அரசியல்
Published:Updated:

மதுரை அரசியல் ஜல்லிக்கட்டு... வரிந்துகட்டிய உதயநிதி!

உதயநிதி!
பிரீமியம் ஸ்டோரி
News
உதயநிதி!

கீழடி அருங்காட்சியகம், கலைஞர் நூலகக் கட்டுமானப் பணிகள் போன்றவை முடிந்திருக்கும் நிலையில், அவற்றைத் திறப்பதற்காக விரைவில் மதுரைக்கு வரவிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

“அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு வந்த உதயநிதி, மதுரையின் பெரிய பெரிய அரசியல் காளைகளையெல்லாம் அடக்கிவிட்டார்” என்கிறது மதுரை தி.மு.க வட்டாரம். பெரியப்பா மு.க.அழகிரியுடனான சந்திப்பு, எதிரும் புதிருமாக இருக்கும் அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி இருவரையும் ஒரே மேடையில் அமரவைத்தது, சிக்கல்களில் உழலும் நடிகர் சூரியைத் தோளில் தட்டிக்கொடுத்து ஆதரவளித்தது எனத் தனது மதுரை விசிட்டில் அரசியல் பட்டாசைக் கொளுத்தியிருக்கிறார் உதயநிதி!

அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக உதயநிதி மதுரைக்கு வந்ததால், ஜனவரி 16-ம் தேதி மதுரையே விழாக்கோலம் பூண்டிருந்தது. மாவட்ட அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மாநகரச் செயலாளர் கோ.தளபதி உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்புக்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்த போதுதான், ‘அழகிரி வீட்டுக்கு உதயநிதி செல்லப்போகிறார்’ என்கிற விஷயமே தெரிந்தது. சற்று நேரத்தில், அழகிரி வீட்டில் அவரின் ஆதரவாளர்களும் குழுமிவிட மொத்த மதுரையும் பரபரப்பாகிவிட்டது.

மதுரை அரசியல் ஜல்லிக்கட்டு... வரிந்துகட்டிய உதயநிதி!

நம்மிடம் பேசிய மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் சிலர், “தி.மு.க-விலிருந்து அழகிரி வெளியேற்றப்பட்டதற்கு முக்கியக் காரணமே, துர்கா ஸ்டாலின் - காந்தி அழகிரி இடையிலான ‘ஈகோ’ மோதல்தான். இவர்கள் இருவருக்குமிடையே ஏற்பட்ட கெளரவப் பிரச்னை பெரிதாக வளர்ந்து, ஸ்டாலின்-அழகிரியின் பிரிவுக்கும் காரணமானது. அதன் உச்சமாகத்தான் 2014-ல் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் அழகிரி. தன் செல்வாக்கைக் காட்ட சென்னையில் அமைதி ஊர்வலம், மதுரையில் ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார் அழகிரி. எல்லாமே புஸ்வாணமாகிப்போனது. சில ஆண்டுகளாகத் தீவிர அரசியலிலிருந்து அழகிரி ஒதுங்கியிருக்கும் நிலையில்தான், அவரைச் சந்தித்திருக்கிறார் உதயநிதி. பொங்கலையொட்டி, முதல்வர் ஸ்டாலினும் அழகிரியும் பரஸ்பரம் தொலைபேசியில் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டார்கள். அப்போதே, ‘பையனை வீட்டுக்கு வரச் சொல்றேன்’ என்றிருந்தார் முதல்வர். அதையொட்டித்தான், முதல்வர் ஸ்டாலின், துர்கா அறிவுறுத்தலின் பேரில், அழகிரியை அவரது சத்யசாய் நகர் இல்லத்தில் சந்தித்திருக்கிறார் உதயநிதி.

மதுரை அரசியல் ஜல்லிக்கட்டு... வரிந்துகட்டிய உதயநிதி!

வீட்டுக்கு வந்தவுடன், அழகிரியின் காலில் விழுந்து உதயநிதி ஆசீர்வாதம் வாங்க, பதிலுக்கு சால்வை அணிவித்து உதயநிதியை அழகிரி அரவணைக்க... அந்த இடமே உணர்ச்சிமயமாக இருந்தது. உதயநிதியின் நெற்றியில் முத்தமிட்டு வீட்டுக்குள் அழைத்துச் சென்றார் காந்தி அழகிரி. உதயநிதியிடம், ‘நீ அரசியல்ல பெரிய ஆளா வருவப்பா. மதுரை மாவட்ட அரசியலை மட்டும் படிச்சுட்டா, மொத்தத் தமிழ்நாட்டு அரசியலையும் படிச்ச மாதிரி’ என்று சொன்னாராம் அழகிரி. அழகிரியின் உடல்நிலை குறித்து உதயநிதி நலம் விசாரித்ததோடு, ‘அப்பா உங்களைப் பார்க்க வருவாங்க. உங்களை ரொம்ப மிஸ் பண்ணிட்டோம்’ என நெக்குருகவும், அழகிரி குடும்பத்தினரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்! வரும் ஜனவரி 30-ம் தேதி அழகிரியின் பிறந்தநாள் வருகிறது. அவருக்குப் பிறந்தாள் பரிசாக இந்தச் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. அரசியலில் அழகிரி மீண்டும் ஒரு ரவுண்ட் வருவதற்கு, இந்தச் சந்திப்பு அச்சாரம் போட்டிருக்கிறது” என்றனர் விலாவாரியாக.

அழகிரியின் ஆதரவாளரும், மதுரை மாநகராட்சியின் முன்னாள் மண்டலத் தலைவருமான இசக்கிமுத்துவிடம் பேசினோம். “அண்ணன், தம்பி இருவரும் விரைவில் இணைய வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்பினோம். அதற்கான காலம் இப்போது கூடி வந்திருக்கிறது. இக்கட்டான பல நேரங்களில் கட்சிக்குப் பல வெற்றிகளைத் தேடித்தந்தவர் அழகிரி. அப்படிப்பட்டவர் இப்போது இல்லாததால்தான் உண்மையான கட்சிக்காரர்கள் பாதிக்கப்படு கிறார்கள். அழகிரி அண்ணன் வந்துவிட்டால் இனி அது நடக்காது” என்றார்.

மதுரை அரசியல் ஜல்லிக்கட்டு... வரிந்துகட்டிய உதயநிதி!

‘மதுரை மாவட்ட அரசியலைப் படி’ என அழகிரி சொன்னதால்தானோ என்னவோ, அடுத்த நாள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா மேடையிலேயே யாரும் எதிர்பார்க்காத அரசியலை அரங்கேற்றியிருக்கிறார் உதயநிதி. நம்மிடம் பேசிய மதுரை தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர், “மதுரையில், அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி இருவருமே எலியும் பூனையுமாக இருப்பவர்கள். கட்சி மேடையிலேயே கோப தாபங் களை இரு தரப்பினருமே வெளிப்படுத்துவார்கள். அவர்கள் இருவரையும் தனக்கருகே ஒரே மேடையில் அமரவைத்த உதயநிதி, ‘இது கட்சி... மனஸ்தாபங்கள் இருக்கலாம், பகை இருக்கக் கூடாது’ என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட்டார். யாரும் எதிர்பார்க்காத இன்னொரு ட்விஸ்ட்டும் நிகழ்ந்தது.

இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் நடிகர் சூரியின் காளையும் பங்கேற்றது. அதைக் காண வந்த சூரியை அழைத்து, தனக்கருகே அமர்த்திக் கொண்டார் உதயநிதி. கடந்த ஆண்டு, நடிகர் சூரிக்குச் சொந்தமான உணவகத்தை தியாகராஜன் திறந்துவைத்தார். அந்த உணவகத்தில் மூர்த்தி பொறுப்பு வகிக்கும் வணிக வரித்துறையினர் ரெய்டு நடத்தியபோது, ‘தியாகராஜனுக்கு எச்சரிக்கை விடுப்பதற்காகத்தான் சூரியைத் தாக்குகிறார் மூர்த்தி’ என மதுரை தி.மு.க-வில் பரபரப்பு கிளம்பியது. சூரிக்கும் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. இந்தச் சர்ச்சை களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் - சூரி - மூர்த்தி மூவரையும் ஒரே மேடையில் அமர்த்தி, பஞ்சாயத்தை முடித்துவிட்டார் உதயநிதி. இனி சூரியை மூர்த்தியின் ஆட்கள் தொந்தரவு செய்ய முடியாது. மூர்த்தியை பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனும் வம்புக்கு இழுக்க முடியாது. ஒரே நேரத்தில் பல அடங்காத காளைகளை அடக்கிவிட்டார் உதயநிதி” என்றார்.

கீழடி அருங்காட்சியகம், கலைஞர் நூலகக் கட்டுமானப் பணிகள் போன்றவை முடிந்திருக்கும் நிலையில், அவற்றைத் திறப்பதற்காக விரைவில் மதுரைக்கு வரவிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அப்போது அழகிரியைச் சந்திப்பார் என்கிறது மதுரை தி.மு.க வட்டாரம். அழகிரி மீண்டும் கட்சிப் பொறுப்புக்கு வந்துவிடுவாரோ என்று பதறுகிறார்கள், அவரிடமிருந்து ஸ்டாலின் பக்கம் தாவியவர்கள். எப்படியோ, உதயநிதி வருகையைத் தொடர்ந்து மதுரை அரசியல் சூடுபிடித்திருக்கிறது!