அரசியல்
அலசல்
Published:Updated:

அடாவடி அமைச்சர்கள்... அதிகாரத் திமிர்... அடக்குவாரா முதல்வர்?

அடாவடி அமைச்சர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
அடாவடி அமைச்சர்கள்

‘ஓ... குறவர் சமுதாயமா நீங்க... அவங்களை உங்களோட சேர்க்கிறதுனால என்ன பிரச்னை’ என்று கேட்டுக்கொண்டே, கால் மேல் கால் போட்டுக்கொண்டார்.

“கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு!” - தி.மு.க-வைத் தோற்றுவித்த அண்ணா, தன் கட்சித் தம்பிகளுக்கு வலியுறுத்திய தாரக மந்திரம். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, மேடைகளில் இந்த வாசகத்தை அடிக்கோடிடாமல் தனது உரையை நிறைவுசெய்ததில்லை. தற்போதைய தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினும், “கடமை - கண்ணியம் - கட்டுப்பாடுதான் கழகத்தவருக்கு அழகு” எனப் பேசிவருகிறார். ஆனால், அவரின் அமைச்சரவையில் இருக்கும் பலரிடம் கண்ணியமும் கட்டுப்பாடும் மிகப்பெரிய கேள்விக்குறியாகியிருக்கின்றன. ‘அமைச்சர்கள் தங்களின் கடமைகளைச் சரிவரச் செய்கிறார்களா?’ என்கிற கேள்வி ஒருபுறமிருக்க, பொதுவெளியில் அவர்கள் அதிகாரத் திமிரோடும், ஆணவத்தோடும் நடந்துகொள்ளும் அவலம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. சுயமரியாதை, சமத்துவம், சமூகநீதியைத் தனது பிரதான கொள்கையாக மேடைக்கு மேடை முழங்கும் தி.மு.க-வில், ஆண்டை மனோபாவமும் சாதி சார்ந்த இழிவுப் பார்வையும் வெளிப்படுவது பெரும் அதிர்ச்சி தருகிறது!

2021 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான மறுதினம், சென்னை ஜெ.ஜெ நகரிலுள்ள ‘அம்மா உணவக’த்தின் பெயர்ப் பலகை, ஜெயலலிதா புகைப்படம் அடங்கிய பேனர்கள் தி.மு.க தொண்டர்கள் சிலரால் கிழித்து அகற்றப்பட்டன. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்த, சம்பந்தப்பட இரு தி.மு.க-வினரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கியதோடு, கைதுசெய்யவும் உத்தரவிட்டார் ஸ்டாலின். ‘சொந்தக் கட்சியினராகவே இருந்தாலும் பொதுவெளியில் அநாகரிகமாக நடந்துகொண்டால் நடவடிக்கை இப்படித்தான் இருக்கும் என ஒரு சாம்பிள் காட்டியிருக்கிறார் ஸ்டாலின்’ என அப்போது பேசப்பட்டது. வழக்கமாக `தி.மு.க ஆட்சியின்மீது முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் இடமிருக்காது’ என அதன் மூலம் ஒரு பிம்பத்தைக் கட்டமைத்தார். ஆனால், இன்று நடப்பவையெல்லாம் அதற்கு நேர்மாறாக இருக்கின்றன. மனு கொடுக்க வரும் பெண்ணைத் தலையில் அடித்தது, பொது மேடையில் பெண் பிரதிநிதியிடம் சாதியைக் கேட்டுக் கூனிக் குறுகவைத்தது, தன்னிடம் கோரிக்கை மனுவளிக்க வந்த ஓர் அமைப்பின் பிரதிநிதியை மரியாதையற்று சாதிய மனோ நிலையில் அணுகியது, அரசுத் திட்டங்களில் பயன்பெறும் பெண்களை இழிவாகப் பேசியது எனத் தமிழக அமைச்சர்கள் பலரின் சமீபத்திய நடவடிக்கைகள் அடாவடியாகவும், அநாகரிக மாகவும், திமிராகவும் இருக்கின்றன.

அடாவடி அமைச்சர்கள்... அதிகாரத் திமிர்... அடக்குவாரா முதல்வர்?

“தள்ளி நின்னு பேசு...” - இழிவு செய்த ராமச்சந்திரன்?

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தன்னைச் சந்திக்க வந்த குறவர் பழங்குடியின மக்களின் பிரதிநிதிகளையும், தென்காசி (தனி) நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமாரையும் மரியாதைக் குறைவாக நடத்தியதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து ‘வனவேங்கைகள் கட்சி’யின் தலைவர் இரணியனிடம் பேசினோம். “எங்களது கட்சி, பழங்குடி மக்களுக்கான கட்சி. தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டுவருகிறது. `நரிக்குறவர்’ என அடையாளமிட்டு, நரிக்காரர் சமூகத்தினரைப் பழங்குடியினப் பட்டியலில் சேர்க்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. அவர்களுக்கான உரிமை கிடைப்பதை வரவேற்கிறோம். அதேசமயத்தில், அதை எங்கள் குறவர் சமூகத்தின் அடையாளத்துடன் வழங்காதீர்கள் என்றுதான் கேட்கிறோம். அதற்காகத்தான், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள மலையடிப்பட்டியில் வன வேங்கைகள் கட்சியின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினோம். தொகுதி தி.மு‌.க எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன் எங்களைச் சந்தித்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார். போராட்டத்தைக் கைவிடச் சொல்லி காவல்துறையும் அழுத்தம் கொடுத்தது. ‘முதலமைச்சர் உங்களைச் சந்திக்க வரச் சொல்லிவிட்டார். நீங்கள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை அவரது சென்னை இல்லத்தில் சந்தியுங்கள்’ என்றனர். இதற்காக என் தலைமையில், 13 பேர் அமைச்சரின் கிரீன்வேஸ் சாலை வீட்டுக்கு செப்டம்பர் 23-ம் தேதி காலை 11 மணிக்குச் சென்றோம். மதியம் 3 மணி வரை காத்திருந்த பிறகு, அமைச்சர் எங்களை உள்ளே அழைத்தார். அவரைச் சுற்றிலும் ஏழு பேர் அமரக்கூடிய அளவில் இருக்கைகள் இருந்தும், எங்களை மரியாதைக்குக்கூட அவர் அமரச் சொல்லவில்லை.

இரணியன்
இரணியன்

நான் அளித்த மனுவை வாங்கியவர், சைகையாலேயே ‘என்ன?’ என்றார். ‘நாங்க குறவர் சமூகம். ஒரு வாரமா உண்ணாவிரதப் போராட்டம் நடத்துறோம். முதலமைச்சரை நேரில் சந்திச்சு மனு கொடுக்கணும். எம்.எல்.ஏ தங்கபாண்டியனும், லோக்கல் டி.எஸ்.பி-யும் உங்களை வந்து பார்க்கச் சொன்னாங்க’ என்றேன். ‘ஓ... குறவர் சமுதாயமா நீங்க... அவங்களை உங்களோட சேர்க்கிறதுனால என்ன பிரச்னை’ என்று கேட்டுக்கொண்டே, கால் மேல் கால் போட்டுக்கொண்டார். உடனே நான், ‘முதலமைச்சர் சந்திப்பார்னு எங்ககிட்ட சொன்னதாலதான், உங்களைப் பார்க்க வந்தோம். இது பத்து வருஷ கோரிக்கை. எப்படியாவது முதலமைச்சர்கிட்ட இதை எடுத்துட்டுப் போகணும்’ என்றபடி, நான் அளித்த மனுவின் அடுத்த பக்கத்தைத் திருப்பிப் பார்க்குமாறு அவரின் அருகே செல்ல முயன்றேன். சட்டென ஏறிட்டவர் உடனே, ‘தள்ளி நில்லு. தள்ளி நின்னு பேசு’ என்று உரத்த குரலில் கடுகடுத்தார் அமைச்சர். எனக்கு அதிர்ச்சி யாகிவிட்டது. எங்கள் சமுதாய மக்களுக்காக அனைத்தையும் சகித்துக்கொண்டோம்.

அடாவடி அமைச்சர்கள்... அதிகாரத் திமிர்... அடக்குவாரா முதல்வர்?

‘நீ நினைச்ச நேரத்துலல்லாம் முதலமைச்சரைப் பார்க்க முடியாது. முதலமைச்சர் வீடு என்ன உன் அப்பன் வீடா... அதுக்குனு ஒரு வரைமுறை இருக்கு’ என எங்களை ஏற இறங்கப் பார்த்த அமைச்சர், ‘மனுவைக் கொடுத்துட்டுப் போங்க. என்ன பண்ணலாம்னு பார்க்குறேன்’ என்று கிளம்பச் சொன்னார். ‘முதலமைச்சரை எப்படியாவது ஒரு ஐந்து நிமிடம் சந்திக்க அனுமதி வாங்கித் தாங்க. எங்களை ஏமாத்தி வரச் சொல்லிட்டாங்க’ என்று வெளிப்படையாகவே கெஞ்சினேன். ஆனால், அவர் அதைக் காதுகொடுத்துக்கூடக் கேட்கவில்லை. அமைச்சருடன் 15 நிமிடங்கள் பேசினோம். ஒவ்வொரு நிமிடமும் அவர் சாதிய மனோபாவத்துடன்தான் எங்களுடன் பேசினார், நடந்துகொண்டார். நாங்கள் வாங்கிச் சென்ற பூங்கொத்து, சால்வையைக்கூட அவர் பெற்றுக்கொள்ளவில்லை. இதையறிந்த எங்கள் சமூக மக்கள் ராஜபாளையத்தில் சாலைமறியலில் ஈடுபட்டனர். கூட்டத்தைக் கலைக்க போலீஸ் தடியடி நடத்தியதில், எங்கள் மக்கள் பலர் காயமடைந்தனர். சமூகநீதி, சமத்துவநீதி என முதல்வர் ஸ்டாலின் பேசிவருகிறார். ஆனால், அவர் பேச்சுக்கு நேர் எதிராகத்தான் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் செயல்பாடுகள் இருந்தன. அமைச்சர்மீது விரைவில் வழக்கு தொடுக்கவிருக்கிறோம். முதல்வரைச் சந்திக்கும் வரை, எங்கள் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை” என்றார் விரிவாக.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, விருதுநகர் மாவட்டம் பாலவநத்தம் கிராமத்துக்குச் சென்ற ராமச்சந்திரனிடம், மனு கொடுக்கவந்த கலாவதி என்கிற பெண்ணை, அந்த மனுவாலேயே அமைச்சர் தலையில் அடிக்கும் வீடியோ வெளியானது. இந்த விவகாரம் சூடாகி அமைச்சருக்கு எதிராக விமர்சனங்கள் எழவும், அந்தப் பெண்ணைவைத்தே அமைச்சருக்கு ஆதரவாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டனர். `அவர் உறவுக்காரப் பெண். அனைவரிடமும் சகஜமாகப் பழகுவேன்’ என அமைச்சர் சப்பைக்கட்டு கட்டினாலும், அவரின் தொடர்ச்சியான இந்தச் செயல்பாடுகள் அதிகாரத் திமிரோடும், ஆணவப்போக்கோடும் அவர் நடந்துகொள்வதையே காட்டுகிறது.

“அமைச்சர் தனது சமூகம் சார்ந்த சங்கக் கூட்டங்களில் கலந்துகொண்டு, தனது சாதிக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகப் பெருமிதமாகப் பலமுறை பேசியிருக்கிறார். அவர் எப்போதுமே இப்படித்தான்” என்கிறார்கள் தி.மு.க-வினரே.

அடாவடி அமைச்சர்கள்... அதிகாரத் திமிர்... அடக்குவாரா முதல்வர்?

“ஓசி பஸ்ஸுலதானே போறீங்க?” - எகத்தாளமாகப் பேசிய பொன்முடி!

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தை அடுத்துள்ள மணம்பூண்டியில் நியாயவிலைக் கடையின் கட்டடத் திறப்புவிழா செப்டம்பர் 19 -ம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், முகையூர் ஒன்றியக்குழுத் தலைவர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். திருக்கோவிலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான க.பொன்முடி இந்த விழாவில் கலந்துகொண்டு, கட்டடத்தைத் திறந்துவைத்துப் பேசினார். அப்போது, பெண்களுக்கு, `திராவிட மாடல்’ முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதைக் கூறிய பொன்முடி, ‘ஒன்றியக்குழுத் தலைவரே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்தான்’ என்று கூறியதோடு, அந்தப் பெண்ணைப் பார்த்து, “ஏம்மா… நீ எஸ்.சி-தானே?” என்று கேட்க, அவரும் என்ன செய்வதெனத் தெரியாமல் எழுந்து நின்று “ஆமாம்” என்றார். இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. அரசு நிகழ்ச்சி மேடையில், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்கள், பொதுமக்கள் முன்னிலையில் ஒரு மாநிலத்தின் உயர்கல்வித்துறை அமைச்சர் இப்படி சாதியைக் கேட்பது எந்த வகையில் நியாயம்?

“வெறும் கண்டனங்களோடு முடிந்துவிடக் கூடியதல்ல இந்தப் பிரச்னை. தமிழக அரசு, பொன்முடியை அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். பொது இடத்தில் தலித் சமூகப் பெண்ணைச் சாதி கேட்ட வன்கொடுமைக்காக, பொன்முடி மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்கிற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், இந்தச் சர்ச்சை ஓய்வதற்குள்ளாகவே அடுத்த சர்ச்சையில் சிக்கினார் பொன்முடி. சமீபத்தில் கட்சி விழா ஒன்றில் பேசியவர், பெண்களின் இலவசப் பேருந்துப் பயணத்தைக் குறிப்பிட்டு “ஓ.சி-யிலதானே போறீங்க?” எனக் கேட்டு அனைவரையும் முகம் சுளிக்க வைத்தார். ``அம்மா உணவகம், கலைஞர் உணவகம்போல, ‘ஸ்டாலின் பஸ்’ என்றே பெண்கள் இலவசப் பேருந்துப் பயணத் திட்டப் பேருந்துகளை அழைத்து வருகிறார்கள். முதல்வருக்கு ஒரு கௌரவமான பெயரைக் கொடுத்திருக்கும் இந்தத் திட்டத்தை, எவ்வளவு இழிவாக விவரிக்க முடியோ அப்படி விவரித்தார். அதுமட்டுமல்ல, இலவசத் திட்டங்களை எதிர்த்து, பா.ஜ.க தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தாமாகச் சென்று எதிர்த்தரப்பில் இணைத்துக்கொண்ட கட்சியின் அமைச்சர், இலவசத் திட்டங்கள் குறித்து இப்படிப் பேசுவது முறையா?’’ எனக் கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

அடாவடி அமைச்சர்கள்... அதிகாரத் திமிர்... அடக்குவாரா முதல்வர்?

`யாரையும் குற்றவாளி ஆக்குவார்...” - நேருவின் அதிர்ச்சிப் பேச்சு!

மனு கொடுக்க வரும் பொதுமக்களை, தங்களைச் சந்திக்க வரும் மாற்று அமைப்பின் நிர்வாகிகளை மட்டுமல்ல, மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும் தி.மு.க அமைச்சர்கள் நடத்தும்விதம் சர்ச்சையாகிக் கொண்டேதான் இருக்கிறது. சென்னை தினத்தை முன்னிட்டு, மாநகராட்சிப் பள்ளி மாணவர் களுக்குப் பரிசளிக்கும் விழாவில் அமைச்சர் நேரு, சென்னை மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது மேயர் பிரியாவை, அமைச்சர் நேரு ஒருமையில் பேசியது மிகப்பெரிய சர்ச்சையானது. `பட்டியலினப் பெண் மேயர் என்பதால் பிரியாவை அமைச்சர் இப்படிப் பேசுகிறார். இது சாதி மற்றும் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு’ என அமைச்சருக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், ``நான் ஒருமையில் பேசவில்லை, உரிமையில் பேசினேன்” எனச் சமாளித்தார். ஆனால், ‘‘இதுவே தி.மு.க தலைவரின் வாரிசாக இருந்தால் அமைச்சர் இப்படிப் பேசுவாரா?’’ என மாற்றுக் கட்சியினர் நேருவை விமர்சித்தனர்.

காவல்துறை அதிகாரி ஒருவரின் திறமையைப் புகழ்ந்து பேசுவதாக நினைத்து ‘அவரின் திறமை என்னவென்றால், ஒருவரைக் குற்றவாளியாக ஆக்கவும் முடியும், குற்றவாளிப் பட்டியலிலிருந்து நீக்கவும் முடியும்’ என்று கூறி அனைவரையும் அதிர்ச்சியடையவைத்தார் அமைச்சர் நேரு. ஏற்கெனவே காவல்துறைமீது மக்களுக்குப் பல்வேறு விஷயங்களில் அவநம்பிக்கைகள் இருந்துவரும் சூழலில், அமைச்சரின் பேச்சு எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போலிருக்கிறது.

அடாவடி அமைச்சர்கள்... அதிகாரத் திமிர்... அடக்குவாரா முதல்வர்?

“அரசு ஊழியர்களை அடியுங்கள்!” - கொக்கரித்த துரைமுருகன்

சமீபத்தில், நகராட்சித் திட்டப்பணிகள் குறித்தான ஆய்வுக் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அமைச்சர்கள் பெரியசாமி, கே.என்.நேரு, சக்கரபாணி ஆகியோர் கலந்துகொண்டனர். புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பான விவாதம் வந்தபோது, “மாநகராட்சிக்குச் சொந்தமாக 15 ஏக்கர் இடம் இருக்கிறது. அதற்குக் கூடுதலாக இடம் வேண்டுமென்றால், அருகிலிருப் பவர்களின் இடத்தை எடுத்துக்கொண்டு நஷ்ட ஈடு வழங்காமல் பேருந்து நிலையத்தை ஆரம்பித்து விடலாம்” என்றார் பெரியசாமி. நில அபகரிப்பை அமைச்சரே ஊக்கப்படுத்துவதுபோல பேசியது, அங்கிருந்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது. அதேபோல, உரத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் விவசாயிகள் பக்கத்து மாவட்டத்துக்குச் சென்று உரம் வாங்கி வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திடம் பத்திரிகை யாளர்கள் கேள்வியெழுப்ப, “எந்த விவசாயி அப்படிச் சொன்னான்... உரம் நீ வாங்குறியா?” என ஒருமையில் பதிலளித்தார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், கூட்டணிக் கட்சியான வி.சி.க-வுக்கு இடம் ஒதுக்குவது குறித்த பேச்சுவார்த்தையின்போது, கடலூர் மாவட்ட வி.சி.க நிர்வாகிகளை நிற்கவைத்துப் பேசியதாகவும், அவர்களுக்கு இருக்கைகூட வழங்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.

அடாவடி அமைச்சர்கள்... அதிகாரத் திமிர்... அடக்குவாரா முதல்வர்?

சமீபத்தில் அமைச்சர் பெரியகருப்பன் பத்திரிகையாளர் ஒருவரை மிரட்டியபடியே அடிக்கப் பாய்ந்தார். அமைச்சர் எ.வ.வேலு, `நிலம் இல்லாதவன்கூட, ஒரு பச்சைத் துண்டைப் போட்டுக்கொண்டு நிலத்தை எடுக்கக் கூடாது என்கிறான்’ என்று விவசாயிகளைக் கொச்சைப்படுத்தும் விதமாகப் பேசினார். அமைச்சர் துரைமுருகனோ ஒருபடி மேலே போய், ‘விதியை மீறிச் செயல்படும் போக்குவரத்து அரசு ஊழியர்களை அடியுங்கள் பார்த்துக்கொள்ளலாம்; வேலையைவிட்டும் தூக்கிவிடலாம்’ என்று பேசினார். அதேபோல தமிழகக் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தன்னிடம் மனு கொடுக்க வந்தவர்களை அடிக்கப் பாய்ந்தார். இப்படியாக அமைச்சர்களின் அடாவடிப் பேச்சுகளின், செயல்பாடுகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

அடாவடி அமைச்சர்கள்... அதிகாரத் திமிர்... அடக்குவாரா முதல்வர்?

இவ்வளவு சம்பவங்கள் வெளிப்படையாக நடந்த பின்னும், அதைச் சரிசெய்வதற்குரிய வழிகளைப் பார்க்காமல், அமைச்சர்கள் உள்ளிட்ட தி.மு.க-வினர் பேசும் செய்திகளை மற்றவர்கள் திரித்து வெளியிடுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட் டிருக்கிறார் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின். இது நிச்சயம் அடாவடி அமைச்சர்களை ஊக்குவிக்கவே செய்யும். பி.டி.ஓ ஒருவரைச் சாதியைச் சொல்லித் திட்டியதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது புகார் எழுந்தபோது, அவருக்கு உட்சபட்ச தண்டனையாகத் துறையை மாற்றிக்கொடுத்தார்கள். எவ்வளவு கொடிய தண்டனை?! அதனால்தானோ என்னவோ, அடுத்தடுத்து இதே போன்று அமைச்சர்களின் அடவாடிகள், திமிர்ப் பேச்சுகள் தொடர்கின்றன.

அடாவடி அமைச்சர்கள்... அதிகாரத் திமிர்... அடக்குவாரா முதல்வர்?

“இப்படியான சர்ச்சைகளின்போது அமைச்சர்கள் பலரும் சொல்வது, ‘உரிமையில் பேசினேன்’, ‘அன்பில் அடித்தேன்’, ‘எனக்கு அவர் பிள்ளை மாதிரி’ போன்ற வார்த்தைகளைத்தான். அதிகாரத் திமிரில் அனைத்தையும் செய்துவிட்டு `அன்பு’ என்ற போர்வைக்குள் ஒளிந்துகொள்வதை ஏற்க முடியாது. மேலும், சமூகநீதி என்கிற பெரும் கனவை முன்வைத்தே தி.மு.க-வுக்கு வாக்களித்திருக்கிறார்கள் மக்கள். ஆனால், தொடர்ச்சியான இந்தச் சாதிய அவமதிப்புகள், மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றன” என்கிறார்கள் தி.மு.க-வுடன் கூட்டணியிலிருக்கும் முக்கிய ஆளுமைகள்.

அடாவடி அமைச்சர்களின் செயல்பாட்டுக்கு இனியேனும் கடிவாளம் போடுவாரா ஸ்டாலின்?

*****

“என்னை அவர் அப்பானுதான் கூப்பிடுவார்!”

- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

“என்மீதான குற்றச்சாட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகச் சொல்லப்படுகிறது. தனுஷ்குமார் எம்.பி-யை எனக்குச் சின்ன வயசிலிருந்தே தெரியும். நானும், அவங்க அப்பாவும் நெடுங்கால நண்பர்கள். தனுஷ்குமார் பிறந்தது, படிச்சது, வளர்ந்தது எல்லாம் எனக்கு நல்லாத் தெரியும். சொல்லப்போனா, நானும் தனுஷ்குமாரும் தந்தை - மகன் உறவாத்தான் பழகிவர்றோம். என்னை அவர் `அப்பா’னுதான் கூப்பிடுவார். அதனால, யாரையும் சிறுமைப்படுத்தணும்னு எதுவும் இங்க நடக்கலை. நான், யாரையும் வேறுபடுத்திப் பார்க்கிற ஆள் கிடையாது!”