Published:Updated:

கவர்னர் கான்வாய் முதல் கள்ளக்குறிச்சி வரை... தடுமாறும் உளவுத்துறை!

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையை நான்கு நாள்களுக்கு முன்பாகவே எடுத்திருந்தால், இவ்வளவு பெரிய கலவரம் ஏற்பட்டிருக்காது.

கவர்னர் கான்வாய் முதல் கள்ளக்குறிச்சி வரை... தடுமாறும் உளவுத்துறை!

பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையை நான்கு நாள்களுக்கு முன்பாகவே எடுத்திருந்தால், இவ்வளவு பெரிய கலவரம் ஏற்பட்டிருக்காது.

Published:Updated:
ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

“அரசின்மீது நம்பிக்கைவைத்து அமைதி காக்க வேண்டுகிறேன்..!” ஆட்சி அமைத்த ஒன்றரை வருடத்தில், எந்தத் தருணத்திலும் இவ்வளவு உருக்கமாக முதல்வர் ஸ்டாலின் வேண்டிக்கொண்டதில்லை. ஆனால், கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் தொடர்பான வன்முறைச் சம்பவம் அவரை உலுக்கிவிட்டது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர உள்துறைச் செயலாளர், காவல்துறை டி.ஜி.பி ஆகியோரை நேரில் அனுப்பிவைக்கும் அளவுக்கு நிலைமை முற்றியிருக்கிறது. “இதுவரை எந்தப் பிரச்னைக்கும் உள்துறைச் செயலரையோ, காவல்துறை இயக்குநரையோ சம்பவ இடத்துக்கு முதல்வர் அனுப்பிய வரலாறு இல்லை. இந்தச் சம்பவத்தில் அரசின்மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது என முதல்வருக்கே தோன்றியிருக்கிறது. இந்த அளவுக்குப் பிரச்னை கைமீறிச் சென்றதற்குக் காரணம், மாநில உளவுத்துறையின் மெத்தனமான செயல்பாடுகள்தான். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மட்டுமல்ல, கடந்த ஒன்றரை வருடத்தில் பெரும்பாலான இடங்களில் உளவுத்துறை பலவீனமாக சறுக்கியிருக்கிறது” என்கிறார்கள் சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்!

கவர்னர் கான்வாய் முதல் கள்ளக்குறிச்சி வரை... தடுமாறும் உளவுத்துறை!
கவர்னர் கான்வாய் முதல் கள்ளக்குறிச்சி வரை... தடுமாறும் உளவுத்துறை!

“மிகவும் வேதனையாக இருக்கிறது!”

மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யக் கோரி, மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் 18.07.2022 அன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, “நடந்த அனைத்தையும் நாங்கள் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டுதான் இருந்தோம். இது, திடீர் கோபத்தில் வெடித்த வன்முறையாகத் தெரியவில்லை. திட்டமிட்டு நடத்தப்பட்டதுபோல் தெரிகிறது. வன்முறையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதைச் சிறப்புப் படை அமைத்து அரசு கண்டுபிடிக்க வேண்டும். விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும். காவல்துறை யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. நீங்கள்தான் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். உங்கள் உளவுத்துறை அறிக்கை என்ன சொல்கிறது... நீதிமன்றங்களுக்கு இணையாகச் சிலர் சமூக ஊடகத்தில் விசாரணை நடத்துகிறார்கள். அப்படியானால் நீதிமன்றங்கள் எதற்கு இருக்கின்றன... அப்படிச் செய்தவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்... நிலைமையைப் பார்க்க மிகவும் வேதனையாக இருக்கிறது” என அரசையும் காவல்துறையையும் நீதிபதிகள் வறுத்தெடுத்துவிட்டனர்.

திரண்ட 5,000 பேர்... கோட்டைவிட்ட உளவுத்துறை!

கள்ளக்குறிச்சி, கணியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவி ஜூலை 13-ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். பள்ளியின் மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக, பள்ளி நிர்வாகம் கூறியது. மாணவி உயிரிழந்ததில் சந்தேகம் இருப்பதாக மாணவியின் பெற்றோரும் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நான்கு நாள்களாகப் போராட்டம் தொடர்ந்த நிலையில், அரசுத் தரப்பிலிருந்து போராட்டக்காரர்களைச் சமாதானப்படுத்தும் எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

இதற்கிடையே, ‘மாணவி நம் சமூகத்தைச் சேர்ந்தவர். அவரின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்... கள்ளக்குறிச்சிக்குக் கிளம்பி வாருங்கள்’ என்கிற போராட்ட அழைப்பு ஒன்று வாட்ஸ்அப்பில் வேகமாகப் பரவியது. டெல்டாவைச் சேர்ந்த சில அரசியல் பிரமுகர்கள்தான் இந்தப் பிரசாரத்தைத் தொடங்கிவைத்தது. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த இளைஞர்களால் வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டு, உள்ளூரிலும் ஆள் திரட்டும் படலம் தொடங்கியது. ‘கும்பல் கூடுகிறது. அலர்ட்டாக இருங்கள்...’ என விழுப்புரம் மாவட்ட உளவுத்துறை அளித்த எச்சரிக்கையை, மாநில உளவுத்துறையும் காவல்துறையும் கோட்டைவிட்டுவிட்டன என்கிறார்கள் மூத்த காவல்துறை அதிகாரிகள்.

கவர்னர் கான்வாய் முதல் கள்ளக்குறிச்சி வரை... தடுமாறும் உளவுத்துறை!
கவர்னர் கான்வாய் முதல் கள்ளக்குறிச்சி வரை... தடுமாறும் உளவுத்துறை!

நம்மிடம் பேசிய காவல்துறை டி.ஐ.ஜி ஒருவர், “ஜூலை 17-ம் தேதி காலை 8 மணிக்கு, பள்ளியின் வாசலில் 1,000 பேருக்கு மேல் திரண்டுவிட்டனர். ஆனால், பாதுகாப்புக்கு 50 போலீஸார்தான் நிறுத்தப்பட்டிருந்தனர். அப்போதே போலீஸ் சுதாரித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களைக் கைதுசெய்திருக்க வேண்டும் அல்லது கூடுதலாகக் காவலர்களை வரவழைத்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்திருக்காது. நேரம் செல்லச் செல்ல, கும்பல் 5,000 பேர் கொண்ட கூட்டமாக மாறிவிட்டது. தென் மாவட்டங்களிலிருந்து சுமார் 500 பேர் போராட்டத்துக்கு வந்திருக்கிறார்கள். இவர்கள், விழுப்புரத்திலிருந்து பஸ் மூலமாகத்தான் வந்துள்ளனர். இதைக்கூடக் கண்டுபிடித்து அலர்ட் கொடுக்கவில்லை உளவுத்துறை.

எங்கே சறுக்கியது உளவுத்துறை?

பள்ளியின் பக்கவாட்டுச் சுற்றில், ஓர் ஆள் நுழையும் அளவுக்குச் சிறு பாதை இருந்திருக்கிறது. அதன் வழியாக உள்ளே நுழைந்த போராட்டக்காரர்கள், பள்ளி வளாகத்துக்குள் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளுக்குத் தீ வைத்ததோடு பள்ளியையும் தீயிட்டுக் கொளுத்தி, உடைமைகளைச் சூறையாடினார்கள். இதைத் தொடர்ந்து கலவரம் பெரிதாகப் பரவியது. சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்துக்கும், லோக்கல் அரசியல் புள்ளிகளுக்கும் ஏற்கெனவே மனக்கசப்பு இருந்திருக்கிறது. அவர்களும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டார்கள். சமூகரீதியாகச் செய்யப்பட்ட பிரசாரம், தென் மாவட்டங்களிலிருந்து ஆட்கள் பஸ்ஸில் திரண்டு வந்தது, பைக்கில் ஊர்வலமாக வந்தது, லோக்கலில் கூட்டம் திரண்டது, வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாக இளைஞர்கள் ஒருங்கிணைக்கப்பட்டது, கலவரத்துக்கு முன்பு பள்ளி வளாகத்தின் பின்னால் வன்முறைக்குத் திட்டமிட்டது, சமூக வலைதளங்களில் அஜித், விஜய், சூர்யா ரசிகர்கள் என்ற போர்வையில் கலவரத்தைத் தூண்டும்விதமாக எழுதப்பட்ட பதிவுகள் என எதையுமே உளவுத்துறை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான் வேதனை.

கவர்னர் கான்வாய் முதல் கள்ளக்குறிச்சி வரை... தடுமாறும் உளவுத்துறை!
கவர்னர் கான்வாய் முதல் கள்ளக்குறிச்சி வரை... தடுமாறும் உளவுத்துறை!

விவகாரம் பெரிதாகப் பற்றி எரியவே, உடனடியாக டி.ஜி.பி-யை அனுப்பிவைத்த முதல்வர், வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கும் மாற்றியிருக்கிறார். பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையை நான்கு நாள்களுக்கு முன்பாகவே எடுத்திருந்தால், இவ்வளவு பெரிய கலவரம் ஏற்பட்டிருக்காது. உளவுத்துறையின் சறுக்கலே இந்தப் பிரச்னை பூதாகரமாக வெடித்ததற்கு முழுமுதற் காரணம்” என்றார் விரிவாக.

“மாநில உளவுத்துறை, முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. காலை, மதியம், மாலை என மூன்று நேரங்களில் முதல்வருக்கு உளவுத்துறை ரிப்போர்ட் அனுப்பப்படுகிறது. சட்டம்-ஒழுங்கை பாதிக்கும் விஷயங்களை உரிய நேரத்தில் கணித்து, முதல்வருக்கு அறிக்கை அனுப்பவேண்டிய உளவுத்துறை, கடந்த ஒன்றரை ஆண்டில் பல்வேறு சந்தர்ப்பங்களில் தோல்வியடைந்திருக்கிறது” என்கிறார்கள் உளவுத்துறையின் முன்னாள் மூத்த அதிகாரிகள்.

ஆளுநர் முதல் ஆதீனம் வரை!

இது குறித்து நம்மிடம் பேசிய முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஒருவர், “உளவுத்துறையின் தோல்விக்குப் பல்வேறு சம்பவங்களை உதாரணமாகச் சொல்லலாம். அரியலூரைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை விவகாரத்தில் புகுந்து, பா.ஜ.க-வும், ஏ.பி.வி.பி-யும் அதை மதப்பிரச்னையாக தேசிய அளவில் எடுத்துச் சென்றன. அதன் ஒரு பகுதியாக, கடந்த பிப்ரவரியில் முதல்வர் ஸ்டாலின் இல்லத்தையே முற்றுகையிட்டு ஏ.பி.வி.பி மாணவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, பல்வேறு கட்சியினர் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் வரும் சாலையில் கண்டன முழக்கமிட்டு கோஷங்களை எழுப்பினர். அப்போது ஆளுநர் கான்வாய்மீது கறுப்புக்கொடி வீசி எறியப்பட்டது பெரிய அளவில் சர்ச்சையானது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தருமபுர ஆதீன பட்டினப்பிரவேசத் தடை விவகாரத்திலும் அப்படித்தான் நடந்தது. முதலில் தடை செய்து, பிறகு பின்வாங்கியது அரசு. ‘யாருக்கும் தெரியாமல் இருந்த பல்லக்குத் தூக்கும் நிகழ்ச்சியை அனைவருக்கும் கொண்டுசேர்க்கும் வகையில் செய்த அரசுக்கு நன்றி’ என ஆதீனம் நக்கலாகச் சொல்லும் அளவுக்கு ஆனது அந்த விவகாரம்.

40 கோடி ரூபாய் அளவுக்கு ஜி.எஸ்.டி மோசடியில் ஈடுபட்டதாக, சொய் யோங் சுக் மற்றும் சோ ஜெவோன் என இரு தென் கொரியர்கள் கைதுசெய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இவர்கள் தப்பிச் செல்லத் திட்டமிட்டிருப்பதாக உள்ளூர் காவல் நிலையத்தில், அவர்களிடம் ஓட்டுநராகப் பணி புரிந்தவர் புகார் அளித்திருந்தார். ஆனாலும், அவர்கள் சரியாகக் கண்காணிக்கப்படாததால், இருவரும் வீட்டுக் காவலிலிருந்து தப்பிச் சென்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம், நீடூரைச் சேர்ந்த இக்காமா சாதிக் பாஷா என்பர், கிளாஃபா பார்ட்டி ஆஃப் இந்தியா, கிளாஃபா ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா, ஐ.எஸ்.ஐ (Intellectual Students of India) ஆகிய அமைப்புகளைத் தொடங்கி, பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கு, தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு அவருக்குச் சொந்தமான ஒன்பது இடங்களில் சோதனை நடந்தது. இந்தச் சோதனை நடப்பதற்கு முன்புவரை இப்படியான சோதனை நடக்கவிருப்பது குறித்து உளவுத்துறைக்குத் தெரிந்திருக்கவில்லை. இந்த ஐந்து சம்பவங்களிலுமே உளவுத்துறையின் தோல்வி அப்பட்டமாகத் தெரிகிறது.

கவர்னர் கான்வாய் முதல் கள்ளக்குறிச்சி வரை... தடுமாறும் உளவுத்துறை!

தொடர்ந்த போராட்டம்... உறக்கத்தில் உளவுத்துறை?

சமீபத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, மக்கள் நல்வாழ்வுத்துறை, வீட்டுவசதி வாரியத்துறை ஆகிய இரண்டின் மீது ஊழல் புகார்களை முன்வைத்தார். இது குறித்த எந்த விவரத்தையும் உளவுத்துறை அரசுக்கு முன்கூட்டியே சொல்லவில்லை. ஜூன் 14-ம் தேதி, பணி நிரந்தரம் செய்யக் கோரி மக்கள் நலப் பணியாளர்கள் சைதாப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் அனுமதித்த நேரத்தையும் தாண்டி, நான்கு நாள்கள் வரை போராட்டம் நீடித்தது. அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதை முன்கூட்டியே உளவுத்துறை கணிக்கத் தவறிவிட்டது.

அ.தி.மு.க அலுவலகத்தில் நடந்த கலவர விஷயத்திலும் அப்படித்தான். ஒரு தரப்பு வெளி மாவட்டத்திலிருந்து தன் ஆட்களை அழைத்து வந்திருப்பதையும், அவர்கள் தலைமைக் கழகத்தில் பிரச்னையில் ஈடுபடப் போவது குறித்தும் உளவுத்துறை அலர்ட் கொடுக்கவில்லை. விளைவு, ‘தி.மு.க-வுக்கும் ஓ.பி.எஸ்-ஸுக்கும் கூட்டு’ என்கிற விமர்சனம் உருவானது” என்றார் விரிவாக.

டேவிட்சன் தேவாசீர்வாதம்
டேவிட்சன் தேவாசீர்வாதம்

விழித்துக்கொள்வாரா முதல்வர்?

நம்மிடம் பேசிய மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர், “டிசம்பர் 1992-ல், தமிழ்நாட்டின் உளவுத்துறைத் தலைவராக அலெக்ஸாண்டர் நியமிக்கப்பட்டார். அவரை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் ‘blue eyed boy’ என்பார்கள். அந்த அளவுக்கு அவரின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார் அலெக்ஸாண்டர். 1995-ல், சுப்பிரமணியன் சுவாமிக்கும் ஜெயலலிதாவுக்கும் மோதல் ஏற்பட்டு, ஜெயலலிதா மீது 178 பக்கப் புகார்க் கடிதத்தை சி.பி.ஐ-யிடம் கொடுத்தார் சுவாமி. இதை முன்கூட்டியே கண்டறிந்து ஜெயலலிதாவுக்கு அலெக்ஸாண்டர் சொல்லவில்லை. அந்தப் புகார் கடிதத்தின் நகல்கூட அலெக்ஸாண்டர் வசம் இல்லை. தவிர, ‘ஜெயலலிதா மீது விசாரணையைத் தொடங்க ஆளுநர் சென்னா ரெட்டி ஒப்புதல் அளித்துவிட்டார்’ என்று சுப்பிரமணியன் சுவாமி சொல்லும் வரை, அந்தத் தகவலும் உளவுத்துறைக்குத் தெரியாது. வெகுண்டெழுந்த ஜெயலலிதா, அலெக்ஸாண்டரைப் பயிற்சிப் பள்ளிக்கு மாற்றினார். தொடர்ந்து நடக்கும் உளவுத்துறையின் தோல்விகள் இந்தச் சம்பவத்தை நினைவூட்டுகின்றன.

திருக்குறளில் ‘ஒற்றாடல்’ குறித்துத் தனி அதிகாரமே எழுதியிருக்கிறார் திருவள்ளுவர். உளவுத்துறை தோல்வியடையும்போது அது ஆளும் அரசையும் பெரிய அளவில் பாதிக்கும். சமீபத்தில், போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் உளவுத்துறை ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதத்தின் பெயரும் அடிபட்டது. ‘அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்’ என பா.ஜ.க-வினர் ஆளுநரிடமே புகாரளித்தனர். ஆனால், முதல்வர் ஸ்டாலின் ‘இது அரசியல்ரீதியிலான குற்றச்சாட்டு. பார்த்துக்கொள்ளலாம்’ என டேவிட்சனுக்கு ஆதரவாகத்தான் நின்றார். ஆனால், சமீபத்திய கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உளவுத்துறை கோட்டைவிட்டது முதல்வரை உஷ்ணமாக்கியிருக்கிறது. டி.ஜி.பி சைலேந்திரபாபுவை நேரடியாகக் கட்டுப்பாடு எடுக்க உத்தரவிட்டார் முதல்வர். இவ்வளவு தொடர் உளவுச் சொதப்பல்களுக்குப் பிறகும், குடும்ப உறுப்பினர்களின் தயவு டேவிட்சனுக்கு இருக்கிறது. எல்லாவற்றுக்கும் ஓர் எல்லை இருக்கிறதல்லவா?” என்றனர்.

சட்டம்-ஒழுங்குப் பிரச்னை, கருத்தியல்ரீதியிலான பின்வாங்கல்கள், அரசியல்ரீதியிலான விமர்சனங்கள் என ஆளும் அரசு எதிர்கொண்டுவரும் இந்தச் சிக்கல்களுக்கெல்லாம் காரணம் உளவுத்துறையின் செயல்பாடுகளே. உளவுத்துறையின் தோல்வி, நேரடியாக அரசின் தோல்வியாகத்தான் பார்க்கப்படும்.

‘எல்லார்க்கும் எல்லாம் நிகழ்வை எஞ்ஞான்றும்

வல்லறிதல் வேந்தன் துணை’ என்கிறார் வள்ளுவர். இந்தக் குறள் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்கு பரிச்சயமானதாகவே இருக்கும். இந்த இடத்தில் இந்தக் குறளை மீண்டும் நினைவூட்ட வேண்டியிருக்கிறது!