Published:Updated:

மாற்று மம்தா... கிலி கிளப்பும் கெஜ்ரிவால்... என்ன செய்யப் போகிறார் ராகுல்?

கெஜ்ரிவால், ராகுல், மம்தா
பிரீமியம் ஸ்டோரி
கெஜ்ரிவால், ராகுல், மம்தா

பா.ஜ.க-வைவிட இந்தத் தேர்தல் காங்கிரஸுக்கு மிக முக்கியம். அந்தக் கட்சி தனித்து ஆட்சியில் இருக்கும் மூன்றே மூன்று மாநிலங்களில் பஞ்சாப் ஒன்று

மாற்று மம்தா... கிலி கிளப்பும் கெஜ்ரிவால்... என்ன செய்யப் போகிறார் ராகுல்?

பா.ஜ.க-வைவிட இந்தத் தேர்தல் காங்கிரஸுக்கு மிக முக்கியம். அந்தக் கட்சி தனித்து ஆட்சியில் இருக்கும் மூன்றே மூன்று மாநிலங்களில் பஞ்சாப் ஒன்று

Published:Updated:
கெஜ்ரிவால், ராகுல், மம்தா
பிரீமியம் ஸ்டோரி
கெஜ்ரிவால், ராகுல், மம்தா

``2024 என்ற நம் இலக்கை 2022 என்ற பாதை வழியாகவே அடைய முடியும்'' என்று உத்தரப்பிரதேசத் தலைநகர் லக்னோவில் ஒரு பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சொன்னார். அதில் கொஞ்சமும் மிகையில்லை. உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் இப்போது நடைபெறும் தேர்தல்தான், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என்பதைத் தீர்மானிக்கக்கூடியதாக இருக்கிறது. 80 எம்.பி-க்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கும் மிகப்பெரிய மாநிலமான உ.பி-யில்தான் பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியும் இருக்கிறது.

இந்தத் தேர்தலில் எதையும் இழந்துவிடக்கூடாது என்பது பா.ஜ.க-வின் அக்கறையாக இருக்கிறது. உ.பி., உத்தரகாண்ட் மாநிலங்களில் தனித்தும், கோவா மற்றும் மணிப்பூரில் கூட்டணியை இணைத்தும் பா.ஜ.க ஆட்சியில் இருக்கிறது. இதில் எங்கு பின்னடைவைச் சந்தித்தாலும், அது தேசிய அளவில் பா.ஜ.க-வுக்கு பலவீனம் தரும்.

பா.ஜ.க-வைவிட இந்தத் தேர்தல் காங்கிரஸுக்கு மிக முக்கியம். அந்தக் கட்சி தனித்து ஆட்சியில் இருக்கும் மூன்றே மூன்று மாநிலங்களில் பஞ்சாப் ஒன்று. இதை இழக்காமல் இருப்பது அவர்களுக்கு அவசியம். இந்தத் தேர்தல்கள் முடிந்தபிறகு ராகுல் காந்தி காங்கிரஸின் தலைவராகத் தேர்வு செய்யப்படுவார் என்று கட்சி வட்டாரங்கள் சொல்கின்றன. வரும் செப்டம்பரில் கட்சித் தேர்தல்களை காங்கிரஸ் நடத்த வேண்டும். ராகுலைக் கூட்டணிக் கட்சிகள் ஒரு தலைவராக ஏற்கவும், அவரது கட்சியினரே அவரை ஏற்கவும் இந்தத் தேர்தல் முடிவுகளே உதவும். பஞ்சாப்பிலும் உத்தரகாண்டிலும் ஜெயிக்க முடியும் என்றும், கோவாவில் பிரதான எதிர்க்கட்சியாக வரமுடியும் என்றும் காங்கிரஸ் சீனியர் தலைவர்கள் பலர் நம்புகின்றனர்.

ஆனால், அது அத்தனை சுலபமில்லை என்பதே யதார்த்தம். மற்ற கட்சிகள் எல்லாம் தேர்தல் களத்தில் மோதிக்கொண்டிருக்க, காங்கிரஸ்காரர்கள் தங்களுக்குள்ளேயே சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸுக்குப் பெரிய எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை. காங்கிரஸ் கட்சியில் இருந்த ஏழு எம்.எல்.ஏ-க்களில் நான்கு பேர் வேறு கட்சிகளுக்குத் தாவி இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றனர். இம்முறை வேட்பாளர்களாக காங்கிரஸ் அறிவித்த சிலரும் இப்படி கட்சி தாவி வேறு கட்சிகளின் வேட்பாளர்களாக மாறியிருக்கின்றனர். இப்படிப்பட்ட சோகமான சூழலில்தான், பிரியங்கா காந்தி அங்கே தனியாக மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்.

மற்ற மாநிலங்களிலும் அப்படி ஒன்றும் உற்சாகமான சூழல் இல்லை. பஞ்சாப்பில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரக் காரணமாக இருந்தவர், கேப்டன் அமரிந்தர் சிங். அவருக்கு எதிராகக் கட்சியினர் கலகம் செய்ய, அவர் காங்கிரஸிலிருந்து வெளியேறினார். அதன்பின் முதல்வராகியுள்ள சரண்ஜித் சிங் சன்னிக்கும், மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் தினம் தினம் சண்டை நடக்கிறது. மாநிலத்தில் இருக்கும் மற்ற தலைவர்களும், `இவருக்கு சீட் கொடு', `அவருக்கு சீட் கொடுக்காதே' என்று டெல்லிக்கு அனுப்பும் பரிந்துரைகளால் மேலிடம் திகைத்துப் போயிருக்கிறது. இந்தக் குழப்பங்களைத் தாண்டி காங்கிரஸ் அங்கு ஜெயித்தால், அது எட்டாவது அதிசயம்.

உத்தரகாண்டில் காங்கிரஸின் செல்வாக்கான தலைவராக இருப்பவர், முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத். சமீபத்தில் அவர் அதிருப்தியுடன் கட்சியிலிருந்து வெளியேற முற்பட, அவரை சமாதானம் செய்து, அவருக்கு நெருக்கமான பலருக்கு சீட் கொடுத்து சமாளித்திருக்கிறது டெல்லி தலைமை. மணிப்பூரில் 15 ஆண்டுகள் முதல்வராக இருந்த ஒக்ரம் இபோபி சிங் என்ற மூத்த தலைவரையே நம்பியிருக்கிறது காங்கிரஸ். அவரோ, பிரசாரத்தில் ஆர்வம் காட்டாமலே இருக்கிறார். கோவா மாநிலத்தில் கடந்த தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்றது காங்கிரஸ்தான். ஆனாலும், சின்னச்சின்ன கட்சிகளை வளைத்துப் பிடித்து ஆட்சி அமைத்தது பா.ஜ.க. அதன்பின் காங்கிரஸிலிருந்து வரிசையாகப் பலர் விலகினார்கள். இம்முறை மற்ற கட்சிகளிலிருந்து தாவிய பலரை வேட்பாளராக்கி தேர்தலைச் சந்திக்கிறது காங்கிரஸ். எல்லா வேட்பாளர்களையும் ஆலயங்களுக்கு அழைத்துப் போய், `நான் கட்சிக்கு விசுவாசமாக இருப்பேன். ஜெயித்தபிறகு கட்சி தாவ மாட்டேன்' என்று சத்தியம் செய்ய வைக்கும் அளவுக்குப் போய்விட்டது காங்கிரஸ்.

மாற்று மம்தா... கிலி கிளப்பும் கெஜ்ரிவால்... என்ன செய்யப் போகிறார் ராகுல்?

இவ்வளவு குழப்பங்களையும் தன் பிரசாரங்களால் சமாளிக்க வேண்டிய ராகுல் காந்தி எங்கே என்று கட்சியினரே தேடிக்கொண்டிருக்கிறார்கள். மற்ற கட்சிகளின் தலைவர்கள் எல்லோரும் பிரசாரக் களத்தில் இருக்க, ராகுல் டெல்லியில் இருந்தபடி ட்விட்டரில் களமாடிக்கொண்டிருக்கிறார். பஞ்சாப்பில் அவரின் முதல் பிரசாரக் கூட்டமும் ரத்து செய்யப்பட்டது. சோனியாவும் உடல்நலமின்றி இருப்பதால், பிரியங்காவை மட்டுமே நம்பியிருக்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள்.

ராகுலின் இந்த நிச்சயமற்ற தன்மையே காங்கிரஸின் எதிர்காலத்தைக் கேள்விக்கு ஆளாக்கியிருக்கிறது. `தேசிய அளவில் பா.ஜ.க-வை எதிர்க்கும் தகுதி எங்களுக்கு மட்டுமே இருக்கிறது' என்று இரண்டு பேர் இந்த இடைவெளியை நிரப்புவதற்குக் கிளம்பியிருக்கிறார்கள். மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரே அந்த இருவர்.

பிரியங்காவும் ராகுலுமாவது ரத்த உறவில் அக்கா, தம்பி. அப்படி ஒரு வயிற்றில் பிறக்காத அக்கா, தம்பியாக அரசியலில் வலம் வந்தவர்கள் மம்தாவும் கெஜ்ரிவாலும். டெல்லி துணைநிலை ஆளுநருக்கு எதிராக கெஜ்ரிவால் போராடியபோது நேரில் போய் ஆதரவு தெரிவித்தவர் மம்தா. டெல்லியில் கெஜ்ரிவாலுக்காக மம்தா பிரசாரம் செய்தார். மம்தாவுக்காக மேற்கு வங்கம் சென்று பேசினார் கெஜ்ரிவால். ஆனால், கடந்த ஆண்டு ஜூலைக்குப் பிறகு இருவரும் சந்தித்துக்கொள்ளவில்லை. காரணம், தேசிய அரசியலில் காங்கிரஸை வீழ்த்தி முன்னிலை பெறுவதில் இருவருக்கும் இருக்கும் போட்டி.

இதில் மம்தாவைவிட வேகம் காட்டுகிறார் கெஜ்ரிவால். கடந்த 2017 தேர்தலில் பஞ்சாப்பில் காங்கிரஸுக்கு அடுத்து கணிசமான வெற்றிகளைப் பெற்று பிரதான எதிர்க்கட்சியானது ஆம் ஆத்மி கட்சி. இம்முறை அந்தக் கட்சியே அதிக இடங்களைப் பிடிக்கும் என்று கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன. கடந்த முறையே அவர்கள் 24 சதவிகித வாக்குகளை வாங்கினர். தங்கள் கட்சி எம்.பி-யான பகவந்த் சிங் மான் என்பவரை முதல்வர் வேட்பாளராக்கி, தீவிர பிரசாரத்தில் இறங்கியிருக்கிறார் கெஜ்ரிவால். சமீபத்தில் நடந்த சண்டிகர் மாநகராட்சித் தேர்தலில் அதிக இடங்களை அவர் கட்சி வென்றது. அதனால் மிகுந்த நம்பிக்கையுடன் வாக்குறுதிகளை அள்ளி வீசி பஞ்சாப் தேர்தலை எதிர் கொள்கிறார் கெஜ்ரிவால்.

இதேபோல உ.பி மற்றும் உத்தரகாண்டிலும் கவனம் செலுத்துகிறார் கெஜ்ரிவால். அதைவிடத் தீவிரமாக கோவா மாநிலத்தில் ஆம் ஆத்மி பிரசாரம் செய்கிறது. கடந்த தேர்தலில் கோவா மாநிலத்தில் ஆறு சதவிகித வாக்குகளை வாங்கியது ஆம் ஆத்மி கட்சி. இம்முறை அவர்கள் காட்டும் வேகத்தைப் பார்த்து காங்கிரஸ் தலைவர்கள் பலரே இந்த முகாமுக்குத் தாவியிருக் கின்றனர். இந்த ஆண்டு இறுதியில் வரும் குஜராத் மற்றும் இமாசலப்பிரதேசத் தேர்தல் களுக்கும் இப்போதே தயாராகி வருகிறார் கெஜ்ரிவால்.

`என் மூத்த சகோதரி' என்று மம்தாவைக் குறிப்பிடுவார் அவர். ``அவர் எனக்கு எதிராகத் தேர்தலில் போட்டியிட்டாலும் சரி, என்னைக் கன்னத்தில் அறைந்தாலும் சரி, அவருக்கு மரியாதை தருவதை நான் நிறுத்த மாட்டேன். எதிர்க்கட்சி அணிக்கு யார் தலைமை தாங்குவது என்பது முக்கியம் இல்லை, நாட்டுக்கு நல்லது நடந்தால் போதும்'' என்று சமீப நாள்கள் வரை சொன்னவர்தான்.

ஆனால், கோவாவில் ஆம் ஆத்மியும் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸும் நேருக்கு நேர் மோதுவதால் இந்தச் சூழல் மாறிவிட்டது. மம்தா பற்றி அங்கு நிருபர்கள் கேட்டபோது, ``நாட்டில் 1,350 அரசியல் கட்சிகள் இருக்கின்றன. ஒவ்வொரு கட்சியைப் பற்றியும் நான் பேச வேண்டுமா?'' என்று கிண்டலாகக் கேட்டார். ``திரிணாமுல் காங்கிரஸுக்கு நீங்கள் தேவையற்ற முக்கியத்துவம் தருகிறீர்கள். அந்தக் கட்சி இங்கு ஒரு சதவிகித ஓட்டுகூட வாங்காது'' என்றார்.

கெஜ்ரிவால், மம்தா
கெஜ்ரிவால், மம்தா

மம்தா போல தொலைதூர மாநிலக் கட்சி ஒன்றின் தலைவராக இல்லாமலி ருப்பது கெஜ்ரிவாலின் பலம். அவர் இந்தி பேசும் மாநிலத்தைச் சேர்ந்த வராக இருப்பதும், பல மாநிலங்களில் வேலை பார்க்க தன்னார்வத் தொண்டர்கள் கிடைப்பதும் ஆம் ஆத்மியை எளிதாக ஏற்றுக்கொள்ளும் கட்சியாக மாற்றியிருக்கிறது.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முன்பாகவே தேசிய அரசியலுக்குத் தயாராகியிருந்தார் மம்தா. ஆனால், அவர் முதலில் கவனம் செலுத்திய திரிபுரா, மேகாலயா, ஹரியானா போன்ற மாநிலங்களில் இப்போதைக்குத் தேர்தல் வரவில்லை. கொஞ்சம் தாமதமாகவே அவர் தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு வந்தார். உ.பி-யில் அகிலேஷ் யாதவை ஆதரித்துப் பிரசாரம் செய்யப்போவதாக அறிவித்திருக்கும் மம்தா, மணிப்பூரிலும் கோவா மாநிலத்திலும் தீவிர கவனம் செலுத்துகிறார். கோவாவில் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் உட்பட பலரை இழுத்து வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கிறது திரிணாமுல் காங்கிரஸ்.

மம்தாவின் அரசியலுக்கு எந்த நியதிகளும் நெறிகளும் கிடையாது. மும்பைக்குச் சென்று சரத்பவாரைச் சந்தித்துவிட்டு, அவரைப் பக்கத்திலேயே வைத்துக்கொண்டு, ``ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்று ஒன்று இப்போது இல்லவே இல்லை'' என்று அதிரடியாகச் சொன்னார். காங்கிரஸின் அந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பவார் சங்கடத்துடன் நெளிந்தார். ``மோடியை எதிர்ப்பதற்குத் தகுதியான தலைவர் பவார்தான்'' என்றும் சொல்லிவிட்டு வந்தார். கோவா மாநிலத்தில் பவார் கட்சியுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை ஒருபுறம் நடத்திக்கொண்டு, பவார் கட்சியில் இருந்த ஒரே ஒரு எம்.எல்.ஏ-வையும் தன் கட்சிக்கு இழுத்துவிட்டார்.

இன்னொரு பக்கம் காங்கிரஸிலிருந்து பலரை இழுத்துவிட்டு, அந்தக் கட்சியையே கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். காங்கிரஸ் இதைக் கண்டுகொள்ளவில்லை. ``எங்களுடன் கூட்டணி வைக்காமல், பா.ஜ.க ஜெயிப்பதற்கு காங்கிரஸ் துணை போகிறது'' என்று குற்றம் சாட்டுகிறார்கள் திரிணாமுல் தலைவர்கள்.

இந்தத் தேர்தல் பரபரப்புகளுக்கு நடுவிலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் விரைவில் டெல்லியில் நடக்கவிருக்கிறது. தேசிய அரசியலுக்கு வரும் விதத்தில் கட்சியின் பெயரை மாற்றலாமா என்றுகூட யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். மம்தாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் ஒன்றைப் பல மொழிகளில் தயாரிக்கும் யோசனையும் இருக்கிறது. தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோரும், ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து மம்தா பக்கம் தாவிய பவன் வர்மா என்பவரும் இணைந்து மம்தாவுக்கு ஒரு தேசிய முகத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

தன் கழுத்துக்குப் பின்னால் உஷ்ணப் பெருமூச்சு விட்டபடி பின்தொடரும் இருவரையும் ராகுல் காந்தி உணர்ந்தாரா என்பது தெரியவில்லை. ஆனால், மார்ச் 10-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது பல அரசியல் கணக்குகள் மாறக்கூடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism