Published:Updated:

அலட்சியம்... ஏமாற்றம்... பதற்றம் - முடிவுக்கு வருகிறதா அரசியல் ஆட்டம்?

சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா

இன்று சசிகலா சந்தித்திருக்கும் நெருக்கடிகள் அத்தனைக்கும் அவரது அலட்சியம்தான் காரணம்” என்று வெதும்புகிறார்கள் மன்னார்குடி உறவுகள் சிலர்.

அ.தி.மு.க-வில் எதிர்க்கட்சித் தலைவர் பிரச்னை உச்சத்திலிருந்தபோது, அந்தக் கட்சியின் சீனியர்கள் சிலரே முணுமுணுத்த கேள்வி, “சசிகலா என்னப்பா பண்றாங்க?” என்பதுதான். மே 7-ம் தேதி அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றபோது, கட்சிக்கு சசிகலாவை தலைமைப் பொறுப்பு ஏற்கச் சொல்லி, சில இடங்களில் போஸ்டர்களும் ஒட்டப்பட்டன. ஆனால், சசியிடமிருந்து ‘நோ ரெஸ்பான்ஸ்.’ சசியின் விசுவாசிகள் மீண்டும் ஏமாந்ததுதான் மிச்சம். தனது அலட்சியத்தால் அதிகாரத்தை இழந்த நிலையில், நெருங்கிய உறவுகளே ஏமாற்றத் தொடங்கியிருப்பதால் வெளிறிப்போயிருக்கிறார் சசிகலா. குறிப்பாக, ‘அதிகாரம் இல்லாமல் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை எப்படிக் காப்பாற்றப்போகிறோம்?’ என்கிற பதற்றம் சசியின் மனதை உலுக்கியிருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. என்னதான் செய்யப்போகிறார் சசிகலா? விவரமறிய களத்தில் இறங்கினோம்.

அலட்சியம்... ஏமாற்றம்... பதற்றம் - முடிவுக்கு வருகிறதா அரசியல் ஆட்டம்?

அலட்சியத்தால் பறிபோன வாய்ப்புகள்!

“இன்று சசிகலா சந்தித்திருக்கும் நெருக்கடிகள் அத்தனைக்கும் அவரது அலட்சியம்தான் காரணம்” என்று வெதும்புகிறார்கள் மன்னார்குடி உறவுகள் சிலர். நம்மிடம் பேசிய சசியின் விசுவாசியும், டெல்டா பகுதியின் முன்னாள் அமைச்சருமான ஒருவர், “சிறையிலிருந்து சசிகலா விடுதலையாகி, பிப்ரவரி 8-ம் தேதி சென்னை கிளம்பியபோது, வழியெங்கும்

அ.தி.மு.க., அ.ம.மு.க கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் திரளாக வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்புகளையெல்லாம் ஏற்றுக்கொண்டு, சசிகலா சென்னை வந்து சேர்வதற்கே 23 மணி நேரமாகிவிட்டது. இப்படி ஒரு பிரமாண்டமான ரோடு ஷோவை நிகழ்த்திய சசிகலா, அன்றைய தினமே வீட்டுக்குள் முடங்கிக்கொண்டார். ‘அம்மா நினைவிடத்துக்கு நுழையப் போராடுவார், சாலைமறியல் செய்வார்’ என்றெல்லாம் அவரை நம்பியவர்கள் எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம். அப்படிச் செய்திருந்தால் பத்து அமைச்சர்கள், அ.தி.மு.க-வின் சீனியர் நிர்வாகிகள் எனப் பலரும் சசிகலாவைச் சந்தித்திருப்பார்கள்... மொத்த அ.தி.மு.க-வே தகித்துப்போய் நிலைமையே தலைகீழாக மாறியிருக்கும்.

ஆனால், அவர்களெல்லாம் தாங்களாகத் தன்னிடம் வருவார்கள் என்று சசிகலா அலட்சியமாக இருந்தார். சசிகலா அன்றைய தினமே தன்னால் அமைச்சர், எம்.எல்.ஏ-க்கள் ஆனவர்களைத் தொடர்புகொண்டு பேசியிருக்க வேண்டும். அவர் பேசுவார் என்று நான் உட்பட பலரும் எதிர்பார்த்திருந்தோம். ஆனால், எடப்பாடியை மீறிச் செல்வதற்கு எங்களிடம் ஒரு தயக்கம் இருந்தது. அந்தத் தயக்கத்தை சசிகலாதான் உடைத்திருக்க வேண்டும். ‘என்னப்பா நல்லா இருக்கீங்களா?’ என்று அவர் ஒரு வார்த்தை கேட்டிருந்தால் போதும், காட்சிகள் மாறியிருக்கும். பன்னீரும் எடப்பாடியும் தி.நகர் ஹபிபுல்லா சாலைக்கு ஓடிவந்திருப்பார்கள். தன் அலட்சியத்தால் எல்லா வாய்ப்புகளையும் நழுவவிட்டார் சசிகலா. அதற்கான விலையை அவர் கொடுப்பதற்கு அதிக காலம் பிடிக்கவில்லை. பிப்ரவரி 28-ம் தேதி சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சசிகலாவை மீண்டும் அ.தி.மு.க-வில் இணைப்பது தொடர்பாக பன்னீர், எடப்பாடியிடம் ஆலோசனை நடத்தினார். ஆனால், சசிகலாவை அ.தி.மு.க-வில் இணைப்பதற்கு எடப்பாடி ஒப்புக்கொள்ளாததால், அவரை ஒதுங்கச் சொல்லிவிட்டது டெல்லி. அதன் பிறகே மார்ச் 3-ம் தேதி ‘அரசியலிலிருந்து ஒதுங்குகிறேன்’ என்று அறிவித்தார் சசிகலா. இந்த வகையிலும் சசிகலா ஏமாற்றத்தைச் சந்தித்ததுதான் மிச்சம்.

அடுத்தது தினகரன் விவகாரம்... தேர்தலில் தனித்துக் களமிறங்கப்போவதாக தினகரன் கூறியபோது, சசிகலா தடுத்தும் அவர் கேட்கவில்லை. ‘நம்ம சைடுல 25 பேரு ஜெயிச்சு சட்டமன்றத்துக்குப் போனால், உங்களுக்குத்தான் பெருமை’ என்று சமாளித்த தினகரனும் முழுமையாகத் தோல்வியைத் தழுவி சசிகலாவை ஏமாற்றினார். இவ்வளவும் சசிகலாவின் அலட்சியத்தால் வந்த விளைவுகள்” என்றார் அந்த முன்னாள் அமைச்சர்.

அவர் நம்மிடம் சொன்னது உண்மை என்பது போலத்தான் காட்சிகள் நகர்கின்றன. அதிகாரம் கையில் இல்லை என்பதால், சசியைச் சுற்றியிருக்கும் உறவுகள் அவரை ஏமாற்றத் தொடங்கியிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. நம்மிடம் பேசிய சசிகலாவின் உறவினரும், அ.ம.மு.க-வின் மூத்த நிர்வாகியுமான ஒருவர், ‘‘அரசியலை நடத்துவதற்குப் பணம் தேவை. அந்தப் பணத்தைக் காப்பாற்றுவதற்கு அதிகாரம் தேவை. சசிகலாவிடம் ஆட்சி, கட்சி என இரண்டு அதிகாரங்களும் இல்லை. இதனால், அவரைச் சுற்றியிருக்கும் உறவுகள்கூட ஏமாற்றத் தொடங்கியிருக்கின்றன.

அலட்சியம்... ஏமாற்றம்... பதற்றம் - முடிவுக்கு வருகிறதா அரசியல் ஆட்டம்?

மிடாஸ் மதுபான ஆலை மற்றும் ‘ஜாஸ் சினிமாஸ்’ உள்ளிட்ட நிறுவனங்களின் கணக்கு வழக்குகளெல்லாம் முழுமையாக சசிகலாவைச் சென்றடைகின்றனவா என்பது சந்தேகமே. அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைக் கேட்டுக்கொள்ளும் நிலைமையில்தான் தற்போது சசிகலா இருக்கிறார். கொரோனா கட்டுப்பாடுகளால் அதிலிருந்தும் எந்த வருமானமும் கிடைப்பதில்லை என்று அவர்கள் தரப்பு கைவிரிப்பதாகக் கூறப்படுகிறது. இவை போக டீ எஸ்டேட், வாடகை வருமானம் என்கிற வகையில் மாதந்தோறும் கிடைக்கும் தொகையையும் சில உறவுகள் சாப்பிட ஆரம்பித்திருக்கிறார்கள். மொத்தத்தில் சசிகலா மீதான பயம் நாளுக்கு நாள் குறைந்துவருகிறது.

சொத்துகள் என்னவாகும்? -பதற்றத்தில் சசி

ஜெயலலிதா காலத்தில் பல பெயர்களில் ஆரம்பிக்கப்பட்ட ஏராளமான நிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துகள் என்னென்ன, எங்கெங்கு இருக்கின்றன, அவையெல்லாம் யார் யார் பராமரிப்பில் இருக்கின்றன, அவற்றிலிருந்து எவ்வளவு வருமானம் வருகிறது, யாரிடம் எவ்வளவு தொகையை போயஸ் தோட்டம் கொடுத்துவைத்திருந்தது என்ற விவரங்களை யெல்லாம் அறிந்த ஒரே நபர் சசிகலா மட்டுமே. சசிகலாவின் வங்கிக் கணக்குகள் மற்றும் பல்வேறு சொத்துகளை வருமான வரித்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டாலும், அதையும் தாண்டி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் மற்றும் கரன்சி வெளியே பாதுகாப்பாக இருக்கின்றன என்று கூறப்படுகிறது. தற்போது அதிகாரம் கையில் இல்லை என்பதால், வெளியில் கொடுத்து வைக்கப்பட்டிருக்கும் சொத்துகள் என்னவாகுமோ என்கிற கவலையும் சசிகலாவை வாட்டுகிறது.

சொத்துகளை மீட்க வேண்டும், தொடர்ந்து அவற்றைப் பாதுகாக்க வேண்டுமென்றால் அவருக்கு அதிகாரம் தேவை. அது அ.தி.மு.க-வால் மட்டுமே சாத்தியம். பணம் இல்லையென்றால் தனக்குக்கூட பாதுகாப்பு இருக்காது என்பது சசிகலாவுக்கு நன்றாகத் தெரியும். அதனால், ஒதுங்குகிறேன் என்று அறிவித்துவிட்டாலும், அரசியலுக்கு வந்தே தீர வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார் சசிகலா. குறிப்பாக, தேர்தல் முடிவுகளில் அ.தி.மு.க படுதோல்வியடைந்துவிடும்; அப்படி நடக்கும் பட்சத்தில் சீனியர் நிர்வாகிகள் பலரும் தன்னை நோக்கி வருவார்கள் என்று அவர் நினைத்திருந்த நிலையில், 65 தொகுதிகளில்

அ.தி.மு.க வென்றிருப்பது சசிக்குப் பெரிய ‘ஷாக்.’ இனி எடப்பாடியை மீறி கட்சியைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது அவருக்கு லேசுபட்ட காரியமல்ல” என்றார்.

அலட்சியம்... ஏமாற்றம்... பதற்றம் - முடிவுக்கு வருகிறதா அரசியல் ஆட்டம்?

ஆபரேஷன் பன்னீர்... கைகொடுக்குமா டெல்லி?

தன் அதிகாரத்தை மீட்டெடுப்பதற்காக டெல்லியின் தயவை நாட மூவ் செய்திருக்கிறாராம் சசிகலா. தனக்கு நெருக்கமான மத்திய அமைச்சர் ஒருவர் மூலமாக, “நீங்கள் சொல்லித்தான் நான் அரசியலிலிருந்து ஒதுங்கினேன். ஆனால், எதிர்பார்த்த வெற்றியை நீங்கள் பெறவில்லை. அ.தி.மு.க-வை ஒரு சமூகத்துக்கான கட்சியாகக் கொண்டுபோய்விட்டது எடப்படி தரப்பு. இதற்கும் மேல் என்னை மெளனமாக இருக்கச் சொல்கிறீர்களா?” என்று சூடாகவே சசிகலா கேட்டதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். அத்துடன், “பணம் இருக்கும் வரைதான் ஆதரவு, அனுசரனை எல்லாம். அக்காவுடன் சேர்ந்து 33 வருஷம் அரசியலில் இதையெல்லாம் பார்த்துவிட்டேன். எடப்பாடியால் இன்னும் எத்தனை நாளைக்குத் தன் ஆதரவாளர்களுக்குச் செலவு பண்ண முடியும்?” என்றும் அ.தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவரிடம் ஆவேசப்பட்டிருக்கிறார் சசி. அதாவது, எடப்பாடியின் கஜானா காலியாவதற்கு முன்பாக, தனது கஜானாவை மீட்டெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் சசி.

இப்போதைக்கு சசியின் பிரதான ஆயுதமே பன்னீர்செல்வம்தான் என்கிறது மன்னார்குடி தரப்பு. நம்மிடம் பேசிய மன்னார்குடி பிரமுகர்கள் சிலர், “சசிகலாவுக்கு ஆதரவாக பன்னீரும் அ.தி.மு.க-வுக்குள் காய்நகர்த்த ஆரம்பித்துவிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பைக் கேட்டு பன்னீர் விடாப்பிடியாக நின்றது சசி கொடுத்த தைரியத்தால்தான். தேர்தல் தோல்விக்குப் பிறகு தன்னைச் சந்திக்க வந்த ஆதரவாளர்களிடம் ‘ஆரம்பத்திலிருந்து சசிகலாவை உள்ளே கொண்டு வர வேண்டும் என்று சொல்லிவந்தேன். இப்போதும் அதையே சொல்கிறேன். அவர் வந்தால் மட்டுமே நமக்கு விடிவுகாலம்’ என்று பன்னீர் புலம்பியிருக்கிறார். அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையிலான அணிக்குத்தான் கட்சியின் சின்னமும் பெயரும் தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்பட்டிருக்கின்றன. கட்சியின் பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு ஜூன் மாதம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்படவிருக்கும் நிலையில், மதுசூதனன் உட்பட சில சீனியர் நிர்வாகிகளைக் கையில் எடுக்க ஆயத்தமாகிறது சசி தரப்பு. அதற்கு பன்னீர் தரப்பும் உதவத் தயாராக இருக்கிறது.

அலட்சியம்... ஏமாற்றம்... பதற்றம் - முடிவுக்கு வருகிறதா அரசியல் ஆட்டம்?

தேர்தல் தோல்வியால் கொங்கு ஏரியாவைத் தவிர்த்து, டெல்டா மற்றும் தென்மாவட்டப் பகுதிகளில் கட்சி நிர்வாகிகள் துவண்டு போயிருக்கிறார்கள். அவர்கள் எந்த நேரமும் அணி மாறலாம். இத்தனை நாள்கள் முதல்வர் பதவியில் இருந்துகொண்டு அ.தி.மு.க-வை எடப்பாடி பழனிசாமி கட்டுப்படுத்தியது பெரிய காரியம் அல்ல. இனிமேல்தான் எடப்பாடி உண்மையான சவால்களை எதிர்கொள்ளப் போகிறார். மத்திய அரசின் நெருக்கடி, பன்னீரின் கலகம் எனப் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில், 124 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுடன் எடப்பாடியை முதல்வராக அமர்த்திவிட்டுச் சென்றார் சசி. ஆனால், இப்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பிடிக்கவே எடப்பாடி தள்ளாடிவிட்டார். இனி ஒவ்வொரு கட்டத்திலும் அவர் இதேபோல் நெருக்கடியைச் சந்திக்க வேண்டிவரும். மொத்தத்தில் சசிகலாவின் அலட்சியம் தொடருமானால், அவரது எதிர்காலம் மேலும் சிக்கலாகிவிடும்” என்றனர். அதேசமயம் எடப்பாடியின் ஆதரவாளர்களோ, “சசிகலா தரும் நெருக்கடிகளெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. முதலில் அவர் தனது சொத்துகளை மீட்கட்டும்... அரசியல் அதிகாரத்தை மீட்பதையெல்லாம் பிறகு பார்க்கலாம்” என்கிறார்கள் சூசகமாக!

ராஜ மாதா தோரணையில் அதிகாரத்துடன் வலம்வந்த நாள்களெல்லாம் இன்றைக்கு சசிகலாவின் மனக்கண்ணில் வந்து நிழலாடலாம்... ஆனால், இன்றைக்கு அவரது நிழல் மட்டுமே அவரது அசைவுக்கு ஏற்ப நகர்கிறது என்பதே நிஜம். தன் ஆஸ்தியைக் காப்பாற்றிக்கொள்ள சசிகலாவுக்கு அ.தி.மு.க தேவை. ‘‘எடப்பாடியை வீழ்த்தி, தன்னைக் கட்சியில் நிலைநிறுத்திக்கொள்ள பன்னீருக்கு சசிகலா தேவை. இந்த தேவைகள்தான் ‘ஒற்றைத் தலைமை’ என்ற கோஷத்தை மீண்டும் மீண்டும் அ.தி.மு.க-வுக்குள் எழுப்பவைக்கும். அதைவைத்து சசிகலா ஆட்டம் காண்பிப்பார்’’ என்கிறார்கள் மன்னார்குடி உறவுகள். அவர் ஆட்டம் என்னவென்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.