Published:Updated:

மாறும் அமைச்சரவை... மார்க் போடும் ஸ்டாலின்!

அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு செல்லாமலேயே அந்தக் கோப்பை முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்பிவிட்டாராம் அந்த உயரதிகாரி.

பிரீமியம் ஸ்டோரி

சமீபத்தில் ஒரு மூத்த அமைச்சரிடமிருந்து நமக்கு அலைபேசி அழைப்பு வந்தது. “அமைச்சரவையை மாற்றியமைக்க முதல்வர் திட்டமிட்டிருக்கிறாராமே?” என்று பீடிகைபோட்டார் அவர். பதிலுக்கு, “இது ஒரு மாதமாகச் சுற்றும் தகவல்தானே... புதிதாக என்ன இருக்கிறது?” என்று தூண்டில் போட்டோம். சில தகவல்களைக் கொட்டி ‘த்ரில்’ ஏற்றிய அவர், “மேற்கொண்டு விசாரியுங்கள். அமைச்சர்கள் மத்தியில் இது பெரிதாகப் பேசப்படுகிறது” என்றதோடு தொடர்பைத் துண்டித்தார். அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து உளவுத்துறையிடம் ‘நோட்’ கேட்டுப் பெற்றிருக்கும் முதல்வர் ஸ்டாலின், அதனடிப்படையில் அமைச்சர்களுக்கு ‘மார்க்’ போட்டுவருகிறார். ‘மார்க் அடிப்படையில் அமைச்சரவையில் இலாகா மாற்றம் இருக்கும்’ என்று அறிவாலயமும் பரபரக்கிறது. அமைச்சரவையில் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழவிருக்கின்றன? விசாரணையில் இறங்கினோம்...

தி.மு.க ஆட்சி அமைந்தவுடன், தன் அமைச்சரவையை யாரும் எதிர்பாராத கலவையாகக் கட்டியமைத்தார் ஸ்டாலின். ஜூனியர்களைவிட சீனியர்களுக்குக் கூடுதல் கடிவாளம் போடப்பட்டதை யாரும் எதிர்பார்க்கவில்லை. உள்ளாட்சித்துறை இரண்டாகப் பிரிக்கப்பட்டு, நகராட்சி நிர்வாகம் நேருவுக்கும், ஊரக வளர்ச்சித்துறை பெரியகருப்பனுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. எ.வ.வேலு வசம் பொதுப்பணித்துறை ஒதுக்கப்பட்டாலும், அதிலிருக்கும் நீர்வளம் மட்டும் தனியாகப் பிரிக்கப்பட்டு, கனிமவளத்துடன் சேர்த்து துரைமுருகனுக்கு வழங்கப்பட்டது. முத்துசாமிக்குக் கொடுக்கப்பட்ட வீட்டு வசதித்துறையிலிருந்து குடிசைப்பகுதி மாற்று வாரியம் பிரிக்கப்பட்டு, தா.மோ.அன்பரசனுக்கு அளிக்கப்பட்டது. இப்படி, பெரிய துறைகளை உடைத்துப் பகிர்ந்தளித்தார் ஸ்டாலின். இதில் சீனியர்களுக்கு அதிருப்தி. முதல்வரிடமே தங்கள் வருத்தத்தை அவர்கள் பகிர்ந்துகொண்டபோது, ‘நிச்சயம் அமைச்சரவை மாற்றம் நடக்கும்’ என்றே சமாதானம் சொல்லிவந்தார் முதல்வர். அதற்கான நேரம் வந்துவிட்டதாகச் சொல்கிறது அறிவாலய வட்டாரம்!

மாறும் அமைச்சரவை... மார்க் போடும் ஸ்டாலின்!

இலாகா மாற்றம்... யாருக்கெல்லாம் செக்?

நம்மிடம் பேசிய முதல்வருக்கு நெருக்கமான தி.மு.க தலைவர்கள் சிலர், “அமைச்சரவையை முழுவதுமாகப் புரட்டிப்போடும் மாற்றத்துக்கு முதல்வர் தயாரில்லை. அதேநேரத்தில், ஆட்சி அமைத்து ஐந்து மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், உள்ளாட்சித் தேர்தல் முடிவுக்குப் பிறகு செயல்பாடற்ற அமைச்சர்கள், அதிகாரிகளை விரட்டி வேலை வாங்கத் தெரியாதவர்கள், புகார்களில் அதிகம் சிக்கும் அமைச்சர்களுக்கு ‘செக்’ வைக்கத் தீர்மானித்திருக்கிறார். ஒருவகையில் இது ஜெயலலிதா பாணி அரசியல்தான். அ.தி.மு.க ஆட்சியில் அமாவாசை வரும்போதெல்லாம் அமைச்சரவை மாற்றத்துக்கு ராஜ்பவன் தயாராகிவிடும். அந்த அளவுக்கு ஒரு பதற்றம் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் எப்போதும் இருக்கும். அந்த ரூட்டைக் கையிலெடுத்திருக்கும் ஸ்டாலின், அமைச்சர்களின் இலாகாக்களை மட்டும் மாற்றிவிட்டு, அதன் மூலமாக ஒரு மறைமுக எச்சரிக்கை விடுக்க நினைக்கிறார்.

தி.மு.க அமைச்சரவையில் முதல்வருடன் சேர்த்து 34 பேர் அமைச்சர்களாக உள்ளனர். இவர்களில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோரின் செயல்பாடு சுமார்தான் என முதல்வரிடம் ரிப்போர்ட் அளித்திருக்கிறது உளவுத்துறை. ‘இவர்களின் துறைகளில் அதிகாரிகள் வைத்ததே சட்டமாக இருக்கிறது. அதிகாரிகளை விரட்டி வேலை வாங்கத் தெரியவில்லை. துறை பற்றிய புரிதலும் அவர்களுக்கு இல்லை’ என்று முதல்வருக்கு ‘நோட்’ போட்டிருக்கிறது. இந்த அமைச்சர்களில், மதிவேந்தன் நிலைமைதான் மோசம். கொரோனா பேரிடரிலிருந்து ஓரளவு தமிழகம் மீண்டிருக்கும் நிலையில், சுற்றுலா தொடர்பான மேம்பாட்டுப் பணியில் முழுவதுமாகத் தன்னை அவர் ஈடுபடுத்திக் கொள்ளவில்லை என்று புகாராகியிருக்கிறது. சமீபத்தில் பூம்புகாருக்கு அவர் ஆய்வுக்குச் சென்றபோது, கடற்கரையோரம் பஞ்சுமிட்டாய் வாங்கிச் சாப்பிடும் அளவுக்குத்தான் அவரது ஆய்வுப்பணி இருக்கிறது. இதனால், அவரை வேறொரு துறைக்கு மாற்றத் திட்டமிட்டிருக்கிறார் முதல்வர்.

மாறும் அமைச்சரவை... மார்க் போடும் ஸ்டாலின்!

சிக்கலில் சக்கரபாணி... புகாரில் அனிதா ராதாகிருஷ்ணன்!

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியை அதிகாரிகள் மதிப்பதே இல்லை. சமீபத்தில் துறையின் உயரதிகாரி ஒருவருக்கு ஒரு கோப்பை சக்கரபாணி அனுப்பியிருக்கிறார். அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு செல்லாமலேயே அந்தக் கோப்பை முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்பிவிட்டாராம் அந்த உயரதிகாரி. இப்படி, துறையிலுள்ள அதிகாரிகளைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறார் சக்கரபாணி. தவிர, சில மாதங்களாகப் பெரும்பாலான ரேஷன் கடைகளில் இருப்பு இல்லை. குறுகியகால டெண்டர்கள் என்கிற பெயரில் பாமாயில், பருப்பு வகைகளைக் கொள்முதல் செய்கிறார்கள். நீண்டகால டெண்டர் அழைப்பு விடுத்தால்தான், போக்குவரத்துச் செலவு, குறைந்த கொள்முதல் விலை என்கிற வகையில் அரசுக்கு லாபம் இருக்கும். துறைரீதியிலான இந்தப் புரிதல் சக்கரபாணிக்கு இல்லாததால், அதிகாரிகள் வைப்பதே உணவுத்துறையில் ராஜ்ஜியம் என்றாகிவிட்டது. இது போன்ற புகார்கள் முதல்வருக்கும் எட்டியிருப்பதால், சக்கரபாணிக்குச் சிக்கல்தான்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு என இரண்டு துறைகள் இருக்கின்றன. முந்தைய கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனிடம் நெருக்கமாக இருந்தவர்கள்தான், தற்போது அனிதாவுடனும் நெருக்கமாக இருக்கிறார்கள். உதாரணத்துக்கு, கடந்த ஆட்சியில் கால்நடைத்துறையில் சகலமுமாக இருந்த ஓர் அதிகாரி, துறை மேலிடத்துக்கு வசூல் ஏஜென்ட்டாக பவனிவந்தார். தி.மு.க ஆட்சியிலும் அதே பதவியைத் தக்கவைத்துக் கொண்டுவிட்டார். இதற்காக, பலமான கவனிப்பு நடந்திருக்கிறது. இது போன்ற ‘கவனிப்பு’ புகார்கள் அனிதா மீது தொடர்ந்து கச்சைகட்டுவதால், கால்நடைத் துறையை அவரிடமிருந்து பறித்து வேறொருவருக்கு வழங்கத் தீர்மானித்திருக்கிறார் முதல்வர்.

அமைச்சர் பெரியகருப்பனுக்கும், அவரின் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவருக்கும் இடையே ‘ஈகோ’ வார் களைகட்டுகிறது. சமீபத்தில் துறைரீதியாக நடந்த கூட்டத்தில், ‘அமைச்சர் ரொம்ப நாளைக்கு இந்த டிபார்ட்மென்ட்ல இருக்க மாட்டார். சீக்கிரமே மாத்திடுவாங்க’ என்று ஓப்பனாக கமென்ட் அடித்திருக்கிறார் அந்த மூத்த அதிகாரி. இது அமைச்சரின் காதுக்குச் சென்றும், முதல்வர் அலுவலகத்திலிருக்கும் சிலரின் சப்போர்ட்டால் மூத்த அதிகாரியை எதுவும் செய்ய முடியவில்லையாம். முதல்வராகத் துறையை மாற்றித்தரட்டும் என்று காத்திருக்கிறார் பெரியகருப்பன். அனிதாவிடமிருந்து கால்நடைத்துறை பறிக்கப்பட்டால், பெரியகருப்பனுக்கு அந்தத் துறை ஒதுக்கப்படலாம். பெரியகருப்பன் வைத்திருக்கும் ஊரக வளர்ச்சித்துறை கே.என்.நேருவுக்குக் கூடுதலாக அளிக்கப்படலாம்.

மாறும் அமைச்சரவை... மார்க் போடும் ஸ்டாலின்!

தடுமாறும் மெய்யநாதன்... கிடுக்குப்பிடியில் நாசர்!

வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல்துறைச் செயலாளராக சுப்ரியா சாஹு ஐ.ஏ.எஸ் இருக்கிறார். மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவர் பொறுப்பும் கூடுதலாக அவருக்குச் சமீபத்தில் அளிக்கப்பட்டிருக்கிறது. இது ஒருவகையில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு வைக்கப்பட்ட ‘செக்’தான். கொங்கு மண்டலத்தில் இயங்கும் தொழிற்சாலைகளில் ஆய்வுப்பணி மேற்கொண்ட மெய்யநாதன் தரப்பு, சில நிறுவனங்களுடன் ‘நட்புமுறை’ பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக விவகாரம் வெடித்தது. இதை மெய்யநாதன் தரப்பு மறுத்தாலும், முதல்வர் அலுவலகம் நம்புவதாக இல்லை. ஒரு கோப்பு தொடர்பாக, அமைச்சர் தரப்பிலிருந்து சிறு அழுத்தம் வந்தாலும், ‘தலைமைச் செயலாளரின் பார்வைக்குக் கோப்பை அனுப்பி விடுகிறேன்’ என்று முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறாராம் சுப்ரியா.

தவிர, புதிதாகத் தொழில் தொடங்க வருபவர்களை கவனிக்க ஒருவர், வருடாந்தர என்.ஓ.சி விவகாரங்களை கவனிக்க மற்றொருவர் எனப் பகுதி பகுதியாக உதவியாளர்களை நியமித்து ஏற்பாடுகளைச் செய்திருக்கிறாராம் மெய்யநாதன். இதில் ஏற்பட்ட சில விவகாரங்கள் குறித்து முதல்வர் வரை புகார் சென்றிருக்கிறது. சமீபத்தில் கொத்தமங்கலத்தில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில், ஊராட்சி மன்றத் தலைவருக்கு உரிய முக்கியத்துவத்தை மெய்யநாதன் தரவில்லை என்பதும் அறிவாலயத்தில் புகாராகியிருக்கிறது. சமூகம் சார்ந்த அரசியலை அவர் கையிலெடுத்திருப்பதும், ஆலங்குடித் தொகுதியில் மற்ற சமூகத்தினரிடம் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. மெய்யநாதனைப் பற்றி முதல்வரின் காதுக்கு இது போன்ற புகார்கள் தொடர்ச்சியாகச் செல்வதால், சுற்றுச்சூழல் துறையில் அவர் நீண்டநாள் காலம் தள்ளுவது சந்தேகம்தான்.

பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கும் முதல்வருக்கும் இடையே 40 ஆண்டுகள் நட்பு உண்டு. ‘அந்த நட்பை அவர் தவறாகப் பயன்படுத்துகிறார்’ என்றே உளவுத்துறை முதல்வருக்கு ‘நோட்’ போட்டிருக்கிறது. நாசரின் மகன், நந்தனம் ஆவின் அலுலகத்தில் நடத்தும் ‘மாலைநேரச் சந்திப்புகள்’ வரை முதல்வரின் காதுக்குச் சென்றிருப்பதால், அவரே ஒரு மூத்த அமைச்சர் மூலமாக நாசரை எச்சரித்திருக்கிறார். அப்போதும், நாசர் மகனின் செயல்பாடுகளில் மாற்றமில்லை என்பதால், நாசருக்குக் கிடுக்குப்பிடி போடத் தீர்மானித்திருக்கிறார் முதல்வர். அரியலூர் மாவட்டச் செயலாளரும், தற்போதைய பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சராகவும் இருப்பவர் சிவசங்கர். இவர்மீது முதல்வருக்கு நல்ல அபிப்ராயம் உண்டு. அந்தவகையில், நாசரிடமிருக்கும் பால்வளத்துறை சிவசங்கருக்கு அளிக்கப்பட்டாலும் ஆச்சர்யமில்லை.

மாறும் அமைச்சரவை... மார்க் போடும் ஸ்டாலின்!

விட்டுத்தராத வேலு... அணைபோடும் செந்தில் பாலாஜி!

எ.வ.வேலுவிடம் பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறைகள் சேர்த்து ஒதுக்கப்பட்டதில் துரைமுருகனுக்குப் பெரிய வருத்தம். பொதுப்பணியை முழுவதுமாகத் தன்னிடமே ஒப்படைக்குமாறு முதல்வரிடம் மறைமுகமாகக் கேட்டும்விட்டார். ஆனால், அதற்கு எ.வ.வேலு உடன்படவில்லை. ‘கட்சிக்காக எவ்வளவோ செலவு செஞ்சுருக்கேன். இந்தத் துறையை என்கிட்டருந்து எடுத்தா, மொத்தமா என்னை அமைச்சரவையிலருந்து நீக்கிடுங்க’ என்றே சொல்லிவிட்டாராம் வேலு. பொதுப்பணித் துறையை வேலு விட்டுத்தர மறுப்பதால், தலைமையில் பஞ்சாயத்து களைகட்டுகிறது. அதேபோல, செந்தில் பாலாஜியிடம் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைகள் இருக்கின்றன. இதில் ஏதாவது ஒன்றைத் தனதாக்கிக்கொள்ள காய்நகர்த்துகிறார் கூட்டுறவுத் துறை அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி. திருமதி முதன்மை மூலமாக அதற்கு செந்தில் பாலாஜி அணை போடுவதால், அந்தப் பஞ்சாயத்தும் அறிவாலயத்தில் உருள்கிறது. ஐ.பெரியசாமியை திருப்திப்படுத்த, முக்கியமான துறையை ஒதுக்குவதென முதல்வரும் தீர்மானித்திருப்பதால், வரப்போகும் இலாகா மாற்றத்தில் அவருக்கான பிரதிநிதித்துவம் அளிக்கப்படலாம்.

இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்குக் கூடுதலாகப் பெரிய துறை ஒன்று ஒதுக்கப்படலாம். உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, அமைச்சரவை இலாகா மாற்றத்துக்குத் தயாராகிறது தி.மு.க அமைச்சரவை. இந்த மாற்றத்தில், திண்டுக்கல் ஐ.பெரியசாமி, சேகர் பாபு, கே.என்.நேரு ஆகியோருக்குக் கூடுதல் துறைகள் ஒதுக்கப்பட வாய்ப்பிருக்கிறது. ஜூனியர் அமைச்சர்கள் பலரின் துறைகள் மாற்றித் தரப்படலாம்” என்றனர்.

நெல்லை மாவட்டத்துக்கு அமைச்சரவையில் இடமில்லாததை, அவ்வப்போது நேரம் கிடைக்கும்போதெல்லாம் முதல்வரிடம் அப்பாவு சொல்லிக்கொண்டே வருகிறாராம். இந்த அமைச்சரவை மாற்றத்தில், அப்பாவுவின் ஆசை நிறைவேற வாய்ப்பு இல்லை என்றே சொல்கிறார்கள். அதேபோல, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறை ஏதாவது ஒதுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

மாறும் அமைச்சரவை... மார்க் போடும் ஸ்டாலின்!

“அதற்குள் மாற்றம் தேவையா?”

அமைச்சரவை இலாகா மாற்ற மனநிலைக்குக் கோட்டை தயாராகிவரும் நிலையில், ‘ஆட்சியே இப்போதுதான் அமைத்திருக்கிறோம். அதற்குள் மாற்றம் தேவையா?’ என்று முதல்வரின் மனதில் கல்லெறிந்திருக்கிறார்கள் அவர் குடும்ப உறுப்பினர்கள். ‘நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும்போது, அமைச்சரவையை முழுவதுமாக மாற்றியமைக்கலாம். தம்பி உதயநிதியையும் அமைச்சரவையில் சேர்க்கலாம்’ என்றிருக்கிறார்கள். இதனால், தொடக்கத்தில் சற்று குழப்பமான மனநிலையில் முதல்வர் இருந்திருக்கிறார். உளவுத்துறையின் மாதாந்தர ரிப்போர்ட் வந்துவுடன், அதைப் படித்துப் பார்த்தவர், ‘இதற்கு மேல் அமைதியாக இருந்தால் சிலருக்கு பயம் இல்லாமல் போய்விடும். தவிர, சீனியர்களையும் நான் சமாதானப்படுத்த வேண்டியிருக்கிறது’ என்று தனக்கு நெருக்கமான அதிகாரியிடம் கூறியிருக்கிறார்.

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு, மாவட்டத்துக்கு இரண்டு அமைச்சர்கள் வீதம் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், பொறுப்பு அளிக்கப்பட்ட அமைச்சர்களின் துறைகளும் மாற்றி அமைக்கப்படலாம் என்கிறார்கள். இந்த ஜுரத்தால், உறக்கமற்றிருக்கிறது அமைச்சர்கள் வட்டாரம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு