Published:Updated:

ரௌடிகளின் புகலிடமா கமலாலயம்? - பாதை மாறும் பா.ஜ.க!

 பாதை மாறும் பா.ஜ.க!
பிரீமியம் ஸ்டோரி
News
பாதை மாறும் பா.ஜ.க!

பா.ஜ.க இளைஞரணியிலிருக்கும் பிரமுகர் ஒருவரின் ஏற்பாட்டில்தான் வடசென்னையைக் கலக்கிய பிரபல ரெளடி ‘கல்வெட்டு’ ரவி கட்சியில் இணைந்தார்

“தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. நில ஆக்கிரமிப்பு, சுரங்கக் கொள்ளை என... தற்போதே அராஜகம் தலைதூக்குகிறது. பா.ஜ.க தொண்டர் ஒருவரை, திருநெல்வேலி தி.மு.க எம்.பி அடித்திருக்கிறார். தன் நிறுவனத்தில் பணிபுரிந்த ஒருவர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் கடலூர் எம்.பி-யை போலீஸ் தேடுகிறது. இப்படி சட்டம், ஒழுங்கு சீர்குலைந்திருப்பதை ஆளுநரிடம் எடுத்துரைத்தோம்...” - கடந்த ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி, கவர்னரைச் சந்தித்துவிட்டு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆவேசம் பொங்க அளித்த பேட்டியில் குறிப்பிட்ட சொற்கள் இவை. சட்டம், ஒழுங்கு பற்றி அப்போது தீவிரமாக வகுப்பெடுத்த பா.ஜ.க., தேடப்படும் ஏராளமான ரௌடிகளின் புகலிடமாக மாறிப்போயிருப்பதுதான் கடும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது!

ரௌடிகளின் புகலிடமா கமலாலயம்? - பாதை மாறும் பா.ஜ.க!

“பொதுவாக அரசியல் கட்சிகளின் வி.ஐ.பி-க்கள் பலருக்கும் உள்ளூர் ரௌடிகளிடம் மறைமுகமாகத் தொடர்பு இருக்கும். ஆனால், வெளிப்படையாகவே அவர்களைக் கட்சிக்குள் கொண்டுவந்து அழகுபார்க்கும் ‘டிரெண்டை’ ஆரம்பித்து வைத்தவர் எல்.முருகன்தான். கட்சியின் மாநிலத் தலைவராக அவர் வந்த பிறகு, தமிழக பா.ஜ.க-வில் நேரடியாகவே ரௌடிகளும், அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் வரிசைகட்டி இணைய ஆரம்பித்தனர். இது பெரும் சர்ச்சையானபோது, அதற்கு விளக்கமளித்த எல்.முருகன், “ரெளடிகளின் பின்னணி பற்றி விசாரித்தே கட்சியில் இணைக்கிறோம். அவர்கள் திருந்தி வாழ விரும்புகிறார்கள். கட்சியில் இணைந்த பிறகு, அவர்களது நடவடிக்கை எப்படியிருக்கிறது என்றுதான் பார்க்க வேண்டும்” என்றார். ‘ரெளடிகளின் மறுவாழ்வு மைய’மாகக் கமலாலயத்தை எல்.முருகன் மாற்ற விரும்பியது அவரது நல்ல உள்ளத்தைக் காட்டினாலும், நடந்தவையெல்லாம் விபரீதங்கள்தான். என்கவுன்ட்டருக்கு பயந்தவர்களும், போலீஸ் கெடுபிடியிலிருந்து தப்ப நினைத்தவர்களும்தான் கட்சியில் அதிகமாக இணைந்தனர். அதுதான் இப்போது கட்சியின் இமேஜை அதலபாதாளத்துக்குக் கொண்டுசென்றிருக்கிறது” என்கிறார்கள் கமலாலயப் புள்ளிகள்.

பா.ஜ.க-வின் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், சமீபத்தில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கும் படப்பை குணாவின் குடும்பத்தினரோடு இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி யிருக்கின்றன. ‘போக்கிடமற்ற ரெளடிகளுக்கு அடைக்கலம் தருகிறதா கமலாலயம்?’ என்கிற கேள்வியோடு விசாரணையில் இறங்கினோம். பா.ஜ.க பாதை மாறிய கதையை விவரித்தார்கள்...

படப்பை குணா வீட்டில் பொன்னார்
படப்பை குணா வீட்டில் பொன்னார்

“டான்தான்யா நம்மாளு...” - நிர்வாகிகளைக் குளிர்வித்த ரெளடிகள்!

நம்மிடம் பேசிய பா.ஜ.க துணைத் தலைவர்கள் சிலர், “ரெளடிகளை ரத்தினக் கம்பளம் விரித்து, கட்சிக்குள் அழைத்துவந்தவர் சட்டம் தெரிந்த பிரமுகர் ஒருவர்தான். ‘திராவிடக் கட்சிகளுக்கு சமமா நாமளும் லோக்கல்ல அரசியல் செய்யணும். உள்ளாட்சித் தேர்தல் வரும்போது, நம்மகிட்டயும் ரெளடிகள் படை இருக்கணும். இதன் மூலமா, திராவிடக் கட்சிக்காரங்களுக்குக் களத்துல டஃப் ஃபைட் கொடுக்கலாம்’ என்று அவர் போட்ட தூபத்தில் எல்.முருகன் தரப்பு சாய்ந்துவிட்டது. நெடுங்குன்றம் சூர்யாவில் தொடங்கி, படப்பை குணா வரை தாமரைக்கொடியோடு வரிசைகட்ட ஆரம்பித்தனர். ஆன்லைன் மூலமாக உறுப்பினர் சேர்க்கையை பா.ஜ.க தீவிரப்படுத்தியிருந்த நேரமது. அதைப் பயன்படுத்திக்கொண்ட ரெளடிகள் பலரும், கட்சியின் உறுப்பினராகப் பதிவு செய்துகொண்டனர். வழக்கமாக, இது போன்று புதிதாக உறுப்பினர்கள் இணையும்போது, வட்ட அளவிலான நிர்வாகிகளுக்குப் புதிய உறுப்பினர்களின் விவரங்களை அனுப்பி ‘க்ராஸ் செக்’ செய்யச் சொல்வோம். ஆனால், பெரும்பாலான இடங்களில் இந்த ‘க்ராஸ் செக்’ நடைபெறவே இல்லை. ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை எங்களுக்கே சிக்கலாக மாறிவிட்டது.

பா.ஜ.க-வின் உள்ளூர் நிகழ்ச்சிகளுக்குத் தேவையான நிதியை அள்ளிச் செலவிட்டதாலும், மூத்த நிர்வாகிகளுக்கு டாம்பீகமான வரவேற்பு கொடுத்து அசத்தியதாலும், இந்த ரெளடிகளை முக்கிய நிர்வாகிகள் அரவணைத்துக்கொண்டனர். தங்களின் தொழில்ரீதியிலான பஞ்சாயத்துகளுக்கு அடியாட்களுடன் வந்து ரெளடிகள் பாதுகாப்பு அளித்ததால், மூத்த நிர்வாகிகள் சிலர் மனம் குளிர்ந்து போயினர். ‘தலைவரோட போறார்ல... அவர் மேல ஏழு கொலை கேஸு இருக்கு. எப்பேர்ப்பட்ட ஆளையெல்லாம் பக்கத்துல வெச்சிருக்காரு பாரு. டான்தான்யா நம்மாளு...’ என்று கட்சிக்குள் அந்த நிர்வாகிகளின் இமேஜ் தாறுமாறாக எகிறியது. இதில் புளகாங்கிதம் அடைந்த சில தலைவர்கள், தங்களை ‘நிஜ டான்’களாகவே கற்பனை செய்துகொண்டனர். பின்னணியில் ‘டான்... டான்... டான்...’ என கோரஸ் பாடாத குறைதான்” என்றவர்கள், தமிழக பா.ஜ.க-விலுள்ள ரெளடிகளின் விவரங்களைக் கொட்டினார்கள்.

ரௌடிகளின் புகலிடமா கமலாலயம்? - பாதை மாறும் பா.ஜ.க!

“விசாரணைக்கு வரச் சொல்றீங்களா?” - அதிரவைத்த அஞ்சலை

“பா.ஜ.க இளைஞரணியிலிருக்கும் பிரமுகர் ஒருவரின் ஏற்பாட்டில்தான் வடசென்னையைக் கலக்கிய பிரபல ரெளடி ‘கல்வெட்டு’ ரவி கட்சியில் இணைந்தார். இவர்மீது ஆறு படுகொலை உட்பட 35 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரெளடி சத்தியராஜ், சேலம் முரளி ஆகியோரும் அந்தப் பிரமுகரின் ஆதரவோடு கட்சியில் இணைக்கப்பட்டனர். இதில், ஐந்து முறை குண்டர் சட்டத்தில் கைதான சேலம் முரளிக்கு இளைஞரணியில் மாவட்டப் பொறுப்பும் வழங்கப்பட்டதுதான் உச்சகட்ட வேடிக்கை. சைதாப்பேட்டையிலிருந்த ஒரு விடுதியில்தான் இந்த இளைஞரணிப் பிரமுகரின் கட்டப்பஞ்சாயத்தெல்லாம் நடக்கும். இவரும், சட்டம் தெரிந்த பிரமுகரும் ஏராளமான ரெளடிகளைக் கட்சிக்குள் கொண்டுவந்து, கட்சியையே நாசமாக்கிவிட்டனர்.

சென்னை புளியந்தோப்பைக் கலக்கிய ரெளடி ஆற்காடு சுரேஷ். இவர்மீது ஐந்து கொலை வழக்குகள், ஆள் கடத்தல், கொலை மிரட்டல் என 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தன் துணைவி அஞ்சலையை பா.ஜ.க-வில் இணைத்துவிட்ட சுரேஷ், துணைவிக்கு வடசென்னை மாவட்ட மகளிரணியில் பொறுப்பையும் வாங்கிக் கொடுத்தார். கடந்த ஜூன் மாதம் தமிழகம் முழுவதும் ரெளடிகளைப் பிடிப்பதற்காக ‘ஆபரேஷன் டிஸ்ஆர்ம்’ நடவடிக்கையை, தமிழகக் காவல்துறை எடுத்தது. ஆற்காடு சுரேஷ்மீது பல்வேறு வழக்குகள் நிலுவையிலிருந்ததால் அவரை போலீஸ் தேடியது. இந்தச் சூழலில் வேறு ஒரு விவகாரத்தில், அஞ்சலையை விசாரணைக்கு வருமாறு போலீஸார் அறிவுறுத்தினர். அதற்கு, ‘சார், நான் பா.ஜ.க-வுல இருக்கேன். கட்சிக்காரங்களையே விசாரணைக்கு வரச் சொல்றீங்களா?’ என்று போலீஸாரையே அதிரவைத்திருக்கிறார் அஞ்சலை. விவகாரம், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வரை பஞ்சாயத்துக்கு வந்து அவர்களின் கண்டிப்புக்குப் பின்பே, போலீஸ் விசாரணைக்கு அஞ்சலை ஒத்துழைப்பு கொடுத்தார்.

“கொலை வழக்கா..? - இந்தா பிடி... மாவட்டப் பதவி!”

ஏழு கொலை வழக்குகள் உட்பட 33 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் வியாசர்பாடியைச் சேர்ந்த ‘பாம்’ சரவணன். இவரின் அண்ணன் தென்னரசு என்பவரை மற்றொரு ரௌடி கோஷ்டி கொலை செய்துவிட்டது. அண்ணனைக் கொன்றவர்களைப் பழிதீர்ப்பதற்காகத் தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார் சரவணன். பா.ஜ.க-வில் அவர் இணையாவிட்டாலும், தன் மனைவி மஹாலட்சுமியைக் கட்சியில் இணைத்துவிட்டார். ‘பாரதிய விகாஸ் வொர்க்கர்ஸ் வெல்ஃபேர் அசோசியேஷன்’ என்கிற அமைப்பில் கெளரவச் செயலாளர் பொறுப்பிலிருக்கிறார் மஹாலட்சுமி. கட்சிப் பெயரை வைத்துக்கொண்டு சென்னை புறநகர்ப் பகுதிகளில் பஞ்சாயத்துப் பேசித் திரிகிறது சரவணன் கோஷ்டி.

வடசென்னையின் மற்றொரு ரெளடியான நாகேந்திரன், இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது சிறையில் இருக்கிறார். இவர் மகன்களில் ஒருவரான அஜித் ராஜ், பா.ஜ.க-வில் இளைஞரணிச் செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். 2018, பிப்ரவரி 6 -ம் தேதி, பிரபல ரெளடிகள் 73 பேரை ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் வைத்துக் கைதுசெய்தது சென்னை காவல்துறை. ரெளடி பினுவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இவர்கள் ஈடுபட்டிருந்தபோதுதான் கைதுசெய்யப்பட்டனர். இந்தத் தகவலை போலீஸாரிடம் முதலில் சொன்னவர் ரெளடி பல்லு மதன். இவர்மீது, பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் மூன்று கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையிலுள்ளன. இப்படிப்பட்டவருக்கு பா.ஜ.க எஸ்.சி/எஸ்.டி பிரிவில் செங்கல்பட்டு மாவட்டப் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆகஸ்ட், 2020-ல் எட்டு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட நெடுங்குன்றம் சூர்யா கட்சியில் இணைய முற்பட்டார். கட்சியில் இணைவதற்காக எல்.முருகனைப் பார்க்க வந்தவர், முருகனின் பாதுகாப்புக்கு வந்த போலீஸைக் கண்டதும் தன்னைத்தான் கைதுசெய்ய வந்திருக்கிறார்களோ என பயந்து, கட்சியில் இணையாமலேயே தப்பியோடினார். சமீபத்தில் அவர் மனைவி விஜயலட்சுமி நெடுங்குன்றம் ஊராட்சி வார்டு கவுன்சிலராக வெற்றிபெற்றார். அதன் பிறகு, விஜயலட்சுமியை பா.ஜ.க-வில் இணைப்பதற்கு முயற்சி நடைபெற்றது. அதற்குள் கஞ்சா வழக்கு ஒன்றில் ஓட்டேரி போலீஸார் விஜயலட்சுமியைக் கைதுசெய்துவிட்டனர். இப்படியாக நீள்கிறது பெரும் பட்டியல்!

ரௌடிகளின் புகலிடமா கமலாலயம்? - பாதை மாறும் பா.ஜ.க!

குற்றவாளிகளின் புகலிடமா கமலாலயம்?

கட்சி நிர்வாகிகளுக்கும் ரெளடிகளுக்குமான தொடர்புகளுக்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல் அமைந்துவிட்டது படப்பை குணா விவகாரம். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது என அராஜகம் செய்துவருபவர் படப்பை குணா. இவர்மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என 48 வழக்குகள் நிலுவையிலுள்ளன. தற்போது பெயிலில் வெளியே வந்திருக்கிறார். இந்த நேரத்தில்தான், காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்.பி சுதாகரும், ரெளடிகள் தடுப்புப் பிரிவு ஸ்பெஷல் கூடுதல் எஸ்.பி வெள்ளத்துரையும் குணாவைச் சில வழக்குகள் காரணமாகத் தேட ஆரம்பித்தனர். போலீஸ் தேடுதல் தீவிரமானதும், ‘என்கவுன்ட்டர்’ பயம் தொற்றிக்கொண்டதால், தனக்குத் தெரிந்த பா.ஜ.க தொடர்புகளிடம் உதவி கேட்டிருக்கிறார் குணா.

இந்தச் சூழலில்தான், கடந்த ஜனவரி 7-ம் தேதி இரவு, பா.ஜ.க மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் படப்பை குணாவின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கு ரௌடி குணாவின் மனைவி எல்லம்மாளைச் சந்தித்துப் பேசியுள்ளார். நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், ஸ்ரீபெரும்புதூர் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலராக வெற்றிபெற்றார் எல்லம்மாள். அதைக் குறிப்பிட்டு ‘அவர் நம் கட்சியில் சேர்ந்தால், ஸ்ரீபெரும்புதூர் ஏரியாவில் கட்சியை பலப்படுத்திவிடலாம். நமக்கும் துடிப்புள்ள ஆட்கள் வேண்டும்’ என்று கட்சி மேலிடத்துக்குச் சிலர் தூபம் போட்டனர். ஆனால், எல்லம்மாளை பா.ஜ.க-வில் இணைப்பதற்குக் கட்சி மேலிடம் ‘நோ’ சொல்லிவிட்டது. இதற்கிடையே, போலீஸால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவரின் மனைவியை பொன்னார் சென்று பார்த்தது கட்சிக்குள் பலத்த அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ரெளடிமீது, அந்த ஏரியாக்களில் வழக்குகள் குவிந்தன. போலீஸ் என்கவுன்ட்டருக்கு பயந்து பா.ஜ.க-வில் அடைக்கலமானார் அவர். இன்று அந்த ரெளடி, கட்சிக்குள் மாநில அளவிலான பொறுப்பில் வலம்வருகிறார். ‘இது போன்ற நிலைமை எதிர்காலத்தில் ஏற்படக் கூடாது. குற்றவாளிகளின் புகலிடமாக கமலாலயம் மாறிவிடக் கூடாது’ என்பதுதான் பா.ஜ.க-வில் துடிப்போடு பணியாற்றுபவர்களின் ஒரே எண்ணம். படப்பை குணாவின் விவகாரத்தைத் தொடர்ந்து, ‘கட்சியில் சேர்க்கப்பட்ட ரௌடிகள் யார் யார், ரெளடிகளின் குடும்பத்தினருக்குக் கொடுக்கப்பட்ட பதவிகள் என்னென்ன?’ என்கிற விவரங்களைத் துருவ ஆரம்பித்திருக்கிறார் மாநிலத் தலைவர் அண்ணாமலை. விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே கட்சியின் இமேஜை மீட்க முடியும்” என்று விலாவாரியாகக் கூறினர்.

பா.ஜ.க-வுக்குள் ஏராளமான ரெளடிகள் மற்றும் அவர்களின் உறவுகள் அடைக்கலம் புகுந்திருப்பது, படப்பை குணாவின் மனைவியை பொன்னார் சென்று பார்த்தது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக, அக்கட்சியின் தலைவர் அண்ணாமலையிடம் கேட்டோம். “ஒருவர்மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது என்பதாலேயே அவர் குற்றவாளி ஆகிவிட மாட்டார். வழக்கு விசாரணை, நீதிமன்றத் தீர்ப்பு எனப் பல்வேறு கட்டங்கள் இருக்கின்றன. படப்பை குணா விவகாரம் தொடர்பாக இனிமேல்தான் பொன்னார் ஜி-யிடம் பேச வேண்டும். பேசிவிட்டுச் சொல்கிறேன்” என்றார்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் அளித்ததாக, சமீபத்தில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க செயலாளர் ராமகிருஷ்ணன் கைதுசெய்யப்பட்டார். அந்த விவகாரம் ஏற்படுத்திய சூடு அடங்குவதற்கு முன்னதாகவே பொன்னாரின் படப்பை சந்திப்பு கட்சிக்குள் ரணகளத்தை ஏற்படுத்தியிருக்கிறது. “கட்சியின் இமேஜ், ஜாண் ஏறினால் முழம் சறுக்குகிறது. ஒரு கட்சியின் மீது மக்களுக்கு அபிமானம் வராமல்கூடப் போகலாம். ஆனால், அச்சம் வந்துவிடக் கூடாது. ரத்தக்கறை படிந்த கைகளோடு கட்சியோ, கட்சி நிர்வாகிகளோ கைகோப்பது இனியும் கூடாது. ‘ரெளடிகள் அணி என்று தனியே ஒன்றை ஆரம்பிக்கும் அளவுக்கு தமிழக பா.ஜ.க-வுக்குள் ரௌடிகள் இணைந்திருக்கிறார்கள்’ என்கிற விமர்சனத்தைக் கட்சித் தலைமை விரைந்து சரிசெய்ய வேண்டும்” என்று வேதனையோடு வேண்டுகோள் வைக்கிறார்கள் கட்சியின் சீனியர்கள்.

ஆயுதங்களின் உதவிகொண்டு தாமரையை மலரவைக்க முடியாது!