Published:Updated:

ஆபரேஷன் ஒற்றைத் தலைமை: இ.பி.எஸ்-ஸுக்கு உழைத்த தளபதிகள் யார், யார்?

அ.தி.மு.க பொதுக்குழு
பிரீமியம் ஸ்டோரி
அ.தி.மு.க பொதுக்குழு

இனியும் பொறுத்திருக்கக் கூடாது என்று முடிவெடுத்த எடப்பாடி, கட்சியைவிட்டு ஓ.பி.எஸ்-ஸை ஓரங்கட்ட நினைத்தார்.

ஆபரேஷன் ஒற்றைத் தலைமை: இ.பி.எஸ்-ஸுக்கு உழைத்த தளபதிகள் யார், யார்?

இனியும் பொறுத்திருக்கக் கூடாது என்று முடிவெடுத்த எடப்பாடி, கட்சியைவிட்டு ஓ.பி.எஸ்-ஸை ஓரங்கட்ட நினைத்தார்.

Published:Updated:
அ.தி.மு.க பொதுக்குழு
பிரீமியம் ஸ்டோரி
அ.தி.மு.க பொதுக்குழு

பல்வேறு களேபரங்களுக்கு மத்தியில் அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச் செயலாளராகப் பதவியேற்றிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. எம்.ஜி.ஆர்., நாவலர் நெடுஞ்செழியன், ப.உ.சண்முகம், ராகவானந்தம், ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் வகித்த பெருமைக்குரிய பதவியை, தற்போது எடப்பாடி பழனிசாமியும் எட்டிப் பிடித்திருக்கிறார். “அ.தி.மு.க-வில் சாதாரணத் தொண்டனாக இருந்து படிப்படியாக பதவிக்கு வந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அந்த வகையில் நானும் கட்சியில் படிப்படியாக உயர்ந்து இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். இந்தியாவிலேயே ஜனநாயக முறைப்படி செயல்படும் கட்சி அ.தி.மு.க-தான். அ.தி.மு.க-வில் கிளைக் கழகச் செயலாளராக பணிபுரிந்த நான் இங்குள்ள மூத்த தலைவர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் இடைக்கால பொதுச்செயலாளராகி யிருக்கிறேன்’’ என்று உணர்ச்சி பொங்க பொதுக்குழுவில் பேசினார் எடப்பாடி.

“இந்த பழனிசாமி இல்லை என்றால் நாளை ஒரு சின்னச்சாமி இந்தப் பதவிக்கு வருவார்’’ எனவும் அப்போது முழங்கினார். ஆனால், “ஆபரேஷன் ஒற்றைத் தலைமையில் தெளிவாகப் பல காய்களை நகர்த்தி, சில காய்களை வெட்டியே இந்த இடத்துக்கு வந்திருக்கிறார் எடப்பாடி. கடந்த ஒரு வருட காலமாகவே, அதற்கான வேலைகள் பிரித்துக்கொடுக்கப்பட்டு தெளிவாகக் காய்நகர்த்தப்பட்டு தற்போது முடிசூட்டுவிழா நடந்திருக்கிறது” என்கிறார்கள் இலை வட்டாரத்தில்.

ஆபரேஷன் ஒற்றைத் தலைமை: இ.பி.எஸ்-ஸுக்கு உழைத்த தளபதிகள் யார், யார்?

கள நிலவரம் சத்தியமூர்த்தி & சுனில் டீம்...

கடந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை ‘புரொமோட்’ பண்ணும் வேலைகளைச் செய்துவந்தவர், தேர்தல் வியூக வகுப்பாளரான சுனில். தேர்தல் முடிவுகள் சாதகமாக வராதபோதே, கட்சியைக் கைப்பற்றும் முடிவை எடுத்துவிட்டார் எடப்பாடி. அதற்காக, கட்சியின் கீழ்மட்ட அளவில் என்ன நிலவரம் இருக்கிறது, மக்கள் மத்தியில் தன்னை எப்படிப் பார்க்கிறார்கள் உள்ளிட்ட விவரங்களைச் சேகரிக்கும் பொறுப்பை இந்த சுனிலிடம் ஒப்படைத்திருக்கிறார். அவரை நம்பியிருக்காமல் கூடுதலாக, தன் சமூகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உளவுத்துறை ஐ.ஜி சத்தியமூர்த்தியிடமும் அவ்வப்போது ஆலோசனை செய்து வந்திருக்கிறார். ஒற்றைத் தலைமை விவாதத்தைக் கட்சிக்குள் எழுப்புவதற்கு முன்பாக இருவரிடமுமே தீவிரமாக ஆலோசனை செய்திருக்கிறார். இருவரும் இதுதான் சரியான நேரம் என ‘கிரீன் சிக்னல்’ கொடுக்க, மாதவரம் மூர்த்தியை அழைத்து, அதற்கான விதையைத் தூவச் சொல்லியிருக்கிறார் எடப்பாடி.

யூ.ஆர்.வி டீம்...

‘முதல்வர் வேட்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை எப்படி பன்னீரைக் கட்சியில் வைத்துக்கொண்டே சாதித்தோமோ அதேபோல, ஒற்றைத் தலைமை விவகாரத்தையும் சாதித்துவிடலாம்’ என்பதுதான் முதலில் எடப்பாடியின் கணக்காக இருந்துள்ளது. சசிகலாவுக்கு எதிராக ‘தர்ம யுத்தம்’ தொடங்கியதைப்போல, பன்னீர் தொடங்கிய ‘தர்மர் யுத்தமே’ அவரைக் கட்சியிலிருந்து ஓரம்கட்டிவிட வேண்டும் என்கிற முடிவுக்கு எடப்பாடியைத் தள்ளியிருக்கிறது. சி.வி.சண்முகம், ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ்சத்யன் எனத் தன்னுடைய ஆதரவாளர்கள் இருவருக்கே ராஜ்ய சபா இடங்களைக் கொடுத்துவிட வேண்டும் என்கிற தீர்மானத்தில் இருந்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், ‘என்னுடைய பங்காக ஒரு சீட்டைக் கொடுத்துவிட வேண்டும்’ என பன்னீர் விடாப்பிடியாக இருக்க... வேண்டா வெறுப்பாக, ஆர்.தர்மருக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

ஆபரேஷன் ஒற்றைத் தலைமை: இ.பி.எஸ்-ஸுக்கு உழைத்த தளபதிகள் யார், யார்?

இனியும் பொறுத்திருக்கக் கூடாது என்று முடிவெடுத்த எடப்பாடி, கட்சியைவிட்டு ஓ.பி.எஸ்-ஸை ஓரங்கட்ட நினைத்தார். ஆனால், தொடர்ச்சியாக நீதிமன்றப் படிக்கட்டுகளை பன்னீர் நாடியதால், அவரைக் கட்சியைவிட்டு நீக்கியாவது நினைத்ததை சாதித்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். அதற்கு முன்பாக, தென்மாவட்ட முக்குலத்தோர் சமுதாய எம்.எல்.ஏ-க்களை ஒருங்கிணைக்கும் வேலையை உதயகுமார், ராஜன் செல்லப்பா, விஜயபாஸ்கர் (யூ.ஆர்.வி டீம்) இந்த மூவரிடமும்தான் ஒப்படைத்திருக்கிறார். ஓ.பி.எஸ்-ஸை நீக்கும்போது, சமூகரீதியாகத் தன்மீது அதிருப்தி எழுந்துவிடக் கூடாது; என்பதால் அவருக்கு துரோகிப் பட்டம் சுமத்திவிட வேண்டும் என்கிற அசைன்மென்ட்டும் இவர்களுக்கே கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே, தன்னுடைய மகனுக்கு எம்.பி சீட் கிடைக்கவிடாமல் தடுத்தவர் என்கிற வகையில் ராஜன் செல்லப்பாவும், தன்னுடைய ஆதரவாளரான கீர்த்திகா முனியசாமிக்கு எம்.பி சீட் கிடைக்கவிடாமல் செய்தவர் என்கிற வகையில் ஆர்.பி.உதயகுமாரும் பன்னீர்மீது கடுமையான கோபத்தில் இருந்தார்கள். எடப்பாடியின் இந்த அசைன்மென்ட்டால் அவரிடம் நல்ல பெயர் வாங்கவும், பன்னீர் மீதான வஞ்சத்தை தீர்த்துக்கொள்ளவும் முடியும் என நினைத்தவர்கள் இறங்கி அடிக்க ஆரம்பித்தார்கள். பன்னீரைக் கடுமையாக விமர்சித்தார்கள். அதேபோல, பொதுக்குழு அன்று அடையாள அட்டையுடன் வருபவர்களை மட்டுமே, அனுமதிக்கும் ஆர்.எஃப்.ஐ.டி இயந்திர ஐடியாவும் விஜயபாஸ்கருடையதுதானாம். அதனால்தான், பொதுச்செயலாளர் தீர்மானங்களை வாசிக்கும் வாய்ப்பை ஆர்.பி.உதயகுமாருக்கும், கழகத்தின் வரவு செலவுக் கணக்கை வாசிக்கும் வாய்ப்பை சி.விஜயபாஸ்கருக்கும் அளித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

தங்கமணி & வேலுமணி கிரவுண்ட் வொர்க்...

முக்குலத்தோர் சமூக எம்.எல்.ஏ-க்கள், மா.செ-க்களின் எண்ணவோட்டத்தை அறிய யூ.ஆர்.வி டீம் என்றால், ஒட்டுமொத்தமாக அணிதிரட்ட ‘மணி & மணி’ டீமைக் களத்தில் இறக்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தென் மாவட்டம், வட மாவட்டம் என்றில்லாமல் ஒட்டுமொத்தமாக அனைவருடனும் தொடர்பில் இருந்து தொடர்ச்சியாகத் தங்களது ஆதரவு வட்டத்தை விரித்துக்கொண்டே சென்றதில் இருவரின் பங்கும் மிக முக்கியமானது. சட்டமன்றத் தேர்தலில் சீட் கொடுக்கும்போதே இதற்கான திட்டங்களுடன் காய்நகர்த்தப்பட்டிருக்கிறது. ஒற்றைத் தலைமை விவகாரம் எழுந்தவுடன் அனைவரையும் ‘கவனிக்கும்’ பொறுப்பும் இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பிரதிபலனாக கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பு வேலுமணிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சி துணைத் தலைவர் பொறுப்பு தங்கமணிக்கு வழங்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, நத்தம் விசுவநாதன், சி.வி.சண்முகம்
ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, நத்தம் விசுவநாதன், சி.வி.சண்முகம்

சீனியர் சப்போர்ட்...

கட்சியில் சீனியர்களின் சப்போர்ட்டும் தனக்கு இருக்க வேண்டும். அப்போதுதான் தொண்டர்களின் மத்தியில் எந்தவிதக் குழப்பங்களும் ஏற்படாமல் இருக்கும் என முடிவெடுத்த எடப்பாடி, அதற்காக நத்தம் விசுவநாதனையும், கே.பி.முனுசாமியையும் தேர்தெடுத்திருக்கிறார். கட்சியில், செம்மலை, பொன்னையன், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தம்பிதுரை உள்ளிட்ட பல சீனியர்கள் இருந்தபோதும், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் தன்னைக் காலை வாரி விடுவார்கள் என நினைத்ததால் இவர்கள் இருவரையும் ‘டிக்’ செய்திருக்கிறார். தங்களுக்கு வழங்கப்பட்ட பணியைப் பொதுக்குழுவில் செய்ததுடன், வெளியில் பன்னீரின் பர்சனல் இமேஜை டேமேஜ் செய்யும் வேலையில் மிகத் தீவிரமாக இறங்கினர் முனுசாமியும், விசுவநாதனும். அதற்கான பரிசாகத்தான், கட்சியின் துணைப் பொதுச்செயலாளராகும் யோகம் இருவருக்கும் அடித்திருக்கிறது.

சட்டம் & தலைமைக் கழகம்...

சட்டரீதியாக சி.வி.சண்முகம், தளவாய் சுந்தரம், பொன்னையன், இன்பதுரை ஆகியோர் எடப்பாடிக்குப் பக்கபலமாக இருந்துள்ளனர். குறிப்பாக, நீதிமன்றங்களில் அதற்கான வேலை களை சி.வி.சண்முகமே முன்னெடுத்தி ருக்கிறார். உயர் நீதிமன்றத்தில் விஜயநாராயண னும், உச்ச நீதிமன்றத்தில் முகுல் ரோத்கி வழிகாட்டுதலில் சி.எஸ்.வைத்தியநாதனும் ஆஜராகினர். சட்டரீதியாக ஆரம்பத்தில் சற்று பின்னடைவுகள் இருந்தபோதும், போகப் போக தெளிவாகக் காய்நகர்த்தி அனைத்துத் தடைகளையும் உடைத்திருக்கிறது இந்தத் தரப்பு.

அதேபோல, அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி மகாலிங்கத்தின் பங்கும் இதில் இருந்திருக்கிறது. அ.தி.மு.க அலுவல் மெயிலில் ஓ.பி.எஸ்-ஸின் அறிக்கையை தாமதப்படுத்தியதில் தொடங்கி பல்வேறு விஷயங்களில் எடப்பாடித் தரப்புக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார் அவர். அதனால்தான், பொதுக்குழு நாளன்று, தலைமைக் கழக அலுவலகத்துக்குச் சென்ற பன்னீரின் ஆதரவாளர்கள், மகாலிங்கத்தின் இருக்கை எது எனத் தேடிச் சென்று அடித்து நொறுக்கிய சம்பவம் நடந்தேறியது.

எடப்பாடிக்கு இன்னும் நெடும்பயணம் காத்திருக்கிறது. அப்போது யாரெல்லாம் துணை நிற்பார்களோ?!