Published:Updated:

குடும்பம்... முதலீடு... துபாய்... எக்ஸ்போஸ்!

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

துபாய்க்கு வந்த ஸ்டாலினை தி.மு.க நிர்வாகிகளோடு விமான நிலையத்தில் வரவேற்றவர்களில் முக்கியமானவர்கள் இருவர். ஷாகுல் ஹமீது மற்றும் எஸ்.எஸ்.மீரான்.

குடும்பம்... முதலீடு... துபாய்... எக்ஸ்போஸ்!

துபாய்க்கு வந்த ஸ்டாலினை தி.மு.க நிர்வாகிகளோடு விமான நிலையத்தில் வரவேற்றவர்களில் முக்கியமானவர்கள் இருவர். ஷாகுல் ஹமீது மற்றும் எஸ்.எஸ்.மீரான்.

Published:Updated:
ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

``முதலீடுகளை ஈர்க்கப்போகிறேன் என்று சொல்லிக்கொண்டு, குடும்பத்துடன் தனி விமானத்தில் இன்பச் சுற்றுலா சென்றிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதுவும், துபாய் எக்ஸ்போ முடிவடையப்போகும் நேரத்தில் சென்று தமிழ்நாடு அரங்கைத் திறந்துவைத்திருக்கிறார்” என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சிக்க, “தமிழ்நாட்டுக்கான நிதிக்காக முதல்வர் துபாய் செல்லவில்லை. கோபாலபுரத்துக்கான... அதாவது, தனது சொந்தக் குடும்பத்துக்கான நிதிக்காக ஸ்டாலின் துபாய் சென்றிருக்கிறாரோ என்று சந்தேகப்படவேண்டியிருக்கிறது. அரசு விழா என்ற போர்வையில் குடும்ப விழாவை துபாயில் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்” என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையும் குற்றம்சாட்ட, பற்றிக்கொண்டது தமிழக அரசியல் களம். தனி விமான சர்ச்சை, குழப்பமான திட்டமிடல்கள், குடும்பப் புகைப்படங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டது, பாதுகாப்பில் கவனக்குறைவு, முதலீட்டு ஒப்பந்தங்கள் மீதான நம்பகத்தன்மை எனப் பல்வேறு புகார்களை அடுக்குகிறார்கள் எதிர்க்கட்சியினர். இவர்களின் விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் எந்த அளவுக்கு உண்மை, துபாய் பயணத்தின் பின்னணி என்னவென விசாரிக்கக் களத்தில் இறங்கினோம்...

குடும்பம்... முதலீடு... துபாய்... எக்ஸ்போஸ்!

தனி விமானம்... முக்கியமான இருவர்!

முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணம் குறித்து உளவுத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தோம். “முதல்வர் புறப்படுவதற்கு முன்பாகவே அதாவது, மார்ச் 22-ம் தேதி செவ்வாய்க்கிழமையே முதல்வரின் மகன் உதயநிதி தனக்கு நெருக்கமான சிலருடன் சென்னை விமான நிலையத்திலிருந்து துபாய்க்குத் தனி விமானத்தில் சென்றார். அடுத்த நாள் முதல்வரின் மருமகன் சபரீசன், அண்ணா நகர் எம்.எல்.ஏ மோகனின் மகன் கார்த்திக் உள்ளிட்டோர் கிளம்பிச் சென்றனர். அதற்கு அடுத்த நாள் முதல்வர் ஸ்டாலின், அவரின் மனைவி துர்கா ஸ்டாலின், உதவியாளர் தினேஷ், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தனிச் செயலாளர்கள் நால்வர், தனிப் பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் உள்ளிட்டோருடன் தனி விமானத்தில் சென்றார். ‘இறுதி நேரத்தில் அத்தனை பேருக்கும் விமான டிக்கெட் கிடைக்காததால்தான், தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதுவும் கட்சிச் செலவில்தான் செய்யப்பட்டது’ என முதல்வர் தரப்பில் விளக்கம் சொல்லப்பட்டாலும், தனி விமான ஏற்பாடு என்பது ஏற்கெனவே திட்டமிடப்பட்டதுதான்.

துபாய்க்கு வந்த ஸ்டாலினை தி.மு.க நிர்வாகிகளோடு விமான நிலையத்தில் வரவேற்றவர்களில் முக்கியமானவர்கள் இருவர். ஷாகுல் ஹமீது மற்றும் எஸ்.எஸ்.மீரான். இவர்களில் ஷாகுல் ஹமீதின் ‘நோபல் ஸ்டீல்ஸ்’ நிறுவனத்துடன் ஏற்கெனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதாக முடிவாகியிருந்தது. மீரான் தி.மு.க-வின் அயலக அணி அமைப்பாளராக முன்பு செயல்பட்டவர். வளைகுடா நாட்டில் கொடிகட்டிப் பறந்த ஒரு கட்டட நிறுவனத்தின் உரிமையாளருக்கு நெருக்கமானவராகவும் அறியப்பட்டவர். கடந்த தி.மு.க ஆட்சியில் பணப் பரிவர்த்தனை விவகாரங்களில் அந்தக் கட்டட நிறுவனத்தின் பெயர் அடிபட்டபோது, இவரின் செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட்டன. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் தி.மு.க தலைமையுடன் மீரான் இணக்கம் காட்டுவதையும் ‘துபாய் உடன்பிறப்பு’ என அவரை ஸ்டாலின் குறிப்பிட்டுப் பேசியிருப்பதையும் யதார்த்தமாகக் கடந்துசெல்ல முடியாது” என்று முன்னுரை கொடுத்தார்கள்.

“தி.மு.க அயலக அணி அமைப்பாளர் பொறுப்பிலிருந்து தி.மு.க தலைமை மீரானை நீக்கியபோதும், தி.மு.க லேபிளை வைத்துக்கொண்டு வளைகுடா நாடுகளில் மீரான் செய்திருக்கும் டீலிங்குகள் கொஞ்ச நஞ்சமல்ல. ‘ஸ்டாலினின் துபாய் நிகழ்ச்சிகளை நான்தான் ஒருங்கிணைக்கிறேன்’ என்று சொல்லி, லோக்கலிலுள்ள முதலீட்டாளர்களிடமும், புலம்பெயர் தமிழர்களிடமும் பல டீலிங்குகள் செய்திருக்கிறார். துபாயில் ஸ்டாலினுக்கு மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்டவர் அப்துல் கனி. அமைச்சர்கள், அதிகாரிகள், முதலீட்டாளர்கள் என துபாயில் அதிகாரத் தரப்புகளுடனான சந்திப்புக்கு ஏற்பாடுகளைச் செய்துகொடுப்பதில் வல்லவர். முதல்வர் துபாய் வரும்போது அவருடன் முதலீட்டாளர்களைச் சந்திக்கவைக்கிறேன் என்று, துபாயிலுள்ள தமிழ்த் தொழிலதிபர்களிடம் இவரும் ‘டீலிங்’ நடத்தியிருக்கிறாராம். இப்படிச் சர்ச்சைக்குரிய இரண்டு நபர்கள்தான் தமிழக முதல்வரின் துபாய் விசிட்டுக்கு ‘ஆல் இன் ஆலாக’ இருந்தார்கள் என்பதை வைத்தே, இந்த விசிட் எப்படி இருந்திருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளலாம்” என்று வேதனைப்படுகிறார்கள் வளைகுடா தி.மு.க-வினர்!

குடும்பம்... முதலீடு... துபாய்... எக்ஸ்போஸ்!

திட்டமிடலில் குழப்பங்கள்... விளம்பரம், கார், சர்ச்சை செல்ஃபிகள்!

துபாய் பயணத்தில் உடன் சென்ற அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். “துபாய் பயணத்தின் முதல் கோணல், மத்திய அரசிடம் க்ளியரன்ஸ் வாங்குவதிலிருந்து ஆரம்பித்தது. அதுவே பெரும்பாலான விஷயங்களில் தொடர்ந்தது.

2021-ம் ஆண்டு கேரள முதல்வர் பினராயி விஜயன் துபாய் சென்றபோது, அமீரகப் பிரதமர் முகமது பின் ராஷித் அல் மக்தூமைச் சந்தித்துப் பேசினார். அதுபோலவே முதல்வரையும், அல் மக்தூமையும் சந்திக்கவைக்க ஏற்பாட்டாளர்கள் முயன்றனர். ஆனால் அது முடியாமல் போகவே, ஒரு கேபினட் அமைச்சரையும், இணை அமைச்சரையும் பிடித்தனர். முதல்வர் துபாய் வரை வந்துவிட்டு ஓர் அமைச்சரைக்கூட சந்திக்காமல் போனால் பெரும் விமர்சனத்தைச் சந்திக்கவேண்டியிருக்கும் என்பதால், ஒருவழியாக வர்த்தகத்துறை அமைச்சரைப் பிடித்தார்கள். ‘இங்கு பெரும் முதலீடு செய்ய தமிழக முதல்வர் வருகிறார்’ என்று சொல்லி, கடைசியாகச் சந்திப்பை நடத்தி முடித்தார்கள். முதலீட்டை ஈர்க்க வந்த இடத்தில் முதலீடு செய்ய வந்ததாகச் சொல்லி பல குழப்பங்களைச் செய்திருக்கிறார்கள் ஏற்பாட்டாளர்கள்.

அதேபோல், முதல்வரை துபாய் விமான நிலையத்திலிருந்து ஹோட்டலுக்கு அழைத்துச் செல்ல பி.எம்.டபிள்யூ கார் வந்திருந்தது. அந்த கார் துபாய் அரசு கொடுத்தது என்று தி.மு.க ஐடி விங் ஒரு செய்தியைப் பரப்பியது. ஆனால் உண்மையில் துபாய் அரசுக்கு, மாநில முதல்வர்களுக்கு கார் அனுப்பி வரவேற்கும் வழக்கம் இல்லை. அந்த கார் துபாய் அரசாங்கத்தின் காரும் அல்ல என்பதும் 36147 Private L என்ற எண் கொண்ட அந்த கார், போக்குவரத்துத்துறையால் பலமுறை அபராதம் விதிக்கப்பட்ட கார் என்பதும் தெரியவந்தபோது, தி.மு.க தரப்பு அதிர்ச்சிக்குள்ளானது.

குடும்பம்... முதலீடு... துபாய்... எக்ஸ்போஸ்!

உலகின் உயரமான கட்டடங்களில் ஒன்றான புர்ஜ் கலீஃபாவில் கீழடி, பொருநை நாகரிகம் குறித்த காட்சிகளோடு, ‘செம்மொழியான தமிழ் மொழி’ பாடல் ஒளிபரப்பப்பட்டது. இதைப் பெரிய சாதனையாக தி.மு.க ஐடி விங், ‘முதல்வருக்கும் தமிழகத்துக்கும் கிடைத்த பெரும் வரவேற்பு’ என்று கொண்டாடித் தீர்த்தது. ஆனால், புர்ஜ் கலீஃபாவில் இது போன்று விளம்பரங்களை யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். மூன்று நிமிடங்கள் ஒளிபரப்பப்படும் விளம்பரத்துக்கு இந்திய மதிப்பில் ஐம்பது லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும், அவ்வளவுதான். அப்படித்தான் அந்தக் காணொலியும் காட்சிப்படுத்தப்பட்டது. இதற்கான ஒப்புதலேகூட ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் ஏறும்போதுதான் கிடைத்தது. ஆனால், இப்படியான தேவையில்லாத பில்டப் விளம்பரங்களை எதற்காகப் பரப்பினார்கள் என்று முதல்வருடன் பயணித்த அதிகாரிகள் முணுமுணுத்தனர்.

மற்றொரு முக்கிய விஷயம், தமிழக முதல்வர் துபாய்க்குப் பயணிக்கிறார் என்றதும், தமிழகத்திலிருந்து பல்வேறு பின்னணி கொண்டவர்கள் துபாய்க்குப் பறந்து வந்தார்கள். இதில் பிரச்னை என்னவென்றால், தமிழகத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள், வழக்குக்கு உள்ளானவர்களெல்லாம் கோட், சூட் போட்டுக்கொண்டு முதல்வர் அருகில் நின்று புன்னகைத்தபடி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்கள். குற்றப் பின்னணி கொண்டவர்கள் பலர் ஸ்டாலினுடன் படம் எடுத்துக்கொண்டது பிற்காலத்தில் ஒரு பிரச்னையாக உருவெடுக்கலாம். இங்கு ஏற்பாடு செய்த பிரைவேட் செக்யூரிட்டிகள் தவிர, முதல்வருடன் பாதுகாப்புக்கு பி.எஸ்.ஓ அதிகாரிகள் இருவர் மட்டுமே உடன் இருந்தனர். எனவே, பெரிய அளவில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பொதுமக்கள் ஒரு முதல்வரை அப்படி நெருங்கிச் சென்று சந்திப்பதில் பிரச்னை ஒன்றும் இல்லை. ஆனால், அக்கூட்டத்தில் பிரச்னைக்குரிய பலர் இருந்தனர் என்பதுதான் பிரச்னை. இப்படிப் பாதுகாப்புக் குறைபாடுகளும் இந்தப் பயணத்தில் அதிகமாக இருந்தன” என்றார்கள்.

குடும்பம்... முதலீடு... துபாய்... எக்ஸ்போஸ்!

குடும்பச் சுற்றுலா... கோடிகளில் முதலீடு!

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, முதலீடுகளை ஈர்ப்பதற்காக துபாய் சென்றிருந்தார். அச்சமயம் ஒரு திருமண விழாவில் அது குறித்துப் பேசிய அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும், இன்றைய முதல்வருமான ஸ்டாலின், `முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றிருப்பதாகச் சொல்கிறார்கள். முதல்வரும், துறை அமைச்சரும், அதிகாரிகளும் மட்டும் சென்றிருந்தால் அதை ஒப்புக்கொள்ளலாம். ஆனால், அவருடன் 10 அமைச்சர்கள் சென்றிருக்கிறார்கள். இன்னும் எட்டு அமைச்சர்கள் செல்லவிருக்கிறார்கள். ஒரு அமைச்சரவையே வெளிநாடு செல்கிறது. அதனால்தான் நான் சொல்கிறேன், இது அ.தி.மு.க அமைச்சரவை அல்ல, சுற்றுலா அமைச்சரவை!’ என்று வெளுத்து வாங்கினார். “ஆனால், தற்போது அவரே மனைவி, மகன், மருமகன், மருமகள் பேரக்குழந்தைகள், நண்பர்கள் மற்றும் நண்பர்களின் நண்பர்கள் எனப் பெரும் கும்பலோடு சுற்றுலா செல்வதுபோலத்தான் சென்றிருக்கிறார்” என்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.

குடும்பம்... முதலீடு... துபாய்... எக்ஸ்போஸ்!
குடும்பம்... முதலீடு... துபாய்... எக்ஸ்போஸ்!

முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் ஒருவரிடம் பேசினோம். “உண்மையைச் சொல்ல வேண்டுமானால், ஸ்டாலினின் குடும்பம், அரசுப் பணத்தில் துபாய் சுற்றுலா சென்றிருக்கிறது. முதலீட்டை ஈர்க்கச் செல்லும் முதல்வர் ஏன் மொத்தக் குடும்பத்தையும் அழைத்துச் செல்கிறார்... முதலீட்டாளர்களை முதல்வர் சந்தித்த புகைப்படங்களைவிட அவர்களின் குடும்பப் படங்களைத்தான் அதிகம் பார்க்க முடிகிறது. முதலீடு என்கிற வகையிலும் ஒன்றையும் சாதித்ததாகத் தெரியவில்லை. உதாரணமாக, ஷாகுல் ஹமீது தஞ்சாவூரைச் சேர்ந்த பிசினஸ் மேன். துபாயிலும் பிசினஸ் செய்கிறார். அவரிடம் இங்கேயே முதலீடு செய்யச் சொல்லலாமே... அவரை துபாயில் சந்தித்து முதலீடு செய்யச் சொல்வதுதான் அந்நிய முதலீட்டை ஈர்ப்பதா? கடந்த நிதியாண்டுக்கான இவர்களின் குடும்ப முதலீடுகள், கணக்கு வழக்குகளை முடிக்கத்தான் துபாய் சென்றிருக்கிறார்கள். மேலும், இவர்கள் துபாயில் இன்வெஸ்ட் செய்திருக்கும் பணத்தை மீண்டும் முதலீடு என்கிற பெயரில் இங்கு கொண்டுவருவார்கள் பாருங்கள். இந்த துபாய் ‘எக்ஸ்போ’ மூலம் தி.மு.க-வின் பல குழப்பங்கள், தில்லு முல்லுகள் எக்ஸ்போஸ் ஆகிக்கொண்டி ருக்கின்றன. இன்னும் ஆகும்!” என்றார்.

குடும்பம்... முதலீடு... துபாய்... எக்ஸ்போஸ்!
குடும்பம்... முதலீடு... துபாய்... எக்ஸ்போஸ்!

“அ.தி.மு.க ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி துபாய் சென்றபோது, 8,000 கோடி ரூபாய் அளவில் முதலீடுகளை ஈர்த்ததாகச் செய்தி வெளியிட்டனர். ஆனால், ஒன்றும் செயல் வடிவத்துக்கு வந்ததுபோலத் தெரியவில்லை. பன்னீர்செல்வம் வீட்டு வசதி வாரியத்தை மேம்படுத்துவதாகக் கூறி அமெரிக்கா சென்றார். திண்டுக்கல் சீனிவாசன் வனத்துறை குறித்துத் தெரிந்துகொள்ள தாய்லாந்து சென்றுவந்தார். கால்நடைப் பராமரிப்புத்துறை குறித்து ஆராய உடுமலை ராதாகிருஷ்ணன் ஆஸ்திரேலியா போய்வந்தார். அதுபோலத்தான், இப்போதைய தமிழக முதல்வரின் துபாய் விசிட்டும். சுமார் 5,000 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நடந்திருப்பதாகச் சொல்கிறது முதல்வர் தரப்பு. இதில் பெரும்பாலும் கட்டட நிறுவனங்களே முதலீடுகளில் ஆர்வம் காட்டியுள்ளன. தமிழகத்தில் ஏற்கெனவே தி.மு.க தலைமைக்கு நெருக்கமான சிலர் கட்டட நிறுவனங்களில் கோலோச்சிவருகிறார்கள். இந்த ஒப்பந்தங்கள் பல வகைகளிலும் அவர்களுக்கே அனுகூலமாக இருக்கும். முதல்வரின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் ரகசியம் விரைவில் வெடிக்கும் பாருங்கள்” என்கிறார்கள் பா.ஜ.க-வினர்.

தமிழக முதல்வரின் துபாய் பயணத்தில், குடும்பத்தையும் முதலீட்டையும் முன்வைத்து ஆரம்பித்திருக்கும் சர்ச்சைகள் இன்னும் அதிகமாகும் என்றே தோன்றுகிறது!