Published:Updated:

விவாதிப்போம்... கேள்வி கேட்போம்... சுட்டிக்காட்டுவோம்... வலியுறுத்துவோம்!

தமிழ்நாடு சட்டப்பேரவை
பிரீமியம் ஸ்டோரி
தமிழ்நாடு சட்டப்பேரவை

மக்களின் தேவையை ஒட்டி, எங்களிடம் கொடுக்கப்பட்ட கோரிக்கைகளைக் கேட்டுப் பெறும் வகையில் இந்த மானியக் கோரிக்கையில் எங்களின் செயல்பாடுகள் இருக்கும்

விவாதிப்போம்... கேள்வி கேட்போம்... சுட்டிக்காட்டுவோம்... வலியுறுத்துவோம்!

மக்களின் தேவையை ஒட்டி, எங்களிடம் கொடுக்கப்பட்ட கோரிக்கைகளைக் கேட்டுப் பெறும் வகையில் இந்த மானியக் கோரிக்கையில் எங்களின் செயல்பாடுகள் இருக்கும்

Published:Updated:
தமிழ்நாடு சட்டப்பேரவை
பிரீமியம் ஸ்டோரி
தமிழ்நாடு சட்டப்பேரவை

மார்ச் 18-ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் முதல் அமர்வு, பட்ஜெட் தாக்கலோடு நிறைவடைந்தது. அதன் இரண்டாவது அமர்வு, ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி மே 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த இரண்டாவது அமர்வில், துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறவுள்ளன. வரும் மே 7-ம் தேதியோடு தி.மு.க ஆட்சியமைத்து ஓராண்டு நிறைவடைகிறது. அன்றைய தினம் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க ஆட்சி அமைத்து வெளியான முழு நிதியாண்டுக்கான பட்ஜெட், இரண்டாவது மானியக் கோரிக்கை விவாதம், ஆட்சியமைத்து ஓராண்டு நிறைவு எனப் பல்வேறு வகைகளில் இந்த மானியக் கோரிக்கை விவாத நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது. இதில், தமிழ்நாட்டின் பிரதான கட்சிகள் கவனம் செலுத்தவுள்ள முக்கிய விவகாரங்கள் என்னென்ன?

அரக்கோணம் ரவி, அ.தி.மு.க சட்டமன்ற துணைக் கொறடா.

“ஆளும் அரசாக இருந்ததால் தி.மு.க-வின் நிதி நிலை அறிக்கையில் எங்கெல்லாம் தவறு செய்திருக்கிறார்கள் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். அந்த இடங்களையெல்லாம் நாங்கள் குறிப்பெடுத்து வைத்திருக்கிறோம். எங்களின் முன்னாள் அமைச்சர்கள், அவர்கள் வகித்த துறை சார்ந்து புள்ளிவிவரங்களோடு அ.தி.மு.க ஆட்சியில் நடந்த வளர்ச்சி, தி.மு.க ஆட்சியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி குறித்த விவாதங்களை முன்னெடுக்கவுள்ளனர். குறிப்பாக, முன்னாள் அமைச்சர்கள்மீது தி.மு.க அரசு நடத்தும் பழிவாங்கல் நடவடிக்கைகள் குறித்தும், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சட்டம்- ஒழுங்கு பிரச்னைகள் குறித்தும் கேள்வி எழுப்பத் திட்டமிட்டிருக்கிறோம். முல்லைப்பெரியாறு அணை விவகாரம், விவசாயிகள் பிரச்னை, தேர்தல் வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றியது எனத் தி.மு.க அரசின் தோல்விகள் குறித்தும் விவாதங்களை முன்னெடுப்போம். அதேநேரம் மக்களுக்கான திட்டங்கள் என்றால் எதிர்க்கட்சியாக இருந்து அதை ஆதரிக்க வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறோம்!”

அரக்கோணம் ரவி, வானதி சீனிவாசன், செல்வப்பெருந்தகை, எஸ்.எஸ்.பாலாஜி, அருள்
அரக்கோணம் ரவி, வானதி சீனிவாசன், செல்வப்பெருந்தகை, எஸ்.எஸ்.பாலாஜி, அருள்

வானதி சீனிவாசன், பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்.

“நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறைரீதியிலான மானியக் கோரிக்கை விவாதத்தில் கலந்துகொள்ள முடிவுசெய்திருக்கிறோம். கடந்த ஆறு மாதங்களாக எங்கள் கட்சி, அரசியல்ரீதியில் என்னென்ன விவகாரங்களை எழுப்பியிருக்கிறதோ அவற்றையெல்லாம் இந்த மானியக் கோரிக்கை விவாதத்தில் எழுப்பத் திட்டமிட்டிருக்கிறோம். மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசின் திட்டங்களாக தி.மு.க அரசு தொடர்ந்து மக்களை ஏமாற்றிவருகிறது. அவற்றை மத்திய அரசின் திட்டங்கள் என்றே அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துவோம். என்ன கேட்டாலும், ‘மத்திய அரசு நிதி தரவில்லை. அதனால்தான் எங்களால் செயல்படமுடியவில்லை’ எனக் குறை சொல்கிறார்கள். எனவே, மத்திய அரசு இதுவரை தமிழ்நாட்டுக்கு எந்தெந்தத் துறைக்கு, எவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறது என்பதைப் புள்ளிவிவரத்தோடு எடுத்துக்காட்டி, அவர்களின் தவற்றைச் சுட்டிக்காட்டும்விதமாக எங்கள் செயல்பாடு இருக்கும்!”

செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர்.

“மக்களின் தேவையை ஒட்டி, எங்களிடம் கொடுக்கப்பட்ட கோரிக்கைகளைக் கேட்டுப் பெறும் வகையில் இந்த மானியக் கோரிக்கையில் எங்களின் செயல்பாடுகள் இருக்கும். அவற்றைக் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து சட்டம் இயற்றவும், நிதிகள் கூடுதலாக ஒதுக்கவும் வலியுறுத்துவோம். குறிப்பாக, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதைச் செயல்படுத்த அரசும் தீவிரமாக இருக்கிறது. ஆனால், நீண்டநாள் ஆக்கிரமிப்பு, சமீபத்திய ஆக்கிரமிப்பு, நீர் தேங்குமிடங்களிலுள்ள ஆக்கிரமிப்பு, நீர் செல்லும் வழியிலுள்ள ஆக்கிரமிப்பு என வகை பிரித்து அவற்றை அகற்ற வேண்டும் என்பதை விவாதத்தில் எடுத்துக்கொண்டு அதற்குத் தீர்வுகாணச் செய்வோம். ஏனெனில் நீர்நிலை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் பாதிக்கப்படுபவர்கள் ஏழை, எளிய மக்களாகத்தான் இருக்கிறார்கள். எனவே, அதில் சிறப்பு கவனம் செலுத்தவிருக்கிறோம். அதோடு நிலம் இல்லாதவர்களுக்கு நிலங்களை ஒதுக்கி உரிய பட்டா வழங்குவது குறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்வோம்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விவாதிப்போம்... கேள்வி கேட்போம்... சுட்டிக்காட்டுவோம்... வலியுறுத்துவோம்!

எஸ்.எஸ்.பாலாஜி, வி.சி.க சட்டமன்றக் கொறடா.

“அனைத்துத் துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களிலும், எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு எனக் குறிப்பிட்ட தொகையை ஒதுக்க வேண்டும். ஆனால், பல துறைகளில் அப்படி நிதி ஒதுக்குவதே இல்லை. ஒதுக்கும் ஒருசில துறைகளும் அவற்றை எஸ்.சி., எஸ்.டி பிரிவினரின் நலனுக்காகப் பயன்படுத்துவதில்லை. ஆதிதிராவிடர் நலத்துறையில் இப்போது நிதி ஒதுக்குகிறார்கள். ஆனால், அதில் பெரும்பகுதி ஊதியத்துக்கே செலவிடப்படுகிறது. இதனால் பள்ளிகளை மேம்படுத்துவதில் சிரமங்கள் எழுகின்றன. எனவே, ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளைப் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் சேர்க்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கவிருக்கிறோம். இது தவிர அரசு உறுப்புக் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களாகப் பணியாற்றுபவர்களை நிரந்தமாக்க வேண்டும் அல்லது அவர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் எனவும், எங்கள் தொகுதி மக்களின் கோரிக்கையை ஒட்டியும் சில விஷயங்களை விவாதத்துக்கு எடுத்துச்செல்ல முடிவெடுத்துள்ளோம்!”

அருள், பா.ம.க சட்டமன்றக் கொறடா.

“மக்களுக்கு எது தேவையோ, எது நல்லதோ அவை குறித்த விவாதத்தை முன்னெடுக்க வேண்டும். பேரவையில் நாங்கள் என்ன பேசினாலும் அது மக்களின் வளர்ச்சியை மையமிட்டதாகத்தான் இருக்க வேண்டும் என ஐயாவும், சின்ன ஐயாவும் அறிவுறுத்தியிருக்கிறார்கள். இந்த மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, பா.ம.க உறுப்பினர்கள் விவசாயம் மற்றும் அதை ஒட்டிய பொருளாதார வளர்ச்சி குறித்த விவாதங்களையும் கேள்விகளையும் எழுப்ப வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்கள். இந்த முறை வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, தீர்க்கமான ஒரு சட்டத்தை இயற்றச் செய்ய வேண்டும் என்றும் கட்டளையிட்டிருக்கிறார்கள். அதையொட்டியும் எங்கள் செயல்பாடுகள் நிச்சயம் இருக்கும்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism