அரசியல்
அலசல்
Published:Updated:

பிரிவினை... அரசியல்... சர்ச்சை... கன்னாபின்னா கவர்னர்!

கவர்னர்
பிரீமியம் ஸ்டோரி
News
கவர்னர்

முழுக்க முழுக்க அரசியல் சாசனத்துக்கு விரோதமாக, ‘இந்தியா மதச்சார்ப்பற்ற நாடு இல்லை’ என்று பேசுகிறார் ஆளுநர். இப்படியெல்லாம் பேசினால் மோடி, அமித் ஷாவிடமிருந்து நல்ல கவனிப்பு வருமென்று மோடுமுட்டித்தனமாகப் பேசுகிறார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் சமீபகாலப் பேச்சுகள், இருக்கிற பிரச்னைகளிலும் சர்ச்சைகளிலும் மேலும் எண்ணெய் ஊற்றும்விதமாகவே இருக்கின்றன. மதம், மொழி, இனம், பண்பாடு சார்ந்த விஷயங்களில் ஒரு தனிப் புத்தகமே போடும் அளவுக்குச் சர்ச்சைக் கருத்துகளைச் சொல்லிவருகிறார். “நாட்டில் இருக்கிற பிரச்னைகளுக்குத் தீர்வுகளைக் கொண்டுவருவார், அமைதிக்குப் பாடுபடுவார் என்று பார்த்தால், இவரே பிரச்னைகளைக் கிளப்புவதும் அமைதியைக் கெடுக்கும்விதமாகவும் பேசிக்கொண்டிருக்கிறார். ‘ரிஷிகளாலும், சனாதன தர்மத்தாலும் உருவானதுதான் பாரதம்’ என்றதில் தொடங்கி, ‘கோவை கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தை என்.ஐ.ஏ விசாரணைக்கு உடனடியாக ஏன் மாற்றவில்லை?’ என்று உள் அர்த்தம் கற்பித்துப் பேசுவது வரையில் ஆர்.என்.ரவியின் பேச்சும் நடவடிக்கையும் மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டின் மாநில ஆளுநருடையதைப்போல இல்லை” என்று கடுகடுக்கிறார்கள் தமிழக அரசியல் தலைவர்கள். “குறிப்பாகக் கல்வி நிலையங்களில், தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலெல்லாம் மதம் சார்ந்த கருத்துகளைத் தூவுவதை வழக்கமாக்கியிருக்கிறார். ஆளுநரின் செயல்பாடுகள், நாளுக்கு நாள் பிரிவினையைத் தூண்டும்விதமாகவே இருக்கின்றன. ஒரு கட்சியின் அரசியல் பிரசாரகர் போன்ற அவரது தேவையற்ற பேச்சுகளை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்கிறார்கள் ஆளும் தி.மு.க கட்சியினரும், கூட்டணிக் கட்சியினரும்!

ஆர்.என்.ரவி
ஆர்.என்.ரவி

“ஆளுநர் ராஜினாமா செய்ய வேண்டும்!” - சீறும் தி.மு.க கூட்டணிக் கட்சிகள்

ஆளுநர் ரவி சமீபத்திய தன் சர்ச்சை வெடியை, கிண்டி ராஜ்பவன் மாளிகையில்தான் கிள்ளி எறிந்தார். கடந்த அக்டோபர் 29-ம் தேதி, சமணத் துறவி ஆச்சார்யா துளசியின் 109-வது பிறந்தநாள் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரவி, “இந்தியாவை மதச்சார்பற்ற நாடு எனச் சொல்கின்றனர். எந்த ஒரு நாடும் ஏதாவது ஒரு மதத்தைச் சார்ந்துதான் இருக்க முடியும். அதில், இந்தியா விதிவிலக்கல்ல” என்று பேசியிருப்பது சர்ச்சையானது. தி.மு.க கூட்டணிக் கட்சிகளிடமிருந்து ஒருமித்த கருத்தாக இதுவரை எந்தக் கூட்டறிக்கையும் வெளிவந்ததில்லை. உள்ளாட்சிப் பதவிகளைப் பங்கிட்டுக்கொள்வதில் முரண்பாடுகள் ஏற்பட்டு, பிரச்னை எழுந்தபோதுகூட கூட்டாக அவர்கள் அறிக்கை வெளியிடவில்லை. அவர்களே கொந்தளித்து, கூட்டறிக்கை விடும் அளவுக்குச் சென்றிருக்கிறது ஆளுநரின் இந்தச் சர்ச்சைக் கருத்து.

“ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்த 195 நாடுகளில், 120 நாடுகள் மதச்சார்பின்மை கொள்கைகொண்ட நாடுகள். இந்து நாடாகத் தன்னைச் சொல்லிக்கொண்ட நேபாளம்கூட, தற்போது ‘மதச்சார்பற்றக் கூட்டாட்சி முறையைப் பின்பற்றும் நாடாளுமன்றக் குடியரசு’ நாடாக மாறிவிட்டது. இந்தியாவை, ‘மதச்சார்பற்ற நாடு’ என்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம். ஆளுநர் அதற்கு எதிராகப் பேசியிருக்கிறார். எஸ்.ஆர்.பொம்மை வழக்கில், ‘மதச்சார்பின்மைக் கொள்கை நமது அரசியல் சாசனத்தின் அடிப்படைப் பண்பு. அரசு நடவடிக்கைகளில் மதச்சார்பு கூடாது. மதம் சார்ந்ததாக மாநில அரசு செயல்பட்டால், அதைக் கலைக்கலாம்’ என்று உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் தீர்ப்பளித்தார்கள். ஆனால், ஆளுநர் ரவி அந்தத் தீர்ப்புக்கு முரணாகவே பேசுகிறார்” என்று ரவியின் பேச்சுகளை விளாசியெடுத்திருக்கிறது கூட்டறிக்கை. மேலும், ஆளுநர் பதவியிலிருந்து ரவியை ராஜினாமா செய்யச் சொல்லியிருக்கின்றன தி.மு.க கூட்டணிக் கட்சிகள்.

ரவியின் இந்த ‘கன்னா பின்னா’ பேச்சுகள், அவர் பதவிக்கே வேட்டாக மாறவும் வாய்ப்பாகியிருக்கின்றன என்கிறார்கள். “அரசியலமைப்புச் சட்டத்தின்மீது உறுதிமொழி ஏற்றுத்தான் ஆளுநராகப் பதவியேற்றார் ரவி. இப்போது, அந்தச் சட்டத்தின் அடிப்படைக் கருத்துக்கே எதிராகப் பேசியிருக்கிறார். இது அவரது பதவிக்கு அழகுமல்ல, நல்லதுமல்ல. விரைவில், குடியரசுத் தலைவரைச் சந்தித்து, தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் சார்பில் புகார்க் கடிதம் சமர்ப்பிக்கப்படும்” என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தினர்.

கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்

நம்மிடம் பேசிய சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “முழுக்க முழுக்க அரசியல் சாசனத்துக்கு விரோதமாக, ‘இந்தியா மதச்சார்ப்பற்ற நாடு இல்லை’ என்று பேசுகிறார் ஆளுநர். இப்படியெல்லாம் பேசினால் மோடி, அமித் ஷாவிடமிருந்து நல்ல கவனிப்பு வருமென்று மோடுமுட்டித்தனமாகப் பேசுகிறார். அவர் ஆர்.எஸ்.எஸ்-காரர். அதனால்தான் தனது பொறுப்பையும் மறந்து, பா.ஜ.க கட்சியினர்போலச் சனாதனம் உள்ளிட்டவை குறித்துத் தொடர்ந்து உயர்த்திப் பேசுகிறார். மாநிலத்தின் வளர்ச்சிமீதும், பாதுகாப்புமீதும் உண்மையில் அவருக்கு அக்கறை இருந்தால், கோவை கார் வெடிப்புச் சம்பவம் நடந்ததும் அரசுடன் ஆலோசனை நடத்தியிருக்கலாம். ஆனால், என்.ஐ.ஏ கோட்டைவிட்டதை மறைக்க காவல்துறை மீதும், அரசு மீதும் பழிபோடுகிறார். அதேநேரத்தில், தமிழக காவல்துறைக்குள் பிரிவினை ஏற்படுத்தும்விதமாக, ஒரு தரப்பைப் பாராட்டியும், மற்றொரு தரப்பைக் குற்றம்சாட்டியும் பேசுகிறார்; நடிக்கிறார்” என்றார் விரிவாக.

பிரிவினை... அரசியல்... சர்ச்சை... கன்னாபின்னா கவர்னர்!

‘காவல்துறைக்குள் பிரிவினைவாதம்’ - ஆளுநரின் அஜண்டா?

கே.பாலகிருஷ்ணனின் கருத்துகளை எளிதாகக் கடந்து செல்ல முடியாது. கோவை நவக்கரையிலுள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆளுநர் ரவி, “கோவை கார் வெடிப்புச் சம்பவம் ஒரு தீவிரவாதத் தாக்குதல்தான். இந்தச் சம்பவத்தை தமிழ்நாடு காவல்துறை சிறப்பாகக் கையாண்டது” என்று பாராட்டுப் பத்திரம் வாசித்தவர், அடுத்த சில நிமிடங்களிலேயே, “இந்த வழக்கின் விசாரணை நான்கு நாள்கள் தாமதமாக என்.ஐ.ஏ-வுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தமிழக காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டது. ஆனால், முடிவெடுக்கவேண்டியவர்கள் ஏன் தாமதப்படுத்தினர்?” என்று சர்ச்சையைக் கிளப்பினார். அதாவது, விசாரணை அதிகாரிகள் நல்லவர்கள் போலவும், மேலதிகாரிகள்தான் தவறு செய்ததுபோலவும் பொருள்பட ஆளுநர் பேசியது, காவல்துறைக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் அஜண்டாவாகவே பார்க்கப்படுகிறது.

இந்திய அரசியலைப்புச் சட்டப்படி, ஒவ்வொரு மாநில அரசும், ஆளுநரின் தலைமையில்தான் இயங்குகிறது. அரசாணைகள் அனைத்தும் ஆளுநர் பெயரிலேயே வெளியாகின்றன. ஆளுநரின் கடமைகளைச் செயலாற்ற முதல்வரும், அமைச்சர்களும் அரசியலமைப்புச் சட்டப்படி உதவுகிறார்கள். அரசாங்கத்தின் செயல்பாடுகள்மீது தனக்கு வருத்தமிருந்தால், முதல்வரையே நேரடியாக அழைத்துக் கேள்வி கேட்பதற்கு ஆளுநருக்கு அதிகாரமிருக்கிறது. அதை விடுத்து, ஒரு பொது நிகழ்வில் மேடையேறி, ‘வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ-வுக்கு ஏன் உடனடியாக மாற்றவில்லை?’ என்று ஆளுநர் பேசுவது, அவரது உள்நோக்கத்தைத்தான் வெளிப்படுத்துகிறது.

கடந்தகாலச் சம்பவங்களோடு ஒப்பிடும்போது, கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு ஒன்றும் தாமதமாக என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்கப்படவில்லை. மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில், மிஸ்தான் பந்தர் ஏரியாவில் கடந்த ஜனவரி 31-ம் தேதி வெடிகுண்டு வெடித்தது. இந்த வழக்கில், மார்ச் 4-ம் தேதிதான் என்.ஐ.ஏ முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கியது. கடந்த ஜனவரி 4-ம் தேதி, மேற்கு வங்கத்தின் கெஜுரியில் நிகழ்ந்த வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த வழக்கு ஜனவரி 25-ம் தேதிதான் என்.ஐ.ஏ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

ஆளுநருடையது... கீழ்த்தரமான, பச்சையான அத்துமீறல்!

மிசோரம் மாநிலத்தின் டுர்ட்லேங் நகரில், கடந்த மார்ச் 18-ம் தேதி நிகழ்ந்த வெடி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். தொடக்கத்தில், வாகன சிலிண்டர் வெடி விபத்தாகத்தான் இது அறியப்பட்டது. ஆனால், வாகனத்தின் டிரைவர் இருக்கையில் ஏராளமான வெடி பொருள்களுக்கான மூலப்பொருள்கள் இருந்ததை அந்த மாநில போலீஸார் பிற்பாடு கண்டறிந்தனர். இந்த வழக்கு, நான்கு மாதங்கள் கழித்து, ஜூலை 20-ம் தேதிதான் என்.ஐ.ஏ விசாரணை வளையத்துக்குப் போனது. ஆனால், கோவை கார் குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த மூன்றாவது நாளே, என்.ஐ.ஏ விசாரணைக்கு வழக்கைப் பரிந்துரைத்தது தமிழ்நாடு அரசு. சம்பவத்தின் தன்மையை போலீஸார் ஊர்ஜிதப்படுத்திக் கொள்வதற்குக்கூட அவகாசம் தராமல், ‘கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ-விடம் ஒப்படைப்பதில் நான்கு நாள்கள் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது’ என்றும் ‘உயர்மட்ட பயங்கரவாதச் சதித்திட்டத்தில் முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது’ என்றும் ஆளுநர் பேசியிருப்பது, அவரின் ஐ.பி.எஸ் பின்புலத்துக்குக் கொஞ்சம்கூட ஏற்புடையது அல்ல.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

நம்மிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “கோவை கார் விபத்து தொடர்பாகத் தனக்கு இருக்கும் கேள்விகளைத் தலைமைச் செயலாளரையோ, காவல்துறை தலைவரையோ அழைத்து ஆர்.என்.ரவி கேட்டுத் தெளிவு பெற்றிருக்க வேண்டும். ஆனால், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்போலப் பொதுவெளியில் பேசியிருப்பது அப்பட்டமான அதிகாரத் திமிர். வெளிப்படையாகவே, ‘மாநில அரசுமீது போர் தொடுத்திருக்கிறேன்’ எனப் பிரகடனப்படுத்தியிருக்கிறார். இதில் ஆளுநர் நடந்துகொண்டதெல்லாம் கீழ்த்தரமான, பச்சையான அத்துமீறல்தான். தமிழ்நாடு அரசுக்கு முடிந்த அளவு தொல்லை கொடுக்கலாம் என்ற நோக்கத்தோடு அரசியல்ரீதியாக ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களிடையே அரசியல் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அதிகார அத்துமீறலில் யாரேனும் ஈடுபடுவார்களேயானால் அதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று வெடித்தார்.

தூங்கும் மசோதாக்கள்... ஆளுநருக்கு என்ன அருகதை?

என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிட காலதாமதமானதாகக் கொதித்திருக்கும் ஆளுநர், தன் மேஜையில் நீண்ட மாதங்களாக நிலுவையிலிருக்கும் சட்ட மசோதாக்கள் குறித்து மறந்தும் வாய் திறப்பதில்லை. இதுவரை, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன. கூட்டுறவுச் சட்டத் திருத்தம், துணைவேந்தரை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதாக்கள் உள்ளிட்டவை மீது நூலாம்படையே படர்ந்துவிட்டது. சமீபத்தில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடைச்சட்ட மசோதாவும் ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்துக்கிடக்கிறது.

செந்தில்குமார்
செந்தில்குமார்

இது குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க-வைச் சேர்ந்த தருமபுரி எம்.பி செந்தில்குமார், “தன் மேஜையில் நீண்டகாலமாகச் சட்ட மசோதாக்களை நிலுவையில் வைத்திருக்கும் ஓர் ஆளுநர், ‘என்.ஐ.ஏ விசாரணையை ஏன் தாமதமாக வழங்கினீர்கள்?’ எனக் கேட்பதற்கு என்ன அருகதை இருக்கிறது... அரசியலைமைப்புச் சட்டத்தின்படி ஆர்.என்.ரவி செயல்படவில்லை என்பதைவிட, அதற்கு எதிராகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்பதுதான் உண்மை. தமிழ்நாட்டில், ஒன்றிய அரசின் கொள்கைகளைத் திணிப்பதில் தமிழக பா.ஜ.க-வுக்குப் போட்டியாக ஆர்.என்.ரவி செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். அதற்கு இனி தி.மு.க இடம் கொடுக்காது.

ஆர்.என்.ரவி தன்னுடைய வேலையை மட்டும் பார்த்தால் போதும். அரசாங்கம் எப்படி நடத்த வேண்டும் என்பதை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பார்த்துக்கொள்வார்” என்றார் சூடாக.

தமிழகத்தில் ஆளுநர் கவனம் செலுத்துவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பு வெளியாகி ஏழு வருடங்கள் ஆகின்றன. அதற்கு அடிக்கல் நாட்டி மூன்று வருடங்களாகின்றன. ஆனால், இன்னும் கட்டுமானப் பணிகளையே தொடங்கவில்லை. மத்தியத் தொகுப்பிலிருந்து தமிழகத்துக்குக் கிடைக்கவேண்டிய நிதி, தொடர்ந்து காலதாமதமாகவே வந்துகொண்டிருக்கிறது. அதேபோல, மத்தியத் தொகுப்பிலிருந்து மின்சாரம், நிலக்கரி கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. தான் செல்லுமிடமெல்லாம், கன்னா பின்னாவெனப் பேசி ‘அரசியல்’ செய்துவரும் ஆளுநர், இவை பற்றியெல்லாம் வாய் திறப்பதே இல்லை. ஆக்கபூர்வமாகச் செய்வதற்கு ஆயிரம் வேலைகள் இருக்கின்றன. இனியேனும் அநாவசியப் பேச்சுகள், சர்ச்சைகளைத் தவிர்ப்பாரா ஆளுநர்?

****

இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

பிரிவினை... அரசியல்... சர்ச்சை... கன்னாபின்னா கவர்னர்!

“மாநிலங்களுக்கு ஆளுநர் தேவையே இல்லை என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. அதிகாரிகளாக இருந்தவர்களை ஆளுநர்களாக நியமிப்பதால், இப்போது இருக்கும் அதிகாரிகள் எதிர்காலத்தில் தாங்களும் ஆளுநர் ஆகிவிடலாம் என பா.ஜ.க-வுக்கு இணக்கமாகச் செயல்படத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழ்நாட்டு அரசியலில் மூக்கை நுழைத்து, குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் ஆர்.என்.ரவியைத் தமிழ்நாட்டின் ஆளுநராகக் கொண்டுவந்திருக்கிறார்கள். தமிழ்நாடு பா.ஜ.க செய்யவேண்டியதை, பேச வேண்டியதையே ஆர்.என்.ரவியும் பேசிக்கொண்டிருக்கிறார். இது ஆளுநரின் வரம்பை மீறிய செயல்!” - பாக்கியராசன், செய்தித் தொடர்பாளர், நாம் தமிழர் கட்சி.

பிரிவினை... அரசியல்... சர்ச்சை... கன்னாபின்னா கவர்னர்!

“தமிழ்நாடு ஆளுநர் தனக்கென ஒரு வரையறை வைத்துக்கொண்டு செயல்படுகிறார். ஆனால், ஆளுநரைப் பொறுத்தவரை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படிதான் செயல்பட வேண்டும். அப்படிச் செயல்படவில்லையென்றால் யாராக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.” - டி.ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.

பிரிவினை... அரசியல்... சர்ச்சை... கன்னாபின்னா கவர்னர்!

“தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது புகார் கொடுப்பதற்குத் தேவைப்பட்ட ஆளுநர், ஆளுங்கட்சியாக ஆன பிறகு எப்படித் தேவையில்லாதவராக மாறிவிட்டார்... தமிழ்நாட்டில் தி.மு.க எதையெல்லாம் தங்களின் சித்தாந்தமாக முன்வைத்ததோ, அதற்கு மாற்றுக் கருத்தை ஆளுநர் முன்வைக்கிறார். திராவிடம் என்ற பெயரில் கால்டுவெல் உருவாக்கிய பொய்யான கருத்துகளுக்கு ஆணித்தரமான மாற்று, பொதுவான கருத்துகளை எடுத்துக் கூறுகிறார். தி.மு.க-வின் இரட்டை வேட அரசியலுக்கு எதிரான கருத்துகளைத் தொடர்ந்து ஆதாரத்துடன் அவர் வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதால், ஆளுநர்மீது அவதூறுகளைப் பரப்புகிறார்கள். மசோதாக்களில் இருக்கும் குறைகளைச் சுட்டிக்காட்டுவது தி.மு.க-வினருக்கு நெருடலாக இருக்கிறது. தாங்கள் என்ன சொன்னாலும் பின்பாட்டுப் பாடும் தி.மு.க கூட்டணிக் கட்சிகள்போல, தலையாட்டி பொம்மையாகவோ, பேசா மடந்தையாகவோ இருக்க ஆளுநர் நியமிக்கப்படவில்லை.” - வானதி சீனிவாசன், மகளிரணி தேசியத் தலைவர், பா.ஜ.க.

பிரிவினை... அரசியல்... சர்ச்சை... கன்னாபின்னா கவர்னர்!

“கோவை கார் வெடிப்புச் சம்பவத்தை முன்வைத்து இஸ்லாமிய அமைப்புகள்மீதும், அவர்களுக்கு ஆதரவாக நிற்கும் அமைப்புகள்மீதும் தவறான எண்ணங்களை விதைக்கப் பார்க்கிறார் ஆளுநர். ஒரு சம்பவம் நடக்கும்போது அதன் மூலம் யார் பயனடைகிறார்கள் என்பதை முதலில் பார்க்க வேண்டும். தமிழகத்தில் மதம் சார்ந்த பிரச்னை எழும்போதெல்லாம் பா.ஜ.க-தான் பயனடைகிறது. அப்படித்தான் கோவைச் சம்பவத்திலும் பார்க்க வேண்டும். இதில் அரசியல் ஆதாயம் அடைய நினைப்பவர்களே குற்றவாளிகள். தற்போது கைதுசெய்யப்பட்டவர்கள் வாயைத் திறந்தால் சிலரின் முகமூடி கிழிக்கப்படும். அதனால்தான், ஆளுநர் இப்படிப் பேசுகிறாரோ என்ற எண்ணம்கூடத் தோன்றுகிறது. மாநிலத்தின் அமைதிக்கு எதிராகவும், சட்டத்துக்கு விரோதமாகவும் செயல்படும் ஓர் ஆளுநர் நமக்குத் தேவையில்லை. அவரை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்.” - மல்லை சத்யா, மாநிலத் துணைப் பொதுச்செயலாளர், ம.தி.மு.க.