Published:Updated:

உதய் Vs மிதுன்... வாரிசுகளை வளைக்கும் அதிகாரிகள்!

உதய் Vs மிதுன்
பிரீமியம் ஸ்டோரி
உதய் Vs மிதுன்

அடுத்து ஆட்சிக்கு வந்ததும் யார் யாருக்கு என்னென்ன பதவிகள் என இப்போதே மிதுனுடன் உட்கார்ந்து அதிகாரிகள் டீம் ஒன்று பட்டியல் போடுகிறது.

உதய் Vs மிதுன்... வாரிசுகளை வளைக்கும் அதிகாரிகள்!

அடுத்து ஆட்சிக்கு வந்ததும் யார் யாருக்கு என்னென்ன பதவிகள் என இப்போதே மிதுனுடன் உட்கார்ந்து அதிகாரிகள் டீம் ஒன்று பட்டியல் போடுகிறது.

Published:Updated:
உதய் Vs மிதுன்
பிரீமியம் ஸ்டோரி
உதய் Vs மிதுன்

“கரைவேட்டி கட்டின அரசியல்வாதிகளோட அதிகாரம் வெறும் அஞ்சு வருஷம்தான்... ஆனா, அதிகாரிகள் எங்களுக்கு அது அறுபது வயசு வரை!” அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மோதிக்கொள்ளும் சினிமாக்களில் பலமுறை நாம் கேட்ட வசனம். உண்மையும்கூட. ஆனாலும், கட்சிகள் சில அதிகாரிகளைத் தங்கள் தரப்பு ஆட்களாகக் கைக்குள் வைத்திருப்பதும், அதிகாரிகள் சிலர் தங்கள் கட்சி அடையாளத்தை வெளிப்படுத்தி அதிகாரப் பதவிகளை வசப்படுத்துவதும் வழக்கமானதுதான். அதனால்தான் ஆட்சி மாறும்போது சிலர் உச்சத்துக்கு வருவார்கள்; சிலர் ஓரங்கட்டப்படுவார்கள். கடந்த நான்காண்டு எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில், அதிகாரிகளின் ஆதிக்கம் பல துறைகளில் உச்சபட்சமாக இருந்தது என்கிறார்கள் கோட்டையிலுள்ள சில ஜூனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள். ‘ஆட்சி தொடரும்’ என்ற நம்பிக்கையில் எடப்பாடி இருக்கிறார். ‘அடுத்து நம் ஆட்சிதான்’ என நம்புகிறார் ஸ்டாலின். இந்தச் சூழலில் கோட்டையில் தங்கள் கொடியைப் பறக்கவிட அதிகாரிகள் மத்தியில் ரகசிய ஆலோசனைகள் நடக்க ஆரம்பித்திருக்கின்றன.

‘மிதுனே சரணம்...’ துண்டுபோட்டுவைக்கும் ஐ.ஏ.எஸ்-கள்

அடுத்த முறையும் அ.தி.மு.க-வே ஆட்சியைப் பிடிக்கும் என்கிற உறுதியான முடிவில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர் இருக்கிறார்கள். குறிப்பாக, எடப்பாடியைச் சுற்றியிருந்த அதிகாரிகள் மத்தியில்தான் இந்தப் பேச்சு அதிகமாக இருக்கிறது. முதல்வரின் செயலாளர்களாகவுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் விஜயகுமார், செந்தில்குமார் உள்ளிட்டோர் மீண்டும் அ.தி.மு.க ஆட்சியே வரும் என்று தங்களுக்கு நெருக்கமான அதிகாரிகளிடம் சொல்லிவருகிறார்கள். இவர்களுக்கு ஏற்றாற்போலத் தமிழக அரசின் ஆலோசகர் சண்முகமும் பாடுவதால், ‘ஹாட்’ ஆகியிருக்கிறது தலைமைச் செயலகம். வாக்குப்பதிவு முடிந்த பிறகு, சேலத்திலிருந்து சென்னை திரும்பினார் முதல்வர். அதன் பிறகு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலரிடம் முதல்வர் தரப்பு ஆலோசனை நடத்தியுள்ளது. “125 இடங்கள் வரை அ.தி.மு.க வெற்றிபெறும்” என முதல்வர் சொல்லவும், அதிகாரிகள் தரப்பும் அதை ஆமோதித்திருக்கிறது.

இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். “எடப்பாடியைவிட அவருடைய மகன் மிதுனைச் சுற்றி அதிகாரிகள் லாபி அதிகம் இருக்கிறது. முதன்மைச் செயலாளர் விக்ரம் கபூர், கார்த்திக், செந்தில்குமார் உள்ளிட்ட பல மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மிதுனின் நட்பு வட்டத்துக்குள் இருக்கிறார்கள். இந்த லிஸ்ட்டில் தற்போது இணைந்திருப்பவர் பங்கஜ் குமார் பன்சால். இவர்களைத் தவிர, பசையுள்ள மாவட்டங்களைப் பிடித்துக்கொள்ள சில மாவட்ட ஆட்சித்தலைவர்களும் மிதுன் தரப்பிடம் சரணாகதி அடைந்துவிட்டனர். கடந்த சில மாதங்களாக, தமிழக அதிகாரிகள் லாபியைக் கட்டுப்படுத்துவதில் மிதுன் முனைப்பு காட்டுகிறார். தேர்தலுக்கு ஆறு மாதங்கள் முன்பாகவே எடப்பாடி மாவட்ட சுற்றுப்பயணம் போனாரே, அப்போது முதலே அதிகாரிகளை மிதுன் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டார். தேர்தல் பிரசார நேரத்தில் மிதுன் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தார். என்றாலும், தன்னைப் பார்க்க வந்த சில அதிகாரிகளை மிதுன் பக்கம்தான் கைகாட்டிவிட்டார் முதல்வர். தேர்தலுக்குப் பிறகும் இதேநிலை தொடர்கிறது.

உதய் Vs மிதுன்... வாரிசுகளை வளைக்கும் அதிகாரிகள்!

அடுத்து ஆட்சிக்கு வந்ததும் யார் யாருக்கு என்னென்ன பதவிகள் என இப்போதே மிதுனுடன் உட்கார்ந்து அதிகாரிகள் டீம் ஒன்று பட்டியல் போடுகிறது. இதில் அமைச்சர் வேலுமணியின் பங்கும் இருக்கிறது. சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் உள்ளிட்ட சிலர், வேலுமணியின் விசுவாசிகளாக இப்போது இருக்கிறார்கள். அடுத்த முறையும் அ.தி.மு.க ஆட்சிக்கு வரும் பட்சத்தில், மீண்டும் அதிகாரத்தின் உச்சத்தில் கோலோச்சும் திட்டத்தில் இந்த அதிகாரிகள் இருக்கிறார்கள்” என்றனர்.

லெஃப்ட்டில் கைபோட்டு... ரைட்டில் திருப்பும் அதிகாரிகள்!

ஆட்சிமாற்றம் நடந்தாலும், இவர்களின் ஆதிக்கம் குறையாது என்று சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். முதன்மைச் செயலாளர் அந்தஸ்திலிருக்கும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி நம்மிடம் பேசுகையில், “பல்வேறு துறைகளில் பணியாற்றி பவர்ஃபுல்லாக வலம்வந்த விக்ரம் கபூர், தற்போது சுற்றுலாத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணியாற்றுகிறார். ‘தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நான்தான் தலைமைச் செயலாளர்’ என இவர் வெளிப்படையாகக் கூறிவருவது அதிகாரிகள் மத்தியில் பலரது புருவத்தை உயர்த்தியிருக்கிறது. உள்துறைச் செயலாளராகவுள்ள பிரபாகர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கையைப் பெற்றிருப்பவர். சமீபத்தில் நடந்த அதிகாரிகள் மீட்டிங்கில்கூட, ‘அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரும்’ என்றெல்லாம் சொன்னவர், இரண்டு தினங்களுக்கு முன்பாக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரிடம், ‘நான் கருணாநிதி காலத்திலேயே அவருக்குச் செயலாளராக இருந்தேன். இந்தமுறை தி.மு.க ஆட்சிக்கு வந்தால் எனக்கு முக்கியப் பொறுப்பு உறுதி’ என்று சிரித்துக்கொண்டே சொல்லியிருக்கிறார்” என்றார்.

அ.தி.மு.க-வுக்கு நெருக்கமென அறியப்பட்ட அதிகாரிகள் பலரும், திடீரென அறிவாலயம் பக்கம் வண்டியைத் திருப்ப ஆரம்பித்துள்ளனர். அரசியல்வாதிகளைவிட வேகமாகக் கரைவேட்டிகளை மாற்றிக்கொள்வதில் அதிகாரிகள் சிலர் தெளிவாக இருப்பது கோட்டையில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. தி.மு.க-வுக்கு நெருக்கமானவராக அறியப்பட்ட தயானந்த் கட்டாரியா, ஜெயலலிதா இருந்தவரை ஓரங்கட்டப்பட்டிருந்தார். ஜெ. மறைவுக்குப் பிறகு, முன்னாள் தலைமைச் செயலாளர் சண்முகத்தின் ஆதரவால் கூட்டுறவுத்துறையின் செயலாளர் பொறுப்பைப் பிடித்த கட்டாரியா, சில ஆண்டுகளாக பவர்ஃபுல்லாக பவனிவந்தார். திடீரென ரூட்டை மாற்றி, தி.மு.க-வுக்கு ஆதரவான நிலைப்பாட்டோடு பேசிவருவது அவருடன் பயணித்தவர்களுக்கே அதிர்ச்சி. மெட்ரோ ரயில் மேலாண் இயக்குநர் பிரதீப் யாதவ், வெளிநாடுவாழ் தமிழர்கள் நலன் துறையின் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் ஆகிய இருவருமே தி.மு.க முகாமுக்கு மாறிப் பல மாதங்களாகிவிட்டதாம். அ.தி.மு.க ஆதரவாளராக அறியப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைச் செயலாளர் சந்திரமோகன், அதிகாரமிக்க துறையை எதிர்பார்த்து தி.மு.க முகாமுக்குத் தூதுவிட ஆரம்பித்திருக்கிறார் என்கிறார்கள்.

சென்னை மாநகராட்சி கமிஷனராக உள்ள பிரகாஷ், அ.தி.மு.க தலைமைக்கு எவ்வளவு நெருக்கமானவர் என்பது தெரியும். தேர்தல் ஆணையத்தில் பல அதிகாரிகளைப் பற்றியும் தி.மு.க புகார் அளித்தது. ஆனால், பிரகாஷ் குறித்து எந்தப் புகாரையும் தி.மு.க அளிக்கவில்லை. இதற்குக் காரணம், தி.மு.க தரப்புக்கு நெருக்கமான ஓர் ஐ.ஏ.எஸ் அகாடமி நபர் மூலமாக பிரகாஷ் அனுப்பிய தூதுதான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், மேற்சொன்ன ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், “இழுபறியான நிலையில்கூட அ.தி.மு.க மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடும்” என்று சத்தியம் செய்யாத குறையாகச் சொல்லிவருகிறார்களாம்.

உதய் Vs மிதுன்... வாரிசுகளை வளைக்கும் அதிகாரிகள்!
உதய் Vs மிதுன்... வாரிசுகளை வளைக்கும் அதிகாரிகள்!

உதயநிதி, சபரீசன் உருவாகும் பட்டியல்கள்!

முன்னாள் தலைமைச் செயலாளர் சண்முகத்துக்கு எதிரான அதிகாரிகள் தரப்பு, இப்போது தி.மு.க முகாமை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. தனக்குக் கிடைக்க வேண்டிய உச்சபட்ச பதவியை எடப்பாடி கிடைக்கவிடாமல் செய்துவிட்டார் என்கிற வருத்தத்தில் இருந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், சமீபத்தில் தி.மு.க தலைமையைத் தனியே சந்தித்து உரையாடியிருக்கிறார். அவருக்கு முக்கியப் பதவியைத் தர தி.மு.க தரப்பும் தயாராக இருக்கிறதாம். ஸ்டாலினைச் சந்திக்க முடியாத அதிகாரிகள் பலர், வேறு ரூட் பிடித்து உதயநிதியை வளைக்க முயல்கிறார்கள்.

‘‘தி.மு.க-வைப் பொறுத்தவரை உதயநிதி தனியாகவும், சபரீசன் தனியாகவும் அதிகாரிகள் பட்டியல் ஒன்றை ரெடி செய்துவைத்திருக்கிறார்கள். அ.தி.மு.க ஆட்சியில் ஓரங்கட்டப்பட்டிருந்த அதிகாரிகள் பட்டியலைக் கையில் எடுத்திருக்கிறது உதயநிதி தரப்பு. அதேபோல, ‘யாருக்கெல்லாம் முக்கியப் பொறுப்புகள் தரலாம்’ என்றும் ஒரு பட்டியல் எடுத்துள்ளனர். அந்தப் பட்டியலில் ஹன்ஸ் ராஜ் வர்மா, இறையன்பு, உதயசந்திரன், முருகானந்தம், ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளனவாம். இந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்கு பவர்ஃபுல் துறைகளை ஒதுக்க உதயநிதி தரப்பு காய்நகர்த்துகிறது. அதேபோல, தனக்கு நெருக்கமான ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் மூலம், கடந்த ஐந்தாண்டுகளில் ஓரங்கட்டப்பட்ட காக்கி உயரதிகாரிகளின் லிஸ்ட்டையும் கேட்டுப் பெற்றிருக்கிறார் உதயநிதி. இந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்கும் ‘பவர்ஃபுல்’ துறைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களின் உயரதிகாரிகள் இருவர், சபரீசனுக்கு நெருக்கமான கட்டட நிறுவனத்தின் மூலம் பவரான பதவிகளுக்கு வர காய்நகர்த்தியிருக்கிறார்கள்’’ என்றார் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர்.

மீண்டும் ஷெட்டி... உஷாரான உதய்!

பணி ஓய்வுக்குப் பிறகு, கனடாவுக்குச் சென்றுவிட்ட முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி அசோக் வரதன் ஷெட்டியை மீண்டும் தமிழகத்துக்கு அழைத்துவர தி.மு.க தரப்பு தயாராகிறது. அவரை அரசு ஆலோசகர் பதவியில் அமர்த்தும் திட்டத்திலிருக்கும் ஸ்டாலின், அவர் மூலமாகத் துறைரீதியான செயலாளர் பதவிக்குத் தகுதியான நபர்களைத் தேர்வுசெய்யலாம் என்று திட்டமிட்டிருக்கிறாராம். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஆளும்தரப்பினால் பாதிக்கப்பட்ட சில அதிகாரிகள், மத்திய அரசுப் பணிக்கு மாற்றலாகிச் சென்றிருக்கிறார்கள். அவர்களில் யாரையெல்லாம் தமிழகப் பணிக்கு மீண்டும் கொண்டுவரலாம் என்று தீவிரமாக ஆலோசனை நடந்துவருகிறது.

ஏப்ரல் 6-ம் தேதிக்குப் பிறகு, சில அதிகாரிகள் உதயநிதியைச் சந்திக்கத் திட்டமிட்டனர். அவர்களில் இரண்டு அதிகாரிகளை மட்டும் சந்தித்த உதய், அதன் பிறகு அதிகாரிகளுடனான சந்திப்பைத் தவிர்த்து விட்டார். உதயநிதி தரப்பிலிருந்து நம்மிடம் பேசிய சிலர், “காலையில் எடப்பாடி மகன் மிதுனைச் சந்தித்து ‘அ.தி.மு.க ஆட்சிக்கு வந்துவிடும்’ என்று சொல்லிவிட்டு, மாலையில் அவர்கள் பற்றிய ஃபைலோடு இங்கு சந்திக்க வருகிறார்கள் சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள். யார் ஆட்சிக்கு வந்தாலும் தங்களது லாபிக்குச் சிக்கல் வந்துவிடக் கூடாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்களின் இந்த ஆடுபுலி ஆட்டத்துக்கு இடம்கொடுக்க உதய் விரும்பவில்லை” என்றனர்.

மகனும் மருமகனும் ஆளுக்கொரு திசையில் அதிகாரிகளின் பட்டியலை எடுத்துவைத்தாலும், ‘ஊழல், லஞ்சப் புகார்களற்ற அதிகாரிகளுக்கே பதவி’ என்பதில் ஸ்டாலின் தீர்மானமாக இருக்கிறாராம். நம்மிடம் பேசிய தி.மு.க இரண்டாம்கட்ட தலைவர் ஒருவர், “தி.மு.க மீது கட்டப்பஞ்சாயத்து கட்சி, நில அபகரிப்புக் கட்சி என்கிற இமேஜ் இருக்கிறது. அதை இந்த ஐந்து வருடங்களில் துடைத்தெறிய வேண்டும் என்பதில் ஸ்டாலின் தீர்மானமாக இருக்கிறார். முக்கியத் துறைகளில் இளம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் பலருக்கு வாய்ப்பளிக்கவிருக்கிறார்” என்றார்.

யார் ஆட்சிக்கு வந்தாலும், அரசு நிர்வாகம் சிறப்பாக நடைபெற அதிகாரிகளின் ஒத்துழைப்பு அவசியம். அந்த அதிகாரிகள், சந்தையில் ஏலமெடுக்கச் செல்வதைப்போல வாரிசுகளின் வீடுகளில் தவம் கிடப்பது அதிகார வர்க்கத்துக்கே அவப்பெயர்!

*****

ஐ.பி.எஸ் பட்டியல்!

தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி பதவிக்கு சைலேந்திர பாபுவின் பெயரை உச்சரிக்கிறது தி.மு.க தரப்பு. சென்னை பெருநகரக் காவல் ஆணையர் பொறுப்புக்கு சங்கர் ஜிவால், ஜெயந்த் முரளி, ரவி ஆகியோர் ரேஸில் இருக்கிறார்களாம். முன்னாள் காவல் அதிகாரிகள் ஜாங்கிட், சிவனாண்டி, சந்திரசேகர் ஆகியோர்தான் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பட்டியலை தி.மு.க-வுக்குத் தயாரித்துக் கொடுப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பட்டியலைத் தனியாக ஒரு டீமை வைத்து ‘கிராஸ் செக்’ செய்யும் பணியை ஸ்டாலின் செய்துவருகிறாராம்.

யாருக்கெல்லாம் சிக்கல்?

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் சிக்கலுக்குள்ளாகும் அதிகாரிகளின் பட்டியலும் தனியே குறிக்கப்படுகிறது. நம்மிடம் பேசிய மூத்த பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், “முதல்வரின் செயலாளர் விஜயகுமார், நெடுஞ்சாலைத்துறையின் செயலாளர் கார்த்திக் ஆகியோர்மீது கடும் கோபத்தில் இருக்கிறதாம் தி.மு.க. சென்னையிலுள்ள பெரியார் ஈ.வே.ரா சாலையை ‘கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு’ என்று மாற்றியதன் பின்னணியாக இருந்ததே கார்த்திக்தான் என்பதால், அவருக்கு செக் வைக்கப்பட்டுள்ளது. முதல்வரின் செயலாளராகவுள்ள செந்தில், கால்நடைத்துறைச் செயலாளர் கோபால், போக்குவரத்துத்துறைச் செயலாளர் சமயமூர்த்தி, சுற்றுச்சூழல்துறைச் செயலாளர் சந்தீப் சக்‌ஸேனா உள்ளிட்ட அதிகாரிகளை டம்மியாக்கவும் தயாராகிறது தி.மு.க தரப்பு. மண்வளம், கிரானைட் வளம் மிகுந்த சில மாவட்டங்களின் ஆட்சியர்கள் அமைச்சர் வேலுமணி, தங்கமணிக்கு நெருக்கமானவர்கள் என்பதால் அவர்களுக்கும் சிக்கல் வரலாம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism