Published:Updated:

தமிழகத்திலும் முதல்வருடன் மோதும் ஆளுநர்!

ஸ்டாலின் - ஆர்.என்.ரவி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின் - ஆர்.என்.ரவி

நீட் மசோதா விஷயத்திலும் சும்மா இல்லை. ‘சட்டமன்றம் அனுப்பும் மசோதாக்கள்மீது கவர்னர் முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்.

தமிழகத்திலும் முதல்வருடன் மோதும் ஆளுநர்!

நீட் மசோதா விஷயத்திலும் சும்மா இல்லை. ‘சட்டமன்றம் அனுப்பும் மசோதாக்கள்மீது கவர்னர் முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்.

Published:Updated:
ஸ்டாலின் - ஆர்.என்.ரவி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின் - ஆர்.என்.ரவி

நேற்று வரை ஆளுங்கட்சியில் இருந்த, அல்லது ஆளுங்கட்சிக்கு ஆதரவாளராக இருந்த ஒருவரை இன்று கவர்னராக நியமித்ததும் அவர் அரசியல் சட்டத்தின் மாண்புகளை மதித்து பாரபட்சமின்றிச் செயல்படுவார் என்று நம்புவதுதான் இந்திய அரசியலமைப்பின் மாபெரும் பலவீனம். அதனால்தான், சுதந்திர இந்தியாவின் 75-வது ஆண்டிலும், ‘ஆட்டுக்குத் தாடி போல நாட்டுக்கு கவர்னர் தேவையில்லாத ஆணி’ என்ற குரல் எழுகிறது.

‘மத்திய அமைச்சரவையின் கூட்டு முடிவுக்கு ஒப்புதல் கொடுக்கும் ரப்பர் ஸ்டாம்ப்பே குடியரசுத் தலைவர்’ என்பார்கள். அதேபோல மாநில அமைச்சரவையின் கூட்டு முடிவுக்கு ஒப்புதல் தரும் ஒருவராகவே கவர்னர் இருக்கிறார். ஆனால், சில சமயங்களில் முரண்படும் உரிமையும் அவருக்கு இருக்கிறது. இந்த உரிமையை அவர் எப்படிப் பயன்படுத்துகிறார் என்பதில்தான் சிக்கல் எழுகிறது.

நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிப்பதற்காக, 2021 செப்டம்பர் 13-ம் தேதி தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவை 141 நாள்கள் கழித்துத் திருப்பி அனுப்பியிருக்கிறார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. திருப்பி அனுப்பியதைவிட, அதற்காக கவர்னர் குறிப்பிட்ட காரணங்கள்தான் தமிழக அரசைக் கோபத்தில் தள்ளியிருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் கவர்னரை வெளிப்படையாக விமர்சனம் செய்திருக்கிறார். பி.சி.அலெக்ஸாண்டர் தமிழக கவர்னராக இருந்தபோது, அவருக்கும் கருணாநிதிக்கும் நடைபெற்ற நிழல் யுத்தம் பிரபலமானது. அதன்பின் இணக்கமான கவர்னர்களையே தி.மு.க பார்த்துவந்தது. முதல்முறையாக முதல்வராகி இருக்கும் ஸ்டாலினுக்கு முதல் தலைவலியாக வந்திருக்கிறார் ஆர்.என்.ரவி.

2021 செப்டம்பர் 18-ம் தேதி ரவி பதவி யேற்பதற்கு முன்பாகவே நீட் தீர்மானத்தை நிறை வேற்றியிருந்தது தி.மு.க அரசு. அப்போது ரவியுடன் ஸ்டாலினுக்கு உரசல்கள் எதுவும் இல்லை. முன்னாள் போலீஸ் அதிகாரி, நாகாலாந்தில் பா.ஜ.க கூட்டணி அரசையே வெளிப்படையாக விமர்சனம் செய்தவர், ‘சட்டம் ஒழுங்கை நான் பார்த்துக்கொள்ளவா?’ என்று கேட்டவர், ‘கவர்னர் அனுமதி இல்லாமல் மாவட்ட அளவிலான அதிகாரிகளை டிரான்ஸ்பர் செய்யக்கூடாது’ என்று மாநில அரசுக்குக் கடிதம் எழுதியவர். இந்த வரலாற்றை வைத்து ரவியின் நியமனத்துக்கு தி.மு.க கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தபோதும், ஸ்டாலின் கவர்னருக்கு எதிராக எதுவும் சொல்லவில்லை.

தமிழகத்திலும் முதல்வருடன் மோதும் ஆளுநர்!

அதன்பின் ‘மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் எவ்வாறு செயல் படுத்தப்படுகின்றன என்பது குறித்த விவரங்களை கவர்னருக்கு சமர்ப்பிக்கத் தயாராக இருங்கள்’ என்று தலைமைச் செயலாளர் இறையன்பு பல்வேறு துறைகளின் செயலாளர் களுக்கு எழுதிய கடிதம் சர்ச்சையானது. ‘இது வழக்கமான ஒரு நடைமுறைதான்’ என்று அரசுத் தரப்பில் விளக்கமும் வெளியானது. அரசு நிர்வாகத்தில் கவர்னர் தலையிடுகிறார் என்று கூட்டணிக் கட்சிகள் உஷ்ணமடைந்தபோதும், ஸ்டாலின் அமைதியாகவே இருந்தார்.

இப்படி ஒரு பக்கம் ஸ்டாலின் சமாதானக் கொடி பிடித்தாலும், இன்னொரு பக்கம் ‘கவர்னருக்கு அதிகம் இடம் கொடுத்துவிடக் கூடாது’ என்பதில் தெளிவாகவே இருந்தார். தமிழகப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் உரிமை கவர்னருக்கே இருக்கிறது. ‘இதை மாற்றி மாநில அரசே துணைவேந்தர்களை நியமிப்பதற்குச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்’ என்று சட்டமன்றத்தில் ஸ்டாலின் அறிவித்தார். ‘குஜராத்தில் நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது இப்படி சட்டத் திருத்தம் கொண்டு வந்தார். அதேபோன்ற முறையைத் தமிழக அரசும் மேற்கொள்ளும்’ என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சொன்னது அர்த்தமுள்ள உதாரணம்.

நீட் மசோதா விஷயத்திலும் சும்மா இல்லை. ‘சட்டமன்றம் அனுப்பும் மசோதாக்கள்மீது கவர்னர் முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும். கோப்புகளை உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்பும் மரபு இருந்தும் கவர்னர்கள் அதைச் செய்வதில்லை’ என்று சபாநாயகர்கள் மாநாட்டில் தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு பேசினார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் தி.மு.க-வின் எம்.பி வில்சன் இதே விஷயத்தைக் குறிப்பிட்டு, ‘கவர்னர் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவெடுக்கும் விதமாக சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும்’ என்றார்.

இப்படி முரண்கள் வளர்ந்துகொண்டிருந்த நேரத்தில்தான் கவர்னரின் குடியரசு தின வாழ்த்துச்செய்தியில் நீட் மசோதா விஷயத்தில் தான் என்ன முடிவெடுக்கப்போகிறேன் என்பதை ரவி சொல்லிவிட்டார். அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு நிறைய மாணவர்களுக்கு வாய்ப்பு அளித்திருப்பதைச் சொன்ன அவர், அரசுப்பள்ளிகளின் கல்வித்தரம் மேம்பட வேண்டும் என்று கோடிட்டுச் சொன்னார். கூடவே, பிற மொழிகளையும் தமிழக மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

அடுத்த நாளே அமைச்சர் தங்கம் தென்னரசு இதைக் கடுமையாகக் கண்டித்து அறிக்கை விட்டார். ‘இருமொழிக் கொள்கையே தி.மு.க-வின் கொள்கை’ என்ற அவர், கவர்னர் இந்தியை முன்னிலைப்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார். அடுத்த நாள் முரசொலி நாளேடு, ‘கொக்கென்று நினைத்தாரோ தமிழக ஆளுநர் ரவி’ என்று கடுமையான வார்த்தைகளால் கண்டித்தது. மகாத்மா காந்தி சிலைக்கு நினைவு நாளில் அஞ்சலி செலுத்த ஜனவரி 30-ம் தேதி சென்னை மெரினா கடற்கரைக்கு கவர்னர் வந்தபோது, திராவிட நாடு பாடலை ஒலிக்கவிட்டு அவரை வரவேற்றார் ஸ்டாலின். வழக்கமாக இருக்கும் ஓர் இணக்கமான சூழல் அப்போது இல்லை.

இரண்டாவது முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் ஒரு மசோதாவை ஜனாதிபதி ஒப்புதலுக்கு கவர்னர் அனுப்பியே ஆக வேண்டும். ஆனால், இதற்குக் காலக்கெடு எதுவும் இல்லையென்பதால், அந்த விதியை வைத்துக்கொண்டு கவர்னர் விளையாட முடியும். கூட்டுறவுச் சங்கங்களின் பதவிக்காலத்தை ஐந்திலிருந்து மூன்று ஆண்டுகளாகக் குறைக்கும் மசோதா உட்பட பலவற்றை கவர்னர் ரவி இனி என்ன செய்யப் போகிறாரோ!

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் குடைச்சல் கொடுக்கும் கவர்னர்களின் பட்டியல் பெரிது. கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், பல்கலைக்கழகங்களில் ஊழல் நடப்பதாக வெளிப்படையாகக் குற்றம் சாட்டியதுடன் பா.ஜ.க மாநில கமிட்டி உறுப்பினரான ஹரி கர்தா என்பவரை தன் கூடுதல் உதவியாளராகத் தேர்வு செய்திருக்கிறார். இந்த நியமனத்துக்கு மாநில அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதுதான் நகைமுரண்.

ஆரிப் முகமது கான், பகத்சிங் கோஷியாரி, ஜெகதீப் தன்கர்
ஆரிப் முகமது கான், பகத்சிங் கோஷியாரி, ஜெகதீப் தன்கர்

மகாராஷ்டிரா கவர்னர் பகத்சிங் கோஷியாரி, மாநில அமைச்சரவை பரிந்துரை செய்தபிறகும் 12 எம்.எல்.சி-க்கள் நியமனத்துக்கு அனுமதி மறுத்தார். நீதிமன்றம் தலையிட்டு அதைச் சரிசெய்தது. மகாராஷ்டிரா சட்டமன்ற சபாநாயகர் பதவி 2021 பிப்ரவரி முதல் காலியாக இருக்கிறது. தேர்தல் நடத்த அனுமதி தராமல் பிடிவாதம் பிடிக்கிறார் கவர்னர். டெல்லியில் கவர்னர் மாறியும், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் போராட்டங்கள் ஓயவில்லை.

மேற்கு வங்க நிலவரம், உலகப் பிரசித்தம். முதல்வரும் ஆளுநர் ஜெகதீப் தன்கரும் மோதிக்கொள்ளாத நாள் கிடையாது. பட்ஜெட் கூட்டத்தொடரில் கவர்னரைக் கண்டித்துத் தீர்மானம் கொண்டு வரப்போவதாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இன்னொரு பக்கம் நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் தீர்மானம் கொண்டுவர முனைப்பு காட்டுகிறது. மேற்கு வங்க பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான ஜெய்பிரகாஷ் மஜும்தார், ‘உங்கள் செயல்களால் மாநிலத்துக்கு ஏதாவது நன்மை இருக்கிறதா? உங்களால் ஆளுங்கட்சிமீது அனுதாபம்தான் ஏற்படுகிறது’ என்று கவர்னரைக் கேள்வி கேட்டிருக்கிறார்.

ஒருவகையில் அது உண்மையும்கூட! கவர்னருடன் தொடர்ச்சியாக உரசலில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, பினராயி விஜயன் போன்றவர்கள், கடினமான தேர்தல்களில் சுலபமாக ஜெயித்திருக்கிறார்கள் என்பதுதான் சமீபத்திய எதார்த்தம்.