட்சிக்காக பன்னீரும் எடப்பாடி யும் செய்த ஓர் உருப்படியான விஷயத்தைச் சொல்ல முடியுமா... இருவருமே திடீரென சசிகலா குடும்பத்தால் சிபாரிசு செய்யப்பட்டு, அரசியலில் அடையாளப்படுத்தப்பட்டவர்கள். உண்மையான தொண்டர்களின் மனநிலை இவர்களுக்குச் சுத்தமாகத் தெரியவில்லை. கட்சியை நீதிமன்றத்தில் அடகுவைத்ததைத் தவிர, இவர்கள் எதையும் செய்யவில்லை.

ஜனவரி 1980-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. உடனடியாக ஜே.பி.ஆர், சத்தியவாணிமுத்து, ராகவானந்தம் உள்ளிட் டோர் தலைமையில் குழு ஒன்றை அமைத்த எம்.ஜி.ஆர்., தோல்விக்கான காரணத்தை ஆய்வு செய்யச் சொன்னார். ஆய்வின் முடிவில், அன்றைய ஜனதா கட்சியோடு கூட்டணி வைத்ததே தோல்விக்குக் காரணம் எனக் கண்டறியப்பட்டது. அப்போது தொடங்கி, ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை தோல்விக் கான காரணங்கள் குறித்து உடனடியாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படும். ஆனால், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வியைச் சந்தித்த பிறகும், தோல்விக்கான காரணத்தை ஆராய ஒரு கூட்டம்கூட நடத்த வில்லை. ‘தோல்விக்குப் பிறகு, நான் உட்பட 10 அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சி வேலை செய்யலாம் என நான் சொன்னேன். எடப்பாடிதான் கேட்கவில்லை’ என இப்போது சொல்கிறார் பன்னீர். இன்று தனி ஆவர்த்தனம் செய்பவர், கட்சி நலனுக்காக அப்போதே அதைச் செய்திருக்கலாமே... பதவிப் பசி அன்று அவர் கண்ணை மறைத்துவிட்டது.

“கட்சியையே காவு கொடுப்பார் பன்னீர்!”

2017-ல், சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தியபோது, அப்போதைய எடப்பாடி தலைமையிலான ஆட்சியை, ‘ஊழல் அரசு’ எனத் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்தார் பன்னீர். அப்போது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில், அவர் உட்பட 11 பேர் எடப்பாடி ஆட்சிக்கு எதிராக வாக்களித்தனர். இந்த உலகத்திலேயே, ஒரு ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வாக்குச் செலுத்திவிட்டு, அதே ஆட்சியில் பிற்பாடு துணை முதல்வராகவும், நிதியமைச்சராகவும், அந்தக் கட்சிக்கு ஒருங்கிணைப்பாளராகவும் ஆன பெருமை பன்னீரைத்தான் சேரும். ‘கழகம் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் செல்வதை அனுமதிக்க முடியாது’ என வீரவசனம் பேசிய பன்னீர், இப்போது ‘அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்’ என்று அதே சசிகலா குடும்பத்துக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கிறார். அம்மா மரணத்தில் சந்தேகத்தை உருவாக்கிய பன்னீர், அது குறித்த விசாரணையில், `தெரியாது தெரியாது’ என்று சொல்வது துரோகமில்லையா. `சசிகலா, தினகரன் இருவரும் துரோகிகள், ஊழல் பெருச்சாளிகள்’ என்று கட்சியிலிருந்து நீக்கவைத்த அவரே, இன்று இணைப்புக்கு அழைப்பு விடுவதெல்லாம் பச்சை துரோகமில்லையா?

2021 சட்டமன்றத் தேர்தலில், முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி முன்னிறுத்தப்பட்டார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில், மனமாச்சர்யங்களை மறந்து பன்னீர் தேர்தல் பணியாற்றியிருக்க வேண்டும். ஆனால், ‘தனக்குக் கிடைக்காத முதல்வர் பதவி யாருக்கும் கிடைக்கக் கூடாது’ என்று நினைத்ததால், தேர்தல் பிரசாரத்தை முழுமையாக மேற்கொள்ளவேயில்லை. அதன் முடிவு, தனது சொந்த மாவட்டத்திலேயே பாதி வெற்றியைக்கூட அவரால் பெற்றுத் தர முடியவில்லை. தோற்றது எடப்பாடியோ, வேட்பாளர்களோ அல்ல... கட்சி. கட்சியைக் கைப்பற்ற, அதிகாரத்தைத் தக்கவைக்க யாரை வேண்டுமானாலும் காவு கொடுப்பார் எடப்பாடி. ஆனால், தன்னுடைய பதவிக்காகக் கட்சியையே காவு கொடுப்பார் பன்னீர்” என்றனர் ஆவேசமாக.

“இருவருமே துரோகிகள்தான்!”

“பழிபோட்டுத் தப்பிக்கப் பார்க்கிறார் எடப்பாடி?”

“எடப்பாடியும் துரோகத்துக்குச் சளைத்தவரல்ல. கட்சியில் கொங்கு பெல்ட், சவுத் பெல்ட் என்கிற பாகுபாடெல்லாம் எப்போதும் இருந்ததே இல்லை. எடப்பாடி ஆட்சிக் காலத்தில்தான், கொங்கு ஆதிக்கம் மிகுந்து பிளவு உருவானது. இன்று முக்குலத்தோர் - கவுண்டர் மோதலால் கட்சியே இரண்டு துண்டாகிவிட்டது...” என்று புலம்பித் தீர்க்கிறார்கள்.

நம்மிடம் பேசிய அ.தி.மு.க தொண்டர்கள், “ஆட்சியைத் தக்கவைக்க பன்னீருடன் டீல், தன்னுடைய அதிகாரத்தைத் தக்கவைக்க நிர்வாகிகளுடன் டீல், மத்திய அரசுடன் டீல்... என டீல் பேசி முடிப்பதிலேயேதான் எடப்பாடியின் மொத்த நேரமும் கழிகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில்கூட, தன்னுடைய ஆதரவு அதிகமாக இருக்கும் பகுதியில்தான் ஜெயிக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார் எடப்பாடி. தென்மாவட்டங்களைக் கண்டுகொள்ளவே யில்லை. இன்றைக்கு பா.ஜ.க எதிர்த்தால், ‘மோதிப் பார்த்துவிடலாம்’ என்று நினைக்கும் எடப்பாடி, 2019, 2021 தேர்தல்களில் தொண்டர்களின் எண்ணத்துக்கேற்ப இந்த முடிவைத் துணிச்சலாக எடுத்திருந்தால், அ.தி.மு.க-வுக்குச் சரிவு வந்திருக்காது. அன்று தன் ஆட்சி போய்விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தவர், இன்று இரட்டைத் தலைமைமீது பழிபோட்டுவிட்டுத் தப்பிக்கப் பார்க்கிறார்.

2021 சட்டமன்றத் தேர்தலின்போது, பன்னீரை காலி செய்வதற்குக் களத்தில் இறக்கிய தன்னுடைய ஆதரவு நிர்வாகிகளை, கட்சிக்காகத் தேர்தல் பணியாற்றவைத்திருந்தால் கூடுதல் இடங்களையாவது கைப்பற்றியிருக்கலாம். வெறும் 3 சதவிகித ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க ஆட்சியை இழந்தது. இந்த கோஷ்டிப்பூசலால், அதன் பிறகு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில்கூட அ.தி.மு.க மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. இவர்கள் இருவருக்கும் இடையேயான போட்டியில்,

ஃபார்ம் பி-யில் கையெழுத்திடும் கடமையைத் தவறிவிட்டார்கள். இதனால், மாநகரம் முதல் பேரூராட்சி வரை விடுபட்ட இடங்களுக்கு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் கட்சித் தொண்டர்களுக்குச் சின்னம் கிடைக்காமல் போனது. கடந்த ஜூலை 11-ம் தேதி, எப்படியாவது அலுவலகத்துக்குள் செல்ல வேண்டுமென்ற பன்னீருக்கும், அவரைத் தடுக்க முயன்ற எடப்பாடி தரப்புக்கும் ஏற்பட்ட மோதலால், கட்சி அலுவலகத்துக்கே பூட்டுப் போட்டது போலீஸ். ‘பன்னீர் போனால் போகட்டுமே, கட்சி நம்மிடம்தான் இருக்கிறது. கட்சி அலுவலகத்துக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது’ என்கிற உணர்வு எடப்பாடியிடம் இருந்திருந்தால், அந்த வன்முறை அரங்கேறியிருக்காது.

அம்மா உணவகம், அம்மா கிளினிக், ஸ்கூட்டருக்கு மானியம், திருமண உதவித்தொகைத் திட்டம் எனப் பல திட்டங்களுக்கு தி.மு.க மூடுவிழா நடத்தியிருக்கிறது. இது குறித்து எதிர்க்கட்சித் தலைவராகக் களத்தில் இறங்கி எடப்பாடி போராடியிருக்க வேண்டும். ஆனால், நீதிமன்றத்துடன் மல்லுக்கட்டுவதற்கு மட்டுமே அவருக்கு நேரமிருக்கிறது. எடப்பாடியின் வீட்டில் காவல் காப்பதைத் தவிர, முன்னாள் அமைச்சர்கள் வேறெந்தப் பணியையும் பார்ப்பதில்லை. இவர்கள் தங்களுக்குள் இப்படி அடித்துக்கொள்வதால், இப்போதே தி.மு.க., பா.ஜ.க-வை நோக்கி அ.தி.மு.க தொண்டர்கள் நகர ஆரம்பித்துவிட்டனர். கோயம்புத்தூரில் நடந்ததுபோல இனி ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்கும். உடனடியாக இதைத் தடுக்கவேண்டிய தலைமைகள், தங்களுக்குள் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள்” என்றனர் ஆற்றாமையுடன்.

“இருவருமே துரோகிகள்தான்!”

“இருவருமே துரோகிகள்தான்!”

பன்னீரும் எடப்பாடியும் போட்டி போட்டுத் தங்கள் பெயரில் பேரவையை ஆரம்பிக்கச் சொன்னபோதே, கட்சி சீனியர்கள் தலையிட்டு இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும். ‘ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்பதுபோல, இரு தலைவர்களும் அடித்துக்கொள்ளும் நேரத்தில், ‘பவர் பாலிடிக்ஸ்’ செய்து தங்கள் பங்குக்கு லாபம் பார்த்தார்கள் அந்த சீனியர்கள். இன்று, கட்சி சின்னா பின்னமாகிக்கொண்டிருக்கிறது. ‘தன் உடல்நிலை மோசமாக இருந்தபோதும்கூட, நேர்காணல் நடத்தித்தான் வேட்பாளர் தேர்வைச் செய்தார் ஜெயலலிதா. கட்சிக்காக உண்மையாக உழைத்த தொண்டர்கள், லைம்லைட்டில் இல்லாத பலருக்கும் அப்போது நியாயமாக வாய்ப்பளிக்கப்பட்டது. அந்த நாள் திரும்பாதா?’ என்கிற ஏக்கம் பல தொண்டர்களிடம் இருக்கிறது.

நம்மிடம் பேசிய முன்னாள் அ.தி.மு.க சீனியர் அமைச்சர் ஒருவர், “1980-ல் வியாசர்பாடியைச் சேர்ந்த கட்சித் தொண்டர் முனுசாமியின் வீட்டுத் திருமணத்துக்கு அமைச்சர் பட்டாளத்தையே அழைத்துக்கொண்டு போனார் எம்.ஜி.ஆர். அப்போது, ‘இதுக்கெல்லாம் நீங்க வரணுமா தலைவரே... நாங்க போனா பத்தாதா?’ என அமைச்சர்கள் கேட்டனர். அதற்கு எம்.ஜி.ஆர்., ‘அவன்தான்யா நம்மளைக் கொடி கட்டுன கார்ல போக வெச்சுருக்கான். அவன்தான் நமக்கு அரியாசனம் தந்திருக்கான். கையில கொடியைப் பிடிச்சுக்கிட்டு எந்தப் பிரதிபலனும் பார்க்காம உழைச்ச அந்த அடிமட்டத் தொண்டன்தான் நமக்கு முக்கியம். என்னைக்கும் அவனை மறந்துடாதீங்க’ என்றார். இன்று நடக்கும் அதிகாரப் போட்டியில், அந்தத் தொண்டனை பன்னீரும் எடப்பாடியும் மறந்ததோடு கடுமையாக அலட்சியம் செய்கிறார்கள். இந்தப் பிரச்னையில் ஒன்று சமாதானம் ஏற்பட வேண்டும். அல்லது, கட்சி நலனைக் கருத்தில்கொண்டு ஒருவர் விட்டுக்கொடுத்து ஒற்றைத் தலைமை ஏற்பட வேண்டும். நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என உருண்டுகொண்டே இருப்பதைத் தொண்டர்கள் விரும்பவில்லை. 2017-ல் நடந்ததுபோல, சின்னம் முடங்கிவிடுமோ என்கிற கலக்கமும் ஏற்பட்டிருக்கிறது. இந்தக் கலக்கத்தைத்தான் பா.ஜ.க., தி.மு.க கட்சிகள் எதிர்பார்க்கின்றன. அதற்கு பன்னீரும் எடப்பாடியும் இடம்கொடுக்கிறார்கள். அந்த வகையில் கட்சிக்கு இருவருமே துரோகிகள்தான்” என்றார்.

ஒரு கட்சித் தலைமையை நோக்கி, அதன் தொண்டர்கள் உட்சபட்சமாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்கள். பதவிப் பஞ்சாயத்துகள், ஆள்பிடிப்பு வேலைகள், டீலிங்குகளைக் கைவிட்டுவிட்டு இருவரும் முதன்மையாகக் காது கொடுக்கவேண்டியது தொண்டர்களின் குரலுக்கு. குறிப்பாகத் தங்கள்மீதான விமர்சனத்துக்கு!