அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

பிளவுபடும் பா.ஜ.க! - கதறலில் கமலாலயம்

அண்ணாமலை
பிரீமியம் ஸ்டோரி
News
அண்ணாமலை

பா.ஜ.க சீனியர்களான எம்.என்.ராஜா, புரொஃபசர் சீனிவாசன் உள்ளிட்டவர்களின் ஆலோசனையை அண்ணாமலை சட்டை செய்வதுகூட இல்லை.

அடுத்தடுத்து நிர்வாகிகள் நீக்கம், ஒழுங்கு நடவடிக்கை விசாரணை, ஆடியோ சர்ச்சை எனத் தமிழ்நாடு பா.ஜ.க-வுக்குள் வீசியடிக்கிறது புயல். மாநிலச் சிறுபான்மை அணியின் தலைவர் டெய்சிக்கு ஆதரவாகக் குரல் எழுப்பிய நடிகை காயத்ரி ரகுராம், கட்சியிலிருந்து ஆறு மாதங்களுக்கு ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டிருக்கிறார். ஆபாசமாகப் பேசிய திருச்சி சூர்யா சிவாவும் ஆறு மாதங்களுக்கு ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டிருக்கிறார். இது தொடர்பான வாக்குவாதங்கள் இன்னும் தொடர்கின்றன. “இந்த விவகாரங்கள், கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளரான கேசவ விநாயகத்துக்கும், மாநிலத் தலைவரான அண்ணாமலைக்கும் இடையேயான பெரும் போராக உருவெடுத்திருக்கின்றன. கேசவ விநாயகத்தை அவமானப்படுத்தி, கட்சியிலிருந்து வெளியேற்றப் பார்க்கிறார் அண்ணாமலை.

பழைய நிர்வாகிகள் Vs புது நிர்வாகிகள் யுத்தத்தால், கட்சி பிளவுபடும் சூழல் உருவாகிவிட்டது. தனது ‘தடால் புடால்’ அரசியலால், பிரச்னையை மேலும் மேலும் வளர்க்கிறார் அண்ணாமலை. அவருடைய ஆட்கள் வைப்பதுதான் கட்சிக்குள் சட்டம் என ஆகிவிட்டது. இது கட்சிக்கும், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கும் நல்லதல்ல” எனக் கதறுகிறார்கள் கமலாலய சீனியர்கள். ‘என்னதான் நடக்கிறது தமிழக பா.ஜ.க-வில்?’ விவரமறிய விசாரித்தோம்...

பிளவுபடும் பா.ஜ.க! - கதறலில் கமலாலயம்

“ஆறு மாசம் ரெஸ்ட் எடுங்க சிஸ்டர்!”

பா.ஜ.க-வில் வெடித்துக் கிளம்பியிருக்கும் இந்தப் பிளவு, நடிகை காயத்ரி ரகுராமின் ‘சஸ்பெண்ட்’ உத்தரவைத் தொடர்ந்தே பூதாகரமாகியிருக்கிறது. நம்மிடம் பேசிய பா.ஜ.க மகளிரணி நிர்வாகிகள் சிலர், “மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும், காயத்ரி ரகுராமுக்கும் இடையே இருக்கும் பிரச்னை இன்று முளைத்ததல்ல. தமிழ்நாடு பா.ஜ.க-வின் வெளிநாடு மற்றும் அண்டை மாநிலத் தமிழ் வளர்ச்சிப் பிரிவின் தலைவராக காயத்ரி இருந்தார். தமிழ்நாடு பா.ஜ.க தலைவர்களின் வெளிநாட்டுப் பயணங்களின்போது, அங்கிருக்கும் தமிழர்களை ஒருங்கிணைத்து நிகழ்ச்சி நடத்தவேண்டிய பொறுப்பு காயத்ரிக்கு இருந்தது. ஆனால், அண்ணாமலை அமெரிக்காவுக்குச் சென்றபோது, எந்தத் தகவலையும் காயத்ரிக்குச் சொல்லவில்லை. அப்போதே இருவருக்கும் முட்டிக்கொண்டது. தி.மு.க மேடைப் பேச்சாளர் சைதை சாதிக் என்பவர், பா.ஜ.க பிரமுகர்களான குஷ்பு, நமீதா, காயத்ரி, கெளதமி ஆகியோரைக் கடுமையாக விமர்சித்தது சமீபத்தில் சர்ச்சையானது. இதைக் கண்டித்து மகளிரணி நடத்திய போராட்டத்தில், பாதிக்கப்பட்ட நான்கு பேரையும் வர வேண்டாம் என அண்ணாமலை தடுத்துவிட்டார். இங்கேயும் உரசலாகிவிட்டது.

வாரணாசியில் நடைபெறும் ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்புக் குழு கமிட்டியில், ஒரு உறுப்பினராக காயத்ரி ரகுராம் இருந்தார். பிரதமர் மோடி கலந்துகொண்ட தொடக்க விழாவுக்கு, காயத்ரியை யாரும் அழைக்கவில்லை. அந்த வருத்தத்தைத் தன்னுடைய ‘ட்விட்டர்’ பக்கத்தில் பதிவாகச் செய்திருந்தார் காயத்ரி. பதிவின் பின்னூட்டத்தில், அண்ணாமலை புகைப்படத்தை புரொஃபைல் பிக்சராக வைத்திருந்த சிலர் வசைபாடவும், அவர்களுக்கு காயத்ரி பதிலடி கொடுக்கவும், சமூக வலைதளம் பற்றிக்கொண்டது. இந்தச் சூழலில்தான், கட்சியின் மாநிலச் சிறுபான்மை அணியின் தலைவர் டெய்சியை, பா.ஜ.க பிரமுகரான திருச்சி சூர்யா சிவா ஆபாச வார்த்தைகளில் பேசும் ஆடியோ ‘லீக்’ ஆனது. இந்த ஆடியோ விவகாரத்தைக் கையிலெடுத்த காயத்ரி, சூர்யா சிவா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ‘ட்விட்டரில்’ பதிவிட்டார். அதுவும் சர்ச்சையானது. இந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாகத்தான், கட்சிக்குக் களங்கம் விளைவித்ததாக காயத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பிளவுபடும் பா.ஜ.க! - கதறலில் கமலாலயம்

காயத்ரியை நீக்குவதற்கு முன்னதாக, அவருக்கு போன் செய்த அண்ணாமலை, ‘நீங்க ஆறு மாசத்துக்கு ரெஸ்ட் எடுங்க சிஸ்டர்’ என்றதோடு அழைப்பைத் துண்டித்திருக்கிறார். ஆபாசமாகப் பேசிய சூர்யா சிவாவை விசாரித்து அறிக்கை அளிக்க, ஏழு நாள் அவகாசம் தரப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்கக் கோரிய காயத்ரிக்கு, அவர் தரப்பு நியாயத்தைக் கேட்கக்கூட நேரம் தரப்படவில்லை. அண்ணாமலையை விமர்சித்தால், அவர் ஆதரவாளர்களை எதிர்த்து கேள்வி எழுப்பினால், யாராக இருந்தாலும் கட்சிக்குள் அவர்கள் கட்டம் கட்டப்படுகிறார்கள். பா.ஜ.க-வில் இது போன்ற சூழல் எப்போதுமே இருந்ததில்லை.

“பணம் இருந்தால்தான் பதவி...” - மகளிருக்குப் பாதுகாப்பு இல்லை!

கடந்த ஜூலை மாதம் பா.ஜ.க-வைச் சேர்ந்த ரதி எனும் திருநங்கை, மாவட்டத் தலைவர் கபிலன் மீது பல்வேறு புகார்களை முன்வைத்தார். ‘நடுராத்திரி என்றுகூடப் பார்க்காமல் போன் செய்து தொல்லை கொடுக்கிறார். கூட்டத்துக்கு ஆட்களை அழைத்து வந்தால் பணம் கொடுக்காமல் ஏமாற்றிவிடுகிறார். இது பற்றி மாநிலத் தலைவருக்குக் கடிதம் எழுதியும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ எனக் கூறி கட்சியிலிருந்து வெளியேறினார் ரதி. கடந்த ஆகஸ்ட் மாதம், பா.ஜ.க மாநில மகளிர் அணிச் செயலாளர் மைதிலி வினோ, ‘தமிழக பா.ஜ.க-வில் பணம் இருந்தால் மட்டுமே பதவிக்கு வரலாம் என்கிறார்கள். உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை. பழையவர்களை ஒதுக்குகிறார்கள்’ என அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவரும் கட்சியிலிருந்து வெளியேறினார்.

இம்மானுவேல் சேகரன் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பாவிடம், மாநிலப் பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. தேசிய மகளிர் ஆணையத்தால் கண்டிக்கப்பட்ட இந்தச் சம்பவத்துக்கு பா.ஜ.க தரப்பிலிருந்து ஒரு விளக்க அறிக்கைகூட இதுவரை வெளியிடப்படவில்லை. தமிழ்நாடு பா.ஜ.க-வில் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. பெண் நிர்வாகிகளை வழிநடத்த, பெண் தலைவர்கள் கட்சியில் இல்லை. தமிழ்நாடு பா.ஜ.க-வில் வானதி சீனிவாசனைத் தாண்டி ஒரு பெண் தலைவரை அடையாளம் காட்ட முடியுமா... அண்ணாமலை காலத்தில் வானதி கட்சிப் பொறுப்புக்கு வந்திருந்தால், அவரும் காணாமல்போயிருப்பார். பழைய கட்சி நிர்வாகிகளை ஒதுக்குவதில் மட்டும்தான் அண்ணாமலை தீவிரம் காட்டுகிறார்” என்றனர் விரிவாக.

உச்சத்தில் கோஷ்டிப்பூசல்... பிளவுபடும் கமலாலயம்!

மகளிரணி நிர்வாகிகள் சொல்வதில் விஷயம் இல்லாமல் இல்லை. கோவை காஸ் சிலிண்டர் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, மாவட்ட பா.ஜ.க சார்பில் அக்டோபர் 31-ம் தேதி ‘பந்த்’ அறிவிக்கப்பட்டது. கட்சி சீனியர்களான சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோர்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டனர். ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘பந்த்’துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டவுடன், ‘மாநிலத் தலைமை பந்த்துக்கு ஒப்புதல் வழங்கவில்லை. மாவட்ட அமைப்பே தன்னிச்சையாக பந்த் அறிவித்துவிட்டது’ என நீதிமன்றத்தில் பல்டி அடித்து பதிலளித்தார் அண்ணாமலை. இதை சி.பி.ஆர்., வானதி இருவருமே எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள் விவரமறிந்த சீனியர்கள்.

நம்மிடம் பேசிய மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் சிலர், “கோவையில் ‘பந்த்’ நடத்த அழைப்பு விடுப்பதற்கு முன்னதாக, அண்ணாமலையுடன் சீனியர்கள் கலந்தாலோசனை செய்தனர். அதன்படிதான் அறிவிப்பும் வெளியானது. ஆனால், நீதிமன்றத்தில் அப்படியே உல்டாவாக பதிலளித்துவிட்டார் அண்ணாமலை. பொதுப்பார்வையில், சி.பி.ஆர்., வானதி உள்ளிட்டோர்தான் பிரச்னையைத் தூண்டுவதாக ஒரு தவறான பிம்பத்தை அண்ணாமலை கட்டமைத்துவிட்டார். கொங்கு மண்டலத்தில், ஏ.பி.முருகானந்தம் தலைமையில் தனக்கென ஒரு கோஷ்டியை உருவாக்கியும் வருகிறார் அண்ணாமலை.

டெல்டாவில் கருப்பு முருகானந்தத்தின் ஆதரவாளர்களை ஓரங்கட்டிவிட்டு, அனுபவமில்லாதவர்களுக்குக் கட்சிப் பதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ராமநாதபுரத்தில் குப்புராம், சிவகங்கையில் ஹெச்.ராஜா, கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன், சென்னையில் தமிழிசை செளந்தரராஜன் என சீனியர்கள் பலரின் ஆதரவாளர்களும் அந்தந்த மாவட்டங்களில் ஓரங்கட்டப்பட்டு விட்டனர். பா.ஜ.க சீனியர்களான எம்.என்.ராஜா, புரொஃபசர் சீனிவாசன் உள்ளிட்டவர்களின் ஆலோசனையை அண்ணாமலை சட்டை செய்வதுகூட இல்லை. இந்திய தேர்தல் ஆணையத்தால், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாடு பா.ஜ.க நிர்வாகிகள் ஓர் இடத்தில்கூட, இந்தச் சரிபார்ப்புப் பணிகளை உருப்படியாகச் செய்யவில்லை. ‘பூத் ஏஜென்ட் 2’ பொறுப்புகளுக்கு ஆட்களையும் நியமிக்கவில்லை.

நீலகிரி மாவட்டம், பா.ஜ.க எப்போதும் வலுவாக இருக்கும் பகுதி. அங்கு, அண்ணாமலையால்தான் கட்சி வளர்கிறதென ஒரு பொய் பிம்பத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில், பா.ஜ.க-வின் முகமாக பிரதமர் மோடிதான் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். அவர்தான் பிரதமர் பதவிக்காகப் போட்டியிடப் போகிறார். ஆனால், அண்ணாமலையைப் புரொமோட் செய்யும் வேலையை மட்டும்தான் கட்சிக்குள் பார்க்கிறார்கள். அதைச் செய்யாதவர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள். இந்த ‘ஒன் மேன் ஷோ’தான் கட்சிக்குள் பெரும் பிளவை ஏற்படுத்தியிருக்கிறது. இதே நிலை நீடித்தால், அண்ணாமலை மட்டும்தான் இருப்பார். கட்சி இருக்காது” என்றனர் ஆற்றாமையுடன்.

டார்கெட் ‘கேசவ விநாயகம்!’

தமிழ்நாடு பா.ஜ.க-வில் வெடித்துக் கிளம்பியிருக்கும் கோஷ்டிப்பூசலின் உச்சமாக, கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகத்தைக் கட்சியிலிருந்து வெளியேற்றவும் தயாராகிவிட்டாராம் அண்ணாமலை. கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் பதவிக்கு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முழுநேர ஊழியராக இருக்கும் ஒருவரை நியமிப்பதுதான் வழக்கம். 2015-ல் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட கேசவ விநாயகத்தின் பதவிக்காலம் விரைவிலேயே முடிவடைகிறது. அதற்குள்ளாக, அவரை அவமானப்படுத்தி வெளியேற்ற அண்ணாமலை அண்ட் கோ முயல்வதாகப் பரவும் தகவல்தான், கமலாலயத்தைக் கதறவைத்திருக்கிறது.

பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர்கள் சிலர் நம்மிடம் இது தொடர்பாகப் பேசினார்கள். “சிறுபான்மை அணியின் நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக, டெய்சிக்கும் சூர்யாவுக்கும் இடையே வெடித்த பிரச்னையில், ஒரு ஆடியோ லீக் ஆனது. அந்த ஆடியோவில், கேசவ விநாயகத்தை ஆபாசமாகக் குறிப்பிட்டு சூர்யா சிவா பேசியிருக்கிறார். கட்சியின் அமைப்புப் பொதுச்செயலாளரை அந்த அளவுக்கு வன்மமாகப் பேசும் தைரியத்தை யார் கொடுத்தது.. ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராகவே ‘டார்கெட்’ செய்து, அவர்களை வெளியேற்றுகிறார் அண்ணாமலை. இந்த ஆடியோ, ‘லீக்’ ஆவதற்கு 15 நாள்களுக்கு முன்னரே அண்ணாமலை உள்ளிட்ட சிலரின் கவனத்துக்கு வந்துவிட்டது. அப்போது டெய்சி, சூர்யா இருவரையும் அழைத்து, பஞ்சாயத்துப் பேசினார் அண்ணாமலை. ‘நீ திருச்சிக்கு எம்.பி-யாக வரவேண்டியவன். இப்படியா பேசுவ?’ என சூர்யாவைக் கண்டித்து, டெய்சியிடம் மன்னிப்பும் கேட்கவைத்தார். ஆனால், மன்னிப்பை டெய்சி ஏற்கவில்லை. நடவடிக்கை கோரினார்.

பிளவுபடும் பா.ஜ.க! - கதறலில் கமலாலயம்

“அண்ணாமலையை டெல்லி சும்மா விடாது!”

இதற்குப் பிறகுதான் ஆடியோ ‘லீக்’ ஆகி, பிரச்னை ஒழுங்கு நடவடிக்கைக்குழு விசாரணைக்குப் போனது. நவம்பர் 23-ம் தேதி டெய்சிக்கு போன் செய்த அண்ணாமலை, ‘நீங்க ஒழுங்கா பதவியை ராஜினாமா பண்ணிடுங்க. எனக்கு மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா, பி.எல்.சந்தோஷ் வரைக்கும் நேரடித் தொடர்பு இருக்கு. நான் நினைச்சா, உங்களைக் கட்சிக்குள்ள ஒண்ணும் இல்லாம பண்ணிட முடியும்’ என நேரடியாகவே மிரட்டியிருக்கிறார். ஆனால், அதற்கெல்லாம் டெய்சி அசைந்து கொடுக்கவில்லை. டெய்சி பிடிவாதமாக இருக்க, வானதி சீனிவாசன் மூலமாக டெல்லியிலிருந்து அழுத்தமும் வந்த காரணத்தால், சூர்யா சிவாவை ஆறு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்திருக்கிறார் அண்ணாமலை. அதிலும், ‘சூர்யாவின் செயல்களில் எனக்கு மாற்றங்கள் தெரிந்தால், அவர் பதவியைத் திரும்ப அளிப்பேன்’ என்ற சலுகையோடு அறிவித்திருக்கிறார். இந்தச் சலுகை காயத்ரி விஷயத்தில் காட்டப்படவில்லை. மேலும், ‘காயத்ரியோடு கட்சியினர் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது’ என்று கட்டுப்பாடு வேறு விதித்திருக்கிறார் அண்ணாமலை. ஆக, சூர்யா சிவாவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை வெறும் கண்துடைப்புதான்.

இதுபோல, அண்ணாமலையின் அதிகாரத் தோரணைக்குக் கீழ்ப்படியாத நிர்வாகிகள் பலரும் டார்கெட் செய்யப்படுகிறார்கள். மாவட்டத் தலைவர்களை போலீஸ் பாணியில் அண்ணாமலை ‘டீல்’ செய்வதும் கட்சிக்குள் அதிர்வைக் கிளப்பியிருக்கிறது. கேசவ விநாயகம் சூப்பர் சீனியர் என்பதால், அவரிடம் கட்சி சீனியர்கள் புலம்புவது நாக்பூர் வழியாக டெல்லியில் எதிரொலித்துவிடுகிறது. எத்தனை நாள்களுக்கு பி.எல்.சந்தோஷால் அண்ணாமலையைப் பாதுகாக்க முடியும்... தன் தகிடுதத்தங்கள் அம்பலமாகிவிடும் என்பதால்தான், கேசவ விநாயகத்தை அவமானப்படுத்தி வெளியேற்றப் பார்க்கிறார் அண்ணாமலை. ‘என்னை எதிர்த்தால் உங்களுக்கு இந்தக் கதிதான்’ என மறைமுகமாக எல்லோருக்கும் மிரட்டல் விடுக்கிறார். இதெல்லாம் ரொம்ப நாளுக்கு நீடிக்காது. அண்ணாமலையின் மொத்தத் தகிடுதத்தங்களும் விரைவில் வெளிச்சத்துக்கு வரும். கட்சியில் பிளவுக்கு வழிவகுத்தால் அண்ணாமலையை டெல்லி சும்மா விடாது” என்றனர்.

கட்சி நிர்வாகிகள் நீக்கம் தொடங்கி, கோஷ்டித் தகராறு வரை பல்வேறு பிரச்னைகள் அண்ணாமலையைச் சுற்றியே வட்டமடிக்கின்றன. இது தொடர்பாகச் செய்தியாளர்களுக்கு அவர் அளித்திருக்கும் விளக்கத்தில், “ஒரு பஸ்ல 72 சீட்டுகள்தான் இருக்கும். ‘நான்தான் முன்னாடி வந்து துண்டு போட்டேன். அடுத்த 25 வருஷத்துக்கு நான்தான் சீட்டுல உட்கார்ந்திருப்பேன்’னு யாராவது சொன்னா, அதை எப்படி ஏத்துக்க முடியும்... பஸ்ஸுன்னா, நாலு பேரை இறக்கிவிட்டு, மூணு பேரை ஏத்தத்தான் வேணும். அது மாதிரிதான், கட்சியில் செயல்படாதவர்களை இறக்கிவிட்டு, புதியவர்களை ஏற்றுகிறோம். அவ்வப்போது கண்டக்டர், டிரைவர் எல்லாரையும் மாத்தணும். அப்பதான் பஸ் ஓடும்” என்றிருக்கிறார்.

“தமிழ்நாடு பா.ஜ.க-வில், ஆட்களை ஏற்றுவதும், இறக்குவதும், ஹாரன் அடிப்பதுமாகத்தான் இருக்கிறார்களே ஒழிய... பஸ் ஒரு இஞ்ச் கூட நகர்ந்தபாடில்லை. அண்ணாமலை பெயரைச் சொல்லி டயரைக் கழற்றி விற்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பஸ்ஸுக்குள் கோஷ்டி மோதல்கள் தூள் பறக்கின்றன. ஸ்டீயரிங்கைப் பிடிக்க வேண்டிய அண்ணாமலை, ‘எவ்வளவு கூட்டம் வந்து நிற்கிறது’ என்பதைப் பார்ப்பதில் மட்டுமே மும்முரமாக இருக்கிறார். சமூக வலைதள சப்போர்ட்டுகளே பஸ்ஸைத் தள்ளிவிடும் என நம்புகிறார். ஆனால், வண்டியின் ஆறு டயர்களும் பஞ்ராகி நிற்பதை அவர் இன்றுவரை உணரவில்லை’’ என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்!

கமலாலயக் கதறல்கள் இப்போதைக்கு ஓயப்போவதில்லை!