Published:Updated:

உள்ளாட்சித் தேர்தல்... ரோஷமான குத்துச்சண்டை ஆரம்பம்!

உள்ளாட்சித் தேர்தல்
பிரீமியம் ஸ்டோரி
உள்ளாட்சித் தேர்தல்

‘அ.தி.மு.க கூட்டணியிலிருந்து முதல்ல வெளியே வாங்க. அவங்க மேல நாங்க நடவடிக்கை எடுக்கும்போதெல்லாம், உங்களுக்குத்தான் அந்த அசிங்கம் ஏற்படுது.

உள்ளாட்சித் தேர்தல்... ரோஷமான குத்துச்சண்டை ஆரம்பம்!

‘அ.தி.மு.க கூட்டணியிலிருந்து முதல்ல வெளியே வாங்க. அவங்க மேல நாங்க நடவடிக்கை எடுக்கும்போதெல்லாம், உங்களுக்குத்தான் அந்த அசிங்கம் ஏற்படுது.

Published:Updated:
உள்ளாட்சித் தேர்தல்
பிரீமியம் ஸ்டோரி
உள்ளாட்சித் தேர்தல்

தேர்தல் திருவிழா களைகட்டிவிட்டது. விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதால், அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துவிட்டது. ‘நாம் தமிழர் கட்சி’, ‘மக்கள் நீதி மய்யம்’ உள்ளிட்ட கட்சிகள் தனித்தே தேர்தல் வேலையை ஆரம்பித்துவிட்ட நிலையில், அ.தி.மு.க கூட்டணியிலிருந்து பா.ம.க-வும், அ.ம.மு.க கூட்டணியிலிருந்து தே.மு.தி.க-வும் விலகியிருக்கின்றன. பொதுவாக, தேர்தல் வந்தால் கூட்டணிகள் உருவாகும். ஆனால், இப்போது கூட்டணிகள் பிரிகின்றன. ‘அ.தி.மு.க-வுடன் கரம்கோத்திருந்த ராமதாஸ், திடீரென தனி ரூட் போட்டதன் மர்மம் என்ன... தி.மு.க - அ.தி.மு.க இருவரில் யார் கை ஓங்கப்போகிறது?’ எனப் பல கேள்விகள் அரசியல் சூறாவளியைக் கிளப்பியிருக்கின்றன!

சரியாக பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த செப்டம்பர் 13-ம் தேதி மாலையில் வெளியாகியிருக்கிறது, உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு. அக்டோபர் 6, 9 தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் ஆகிய நான்கு பதவிகளுக்குத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தச் சூழலில், தமிழக அரசியல் கட்சிகளின் உள்ளாட்சித் தேர்தல் வியூகம் என்ன? விசாரணையில் இறங்கினோம்...

ராமதாஸின் இரண்டு கணக்குகள்!

சமீபத்தில் நடைபெற்ற பா.ம.க நிர்வாகிகள் கூட்டத்தில், “2019-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல், 28 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல் ஆகிய மூன்று தேர்தல்களிலும் அ.தி.மு.க கூட்டணியால் பா.ம.க-வுக்கு எந்த லாபமும் இல்லை” என்று வெளிப்படையாகவே நிர்வாகிகளிடம் கூறியிருக்கிறார் ராமதாஸ். “தருமபுரி, சேலம் மாவட்டங்கள் தவிர்த்து, மற்ற பகுதிகளில் பா.ம.க-வுக்கு அ.தி.மு.க-வின் வாக்குகள் மடைமாறவில்லை. நாம் தனித்துச் சென்றால்தான் நம் பலத்தை நிரூபிக்க முடியும்” என்று கூட்டத்தில் வெடித்திருக்கிறார் அவர்.

ராமதாஸின் இந்த விலகல் பின்னணியில் இரண்டு கணக்குகள் முன்வைக்கப்படுகின்றன. நம்மிடம் பேசிய பா.ம.க நிர்வாகிகள் சிலர், “உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கும் ஒன்பது மாவட்டங்களில், திருநெல்வேலி, தென்காசி தவிர ஏனைய ஏழு மாவட்டங்கள் வட தமிழகத்தில் வருகின்றன. வன்னியர் சமூக மக்கள் கணிசமாக வாழும் இந்த மாவட்டங்களில், பா.ம.க-வின் வாக்குவங்கியும் குறிப்பிடும்படி இருக்கிறது. அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டால், குறைந்த இடங்களைத்தான் பா.ம.க-வுக்கு ஒதுக்குவார்கள். அப்படிப் போட்டியிடும் இடங்களிலும் அ.தி.மு.க-வின் வாக்குகள் பா.ம.க-வுக்கு மடைமாறப் போவதில்லை. ‘தனித்துப் போட்டியிட்டு வாக்கு சதவிகிதத்தை நிலைநிறுத்திக் கொண்டால், 2024 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பேரத்தில் நினைத்த எண்ணிக்கையில் சீட் கிடைக்கும்’ என்பது ராமதாஸின் முதல் கணக்கு.

தோட்டத்துக்கு வந்த ‘சர்ப்ரைஸ் போன் கால்’!

இரண்டாவது கணக்கு, துரைமுருகனின் போன் கால் வழியே உருவானது. தன் இளைய மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு, பத்திரிகை வைக்க பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி வந்தபோது, ‘அ.தி.மு.க தலைவர்கள் மேல எவ்வளவு ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்குன்னு உங்களுக்குத் தெரியும். தெரிஞ்சும், இன்னும் ஏன் அ.தி.மு.க கூட்டணியில் இருக்கீங்க?’ என்று அன்புமணியின் மனதில் கல்லெறிந்திருக்கிறார் ஸ்டாலின். இந்தத் தகவல் ராமதாஸுக்குச் சொல்லப்பட்டது. ஆனாலும், அவர் ரியாக்‌ஷன் ஏதும் காட்டவில்லை. திருமண வரவேற்புக்கு இரண்டு நாள்கள் முன்னதாக தைலாபுரம் தோட்டத்துக்கு அமைச்சர் துரைமுருகனிடமிருந்து ‘சர்ப்ரைஸ்’ போன் கால் வந்திருக்கிறது.

போனில் ராமதாஸிடம் பேசிய துரைமுருகன், ‘அ.தி.மு.க கூட்டணியிலிருந்து முதல்ல வெளியே வாங்க. அவங்க மேல நாங்க நடவடிக்கை எடுக்கும்போதெல்லாம், உங்களுக்குத்தான் அந்த அசிங்கம் ஏற்படுது. எங்ககூட கூட்டணியெல்லாம் நீங்க வெச்சுக்க வேணாம். தனியாவே நில்லுங்க’ என்று உரிமையுடன் பேசியிருக்கிறார். 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போதே, பா.ம.க-வைக் கூட்டணிக்குக் கொண்டுவர துரைமுருகன் முயன்றார். 2021 சட்டமன்றத் தேர்தலுக்கும் முயன்றார். எதுவும் பலனளிக்கவில்லை. அப்போது தைலாபுரத்தோடு துரைமுருகன் ஏற்படுத்திக்கொண்ட நட்புறவு, இன்று அவர் பேச்சுக்கு ராமதாஸை இணங்கவைத்திருக்கிறது. இதற்குப் பிரதி உபகாரமாக, தோட்டம் போட்ட சில நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டிருக்கிறது துரைமுருகன் தரப்பு. இந்த டீல் சரியாக முடிந்ததால்தான் ராமதாஸ் இல்லத் திருமண வரவேற்புக்கு ஸ்டாலின் தன் அமைச்சர் பரிவாரங்களுடன் நேரில் வந்து வாழ்த்தினார்” என்றனர்.

இதற்கிடையே, நெல்லை, தென்காசி இரண்டு மாவட்டங்களில் பா.ம.க-வுக்குக் கட்டமைப்பு ரீதியாக இருக்கும் பின்னடைவைச் சரிக்கட்ட, ‘தமிழக ஜனநாயக மக்கள் கட்சி’த் தலைவர் ஜான் பாண்டியனைத் தன்னுடன் கூட்டணியில் வைத்துக்கொள்ளத் தீர்மானித்திருக்கிறாராம் ராமதாஸ்.

உள்ளாட்சித் தேர்தல்... ரோஷமான குத்துச்சண்டை ஆரம்பம்!

திண்டாட்டத்தில் கமல்... உற்சாகத்தில் சீமான்!

பா.ம.க-வின் ரூட் தடாலடி என்றால், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலின் ரூட் கிறுகிறுக்கவைக்கிறது. 2019-ல் நடைபெற்ற 28 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்காத கமல், இந்த ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார். ஆனால், வேட்பாளரைப் போடுவதில்தான் அவருக்குச் சிக்கல்கள் முளைத்துள்ளன. நம்மிடம் பேசிய ம.நீ.ம மண்டல நிர்வாகி ஒருவர், “ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் என இந்த இரண்டு பதவிகளுக்கு மட்டுமே 1,521 பேரை வேட்பாளர்களாகக் கட்சி சார்பில் நிறுத்த வேண்டும். நிதி மற்றும் வேட்பாளர் பற்றாக்குறை கமலைக் கிறுகிறுக்கவைத்திருக்கிறது. கிராமசபைக் கூட்டங்களை முதலில் கையில் எடுத்தவர் கமல்தான். அதைத்தான் எதிர்க்கட்சியாக இருந்தபோது தி.மு.க கைப்பற்றிக்கொண்டது. கிராம சபைகளைத் தொடர்ந்து நடத்தியிருந்தால், இந்நேரம் கட்சி வலுப்பெற்றிருக்கும். வாய்ப்பைக் கோட்டைவிட்டுவிட்டு, இப்போது திண்டாடுகிறார் கமல்” என்று குமுறினார். இந்த விமர்சனங்களைத் தாண்டி, தீவிர பிரசார சுற்றுப்பயணத்துக்குத் தயாராகிறாராம் கமல்.

வழக்கம்போல இந்தத் தேர்தலிலும் தனித்தே போட்டியிட ‘நாம் தமிழர் கட்சி’ முடிவெடுத்துள்ளது. 2019 உள்ளாட்சித் தேர்தலில், தனித்துப் போட்டியிட்டு 30 ஊராட்சி மன்றத் தலைவர் இடங்களையும், கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கவுன்சிலர் பதவியையும் கைப்பற்றியது அந்தக் கட்சி. அந்தத் தெம்பில் தற்போது வேட்பாளர் பட்டியலையும் இறுதிசெய்து, கட்சியினரை முடுக்கிவிட்டிருக்கிறாராம் சீமான். “சட்டமன்றத் தேர்தலில் 30 லட்சம் வாக்குகள் பெற்றும், ஒரு எம்.எல்.ஏ நாற்காலியைக்கூடக் கைப்பற்ற முடியவில்லை. ஆனால், உள்ளாட்சித் தேர்தல் அப்படியல்ல. நமக்கான பலத்தை நிரூபிக்க முடியும்” என்று கட்சி சீனியர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார் அவர். 2021 சட்டமன்றத் தேர்தலில் 6.6 சதவிகித வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சி, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மூலமாக, இரண்டு பெரிய கட்சிகளுக்குக் குடைச்சல் கொடுக்கத் தயாராகிறது.

‘நாட் ரீச்சபுள்’ தினகரன்... நட்டாற்றில் அ.ம.மு.க!

இந்த உள்ளாட்சித் தேர்தலில், பெரும் நெருக்கடியைச் சந்தித்திருப்பது அ.ம.மு.க-தான். கூட்டணியிலிருந்த தே.மு.தி.க-வும் வெளியேறிவிட்டது. நெல்லை, தென்காசியைத் தவிர்த்து, ஏனைய ஏழு மாவட்டங்களில் அ.ம.மு.க-வுக்குச் சொல்லிக்கொள்ளும்படியாக ஆட்களும் இல்லை. தன் மகள் திருமணத்தில் தினகரன் பிஸியாக இருப்பதால், அவரைத் தொடர்புகொள்வதிலும் கட்சி நிர்வாகிகளுக்குச் சிக்கல் எழுந்திருக்கிறது. மாவட்டச் செயலாளர்கள் எப்போது அழைத்தாலும் ‘நாட் ரீச்சபுள்’ என்றே தினகரனின் போன் எண் பதில் தருகிறதாம். ஆக மொத்தத்தில் நட்டாற்றில் நிற்கிறது அ.ம.மு.க.

பழைய வாக்குவங்கி கிடைக்குமா? - பதற்றத்தில் தே.மு.தி.க!

நம்மிடம் பேசிய தே.மு.தி.க மாநில நிர்வாகி ஒருவர், “வடக்கில் எப்போதுமே தே.மு.தி.க-வுக்கு என ஒரு வாக்குவங்கி உண்டு. கடந்த தேர்தலில் அதை இழந்துவிட்டோம். ஒருகாலத்தில் 10 சதவிகிதம் வாக்குவங்கி வைத்திருந்த இந்தக் கட்சி, இப்போது இரண்டு சதவிகிதத்தைக்கூடத் தொட முடியவில்லை. பழைய வாக்குவங்கியை மீட்டெடுப்பதே இப்போது எங்கள் லட்சியம். நிச்சயமாக அதற்குக் கடுமையாக உழைக்க வேண்டும். விஜயகாந்த் மருத்துவச் சிகிச்சைக்காக வெளிநாட்டில் இருப்பதால், எல்லா முடிவுகளையும் கட்சியின் பொருளாளரான பிரேமலதாதான் எடுக்கிறார். இந்த முறையாவது சரியான நேரத்தில் சரியான முடிவை அவர் எடுப்பார் என்று நம்புகிறோம். அ.ம.மு.க-வுக்காகக் காத்திருப்பது பிரயோஜனம் இல்லை என்பதால்தான் தனித்துக் களமிறங்கிவிட்டோம்” என்றார்.

தி.மு.க - அ.தி.மு.க வியூகம் என்ன?

உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதில் தெம்பாக இருக்கிறது தி.மு.க. ஆளுங்கட்சி என்கிற ஆயுதம் ஒருபக்கம் இருந்தாலும், தேர்தலைச் சந்திக்கவிருக்கும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், மொத்தமுள்ள 35 சட்டமன்றத் தொகுதிகளில் 28 தொகுதிகளை தி.மு.க கூட்டணிதான் கைப்பற்றியிருக்கிறது. அதேபோல, திருநெல்வேலி, தென்காசியிலுள்ள 10 தொகுதிகளில், ஆறு தொகுதிகள் தி.மு.க கூட்டணி வசமுள்ளன. வன்னியர் இட ஒதுக்கீட்டை நடைமுறைக்குக் கொண்டுவந்தது, இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் இறந்தவர்களுக்கு மணிமண்டபம், அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம் உள்ளிட்ட விஷயங்கள் வட தமிழகத்தில் தி.மு.க-வின் செல்வாக்கைக் கணிசமாக உயர்த்தியிருக்கின்றன. தவிர, அ.தி.மு.க-விலிருந்து பா.ம.க வெளியேறியிருப்பதால், இப்போதே வெற்றிபெற்றுவிட்ட மிதப்பிலிருக்கிறது தி.மு.க.

தி.மு.க-வின் கூட்டணிக் கட்சிகளுக்கு நகராட்சி, மாநகராட்சித் தேர்தல் வரும்போது பிரதிநிதித்துவம் அளிக்கலாம் என முடிவெடுத்ததாம் அறிவாலயம். ஆனால் வி.சி.க தலைவர் திருமாவளவனும், தமிழகக் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் அழுத்தம் கொடுப்பதால், கூட்டணிக் கட்சிகளுக்குக் குறிப்பிட்ட சதவிகித இடங்களைப் பிரித்துக்கொடுக்க ஸ்டாலின் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்.

தி.மு.க டாப் கியரில் செல்ல, அ.தி.மு.க-வோ முடங்கிப்போயிருக்கிறது. அந்தக் கட்சியின் சார்பில் ஒன்பது மாவட்டத்துக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அதில், திருப்பத்தூர் மாவட்டப் பொறுப்பாளர் கே.சி.வீரமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு பாய்ந்ததால், மாவட்டக் கழகமே முடங்கிப்போய்விட்டது. இதர மாவட்டங்களிலும் தேர்தல் வேலை சூடுபிடிக்கவில்லை. கொடநாடு வழக்கால் எடப்பாடியும், தன் மனைவியின் இறப்பால் ஓ.பன்னீர்செல்வமும் ஆளுக்கொரு பக்கம் முடங்கிப்போயிருக்கிறார்கள். வேட்பாளர் பட்டியலை முன்கூட்டியே தேர்வுசெய்து வைக்குமாறு ஒன்பது மாவட்டக் கழக நிர்வாகிகளுக்கும் அ.தி.மு.க தலைமை அறிவுறுத்தியிருந்தது. ஆனால், பெரும்பாலான மாவட்டங்களில் அந்தப் பணி தொடங்கப்படவே இல்லை. பா.ஜ.க., த.மா.கா-வை மட்டும் நம்பிக் களமிறங்குகிறார் எடப்பாடி. கிராமப்புறங்களில் கட்டமைப்பு இல்லாத அவர்களும் வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள் என்பதுதான் சோகம்.

நம்மிடம் பேசிய அ.தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவர், “கூட்டணியிலிருந்து பா.ம.க பிரிந்ததை இழப்பாகக் கருதத் தேவையில்லை. பொதுவாக வட மாவட்டங்களிலுள்ள வன்னியர் அல்லாத பிற சமூக மக்கள், பட்டியல் சமூக மக்கள் அ.தி.மு.க-வுக்கு கணிசமாக வாக்களித்தார்கள். கடந்த தேர்தலில், பா.ம.க எங்கள் கூட்டணியில் இருந்ததால், அந்த வாக்குகள் தி.மு.க-வுக்குச் சென்றுவிட்டன. இந்த முறை, நாங்கள் இழந்த அந்த வாக்குகள் மீண்டும் எங்களுக்கு வரும். தன் தலைமையை நிரூபிக்கவேண்டிய நெருக்கடியும் எடப்பாடிக்கு ஏற்பட்டிருக்கிறது. சகல வித்தைகளையும் களமிறக்க அவரும் தயாராகிவிட்டார்” என்றார்.

உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை பெரிய பிரச்னையே குதிரைப் பேரம்தான். உதாரணத்துக்கு, புதுக்கோட்டையில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களாக தி.மு.க-வினர் அதிகமாக ஜெயித்திருந்தனர். ஆனால், மாவட்ட ஊராட்சித் தலைவராக அ.தி.மு.க உறுப்பினர் தேர்வானார். இந்த குதிரைப் பேரம் ஸ்வீட் பாக்ஸ்களின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்பதால், உள்ளாட்சித் தேர்தல் குத்துச்சண்டை தீவிரமாகியிருக்கிறது.

தன்னை நிரூபிக்கத் தீவிரமாகிவருகிறார் எடப்பாடி பழனிசாமி. ஆட்சிக்கு நற்பெயர் இருக்கிறது என நிரூபணம் செய்யப்பார்க்கிறார் ஸ்டாலின். இதர கட்சிகள் தங்கள் வாக்குவங்கியை நிரூபிக்க வேண்டும் என முனைப்பு காட்டுகின்றன. கிட்டத்தட்ட குத்துச்சண்டை ரிங்குக்குள் இறக்கிவிடப்பட்ட வீரர்களைப்போல, அத்தனை கட்சிகளும் தரையில் கால்பாவாமல் அடவுகட்டுகின்றன. உள்ளாட்சித் தேர்தல் எனும் ரோஷமான குத்துச்சண்டை ஆரவாரமாக ஆரம்பித்துவிட்டது!

இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

“கடந்த வாரம் ஏழு மாவட்ட நிர்வாகிகளுடன் அய்யா ராமதாஸ் காணொலி மூலம் கலந்துரையாடினார். அப்போது, அத்தனை நிர்வாகிகளும் ‘தனித்துப் போட்டியிட்டால், நிறைய பதவிகளைக் கைப்பற்ற முடியும்’ என்றனர். அதற்கு அய்யா ஒப்புக்கொண்டதால், தனித்தே களம் காண்கிறோம்.”

- ஷேக் முகைதீன், சிறுபான்மைப் பிரிவு மாநிலச் செயலாளர், பா.ம.க.

ஷேக் முகைதீன், முரளி அப்பாஸ், பாக்கியராஜன்
ஷேக் முகைதீன், முரளி அப்பாஸ், பாக்கியராஜன்

“தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே ஒன்பது மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்களை கமல் அறிவித்துவிட்டார். அந்தந்த மாவட்டங்களில் வேட்பாளர்கள் தேர்வும் நடந்துவருகிறது. தமிழகம் முழுவதும் கிராம அளவில் நிர்வாகிகள் நியமனப் பணிகள் வேகமெடுத்திருக்கின்றன.”

- முரளி அப்பாஸ், செய்தித் தொடர்பாளர், மக்கள் நீதி மய்யம்.

“உள்ளாட்சித் தேர்தலில், பெண் வேட்பாளர்களுக்கு 50 சதவிகித இடமளிக்க முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. பொது என்று அறிவிக்கப்பட்ட இடங்களில் ஆதி திராவிடர்களை நிறுத்துவதும், அரசியல் அதிகாரத்தைச் சுவைக்காத பிரிவினர்களைக் களமிறக்கவும் தீர்மானித்திருக்கிறோம்.”

- பாக்கியராஜன், செய்தித் தொடர்பாளர், நாம் தமிழர் கட்சி.