அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

“அடிக்கடி சந்திப்போம்!” - நெகிழ்ந்த மோடி... மகிழ்ந்த ஸ்டாலின்

ஸ்டாலின் - மோடி
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டாலின் - மோடி

பிரதமருடன் நடந்த சந்திப்பில், மத்தியிலிருந்து மாநில அரசுக்கு வர வேண்டிய நிதி ஆதாரங்கள் குறித்த விஷயங்களும் பேசப்பட்டன.

ஒட்டுமொத்த இந்தியாவில், மத்திய பா.ஜ.க அரசுடன் முட்டிமோதிவரும் மூன்று முதல்வர்களில் ஒருவரான ஸ்டாலின், பிரதமர் மோடியைச் சந்தித்திருப்பது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சந்திப்பு முடிந்த பிறகு பேசிய ஸ்டாலின், “பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தந்துள்ளது” என்று சொல்லி, அரசியல் பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். வெறும் 25 நிமிடங்களே நடைபெற்றாலும், இந்தச் சந்திப்பு மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தாவோ, கேரள முதல்வர் பினராயி விஜயனோ இப்படி மரியாதை நிமித்தம் சென்று பிரதமரை இன்னமும் சந்திக்காத நிலையில், ‘தமிழகத்தின் நலனுக்காக நான் வந்திருக்கிறேன்’ எனக் குறிப்பால் உணர்த்திவிட்டார் ஸ்டாலின். ‘தமிழகத்துக்கான கோரிக்கைகளுடன் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னிடம் பேசலாம்’ என பதில் மரியாதை செய்துவிட்டார் மோடி.

டெல்லி ட்ரிப் எதற்கு?

“புதிதாகப் பொறுப்பேற்கும் மாநில முதல்வர்கள் பிரதமரைச் சந்திப்பது வழக்கமான ஒன்றுதான். ஸ்டாலினின் இந்தச் சந்திப்பு முழுவதுமே மாநில அரசின் திட்டங்கள் சார்ந்ததே தவிர, அரசியல் சார்ந்த சந்திப்பு அல்ல” என்கிறார்கள் தி.மு.க-வின் தலைமைக் கழக நிர்வாகிகள். மே 7-ம் தேதி ஸ்டாலின் தமிழக முதல்வராகப் பதவியேற்றார். கிட்டத்தட்ட ஒரு மாதம் கழிந்த நிலையில்தான் டெல்லி பயணம் இறுதி செய்யப்பட்டது. பயணத் திட்டத்தை முதல்வர் அலுவலக அதிகாரிகள் தயார் செய்த உடனே, பிரதமரிடம் நேரம் கேட்கும் பொறுப்பை டெல்லியிலுள்ள தமிழ்நாடு ஹவுஸ் அதிகாரிகள் மேற்கொண்டனர். பிரதமர், ‘17-ம் தேதி மாலை’ என நேரம் கொடுத்த பிறகு, ஸ்டாலினின் பயணத் திட்டம் முடிவானது. அதன் பிறகே பிரதமரிடம் பேச வேண்டிய விவகாரங்கள் மற்றும் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் தயார்செய்துள்ளனர். குறிப்பாக, தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் முரண்பாடாக உள்ள விவகாரங்களை மையப்படுத்தியே இந்தக் கோரிக்கைகளை வகுத்திருக்கிறார்கள் அதிகாரிகள்.

 “அடிக்கடி சந்திப்போம்!” - நெகிழ்ந்த மோடி... மகிழ்ந்த ஸ்டாலின்

ஏன் இரண்டு நாள் பயணத் திட்டம்?

பிரதமரைச் சந்தித்துவிட்டு அன்றைக்கே சென்னை திரும்பவே முதலில் முடிவுசெய்தார் ஸ்டாலின். டெல்லி சென்றுவிட்டு சோனியாவைச் சந்திக்காமல் திரும்பினால் அது அரசியல்ரீதியான விமர்சனங்களை உண்டாக்கும் என்கிற யோசனை தோன்றவே, முதல்நாள் பிரதமரையும், மறுநாள் சோனியாவையும் சந்திக்கும் வகையில் பயணத் திட்டத்தை இரண்டு நாள்களாக மாற்றச் சொன்னார் ஸ்டாலின். தனி விமானத்தில் ஸ்டாலின், அவரின் மனைவி துர்கா, ஸ்டாலின் உதவியாளர் தினேஷ், முதல்வரின் செயலாளர்கள் உதயசந்திரன், உமாநாத், பாதுகாப்பு அதிகாரி செல்வராஜ் ஆகிய ஆறு பேர் பயணம் செய்தனர்.

நிதியமைச்சர் செல்லாதது ஏன்?

“சந்திப்புக்கு முதல்நாளே துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டவர்கள் டெல்லி சென்றுவிட்டனர். தலைமைச் செயலாளர் இறையன்புவும் ஸ்டாலின் டெல்லி வருவதற்கு முன்பாகவே சென்றுவிட்டார். தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் தங்கும் சூட் அறையைக் கடந்த ஒரு வாரமாகவே பொதுப்பணித் துறையினர் தயார் செய்துவந்தனர்” என்கிறார்கள் தமிழ்நாடு இல்ல அதிகாரிகள். சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு இல்லத்தில் ஸ்டாலின் தங்குவதால், ஏற்பாடுகள் பக்காவாக இருந்தன.

பிரதமருடன் நடந்த சந்திப்பில், மத்தியிலிருந்து மாநில அரசுக்கு வர வேண்டிய நிதி ஆதாரங்கள் குறித்த விஷயங்களும் பேசப்பட்டன. ஆனால், ஜி.எஸ்.டி கூட்டத்தில் மத்திய அரசுமீது நிதி விவகாரங்களில் குற்றச்சாட்டை முன்வைத்த தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனோ, தமிழக நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணனோ முதல்வருடன் டெல்லிக்குச் செல்லாதது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இது குறித்து தமிழக அரசு வட்டாரத்தில் விசாரித்தபோது “வரும் 21-ம் தேதி தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுவதால், நிதியமைச்சரும், நிதித்துறையின் செயலாளரும் அந்தப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். அதனால், அவர்கள் டெல்லி செல்லவில்லை” என்றார்கள்.

17-ம் தேதி காலை சென்னையிலிருந்து டெல்லி சென்ற ஸ்டாலினுக்கு, விமான நிலையத்தில் உற்சாகமான வரவேற்பு கொடுத்தனர் தி.மு.க எம்.பி-க்கள். விமான நிலையத்திலிருந்து தமிழ்நாடு ஹவுஸ் செல்லும் வழியில், டெல்லியில் கட்டப்படும் தி.மு.க அலுவலகப் பணிகளைப் பார்வையிட்டார் ஸ்டாலின். “ஜூலை இறுதிக்குள் கட்டடப் பணிகள் முழுமையடைந்துவிடும்” என்று அதிகாரிகள் சொல்ல, “கண்டிப்பாகத் திறப்புவிழாவில் கலந்துகொள்வேன்’’ என உத்தரவாதம் கொடுத்துள்ளார் ஸ்டாலின்.

 “அடிக்கடி சந்திப்போம்!” - நெகிழ்ந்த மோடி... மகிழ்ந்த ஸ்டாலின்

RAW அதிகாரிகளைச் சந்தித்தாரா ஸ்டாலின்?

அதன் பிறகு தமிழ்நாடு இல்லம் சென்ற முதல்வர், அங்கு துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டவர்களுடன் நீண்டநேரம் ஆலோசனை நடத்தினார். மதியம் சாப்பிட்டு ஓய்வெடுக்கச் சென்றவர், மாலை பிரதமரைச் சந்திக்கக் கிளம்பும் நேரத்தில்தான் வெளியில் வந்தார். இதற்கிடையே தமிழக முதல்வரை டெல்லி தமிழ்நாடு ஹவுஸில் இந்திய உளவு அமைப்பான ‘ரா’வின் தலைவர் சந்தித்துப் பேசியதாக ஒரு தகவல் கசிந்தது. இது குறித்து டெல்லி தமிழ்நாடு ஹவுஸ் தரப்பில் விசாரித்தபோது “முதல்வரின் பயணத் திட்டம் முழுவதுமே திட்டமிட்டபடி நடந்தது. அவர் தமிழ்நாடு ஹவுஸில் இருந்தபோது, தமிழக கேடர் அதிகாரிகளைத் தவிர, வேறு எந்த அதிகாரியையும் சந்திக்கவில்லை. தமிழக எம்.பி-க்கள் சிலர் அவருடனேயே தமிழ்நாடு ஹவுஸில் தங்கியிருந்ததால், இது போன்ற ரகசியச் சந்திப்புக்கு வாய்ப்பில்லை” என்றார்கள். அதேநேரம் “இந்தியப் பாதுகாப்புத் துறையின் சார்பில் முதல்வருக்குச் சில ஆலோசனைகள் டெல்லியில் வழங்கப்பட்டுள்ளன என்கிறார்கள். குறிப்பாக சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்துவருவதால், தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. தமிழகத்தில் முத்துப்பேட்டை அருகே ஏற்கெனவே ‘ரா’ உளவு அமைப்புக்குச் சொந்தமான பாதுகாப்புத்தளம் ஒன்று செயல்படுகிறது. அந்த மையத்தை நவீனப்படுத்த தமிழக அரசு போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று முதல்வரிடம் சொல்லியிருப்பதாக ஒரு தகவலும் டெல்லியிருந்து கசிந்துள்ளது.

அதேபோல், முதல்வர் சென்னையிலிருந்து கிளம்பும் முன்பாகவே மத்திய உளவு அமைப்பான ஐ.பி மூலம் என்னென்ன கோரிக்கைகளைத் தமிழக முதல்வர் பிரதமரிடம் கொடுக்கவிருக்கிறார் என்கிற விவரங்களையும் டெல்லி தலைமை கேட்டுப் பெற்றிருக்கிறது.

அக்கறையாகக் கேட்ட மோடி!

பிரதமரின் இல்லத்துக்கு முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோரும் உடன் சென்றனர். தமிழகத்துக்கான கோரிக்கைகள் அடங்கிய சுமார் 120 பக்க ஃபைலை மோடியிடம் கொடுத்துள்ளார் ஸ்டாலின். அதில் பெரும்பாலான கோரிக்கைகள் தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றவையே. பிரதமர், ஸ்டாலினிடம் “தமிழகத்துக்குத் தேவையான உதவிகளை நாங்கள் செய்துதருகிறோம். அதேநேரம் பிரதமர் வீடு கட்டும் திட்டம், ஜல் சக்தி திட்டத்தில் தமிழகத்துக்குத் தற்போது கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களைத் தமிழகம் முழுவதும் முழுமையாக நிறைவேற்றுங்கள்’’ என்று சொன்னாராம். அதேபோல் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் சர்ச்சையை ஏற்படுத்திய பாரத்நெட் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தி, கிராமம்தோறும் இன்டர்நெட் வசதியைக் கொண்டுவர தி.மு.க அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் சொன்னதாகத் தெரிகிறது. அதைத் தமிழக முதல்வரும் ஏற்றுக்கொண்டுள்ளார். தவிர, ஸ்டாலினிடம் “உங்கள் தாயார் தயாளு அம்மாள் உடல்நிலை எப்படி இருக்கிறது?” என்று அக்கறையுடன் கேட்டிருக்கிறார் மோடி. 25 நிமிடங்கள் மட்டுமே இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. ஆனால், விடைபெறும்போது, ‘தொடர்ந்து நாம் அடிக்கடி சந்திப்போம்’ என்று சொல்லி நெகிழ்ச்சியோடு வழியனுப்பியுள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அணுகுமுறையால், உபசரிப்பால் ரொம்பவே மகிழ்ச்சியோடு திரும்பியிருக்கிறார் ஸ்டாலின்.

பற்றவைத்த தமிழக பா.ஜ.க நிர்வாகிகள்... அமைதியான ஸ்டாலின்!

“நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தலில், பெரும் பின்னடைவு ஏற்பட்ட நிலையில் தி.மு.க-வைத் தங்கள் பக்கம் இழுக்க வேண்டிய நெருக்கடி பா.ஜ.க-வுக்கு இருக்கிறது. குறிப்பாக, தி.மு.க முன்வைத்த மாநில நலன்சார்ந்த திட்டங்கள், அகில இந்திய அளவில் பேசுபொருளாகிவருகின்றன. இதனால், ஸ்டாலினைச் சரிக்கட்டி வைத்துக்கொள்வது, மத்திய அரசுக்கு அவசியமான ஒன்று. அதைத் தாண்டி மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ள தி.மு.க., இப்போது மாநிலத்திலும் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. எனவே, அதன் குரல்கள் இப்போது ஓங்கி ஒலிக்கும் என்பதை அறிந்தே தமிழக விவகாரத்தில் நிதானமான போக்கைக் கடைப்பிடிக்கலாம் என மத்திய அரசு முடிவெடுத்தது. அதன் ஒரு பகுதியாகவே, ஜல் சக்தி திட்டத்துக்குக் கடந்த முறையைவிட இந்த ஆண்டு மூன்று மடங்கு கூடுதல் நிதியை ஒதுக்கியது மத்திய அரசு. அதேபோல், ஸ்டாலின் இப்போது அளித்துள்ள கோரிக்கைகளில் சிலவற்றை உடனடியாக நிறைவேற்றும் எண்ணத்தில் மத்திய அரசு இருக்கிறது” என்று சொல்கிறது டெல்லி அரசியல் வட்டாரம்.

 “அடிக்கடி சந்திப்போம்!” - நெகிழ்ந்த மோடி... மகிழ்ந்த ஸ்டாலின்

பிரதமரை முதல்வர் ஸ்டாலின் சந்திப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, தமிழக பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான கே.டி.ராகவன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துள்ளார். அப்போது பழனிவேல் தியாகராஜன் மத்திய அரசுக்கு எதிராகத் தெரிவித்த கருத்துகளைப் பற்றிய சில விவரங்களையும், தி.மு.க அரசு தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக எடுத்துவைக்கும் அரசியல் நகர்வுகளைப் பற்றியும் பேசியிருக்கிறார். இந்தத் தகவல், நிதி அமைச்சகத்திலிருந்து பிரதமர் வீட்டுக்கும் சென்றுள்ளது. அதேபோல் பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை, ஸ்டாலின் டெல்லி செல்வதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பாகவே அங்கு சென்றுவிட்டார். பா.ஜ.க மூத்த தலைவர்களையும், மத்திய அரசியல் விவகாரங்களை கவனிக்கும் சில அதிகாரிகளையும் சந்தித்துப் பேசியிருக்கிறார். இந்தத் தகவல் டெல்லிக்கு வந்த ஸ்டாலினுக்குச் சொல்லப்பட, அமைதியாக அதைக் கேட்டுக்கொண்டாராம்.

பிரதமர் சந்திப்பை முடித்துக்கொண்டு தமிழக இல்லத்துக்குத் திரும்பிய ஸ்டாலின், டெல்லியிலுள்ள தமிழக கேடர் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார். மத்திய அரசின் எந்தெந்தத் திட்டங்களைத் தமிழகத்தில் விரிவுபடுத்தலாம் என்று ஆலோசனை நடந்தது. இந்தச் சந்திப்பில் மத்திய நிதித்துறைச் செயலாளர் சோமநாதனும் இருந்தார். அப்போது ஜி.எஸ்.டி விவகாரத்தில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி முதல்வரிடம் தனது கருத்துகளைப் பதிவுசெய்திருக்கிறார் சோமநாதன். அதேபோல் ஐ.பி-யில் பணிபுரியும் ஐ.பி.எஸ் அதிகாரி ரவிச்சந்திரன், சி.பி.ஐ-யில் பணிபுரியும் ஆஸ்ரா கார்க் உள்ளிட்டவர்களும் முதல்வரைச் சந்தித்துள்ளார்கள். கம்யூனிஸ்ட் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா ஆகியோர் தமிழ்நாடு இல்லம் வந்து ஸ்டாலினைச் சந்தித்துச் சென்றார்கள்.

 “அடிக்கடி சந்திப்போம்!” - நெகிழ்ந்த மோடி... மகிழ்ந்த ஸ்டாலின்

ஸ்டாலின் டெல்லியில் இருந்த அதேநேரத்தில், மேற்கு வங்க கவர்னர் ஜகதீப் தன்கரும் டெல்லி வந்திருந்தார். மேற்கு வங்க அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக ஜனாதிபதி சந்திப்பு, மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை என அவர் கிளப்பிய பரபரப்புகளில், ஸ்டாலினின் டெல்லிப் பயணம் பற்றிய செய்திகள் வட இந்திய மீடியாக்களில் அமுங்கிப்போனது உண்மை.

நீண்டகாலமாகத் தமிழகத்தின் பிரச்னைகளாக, கோரிக்கைகளாக இருந்துவருபவற்றை நம்பிக்கையோடு பிரதமரிடம் முன்வைத்துவிட்டுத் திரும்பியிருக்கிறார் ஸ்டாலின்.

என்னவாகும் அந்த 120 பக்க எதிர்பார்ப்பு?

*****

எளிமையான உணவு!

காலையில் இட்லி, வடை, மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம், இரவு இடியாப்பம், மசால் தோசை என எளிமையான உணவுகளையே ஸ்டாலின் சாப்பிட, தமிழ்நாடு இல்ல சமையல் கலைஞர்கள் திகைத்துவிட்டார்களாம்!

காங்கிரஸின் அச்சம்!

ஸ்டாலினின் இந்தப் பயணத்தையும், ஸ்டாலின் விஷயத்தில் பிரதமர் காட்டும் நிதானத்தையும் கண்டு கொஞ்சம் ஜெர்க் ஆகியிருக்கிறது காங்கிரஸ் தலைமை. காங்கிரஸைப் பொறுத்தவரை, தேசிய அளவில் சொல்லிக்கொள்ளும்படியான பலமான கூட்டணிக் கட்சி என்றால் அது தி.மு.க-தான். எனவே, பா.ஜ.க-வின் காய்நகர்த்தல்களால், நாடளுமன்ற விவகாரங்களில் ஸ்டாலின் மென்மையான போக்கைக் கடைபிடிக்கக் கூடாது என்கிற அச்சத்திலிருக்கிறது காங்கிரஸ்.