சினிமா
தொடர்கள்
Published:Updated:

எந்தக் கட்சி எதிர்க்கட்சி? - அரசியல் ரிலே ரேஸ்

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டாலின்

‘‘எப்பவுமே இங்க அ.தி.மு.க., தி.மு.க மட்டும்தான். பா.ஜ.க எங்கேயோ ஒரு கூட்டம் போட்டால் ஐயாயிரம் பேர், பத்தாயிரம் பேர் கூடுவது பெரிதல்ல.

``அ.தி.மு.க-வை எந்தக் கொம்பனாலும் அசைத்துப்பார்க்க முடியாது'' என்கிறார் எடப்பாடி பழனிசாமி. ‘‘சட்டமன்றத்தில் அ.தி.மு.க எதிர்க்கட்சியாக இருக்கலாம். ஆனால், நாங்கள்தான் ஆக்டிவ்வான எதிர்க்கட்சி'' என்கிறார்கள் தமிழக பா.ஜ.க தலைவர்கள். ‘‘நாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி. தி.மு.க-வை எதிர்க்கும் வலிமை எங்களுக்கு மட்டுமே உண்டு'' என்கிறார், பா.ம.க தலைவராகப் பதவியேற்றுள்ள அன்புமணி ராமதாஸ்.

வழக்கமாக ‘அடுத்த முதல்வர் யார்' என்றுதான் அடித்துக்கொள்வார்கள். தி.மு.க ஆட்சிக்கு வந்து ஓராண்டே நிறைவடைந்திருக்கும் நிலையில், பிரதான எதிர்க்கட்சி யார் என்பதற்கான போட்டி கடந்த சில மாதங்களாகவே அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் நடந்துவந்தது. ‘2026-ல் அன்புமணியை முதல்வர் ஆக்குவோம்' என டாக்டர் ராமதாஸ் தன் மகனுக்குக் கட்சித் தலைவர் பதவியைக் கொடுத்து, அந்தப் போட்டியில் அவரையும் ஓட விட்டிருக்கிறார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒன்றாகக் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டவைதான் மூன்று கட்சிகளும். 75 இடங்களைப் பிடிக்க இந்தக் கூட்டணியே காரணம். தமிழகத்தின் மேற்கில் கணிசமாகவும், தெற்கில் சில இடங்களிலும் அ.தி.மு.க வெற்றிகளை அடைவதற்கு பா.ஜ.க காரணம். தர்மபுரி, சேலம், கடலூர் மாவட்டங்களில் பா.ம.க இதற்கு உதவியது.

எந்தக் கட்சி எதிர்க்கட்சி? - அரசியல் ரிலே ரேஸ்

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கூட்டணியில் கசப்புணர்வு வெளிப்பட்டது. ‘‘நாம் அ.தி.மு.க-வின் வெற்றிக்கு உதவியதைப் போல அவர்கள் நமக்கு உதவி செய்யவில்லை'' என ஐந்தே தொகுதிகளில் வென்ற அதிருப்தியில் சொன்னார் ராமதாஸ். ‘‘பா.ஜ.க-வைக் கூட்டணியில் சேர்த்ததால்தான் தோற்றோம்'' என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டினார். ‘‘அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்ததால்தான் பா.ஜ.க தோற்றது'' என்று கே.டி.ராகவன் பதிலடி கொடுத்தார். வழக்கம் போல ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து ‘கூட்டணி தொடரும்' என்று அறிக்கைவிட்டு இந்தப் பஞ்சாயத்துகளை முடித்துவைத்தார்கள்.

இப்போது தமிழக அரசியலில் மிகப்பெரிய சஸ்பென்ஸ், அ.தி.முக., பா.ஜ.க., பா.ம.க கூட்டணி தொடர்கிறதா என்பதுதான். சமீபத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் மூன்று கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டன.

என்றாலும், தற்போது நடந்து முடிந்த மாநிலங்களவைத் தேர்தலில் சி.வி.சண்முகம், தர்மர் என அ.தி.மு.க நிறுத்திய இரண்டு வேட்பாளர்களுக்கே பா.ஜ.க-வும் பா.ம.க-வும் ஆதரவு அளித்தன. அதன்பிறகுதான் மூன்று கட்சிகளுக்குள் முட்டல், மோதல். இதை ஆரம்பித்து வைத்தவர் அ.தி.மு.க சீனியர் தலைவர் பொன்னையன். ‘‘தமிழகத்தில் அ.தி.மு.க-வே பிரதான எதிர்க்கட்சி. பா.ஜ.க தன்னை பிரதான எதிர்க்கட்சி என்பது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இதை நம் ஐ.டி விங் நிர்வாகிகள் முறியடிக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க-வை ஏற்க மாட்டார்கள்'' என்று கடுமையாகச் சாடியிருந்தார்.

பா.ஜ.க-வின் வி.பி.துரைசாமி இதைக் கோபமாக மறுத்தார். ‘‘தமிழ்நாட்டில் அ.தி.மு.க-விற்கு அதிக எம்.எல்.ஏ-க்கள் இருந்தாலும் பா.ஜ.க-வே எதிர்க்கட்சிபோலச் செயல்படுகிறது, எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக வலுவாகச் செயல்படவில்லை. பொன்னையன் தவறாகப் பேசுகிறார். இதுபற்றி அ.தி.மு.க அவரிடம் விளக்கம் கேட்க வேண்டும்'' என்றார் வி.பி.துரைசாமி. ‘‘பொன்னையன் சொன்னது அவரது சொந்தக் கருத்து'' என்று ஒரு பிரஸ்மீட்டில் ஓ.பன்னீர்செல்வம் சமாளித்தாலும், அவர் பக்கத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி, ‘‘எங்கள் செயல்பாட்டுக்கு வி.பி.துரைசாமி சான்றளிக்கத் தேவையில்லை. வி.பி.துரைசாமி போன்று கட்சி மாறி மாறிச் செல்பவர்கள் நாங்கள் கிடையாது'' என்றார்.

இன்னொரு பக்கம் பா.ஜ.க சட்டமன்றக் கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரனும் தன் பங்குக்கு வெறியேற்றினார். ‘‘சசிகலா பா.ஜ.க-வுக்கு வந்தால் வரவேற்கத் தயாராக இருக்கிறோம். அவர் வருகை பா.ஜ.க-வினருக்கு உறுதுணையாக இருக்கும்'' என்றார் அவர்.

அடுத்ததாக செல்லூர் ராஜுவின் டர்ன்.

‘‘எப்பவுமே இங்க அ.தி.மு.க., தி.மு.க மட்டும்தான். பா.ஜ.க எங்கேயோ ஒரு கூட்டம் போட்டால் ஐயாயிரம் பேர், பத்தாயிரம் பேர் கூடுவது பெரிதல்ல. இரைகளைப் போட்டால் காக்கைகள் கூடத்தான் செய்யும். இரை தீர்ந்ததும் பறந்துவிடும். அ.தி.மு.க மேல் யாராவது துரும்பைக் கொண்டு வீசினால், நாங்கள் தூணைக்கொண்டு வீசுவோம்'' என்றவர், ‘‘இது அ.தி.மு.க-வின் கருத்து'' என்று அழுத்தமாகச் சொன்னார்.

‘‘பா.ஜ.க பற்றி அ.தி.மு.க-வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சொல்வதெல்லாம் அவர்களின் தனிப்பட்ட கருத்துகள். இந்தக் கருத்துகளுக்கு யாரும் பதில் அளிக்க வேண்டாம்'' என்று அண்ணாமலை இப்போதைக்கு அணை போட்டு வைத்திருக்கிறார்.

இதற்கிடையே அன்புமணி ராமதாஸும் எதிர்க்கட்சி கோதாவில் குதித்தார். ‘‘இந்தியாவில் பா.ஜ.க பெரிய கட்சியாக இருக்கலாம். ஆனால் தமிழகத்தில் அது வளர்ந்துவரும் சிறிய கட்சி மட்டுமே. தி.மு.க-விற்கு பா.ஜ.க எதிர்க்கட்சி இல்லை. நாங்கள்தான்'' என்றார் அவர்.

எந்தக் கட்சி எதிர்க்கட்சி? - அரசியல் ரிலே ரேஸ்

கடைசியாக கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் இந்த மூன்று கட்சிகளுமே தனித்தனியாகப் போட்டியிட்டன. தமிமுன் அன்சாரி, செ.கு.தமிழரசன், சரத்குமார், தனியரசு, கருணாஸ், ஷேக் தாவூத் என்று சிறிய கட்சிகளின் தலைவர்களைத் தன் பக்கம் வைத்துக்கொண்டு, அவர்களையும் இரட்டை இலைச் சின்னத்தில் நிற்கவைத்து ஜெயலலிதா தனித்துப் போட்டியிட்டார். பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து பா.ஜ.க போட்டியிட்டது. நிஜத்தில் அது ‘தனித்துப் போட்டி' கணக்குதான். பா.ம.க நிஜமாகவே தனித்துப் போட்டியிட்டது. 40.77 சதவிகித வாக்குகள் பெற்று ஆட்சியையும் பிடித்தது அ.தி.மு.க. சுமார் 23 லட்சம் வாக்குகளை வாங்கியது பா.ம.க. சதவிகிதக் கணக்கில் அது, 5.32. பா.ஜ.க 189 தொகுதிகளில் போட்டியிட்டு 12,35,000 வாக்குகளை வாங்கியது. 2.84 சதவிகிதம்.

அ.தி.மு.க-வுக்கும் தி.மு.க கூட்டணிக்குமான நேரடிப் போட்டியாக இருந்த அந்தத் தேர்தலில் பா.ஜ.க-வோ, பா.ம.க-வோ ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை. பென்னாகரம், பாப்பிரெட்டிபட்டி, எடப்பாடி, ஜெயங்கொண்டம் ஆகிய நான்கு தொகுதிகளில் இரண்டாவது இடம் பிடித்தது பா.ம.க. கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய நான்கு தொகுதிகளில் பா.ஜ.க-வுக்கு இரண்டாவது இடம் கிடைத்தது.

ஜெயலலிதா இல்லாத சூழலில் இப்போது நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இவை மீண்டும் தனித்தனியாகப் போட்டியிட்டன. அ.தி.மு.க 25.47%, பா.ஜ.க 4.92%, பா.ம.க 1.54% வாக்குகள் பெற்றன.

சட்டமன்றத்தில் ஆரம்பக்கட்டத்தில் ஒன்றாக இணைந்து வெளிநடப்பு செய்துவந்த மூன்று கட்சிகளும் காலப்போக்கில் அந்தப் பழக்கத்தை மாற்றிக்கொண்டன. சில தருணங்களில் பா.ஜ.க தனியாக வெளிநடப்பு செய்யும். பா.ம.க திடீரென அரசைப் பாராட்டிப் பேசும். ‘இரட்டைத் தலைமையா, ஒற்றைத் தலைமையா' என்ற குழப்பத்தில் இருக்கும் அ.தி.மு.க சார்பில் சில விவகாரங்களில் ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ் இருவரின் கையெழுத்து போட்டு அறிக்கை வரும். சில தருணங்களில் தனி ஆவர்த்தனம் நடக்கும். எல்லாப் பிரச்னைகளுக்கும் டாக்டர் ராமதாஸிடமிருந்து தவறாமல் அறிக்கை வந்துவிடும். மதமாற்ற விவகாரம், பட்டணப் பிரவேசம் என்று பா.ஜ.க-வின் அரசியல் வேறு தினுசாக இருந்தாலும், ஊழல் விவகாரங்களைப் பேசுவது, தினம் தினம் பிரஸ்மீட் என்று எப்போதும் லைம்லைட்டில் இருக்கிறார் அண்ணாமலை. இதே விஷயங்களை அ.தி.மு.க பேசினாலும், அது வெறும் அறிக்கையாக மட்டுமே இருப்பதால் கவனம் பெறுவதில்லை. எதிர்க்கட்சி யார் என்பதை முடிவு செய்ய அது மட்டுமே அளவுகோல் அல்ல என்பதே உண்மை.

இந்த எதிர்க்கட்சிப் போட்டி தி.மு.க-வுக்கு ஒருவிதத்தில் வரம். இன்னொரு விதத்தில் சாபம். ஆட்சிக்கு எதிரான வாக்குகள் மூன்று பக்கம் சிதறினால், அது தி.மு.க-வுக்கு லாபம். அதேசமயம், ஒற்றை எதிர்க்கட்சிக்கு பதிலாக மூன்று பேரை சமாளிக்க வேண்டியிருக்கும். எல்லா அமைச்சர்களுக்கும் இவர்களுக்கு பதில் சொல்லிக்கொண்டிருப்பதே வேலையாகிப் போகலாம்.