Published:Updated:

எழுத்தறிவிப்பவர்களுக்கு இழைக்கலாமா அநீதி?

எழுத்தறிவிப்பவர்களுக்கு இழைக்கலாமா அநீதி?
பிரீமியம் ஸ்டோரி
எழுத்தறிவிப்பவர்களுக்கு இழைக்கலாமா அநீதி?

வழக்கமாக பணியில் சேரும்போது ஒரு இடைநிலை ஆசிரியர் 30,000 ரூபாயும் பட்டதாரி ஆசிரியர் 50,000 ரூபாயும் முதுநிலை ஆசிரியர் 51,000 ரூபாயும் ஊதியமாகப் பெறுவார்கள்

எழுத்தறிவிப்பவர்களுக்கு இழைக்கலாமா அநீதி?

வழக்கமாக பணியில் சேரும்போது ஒரு இடைநிலை ஆசிரியர் 30,000 ரூபாயும் பட்டதாரி ஆசிரியர் 50,000 ரூபாயும் முதுநிலை ஆசிரியர் 51,000 ரூபாயும் ஊதியமாகப் பெறுவார்கள்

Published:Updated:
எழுத்தறிவிப்பவர்களுக்கு இழைக்கலாமா அநீதி?
பிரீமியம் ஸ்டோரி
எழுத்தறிவிப்பவர்களுக்கு இழைக்கலாமா அநீதி?

அக்னிபத் திட்டம் அமலானபோது, ‘ராணுவத்தில் ஒப்பந்த முறையில் ஆள் சேர்க்கிறார்கள்’ என்று கடுமையாக எதிர்த்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். இப்போது ஒப்பந்த முறையில் 13,331 இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்களைத் தமிழக அரசு நியமிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பதுதான் வேதனையான வேடிக்கை.

கொரோனா காலத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் சேர்ந்தார்கள். அதனால் உள்கட்டமைப்பு தொடங்கி ஆசிரியர் பணியிடங்கள் வரை அனைத்தையும் விரிவுபடுத்தவேண்டிய தேவை உருவானது. ஆசிரியர் பற்றாக்குறையால் பல பள்ளிகள் தள்ளாடத் தொடங்கின. ஏற்கெனவே ஆசிரியர் தகுதித்தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வுகளை எழுதி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிக்காகக் காத்திருக்கும் நிலையில், அரசு வெளியிட்டுள்ள சேர்க்கை அறிவிப்பு மிகுந்த கொதிப்பை உருவாக்கியுள்ளது.

வழக்கமாக பணியில் சேரும்போது ஒரு இடைநிலை ஆசிரியர் 30,000 ரூபாயும் பட்டதாரி ஆசிரியர் 50,000 ரூபாயும் முதுநிலை ஆசிரியர் 51,000 ரூபாயும் ஊதியமாகப் பெறுவார்கள். ஆனால், தற்போது தேர்வு செய்யப்படும் இடைநிலை ஆசிரியருக்கு 7,500 ரூபாயும், பட்டதாரி ஆசிரியருக்கு 10,000 ரூபாயும், முதுநிலை ஆசிரியருக்கு 12,000 ரூபாயும் மட்டுமே மதிப்பூதியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆசிரியர்கள் 8 முதல் 10 மாதங்கள் பணியில் இருப்பார்கள் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘‘கடந்த கல்வியாண்டில், தற்காலிக ஏற்பாடாக பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் 10,000 ரூபாய் சம்பளத்தில் 1,000 முதுநிலை ஆசிரியர்களை நியமித்தார்கள். அப்போது, `அடுத்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் நிரந்தர ஆசிரியர்களை நியமித்துவிடுவோம்' என்றார்கள். கொரோனா நேரத்தில் கூடுதலாக ஒரு ஆசிரியர் வந்தால் நல்லது என்ற எண்ணத்தில் எல்லோரும் அதை வரவேற்றோம். இப்போது அந்த உறுதிமொழியில் இருந்து அரசு பின்வாங்கியிருக்கிறது’’ என்கிறார், தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத் தலைவர் பெருமாள்சாமி.

எழுத்தறிவிப்பவர்களுக்கு இழைக்கலாமா அநீதி?

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 13,331 பணியிடங்கள் என்பது 1.9.2021 நிலவரப்படி, ஓய்வுபெற்ற, காலமான ஆசிரியர்களின் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை. இந்த இடங்களுக்கான நிரந்தர ஊதியம், பணிப்பலன்களெல்லாம் ஏற்கெனவே பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது. நிதிச்சுமை என்று அரசு காரணம் காட்டுவது உண்மையல்ல என்கிறார்கள் ஆசிரியர்கள்.

‘‘பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் அவசர காலத்தில் ஆசிரியர்களை நியமிப்பது தவறல்ல. ஆனால் ஜூலை மாதத்தில் இப்படி நியமிப்பது இதுவரை நடக்காதது. அரசின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது இனிவரும் காலங்களில் தொகுப்பூதியத்தில் மட்டுமே பணி நியமனம் என்ற நிலைப்பாட்டை எடுத்துவிடுவார்களோ என்று சந்தேகிக்கிறேன். பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் இந்த நியமனங்கள் நடக்கும் என்கிறார்கள். அந்தக் குழுவில் அந்தந்தப் பகுதியில் உள்ள அரசியல்வாதிகளின் ஆதிக்கம் இருக்கலாம். அவர்களின் அழுத்தம் நியமனத்திலும் இருக்கும். அப்படி வரும் ஆசிரியர்கள் உணர்வுபூர்வமாக வேலை செய்வார்களா, தலைமையாசிரியர்களை மதித்து அவர்களின் வழிகாட்டுதல்படி வேலை செய்வார்களா என்ற கேள்வியும் எழுகிறது. தவிர, பள்ளிக்குள் இது ஒரு பாகுபாட்டையும் ஏற்படுத்திவிடும். அரசாங்கமே இவ்வளவு குறைவாக சம்பளம் தருவதால் தனியார் பள்ளிகளிலும் ஆசிரியர்களுக்கு மிகக்குறைந்த சம்பளம் வழங்கத் தொடங்குவார்கள். இது மோசமான முன்னுதாரணம்’’ என்கிறார் பெருமாள்சாமி.

பீகார் போன்ற மாநிலங்களில் நிரந்தர ஆசிரியர்கள் மிகவும் குறைவு. பாரா டீச்சர்கள், ஒப்பந்த ஆசிரியர்களே அதிகம். அந்த நிலை நோக்கித் தமிழகம் நகர்கிறதோ என்ற எண்ணம் வருகிறது. தமிழகத்தை ஆட்சி செய்த அத்தனை முதல்வர்களும் பார்த்துப் பார்த்துக் கல்விக்கூடங்களையும் திட்டங்களையும் இங்கே உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதனால்தான் தேசிய அளவில் அதிக உயர்கல்விச் சேர்க்கை உள்ள மாநிலமாகத் தமிழகம் வளர்ந்திருக்கிறது. வடமாநிலங்களை உதாரணமாகக் கொண்டு செயல்படுவது தமிழகத்தைப் பின்னோக்கித் தள்ளிவிடும் என்பதே அனைவரின் கவலையாக இருக்கிறது.

‘‘தொகுப்பூதிய ஆசிரியர் தேர்வுமுறை அப்பட்டமான உழைப்புச் சுரண்டல். 1990-ல் முதல்முறையாக தொகுப்பூதியத்தில் ஆசிரியர்களை நியமித்தார்கள். உயர் நீதிமன்றம் அந்த ஆசிரியர்களுக்கு நியமன நாள்முதல் காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டது. 2004-லும் தொகுப்பூதியத்தில் ஆசிரியர் நியமனம் நடந்தது. அதைக் கண்டித்து மாநாடு நடத்தினோம். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க-வின் சார்பில் ஆற்காடு வீராசாமி கலந்துகொண்டார். ‘தி.மு.க ஆட்சிக்கு வந்தால் தொகுப்பூதிய முறை மாற்றப்படும்' என்று அந்த மாநாட்டில் அறிவித்தார், சொன்னபடி தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் அனைவரும் காலமுறை ஊதியத்துக்கு மாற்றப்பட்டார்கள். கலைஞர் வழியில் நடைபோடுவதாகச் சொல்லும் தமிழக அரசு இப்போது மீண்டும் தொகுப்பூதிய முறையைக் கொண்டு வருகிறது’’ என்று வருந்துகிறார், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் மயில்.

அப்பர்
அப்பர்
மயில்
மயில்

திறன் பெற்ற தினக்கூலி வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுக்குத் தமிழக அரசு நிர்ணயத்திருக்கும் ஊதியம் 1 மணி நேரத்திற்கு 39 ரூபாய். கிட்டத்தட்ட அதே அளவு ஊதியம்தான் தற்போது இடைநிலை ஆசிரியருக்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தினக்கூலி நிலையில் ஆசிரியர்களை நியமித்துப் பள்ளிகளை இயக்குவது ஒரு நல்வாழ்வு அரசின் அழகல்ல.

‘‘பொதுவாக ஆசிரியர்களின் உழைப்பைச் சுரண்டுவதாகத் தனியார் பள்ளிகள் மேல் குற்றச்சாட்டு உண்டு. தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுவரும் நிலையில், அதைவிட மோசமாக அரசே உழைப்புச் சுரண்டலில் ஈடுபடலாமா?” என்று கேள்வியெழுப்பும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, அரசு உதவிபெறும் பள்ளிகளின் நிலைகுறித்தும் கவனப்படுத்துகிறார்.

‘‘தற்போதைய தமிழக அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைத் தனியார் பள்ளிகளைப்போலப் பார்க்கிறது. தொகுப்பூதிய ஆசிரியர் நியமனத்தில்கூட அந்தப் பள்ளிகளைச் சேர்க்கவில்லை. அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் ஏராளமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. எப்போதோ அரசு உதவிபெறும் பள்ளியொன்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு போட்டுள்ளது. அதைக் காரணம்காட்டி ஆசிரியர் நியமனத்தை நிறுத்திவிட்டது அரசு. அரசுப்பள்ளியில் படிப்பதைப் போலவே அரசு உதவிபெறும் பள்ளிகளில் பல ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்களை வஞ்சிப்பது நியாயமல்ல’’ என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

பிரின்ஸ் கஜேந்திரபாபு
பிரின்ஸ் கஜேந்திரபாபு
பெருமாள்சாமி
பெருமாள்சாமி

கல்விக்கு மட்டுமே வாழ்க்கையை மாற்றும் சக்தியிருக்கிறது. தமிழகத்தில் வாழும் லட்சக்கணக்கான எளிய குடும்பங்களின் கனவு அரசுப்பள்ளிகளுக்குள்தான் வளர்கிறது. அரசு அந்தக் கனவோடு விளையாடக்கூடாது.

****

மத்திய, மாநில அரசுகள் கடந்த பத்தாண்டுகளில் பெரும்பாலான பணியிடங்களைத் தொகுப்பூதிய அடிப்படையிலேயே நியமித்துவருகின்றன. கல்வி தொடங்கி ராணுவம் வரை இது தொடர்கிறது.

‘‘ஒவ்வொரு பணியிடத்துக்கும் தகுதிகளையும் சம்பள விகிதத்தையும் அரசு தீர்மானித்து வைத்திருக்கிறது. தொகுப்பூதியம், மதிப்பூதியம் என்ற பெயர்களில் அதே தகுதியுடைய, அதே பணிகளைச் செய்யும் நபர்களுக்குக் குறைவாக சம்பளம் தந்து பணிப்பலன்களைப் பறிப்பது பெரும் உழைப்புச் சுரண்டல். இதை அரசுகளே செய்வதுதான் வேதனை. ஒரே வேலையைச் செய்யும் ஒருவர் 50,000 வாங்கும் நிலையில் இன்னொருவர் 15,000 வாங்குவது நிர்வாகச் சமநிலையைக் குலைத்துவிடும். மருத்துவத்துறைதான் இதில் நம்பர்-1 ஆக இருக்கிறது. இன்று 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தொகுப்பூதியத்தில் பணிபுரிகிறார்கள். தற்போது ஆசிரியர்களின் மேல் கைவைக்கத் தொடங்கியிருக்கிறது அரசு. தேர்தல் அறிக்கையில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரையும் நிரந்தரமாக்குவோம் என்றார் முதல்வர். இப்போது பழைய யுத்தியையே கையாள்கிறார்’’ என்கிறார், அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் துணைத்தலைவர் பி.எஸ்.அப்பர்.