Published:Updated:

அமைச்சர்கள் பட்டியல்... அடேங்கப்பா பின்னணி!

இது எனக்குக் கடைசி தேர்தல்... சபாநாயகர் பதவியெல்லாம் வேணாம். அமைச்சர் பதவியே கொடுங்க என்று நேரடியாகவே கேட்டுக்கொண்டாராம் துரைமுருகன்

பிரீமியம் ஸ்டோரி
புதியவர்கள் 15 பேர், இரண்டு பெண்கள், பட்டியல் சமூகத்தினர் மூவர் எனக் கலவையாக பதவியேற்றிருக்கிறது மு.க.ஸ்டாலினின் அமைச்சரவை. இவர்களில் எட்டு பேர் அ.தி.மு.க-விலிருந்து வந்தவர்கள். அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லாத 13 மாவட்டங்கள்! அமைச்சர்கள் ஆனவர்களின் பின்னணி என்ன? அறிவாலய வட்டார தகவல்கள் இதோ...
அமைச்சர்கள் பட்டியல்... அடேங்கப்பா பின்னணி!

துரைமுருகனுக்கு செக்!

கட்சியின் சூப்பர் சீனியரும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தவருமான துரைமுருகன் காட்பாடியில் வெற்றிபெறுவதற்குள்ளாக போதும் போதும் என்றாகிவிட்ட நிலையில், அவருக்கு சபாநாயகர் பதவி கொடுக்கப் போகிறார்கள் என்று தகவல்கள் உலா வந்தன. அதையடுத்து ஸ்டாலினிடமே சென்று, “இது எனக்குக் கடைசி தேர்தல்... சபாநாயகர் பதவியெல்லாம் வேணாம். அமைச்சர் பதவியே கொடுங்க” என்று நேரடியாகவே கேட்டுக்கொண்டாராம் துரைமுருகன். அதன் பின்னரே பொதுப்பணித்துறையோடு இணைந்திருந்த நீர்ப்பாசனத்துறையைத் தனித்துறையாகப் பிரித்து, அத்துடன் கனிமங்கள் மற்றும் சுரங்கங்களும் சேர்த்து துரைமுருகனுக்கு அளிக்கப்பட்டன. ஆனாலும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எ.வ.வேலு, ஆர்.காந்தி ஆகிய இருவருக்கும் அமைச்சர் பதவியைக் கொடுத்து துரைமுருகனுக்கு செக்கையும் சேர்த்து வைத்துவிட்டார் தலைவர் என்கிறார்கள் வேலூர் மாவட்ட தி.மு.க-வினர்.

நேருவின் ஆதிக்கத்துக்குக் கடிவாளம்!

திருச்சி மாவட்டத்தின் ஒன்பது தொகுதிகளையும் வென்றுகாட்டியதால் நேருவுக்கு அமைச்சரவையில் வெயிட்டான பதவி கிடைக்கும் என்று அவரின் ஆதரவாளர்கள் காத்திருந்த நேரத்தில், நகர்ப்புற வளர்ச்சித்துறைக்கு அமைச்சராக்கப்பட்டிருக்கிறார் நேரு. ஆனால், கடந்த ஆட்சியில் இதே அமைச்சரகத்திலிருந்த ‘சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை’யைப் பறிமுதல் செய்து தன் வசமே வைத்துக்கொண்டார் ஸ்டாலின். இதில் நேருவுக்கு ரொம்பவே மன வருத்தம் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். கிச்சன் கேபினெட் கொடுத்த அழுத்தமே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், ஏற்கெனவே கட்சிரீதியாக திருச்சியில் நேருவுக்குப் போட்டியாக ஆதிக்கம் செலுத்திவந்த அன்பில் மகேஷுக்கு இப்போது அமைச்சரவையிலும் இடம் கொடுத்து, சொந்த மாவட்டத்திலேயே நேருவுக்கு நெருக்கடியை அதிகரித்ததன் மூலம் அவருக்குக் கடிவாளம் போட்டுவிட்டார் ஸ்டாலின் என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

போராட்டத்தை நிறுத்திய ஐ.பி

‘‘சக்கரபாணி நீண்ட நாள்களாக கட்சியில் இருக்கார். அவருக்கு அமைச்சரவையில் இடம்கொடுங்க” என்று ஸ்டாலினிடம் சொன்ன ஐ.பெரியசாமியே இப்போது புலம்பிக்கொண்டிருக்கிறார். “மின்சாரத்துறை என்று ஆரம்பத்தில் சொல்லிவிட்டு கடைசியில் கடனில் மூழ்கிக்கிடக்கும் கூட்டுறவுத்துறையை ஒதுக்கி ஓரவஞ்சனை செய்துவிட்டார்கள்” என்று பதவியேற்புக்குச் செல்லும் வரை மனவருத்தத்தில் இருந்திருக்கிறார் பெரியசாமி. அதைத் தெரிந்துகொண்ட ஐ.பி-யின் ஆதரவாளர்கள் ‘அண்ணனுக்கு முக்கியத்துறையை ஒதுக்க வேண்டும்’ என்று ஆத்தூரில் போராட்டத்துக்குத் தயாராகியுள்ளனர். தகவலறிந்த ஐ.பி பதறிப்போய் “இது தலைமை எடுத்த முடிவு… எல்லாரும் அமைதியா இருக்கணும்...” என்று சொன்ன பிறகே போராட்ட ஐடியாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. ‘‘அதிக ஓட்டு வித்தியாசத்துல ஜெயிச்சு என்ன பலன்? துறையும் சரியில்லை. என் வாயாலேயே சிபாரிசு பண்ணி மாவட்டத்துலேயும் போட்டிக்கு ஆளை வளர்த்துவிட்டேன்’’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பினாலும், ஐ.பி-க்கு செக் வைக்கவே சக்கரபாணிக்கு உணவுத்துறையை கட்சித் தலைமை வழங்கியுள்ளது என்கிறார்கள்.

துரைமுருகன், நேரு, பெரியசாமி வரிசையில் பொன்முடியும் தப்பவில்லை. தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறை ஒதுக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்தவருக்கு கடந்த தி.மு.க ஆட்சியில் வகித்த உயர்கல்வித்துறையே மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிலும் துறையின் பல்வேறு அதிகாரங்கள் ஆளுநர் வசம் பறிபோய்விட்ட நிலையில் உயர்கல்வித்துறையைத் தனக்கு ஒதுக்கியது, செஞ்சி மஸ்தானுக்கு அமைச்சர் பதவி கொடுத்து தனக்குப் போட்டியாக இன்னொருவரை மாவட்டத்தில் வளர்த்துவிடுவது ஆகிய செயல்பாடுகள் பொன்முடிக்கு மனவேதனையை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால் கட்சிக்காரர்களோ, ‘‘இதோடு விட்டார்களே என்று பொன்முடி ஆறுதல் அடைய வேண்டும்... மூன்றாவதாக லட்சுமணனுக்கும் அமைச்சர் பதவி கொடுத்து பொன்முடியைத் தவிக்கவிட்டிருக்க வேண்டும்’’ என்கிறார்கள். இதுமட்டுமல்ல... ‘‘சி.வி.சண்முகத்தை எதிர்த்து நிற்க முடியாமல் திருக்கோவிலூருக்குப் போனவருக்கு அமைச்சர் பதவி... அதே சி.வி. சண்முகத்தைத் தோற்கடித்த லட்சுமணனுக்கு அமைச்சரவையில் இடமில்லையா?” என்பது அவர்களின் ஆதங்கமாக இருக்கிறது.

அமைச்சர்கள் பட்டியல்... அடேங்கப்பா பின்னணி!

முத்துசாமியை வளர்க்கும் தலைமை!

தி.மு.க-வுக்கு கஜானாவாக இருந்த எ.வ.வேலு பொருளாளர் பதவி கிடைக்காத விரக்தியிலிருந்தபோது “ஆட்சி வரட்டும், உங்களுக்குச் சிறப்பான துறை உண்டு” என்று ஸ்டாலின் உறுதியளித்தாராம். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை என அது இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

“தி.மு.க-வை நம்பிப் போனீங்களே... உங்களுக்கு இப்போ என்ன செஞ்சாங்க?” என்று அ.தி.மு.க-வினர் பலரும் முத்துசாமியிடம் நக்கலாகக் கேட்டுவந்தார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ஸ்டாலின். எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்திலேயே பவர்ஃபுல்லாக வலம்வந்தவருக்கு, வீட்டுவசதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கொங்கு மண்டலத்தில் தி.மு.க-வில் சொல்லிக்கொள்ளும்படி எந்தத் தலைவரும் இல்லை என்பதை உடைக்கவே முத்துசாமியை வளர்த்துவிட ஆரம்பித்துள்ளது கட்சித் தலைமை. கூடவே ஸ்டாலினுக்கு ஒத்துவராத என்.கே.பி.பி.ராஜாவுக்கு வைக்கப்பட்ட செக் என்றும் சொல்கிறார்கள்!

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆருக்கு இறுதி வாய்ப்பு!

வன்னியர் கோட்டா எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்குக் கைகொடுத்த அதே நேரம், துர்காவின் உறவுகள் சிலர் பரிந்து பேசியதும் பன்னீர்செல்வத்துக்கு வேளாண்மைத்துறை கிடைக்கக் காரணமாகியுள்ளது.

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கடந்த தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வில் சில சித்து விளையாட்டுகளைச் செய்துவிட்டார் என சபரீசன் தரப்பு வரை புகார் போனது. இதை அறிந்து நேரடியாக ஸ்டாலினிடமே சென்று சரண்டர் ஆகியிருக்கிறார் ராமச்சந்திரன். அதன் பிறகே, தனக்கு விசுவாசமான நபரை விட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்தில், ‘இறுதி வாய்ப்பு’ என்று சொல்லியே வருவாய்த்துறை இவர் வசம் ஒப்படைக்கப்பட்டதாம்.

தான் வகித்துவந்த இளைஞரணிப் பதவியை உதயநிதிக்காக விட்டுக்கொடுத்ததால், கட்சித் தலைமையின் குட்புக்கில் இருப்பதாகக் கருதிய வெள்ளக்கோவில் சாமிநாதன், கடந்தமுறை வகித்த நெடுஞ்சாலைத்துறை பதவியைவிட பசையான துறையை எதிர்பார்த்தார். ஆனால், அவருக்கு ஒதுக்கப்பட்டது என்னவோ செய்தித்துறைதான். பவர் இல்லாத துறை ஒதுக்கப்பட்டதில்கூட அவருக்கு மனவருத்தம் இல்லையாம். ஆனால், குட்புக்கில் இருந்த தன்மீது கட்சித் தலைமைக்கு என்ன வருத்தம் என்பதுதான் சாமிநாதனின் குமுறலாக இருந்திருக்கிறது!

தலைமையை ‘கவனித்த’ கண்ணப்பன்

தூத்துக்குடி மாவட்டத்தில் எதிரும் புதிருமாக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் கீதா ஜீவனுக்கும் அமைச்சர் பதவியைக் கொடுத்து இருவருக்குமே செக் வைத்துள்ளது கட்சித் தலைமை. ஜெயலலிதா ஆட்சியில் மூன்று முக்கியத் துறைகளை தன் வசம் வைத்திருந்து அமைச்சராக வலம்வந்த ராஜகண்ணப்பனுக்கு போக்குவரத்துத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அமைச்சர் பதவியை தரவில்லை என தி.மு.க-வைவிட்டு வெளியே போனவர், தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பாக மீண்டும் இணைந்தார். அத்துடன் சில தொகுதிகளுக்கான தேர்தல் செலவையும் பார்த்துக்கொண்டும், தலைமையை வெயிட்டாக கவனித்தும் அமைச்சர் பதவியை வாங்கியுள்ளார் என்கிறார்கள் ராமநாதபுரத்தின் சீனியர் நிர்வாகிகள். அதேசமயம், ‘காதர்பாட்சா முத்துராமலிங்கத்துக்கு அமைச்சர் பதவியைக் கொடுக்காமல் இன்று வந்தவருக்கு பதவியைக் கொடுத்திருப்பது என்ன நியாயம்? மேலும் யாரை எதிர்த்து இத்தனை காலம் அரசியல் செய்து வந்தோமோ அவரே அமைச்சரான பின்பு எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவரைப் பார்ப்பது என்று ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க-வினர் அறிவாலயத்தின் கதவைத் தட்டிவருகிறார்கள்.

மதுபான அதிபரின் பேச்சுவார்த்தை!

கொங்கு மண்டலத்தில் வெற்றிபெற்ற சொற்ப எம்.எல்.ஏ-க்களில் ஒருவரான ராமச்சந்திரனுக்கு வனத்துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர்கள் அனைவருமே தோல்வியைத் தழுவிவிட்டதால், பக்கத்து மாவட்டமான நீலகிரியிலிருந்து இவரை அமைச்சராக்கியிருக்கிறார் ஸ்டாலின்.

செந்தில் பாலாஜிக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவத்தைப் பார்த்து தி.மு.க சீனியர்கள் பலரும் கடுப்பில் இருக்கிறார்கள். ஓராண்டுக்கு முன்பு கட்சிக்குள் வந்தவருக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி, சீட்டு, இப்போது மின்சாரம், மதுவிலக்கு என வளமான துறையைக் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். மன்னார்குடி மதுபான தொழிற்சாலை தரப்பு, செந்தில் பாலாஜி மூலம் கொடுக்க வேண்டியதைக் கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுத்துவிட்டதாலேயே இவருக்கு இந்தத்துறை கிடைத்தது என்கிறார்கள். தவிர, செந்தில் பாலாஜி கட்சித் தலைமையின் கைக்கு அடக்கமாக இருப்பார் என்பதும் வளமான துறை ஒதுக்கப்பட இன்னொரு காரணம் என்கிறது தி.மு.க வட்டாரம்.

அமைச்சர்கள் பட்டியல்... அடேங்கப்பா பின்னணி!

ஸ்டாலினுக்காக மதுரையில் அழகிரியை எதிர்த்து அரசியல் செய்த மூர்த்திக்கு வளமான பத்திரப்பதிவுத்துறை வழங்கப்பட்டுள்ளது. உதயநிதிக்கு முதன்முதலில் மதுரையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தி அசத்தியவர், சில ஆண்டுகளுக்கு முன்பு அய்யர் பங்களா பகுதியில் ஸ்டாலினை வைத்தும் மிகப்பெரிய கூட்டத்தைக் கூட்டினார்.

அப்போது, ‘மூர்த்தி சிறிதானாலும், கீர்த்தி பெருசு’ என்று ஸ்டாலின் பாராட்டினார். அதையெல்லாம் மனதில்வைத்துத்தான் மூர்த்திக்குப் பசையான பதவி வழங்கப்பட்டுள்ளது.

“என்னை வளரவிடாமல் ஆ.ராசா தடுக்கிறார்” எனத் தொடர்ந்து தலைமையிடம் புகார் செய்துவந்தவர் சிவசங்கர். அனிதா மரணத்தை வைத்து அ.தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுத்ததில் சிவசங்கரின் பங்கு அதிகம். தற்போது இவரை பிற்பட்டோர் துறை அமைச்சராக்கியிருப்பது கட்சியில் ஆ.ராசாவுக்கு வைக்கப்பட்ட செக் என்கிறார்கள்.

கடந்த ஐந்தாண்டுகளாக தமிழக பட்ஜெட் குறித்த விவாதங்களில் தவறாமல் இடம்பெறும் நபராக இருந்த பழனிவேல் தியாகராஜனுக்கு பட்ஜெட் தயாரிக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது. தமிழக நிதி நிலை அதல பாதளத்தில் இருப்பதால் அதைச் சரிக்கட்ட தியாகராஜனே சரியான சாய்ஸ் என சபரீசன் இவரை முன்மொழிந்துள்ளார்.

ஸ்டாலினை ‘பெரியப்பா’ என்றழைக்கும் அன்பில் மகேஷ்தான் உதயநிதிக்கு ஆல் இன் ஆல். அவர் அமைச்சரவையில் இடம்பெற்றதில் எந்த ஆச்சர்யமும் இல்லை என்கிறார்கள். குமரி மாவட்டத்தில் போட்டியிட்ட ஆஸ்டின், சுரேஷ்ராஜன் இருவருமே தோல்வியடைந்ததால் அமைச்சர் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார் மனோ தங்கராஜ். தாராபுரத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகனைத் தோற்கடித்த ஒரே காரணத்துக்காகவே அமைச்சராக்கப் பட்டிருக்கிறார் கயல்விழி செல்வராஜ்.

ஆன்மிக ஆலோசகர் சேகர்பாபு

மருத்துவர் ஒருவருக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை வழங்கப்படும் என்கிற பேச்சு தி.மு.க-வில் இருந்துவந்த நிலையில் நெருக்கடியான காலகட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை மா.சுப்பிரமணியனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தலைமைக்கு நம்பிக்கைக்குரிய நபர் என்பதைத் தாண்டி களப்பணியில் சுப்பிரமணியனின் செயல்பாடுகளை யாரும் குறைசொல்ல முடியாது என்பதாலேயே இவருக்குப் பதவி அளிக்கப்பட்டதாம்.

ஸ்டாலின் குடும்பத்தினருக்கு ஆன்மிக ஆலோசகராக இருக்கும் சேகர்பாபுவுக்கு இந்து சமய அறநிலையத்துறையை ஒதுக்கியது சரியான சாய்ஸ் என்று சிரிக்கிறார்கள் உ.பி-க்கள். ஆவடி நாசர், செஞ்சி மஸ்தான் எனத் தமிழக அமைச்சரவையில் இஸ்லாமியர்கள் இருவரை அமைச்சராக்கி சிறுபான்மையினரின் மத்தியில் தனது இருப்பை உறுதி செய்திருக்கிறார் ஸ்டாலின்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு