Published:Updated:

மாவட்டமெல்லாம் மல்லுக்கட்டு! - திணறும் ஸ்டாலின்

மாவட்டமெல்லாம் மல்லுக்கட்டு! - திணறும் ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
மாவட்டமெல்லாம் மல்லுக்கட்டு! - திணறும் ஸ்டாலின்

தி.மு.க உட்கட்சிப் பஞ்சாயத்தில் அதிகமான புகார்கள் வந்தது தென்காசி மாவட்டத் திலிருந்துதான்.

மாவட்டமெல்லாம் மல்லுக்கட்டு! - திணறும் ஸ்டாலின்

தி.மு.க உட்கட்சிப் பஞ்சாயத்தில் அதிகமான புகார்கள் வந்தது தென்காசி மாவட்டத் திலிருந்துதான்.

Published:Updated:
மாவட்டமெல்லாம் மல்லுக்கட்டு! - திணறும் ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
மாவட்டமெல்லாம் மல்லுக்கட்டு! - திணறும் ஸ்டாலின்

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி இருந்த போது, அறிவாலயத்தில் எப்போதுமே தொண்டர்களின் கூட்டம் களைகட்டும். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கட்சி அலுவலகம் வருவதைத் தவறவிட்டதில்லை கருணாநிதி. தவறு செய்யும் கட்சி நிர்வாகிகளை அழைத்து, அன்பாகவோ அதட்டலாகவோ நேரடியாக அவரே கண்டித்துமிருக்கிறார். கட்சி விவகாரங்கள் குறித்து, கருணாநிதியிடம் ஒரு வட்டச் செயலாளர்கூட நேரடியாக விவாதிக்க முடிந்தது. ஆனால் இன்று, தி.மு.க தலைவர் ஸ்டாலினை எந்தத் தொண்டனாலும் சந்திக்கக்கூட முடியவில்லை என்கிறார்கள் கட்சிக்காரர்கள். “எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சரி, தன்னைச் சுற்றியிருக்கும் சிலரிடம் விவகாரத்தைப் பேசி முடிக்கும்படி சொல்லிவிட்டுப் போய்விடுகிறார் ஸ்டாலின். அவர்கள் கட்டப்பஞ்சாயத்துதான் செய்கிறார்கள். அமைப்பு ரீதியாக இருக்கும் 77 மாவட்டங்களில், 20 மாவட்டங்களுக்கு மேல் பெரும் மல்லுக்கட்டு நடக்கிறது. கட்சிக்காரர்கள் வண்டி கட்டிக்கொண்டு புகாரளிக்க வருகிறார்கள். ஒரு கட்சித் தலைவராக, இதையெல்லாம் ஸ்டாலின் காதுகொடுத்துக்கூடக் கேட்பதில்லை” என்று புலம்பித் தீர்க்கிறார்கள் தொண்டர்கள். கழகத்தின் முப்பெரும் விழா முடிந்த கையோடு, மாவட்டச் செயலாளர்களுக்கான உட்கட்சித் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தொண்டர்களின் இந்தக் குமுறல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. எந்த மாவட்டத்தில், என்ன பிரச்னை... ஸ்டாலினால் அதை ஏன் சமாளிக்க முடியவில்லை? விவரமறிய களமிறங்கினோம்!

ஆசிட் வீச்சு, கத்திக் குத்து... ‘திகுதிகு’ தேனி!

நகரம், ஒன்றிய அளவிலான தி.மு.க உட்கட்சித் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில், அது தொடர்பான பஞ்சாயத்துகளுக்கே அறிவாலயத்தில் இன்னும் முடிவு வரவில்லை. இந்தச் சூழலில், மாவட்டச் செயலாளர்களுக்கான தேர்தலில் அனல் வீசுகிறது. தேனி, ராமநாதபுரம், தஞ்சாவூர், தென்காசி, திருப்பூர், வட சென்னை மாவட்டங்களிலிருந்து மாவட்டச் செயலாளர்களுக்கு எதிராக வரும் புகார்கள் அறிவாலயத்தையே அதிரச்செய்கின்றன.

தேனி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணனுக்கு எதிராகச் செயல் பட்ட கட்சி நிர்வாகிமீது ஆசிட் வீசப்பட்டதால், மாவட்ட அரசியல் பற்றி எரிகிறது. நம்மிடம் பேசிய தேனி மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் சிலர், “மாவட்டப் பிரதிநிதியாக இருக்கும் பண்ணைப்புரம் ராஜேந்திரன், முன்னாள் மாவட்டச் செயலாளர் ஜெயகுமாருடன் இணக்கமாக இருக்கிறார். இது கம்பம் ராமகிருஷ்ணனுக்குப் பிடிக்கவில்லை. பண்ணைப்புரம் பேரூர் கழகச் செயலாளர் பொறுப்புக்கு ராஜேந்திரன் விண்ணப்பித்ததும், ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணனின் ஆதரவாளர் கள், ராஜேந்திரன் மீது ஆசிட் வீசினர். வெந்த உடலோடு அறிவாலயத்துக்கு வந்த ராஜேந்திரன், கட்சி சீனியர்களிடம் காயங்களைக் காட்டி நீதி கேட்டார். பரிதாபப்பட்டதோடு அவர்கள் வழியனுப்பிவைத்து விட்டனர். இதுவரை, கட்சிரீதியாக எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல, ராமகிருஷ்ணன் ஆதரவாளரால் இளைஞரணிப் பிரமுகர் ஹக்கீம் என்பவருக்குக் கத்திக் குத்து விழுந்திருக்கிறது. கம்பம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுகுமாரன் என்பவர், ‘கம்பம் ஒன்றிய பெருந்தலைவராக பா.ஜ.க-வைச் சேர்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதற்கு ராமகிருஷ்ணன்தான் காரணம்’ எனத் தனது லெட்டர் பேடிலேயே நான்கு பக்கப் புகாரை அறிவாலயத்துக்குக் கொடுத்திருக்கிறார். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை” என்றனர்.

மாவட்டமெல்லாம் மல்லுக்கட்டு! - திணறும் ஸ்டாலின்

அ.தி.மு.க-வுக்கு அரியணை... வேட்டுவைத்த ‘படையல்’!

திருப்பூரிலும் கட்சிப் பஞ்சாயத்து களைகட்டுகிறது. திருப்பூர் தெற்கு மாவட்டத்தில், குடிமங்கலம் ஒன்றியச் செயலாளராக இருந்த கிரி என்பவரை மாற்றிவிட்டு, ஓராண்டுக்கு முன்பாக அ.தி.மு.க-விலிருந்து வந்த முரளி என்ப வருக்குப் பொறுப்பு அளிக்கப்பட்டிருப்பது கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருப்பூர் மத்திய மாவட்டத்தில், காங்கேயம் வடக்கு ஒன்றியச் செயலாளர் சிதம்பரத்துக்கு அதிகப்படியான நிர்வாகிகள் ஆதரவு இருந்தும், அமைப்புத் தேர்தலில் அவரைத் தேர்ந்தெடுக்காதது சர்ச்சையாகி யிருக்கிறது. மூலனூர் ஒன்றியச் செய லாளர் பழனிசாமியை நீக்க முயன்றிருக் கிறார் மத்திய மாவட்டச் செயலாளர் செல்வராஜ். அது தலைமையால் தடுத்து நிறுத்திவைக்கப்பட்டிருப்பது தி.மு.க-வினரிடையே விவாதப் பொருளாகி யிருக்கிறது.

தஞ்சாவூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் ஏனாதி பாலசுப்ரமணியம் மீது புகார்கள் வரிசைகட்டுகின்றன. நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்ட தி.மு.க சீனியர்கள் சிலர், “தன் மகன் ராமநாதனை பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றியச் செயலாளராக்கக் காய்நகர்த்தினார் ஏனாதி. ஆனால், லோக்கல் கட்சிக்காரர்கள் தலைமைக்குப் புகார் கொடுத்ததால், அந்த ஒன்றியத் தேர்தலையே நிறுத்திவைத்தது கட்சித் தலைமை. பட்டுக்கோட்டை நகராட்சி துணைத் தலைவர் தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெற்றதற்கு, ஏனாதிக்குச் செய்யப்பட்ட ‘படையலே’ காரணம். இந்தச் சிக்கல்களால் அவர் பதவிக்கே வேட்டு காத்திருக்கிறது” என்றனர்.

உறவுகளுக்கே பதவி... தலைமைக்கே விபூதி!

தி.மு.க உட்கட்சிப் பஞ்சாயத்தில் அதிகமான புகார்கள் வந்தது தென்காசி மாவட்டத் திலிருந்துதான். தென்காசி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் செல்லதுரை, தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் சிவபத்மநாபன் ஆகிய இருவர் மீதும் புகார்கள் குவிந்திருக்கின்றன. நம்மிடம் பேசிய தென்காசி மாவட்ட தி.மு.க-வினர், “கடையநல்லூர் ஒன்றிய சேர்மனாக செல்ல துரையின் சகோதரிதான் இருக்கிறார். ஒன்றியச் செயலாளர் பொறுப்பை சகோதரியின் மகன் சுரேஷுக்கு வழங்கியிருக்கிறார். இதுபோக, சார்பு அணிகளிலெல்லாம் செல்லதுரையின் உறவுகள்தான் பதவியில் அமர்ந்திருக்கிறார்கள். இது கட்சிக் காரர்களிடம் வெறுப்பை உருவாக்கி விட்டது. இது தொடர்பான புகார்களைத் தலைமை விசாரித்தபோது, சமூகப் பிரச்னையை செல்லதுரை உருவாக்கப் பார்த்ததால், விசாரணைக் குழுவிலிருந்த அமைச்சர் நேரு டென்ஷனாகிவிட்டார்.

தென்காசி தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட சுரண்டை நகராட்சி சேர்மனுக் கான தேர்தலில், தி.மு.க வேட்பாளர் தோல்வியைத் தழுவியதற்கு மாவட்டப் பொறுப்பாளர் சிவபத்மநாபன்தான் காரணம். சி.ஐ.டி காலனியிலிருந்து வந்த ஸ்வீட் பாக்ஸ்களைச் சரியாக அவர் விநியோகம் செய்யாமல், தலைமைக்கே விபூதி அடித்துவிட்டார். இது தொடர் பான புகார்கள் இன்னும் அறிவாலயத்தின் விசாரணையில் இருக்கின்றன” என்றனர்.

ராமநாதபுரம் மாவட்டப் பொறுப் பாளரான காதர்பாட்ஷா முத்துராம லிங்கம் மீதும் புகார்கள் அறிவலாயத்தில் குவிகின்றன. தொண்டி பேரூராட்சித் தலைவர் பதவிக்கு, ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி கவுன்சிலர் சல்மாவை சேர்மனாக்க முடிவுசெய்திருந்தனர். அதற்கு காதர்பாட்ஷாவும் உத்தரவாதம் அளித்திருந்திருக்கிறார். ஆனால், வாக்குறுதியை மீறி, ஷாஜஹான் பானு என்பவரை சேர்மனாக்கிவிட்டார் காதர்பாட்ஷா. அதே போல, கீழக்கரை நகராட்சியில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹமீது சுல்தான் என்பவருக்கு நகராட்சி சேர்மன் பொறுப்பைக் கொடுப்பதாக வாக்கு கொடுத்திருக்கிறார் காதர்பாட்ஷா. கடைசியில் செஹானாஸ் ஆபிதா என்ற பெண் கவுன்சிலரை சேர்மன் ஆக்கிவிட்டார். இதற்காகக் கைமாறிய ஸ்வீட் பாக்ஸ்களின் கதையைத்தான் ராமநாதபுரம் தி.மு.க-வினர் பரபரப்பாகப் பேசிக்கொள் கிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் அப்துல் வஹாப், மாலை ராஜா, ஆவுடையப்பன், சபா நாயகர் அப்பாவு, லட்சுமணன், எம்.பி ஞான திரவியம் எனப் பல கோஷ்டிகள் இருக்கின்றன. லட்சுமணனிடமிருந்த நெல்லை மாநகரச் செயலாளர் பதவியைத் தன் ஆதரவாளரான சுப்ரமணியனுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறார் வஹாப். இது நெல்லை அரசியலில் தீயைப் பற்றவைத்திருக்கிறது. கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் ஆவுடையப்பனுக்கு எதிராக, “உள்ளாட்சித் தேர்தலில் ஆவுடையப்பன் பார்த்த உள்ளடி வேலைகளால் திசையன்விளையை தி.மு.க இழக்க நேர்ந்தது. அப்பாவு தன் மகன் அலெக்ஸை வைத்து பனங்குடி மற்றும் வள்ளியூர் யூனியன்களில் வெற்றி பெற்றிருக்கிறார். சட்டப்பேரவைத் தேர்தலில் சபாநாயகருக்கு எதிராக சுயேச்சையாக நின்றவருக்கு ஒன்றிய அவைத்தலைவர் பதவியும், அண்ணா மலைக்கு வரவேற்பு கொடுத்தவருக்குக் கட்சியில் முக்கியப் பொறுப்பும் கொடுத்ததில் ஆவுடையப்பன்மீது கடும் அதிருப்தி நிலவுகிறது” என்று கொதிக்கிறார்கள் நெல்லை தி.மு.க-வினர்.

மாவட்டமெல்லாம் மல்லுக்கட்டு! - திணறும் ஸ்டாலின்

மேலிடக் குடும்பத்துக்கு கிஃப்ட்... தீய்ந்துகொண்டிருக்கும் கட்சி!

சென்னையைப் பொறுத்தவரை, அதிகமான சட்டமன்றத் தொகுதிகளைக் கைவசம் வைத்திருக்கும் சேகர் பாபு, மா.சுப்பிர மணியன் இருவரின் மாவட்டங்களையும் அமைப்புரீதியாகப் பிரிப்பதற்கு முதலில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அவர்கள் இரு வரும் ஸ்டாலினைச் சந்தித்து முரண்டுபிடித்ததால், மாவட்டப் பிரிப்பு முயற்சியைத் தலைமை கைவிட்டது. சென்னையில், வட சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் சுதர்சனத்தின் மீதுதான் அதிகப்படியான புகார்கள் குவிந்திருக்கின்றன.

நம்மிடம் பேசிய சென்னை தி.மு.க மாவட்டப் பிரதிநிதிகள் சிலர், “சென்னை மேயர் வேட்பாள ராக அறியப்பட்ட கவிதா நாராயணனைத் தோற்கடித்ததில் தொடங்கி, தனது தம்பிக்கு மண்டலப் பொறுப்பாளர் வாங்கியது வரை சொந்தங்களுக்காகவும், தனது சமூகத்துக்காகவும் மட்டுமே மாதவரம் சுதர்சனம் செயல்பட்டது கட்சியினரிடம் அதிருப்தியை உருவாக்கி யிருக்கிறது. இதுவரை கட்சிக்கென ஒரு அலுவலகம் இல்லாதது, இளைஞரணி மற்றும் வழக்கறிஞர் அணியில் பொறுப்புகள் வழங்கப் படாதது என சுதர்சனத்தின் மீதான புகார்களுக்கு எல்லையில்லை” என்றனர்.

திருவள்ளூர் மத்திய மாவட்டப் பொறுப்பாள ரான அமைச்சர் சா.மு.நாசர், மொத்த மாவட்டத்தையும் ‘கன்ட்ரோல்’ செய்வது, இதர திருவள்ளூர் மாவட்டச் செயலாளர்களைக் கடுப்பாக்கியிருக்கிறது. நம்மிடம் பேசிய ஒன்றிய நிர்வாகிகள் சிலர், “பூந்தமல்லி முன்னாள் நகரச் செயலாளர் ரவி, நாசருக்கு எதிராக அரசியல் செய்பவர். அதனாலேயே, அவருக்கு இம்முறை நகர்மன்றத் தலைவர் பதவி கிடைக்கவிடாமல் பார்த்துக்கொண்டார் நாசர். லோக்கல் அரசியலில் செல்வாக்கான பூந்தமல்லி ஜெயக்குமாரை ஓரங்கட்டிவிட்டு, கமலேஷ் என்பவருக்கு ஒன்றியச் செயலாளர் பதவியை அளித்திருக்கிறார் நாசர். அமைச்சருக்கு எதிராக பூந்தமல்லி எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி, திருவள்ளூர் எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரன் எனப் பெரும்படையே எதிரணியில் நிற்கிறது. மேலிடக் குடும்பத்துக்கு ‘பால்’ பொருள்களை கிஃப்ட் செய்தே பதவியைக் காப்பாற்றிக்கொள்ளலாம் என்கிற கனவில் இருக்கிறார் நாசர். ஆனால், கட்சிக் கட்டமைப்பு தீய்ந்து கொண்டிருக்கிறது” என்கிறார்கள் பொருமலுடன்.

அதேபோல, தருமபுரி, சேலம், கள்ளக் குறிச்சி, திருவள்ளூர் கிழக்கு, கன்னியாகுமரி, மதுரை, நாகப்பட்டினம், அரியலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும் கட்சிப் பிரச்னைகள் கொளுந்துவிட்டு எரிகின்றன.

பொறுப்பு அமைச்சர்களால் குழப்பம்... மாவட்டம்தோறும் மல்லுக்கட்டு!

மாவட்டத்துக்குள் இருக்கும் பிரச்னைகள் போதாதென, பொறுப்பு அமைச்சர்களாக மாவட்டம்தோறும் நியமிக்கப்பட்டவர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே எழுந்திருக்கும் தகராறு, கடும் மல்லுக்கட்டாக மாறியிருக்கிறது. இது குறித்து அறிவாலய சீனியர் நிர்வாகிகளிடம் பேசினோம். “பொதுவாக சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலின்போதுதான் அமைச்சர்கள் வேறு சில மாவட்டங்களுக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்படுவார்கள். இதுவரை இல்லாத புதுமையாகக் கடந்த ஆண்டு ஒரு மாவட்ட அமைச்சரை, மற்றொரு மாவட்டத்துக்குப் பொறுப்பாளராக நியமித்தது கட்சித் தலைமை. கோவை மாவட்டப் பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி நியமிக்கப் பட்டதிலிருந்தே கட்சி நிர்வாகிகளுக்கும், அவருக்கும் ஒத்துப்போகவில்லை. கோவை யிலுள்ள ஐந்து மாவட்டச் செயலாளர்களில், கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் மட்டும்தான் செந்தில் பாலாஜியோடு நெருக்கமாக இருக்கிறார். கட்சித் தலைமையுடனான தனக்குள்ள நெருக்கத் தைப் பயன்படுத்தி, தனக்கு எதிராக இருக்கும் மற்ற நான்கு மாவட்டச் செயலாளர்களையும் மாற்றத் தீர்மானித்திருக்கிறார் செந்தில் பாலாஜி. இது, கட்சி நிர்வாகிகளிடம் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது.

தருமபுரி மாவட்டத்துக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்தான் பொறுப்பு அமைச்சராக இருக்கிறார். கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி, அமைச்சர் எ.வ.வேலுவின் ஆதரவாளர் என்பதால், எம்.ஆர்.கே பேச்சை சுப்ரமணி கேட்பதே இல்லை. இது, லோக்கல் அரசியலில் பிரச்னையை உருவாக்கிவிட்டது. சுப்ரமணியின் அதிகாரத்தை மட்டுப் படுத்த பாப்பிரெட்டிப்பட்டி பழனியப் பனை மாவட்டச் செயலாளர் பொறுப் புக்குச் சிபாரிசு செய்திருக்கிறார் எம்.ஆர்.கே.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட் டத்துக்குப் பொறுப்பு அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி நியமிக்கப்பட்டதிலிருந்து, திருச்சியில் நடந்துவரும் நேரு - அன்பில் மகேஷ் கோஷ்டி மோதல், தஞ்சை வரை தடதடக்கிறது. கல்யாணசுந்தரமும், ஏனாதி பாலசுப்பிர மணியனும் நேருவின் ஆதரவாளர்கள் என்பதால், அவர்கள் அன்பில் பேச்சை கேட்பதில்லை” என்றனர். இதேபோல கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி என மாவட்டப் பொறுப்பு அமைச்சர்களால் குழப்பங்கள் குறைவின்றி பரபரக்கின்றன.

உட்கட்சிப் பிரச்னை... திணறும் ஸ்டாலின்!

கட்சியில் இவ்வளவு பிரச்னைகள் தாண்டவமாடுகின்றன. ஆனால், தீர்வுகாண வேண்டிய தி.மு.க தலைவரான ஸ்டாலின் பிரச்னைகளைச் சந்திக்காமல் தள்ளிப்போடு கிறார். இது தொண்டர்களிடையே வெறுப்பை உருவாக்கியிருக்கிறது. நம்மிடம் பேசிய மிக மூத்த அமைச்சர் ஒருவர், “கருணாநிதி தலைவரா இருந்தப்போ, எல்லா பிரச்னைகளையும் அவரே பேசி முடிச்சுடுவார். ‘அந்தப் பதவியை விட்டுக் கொடுய்யா. உனக்கு நான் இருக்கேன்ல’ என்று பேசியே சமாதானம் செஞ்சுடுவார். ஆனா, தம்பி ஸ்டாலின் அப்படியில்லை. `கட்சிக்காரங்க கும்பலா அறிவாலயத்துல இருக்காங்க’னு தகவல் வந்தாலே, வீட்டுக்கு வண்டியை விட்டுடுறார். அவருக்கும் கட்சிக்காரங்களுக்கும் இடையே இடைவெளி அதிகமாகிடுச்சு.

முப்பெரும் விழா முடிந்த கையோடு கட்சிப் பொதுக்குழுவை நடத்தலாம்னு நினைச்சோம். ஆனா, உட்கட்சித் தேர்தலையே உருப்படியா நடத்தி முடிக்க முடியாததால, திட்டமிட்டபடி பொதுக்குழுவைக் கூட்ட முடியலை. பிரச்னைக்குரிய, புகாருக்குள்ளான மாவட்டச் செயலாளர்களை மாற்றலாம்னு ஸ்டாலின் நினைக்கிறார். ஆனால், குடும்பப் பிரமுகர்கள் தலையீடு, சீனியர்கள் சிபாரிசுனு தடை விழுறதால முடிவெடுக்க முடியாம திணறுறார். ஒரு தலைவனுக்கு இந்தத் திணறல் அழகல்ல. பூதாகரமாகிக்கொண்டிருக்கும் மாவட்டரீதியிலான உட்கட்சிப் பிரச்னைகளை ஸ்டாலின் நேரடியாகத் தலையிட்டு தீர்த்துவைக்கணும். அவர் தன் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்குற தால, உதயநிதிக்குத்தான் பின்னாள்களில் சிக்கல் வரும்” என்றார் விரிவாக.

ஒரு மாநிலத்தின் முதல்வர் என்பது தனிப் பொறுப்பு. அதேசமயம் ஒரு கட்சியின் தலைவராகவும் தான் இருப்பதை ஸ்டாலின் மறந்துவிடக் கூடாது. முதல்வர் அரியணையை அவருக்குச் சாத்தியப்படுத்தியது தி.மு.க எனும் கட்சிதான். அந்தக் கட்சியின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் அவரே முழுப் பொறுப்பு. அதனால், கொஞ்சம் அறிவாலயத்தின் பக்கமும் வண்டியைத் திருப்புங்க ஸ்டாலின்!