சமூகம்
அலசல்
அரசியல்
Published:Updated:

கதறிய துரை, பதறிய மனோ, நச்சரித்த பாலு, கும்பிட்ட தங்கம், ஆதங்க பி.டி.ஆர்... அதகள அமைச்சரவை மாற்றம்!

அமைச்சரவை மாற்றம்
பிரீமியம் ஸ்டோரி
News
அமைச்சரவை மாற்றம்

“நான் நினைக்கும் வரைதான் நீங்கள் அமைச்சர். கட்சிக்கு, ஆட்சிக்கு அவப்பெயரென்றால் தூக்கி எறியவும் தயங்க மாட்டேன்” எனத் தன் நண்பரையே நீக்கி, முதன்முறையாக வார்னிங் விட்டிருக்கிறார் ஸ்டாலின்.

நீண்டநாள்களாக எதிர்பார்ப்பைக் கிளப்பிய அமைச்சரவை மாற்றம் ஒருவழியாக நடந்தேறியிருக்கிறது. இரண்டாண்டுக்கால தி.மு.க ஆட்சியில், முதல்வர் ஸ்டாலினின் அமைச்சரவையிலிருந்து முதல் ஆளாகக் கழற்றிவிடப்பட்டிருக்கிறார் ஆவடி நாசர். தி.மு.க-வின் பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜாவுக்குத் தொழில்துறை அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. நிதித்துறை என்கிற இமாலயப் பொறுப்பிலிருந்து, தகவல் தொழில்நுட்பம் என்கிற குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்ட அனுப்பப்பட்டிருக்கிறார் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். ‘எனக்கு நிதித்துறையே வேண்டாம்..!’ என முரண்டு பிடித்துக்கொண்டிருந்த தங்கம் தென்னரசுவிடம், அந்தத் துறையே அளிக்கப்பட்டிருக்கிறது. யாரும் எதிர்பாராத திருப்பமாக, பால்வளத்துறை மனோ தங்கராஜ் வசம் சென்றிருக்கிறது. இந்த மாற்றங்களில் சிலர் தப்பியிருக்கிறார்கள், சிலர் ஏமாந்திருக்கிறார்கள். இன்னும் சிலருக்கு ‘செக்’ விழுந்திருக்கிறது. அதகளப்பட்டிருக்கும் அமைச்சரவை மாற்றத்தின் பின்னணி என்ன..?

கல்லால் வந்த ஆபத்து... நாசர் பதவிப் பறிப்புப் பின்னணி!

ஒரு வாரத்துக்கும் மேலாக அமைச்சரவை மாற்றம் குறித்து கோட்டையில் பலமாக விவாதங்கள் கிளம்பிய நிலையில், லண்டனிலிருந்து முதல்வரின் மருமகன் சபரீசன் சென்னைக்குத் திரும்பியதும்தான், மாற்றம் குறித்து சீரியஸ் விவாதங்கள் நடந்திருக்கின்றன.

நம்மிடம் பேசிய தி.மு.க மேலிடத்துக்கு நெருக்கமான சிலர், “அமைச்சர்களின் செயல்பாடுகளைப் பட்டியலெடுத்து, முதல்வரும் சபரீசனும் விவாதித்தனர். இதில், நாசரின் பெயரை நீக்கத்துக்காக ‘டிக்’ செய்தது முதல்வர்தான். முதல்வரும் நாசரும் ஒருகாலத்தில் நகமும் சதையுமாக இருந்தவர்கள். ‘ஒரு பொறுப்பு கொடுத்தால் அதை வெற்றிகரமாக நிறைவேற்றக்கூடிய ஆற்றலைப் பெற்றவர் நாசர்’ என்றெல்லாம் புகழ்ந்து பேசியிருக்கிறார் முதல்வர். அந்த அளவுக்கு இருவரும் நட்பாக இருந்தவர்கள். சட்டமன்றத்தில் நாசர் பேசும்போது, ‘இளைய தளபதியே, உதயநிதியே... நீ தூக்கிக் காட்டிய செங்கல்லில் புனித ஜார்ஜ் கோட்டையே கழகக் கோட்டையானது. இது செங்கல் அதிகாரம்’ எனப் புகழ் பாடினார். செங்கல் அதிகாரம் பாடியவருக்குக் கல்லால் ஆபத்து வருமென யாரும் நினைக்கவில்லை.

நாற்காலி கொண்டுவர தாமதப்படுத்திய தி.மு.க தொண்டர்களை, கற்களால் நாசர் தாக்கிய சம்பவத்தை முதல்வர் துளியும் ரசிக்கவில்லை. தன்னைப் பார்க்க வரும் கட்சி நிர்வாகிகளை ஆபாச வார்த்தைகளால் நாசர் அர்ச்சிப்பதும் தலைமை வரை புகார்களாகச் சென்றன. போதாக்குறைக்கு, ஆவினில் நடந்த முறைகேடுகளும், நிர்வாகக் கோளாறுகளும் முதல்வரை உஷ்ணமாக்கின. பால் கொள்முதல் குறைவு, பால்பொருள்கள் தட்டுப்பாடு, விலையைக் குறைத்தும் விற்பனை அதிகரிக்காதது என ஏகப்பட்ட புகார்கள் நாள்தோறும் படையெடுத்தன. பொறுமையிழந்துதான் அமைச்சரவையிலிருந்து நாசரை நீக்கியிருக்கிறார் முதல்வர். இந்த மாற்றங்கள் குறித்து உதயநிதியுடனும் கலந்தாலோசித்தார். அதன் பிறகே பட்டியல் ஆளுநர் மாளிகைக்குச் சென்றது” என்றனர்.

பதவியேற்பு விழா
பதவியேற்பு விழா

நாசர் அமைச்சராக இருந்தபோது அவரின் செயல்பாடு குறித்து, ‘ஊழல் வளத்துறை! - பாழாக்கிய நாசர்’ என்ற தலைப்பில் 01.01.2023-ம் தேதியிட்ட இதழில் கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். துறைசார்ந்தும், ஆவடி மாநகராட்சிக்குள் நாசரும் அவரின் மகன் ஆசிம் ராஜாவும் செய்த அதிகார அத்துமீறல்களையும் தொடர்ந்து எழுதிவந்தோம். அதையொட்டி, கடந்த நான்கு மாதங்களாக உளவுத்துறையின் தொடர் கண்காணிப்பில் நாசரும், அவர் குடும்பத்தினரும் இருந்ததாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். உளவுத்துறை ரிப்போர்ட் நாசருக்கு எதிராக அளிக்கப்பட்ட சமயத்தில், பூந்தமல்லியிலுள்ள ஒரு நில விவகாரத்தில் நாசர் தரப்பு செய்யும் அடாவடி குறித்து, கட்சித் தலைமையிடம் குமுறியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர். இதையொட்டித்தான் நாசரின் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. சென்னீர்குப்பத்தில் நடந்த தி.மு.க-வின் இரண்டாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்துக்கு நாசர் பயணமானபோதுதான் பதவிப் பறிப்புச் செய்தி வெளியானது. அப்செட்டில், கூட்டத்துக்குப் போகாமல் அப்படியே வண்டியை வீட்டுக்குத் திருப்பியிருக்கிறார் நாசர்.

நச்சரித்த டி.ஆர்.பாலு... கடுப்பில் டெல்டா நிர்வாகிகள்!

“டெல்டா மாவட்டங்களுக்கு அமைச்சரவையில் உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்கிற குறை இருந்தது. அதைப் போக்கவே, மன்னார்குடி எம்.எல்.ஏ-வான டி.ஆர்.பி.ராஜாவுக்குப் பதவி அளிக்கப் பட்டிருக்கிறது” என்கின்றன அறிவாலய வட்டாரங்கள். ஆனால், ‘நடந்த கதையே வேறு...’ என்கிறார்கள் தி.மு.க சீனியர்கள்.

“சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றவுடனேயே, தன் மகன் டி.ஆர்.பி.ராஜாவை அமைச்சராக்க, கடுமையாக முட்டி மோதினார் கட்சியின் பொருளாளரான டி.ஆர்.பாலு. ஆனால், தலைமை அசைந்து கொடுக்கவில்லை. ஒவ்வொரு முறை அமைச்சரவை இலாகா மாற்றம் தொடர்பான விவாதங்கள் அறிவாலயத்தில் எழும்போதும், ‘என் பையனை விட்டுடாதீங்க...’ என தனக்கே உரிய டிரேட் மார்க் சிரிப்பை உதிர்த்து, இருக்கைக்காகத் துண்டுபோடுவார் பாலு. ஆனால், தலைமை கண்டுகொள்ளாது. இந்த முறை மாற்றம் இருப்பது உறுதியானவுடன், ஸ்டாலினைவிட்டு ஒரு இஞ்ச்கூட அகலவில்லை பாலு. ‘என் மகனுக்கு அமைச்சர் பதவி கொடுத்தே ஆக வேண்டும்’ என அவர் வம்படியாக நின்றுவிட, ‘சரி கொடுக்கலாம். ஆனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு உங்களுக்கு சீட் கிடையாது’ என்று கூறிவிட்டது கட்சித் தலைமை. தன்னுடைய சீட்டை தியாகம் செய்து மகனுக்கு அமைச்சர் சீட் வாங்கிக் கொடுத்திருக்கிறார் பாலு.

டி.ஆர்.பி.ராஜாவைவிட சீனியர்களெல்லாம் டெல்டா தி.மு.க-வில் இருக்கிறார்கள். கலைஞருக்காக திருவாரூர் தொகுதியை விட்டுக்கொடுத்தவர் பூண்டி கலைவாணன். கலைஞர் குடும்பத்தின் தீவிர விசுவாசி. அவரை அமைச்சராக்காமல், ராஜாவுக்கு பதவியளித்திருப்பது டெல்டா தி.மு.க-வில் புயலைக் கிளப்பியிருக்கிறது. ஆங்காங்கே கண்டன போஸ்டர்களும் முளைத்துவிட்டன. தஞ்சாவூர் எம்.எல்.ஏ நீலமேகம், திருவையாறு எம்.எல்.ஏ துரை சந்திரசேகரன் எனக் கட்சிக்காகக் கடுமையாக உழைத்தவர்களும் அமைச்சரவையில் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்றனர் அந்த சீனியர்கள்.

அமைச்சரவை மாற்றம்
அமைச்சரவை மாற்றம்

டி.ஆர்.பாலுவின் நச்சரிப்பு, டெல்டா சீனியர்களின் விமர்சனங்களையெல்லாம் தாண்டி, ராஜா மீது முதல்வருக்கு ஏற்பட்ட ஒரு நன்மதிப்பும் அவருக்குப் பதவி கிடைப்பதற்குக் காரணமாக இருந்திருக்கிறது. தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளரான ராஜா, முதல்வரின் பிறந்தநாளை ஒட்டி, ‘ஃபிளாஷ் மாப்’பை ஒருங்கிணைத்தது, தொலைபேசியில் பொதுமக்கள் வாழ்த்து சொல்ல ஏற்பாடு செய்தது, ‘ஈடில்லா ஆட்சி... ஈராண்டே சாட்சி!’ என சோஷியல் மீடியாவில் செய்த புரொமோஷன் உள்ளிட்ட முன்னெடுப்புகளால் முதல்வரின் நன் மதிப்பைப் பெற்றிருக்கிறார். தவிர, அமைச்சரவையில் அன்பில் மகேஸ், சிவசங்கர், மனோ தங்கராஜ், மதிவேந்தன் என இளம் பட்டாளம் உருவாகியிருக்கிறது. அவர்களுடன் ராஜாவையும் சேர்த்துவிட்டிருக்கிறார் முதல்வர். தற்போது முக்கிய இலாகாக்கள் இவர்கள் வசம் வந்திருக்கின்றன. “இப்போதிருக்கும் அமைச்சர்களில் பலரும் விரைவிலேயே ‘ரிட்டையர்டு’ ஆகிவிடுவார்கள். புதிய நிர்வாகிகளை உருவாக்கும் பொறுப்பு முதல்வருக்கு இருக்கிறது. வரும் காலத்தில், உதயநிதிக்கு இது பக்கபலமாக இருக்கும். அதனால்தான் டி.ஆர்.பி.ராஜாவுக்கு வாய்ப்பளித்திருக்கிறார் முதல்வர்” என்கின்றன தி.மு.க வட்டாரங்கள்.

கும்பிட்ட தங்கம்... ஆதங்க பி.டி.ஆர்... இலாகா சடுகுடு!

அமைச்சரவை மாற்றத்தில், தொடர்ந்து பேசுபொருளாக இருந்தது பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மாற்றப்படுவார் என்பதுதான். “நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில்லை. அத்தியாவசியத் திட்டங்களுக்கான ஃபைல்களைக்கூட நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி கிடப்பில் போடுகிறார். கட்சிக்கும் ஆட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது” என சீனியர் அமைச்சர்கள் முதல், உளவுத்துறை வரை பலரும் பி.டி.ஆருக்கு எதிராக முதல்வரிடம் பெட்டிஷன் போட்டார்கள். அதோடு ஆடியோ விவகாரமும் சேர்ந்துகொள்ள, மாற்றத்துக்கான முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்து அறநிலையத் துறையை பி.டி.ஆருக்கு வழங்க முதல்வர் ஆலோசித்த நிலையில், அந்தத் துறையைக் கையில் வைத்திருக்கும் சேகர் பாபு விடாப்பிடியாக மறுத்துவிட்டாராம். அதன் பிறகுதான், அதிக முக்கியத்துவம் இல்லாத தகவல் தொழில்நுட்பத்துறை பி.டி.ஆருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதில், பி.டி.ஆருக்குக் கடுமையான வருத்தம் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். “அந்த ஆடியோவே ஒரு சூழ்ச்சி. திட்டமிட்டு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை எனக்கு எதிராகச் சதி செய்திருக்கிறார். அதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டு துறையை மாற்றிவிட்டார்களே...” என ஆதங்கத்தில் உழல்கிறாராம் அவர்.

நாசர், டி.ஆர்.பாலு, தங்கம் தென்னரசு
நாசர், டி.ஆர்.பாலு, தங்கம் தென்னரசு

தொடக்கத்தில், நிதித்துறையை பொன்முடி வசமளிக்க முதல்வர் ஆலோசித்திருக்கிறார். ஆனால், பொன்முடி தயக்கத்துடன் மறுத்துவிட்டதால், தங்கம் தென்னரசுவை அழைத்துப் பேசியிருக்கிறார். முதல்வர் பேச ஆரம்பிக்கும்போதே முகம் மாறியிருக்கிறார் தங்கம். “இப்போதுதான் முதலீடுகளைத் தமிழகத்துக்குக் கொண்டுவர ஆரம்பித்திருக்கிறேன். சர்வதேச அளவில், நம் ஆட்சியின் வெளிப்படைத்தன்மையை தொழிலதிபர்கள் பலரும் சிலாகித்துப் பேசுகிறார்கள். ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி நாம் முன்னேறும்போது, நான் வேறு துறைக்கு மாற்றப்பட்டால் தொய்வு ஏற்படலாம். நான் தொழில்துறையிலேயே இருந்துவிடுகிறேனே...” எனக் கையெடுத்துக் கும்பிட்டிருக்கிறார் தங்கம் தென்னரசு. ஆனால், விடாப்பிடியாக முதல்வர் “நீதான் நிதித்துறைக்குப் போக வேண்டும். அங்கேயிருந்தும் முதலீடுகளைக் கொண்டு வரலாமே. உன்னை யார் தடுத்தது?” என்று கட் அண்ட் ரைட்டாகச் சொல்லிவிட, மறுப்பேதும் சொல்ல முடியாமல், நிதித்துறையை ஏற்றிருக்கிறார் தங்கம் தென்னரசு.

“தம்பி, இந்த வயசுல அவமானப்படுத்தாதீங்க...” - கதறிய துரைமுருகன்... பதறிய மனோ!

சீனியர் அமைச்சரான துரைமுருகன் வசம் நீர்வளத்துறை, கனிம வளத்துறை இலாகாக்கள் இருக்கின்றன. இதில், கனிம வளத்துறை இலாகா துரைமுருகனிடம் இருப்பதை மேலிடக் குடும்பம் விரும்பவில்லையாம்.

நம்மிடம் பேசிய அமைச்சர்கள் சிலர், “கட்சி நிதி என்றால் துரைமுருகனுக்கு என்னவென்றே தெரியாது. கனிம வளத்துறையில் கட்சிக்காரர்களுக்கு மட்டுமல்ல, மேலிடக் குடும்பம் கேட்டால்கூட அவ்வளவு எளிதில் எதையும் செய்து தருவதில்லை துரைமுருகன். இதில் கடுப்பான குடும்பம், ‘பேசாம அந்த டிபார்ட்மென்ட்டை எடுத்து வேற ஆளுக்குக் கொடுத்துடுங்க’ என முதல்வரை நச்சரித்தது. இது தொடர்பாக துரைமுருகனுடன் பேசியிருக்கிறார் முதல்வர். ‘கனிமத்தை தங்கம் தென்னரசுக்குக் கொடுக்கலாம்னு இருக்கேண்ணே. நீங்க கொஞ்சம் ஓய்வெடுங்க...’ என முதல்வர் சொன்னதுதான் தாமதம், ‘பக்’ என நெஞ்சைப் பிடித்துக்கொண்டார் துரைமுருகன்.

‘தம்பி, இந்த வயசுல என்னைய அவமானப்படுத்தாதீங்க. நான் அமைச்சரா இருக்குறது பிடிக்கலைன்னா சொல்லிடுங்க. நான் ரிசைன் பண்ணிடுறேன். பொதுச்செயலாளரா மட்டும் இருக்கேன். இலாகா மாத்தி அவமானப்படுத்திடாதீங்க’ எனக் கதறிவிட்டார். அதற்கு மேல் என்ன சொல்வதென முதல்வருக்கும் தெரியவில்லை. துரைமுருகனின் கதறல்தான், அவர் துறை பறிபோகாமல் காப்பாற்றியிருக்கிறது.

துரைமுருகன் கதறினார் என்றால், முதல்வரிடம் பதறினார் அமைச்சர் மனோ தங்கராஜ். மனோ ஒரு டீசன்ட் அரசியலை நடத்த விரும்புபவர். கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் தனக்கென ஒரு மரியாதையைச் சம்பாதித்து வைத்திருப்பவர். அவருக்கு ஆவின் வழங்கப்பட்டதும் பதறிப்போய்விட்டார். ‘ஆவின் பெரிய டிபார்ட்மென்ட் தலைவரே... ஏகப்பட்ட சிக்கல் வேற இருக்கு. என்னால சமாளிக்க முடியுமான்னு தெரியலை. நாளைக்கு ஏதாவது தப்பாகிடுச்சுன்னா, என் பேர் ரொம்ப மோசமாகிடும்...’ என அவர் பதற, முதல்வரும் கனிமொழியும்தான் அவரை ஆசுவாசப்படுத்தினார்கள். ‘உங்க மேல நிறைய நம்பிக்கை இருக்கு. `அமுல்’, `நந்தினி’ அளவுக்கு ஆவினிலும் பெரிய அளவில் வருமானம் ஈட்டலாம். எதுவும் தப்பா போகாது. இது உனக்கு புரொமோஷன்யா...’ என நம்பிக்கை அளித்திருக்கிறார் முதல்வர். இதுவரை எலியோடு விளையாடிக்கொண்டிருந்த மனோவை, புலிக் கூண்டுக்குள் இறக்கிவிட்டிருக்கிறார் முதல்வர்” என்றனர் விரிவாக.

பி.டி.ஆர். - மனோ தங்கராஜ்
பி.டி.ஆர். - மனோ தங்கராஜ்

தப்பியது யார்... ஏமாந்தது யார்... ஸ்டாலின் வார்னிங்!

‘துறைரீதியிலான மோசமான செயல்பாடுகள், கணவரின் தலையீடு உள்ளிட்ட புகார்களால் அமைச்சர் கயல்விழி செல்வராஜின் பதவி பறிக்கப்படும்’ எனத் தகவல்கள் றெக்கைகட்டிப் பறந்தன. அவர் இடத்துக்குத் தீவிரமாகக் காய்நகர்த்தினார் மானாமதுரை எம்.எல்.ஏ தமிழரசி. சீனியர்களான துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, கனிமொழி என அனைவரிடமும் ஆதரவு கேட்டார் தமிழரசி. ஆனால், கயல்விழியின் கணவர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, நேரடியாகத் தலைமையிடம் விளக்கமளித்துப் பேசியதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். மேலும், திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஐந்து அ.தி.மு.க வசம் இருக்கின்றன. “நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு வருடமே இருக்கும் நிலையில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் நீக்கப்பட்டால், அதன் தாக்கம் தேர்தலில் எதிரொலிக்கலாம்” என சீனியர்கள் தலைமைக்கு அட்வைஸ் அளித்திருக்கிறார்கள். இதையொட்டியே, தற்போதைக்குத் தப்பியிருக்கிறது கயல்விழியின் அமைச்சர் பதவி. ஆனால், ஏமாந்தது என்னவோ தமிழரசிதான்.

நாசர் பதவி பறிக்கப்பட்டால், தனக்கு அமைச்சர் பதவி கிடைக்குமெனக் கனவில் இருந்தார் பாளையங்கோட்டை எம்.எல்.ஏ அப்துல் வஹாப். ஆனால், துணிக்கடைத் தகராறு, திருநெல்வேலி மேயர் சரவணனுடன் முட்டல் மோதல் உள்ளிட்ட காரணங்களால் தொடக்கத்திலேயே வஹாப் பெயரை ஓரங்கட்டிவிட்டதாம் ஆட்சி மேலிடம். வஹாப்பும் அப்செட்.

துரைமுருகன்
துரைமுருகன்

இந்த அமைச்சரவை மாற்றத்தில், அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வசம் தமிழ் வளர்ச்சித்துறை கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் பதவிக்கான லிஸ்ட்டில் இருந்த சாமிநாதனுக்குக் கடைசி நேரத்தில் அந்தப் பதவி கிடைக்காமல் போனது. அதை ஈடுசெய்வதற்காகவும்கூட தமிழ் வளர்ச்சித்துறை அவருக்கு வழங்கப்பட்டது என்கிறார்கள் அறிவாலய சீனியர்கள்.

இந்த அமைச்சரவை மாற்றம், சீனியர்கள், ஜூனியர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரிடமும் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியது என்னவோ நிஜம். ஸ்டாலினின் நம்பிக்கையைப் பெற்றவர்கள்கூட, மேலிடக் குடும்ப உறுப்பினர்கள், மீடியா புள்ளிகள் பலரிடமும் போன் செய்து, “என் பெயர் லிஸ்ட்டுல இருக்கான்னு கேட்டுச் சொல்லுங்க...” எனக் கேட்கும் பதற்ற நிலையிலேயே கடந்த பத்து நாள்களையும் கழித்திருக்கிறார்கள். அவர்களின் பதற்றத்தை எகிறவைத்து, “நான் நினைக்கும் வரைதான் நீங்கள் அமைச்சர். கட்சிக்கு, ஆட்சிக்கு அவப்பெயரென்றால் தூக்கி எறியவும் தயங்க மாட்டேன்” எனத் தன் நண்பரையே நீக்கி, முதன்முறையாக வார்னிங் விட்டிருக்கிறார் ஸ்டாலின். புதிய அமைச்சரவை, ஆட்சி சக்கரத்தை வேகமாக நகர்த்துமென அவர் நம்புகிறார். அவர் நம்பிக்கை ஜெயிக்குமா?