Published:Updated:

‘சட்டப்பேரவை நேரலை துண்டிப்பு’ - அரசியல் செய்கிறதா தி.மு.க?

சட்டப்பேரவை
பிரீமியம் ஸ்டோரி
சட்டப்பேரவை

ஆளும் அரசு எங்களின் குரல் வெளியில் கேட்கவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது. மக்கள் பிரச்னை தொடர்பாக விளக்கம் கேட்கவும் சொல்லவும் எங்களுக்கும் உரிமை இருக்கிறது

‘சட்டப்பேரவை நேரலை துண்டிப்பு’ - அரசியல் செய்கிறதா தி.மு.க?

ஆளும் அரசு எங்களின் குரல் வெளியில் கேட்கவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது. மக்கள் பிரச்னை தொடர்பாக விளக்கம் கேட்கவும் சொல்லவும் எங்களுக்கும் உரிமை இருக்கிறது

Published:Updated:
சட்டப்பேரவை
பிரீமியம் ஸ்டோரி
சட்டப்பேரவை

தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முதன்முறையாக நேரலை செய்யப்பட்டுவருகிறது. அதில், தி.மு.க அரசியல் செய்வதாகச் சர்ச்சை எழுந்துள்ளது!

ஜனவரி 5-ல் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நாளில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்தது. அதில் கேள்வி நேரம் மட்டும் முதலில் நேரலை செய்யப்பட்டது. அதையடுத்து, மார்ச் 28-ம் தேதி தொடங்கி மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளில், முக்கியமான விவகாரங்கள் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் கொண்டுவரும்போதோ, முக்கியமான கேள்விகளைக் கேட்கும்போதோ, ஆளுங்கட்சியினரின் பதிலுக்கு மறுப்பு அல்லது விளக்கம் அளிக்கும்போதோ நேரலை துண்டிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

மின்வெட்டு, தலைமைச் செயலகக் காலனி காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மரணம், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து உள்ளிட்ட சில விவகாரங்கள் தொடர்பாக அ.தி.மு.க கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தபோது, சட்டப்பேரவை நிகழ்வின் நேரலை அடிக்கடி தடைப்பட்டது. இது குறித்து அரசுத் தரப்பில் விளக்கமாக, ‘முதன்முறையாக நேரலை செய்வதால் ஏற்படும் தொழில்நுட்பப் பிரச்னை’ எனக் காரணம் சொல்லப்பட்டது. அதேநேரம், ‘எதிர்க்கட்சிகளின் கருத்துகள் வெளியில் சென்றுவிடக் கூடாது என்பதற்காக, வேண்டுமென்றே ஆளுங்கட்சி செய்யும் அரசியல் இது’ என அ.தி.மு.க., பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்.

‘சட்டப்பேரவை நேரலை துண்டிப்பு’ - அரசியல் செய்கிறதா தி.மு.க?

நேரலை அடிக்கடி தடைப்படுவது குறித்து, அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமாரிடம் கேட்டோம். “65 சட்டமன்ற உறுப்பினர்களோடு தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறது அ.தி.மு.க. ஆனால், ஆளும் அரசு எங்களின் குரல் வெளியில் கேட்கவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது. மக்கள் பிரச்னை தொடர்பாக விளக்கம் கேட்கவும் சொல்லவும் எங்களுக்கும் உரிமை இருக்கிறது. அந்த உரிமை மறுக்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் பேசும்போது நேரலை தடைப்படுவதால், மக்களுக்கு உண்மையைக் கொண்டுசேர்க்க முடியவில்லை. இதனால், நேரலையின் நோக்கமே அடிபடுகிறது. தி.மு.க-வினர் பேசுவதை மட்டுமே காட்டுவதால், நிகழ்வின் தன்மையை மக்கள் புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் சொல்வதுதான் உண்மை என நம்பும் நிலைமை ஏற்படுகிறது. அ.தி.மு.க-வின் பல்வேறு சாதனைகளைத் தாங்கள் செய்ததாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அது குறித்து நாங்கள் விளக்கம் கொடுக்கும்போது, அது வெளியில் வரவில்லையென்றால் மக்களுக்குத் தவறான தகவல்கள் சென்று சேரும். நேரலை என்ற பெயரில் தி.மு.க முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் வேலையைத்தான் செய்துகொண்டிருக்கிறது. இவ்விவகாரம் குறித்து சபாநாயகரின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறோம். நடவடிக்கை எடுப்பேன் என்றிருக்கிறார். ஆனால், எங்களுக்கு நம்பிக்கை இல்லை” என்றார் விரக்தியாக.

‘சட்டப்பேரவை நேரலை துண்டிப்பு’ - அரசியல் செய்கிறதா தி.மு.க?

பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இது குறித்து, “சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய வேண்டும் என்பது தி.மு.க அளித்த தேர்தல் வாக்குறுதி மட்டுமல்ல, எதிர்க்கட்சியாக இருந்தபோது அவர்களின் மிக முக்கியமான கோரிக்கையாகவும் இருந்தது. கொரோனா காலம் என்பதால், ஆட்சியின் தொடக்கத்தில் கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவைக் கூட்டம் நடத்தப்பட்டதால், தொழில்நுட்பரீதியில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்றார்கள். அதன் பிறகு கேள்வி நேரம் மற்றும் 110 விதியின் கீழ் வெளியாகும் அறிவிப்புகளை மட்டும் ஒளிபரப்பு செய்கிறோம் என்றார்கள். ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் வீடியோ பதிவுசெய்கிறார்கள். அந்த வீடியோக்களை வெளியிடலாம் அல்லவா...செய்ய மாட்டார்கள். எதிர்க்கட்சிகள் முழுமையாகப் பேசுவதை வெளியிடாமல், அதற்கு அமைச்சர்கள் பதில் தருவதை மட்டும் ஒளிபரப்பு செய்து ‘எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி... மூக்குடைபட்டார்கள்... வாங்கிக் கட்டிக்கொண்டார்கள்...’ எனப் பேசி கேவலமான அரசியல் செய்கிறார்கள். எதிர்க்கட்சிகள் பேசும்போது மட்டும் நேரலை கட் ஆகும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தவர்கள் யார் என்றுதான் அடுத்த முறை கேட்க வேண்டும் என்றிருக்கிறேன்” என்றார் கோபமாக.

ஆர்.பி.உதயகுமார், வானதி சீனிவாசன், பரந்தாமன்
ஆர்.பி.உதயகுமார், வானதி சீனிவாசன், பரந்தாமன்

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமனிடம் கேட்டோம். “கேள்வி நேரத்தையும், முதல்வர் வெளியிடும் முக்கிய அறிவிப்புகளையும் மட்டுமே தற்போது நேரலை செய்துவருகிறோம். இன்னும் முழு நிகழ்ச்சியையும் ஒளிபரப்பு செய்யத் தொடங்கவில்லை. அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படும் சில விஷயங்களை ஒளிபரப்பு செய்யாமல் தவிர்க்கவேண்டியிருக்கிறது. இவற்றையெல்லாம் கணக்கில் வைத்துத்தான் நேரலை செய்யப்படுகிறது. ஆனால், இதைவைத்து தேவையில்லாமல் அரசியல் செய்கிறார்கள். கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சி செய்த அ.தி.மு.க., ஏதாவது ஒரு தீர்மானத்தின் மீதான விவாதத்தை நேரலை செய்திருக்கிறதா... ஒட்டுமொத்தமாக எதிர்க்கட்சிகளை வெளியில் அனுப்பிவிட்டு, காலி மேசைகளோடு பேசி ஆட்சி செய்துகொண்டிருந்தார்கள். அவர்களுக்கு இது குறித்துக் கேள்வி கேட்பதற்கு எந்தத் தகுதியும் இல்லை. தலைவர் தலைமையிலான அரசு, விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லாமல் நடந்துகொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் பேசும்போது குறுக்கிடும் ஆளுங்கட்சியினரை அமரச் சொல்லிவிட்டு, அவர்கள் பேச்சை முழுமையாகக் கேட்டு விளக்கம் கொடுக்கிறார் முதல்வர். அப்படியிருக்கும்போது, நேரலையிலா அரசியல் செய்வார்... வெட்டிக் குற்றச்சாட்டு இது” என விளக்கமளித்தார்.

நான்கு சுவர்களுக்குள் நடக்கும் சட்டப்பேரவை நிகழ்வுகளை, மக்கள் நேரலையாகக் காண்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருப்பது உண்மையில் நல்ல முன்னெடுப்பு. முதன்முறை என்பதால், சில சிக்கல்கள் ஏற்படுவது இயல்புதான். அவை, அடுத்தடுத்த சட்டப்பேரவை நிகழ்வுகளில் நிகழாமல் நேரலை செய்யப்படுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism