அரசியல்
அலசல்
Published:Updated:

“என் இன்னொரு முகத்தைப் பார்க்க ஆசைப்படாதீங்க!”- சாட்டை சுழற்றும் ஸ்டாலின், சஞ்சலத்தில் பெருந்தலைகள்!

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டாலின்

“நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால், கட்சியை பலப்படுத்தும் விஷயங்கள் கூட்டத்தில் பேசப்பட்டன. பூத் கமிட்டி அமைப்பது, அணி நிர்வாகிகள் நியமனம், உறுப்பினர் சேர்க்கை, தொகுதிப் பார்வையாளர்களுக்கு ஒத்துழைப்பது எனப் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

இரண்டாண்டு தி.மு.க ஆட்சி நிறைவடைந்திருக்கும் நிலையில், ஆட்சியிலும் கட்சிக்குள்ளும் தொடர்ச்சியாக தவுசண்ட் வாலா பட்டாசுகளை முதல்வர் ஸ்டாலின் கொளுத்துவார் என யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. தன் நெருங்கிய நண்பரான நாசரை அமைச்சரவையிலிருந்து நீக்கியதோடு, அமைச்சர்கள் இலாகா மாற்றம், அதிகாரிகள் மாற்றம், மாவட்டச் செயலாளர் மாற்றங்கள் என அடுத்தடுத்து அதிரடித்திருக்கிறார் முதல்வர். “திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப் மாற்றப்பட்டது ஒரு தொடக்கம்தான். இன்னும் சிலரின் கட்சிப் பதவிகள் பறிக்கப்படவிருக்கின்றன. ஒன்றிய அளவிலும் மாற்றங்கள் இருக்கின்றன. வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு முதல்வர் ஊர் திரும்பியதும் அடுத்த சுற்று பட்டாசுகள் கொளுத்தப்படும்” என்கிறார்கள் அறிவாலயத்தில். முதல்வரின் இந்த அதிரடிகள், கட்சிப் பெருந்தலைகள் பலரையும் சஞ்சலத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. ‘பதவி தப்புமா...’ என்கிற பதற்றத்தில் உருள ஆரம்பித்திருக்கிறார்கள் பலரும். ‘என்னதான் நடக்கிறது தி.மு.க-வில்..?’ விவரமறிய அறிவாலயத்தை வலம் வந்தோம்!

திருந்தாத நிர்வாகிகள்... சாட்டையை எடுத்த முதல்வர்!

நாசர், செஞ்சி மஸ்தான், அப்துல் வஹாப் என மூன்று இஸ்லாமிய எம்.எல்.ஏ-க்கள்தான் தி.மு.க-வில் இருக்கிறார்கள். நாசரிடமிருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டபோது, தனக்கு அந்தப் பதவி கிடைக்குமென எதிர்பார்த்தார் அப்துல் வஹாப். எதிர்பார்ப்பு கைகூடவில்லை. ஆனால், அவரிடமிருந்த திருநெல்வேலி மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் பதவியைப் பறித்து, திருநெல்வேலி தி.மு.க-வுக்கு மட்டுமல்ல, மொத்த கட்சிக்கும் ‘வார்னிங்’ கொடுத்திருக்கிறார் ஸ்டாலின்.

நம்மிடம் பேசிய தி.மு.க-வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர், “திருநெல்வேலி மாநகர மேயர் சரவணனோடு அப்துல் வஹாப் தொடர்ச்சியாக மோதிக்கொண்டிருந்ததைக் கட்சித் தலைமை ரசிக்கவில்லை. துணிக்கடைப் பஞ்சாயத்தில் தொடங்கி, மாநகராட்சி டெண்டர் விவகாரங்களில் தலையிடுவது வரை, அவர்மீது புகார்கள் வரிசைகட்டின. திருநெல்வேலிக்கே நேரில் சென்று அமைச்சர் நேரு பஞ்சாயத்து நடத்தியும், பூசல் அடங்கவில்லை. ஜூன் 3-ம் தேதிக்குள், கட்சியில் ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்ப்பதற்கு ‘டார்கெட்’ கொடுத்திருக்கிறது தலைமை. ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் தொகுதிவாரியாகப் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதில், வஹாப் கொஞ்சமும் கவனம் செலுத்தவே இல்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைக்கும் பணியிலும் ஆர்வம் காட்டவில்லை.

ஸ்டாலின்
ஸ்டாலின்

முதல்வர், வஹாப்பை நேரில் அழைத்துக் கண்டித்தார். ‘சீனியராக இருந்துகொண்டு கட்சிப் பெயரைக் கெடுக்குறீங்களே... கட்சிக்காரர்கள் யாரையும் நீங்க மதிக்கிறதே இல்லைன்னு புகார் தொடர்ச்சியா வருது. வருத்தப்படுற மாதிரி எதையும் செய்ய வெச்சுடாதீங்க’ என எச்சரித்தார். அதன் பிறகும் வஹாப்பின் நடவடிக்கைகளில் மாற்றமில்லை. இதில் டென்ஷனான முதல்வர், வஹாப்பின் கட்சிப் பதவியைப் பறித்து, முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கானை மாவட்டப் பொறுப்பாளராக்கியிருக்கிறார். ‘சிறுபான்மையினரிடமிருந்து தொடர்ச்சியாகப் பதவி பறிக்கப்படுகிறது’ என்கிற பேச்சு உருவாகிவிடக் கூடாது என்பதற்காகத்தான், மைதீன்கானுக்கு ‘ஜாக்பாட்’ அடித்திருக்கிறது. அதேபோல, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடந்ததாக மதுரை மிசா பாண்டியனைத் தற்காலிகமாக நீக்கி, சாட்டையைச் சுழற்றியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

ஆட்டம்போட்ட மிசா... கண்டுகொள்ளாத பி.டி.ஆர்!

மு.க.அழகிரியின் வலதுகரமாக ஒருகாலத்தில் வலம் வந்த மிசா பாண்டியன், தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் அமைச்சர் பி.டி.ஆர் அணியில் ஐக்கியமானார். மேயராகும் ஆசையில் இருந்தவருக்கு, அவர்மீதான பல்வேறு குற்ற வழக்குகளே தடையானதால், தன் மனைவி பாண்டிச்செல்விக்கு மேயர் பதவி வாங்கிவிடப் போராடினார். ஆனால், அதிர்ஷ்டம் இந்திராணி பக்கம் அடித்தது. பாண்டிச்செல்விக்கு மதுரை மாநகராட்சியில், மத்திய மண்டலத் தலைவர் பொறுப்பே கிடைத்தது. அன்றிலிருந்து, மதுரை மத்திய மண்டலத்தில் மிசா பாண்டியன் வைப்பதுதான் சட்டமென ஆகிவிட்டது. அன்றாடம் அவரது ‘ஸ்வீட்’ அடாவடிகள் தொடர்ந்தன. இது குறித்து அமைச்சர் பி.டி.ஆருக்குத் தெரியவந்தபோதும்கூட அவர் கண்டுகொள்ளவே இல்லை.

மதுரையில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில், மிசா பாண்டியனின் ஆதரவாளர்கள் சிலர் வசூலில் ஈடுபட்டனர். அவர்களை தி.மு.க கவுன்சிலர் நூர்ஜகான் தட்டிக்கேட்டார். அதற்காக, நூர்ஜகானை மிசா பாண்டியன் மிரட்டும் வீடியோ, சமீபத்தில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. டென்ஷனான இஸ்லாமிய அமைப்புகளும், ஜமாத்துகளும் அமைச்சர்கள் பி.டி.ஆர்., மூர்த்தி, மாவட்டச் செயலாளர் தளபதி எனப் பலரிடமும் புகாரளித்தனர். இந்த விவகாரம் தலைமை வரை போய்விட, மிசா பாண்டியன் கட்சியிலிருந்து ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டிருக்கிறார். அவர் மனைவி பாண்டிச்செல்வியை, மண்டலத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யச் சொல்லும் எண்ணத்திலும் இருக்கிறது தலைமை. இந்த அதிரடி, மேயரின் கணவர் பொன் வசந்துக்கும் மறைமுக எச்சரிக்கைதான்” என்றனர் தெளிவாக.

மிசா பாண்டியன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளிலும் மேயர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள், நிலைக்குழுத் தலைவர்களின் செயல்பாடுகளைக் கண்காணித்து ‘ரிப்போர்ட்’ அளிக்க உளவுத்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறது ஆட்சி மேலிடம். யார் மீதெல்லாம் ‘நெகட்டிவ் ரிப்போர்ட்’ வருகிறதோ, அவர்களின் பதவி பறிபோகும் என்கிறார்கள் தலைமைக்கு நெருக்கமானவர்கள்.

தி.மு.க நிர்வாகிகள்
தி.மு.க நிர்வாகிகள்

‘ஹிட்’ லிஸ்ட்டில் சீனியர்கள்... சென்னைக்குத் திரும்பியதும் ‘மண்டகப்படி’!

இரண்டு வாரங்களுக்கு முன்னர், தி.மு.க மாவட்டச் செயலாளர்கள், கழக அணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் ‘வீடியோ கான்ஃபரன்ஸ்’ வாயிலாக நடந்தது. அந்தக் கூட்டத்தில், சில நிர்வாகிகளின் பெயரைக் குறிப்பிட்டே எச்சரித்திருக்கிறார் முதல்வர்.

நம்மிடம் பேசிய தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் சிலர், “திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் டி.ஜே.கோவிந்தராஜன் ஓர் ஒன்றியச் செயலாளரையும், பஞ்சாயத்துத் தலைவரின் கணவரையும் மிரட்டியதாக கட்சித் தலைமைக்குப் புகார்கள் குவிந்துவருகின்றன. இந்தச் சூழலில், ‘கும்பிடிப்பூண்டி நகராட்சியில் சேர்மன் பதவியைப் பிடிப்பதற்கு தி.மு.க-வுக்குச் சிலர் தடையாக இருப்பதாக’ கோவிந்தராஜனை மறைமுகமாகக் குறிப்பிட்டு, அறிவாலயத்தைச் சுற்றிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இது குறித்தெல்லாம் தலைமை தீவிரமாக விசாரிக்கும் நிலையில், மாவட்டப் பொறுப்பாளரான கோவிந்தராஜனை, நிர்வாகிகள் கூட்டத்தில் வெளுத்து வாங்கினார் முதல்வர்.

புதிய உறுப்பினர் சேர்க்கையில் சுணக்கமாக இருப்பது, பூத் கமிட்டி அமைக்காதது குறித்து முதல்வர் கேட்ட கேள்விகளுக்கு கோவிந்தராஜனிடம் முறையான பதில் இல்லை. அதேபோல, மாதவரம் சுதர்சனம், கம்பம் ராமகிருஷ்ணன், சிற்றரசு, மயிலை வேலு, காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோரின் கட்சிச் செயல்பாடுகளிலும் முதல்வருக்கு வருத்தம்தான். மேற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், உறுப்பினர் சேர்க்கையில் ஆர்வம் காட்டாத பல மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்களின் பட்டியலும் தயாரிக்கப்பட்டுவருகிறது. முதல்வர் வெளிநாடு சென்று திரும்பியதும், அவர்களுக்கு ‘மண்டகப்படி’ நிச்சயம்” என்றனர்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

“கட்சியை பலவீனப்படுத்தினால் விட்டுவைக்க மாட்டேன்!”

முதல்வரின் சரவெடிகள் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்துவரும் இந்தத் தருணத்தில்தான், மே 21-ம் தேதி உயர்நிலை செயல் திட்டக்குழுக் கூட்டம் அறிவாலயத்தில் கூட்டப்பட்டது. ‘இதில் முதல்வர் பேசிய, விவாதித்த பல விஷயங்கள் சீனியர்கள் பலரின் வயிற்றிலும் புளியைக் கரைத்துவிட்டன’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

கூட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க நிர்வாகிகளிடம் பேசினோம். “நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால், கட்சியை பலப்படுத்தும் விஷயங்கள் கூட்டத்தில் பேசப்பட்டன. பூத் கமிட்டி அமைப்பது, அணி நிர்வாகிகள் நியமனம், உறுப்பினர் சேர்க்கை, தொகுதிப் பார்வையாளர்களுக்கு ஒத்துழைப்பது எனப் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. கலைஞர் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக நடத்துவது குறித்து, முதல்வர் ஆலோசனைகளை வழங்கினார். பா.ஜ.க-வினருக்கு பதிலளித்து அவர்களுக்கு விளம்பரம் தேடித் தராமல், கட்சி வேலைகளில் கவனம் செலுத்தச் சொன்னார். அதேநேரத்தில், நிர்வாகிகளின் பெயரைக் குறிப்பிடாமல் அவர்களின் செயல்பாடுகளை முதல்வர் விமர்சித்தபோதுதான், பலருக்கும் உதறல் எடுத்துவிட்டது.

முதல்வர் பேசும்போது, ‘ஒரு கோடி புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான முயற்சி ஓரளவு வெற்றிபெற்றிருக்கிறது. வேலையே பார்க்க மாட்டார்கள் என நினைத்த பல மாவட்டச் செயலாளர்கள் முனைப்போடு செயல்பட்டிருக்கிறார்கள். ஆனால், சில மாவட்டச் செயலாளர்களும், அமைச்சர்களும் உறுப்பினர் சேர்க்கையில் கவனம் செலுத்தவே இல்லை. என்னிடம் ‘ரிப்போர்ட்’ இருக்கிறது. ஆட்சி அதிகாரத்தைவிட எனக்குக் கட்சிதான் முக்கியம். கட்சியால்தான் இந்த அதிகாரமே நமக்குக் கிடைத்திருக்கிறது. அதை பலவீனப்படுத்தும்விதமாக யார் செயல்பட்டாலும், அவர்களை நான் விட்டுவைக்க மாட்டேன். கீழ்மட்ட நிர்வாக விஷயங்களை நான் மட்டுமே கண்காணித்து நடவடிக்கை எடுக்க முடியாது. கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் நீங்கள்தான் அதைக் கண்காணிக்க வேண்டும். எல்லாவற்றையும் நானே செய்ய வேண்டுமென்றால், உங்களுக்கு ஏன் கட்சிப் பொறுப்பு?’ எனக் கேட்டவுடன், சீனியர்கள் பலருக்கும் வியர்த்துவிட்டது.

அப்துல் வஹாப், மிசா பாண்டியன்
அப்துல் வஹாப், மிசா பாண்டியன்

கட்சியின் செயல்பாடுகள் சுணக்கமாக இருக்கும் மாவட்டங்களை ‘ரிப்போர்ட்’ எடுத்து அளித்திருக்கிறது, மேலிட மாப்பிள்ளைக்கு நெருக்கமான ஒரு நிறுவனம். ‘வீக்’காக இருக்கும் இந்த மாவட்டங்களில், கட்சி செயல்பாடுகள் ஏன் குறைந்துவிட்டன எனக் காரணத்தைக் கேட்டிருக்கிறார் முதல்வர். இதை விசாரித்து வைக்கச் சொல்லி, இரண்டு அமைச்சர்களிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார். முதல்வரின் இந்தக் கண்டிப்பு, கட்சியின் பல பெருந்தலைகளிடம் சஞ்சலத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ‘நண்பரான நாசரையே தூக்கி எறிந்தவர்... சீனியரான துரைமுருகனை இலாகா மாறச் சொன்னவர்... நம் பதவிமீது கை வைக்க ரொம்ப நேரம் ஆகிவிடாது’ எனப் பலரும் பதற்றத்தில் இருக்கிறார்கள்.

“என் இன்னொரு முகத்தைப் பார்க்க ஆசைப்படாதீங்க..!”

முதல்வரின் அதிரடி நடவடிக்கையில், மாவட்டங்களில் ஆட்டம்போட்ட அதிகாரிகள் சிலரும் மாற்றப்பட்டிருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்ததும், ‘எந்த சிபாரிசுக்காகவும் காவல் நிலையம், அரசு அலுவலகம் பக்கம் செல்லக் கூடாது’ எனக் கட்சிக்காரர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இதைத் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக்கொண்ட சில அதிகாரிகள், கட்சிக்காரர்களைத் துளியும் மதிக்காமல் நடந்துகொண்டனர். நியாயமான தேவைக்குக்கூட அரசு அலுவலகங்களை நாடும் கட்சிக்காரர்களை அதிகாரிகள் மதிப்பதில்லை. அவர்களுக்கும் சேர்த்தேதான் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. தனது தொடர்ச்சியான இந்த அதிரடிகளின் மூலமாக ‘என் இன்னொரு முகத்தைப் பார்க்க ஆசைப்படாதீங்க..!’ என மறைமுகமாகக் கட்சி நிர்வாகிகளுக்கும் அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் முதல்வர். எச்சரிக்கையை உணராதவர்களின் பதவி பறிபோவது நிச்சயம்” என்றனர் டீடெய்லாக.

முதல்வரின் சமீபகால ஆக்‌ஷன்கள், கட்சிக்குள்ளும் ஆட்சிக்குள்ளும் பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அதிகார போதையில் திரிந்தவர்கள் ஆட்டம் கண்டுபோயிருக்கிறார்கள். ‘எந்நேரமும் பதவி பறிபோகலாம்’ என்கிற பதற்றத்தில் வெலவெலத்துப்போய்க் கிடக்கிறார்கள். ஜப்பான், சிங்கப்பூர் பயணம் முடிந்து முதல்வர் சென்னைக்குத் திரும்பியவுடன், தி.மு.க-வில் பலருக்கும் ‘இடப்பெயர்ச்சி’ காத்திருக்கிறது. இரண்டரை ஆண்டு ஆட்சி முடிந்தவுடன், ‘மெகா’ அமைச்சரவை மாற்றத்துக்கும் தயாராகிறாராம் முதல்வர். அதற்காக, அமைச்சர்களின் செயல்பாடுகளைக் கண்காணித்து ‘ரிப்போர்ட்’ அளிக்கும்படி இப்போதே உளவுத்துறை முடுக்கிவிடப்

பட்டிருக்கிறது. ‘சாட்டையை எடுப்பாரா... எடுப்பாரா...’ எனக் கேள்விகள் எழுந்த நிலையில், அதைக் கையில் எடுத்து ஒரு சுழற்று சுழற்றியேவிட்டார் முதல்வர். “இது ஆரம்பம்தான். கட்சிக் கட்டுப்பாடுகளை, கண்ணியத்தை மீறும் பலரின் முதுகில் `சுளீர்’ விழப்போகிறது” என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில். `சுளீர்’கள் தொடரட்டும்!