
நாங்கள் கட்சி சார்ந்து இந்தத் தொழிலில் ஈடுபடவில்லை. அ.தி.மு.க - தி.மு.க என எல்லா ஆட்சிக்காலங்களிலும் பார்களை நடத்தியிருக்கிறோம்.
ஜனவரி 3, காலை 8 மணி. ‘பொற்கால ஆட்சியில் பொல்லாத அமைச்சரா..?’, ‘திருப்பதி பாலாஜியை வென்ற கரூர் பாலாஜி...’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளோடு தமிழ்நாடு பார் உரிமையாளர்கள் சங்கத்தினர், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை கிரீன்வேஸ் சாலை வீட்டை முற்றுகையிட, சற்று நேரத்தில் ஏரியாவே அமளிதுமளியானது. வீட்டை முற்றுகையிட்டவர்கள் அமைச்சருக்கு எதிரான கோஷத்தை எழுப்பியதோடு, அமைச்சரின் தம்பி அசோக் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். பார் டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாகச் சங்க நிர்வாகிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டின் பின்னணி நம்மை அதிரவைக்கிறது!
விண்ணப்பங்கள் தரப்படவில்லை!
தமிழ்நாடு முழுவதும் 5,387 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றில் சுமார் 3,000 கடைகளுக்கு மட்டும் பார் வசதி உள்ளது. வருடத்துக்கு ஒரு முறை உரிமத்தொகையைச் செலுத்தி பார்களை ஏலம் எடுப்பவர்கள், மாதத்துக்கு ஒரு முறை அரசுக்கு பார் விற்பனை வரி செலுத்துவது வழக்கம். 2019-ல், இந்த நடைமுறையில் மாற்றத்தைக் கொண்டுவந்த அப்போதைய எடப்பாடி பழனிசாமி அரசு, இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஏலம்விடும் புதிய முறையை அறிமுகப்படுத்தினர். இதன்படி அக்டோபர் 2019-ல் ஏலம்விடப்பட்டு, பார் லைசென்ஸ் வழங்கப்பட்டது. இந்த லைசென்ஸ் அக்டோபர் 2021-உடன் காலாவதியாகிவிட்ட நிலையில், மேற்கொண்டு இரண்டு மாதங்களுக்கு நீட்டிப்பு வழங்கியது புதிதாகப் பொறுப்பேற்ற தி.மு.க அரசு. இந்தச் சூழலில், ‘டிசம்பர் 30-ம் தேதி தமிழகம் முழுவதும் பார் டெண்டர் நடத்தப்படும்’ என்ற அறிவிப்பும் வெளியானது. இதில்தான் முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள் பார் உரிமையாளர்கள்.

நம்மிடம் பேசிய தமிழ் மாநில டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருநாவுக்கரசு, “ஒரு டாஸ்மாக் கடையின், ஒரு மாத விற்பனைத் தொகையில் 1.8 சதவிகிதம், பார் விற்பனை வரித்தொகையாக வசூலிக்கப்படுகிறது. இது மாநகராட்சி, நகராட்சி அமைப்புகளில் செயல்படும் பார்களுக்கான தொகை. இதுவே பேரூராட்சிகளுக்கு 1.6 சதவிகிதமும், ஊராட்சிகளில் 1.4 சதவிகிதமுமாக வசூலிக்கப்படுகிறது. பார் நடத்த விண்ணப்பம் செலுத்தும்போது, இந்தச் சதவிகிதத்தைக் குறிப்பிட்டுத்தான் நாம் விண்ணப்பிக்க வேண்டும். பார் லைசென்ஸ் கிடைத்த பின்னர், ஒவ்வொரு மாதமும் இந்தச் சதவிகிதத் தொகையை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் பெயரில் டி.டி எடுத்து வழங்க வேண்டும். டாஸ்மாக் பார்களை அரசு அமைப்பதுமில்லை; நடத்துவதுமில்லை. தனிநபர்களுக்கு அதை நடத்துவதற்கான அனுமதியை மட்டும் வழங்குகிறது. மற்றபடி, பார் நடத்துவதற்கான இடத்தின் வாடகை, கட்டடம், டேபிள், சேர் என அனைத்திலும் நாங்கள்தான் முதலீடு செய்திருக்கிறோம். 2003-லிருந்து இதுதான் நடைமுறை. குறைந்தது 25 லட்சம் ரூபாய் முதல் ஒன்றரைக் கோடி ரூபாய் வரை ஒவ்வொரு பாரிலும் நாங்கள் முதலீடு செய்திருக்கிறோம்.
அக்டோபர் 2019-ல் பார் லைசென்ஸ் வழங்கப்பட்டாலும், மார்ச் 2020-ல் கொரோனா பேரிடர் காரணமாக, தமிழகம் முழுவதும் பார்கள் மூடப்பட்டன. தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மீண்டும் மூடப்பட்டு, மீண்டும் திறக்கப்பட்டு என மொத்தமாகக் கடந்த இரண்டு வருடங்களில், ஆறு மாதங்கள் மட்டுமே பார்கள் செயல்பட்டன. அந்த நேரத்தில் பணியாளர்கள் சம்பளம், இடத்தின் வாடகை என நெருக்கடியான நிதிச்சுமையையும் நாங்கள் தாங்கி நின்றோம். இந்த நிலையில்தான், கடந்த டிசம்பர் 30-ம் தேதி பார் டெண்டர் நடத்தப்பட்டது. டெண்டர் விண்ணப்பங்களைப் பெற டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் அலுவலகங்களை நாங்கள் தொடர்பு கொண்டபோது, எங்களுக்கு விண்ணப்பங்கள் தரப்படவில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தை நாங்கள் நாடிய பின்னர்தான், நீதிமன்ற உத்தரவின்பேரில் எங்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. அப்போதுகூட முழுவதுமாக வழங்கப்படவில்லை.
“அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் சொல்லித்தான்...” - மீறப்பட்ட விதிமுறைகள்!
டிசம்பர் 30-ம் தேதி மதியம் 2 மணியுடன் விண்ணப்பம் செலுத்துவதற்கான காலக்கெடு முடிந்து, 3 மணிக்கு டெண்டர் திறக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டது. ஆனால், 2 மணிக்கு மேல் மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருவள்ளூர் மேற்கு எனப் பல்வேறு மாவட்டங்களில் கொத்துக் கொத்தாக விண்ணப்பங்களைச் சில நபர்கள் கொண்டுவந்து பெட்டியில் போட்டனர். சந்தேகமடைந்து அந்த விண்ணப்பங்களை இடைமறித்து வாங்கி நாங்கள் சோதனையிட்டபோது, கரூர், சிவகங்கை, புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒருசிலரின் பெயர்களிலேயே விண்ணப்பங்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தோம். 525 ரூபாய் செலுத்தி சமர்ப்பிக்கப்படும் இந்த விண்ணப்பங்களுக்கு, 25,000 ரூபாய் இ.எம்.டி செலுத்த வேண்டும். அப்படிச் செலுத்தப்பட்ட இ.எம்.டி-யும் ஒரே அக்கவுன்ட் நம்பரிலிருந்து செலுத்தப்பட்டதையும் பார்த்து விக்கித்துப்போனோம்.
நீதிமன்ற உத்தரவுப்படி, பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும்போது, பார் இடத்தின் உரிமையாளர்கள் அளிக்கும் என்.ஓ.சி-யையும் இணைத்து வழங்க வேண்டும். ஆனால், மொத்தமாக விண்ணப்பங்களைப் பெட்டியில் போட்டவர்களிடம் இந்த என்.ஓ.சி இல்லை. பல விண்ணப்பங்களில் விண்ணப்பதாரரின் கையொப்பம், விலாசம், விற்பனை வரித்தொகைக்கான சதவிகிதம் என்று எதுவுமே நிரப்பப்படவில்லை. இது குறித்து நாங்கள் டாஸ்மாக் உயரதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியபோது, ‘அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் சொல்லித்தான் இப்படி விண்ணப்பங்கள் போடப்படுகின்றன. எதுவாக இருந்தாலும் நீங்கள் மேலிடத்தில் பேசிக்கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டனர். இப்படிப் பல்வேறு விதிமுறைகள் மீறப்பட்டு, ஒருசிலரே மொத்தமாக எல்லா டாஸ்மாக் பார்களையும் டெண்டர் எடுக்கத் துணிந்திருப்பது எங்களுக்குத் தெரியவந்தது.

‘ரூ.60 கோடி அசைன்மென்ட்’ - பொல்லாத அமைச்சர்!
தமிழகத்தை நான்கு மண்டலமாகப் பிரித்திருக்கிறது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு. இந்த மண்டலங்களுக்குத் தனித்தனி ஆட்களை நியமித்து, அவர்களே பார் நடத்துவதற்கான லைசென்ஸைப் பெற முயல்கிறார்கள். கொதிப்படைந்து நாங்கள் விசாரித்தபோது, ‘நீங்கள் பார்களை நடத்த வேண்டுமென்றால், எங்களின் துணையோடுதான் நடத்த வேண்டும். லைசென்ஸ் எங்கள் பெயரில்தான் இருக்கும். ஒவ்வொரு மாதமும் விற்பனை வரித்தொகையாக எவ்வளவு அரசுக்குச் செலுத்துகிறீர்களோ, அதற்கு நிகரான தொகையை எங்களுக்குத் தந்துவிட வேண்டும்’ என்று டீல் பேசுகிறது அசோக் தரப்பு. இதன்படி பார்த்தால், ஒவ்வொரு பாருக்கும் ஒன்றரை முதல் இரண்டரை லட்சம் ரூபாய் வரை நாங்கள் ‘கப்பம்’ செலுத்த நேரிடும். இப்படி, ஒரு மாதத்துக்கு 3,000 பார்களுக்கும் கணக்கிட்டால், 60 கோடி ரூபாயை முறைகேடாக பார் உரிமையாளர்களிடமிருந்து வசூலிக்கப் பார்க்கிறது செந்தில் பாலாஜி தரப்பு. இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்... முதல்வருக்கு இதெல்லாம் தெரியுமா... தெரியாதா?
நாங்கள் கட்சி சார்ந்து இந்தத் தொழிலில் ஈடுபடவில்லை. அ.தி.மு.க - தி.மு.க என எல்லா ஆட்சிக்காலங்களிலும் பார்களை நடத்தியிருக்கிறோம். இப்படி யாரும் எங்களை நெருக்கடிக்கு உள்ளாக்கியதில்லை. பார்களில் வரும் வருமானத்தை முறைப்படுத்தி, பெருமளவு வசூலில் இறங்கப் பார்க்கிறார்கள். அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு துணைபோவது சரியல்ல. எங்களைப் பொறுத்தவரை பொற்கால ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் தந்துகொண்டிருக்கிறார். அதில், பொல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி இருப்பதைப் பார்க்கிறோம். நாங்கள் போராட்டம் செய்ததைத் தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நடைபெறவிருந்த பார் டெண்டரைத் தற்காலிகமாகத் தள்ளிவைத்திருக்கிறார்கள். இதர மாவட்டங்களில், அசோக் தரப்பு அனுப்பிய ஆட்களுக்கே பார் லைசென்ஸ் தரப்பட்டதாகச் செய்திகள் வருகின்றன. ஆகவே, முறைகேடாக நடைபெற்றிருக்கும் இந்த பார் டெண்டரை ரத்துசெய்து, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் குழுவின் மேற்பார்வையில், முறையாக மீண்டும் டெண்டரை நடத்திட வேண்டும்” என்றார்.
இந்த பார் டெண்டர் விவகாரத்தில், வருமானங்களையெல்லாம் முறையாகக் குவித்து, மேலிடத்துக்குக் கொண்டு செல்வதுதான் திட்டம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். மேலும், பெண் கடவுள் பெயர்கொண்ட ஒரு ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பெயரும் இந்த விவகாரத்தில் அடிபடுகிறது. அ.தி.மு.க பிரமுகர் ஒருவருக்குச் சொந்தமான அந்த ஃபைனான்ஸ் நிறுவனம்தான், தமிழகம் முழுவதும் பார்களை ஏலம் எடுப்பதற்கு ஆட்களைப் போட்டிருப்பதாகவும், அமைச்சர் செந்தில் பாலாஜி பெயரைச் சொல்லி அவர்கள் தரப்பிலிருந்துதான் ‘டீல்’ பேசப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதுபோக, பார்களில் விற்கப்படும் தண்ணீர் பாட்டில், பிளாஸ்டிக் கப் உள்ளிட்டவற்றையும் தாங்கள் சொல்லும் கம்பெனிகளிடம் சொல்லும் ரேட்டுக்கே வாங்க வேண்டுமென பார் உரிமையாளர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்களாம்.

“பார் டெண்டரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலையிடுகிறார்!”
தமிழ்நாடு பார் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அன்பரசனிடம் பேசினோம். “எங்கள் போராட்டம் தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசியிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘பார் டெண்டர் தொடர்பாக யாரும் புகாரளிக்கவில்லை’ என்றிருக்கிறார். இது முற்றிலும் தவறு. ‘பார் டெண்டரில் அமைச்சர் செந்தில் பாலாஜியும், அவர் தம்பி அசோக்கும் தலையிடுகிறார்கள்’ என்று எழுத்துபூர்வமாகப் புகார் கொடுத்திருக்கிறோம். டாஸ்மாக் நிர்வாக இயக்குநர், மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு ஸ்பீடு போஸ்ட்டில் எழுத்துபூர்வமாகப் புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன. பல இடங்களில் எங்கள் டெண்டர் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதையெல்லாம் யாரிடம் போய் புகார் கொடுப்பது? சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்திருக்கிறோம். இந்தத் தொழிலை நம்பி மூன்று லட்சம் தொழிலாளர்களின் குடும்பங்கள் வாழ்கின்றன. அவர்களை நினைத்துப் பாருங்கள்!” என்றார் கோபமாக.
தமிழ்நாட்டிலுள்ள பார்கள் என்பது கிட்டத்தட்ட வழிப்பறிக் கூடாரம்தான். இங்கே விற்கப்படும் பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாட்டில், உணவுப் பண்டங்கள், சிட்டிங் கட்டணம் முதற்கொண்டு அனைத்துமே கொள்ளைத் தொகைதான். இதில் மேலும் கொள்ளையடிக்கும்விதமாக, குறிப்பிட்ட சிலர் மட்டும் டெண்டர்களை எடுத்து சப் கான்ட்ராக்ட் விடும்போது, மேலும் கொள்ளையடிக்கப்படுபவர்கள் சாதாரண குடிமகன்கள்தான். ‘மது உயிருக்கு, வீட்டுக்கு, நாட்டுக்குக் கேடு’ என்பதுபோலவே விதிமீறல்களும், முறைகேடுகளும், அநியாயக் கொள்ளையும் வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு’தான்!
*****
பேச்சுவார்த்தை தோல்வி!
போராட்டம் நடந்த சமயத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில்தான் இருந்தார். முக்கால் மணி நேரத்துக்கும் மேலாகத் தன் வீட்டின் முன்னால் போராட்டம் தொடரவும், பார் உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஐந்து நிர்வாகிகளை மட்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். வீட்டுக்குள் சென்ற சங்க நிர்வாகிகளிடம், ‘பொல்லாத அமைச்சர்...’ ‘திருப்பதி பாலாஜி’ போன்ற வாசகங்களுடன் இடம்பெற்றிருந்த பதாகைகள் குறித்துத் தன் வருத்தத்தைப் பதிவுசெய்திருக்கிறார். தொடர்ந்து, ‘பார் டெண்டர் இறுதி முடிவு இன்னும் எடுக்கலை. அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும். நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதன்படி நடப்போம். உங்கள் புகார்கள் குறித்து ஆதாரமிருந்தால் சொல்லுங்கள். நடவடிக்கை எடுக்கிறேன்’ என்று விளக்கமளித்திருக்கிறார் செந்தில் பாலாஜி. இந்தப் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு வந்த தமிழ்நாடு பார் உரிமையாளர்கள் சங்கத்தினர், “ஜி.எஸ்.டி நம்பர் உள்ளிட்ட விவரங்களைப் புதிதாக இணைக்கச் சொல்லியிருக்கிறார்கள். அவையெல்லாம் இரண்டொரு நாளில் சாத்தியமா என்பது தெரியவில்லை. எங்கள் குறைகளை அமைச்சரிடம் தெரிவித்தோம். அவருக்கு இந்த விவகாரமெல்லாம் தெரிந்திருந்தும், புதிதாகக் கேட்பதுபோலக் கேட்டுக்கொண்டார். இந்தப் பேச்சுவார்த்தையில் எங்களுக்குத் திருப்தியில்லை. தோல்வி என்றே எடுத்துக்கொள்ளலாம். இந்தநிலை தொடர்ந்தால், டாஸ்மாக் பார்களுக்குப் பூட்டுப்போடும் போராட்டத்தை நடத்தவிருக்கிறோம்” என்றனர்.
******

“இவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை!” - அமைச்சர் விளக்கம்
இந்த விவகாரங்கள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் பேசினோம். “டிசம்பர் 30, 31-ம் தேதி டெண்டர் ஓப்பன் செய்திருக்கிறார்கள். ஜனவரி 1 மற்றும் 2-ம் தேதி விடுமுறை. இடைப்பட்ட இந்த இரண்டு நாள்களுக்குள் யாரிடம் யார் பேரம் பேசியிருக்க முடியும்? யூகத்தின் அடிப்படையில். வேலையில்லாதவர்கள் என் குடும்பத்தினர்மீது சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் நான் பதில் சொல்லப்போவதில்லை. விண்ணப்பம் கிடைக்கவில்லை, விண்ணப்பத்தை வாங்காமல் தவிர்த்தார்கள், டெண்டர் ஓப்பன் பண்ணவில்லை, வெளிப்படையாக டெண்டர் நடத்தப்படவில்லை எனப் புகாரளித்தால், அதற்குரிய நடவடிக்கை எடுக்கலாம். பார் நடத்துவதற்கான லைசென்ஸ் என்பது இரண்டு ஆண்டுகளுக்குத்தான். ஆனால், சில பார் உரிமையாளர்கள், பார் நடக்கும் அந்த இடத்தைப் பத்து ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டுவிட்டு, அந்த பாருக்கான லைசென்ஸ் தனக்குத்தான் ஒதுக்கப்பட வேண்டும் என நிர்வாகத்தை நிர்பந்திக்கிறார்கள். யார் அதிக விலைக்கு டெண்டர் கோரியிருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் பார் டெண்டர் கிடைக்கும். கடந்த ஆட்சியைப்போல டெண்டர் போடாமலேயே பார் நடத்தலாம் என நினைத்தால், அது இப்போது நடக்காது. யாருக்கெல்லாம் டெண்டர் கிடைக்காது என்று நினைக்கிறார்களோ, அவர்கள்தான் என்னுடைய வீட்டின் முன் வந்து ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள். இவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. விதிகளுக்கு உட்பட்டுத்தான் டெண்டர் ஒதுக்கப்படும். நிர்வாகரீதியில் எந்த இடத்திலும் என்னைச் சந்திக்காதவர்கள், பார்க்காதவர்களுக்கு என்மீது புகாரளிக்க எந்த வகையிலும் தகுதி இல்லை. விதிமீறல்கள் குறித்து எந்தப் புகார் மனுவும் இல்லாமல்தான் இன்றைக்கே என்னைச் சந்திக்க வந்தார்கள். இவர்களுக்காக நான் விதியை மீற முடியுமா? அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் எதையும் விதிகளுக்குப் புறம்பாக நான் எப்போதும் செய்ய மாட்டேன்!” என்றார்.