Published:Updated:

சுற்றுப்பயணமா... வெற்றுப் பயணமா... சசிகலாவின் திட்டம் எடுபடுமா?

சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
சசிகலா

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுச் சிறை வாசத்துக்குப் பிறகு, கடந்த 2021 பிப்ரவரி 9-ம் தேதி பெங்களூரிலிருந்து பிரமாண்ட வரவேற்புடன் சென்னை வந்தடைந்தார் சசிகலா.

சுற்றுப்பயணமா... வெற்றுப் பயணமா... சசிகலாவின் திட்டம் எடுபடுமா?

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுச் சிறை வாசத்துக்குப் பிறகு, கடந்த 2021 பிப்ரவரி 9-ம் தேதி பெங்களூரிலிருந்து பிரமாண்ட வரவேற்புடன் சென்னை வந்தடைந்தார் சசிகலா.

Published:Updated:
சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
சசிகலா

``நம் இயக்கத்தில் நடைபெறும் செயல்களைப் பார்க்கும்போது, என் மனம் மிகவும் வேதனைப்படுகிறது. உரிமைகளை இழந்து, அராஜகத்தின் கைகளில் சிக்கி அல்லல்பட்டுக்கொண்டிருக்கிறது அ.தி.மு.க எனும் மாபெரும் இயக்கம். தனிப்பட்ட ஒருசிலரின் சுயநலத்தால் நமது வெற்றிச் சின்னமான இரட்டை இலைச் சின்னத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலைக்கு நம் கழகத் தொண்டர்கள் தள்ளப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது!’’

‘புரட்சித் தாய் சின்னம்மாவின் தொடர் புரட்சிப் பயணம்’ என்கிற பெயரில், சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் சசிகலா தொடர்ச்சியாக உதிர்த்துவரும் வார்த்தைகள் இவை. அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமைப் பஞ்சாயத்தால் குழப்பம் நிலவிவரும் சூழலில், மாவட்ட அளவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார் சசிகலா. ஆனால், ``டீசல் விற்கும் விலையில் சசிகலா வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பியிருப்பது வீண் முயற்சி’’ என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கமென்ட்டை ஆமோதிக்கும்விதமாக, தங்களின் ஆதங்கங்களைக் கொட்டித் தீர்க்கிறார்கள் சசிகலாவின் ஆதரவாளர்கள்.

சுற்றுப்பயணமா... வெற்றுப் பயணமா... சசிகலாவின் திட்டம் எடுபடுமா?

சிறை முதல் சுற்றுப்பயணம் வரை!

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுச் சிறை வாசத்துக்குப் பிறகு, கடந்த 2021 பிப்ரவரி 9-ம் தேதி பெங்களூரிலிருந்து பிரமாண்ட வரவேற்புடன் சென்னை வந்தடைந்தார் சசிகலா. வெளியில் வந்தவுடன் நிர்வாகிகள் அவரைச் சென்று சந்திப்பார்கள், கட்சியை சசிகலா மீட்பார் எனக் கனவு கண்டுகொண்டிருந்தனர் அவரின் ஆதரவாளர்கள். ஆனால், அப்படி எதுவும் செய்யாமல், அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொள்ளப்போவதாக அறிவித்தார் சசி. ஆனால், சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, அ.தி.மு.க நிர்வாகிகளுடன் அவர் பேசுவது போன்ற ஆடியோக்கள் வெளியாகின. ``நான் விட மாட்டேன், கட்டாயம் வந்துவிடுவேன். கட்சியை மீட்பேன்’’ என அந்த ஆடியோக்களில் பேசியிருந்தார் சசி. இதற்கிடையில், ‘சசிகலாவை அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் நீக்கியது செல்லும்’ என சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ``ஆன்மிகப் பயணமாகத்தான் தொடங்கினேன். ஆனால், அரசியல் பயணத்துக்கான நேரம் வந்துவிட்டதாக இப்போது உணர்கிறேன்’’ எனக் கொந்தளித்தார் சசிகலா. அதைத் தொடர்ந்து, தற்போது திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார் சசி. ஆனால், அவரின் ஆதரவாளர்களின் ஆதங்கமோ வேறு மாதிரியாக இருக்கிறது.

சுற்றுப்பயணமா... வெற்றுப் பயணமா... சசிகலாவின் திட்டம் எடுபடுமா?

“இப்போது விட்டால், வேறு வாய்ப்பே இல்லை!’’

இது குறித்து நம்மிடம் பேசிய அவரின் ஆதரவாளர்கள் சிலர், ``பெங்களூர் சிறையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த நாளே அ.தி.மு.க தலைமைக் கழகத்துக்கு அவர் சென்றிருந்தால் யாரும் அவரைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியாது. சொல்லப்போனால், அவரின் அதிரடியைப் பார்த்து, பாதி அ.தி.மு.க அமைச்சர்கள், மா.செ-க்கள் அப்போதே அவரின் பக்கம் வந்திருப்பார்கள். ஆனால், நல்லதொரு வாய்ப்பை அப்போது தவறவிட்டார். இப்போது சம்பந்தமே இல்லாமல் சுற்றுப்பயணம் கிளம்பியிருக்கிறார். திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சாவூர் ஆகிய மூன்று மாவட்டங்களில்தான் அவருக்குத் தற்போது ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். அதனால், அந்த மாவட்டங்களையே சுற்றிச் சுற்றி வருகிறார். நாமே பணம் கொடுத்து ஆட்களைத் திரட்டிவந்து கூட்டமாகக் காண்பிப்பதால் என்ன லாபம்... இதற்குப் பெயர்தான் மக்கள் சந்திப்பா... சொல்லுங்கள். தேவையில்லாத இந்தக் கூத்துக்குப் பணம் செலவழித்தே இருக்கும் கொஞ்ச நஞ்ச ஆதரவாளர்களும் ஓடிவிடுவார்கள். பா.ஜ.க-வுக்குப் பயந்துதான் தேர்தல் நேரத்தில் ஒதுங்கிக்கொண்டார் எனச் செய்திகள் வெளியாகின. அதை ஆமோதிக்கும் வகையில் மத்திய பா.ஜ.க அரசை விமர்சித்து அவர் ஒரு வார்த்தையும் பேசுவதில்லை. தமிழ்நாட்டில் மத்திய அரசை எதிர்க்காத அரசியல் ஒருபோதும் எடுபடாது. ஆனால், வழக்குகளுக்கு பயந்து அவர் வாய் திறப்பதில்லை.

அதுமட்டுமல்ல, மாநில அரசைக் கண்டித்தும்கூட வெறுமனே பேசிக்கொண்டிருந்தால் மட்டும் போதாது. மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளைக் கையிலெடுத்து ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும். மிகப்பெரிய ஆளுமையான அம்மாவே எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்கள் நம்மைத் தேடிவருவார்கள் என்று காத்திருக்கவில்லை. ஆனால், சின்னம்மா அப்படி நம்பிக்கொண்டிருப்பதுதான் வேதனை. அவரின் குடும்ப உறுப்பினர்கள் நடத்தும் மதுபான ஆலைக்கு அரசிடமிருந்து மாதத்துக்கு 20 கோடிக்கும் மேல் வருமானம் வருகிறது. அதற்கு பாதிப்பு வந்துவிடக் கூடாது என அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே மாநில அரசை எதிர்க்கத் தடையாக இருக்கிறார்கள். முதலில், அவரின் குடும்ப வட்டத்திலிருந்து அவர் வெளியே வர வேண்டும். சின்னம்மாவின் அனுபவத்தையோ, திறமையையோ நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. நல்ல ஆளுமையான நபர்தான். ஆனால், அவரின் செயல்பாடுகள்தான் மற்றவர்கள் கேலி செய்கின்ற வகையில் இருக்கின்றன. இப்போது சரியான சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற வகையில் ஓ.பி.எஸ்-ஸை ஆதரித்துக் களமிறங்க வேண்டும். முதலில், ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன், சின்னம்மா மூவரும் ஒற்றைப்புள்ளியில் இணைய வேண்டும். இந்தத் தருணத்தை விட்டுவிட்டால், அ.தி.மு.க-வுக்குள் நுழைவதற்கு வேறு வாய்ப்பே இல்லை’’ எனப் படபடத்தார்கள்.

சுற்றுப்பயணமா... வெற்றுப் பயணமா... சசிகலாவின் திட்டம் எடுபடுமா?

சசிகலாவின் ஆதரவாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான பள்ளிப்பட்டு நரசிம்மனிடம் இந்த விஷயங்களை முன்வைத்தோம்... ``மிகச்சரியான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறார் சின்னம்மா. புரட்சித்தலைவரை தி.மு.க-விலிருந்து நீக்கியபோதும், அம்மாவை வாகனத்திலிருந்து தள்ளிவிட்டபோதும் அவருக்கு எம்.எல்.ஏ-க்கள், மூத்த நிர்வாகிகளின் ஆதரவு இல்லை. அதனால், அவர்கள் தோற்றுப்போய்விட்டார்களா என்ன... இந்த இயக்கத்தில் அம்மா வுக்குப் பிறகு ஆளுமையான நபர் சின்னம்மாதான். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். அதைச் சமாளிக்கத்தான் வேண்டும். மக்கள் மத்தியில் சின்னம்மாவுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. பணம் கொடுத்து ஆட்களைத் திரட்டுகிறோம் என்பது தவறான கருத்து. அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டும், கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் அவரின் எண்ணம். அது நிச்சயமாக நிறைவேறும்’’ என்றார்.

சுற்றுப்பயணம் வெற்றுப் பயணம் ஆகாமலிருந்தால் சரி!